வவுனியாவில் 11 மாதக் குழந்தை பரிதாபமாக பலி!!

வவுனியா கல்மடு பகுதியை சேர்ந்தமுத்துலிங்கம் கிறிஸ்ரிகா எனும் 11 மாதக் குழந்தை காய்ச்சல் காரணமாக நேற்றைய தினம் (28.09.2017) இரவு 11 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

மேலும் இக்குழந்தை கடந்த இரு நாட்களுக்கு முன் திடீர் காய்ச்சல் காரணமாக வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் உள்ள தனியார் மருத்துவ சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றதாகவும் அங்கு வழங்கப்பட்ட மருந்து அளவுக்கதிகமாக வழங்கப்பட்டமையினாலேயே குழந்தையின் இறப்பு நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து திடீர் மரண விசாரணை அதிகாரி சிவனாதன் கிசோர் விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார்.

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தான நவராத்திரி விழா!

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தான நவராத்திரி விழா 29.09.2017 வியாழன் இடம்பெற்ற சரஸ்வதி பூஜை வழிபாடும், வீணை இசையாராதனை நிகழ்வும் இடம்பெற்றது .

மேலும்  மேலும் நவராத்திரி விரதத்தின் போது ஆலயத்தில்   25,26.09.2017 திங்கள்,செவ்வாய்கிழமை   மஹாலக்ஷமி பூஜை வழிபாடும், காணாமிர்த கலாலய மாணவர்களின் மிருதங்க, வயிலின் இசையாராதனை நிகழ்வுகளும் இடம்பெற்றன .

 

வவுனியா மாவட்ட செயலகத்தில் வாணி விழா நிகழ்வுகள்!!

 
வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (28.09.2017) காலை 10.30 மணியளவில் வாணி விழா நிகழ்வுகள் மாவட்ட செயலக கலாச்சார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரி எம். பி.றோஹண புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், திட்டப்பணிப்பாளர் திரு.கிருபாசுதன், கணக்காளர், திணைக்களப் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர் என பலரும் வாணி விழா நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

இதன் போது கலை நிகழ்வுகள், கவிதை வாசித்தல் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

வவுனியா பிரதான பொலிஸ் நிலைய வளாகத்தில் வாணி விழா நிகழ்வுகள்!!

 
வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியலாயத்திலுள்ள சர்வ மத சமாதான வழிபாட்டு தலத்தில் நேற்று (28.09.2017) மாலை 6 மணியளவில் வாணி விழா நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

சமுதாய பொலிஸ் பிரிவின் தலைமையில் இடம்பெற்ற வாணி விழா நிகழ்வில் புத்த சாசன மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜெயவிக்கிர பெரேரா வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர், சமயத் தலைவர்கள், வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், வர்த்தக பிரமுகர்கள், அரச நிர்வாக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுஅமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா விபுலானந்தாக் கல்லூரியில் வாணி விழா!!

 
வவுனியா விபுலானந்தாக் கல்லூரியில் மூன்று தினங்கள் வாணி விழா சிறப்பாக நடைபெறுகிறது. நேற்று முன்தினம் 27.09.2017 புதன்கிழமை இரண்டாம் நாள் விழா கல்லூரி அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்துமாமன்றப் பொறுப்பாசிரியர் பிரம்மஸ்ரீ எஸ் .சுந்தரசர்மா மற்றும் செயலாளர் திருமதி வாஹினி நாகரட்ணம் ஏற்பாட்டில் வாணி விழா நடைபெற்று வருகிறது.

மாணவ மாணவிகளின் பல்வேறு வகையான இயல் இசை நாடக நிகழ்வுகளும் விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றுவருகிறன.

இந்த நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராக மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்து மாமன்றத்தினர் ஏற்பாட்டில் ‘நவராத்திரியும் மாணவ மாண்பும்’ என்ற தலைப்பில் சிறப்புச்சொற்பொழிவாற்றினார் .

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டால் வழங்கி வைக்கப்பட்டன.

இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தாய் : கதறி அழுத குழந்தை!!

திருப்பூரில் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புறவழிச்சாலையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்க, அவரின் சடலத்திற்கு அருகில் ஒன்றரை வயதுள்ள ஆண் குழந்தை அழுதுகொண்டே இருந்துள்ளது.

இதனைப்பார்த்த சிலர் பொலிசிற்கு தகவல் தெரிவத்ததையடுத்து, விரைந்து வந்த பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், குழந்தையையும் மீட்டு அந்த குழந்தை யார்? இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்ட அதிசயம்!!

 
இலங்கையில் பாரியதொரு காளான் வளர்ந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யக்கலமுல்ல, மானகந்துர பிரதேசத்தில் பாரிய அளவிலான காளான் ஒன்று வளர்ந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பிரதேசத்தை சேர்ந்த தொலமுல்ல சுனில் என்றவரின் வீட்டிற்கு அருகிலேயே இந்த காளான் வளர்ந்துள்ளது.

இந்த காளானின் உயரம் சுமார் ஐந்து அடி உயரமாக உள்ளது. அத்துடன் 16 அங்குலத்தை கொண்டுள்ளது. காளானில் சுமார் 60 இதழ்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காளான் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் வெட்டப்பட்ட மரணத்தின் உதவியுடன் வளர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 2 மாத காலங்களாக இந்த காளான் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேரளாவில் 7 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடுமை!!

கேரளாவில் 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி பள்ளி முடிந்து டியூசனுக்கு சென்றுள்ளார்.

டியூசனுக்கு பிறகு மாணவி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் ரயில்வே நிலையத்தில் வைத்து அவரது உறவினரான ராஜேஷ் என்பவருடன் சிறுமி பேசிக்கொண்டிருந்தது சிசிடிவி கமெராவில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ராஜேஷிடம் விசாரணை நடத்தியதில், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். சந்தேகத்தில் அடிப்படையில் பொலிசார் அவரை விசாரணை நடத்தியதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து குளத்துப்புலா பகுதியில் புதைத்ததாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை பொலிசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

ராஜேஷை கைது செய்த பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்ஃபியின் போது நீரில் மூழ்கி இறந்த மாணவனின் தந்தையின் கதறல்!!

 
செல்ஃபி எடுத்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவனின் தந்தை, அம்புலன்ஸ் மற்றும் பிரேத பரிசோதனைக்குக் கூட பணம் கேட்பதாக தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

குட்டையில் மூழ்கி இறந்து கொண்டிருந்த நண்பனைக் கவனிக்காமல், சக நண்பர்கள் செல்ஃபி எடுத்த துயர சம்பவம் பற்றிய செய்திகள் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகின.

இந்த நிலையில் உயிரிழந்த மாணவனை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல அம்புலன்ஸை தொடர்பு கொண்ட போது, அவர்கள் எங்களுக்கு உதவ முன்வரவில்லை. பின்னர் ஒரு அம்புலன்ஸ் ஓட்டுநர் 5 ஆயிரம் கேட்டார். அவரை விட்டுவிட்டு, தனியார் மருத்துவமனையின் அம்புலன்ஸை பிடித்து அதில் மகனின் உடலை ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.

மருத்துவமனையில் மகனின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் பணம் கேட்டார்கள். என்னிடம் இல்லை என்று சொன்னதால், உடலை பிரேதப் பரிசோதனை செய்து என்னிடம் ஒப்படைக்க கால தாமதம் செய்தார்கள்.

கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தால் என் மகன் உயிரிழந்து விட்டான். அந்த சோகத்தில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் நான், மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து பிரேத பரிசோதனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டேன் என்கிறார் வேதனையோடு.

மியன்மார் மக்களை வடக்குக்கு அனுப்புங்கள் : நாங்கள் பாதுகாக்கின்றோம்!!

மியன்மார் ரோகிஞ்சா முஸ்லீம் மக்களை தெற்கில் பாதுகாப்பாக தங்க வைக்க முடியாவிட்டால் , வடக்கு மாகாணத்திற்கு அனுப்பி வையுங்கள். வடமாகாணத்தில் தங்கவைப்பதை வடமாகாணசபை எதிர்க்கப்போவதில்லை என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 106ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன்போது சிவாஜிலிங்கம் விசேட கவனயீர்ப்பு பிரேரணையை முன் மொழிந்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் , மியான்மார் நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியான வன்முறைகள் மேற்கொள்ளப்படுவதனால் அங்கு , குழந்தைகள், பெரியவர்கள் என சகலரும் கொல்லப்படுகின்றார்கள்.

இந்நிலையில் மியன்மார் நாட்டின் முஸ்லிம் மக்கள் 31 பேர் யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை கடல்வழியாக இலங்கைக்குள் தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்கள் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு ஐ.நா சபையினால் பொறுப்பேற்கப்பட்டு கொழும்பு- கல்கிசை பகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கே பௌத்த மதவாதிகள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால், அந்த நாட்டு மக்கள் பூசா முகாமில் பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

இந் நடவடிக்கையினை வடமாகாணசபை கண்டிக்கின்றது. அந்த முஸ்லிம் மக்களை நாடு கடத்தவேண்டும் எனவும் பேச்சுக்கள் நடக்கின்றன.

ஐ.நா சபை பொறுப்பேற்று இருக்கும் நிலையிலும் அந்த மக்களுக்கு இவ்வாறான நிலை உருவாகியுள்ளமை கவலையளிக்கின்றது. எனவே அந்த மக்களை வடமாகாணத்தில் தங்கவைப்பதற்கு வடமாகாணசபை இணக்கம் தெரிவிக்கின்றது.

அதன் ஊடாக அந்த மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என நம்புகிறோம். அந்த முஸ்லிம் மக்கள் வடமாகாணத்தில் தங்கவைப்பதை வடமாகாணசபை எதிர்க்கப்போவதில்லை என கூறினார். அந்த விசேட கவனயீர்ப்பு பிரேரணை சபையில் எவ்விதமான எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.

வடகொரிய எல்லையில் ரஷ்ய இராணுவம் குவிப்பு : போர்ச் சூழல் அதிகரிப்பு!!

வடகொரிய எல்லையில் ரஷ்ய இராணுவத்தினர் பெருமளவு குவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதால் கொரியா தீபகற்பத்தில் போர் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.

ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே அமைந்துள்ள ஹசன் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக பெருமளவு ரஷ்ய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அது மட்டுமின்றி சீனா, வடகொரியா மற்றும் ரஷ்ய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் சாவோ ஜியோனாராமலைப் பகுதியிலும் ரஷ்ய இராணுவம் கடும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே எழுந்துள்ள போர் சூழல் காரணமாக தென் கொரியாவில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க இராணுவமே, ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆயுதங்களுடன் ரஷ்யா வடகொரிய எல்லையில் இராணுவத்தை குவித்து வருவது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அது மட்டுமின்றி வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளை ரஷ்யா ஒருபோதும் பார்த்துக்கொண்டு வெறுமனே இருந்து விடாது எனவும் ரஷ்யாவின் முக்கிய அதிகாரி ஒருவர் அமெரிக்காவை எச்சரித்திருந்தார்.

மேலும் அணு ஆயுத நாடுகளில் ஒன்றாக வடகொரியாவை உலக நாடுகள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் சமீப காலமாக கோரிக்கையை முன்வைத்து வந்தார்.

அதுமட்டுமின்றி ரஷ்யாவின் நடவடிக்கைகள் கொரிய தீபகற்பத்தில் அந்நாட்டை மீறி எதையும் செய்துவிட முடியாது என்ற எச்சரிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு உணர்த்துவதாக உள்ளது என இராணுவ உயர் அதிகாரிகள் கருதுகின்றனர்.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஜனாதிபதியின் பெயர் பரிந்துரை!!

அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்தப் பரிசுக்குத் தகுதி பெற்றவர்களின் பட்டியலை அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் வெளியிடவுள்ளது.

சுயாதீன மதிப்பீடுகளின் அடிப்படையில், அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம், 2002ஆம் ஆண்டு முதல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படக் கூடியவர்களின் தகுதிப் பட்டியலை வெளியிட்டு வருகின்றது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்குத் தெரிவு செய்யப்படக் கூடியவர்களின் பட்டியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரையும் உள்ளடக்கியுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

அமைதி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக இவருக்கு இந்தப் பரிசை அளிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் குறைப்பு!!

8 வகையான அரிசி மற்றும் நெத்தலி கருவாடு ஆகிய 9 பொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.

சதொச விற்பனை நிலையங்களில் இயன்றளவு விலையை குறைத்து விற்பனை செய்வதற்கு ஜனாதிபதி தலைமையிலான வாழ்க்கைச்செலவு உபகுழுவின் முடிவுக்கிணங்க அப்பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி நேற்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுலுக்கு வருவதாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வெள்ளை நாட்டரிசி ஒருகிலோ 77 ரூபாவில் இருந்து 74 ரூபாவாகவும், வெள்ளை அரிசி ஒருகிலோ 68 ரூபாவில் இருந்து 65 ரூபாவாகவும். சம்பா அரிசி ஒருகிலோ 89 ரூபாவில் இருந்து 84 ரூபாவாகவும், சிவப்பரிசி ஒரு கிலோ 77 ரூபாவில் இருந்து 75 ரூபாவாகவும், சிவப்பு நாட்டரிசி ஒருகிலோ 83 ரூபாவில் இருந்து 80 ரூபாவாகவும்.

வெள்ளை சம்பா ஒரு கிலோ 94 ரூபாவில் இருந்து 90 ரூபாவாகவும், சிவப்பு சம்பா ஒரு கிலோ 90 ரூபாவில் இருந்து 88 ரூபாவாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலி ஒருகிலோ 539 ரூபாவில் இருந்து 525 ரூபாவாக விலை குறைக்கப்பட்டுள்ளதோடு, இது அதிகபட்ச சில்லறை விலையை விட குறைவாகும்.

அது மாத்திரமின்றி ஏனைய வர்த்தக நிலையங்களிலும் சுப்பர் மார்க்கட்டிலும் விற்கப்படும் அனேகமான அத்தியவசியப் பொருட்களின் விலைகளை சதொச நிறுவனம் வெகுவாகக் குறைத்து பின்வரும் விலைகளில் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சதொசவில் விற்பனையாகும் மற்றும் சில பொருட்களின் விலைகள்

பெரிய வெங்காயம் – ரூபா 125
உருளைக்கிழங்கு – ரூபா 130
டின் மீன் 400g – ரூபா 130
லங்கா சதொச பால் மா – 400g ரூபா 305
லங்கா சதொச பால் மா – 1Kg ரூபா 760
சீனி – ரூபா 107
பருப்பு – ரூபா 152
கோதுமை மா – ரூபா 86 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது.

கரட் என நினைத்து காரைக் கடித்த கழுதை : உரிமையாளர் மீது வழக்குத் தாக்கல்!!

உணவுப்பொருள் என நினைத்து புல்வெளிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த ஸ்போர்ட்ஸ் காரை கடித்த கழுதை ஒன்றால் , காருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு கழுதையின் உரிமையாளர் இழப்பீடு வழங்க வேண்டுமா என்பது குறித்து ஜெர்மனி நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதியன்று, மார்கஸ் ஜான் என்பவர் ஹெஸி மாநிலத்தில் உள்ள வோகல்ஸ்பர்க் மாவட்டத்தில் புல்வெளியொன்றில் தனது ஒரஞ்ச் நிற மெக்லாரென் ஸ்பைடர் காரை நிறுத்தியிருந்தார்.

தனது காரின் பின்பகுதியை விட்டஸ் என்ற கழுதை கடித்துவிட்டதாக மார்கஸ் முறைப்பாடு பதிவு செய்தார்.

கரட் என நினைத்து விட்டஸ் காரை கடித்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். ஆனால் தனது கழுதையால் காருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு 6000 பவுண்ட்கள் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டதற்கு அதன் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புல்வெளிக்கு அருகே 3 இலட்சம் பவுண்ட்கள் மதிப்பிருக்கலாம் என்று கூறப்பட்ட காரை அதன் உரிமையாளர் நிறுத்தியிருக்கக்கூடாது என்றும், அதனால் தனது கழுதை குற்றவாளி அல்ல என்றும் கழுதையின் உரிமையாளர் வாதிடுகின்றார்.

தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வௌியாகவுள்ளது.

இந்திய அணியின் வரலாற்று சாதனைக்கு முற்றுப்புள்ளி : பதிலடி கொடுத்த அவுஸ்திரேலியா அணி!!

இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4வது ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்கும். அவுஸ்திரேலியா வெற்றி பெற்றால் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பின்ச் ஆகியோர் முதலில் இருந்தே நிதானமாக விளையாடினர். அதன்பின்னர், வார்னர் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார்.

தனது நூறாவது போட்டியில் விளையாடும் வார்னர் 45 பந்துகளில் அரைச் சதம் அடித்து அசத்தியதுடன், 103வது பந்தில் சதமடித்தார். அவரை தொடர்ந்து பின்ச்சும் அரைச் சதமடித்தார்.

இறுதியில் இந்த ஜோடியை கேதர் ஜாதவ் பிரித்தார். 35 ஓவரில் 231 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அக்சர் படேலிடம் பிடி கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். 119 பந்துகளில் 4 சிக்சர், 12 பவுண்டரியுடன் 124 ஓட்டங்கள் எடுத்தார்.

அவரை தொடர்ந்து சதத்தை நெருங்கிய பின்ச், உமேஷ் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்தார். இவர் 96 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரியுடன் 94 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்மித்தையும் உமேஷ் யாதவ் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார்.

பின்னர் டிராவிஸ் ஹெட் மற்றும் ஹேண்ட்ஸ்கோம்ப் நிதானமாக விளையாடினர். இந்த ஜோடி 63 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் அவுட்டானார்.

கடைசியில் அதிரடியாக ஆடிய ஹாண்ட்ஸ்கோம்ப், 30 பந்துகளில் ஒரு சிக்சர், 4 பவுண்டரியுடன் 43 ஓட்டங்கள் எடுத்து உமேஷிடம் வீழ்ந்தார்.

இறுதியில், அவுஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ஓட்டங்கள் எடுத்தது. அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக வார்னர் 124 ஓட்டங்களும், பின்ச் 94 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

335 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ரகானே சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 106 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ரகானே 53 ஓட்டங்களுடன் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ரோகித் 65 ஓட்டங்களில் எதிர்பாரத விதமாக ரன் அவுட்டாக, இந்திய அணியின் ஓட்டம் விகிதம் குறையத் துவங்கியது.

விராட் கோஹ்லி 21 ஓட்டங்களிலும், அதிரடியாக விளையாடிய பாண்ட்யா 41 ஓட்டங்களிலும், வெளியேற இந்திய அணி தடுமாறத் துவங்கியது.

கிதர் ஜாதவ் மற்றும் மணீஷ் பாண்டே ஓரளவுக்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், ஜாதவ்(67), பாண்டே(33), டோனி(13) என வெளியேற இந்திய அணி இறுதியாக 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 313 ஓட்டங்கள் எடுத்து 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு அவுஸ்திரேலிய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அதுமட்டுமின்றி வெளிநாட்டு போட்டிகளில் அவுஸ்திரேலிய தொடர் தோல்வியை சந்தித்தால் விமர்சனத்திற்குள்ளானது. அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் அந்நாட்டு அணியின் தலைவர் ஸ்மித்தை விமர்சித்தனர். தற்போது அந்த விமர்சனத்திற்கு எல்லாம், ஸ்மித் இந்த வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

காலை உணவுக்கு செத்த எலி!!

டெல்லியில் இயங்கிவரும் இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் விடுதி மாணவர்களுக்குப் பரிமாறப்பட்ட உணவில் இறந்த எலியொன்று காணப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜயந்த் என்ற மாணவர், கடந்த செவ்வாயன்று அவருக்கு வழங்கப்பட்ட உணவை உண்ண முற்பட்டார். அப்போது, தேங்காய்ச் சட்னியில் எலிக்குஞ்சு ஒன்று இறந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை அவர் சமூக வலைதளத்திலும் பகிர்ந்தார்.

ஏற்கனவே அந்தச் சட்னியை ஏனைய மாணவர்கள் பலரும் சாப்பிட்டிருந்தனர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து, கல்லூரி இயக்குனர் ராம்கோபால் ராவ் தலையிட்டு, குறித்த சம்பவம் பற்றி ஆராய மூன்று பேர் அடங்கிய குழுவை அமைப்பதாகவும், இனி இவ்வாறு நடக்காது என்று உறுதியளிப்பதாகவும் தெரிவித்ததையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.