கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற அதிநவீன பஸ் ஒன்று தீபிடித்து எரிந்தமையால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேகாலை, கலிகமுவ பிரதேசத்தின் நடுவீதியில் வைத்து சொகுசு பஸ் வண்டி திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்று, பஸ் வண்டியில் மோதுண்டமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதன்போது தீயை கட்டுப்படுத்துவதற்காக பலர் முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்துள்ளது.
இந்த நிலையில் அந்த வண்டி முழுமையாக தீபற்றி எரிந்து சாம்பலாகியுள்ளது. எனினும் தீயினால் எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கியில் நடுவானில் ஆலங்கட்டி மழையில் சிக்கி சேதமடைந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்கி 127 உயிர்களை காப்பாற்றிய விமானியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
127 உயிர்களை காப்பாற்றிய துருக்கி நிறுவனத்தில் பணியாற்றி வரும் கேப்டன் அலெக்சாண்டர் அகோபோவின் தைரியத்தை பாராட்டி உக்ரைனின் உரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
துருக்கியில் இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பொழிந்து வரும் நிலையில் விமானி அலெக்சாண்டர் அகோபோவ் 121 பயணிகள், 6 விமானக் குழுவினருடன் A320 விமானத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், நடுவானில் ஆலங்கட்டி மழை, பயங்கர காற்றில் சிக்கி விமானம் பயங்கர சேதமடைந்துள்ளது. விமானத்தின் முன் பகுதி மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளது.
இதனால், விமானத்திலிருந்த பயணிகள் உயிர் பயத்தில் பதறியுள்ளனர். ஆனால், தைரியமாக விமானத்தை இயக்கிய விமானி அலெக்சாண்டர், இஸ்தான்புல் நாட்டின் Ataturk விமான நிலையத்தில் பத்திரமாக விமானத்தை தரையிறக்கியுள்ளார்.
சேதமடைந்த விமானத்தை விமானி அலெக்சாண்டர், விமான நிலையத்தில் தரையிறக்கிய காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
வவுனியா, மூன்று முறிப்பு A9 வீதியில் ஹயஸ் மறறும் ஹன்ரர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (01.08.2017) காலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கி குடுமபம் ஒன்றினை ஏற்றிச் சென்ற ஹயஸ் வாகனம் A9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் சுண்ணாம்பு பைகற்றுக்களை ஏற்றி வந்த ஹன்ரர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
கொழும்பில் இருந்து சுண்ணாம்பு பைக்கற்றுக்களுடன் சென்ற ஹன்ரர் வாகனம் மூன்று முறிப்பு பகுதியில் காற்று போனமையால் அதன் பின் ரயர்களை கழற்றிக் கொண்டிருந்த போது பின்னால் வந்த ஹயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது குறித்த வாகனத்தின் சாரதி மற்றும் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஹயஸ் வாகனத்தில் பயணித்த பெண் ஒருவரும் அவரது மூன்று பிள்ளைகளும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா மாவட்ட செயலகத்தை இன்று (31.07) 11 மணியளவில் வீட்டுத்திட்டம் வழங்கக் கோரி சாந்தசோலை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
வவுனியா நொச்சிமோட்டை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட சாந்தசோலை கிராமத்தைச் சேர்ந்த 36 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வீட்டுத்திட்டம் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதுடன் வீட்டுத்திட்டம் வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைப்பாடை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த கிராம மக்கள்..
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் சாந்தசோலை கிராமத்தில் 168 குடும்பங்கள் மீள்குடியேறி வசித்துவரும் நிலையில் 36 குடும்பங்கள் தொடர்ந்தும் கொட்டில் வீடுகளில் வசித்து வருவதாக தெரிவித்தனர்.
கடந்த 10 வருடங்களாக வீட்டுத்திட்டத்திற்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்தும் வீடுகள் வழங்கப்படவில்லை இந்தியாவிற்கு அகதிகளாக சென்று திரும்பிய மக்களும் யுத்தத்தின் காரணமாக அங்கவீனர்களானவர்களும் வசித்து வரும் நிலையில் நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
எதிர்வரும் ஆவணி மாதம் 11 ஆம் திகதி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி .றோகண புஸ்பகுமார கிராமத்திற்கு வருகைதந்து தங்கள் பிரச்சனைகளைக்கு தீர்வு பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளதாக அம்மக்கள் மேலும் தெரிவித்தனர்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை, பதுபொல எனும் இடத்தில் கார் ஒன்று அதிசக்தி வாய்ந்த மின் கம்பத்தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
குறித்த விபத்து இன்று காலை 10.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், நான்கு பேர் படுகாயமடைந்து கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த கார் கட்டுநாயக்கவிலிருந்து கினிகத்தேனை, அலகல பகுதியை நோக்கி செல்லும் வழியிலேயே இவ்வாறு வீதியை விட்டு விலகி மின் கம்பத்தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
உயிரிழந்த தனது மனைவியின் உடலை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால், ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் மரத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பொலன்னறுவை, அபேபுரகம பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த நபர் சில வருடங்களுக்கு முன்னர் மாவனெல்லையில் வசித்து வரும் உறவினர்களின் வீட்டுக்கு வந்திருந்த போது அயல் வீட்டில் உள்ள யுவதியுடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
யுவதியின் பெற்றோரும் உறவினர்களும் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்காத போதிலும் யுவதி தனது வீட்டில் இருந்து இருந்து வெளியேறி, திருமணம் செய்து கொண்டு பொலன்னறுவை, அபேபுரகமவில் இளைஞனின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதன் பின்னர் யுவதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சென்று யுவதியை அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளனர்.
இருவரும் சட்ட ரீதியாக திருமணம் செய்துள்ளதால், அவர்களால் யுவதியை அழைத்துச் செல்ல முடியவில்லை.
சில வருடங்களுக்கு பின்னர் இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதன் பின்னர் ஒன்றரை வருடங்களின் பின் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
இளைஞன் தனது மனைவியுடன் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பும்போது பொலன்னறுவை இஸட் – டி ஆற்றில் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்கு கூடியவர்கள் இளைஞனை காப்பாற்றிய போதிலும் அவரது மனைவியை காப்பாற்ற முடியவில்லை.
இந்த நிலையில், தமது மகளின் மரணம் சந்தேகத்திற்குரியது என பெண்ணின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து தனது மனைவியின் உடலை பெற்றுக்கொள்ள சில தினங்களாக முயற்சித்த இளைஞன் இரவு வீட்டுக்கு வந்து தனது குழந்தையை கட்டிப்பிடித்து அழுது புலம்பியதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
அண்மையில் யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் குடும்பத்திற்கு, நீதிபதி இளஞ்செழியனின் நண்பர்கள் உதவிகளை வழங்க முன்வந்துள்ளனர்.
சரத் ஹேமசந்திரவின் குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுக்க நீதிபதி இளஞ்செழியனின் நண்பர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதற்கு மேலதிகமாக குடும்பத்தினருக்கு தேவையான அடிப்படை உதவிகளையும் வழங்கவும் நண்பர்கள் இணங்கியுள்ளனர்.
நீதிபதி இளஞ்செழியன் யாழ். சென் ஜோன்ஸ் கல்லுாரியில் கல்வி கற்ற நிலையில் அவரது பாடசாலை நண்பர்கள் மற்றும் வெளிநாட்டிலுள்ள தனவந்தர்களின் உதவியுடன் இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளன.
கடந்த 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லுார் பின் வீதியில் வைத்து நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
வெளிச்சம் அறக்கட்டளையும் விபுலானந்தாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் 2006 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களும் இணைந்து வவுனியா தெற்கு வலயத்தைச் சேர்ந்த வவுனியா விபுலானந்தாக் கல்லூரியைச் சேர்ந்த தரம் 5 இல் கல்வி கற்கும் 180 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் செயலமர்வு நேற்று (30.07.2017) விபுலானந்தாக் கல்லூரியில் இடம் பெற்றது.
பாடசாலை அதிபர் அ.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் S.சுரேந்தர், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.சிவதர்சன், ஆரம்ப பாடசாலை அதிபர் S.விவேகானந்தராஜா, பழைய மாணவர் சங்க உறுப்பினரான சு. காண்டீபன், அபிவிருத்தி சங்க உறுப்பினர் ஐ.யோகநாதன், 2006, 2007, 2008 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களும் மற்றும் வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன், செயலாளர் தி.கார்த்திக், செ.மேனதாஸ் ஆகியோருடன் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
தலைமை உரையாற்றிய பாடசாலையின் அதிபர் எமது பாடசாலைக்கு பழைய மாணவர் சங்கமும் வெளிச்சம் அறக்கட்டளையும் இணைந்து இவ்வாறான செயலமர்வினை நடாத்தியமை பெருமைக்குரிய செயற்பாடு என்றும் இதன் மூலம் இவ் மாணவர்களுடைய உயர்வு மட்டத்தை உயர்த்த முடியும் என்றும் இனி வரும் காலங்களில் இவர்களுடைய சேவைகள் எப்போதும் எமது பாடசாலைக்கு கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், ஆரம்ப பிரிவு அதிபர் ஆகியோர் உரையாற்றினர்.
வளவாளர்களாக வவுனியா வடக்கு வலய ஆசிரிய ஆலோசகரான க.சந்திரகுமார், ஆசிரியரான அ.சசிகுமார் ஆகியோரும் கடமையாற்றினர். அத்துடன் மாணவர்களுக்கு கையேடும் உணவுப் பொருட்களும் வெளிச்சம் அறக்கட்டளையினால் வழங்கப்பட்டது.
இந்தியாவில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு கூகுளில் கிராபிக் டிசைனிங் பிரிவில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சண்டிகரைச் சேர்ந்தவர் ஹர்ஷித் சர்மா, இவர் அங்குள்ள அரசு பள்ளியில் தொழில்நுட்ப பிரிவில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவன் ஹர்ஷித்துக்கு பத்து வயதிலிருந்தே கிராபிக் டிசைனராக வேண்டும் என்ற விருப்பம் இருந்துள்ளது. அதுமட்டுமின்றி கூகுள் நிறுவனத்தில் பணியபுரிய வேண்டும் என்ற லட்சியமும் இருந்துள்ளது.
இதனால் இவர் தன்னுடைய மாமா ரோஹித் சர்மாவிடம் கிராபிக் டிசைனிங் பயிற்சியை முறையாக கற்றுள்ளார்.
அதன் பின் தன்னுடைய கடின உழைப்பினால் தற்போது கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இதுகுறித்து மாணவன் ஹர்ஷித் கூறுகையில், கிராபிக் டிசைனர் ஆக வேண்டும் என்பது கனவு, அதனால் நான் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது தொழில்நுட்ப பிரிவை தேர்ந்தேடுத்தேன். இது குறித்து என்னுடைய பெற்றோரிடம் கூறினேன்.
இதைத் தொடர்ந்து டிஜிட்டல் இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டதால், பிரதமர் அலுவலகத்திலிருந்து 7,000 ரூபாய் பரிசுத் தொகை வந்தது, அதன்பின் பாலிவுட் திரைப்படங்களுக்கு போஸ்டர்கள் உருவாக்கினேன்.
அது போன்ற சமயத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது போஸ்டர்களை கூகுள் நிறுவனத்திற்கு ஹர்ஷித் அனுப்பியுள்ளார். இவரின் போஸ்டர்கள் கூகுள் நிறுவனத்திற்கு பிடித்துப்போகவே, கூகுள் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிமாறு கடிதம் அனுப்பியுள்ளது.
இதனால் ஹர்ஷித் வரும் ஆகஸ்ட் மாதம் கலிபோர்னியா செல்லவிருப்பதாகவும், அங்கு அவருக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும் என்றும், அவருக்கு உதவித்தொகையாக மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்றும், பயிற்சிகாலம் நிறைவடைந்த பின்பு மாதம் 12 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹர்ஷித் என்னைப் போன்ற சராசரி மாணவருக்கு கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என யார் எதிர்பார்த்தது.
என்னுடைய மகிழ்ச்சி மற்றும் உணர்வை எப்படி பகிர்ந்து கொள்வது என்று தெரியவில்லை, தற்போது என்னுடைய கனவு நினைவாகியுள்ளது, இது என்னுடைய கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் வழக்கில் புதிய திருப்பமாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவரும், மருத்துவருமான இளஞ்சேரனின் மனைவி திவ்யா கடந்த 17 ஆம் திகதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அதன்பின் பொலிசார் நடத்திய விசாரணையில், திவ்யா அடித்து கொல்லப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து அவரது கணவர் இளஞ்சேரன், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி ஆகியோரை பொலிசார் கைது செய்தனர்.
திவ்யா வரதட்சணை கொடுமை காரணமாக கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது, இருப்பினும் பொலிசுக்கு சந்தேகம் தீராததால் மூவரையும் நீதிமன்ற அனுமதியுடன் மூன்று நாட்கள் காவலில் எடுத்து பொலிசார் விசாரணை நடத்தினர்.
அப்போது இந்த கொலையில் மாமியார் ராணியின் அண்ணான சிவக்குமார் என்பவரும் மற்றும் கரூர் செந்தில் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளனர்.
திவ்யாவை கொலை செய்துவிட்டு இளஞ்சேரனுக்கு கூடுதல் வரதட்சனையுடன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது.
இரண்டு நாட்கள் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படும் சிவக்குமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்து கூறி வரும் நிலையில், அவர் அரசியலில் விரைவில் குதிப்பார் என சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் தனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை வைத்தே அரசியல் முடிவை எடுப்பேன் என கமல் கூறியுள்ள நிலையில், தன்னுடைய விஸ்வரூபம் படத்திற்கு நேர்ந்த கதி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இவரின் விஸ்வரூபம் படத்தை ஆளுங்கட்சியில் அந்த சமயத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தான் எதிர்த்தார் என்று பலரும் பேசினார்கள்.
இதை கமல் சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாகவே பேசினார், பல சினிமா நண்பர்கள் அன்றைய தினம் என் வீட்டிற்கு வந்தார்கள்.
அனைவருமே என்னை அந்த அம்மா காலில் போய் விழ சொன்னார்கள், அதற்கு நான் கண்டிப்பாக என்னை விட மூத்தவர்கள் காலில் விழுவதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆனால் ஒரு தவறும் செய்யாமல் எவர் காலிலும் என்னால் விழ முடியாது, அதனால், எத்தனை கோடி நஷ்டமானாலும் பரவாயில்லை என கமல் கூறியுள்ளார்.
இணைய தேடலின்போது குறித்த ஒரு சொல்லினை தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போது அது தொடர்பாக சில தேடல் முடிவுகளை காட்டுதலே Instant Search எனப்படும்.
இந்த வசதியினை கூகுள் நிறுவனம் 2010 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்திருந்தது. இவ் வசதியானது பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றிருந்தது.
எனினும் தற்போது குறித்த வசதி அதிரடியான முறையில் கூகுள் நிறுவனத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது.
மொபைல் சாதனங்களில் விரைவான தேடலை வழங்குவதை முதன்மைப்படுத்தியே Instant Search வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
எனினும் வெவ்வேறு மொபைல் சாதனங்களில் உள்ளீடு செய்யப்படும்போது ஏற்படும் குளறுபடிகளை தவிர்ப்பதற்காகவே இவ் வசதியை நிறுத்தவுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுகளை உடனடியாக வழங்குமாறு பொறுப்பான அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
வறட்சியான காலநிலை நிலவும் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கான குடிதண்ணீர் தேவை உள்ளிட்ட ஏனைய நீர்த் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளையும் உடனடியாக செய்துகொடுக்குமாறும் பொறுப்பான அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேர் உடனடியாக ரஸ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாகவும் ரஷியா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது குற்றச்சாட்டு அங்கு கூறப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதன்படி, மேற்கண்ட நாடுகள் மீதான பொருளாதார தடை விதிப்பதற்கான மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதிபர் டிரம்ப்பின் கையெழுத்திற்காக அனுப்பப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கையால் கோபமடைந்துள்ள ரஷ்யா, இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளில் 755 பேர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவில் சுமார் 1000-க்கும் அதிகமான அமெரிக்க தூதரக அதிகாரிகள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.
அமெரிக்கா – ரஷ்யா இடையே ஏற்கனவே பல்வேறு விவகாரங்களில் பனிப்போர் நிலவும் சூழ்நிலையில், தற்போது இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையே மோதலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் இருந்து வெளியேறிய குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் உள்ளிட்டவர்களின் குடியுரிமையை பறித்து அவர்கள் நாடு திரும்புவதற்கும் அரசு தடை விதித்துள்ளது.
பிரித்தானியா அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் 150க்கும் மேற்பட்டோரின் குடியுரிமை பறிக்கப்படுகிறது. மட்டுமின்றி சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று பயங்கரவாதிகளை திருமணம் செய்துள்ள பிரித்தானிய பெண்களும் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பேசிய பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி ஒருவர், இனிமேல் பிரித்தானியாவுக்கு திரும்ப முடியாதவர்களின் பட்டியல் அதிகரித்துள்ளது அதிர்ச்சி தருவதாக உள்ளது,
ஆனால் எங்களின் முதன்மையான முன்னுரிமை என்பது குறித்த நபர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் என்பதே என்றார்.
இந்த ஆண்டு மட்டும் சந்தேகத்துக்குரிய பிரித்தானியர்கள் 40 பேரின் கடவுச்சீட்டுகளை முடக்கியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி இரட்டைக் குடியுரிமை கொண்ட நபர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும் எனவும் தெளிவு படுத்தியுள்ளனர்.
சிரியா உள்ளிட்ட நடுகளில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
இதனையடுத்தே பிரித்தானிய பயங்கரவாதிகள் உள்ளிட்ட குற்றவாளிகளின் குடியுரிமையை பறிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.