வவுனியாவில் டெங்கை கட்டுப்படுத்தும் புகை விசுறும்போது அனைத்து உணவகங்களும் மூடப்படவேண்டும். இல்லையேல் அனைத்து உணவுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்படும் என வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி லவன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியாவில் டெங்கை கட்டுப்படுத்த புகை விசிறப்பட்டு வருகின்றது. இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முதல் குறித்த பிரதேசத்தில் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்தல் வழங்கப்படுகின்றது.
எனினும் அதனை அசட்டை செய்யும் உணவக உரிமையாளர்கள் உணவகங்களை திறந்து வியாபாரத்தில் இடுபடுவதுடன் சுகாதார திணைகளத்தின் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.
எனவே டெங்கை கட்டுப்படுத்தும் புகை விசுறும்போது உணவுப்பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதனால் உணவகங்களை மூடாத உணவகங்களில் இருந்து உணவுப்பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தனி இயந்திரம் கொண்ட விமானத்தின் மூலம் ஆப்கான் தேசிய விமான சேவையின் பெண் விமானி Shaesta Waiz உலகத்தை சுற்றி வருகிறார்.
உலகம் முழுவதும் செல்லும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் Shaesta Waiz தீடீரென இலங்கையில் தரையிறங்கியுள்ளார்.
இலங்கை முதலில் தரிப்பிடமாக தெரிவு செய்யப்படாத போதிலும், தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அவர் தனது விமானத்தை இலங்கையில் தரையிறக்கியுள்ளார்.
Beechcraft Bonanza A36 என்ற விமானத்தில் உலகம் முழுவதும் பயணிக்கும் அவர் 18 நாடுகளில் 30 இடங்களில் விமானத்தை தரையிறக்கியுள்ளார்.
அவரது பிறப்பிடம் ஆப்கான் என்ற போதிலும் விமானிக்கான கற்கை நெறிகளை அமெரிக்காவில் மேற்கொண்டுள்ளார்.
விமான சேவை துறையில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளமையினால் அடுத்த பரம்பரையில் பெண்கள் விமான துறையில் நெருக்கமாக செயற்பட வேண்டும் என்பதே அவரது பயணத்தின் பிரதான நோக்கமாகும்.
உலகம் முழுவதும் 130,000 விமானிகள் உள்ள போதிலும் 4000 பெண் விமானிகள் மாத்திரமே செயற்படுகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கான் விமானியின் வரவேற்கும் நிகழ்வு ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா குருமன்காடு பகுதியில் இன்று (29.07.2017) மாலை 6.50 மணியளவில் இரு மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து வந்த மோட்டார் சைக்கில் குருமன்காடு காளி கோவில் வீதிக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் ( சமிச்சை விளக்கு இல்லாமல்) அதே பாதையில் மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளாதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
இவ் விபத்தில் இரு மோட்டார் சைக்கிலின் சாரதிகளும் காயமடைந்துள்ளதுடன் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
வவுனியாவில் விசேடமாக தெரிவு செய்யப்பட்ட 200பேருக்கு இன்று (29.07.2017) காலை 10 மணியளவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனினால் அவரது அலுவலகத்தில் மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
20 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டத்தின் முதலாம் கட்டமாக இன்று வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
இலங்கை சாரணர் சங்கத்தினரின் ஏற்ப்பாட்டில் வவுனியா மாவட்ட சாரணர் சங்கத்தின் ஊடாக வவுனியாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவையறிந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு தொகை குடிநீர் போத்தல்கள் வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்தில் நேற்று (28.07.2017) காலை 11.30 மணியளவில் அபிவிருத்தி உத்தியோகத்தர் தனராஜிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சர்வதேச சாரண ஆணையாளர் ஜனபிரித் பெர்னாண்டோ, மற்றும் மாவட்ட ஆணையாளர் எம்.எஸ்.பத்மநாதன், உதவி மாவட்ட ஆணையாளர்களில் ஒருவரான ஆ.பொன்னையா, ஜனாதிபதி சாரணன் வ.பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நீண்ட வறட்சிக்குப் பின்னர் வவுனியாவில் இன்று (28.07..2017) மதியம் 12.15 மணி தொடக்கம் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
வவுனியாவில் கடந்த காலங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்ததோடு குடிநீருக்காக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று (28.07.2017) வவுனியாவில் பல பகுதிகளில் மழைபெய்து வருகின்றமையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இடி, முழக்கத்துடன் பெய்த மழையினால் வீதியோரங்கள், தாழ்வான பகுதிகளில் நீர் வழிந்து ஓடியதை காணக்கூடியதாக இருந்தது.
நீண்ட கால வறட்சிக்கு பின்னர் இவ்வாறு மழை பெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று வவுனியாவில் இடம்பெற்ற ‘தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார் ?” என்னும் தலைப்பில் இடம்பெற்ற கலந்தாய்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கும்போது கடமை தவறிய நீதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு சிலை வைப்பார்கள் போல என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..
ஒரு மெய்பாதுகாவலராக இருந்தவர் அந்த மெய்பாதுகாவலரின் நிலைப்பாட்டுக்கு அப்பால் சென்று பஞ்சாயத்து தீர்க்கப்போய் நடைபெற்ற ஒரு சம்பவம் அவரை தியாகியாக்கி எம்மவர்கள் வீர வணக்கம் செலுத்துகின்றார்கள். நான் நினைக்கின்றேன் சிலையும் வைத்து விடுவார்கள் போல் இருக்கின்றது.
பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கின்றது. நாங்கள் இழக்க முடியாதவர்கள், எல்லோரையும் இழந்தவர்கள். இந்த விடுதலையில் நாங்கள் எத்தனையோ தியாகங்களையெல்லாம் சந்தித்தவர்கள். இந்த விடுதலைக்காக பல்வேறு கால கட்டங்களில் போராடியவர்கள்.
அவர் தன்னுடைய கடமையை கூட சரியாக செய்யவில்லை. கடமையை கூட சரியாக செய்யாத பொலிஸ்காரனுக்கு பதவி உயர்வு கொடுத்திருக்கின்றார்கள். அதாவது இராணுவ சட்டத்தின் பிரகாரம் தன்னுடைய துப்பாக்கியை எதிரி பறித்து அவனுடைய துப்பாக்கியால் எதிரி சுட்டவனுக்கு பதவி உயர்வு கொடுத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம் அதற்கு எம்மவர்கள் வீர வணக்கம், தியாகி, அறப்போர் நாயகம் என்றெல்லாம் சொல்கின்றார்கள்.
நீதிபதியை இலக்கு வைக்கவில்லை என்றும் சொல்லிவிட்டார்கள். இப்பொழுது நீதிபதியும் முதலமைச்சர் ஆகப்போகின்றார் அவரையும் தியாகி என்றெல்லாம் சொல்கின்றார்கள். எனக்கு தெரியவில்லை இந்த நீதி, நீதிபதிகளெல்லாம் இந்த பயங்கரவாத அரசியலமைப்புக்கு உட்படுத்தப்பட்டு தமிழ் மக்களுடைய போக்குகளுக்கு எவ்வாறான நிலைப்பாடு.
அண்மையில் கண்ணதாசனுடைய தீர்ப்பு. எனக்கு தெரியவில்லை. புனர்வாழ்வு அளிப்பது தண்டனையில்லையா? அல்லது அதற்குப் பின்னரும் தண்டனை வழங்குவதா? கண்ணதாசனுக்கு இப்பொழுது ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கின்றது. அப்படியென்றால் முன்னாள் போராளிகள் எல்லோருக்கும் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டுமா? அல்லது ஆதரவாக இருந்த எங்களை போன்றவர்களுக்கும் ஆயுள் தண்டனை தர வேண்டுமா? இது விளங்கவில்லை.
இந்த ஜனநாயக சூழல் எவ்வாறு போகின்றது. ஜனநாயக சூழலை உருவாக்குகின்ற நிலை எப்படி போகின்றது. அல்லது இதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற சம்மந்தன், சுமந்திரன் போன்றவர்கள் அதற்கு எவ்வளவு ஒத்தூதப் போகின்றார்கள். ஒன்றுமே புரியாத காலகட்டமாக இருக்கின்றது.
அரசோடு ஒத்துழைப்பதற்கு தண்டனையில்லை. ஒத்துழைக்காதவர்களுக்கு தண்டனையா? என்ன நீதி? என்ன நியாயம்? கங்காரு நீதிமன்றம் போல் தான் இந்த நீதி செயற்பாடுகளும் போகின்றனவா? என்ற கேள்விகளும் எழுகின்றது.
ஆகவே தமிழ் மக்களுடைய ஒழுக்க நெறி முறைகள் சார்ந்த அரசியல் கட்டமைப்புக்கள் போக்குகள் எல்லாம் திசைமாறிய நிலையிலே ஒரு வீர வணக்கம் போடுகின்ற நிலைப்பாடுகளோடு வந்து நிற்பது வெட்ககேடான காரியமாக இருக்கிறது. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் போக்குக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென தெரிவித்தார்.
சாவகச்சேரி – தனங்கிளப்புப் பகுதியில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி வீழ்ந்து மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் 12 வயதுடைய மாணவியே காயமடைந்த நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதியில் காணப்பட்ட குழியில் மோட்டார் சைக்கிள் சக்கரம் இறங்கியதால் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த மாணவி தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
பாடசாலையில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு சிரமதானத்தில் பங்குபற்றுவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையிலேயே வீழ்ந்து காயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பிரித்தானியாவில் தங்களது 11 மாத குழந்தை Charlie இறந்துவிட்டதாக குழந்தையின் பெற்றோர் அறிவித்துள்ளனர். பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Bedfont பகுதியைச் சேர்ந்த தம்பதி Chris Gard(32)- Connie Yates(31).
இவர்களுக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறந்துள்ளது, குழந்தைக்கு Charlie என பெயரிட்டனர். பிறக்கும் போதே மரபணு குறைபாட்டுடன் பிறந்த Charlie-க்கு மூளை சேதமும் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து குழந்தைக்கு லண்டனில் உள்ள Great Ormond Street மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் குழந்தையின் உடல்நலத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்ல முடிவு செய்து மாவட்ட நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
ஆனால் மருத்துவமனை சார்பில், Charlie-க்கு அமெரிக்காவில் Experimental Nucleoside Therapy மேற்கொள்ள பெற்றோர் முடிவு செய்துள்ளதாகவும், இதனால் எவ்வித பலனும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
வழக்கில் பெற்றோருக்கு எதிராக தீர்ப்பு வந்ததால் உச்சநீதிமன்றம், அடுத்ததாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
கடந்த ஐந்து மாதங்களாக Charlie-ன் பெற்றோர் போராடிய நிலையில், குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கான காலம் கடந்துவிட்டதாக அமெரிக்க நரம்பியல் நிபுணர் பேராசிரியர் Michio Hirano தெரிவித்திருந்தார்.
இதனைதொடர்ந்து குழந்தைக்கு அளிக்கப்பட்ட உயிர்காக்கும் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டதால் குழந்தையின் உயிர் பிரிந்துவிட்டதாக பெற்றோர் அறிவித்துள்ளனர்.
பிரதமர் தெரேசா மே, போப் ஆண்டவர் உட்பட பலரும் குழந்தையின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
தமிழ் பாடசாலை மாணவர் ஒருவர் புதுவித முச்சக்கரவண்டி ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இந்த மூச்சக்கர வண்டி சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 13 வயதுடைய தமிழ் மாணவர் ஒருவரினால் இந்த முச்சக்கர வண்டி உருவாக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தை சேர்ந்த வத்தேகம பாரதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விஷ்னு சுதர்ஷன் என்ற மாணவரே இந்த புதிய கண்டுபிடிப்பிற்கு சொந்தகாரராகும்.
தனது புதிய கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தும் வகையில் இன்று காலை வத்தேகம எல்லை அலுவலகத்தில் வீதியில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்துள்ளார்.
யாழ். மாதகல் பகுதியில் இளம் குடும்பப்பெண் ஒருவர் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
மாதகல் மேற்குப் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
நிரஞ்சன் – சாலினி ஆகிய இருவரும் காதலித்துத் திருமணம் முடித்துள்ளதுடன், சில வருடங்களில் தொழில் நிமிர்த்தம் நிரஞ்சன் வெளிநாடு சென்றிருந்தார்.
வெளிநாடு சென்ற கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் கடந்த பல நாட்களாகத் தொலைபேசியில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்றைய தினம் இருவரும் தொலைபேசியில் உரையாடிய போது, இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றியுள்ளதாகவும் இதனால் மனமுடைந்த மனைவி வீட்டில் யாருமில்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தூக்கிட்டு தற்கொலை செய்வதை கணவர் நேரடியாகக் காணொளியூடாக பார்க்கும்படி செய்து விட்டு தூக்கிட்டுக் தற்கொலை செய்துள்ளார்.
இதனைச் சற்றும் எதிர்பார்க்காத கணவர் மாதகலில் தனது வீட்டுக்குச் சற்றுத் தொலைவில் பலசரக்குக் கடையொன்றை நடத்திவரும் தனது மாமனாருக்கு (மனைவியின் தந்தையாருக்கு) தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த பெண்ணின் தந்தை வீட்டுக்குச் சென்று பார்த்த போது மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்த நிலையில் சடலமாகக் காணப்பட்டார்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில், அங்கு சென்ற பொலிஸார், இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த கடுகதி புகையிரதம் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த போது, புகையிரதக் கடவையை கடந்து செல்ல முற்படுகையிலேயே குடும்பஸ்தர் புகையிரத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் இன்று மதியம் 02.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வடலியடைப்புப் பண்டைதரிப்புப் பகுதியைச் சேர்ந்த சிங்காரம் சிவச்செல்வன் (வயது- 59) என்ற குடும்பஸ்தரே சம்பவத்தில் பரிதாபகமாக உயிரிழந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நேற்று (28.07.2017) மாலை 4 மணியளவில் வவுனியாவில் கரையேற மறுக்கும் ஓடங்கள் ஆடற்கலை நிகழ்வு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் இ. இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், இ.இந்திரராசா, த.குருகுலராசா, ப.அரியரட்ணம், வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் வீ.இராதாகிருஸ்ணன், கலாநிதி தமிழ்மணி அகளங்கன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கல்வியற்கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கரையேற மறுக்கும் ஓடங்கள் கீழத்தேய ஆடற்கலை ஆற்றுகையும் இடம்பெற்றதுடன் நிகழ்வின் இறுதியில் பங்குபற்றிய கலைஞர்கள் கௌரவிப்பு செய்யப்பட்டதுடன் அன்பளிப்புகளும் வழங்கிவைக்கப்பட்டது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் விளையாட்டு விழா 2017 ஆம் ஆண்டுக்குரிய தேசிய மட்ட காற்பந்தாட்ட போட்டிக்கு தெரிவான வவுனியா மாவட்ட அணியான 786 இளைஞர் கழக அணிக்கான கௌரவிப்பு நிகழ்வும், வழியனுப்பும் நிகழ்வும் நேற்று (28.07.2017) வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் சு.காண்டீபன் தலைமையில் இளைஞர் பயிற்சி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இன்றைய நிகழ்வின் அதிதிகளாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும் புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), மௌலவி நஸ்லி, கிராம சேவையாளர் நஸார், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன், மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி சுகானி, உதைபந்தாட்ட சம்மேளன சுற்றுப்போட்டி செயலாளர் நிபாத், முன்னாள் இளைஞர் கழக மாவட்ட சம்மேளன தலைவர் அமுதராஜ், அல் இக்பால் விளையாட்டு கழக தலைவர் சலாவுதீன், 786 இளைஞர் கழக தலைவர் , போஷகர், நிர்வாக சபை உறுப்பினர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேஸ்புக் சமூகலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உலகளவில் பலவிதமான சமூகவலைதளங்கள் பயன்பாட்டில் இருந்தாலும் முன்னனியில் இருப்பது பேஸ்புக் தான்.
வீடுகளில் தொலைகாட்சி இருந்தாலும் பலர் வீடியோக்களை பேஸ்புக்கில் தான் பார்க்கிறார்கள்.
இப்படி தொலைகாட்சிகளுக்கு மறைமுக போட்டியாக இருந்து வந்த பேஸ்புக் தற்போது நேரடி போட்டியாக மாறவுள்ளது.
ஆம்! பேஸ்புக் டிவி ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படவுள்ளது. பேஸ்புக் டிவியில் ஒளிபரப்பாகப் போகும் நிகழ்ச்சிகள் குறித்த அட்டவணைகள் தற்போது தயாராகி வருகின்றன.
அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எப்படிப்பட்டதாக இருக்கும், சமூகவலைதளமாக ஜெயித்த பேஸ்புக் தொலைக்காட்சியாக ஜெயிக்குமா என்ற கேள்விகளுக்கான விடை வருங்காலத்தில் தெரியவரும்.
வடகொரியா மேற்கொண்டுள்ள புதிய ஏவுகணை சோதனை, அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் தெரிவித்துள்ளார்.
வடகொரியா சமீப காலமாக தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சோதனைகள் குறித்து உலகநாடுகள் கண்டனம் தெரிவித்தும், வடகொரியா மீது பொருளாதார தடை விதித்தும் அதை பொருட்படுத்தாமல் அந்நாடு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் வடகொரியா புதிய ஏவுகணை சோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அது கண்டம் விட்டு கண்டம் பாயும் திறனுடையது என்றும், இது ஜப்பான் கடற்கரை எல்லையில் நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக சோதனை செய்யப்பட்ட இந்த ஏவுகணை 45 நிமிடங்களில் சுமார் 3,000 கி.மீற்றருக்கும் அதிகமான தொலைவில் பாய்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த சோதனை குறித்து வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் கூறுகையில், தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஏவுகணை அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இது உறுதியும் செய்யப்பட்டுள்ளதால் எந்த நேரத்தில் எந்த பகுதியையும் இங்கிருந்தே தாக்க முடியும் என்று கூறியுள்ளார்.
வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து ஜப்பான அரசு பாதுகாப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.