ஆடம்பரக் கப்பலில் வைத்து மனைவியை கொன்ற கணவன்!!

அமெரிக்காவில் தொடர்ந்து தன்னை நோக்கி ஏளனமாக சிரித்த மனைவியை கணவர் ஒருவர் ஆடம்பர கப்பலில் வைத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Utah பகுதியை சேர்ந்தவர்கள் குறித்த தம்பதியினர். இவர்கள் Princess எனும் ஆடம்பர கப்பலில் அலாஸ்கா சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தமது மனைவி தொடர்ந்து தம்மை நோக்கி ஏளனமாக சிரித்துள்ளது Kenneth Manzanares என்பவருக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட அவர் இருவரும் தங்கியிருந்த அறையிலேயே தமது மனைவியை தலையில் தாக்கி கொலை செய்துள்ளார்.

தலையில் எதிர்பாராதவிதமாக பலமாக தாக்கப்பட்டதில் நிலைகுலைந்த அந்த பெண்மணி சம்பவயிடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய் அன்று இரவு 9 மணி அளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த சொகுசு கப்பலில் பயணித்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தாம் பார்த்தவற்றை விசாரணை அதிகாரிகளிடம் தெரிவிக்கையில், Manzanares உடை மற்றும் கைகளில் ரத்தக்கறை இருந்தது எனவும், உடனடியாக அவரை கைது செய்து அடுத்துள்ள அறையில் மாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் முதற்கட்ட விசாரணை வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற உள்ளதாகவும், நீதிமன்றம் பிணையில் அனுப்புமா என்பது சந்தேகமே எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல்!!

நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதையடுத்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர்கள் மணிமாறன், முகமது சாகில் ஆகியோர் சேர்ந்து வந்து புகார் மனு ஒன்றை அளித்தார்கள்.

அதில் கூறியிருப்பதாவது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷாலுக்கு வட்ஸ்அப்பில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதில், விஷாலின் கை, கால்களை வெட்டுவோம் என்று கொலை வெறியுடன் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை வெளியிட்டவர்களையும் தகவல் வெளியிட தூண்டியவர்களையும் கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகார் மனு மீது விசாரணை நடத்த சைபர் கிரைம் பொலிசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளன

10 வயதுச் சிறுமியின் கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு!!

இந்தியாவில் பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பம் தரித்த 10 வயது சிறுமியின் 32 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

சண்டீகரில் தமது உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி 26 வாரங்கள் கருவுற்று இருப்பதாக தெரிய வந்தது. இந்த வழக்கில் அந்த சிறுமியின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் கருவை கலைக்க அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சண்டீகரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து சிறுமியின் கருவைக் கலைக்க அனுமதி கோரியும் இதுபோன்ற விவகாரங்களில் அரசு முடிவெடுக்க ஏதுவாக வழிகாட்டுதல் நெறிகளை வகுக்க வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, சண்டீகரில் உள்ள பிஜிஐஎம்இஆர் மருத்துவமனையின் மருத்துவர்கள், கருவுற்ற அந்த சிறுமியின் உடலை பரிசோதனை செய்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையில் 32 வாரங்கள் கடந்த நிலையில் சிறுமியின் கருவைக் கலைப்பது அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு திருப்தி தெரிவித்த நீதிபதிகள், மருத்துவ அறிக்கையில் கருவைக் கலைப்பதால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து நேரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்று மனு தள்ளுபடி செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

சிறையில் அழுத சசிகலா : தூக்கமில்லாமல் திணறல்!!

அண்ணியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பிணை கிடைக்காததால் சிறையில் சசிகலா சோகத்தில் கண்ணீர் விட்டு அழுததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் அண்ணியும், டிடிவி தினகரனின் மாமியாருமான சந்தானலட்சுமி மரணம் அடைந்தார்.

அவருடைய இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக 5 நாட்கள் பிணை வழங்குமாறு சசிகலா சார்பில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளிடம் மனு வழங்கப்பட்டது.

அந்த மனுவை சிறை அதிகாரிகள் நிராகரித்து விட்டதால், அண்ணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத சோகத்தில் சசிகலா சிறையில் கண்ணீர் விட்டு அழுததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் தூக்கமின்றியும் அவதிப்பட்டுள்ளார்.

மேலும் சிறை முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் வெளியான பின்னர் சிறை அதிகாரிகள் இரவு நேரங்களில் சசிகலாவை சரியாக தூங்க விடுவது இல்லை என அவர் தனது வழக்கறிஞரிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.

பிரித்தானியாவிற்கு பயணிப்பதில் எழுந்துள்ள நெருக்கடி!!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவுக்கும் இடையேயான சுதந்திரமாகப் பயணிக்கும் உரிமை, 2019 மார்ச் மாதத்துடன் முடிவடையும் என இங்கிலாந்து அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

அத் திகதியிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத் தொழிலாளர்கள் இங்கிலாந்திற்குள் வருவதற்கு தம்மைப் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான ப்றேக்சிட் கொள்கைகள் வகுக்கப்படும் வரை இவ்வாறு பிரித்தானியாவுக்குள் ஐரோப்பியத் தொழிலாளர்கள் வருவதற்குப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் உள்துறை அமைச்சர் ஆம்பர் ரூட், வர்த்தகத்தை உறுதிப்படுத்தும் விதமாக பிரெக்ஸிட்டிற்குப் பின்னர் வெளிநாட்டு தொழிலாளர்களை நியமிப்பதன் அடிப்படையில் சிக்கல்கள் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், வகுக்கப்படும் கொள்கை ஆதாரங்களை அடிப்படையாக வைத்தே வகுக்கப்படும் என்றும், பொருளாதாரத் தாக்கமும் கணக்கில் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மார்ச் 2019 இன் பின்னரான காலத்திலும், நிலைமாறு காலத்திலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கைகள் எவ்வாறு அமையும் என்பதை அவசரமாக வணிகங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்புப் பிரச்சாரங்களில் முக்கிய தலைப்புகளில் ஒன்றாக குடிவரவு இடம்பிடித்திருந்தது. மேலும் பிரித்தானியாவின் எல்லைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும், சமரசப் பேச்சுக்கள் இடம்பெறும் காலப்பகுதிகளில் ஏற்றுக்கொள்வதாக உறுதியளிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

நாட்டின் பல பகுதிகளில் மழை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய தெற்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழைய பெய்யக் கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய மாகாணங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கும் பின்னர் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பிரதேசங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இதன்போது 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் கடும் மழை பெய்வதனால் மண்சரிவு ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

மண் சரிவு ஆபத்துக்கள் காணப்பட்டால் உடனடியாக அந்த பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வித்தியா கொலை வழக்கின் மிக முக்கிய சாட்சியம் : குற்றவாளிகள் இனங்காணப்படுவார்களா?

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் மிக முக்கியமான சாட்சியம் வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி நடைபெறவுள்ள தீர்ப்பாயத்தின் அமர்வின் போது இந்த சாட்சியம் அளிக்கப்படவுள்ளது.

வித்தியா கொலை வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயத்தின் முன் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் மூன்றாவது கட்ட சாட்சியப் பதிவுகள் அடுத்த மாதம் 4ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அன்றைய நாள், இந்த வழக்கின் மிக முக்கியமான சாட்சியம் அளிக்கப்படும்.

கொலையுண்ட மாணவி மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் தொடர்பான மரபணுப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்த, மரபணுத் தடயவியல் நிறுவனத்தின் தலைவர் சாட்சியத்தை அளிக்கவுள்ளார்.

இந்த வழக்கில் முக்கியமான ஆதாரமாக மரபணு ஆய்வு அறிக்கை அமைந்துள்ளது என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த வழக்கின் தொடக்கத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நோர்வேயில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட பெண் கைது!!

நோர்வே நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பணம் மோசடி செய்துவந்த பெண்ணொருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நோர்வே நாட்டில் தாதியர் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடிசெய்து வந்த பெண்ணாருவர் தளவத்துகொட பிரதேசத்தில் வைத்து பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவு அதிகாரிகளால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் ஆரம்ப கட்டணமாக 60 ஆயிரம் ரூபா என்றடிப்படையில் 35பேரிடம் பணம் பெற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன் இந்த பெண்ணிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கு அங்கிகரிக்கப்பட்ட வெளிநாட்டு முகவர் நிறுவனத்துக்குரிய அனுமதிப்பத்திரம் இல்லாதநிலையில் தனது வீட்டில் இருந்தவாறு பணம் சேகரித்துள்ளார். இந்த மோசடியில் மாட்டிக்கொண்ட ஒருவரினால் இதுதொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவுக்கு செய்த முறைப்பாட்டுக்கமைய, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பணியகத்தின் விசாரணைப்பிரிவு அதிகாரிகள் மாறு வேடத்தில் குறித்த பெண்ணுடன் தொடர்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டு, நபர் ஒருவரை ஆரம்ப கட்டணமாக 60 ஆயிரம் ரூபாவை செலுத்த தந்திரமான முறையில் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்றவேளை, அவரை கைதுசெய்ய முடிந்துள்ளது. சந்தேக நபரான குறித்த பெண் நாட்டின் பல பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களிடம் இருந்து 21 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தை இவ்வாறு சேகரித்துக்கொண்டுள்ளதாக அவரிடம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த சந்தேக நபரான பெண்ணை கைதுசெய்யும்போது, அவரிடமிருந்து கடவுச்சீட்டுக்களின் பிரதிகள், தொழில் விண்ணப்பங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளின் பிரதிகள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பெண்ணை கடுவல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்குமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பாதி உண்மை, மீதி துரோகம் : நமீதா வெளியிட்ட உண்மை!!

நடிகை நமீதா சென்ற வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்குமுன் அவர் ஓவியா உட்பட சிலரிடம் சண்டை போட்டார். மேலும் அவர் நடிகர் பரணி தன்னிடம் தவறாக நடந்தார் என கூறியது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்நிலையில் நடிகை நமீதா இன்ஸ்டகிராமில் இதுபற்றி ஒரு பதிவை எழுதியுள்ளார். அதில் ‘பாதி தான் உண்மை, இது போலி, இந்த ஷோவின் இயக்குனர்கள் ஏமாற்றுவதில் வல்லவர்கள், அவர்கள் காட்டுவதை வைத்து என்னை பற்றி மக்கள் தவறாக புரிந்துகொண்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

24 மணி நேரத்தை 1 மணி நேரமாக குறைத்து பல விஷயங்களை தவறாக சித்தரித்துவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிக் பாஸ் வீடு ஒரு நரகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லொறி விபத்தில் இருவர் படுகாயம்!!

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் குடாஓயா பகுதியில் லொறி ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுங்காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து நேற்று (28) மாலை அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொட்டகலையில் தொழிற்சாலை ஒன்றுக்கு விறகுகளை இறக்கிவிட்டு மீண்டும் கிதுல்கல பகுதிக்கு செல்லும் வழியில் குறித்த லொறி குடாஓயா பகுதியில் மண்மேடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த லொறியில் சாரதி மற்றும் உதவியாளர் படுங்காயம்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மழை காரணமாக வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

ஏழு கோடிக்கு ஆசைப்பட்டு விபரீதத்தில் மாட்டிக்கொண்ட ஐந்து பேர்!!

உலோகத்தால் செய்யப்பட்ட தெய்வச் சிலைகள் மற்றும் விலங்குகளின் சிலைகளை ஏழு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த 5 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாணந்துறை வலான மோசடி தடுப்புப் பிரிவுப் பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர். இது குறித்து தெரியவருவதாவது,

மினுவாங்கொடை தேவலபொல பிரதேசத்தில் தொல்லியல் பொருட்கள் மற்றும் உலோகத்தால் செய்யப்பட்ட தெய்வச் சிலைகள் மற்றும் விலங்குகளின் சிலைகளை சிலர் விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சிலைகளைக் கொள்வனவு செய்யும் வர்த்தகர்கள் போன்று சென்ற பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்த பெறுமதி மிக்க சிலைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

வவுனியா கல்வியற்கல்லூரியில் கலாச்சார நிகழ்வு!!

 
வவுனியா கல்வியல் கல்லூரியில் இன்று (28.07.2017) காலை 10 மணிக்கு கல்லூரியின் பீடாதிபதி கு.சிதம்பரநாதன் தலைமையில் கலாசார நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதமவிருந்தினரான இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜன் பாண்ட் வாத்தியங்களின் அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டு கல்லூரி கீதத்துடன் மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

தமிழ் கலாசார நடனங்கள் நடைபெற்றதுடன் இந்திய துணைத்தூதுவருக்கு கல்லூரி பீடாதிபதியினால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவம் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்திய துணைத்தூவரால் ஒரு தொகுதி புத்தகங்கள் கல்லூரியின் பீடாதிபதி கு.சிதம்பரநாதனிடம் கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் உப பீடாதிபதி பரமானந்தன், கல்வியல் கல்லூரி மாணவர்கள் ஆசியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

 
தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத் திருவிழாவுடன் வெகு விமர்சையாக இன்று ஆரம்பமாகியது.

ஈழவள நாட்டின் வட புலத்தில் யாழ்ப்பாணம் நல்லை நகரில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

அழகால் அலங்காரக் கந்தன் என்றும் இளமையால் குமரன் என்றும் அழைக்கப்படும் நல்லூர்க் கந்தனின் ஆலயம் யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட தொன்மையான ஆலயமாகும்.

இன்று ஆரம்பமான மகோற்சவப் பெருவிழா 25 நாட்கள் தொடர்ந்து நடைபெறுவதுடன் எதிர்வரும் 20.08.2017 அன்று இரதோற்சவம் இடம்பெறவுள்ளது.

நாள் ஒரு அழகு பெறும் நல்லைக் கந்தன் ஒவ்வொரு திருவிழாவிலும் ஒவ்வொரு அழகோடு வலம் வந்து பக்தர்களை மகிழ்விப்பார்.

இன்றைய கொடியேற்றத் திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டும் வரம் வழங்கும் நல்லூர்க் கந்தனிடத்தில் அருளாசி பெற்று மகிழ்ந்தனர்.

வவுனியா கற்குழி ஞானம் முன்பள்ளியின் கண்காட்சி நிகழ்வு!!

 
வவுனியா கற்குழி ஞானம் முன்பள்ளியின் சிறார்களின் கண்காட்சி நிகழ்வொன்று இன்று (28.07.2017) காலை 10 மணியளவில் முன்பள்ளி மண்டபத்தில் முன்பள்ளியின் ஆசிரியர் மற்றும் கிராம அபிவிருத்திக் குழு தலைவர் அன்ரனி ரெக்ஸன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறீரெலோ கட்சியின் இளைஞரணி தலைவர் ப.கார்த்திக் பிரதம விருந்தினராகவும் கெளரவ விருந்தினர்களாக சிறீரெலோ இளைஞரணி செயலாளர் டினேஸ் மற்றும் வவுனியா வை.எம்.சி.ஏ தலைவர் பாரதி ஆனந்தன், கிராம அபிவிருத்தி குழு நிர்வாக உறுப்பினர் சலசுலோசன் ஆகியோர் கலந்து கொண்டு மழலைகளின் கண்காட்சி நிகழ்வை கண்டு களித்ததுடன் சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து முன்பள்ளியின் கட்டிடத்திற்கு சிறீரெலோ கட்சியின் செயளாலர் நாயகம் ப.உதயராசாவினால் வழங்கப்பட்ட கூரைத்தகட்டை கார்த்திக் மற்றும் டினேஸ் கிராம அபிவிருத்திகுழு தலைவர் ரெக்ஸனிடம் வழங்கப்பட்டது.

வவனியாவிலிருந்து தேசிய காற்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவில் ஒருவர் தெரிவு!!

 
தேசிய காற்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவில் வடக்கைச் சேர்ந்த தமிழர் மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தேசிய காற்பந்தாட்ட சம்மேளனத்தில் நிறைவேற்றுக் குழுத் தெரிவுகள் அண்மையில் கொழும்பில் நடைபெற்றிருந்தன.

அதில் வடமராட்சி உதைப்பந்தாட்ட சங்கத் தலைவர் எஸ்.வேதாபரணம் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும், புட்சால் மற்றும் பீச் உதைப்பந்தாட்ட குழுமத்தின் உப தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், வடமாகாண சபை உறுப்பினரும் யாழ் உதைப்பந்தாட்ட சங்க தலைவருமான இ.ஆர்னோல்ட் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் வடமாகாண உதைப்பந்தாட்ட அபிவிருத்திக் குழுமத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கச் செயலாளர் அ.நாகராஜன் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஊடக குழுமத்தின் உபதலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழில் வர்த்தகர் தூக்கிட்டு தற்கொலை!!

யாழ். கைத்தடிச் சந்தியில் வர்த்தகர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் கடன் சுமையால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைத்தடியைச் சேர்ந்த எஸ். முருகையா(வயது-48) என்ற இரு பிள்ளைகளின் தந்தையாரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கைத்தடிச் சந்தியில் மேற்படி வர்த்தகர் பலசரக்கு வர்த்தக நிலையமொன்றை நடத்தி வருகின்றார்.

வர்த்தக நிலையத்திற்கு பின்புறமாக குறித்த நபரின் வீடு அமைந்துள்ள நிலையில், வீட்டினுள் இன்று (28) காலை 8:30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் காணப்பட்டுள்ளார்.

இதனை அவதானித்த குடும்பத்தவர்கள் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.