வவுனியாவில் வெற்று விண்ணப்பப்படிவத்தில் கையெழுத்து பெற்று மோசடி!!

வவுனியா கற்பகபுரம் கிராம மக்களிடம் முத்திரை ஒட்டப்பட்ட வெற்றுப் பத்திரத்தில் கையொப்பம் பெற்று மோசடி இடம்பெற்று வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் பயனாளிகளுக்கு பணம் வழங்கும் குறிப்பிட்ட பத்திரம் வழங்கப்பட்டு அப்பத்திரங்கள் நிரப்பப்படாமல் முத்திரை ஒட்டப்பட்ட நிலையில் கையொப்பம் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

மீள்குடியேற்ற கிராமமான கற்பகபுரம் கிராமத்திற்கு அண்மையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினரால் 360 வீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட வெற்றுப்பத்திரத்தில் கிராம மக்களிடம் கையெழுத்து பெறுவதாகவும் இது தொடர்பாக கேள்வி கேட்பவர்களிடம் உங்கள் வீட்டுத்திட்டம் ரத்து செய்யப்படும் என மிரட்டப்படுவதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டனர்.

வவுனியாவில் வேகமாகப் பரவும் டெங்கு : ஒருவர் உயிரிழப்பு : ஒருவாரத்தில் 24பேர் பாதிப்பு!!

வவுனியாவில் டெங்கு தொற்று ஏற்பட்டு இன்று (08.07) காலை ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், இம்மாதம் 1ஆம் திகதியிலிருந்து 7ஆம் திகதி வரையான ஒருவார காலப்பகுதியில் 24பேர் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதாரப்பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த 1ம் திகதியிலிருந்து இன்று வரையான ஒருவார காலப்பகுதியில் வவுனியாவில் டெங்கு நுளம்பு தொற்றுக்குள்ளாகிய 25பேர் இனங்கானப்பட்டுள்ளதாகவும், அதில் கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த இராசரட்ணம் சுகந்தன் என்ற  33 வயது குடும்பஸ்தர் 4ஆம் திகதி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் இவர் அடிக்கடி கொழும்பிற்குச் சென்று வருவதாகவும் காலம் தாழ்த்தி வைத்திய சிகிச்சை மேற்கொண்டுள்ளதால் டெங்குத் தொற்றிற்குள்ளாகி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பெரும்பாலும் வெளிமாவட்டங்களுக்குச் சென்று திரும்புபவர்களுக்கே அதிக டெங்கு தொற்று எற்பட்டுள்ளதாகவும், இவ்வாறு வெளி மாவட்டங்களுக்கு குறிப்பாக கொழும்பு சென்று வருபவர்களுக்கே அதிகம் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் தங்கு வேலைகளுக்குச் செல்பவர்கள் காச்சல் எற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.

காச்சல் எற்பட்டால் உடனடியாக வைத்திசாலைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ளுமாறும் டெங்கு தொற்று இனங்கானப்பட்டால் அதற்கான சிகிச்சைகளை உடன் மேற்கொள்ளுமாறும் காலம் தாழ்த்தி சிகிச்சை பெறுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் மேலும் தெரிவித்துள்ளனர்.

காலம் தாழ்த்தி சிகிச்சை மேற்கொள்வதால் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்த முடியாமல் சென்றுள்ளதாலே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை!!

 
பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் திருமதி தமிழிசை சவுந்தராராஜன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களை நேற்றிரவு (06.07.2017) யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மாகாணசபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

சினேகிதபூர்வமான இந்த சந்திப்பில் மாகாணத்தின் தேவைகள் மற்றும் போருக்கு பின்னரான மக்களின் வாழ்ககை நிலவரங்கள் தொடர்பில் பேசப்பட்டதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.

நேற்றைய தினம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பா.ஜ.க தமிழக தலைவர் அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் புதிய அமைச்சரான அனந்தி சசிதரன் மற்றும் மா.ச.உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் நேற்று (06.07) இரவு 8 மணியளவில் பேருந்து மையப்பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து அக்கறைப்பற்றுக்கு பேருந்தில் பயணித்த பயணி ஒருவரின் பயணப் பொதியினை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் பொலிசார் சோதனை மேற்கொண்டபொது பொதி செய்யப்பட்டு தனது பயண பையில் மறைத்து வைக்கப்பட்ட 1 கிலோ 950 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

கஞ்சாவுடன் குறித்த நபரையும் கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் முன்நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பொலிசார் மீது இளைஞர் குழுவினர் தாக்குதல்!!

வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று (06.07) இரவு 11 மணியளவில் வீதியில் சென்ற பொலிசார் மீது அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பொலிசார் அப்பகுதியிலிருந்து அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

நேற்று இரவு 11 மணியளவில் உக்கிளாங்குளம் பிள்ளையார் கோவிலடிப் பகுதியில் மதுபோதையில் நின்ற இளைஞர்கள் பொலிசார் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவர்களைத் தாக்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் ஒரு மணித்தியாலயங்கள் வரை இடம்பெற்றுள்ளது. பின்னர் பொலிசார் அப்பகுதியிலிருந்து சென்றுவிட்டனர். இது குறித்து பொலிசார் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. முறைப்பாடுகளும் மேற்கொள்வில்லை.

எனினும் ஆலயத்தில் பொருத்தப்பட்ட சி.சி.ரி கமராவில் பொலிசார் மீது இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்ட காட்சிகள் பதிவாகியுள்ளது. இது குறித்த விசாரணைகளை பொலிசார் தற்போது மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இருந்து வந்த புகையிரதத்தில் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் தற்கொலை!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாய்ந்து குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில், வேரஹெர பிரதேசத்தை சேர்ந்த 34 வயதன இளம் குடும்பஸ்தரொருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், சடலம் தற்போது களுபோவில மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

தூக்கம் வராமல் இருப்பதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்!!

மருத்துவ காரணங்களை விடுத்து சிலருக்கு காரணமே இல்லாமல் தூக்கம் வரவில்லையென்றால் அதை உடனடியாக கண்காணித்து பிரச்சனையை தீர்ப்பது மிக அவசியம்.

நீண்ட பயணம், புது இடம், பழகாத சூழல் போன்றவற்றால் தூக்கம் வராது. இவ்வகையான பிரச்சனை சில நாட்களில் சரியாகிவிடும்.

அலுவலக பிரச்சனைகள்,நண்பர்கள் மற்றும் உறவுகளிடத்தில் ஏற்படும் சங்கடங்கள் போன்றவற்றால் தூக்கம் ஏற்படாது. அதே போன்று இதற்கான பிரச்சனைகள் தீர்ந்தவுடன் அல்லது தீர்வை அறிந்தவுடன் அது சரியாகிவிடும்.

சிலருக்கு பகலில் நன்றாக தூக்கம் வரும். ஆனால் இரவு படுக்கைக்கு சென்றவுடன் உற்சாகமாக எழுந்து உட்கார்ந்து கொள்வர். இரவில் தூக்கம் வரவில்லை என்று மொபைல் போன் எடுத்து பார்ப்பது, டிவி பார்ப்பது போன்ற வேலைகளில் ஈடுபடக்கூடாது. அவற்றிலிருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சத்தால் தொடர்ந்து நமக்கு தூக்கம் வராது.

தூங்குவதற்கு முன்னால் இரவு உணவாக மெலடோனின் வேதிப்பொருள் சுரக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். செர்ரி,வாழைப்பழம் போன்றவற்றில் அதிக மெலடோனின் உள்ளது.

நல்ல உடற்பயிற்சி ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும். ஆனால் மிக அதே உடற்பயிற்சியை அதிக நேரம் எடுத்துக் கொண்டால் அதுவே தூக்கமின்மைக்கு காரணமாகிவிடும்.

உடற்பயிற்சிகளை மாலைக்குள் முடித்துவிடுவது நன்று.
உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்து இல்லையென்றாலும் தூக்கம் வராது என்பதால் தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும்.

பாடசாலைக்கு வெடிகுண்டு கொண்டு வந்த குழந்தை : அதிர்ச்சியில் மூழ்கிய ஆசிரியர்கள்!!

ஜேர்மனியில் உள்ள மழலையர் பாடசாலையில் பயிலும் குழந்தை ஒன்று வெடிகுண்டுடன் வகுப்பில் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஜேர்மனியில் உள்ள Darmstadt நகரில் மழலையர் பாடசாலை ஒன்று இயங்கி வருகிறது. இப்பாடசாலையில் பயின்ற குழந்தை ஒன்று நேற்று வகுப்பிற்கு வந்த போது கைப்பையில் வெடிகுண்டு இருப்பதை கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர், குழந்தைகளை அவசரமாக வெளியேற்றிய ஆசிரியர்கள் வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

பாடசாலைக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் வெடிகுண்டை சோதனை செய்தபோது அது இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு என கண்டுபிடித்தனர்.

மேலும், குழந்தை கொண்டு வந்த வெடிகுண்டால் ஆபத்து இல்லை என்பதால் குழந்தைகள் மீண்டும் பாடசாலைக்கு வரவழைக்கப்பட்டனர்.

வெடிகுண்டு காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்டதை அறிந்தக்கொண்ட அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனியில் உள்ள பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் 70 ஆண்டுகளுக்கு பிறகும் வெடிகுண்டுகள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுகின்றன.

கடந்த கிறித்துமஸ் தினத்தன்று Augsburg நகரில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 54,000 பேர் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இதே போல், கடந்த மே மாதம் Hanover நகரில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 50,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீச்சல் போட்டியில் சடலமாக மிதந்த வீரர்!!

சுவிஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் உள்ள சூரிச் மாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் நீச்சல் போட்டி நடத்துவது வழக்கம். நேற்று 29வது ஆண்டு நீச்சல் போட்டி கோலாகலமாக துவங்கிய நிலையில், 1.5 கி.மீ நீளமுள்ள சூரிச் ஏரியை கடக்க வீரர்கள் தயார் நிலையில் இருந்துள்ளனர்.

மாலை நேரத்தில் தொடங்கிய இப்போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 10,705 நீச்சல் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

விளையாட்டு போட்டியில் நிறைவுப்பெற்று பெண் ஒருவர் முதலிடத்தில் வெற்றிப்பெற்றுள்ளார். ஆனால், சில நிமிடங்களுக்கு பின்னர் ஏரியில் ஆண் உடல் ஒன்று மிதந்து வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் உடலை கரைக்கு இழுத்து வந்து முதலுதவி அளித்துள்ளனர். ஆனால், உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

நீச்சல் போட்டியில் பங்கேற்றபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் சூரிச் மாகாணத்தை சேர்ந்தவர் எனவும் அவருக்கு 66 வயது இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். நீச்சல் விளையாட்டு போட்டியில் வீரர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீவிரவாதிகளை உயிருடன் சாப்பிட்டு விடுவேன் : எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அதிபர்!!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாக பிலிப்பைன்ஸ் வருகை தரும் சமயத்தில், அவரை பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி குரங்கு என விமர்ச்சனம் செய்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போன்று ரோட்ரிகோ டுடெர்டி அவ்வப்போது சில சர்ச்சை ஏற்படுத்தும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவர், தீவிரவாதிகளுக்கு மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.

இது குறித்து அதிகாரிகள் மத்தியில் பேசிய அவர், இஸ்லாமிய தீவிரவாதிகளை உயிருடன் சாப்பிட்டுவிடுவேன் என்று கூறியுள்ளார்.

இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாலுமிகளில் இருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ரோட்ரிகோ இந்த கருத்தினை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டாம் உலகப்போரில் நடந்த அட்டூழியம் : வீடியோவை வெளியிட்ட சியோல் நகர நிர்வாகம்!!

 
தென்கொரியாவைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களை இரண்டாம் உலகப்போர் நடந்த போது, ஜப்பான் இராணுவத்தினர் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் கடந்த 50 ஆண்டுகள் நிலுவையில் உள்ளன. இதனால் இருநாடுகளுக்கும் இடையே புதிய உறவுகளுக்கான வாய்ப்புக்கள் எழவில்லை.

இந்த விடயத்தில் தென்கொரியா அரசு சமாதானமாகப் போனாலும், மக்கள் இது தொடர்பாக அவ்வப்போது போரட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் அவர்களை சமாதனப்படுத்துவதற்கான வழிமுறைகளை தென்கொரியா அரசால் கண்டறிய முடியவில்லை.

பாலியல் அடிமைகளாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக ஜப்பான் அரசு நிதி மூலம் பல்வேறு உதவிகளை அளிப்பதாக, கடந்த ஓராண்டுக்கு முன்னர் தெரிவித்திருந்தது.

இருப்பினும் தென் கொரிய மக்கள், இந்த விடயத்தில் ஜப்பான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சியோல் நகர நிர்வாகம் தென்கொரிய பெண்களை ஜப்பான் இராணுவத்தினர் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தியது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ஜப்பான் இராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் அமெரிக்கா மற்றும் சீனக் கூட்டு இராணுவத்தினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையின் போது, ஒரு பெண் சீன இராணுவத்தினர் ஒருவரிடம் பயத்துடனே பதில் அளித்துள்ளார்.

கணவரின் வாசனை இன்னும் வருகின்றது : மனைவியின் உருக்கமான பதிவு!!

2001 ஆம் ஆண்டு ஜம்மு- காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஷாஃபீக் கோரி மரணம் அடைந்தார்.

அவர் இறந்து 16 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அவரின் நினைவு தினமான நேற்று அவரின் மனைவி சல்மா தனது முகநூலில் உருக்கமா பதிவினை பதிவிட்டுள்ளார்.

கடந்த 2001ம் ஆண்டு ஜூலை 1ம் திகதி, என் வீட்டுக்கு சில ராணுவ அதிகாரிகளும் அவர்களின் மனைவிகளும் வந்தனர். ‘என் கணவர் உயிருடன் இல்லை’ என்கிற வேதனைத் தகவல் அவர்களிடத்தில் இருந்து எனக்கு கிடைத்தது.

எல்லாவற்றையும் இழந்துவிட்டது போலவே நான் உணர்ந்தேன். தகவல் பொய்யாக இருக்கக் கூடாதா என மனம் ஏங்கியது.

அப்போது, எனக்கு 29 வயதுதான் ஆகியிருந்தது. என் கணவரை மறந்துவிடும்படி என்னிடம் பலர் சொன்னார்கள். ஆனால், என் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் மறைந்து பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றுவரை என்னுடன்தான் இருக்கிறார்.

என்னைவிட எங்கள் குழந்தைகளைவிட, இந்த நாட்டைதான் அவர் அதிகம் நேசித்தார். இறந்ததாகச் சொல்லப்பட்ட அதே தினத்தில்தான் அவரிடமிருந்து எனக்குக் கடைசிக் கடிதமும் கிடைத்தது.

அத்துடன், கணவர் மேஜர் ஷாஃபீக் கோரியின் ராணுவ உடை அருகில் அவர் நிற்பது போன்ற புகைப்படத்தையும் சல்மா வெளியிட்டிருந்தார். ‘கணவரின் உடல் வாசம் அவரது யூனிஃபார்மில் இருந்து வெளிவருவதாக இன்றும் நம்புகிறேன்.

அதனால், அவரின் யூனிஃபார்மை நான் துவைக்காமல் வைத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளது அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது.

கேரளாவைக் கலக்கும் பெண்!!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஹார்வர்ட் பேராசிரியர் கீதா கோபிநாத் அவர்களை மாநிலத்தின் நிதி ஆலோசகராக நியமித்துள்ளார்.

கீதா கோபிநாத் அவர்களை ஆளுங்கட்சி நியமித்து இருந்தாலும் பல இடதுசாரி தலைவர்கள் இவரை ஆதரித்துள்ளனர்.

கேரளா எதற்காக இவரை மாநிலத்தின் நிதி ஆலோசகராக நியமித்துள்ளது என்பதுதான் தற்போதை ஹாட் டாப்பிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது. அதற்கான காரணங்கள் இதோ,

கீதா கோபிநாத் தனது இளங்கலை பொருளாதாரப் படிப்பினை டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் முடித்துள்ளார்.

பின்னர் தனது முதுகலைப் பட்டத்தினை டெல்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸிலும், முனைவர் பட்டத்தினை அமெரிக்காவிலும் பெற்றுள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இளங்கலை பட்டம் பெற்ற போது 1990-91 ஆண்டுகளில் இந்தியாவின் முதல் பெரிய வெளிநாட்டு நிதி மற்றும் நாணய நெருக்கடி ஏற்பட்டது என்று அவர் கூறினார்.

அது தான் தன்னைப் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற ஊக்குவித்ததாகவும், முனைவர் பட்டத்திற்காக வெளிநாடு வரை சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நியூயார்க்கின் மத்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினரான போஸ்டனின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியிலும் கீதா ஒரு பார்வையாளர், அறிஞர் ஆவார்.

பொருளாதார ஆய்வின் மறுபரிசீலனை, அமெரிக்கப் பொருளாதார விமர்சனம் மற்றும் ஐஎம்ஏ பொருளாதார விமர்சனம் போன்று எழுத்தாளர் நிலையிலும் உள்ளார்.

காதலியை உயிருடன் எரித்துக் கொல்ல முயன்ற காதலன் கைது!!

தமிழகத்தின் பண்ருட்டியில் காதலியை உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயற்சித்த வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்ருட்டி அருகே கானாஞ்சாவடி பேருந்து நிலையத்தில் கடந்த 1ம் திகதி பெண் ஒருவர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அவரை அனுமதித்ததுடன் பொலிசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தியதில், அவர் பெயர் சக்தி என்றும், சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் கிருஷ்ணகிரியை சேர்ந்த முரளி என்ற வாலிபரை காதலித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

பேஸ்புக்கின் மூலம் காதல் மலரவே, இருவரும் சேர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஊர் ஊராக சுற்றியுள்ளனர்.

பண்ருட்டி அருகே சாலையில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இரு வீட்டாரும் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் தற்கொலை செய்து கொள்ள சக்தி முடிவெடுத்தார்.

ஆனால் இதற்கு முரளி சம்மதம் தெரிவிக்காததுடன், சக்தியின் உடலில் டீசலை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடிவிட்டார்.

இதனை தொடர்ந்து முரளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது, இவர் கிருஷ்ணகிரியில் உள்ள செல்போன் கடையில் இருப்பது தெரியவந்தது.

விரைந்து சென்ற அதிகாரிகள் முரளியை கைது செய்தனர், விசாரணை நடத்தியதில் முரளிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதும், செல்போன் கடை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

கட்டிடங்களுக்கு மத்தியில் ஓர் காட்டு நகரம் : வியக்க வைக்கும் சீனர்கள்!!

 
காற்று மாசடைவதால் சூழல் ரீதியாக ஒவ்வொரு மனிதனும் நோய்களையும் பல பிரச்சினைகளையும் எதிர்நோக்க நேரிடும். அந்த வகையில் மனிதன் சுத்தமான காற்றைப் பெறுவது மிகவும் அவசியமானதாக காணப்படுகின்றது.

இந்த நிலையில் உலக நாடுகளில் இதற்கான பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதுடன், இந்த திட்டத்தில் சீனாவும் அங்கம் வகிக்கின்றது.

உலக நாடுகளில் அதிக அளவில் காற்று மாசுபடுதல் பிரச்சினையை எதிர்நோக்கும் நாடாக சீனா காணப்படுகின்றது.

இந்த நாட்டு அரசு ஏற்கனவே மாசற்ற காற்றினை உறிஞ்சிக் கொள்வதற்காக பல டவர்களை நிறுத்திய போதும், தற்போது காற்று மாசுபடுதலில் இருந்து மீள ஒரு சிறந்த முடிவு எடுத்துள்ளது.

அத்துடன், சீன நாட்டு அரசு காற்று மாசுபடுதல் பிரச்சினைக்கு தீர்வாக “காட்டு நகரம்” எனப்படும் கட்டிடங்களில் மரம் நடும் திட்டம் ஒன்றினையும் அறிமுகம் செய்துள்ளது.

குறித்த திட்டம் தெற்கு சீனாவின் மலைப்பகுதியான லிசோவு என்னும் இடத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த கலையை முதலில் இத்தாலிய கட்டடக்கலை வல்லுநரான ஸ்டெஃபனோ போரி என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.

சுமார் 30,000 பேர் வசிக்கும் அளவிற்கான வீடுகள் இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்படவுள்ளதுடன், இதனை லிசோவு முனிசிப்பாலிட்டி ஏற்று நடத்துகிறது என தெரிய வந்துள்ளது.

சாதாரண நகரங்களைப் போலவே கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், உணவகங்கள் போன்ற எல்லா வசதிகளும் இங்கு காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த நகரத்தின் மின்சார தேவைகளைப் பூர்த்தி செய்ய சூரிய ஒளி மின்சாரம் மற்றும் புவிவெப்ப சக்தியைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், நகரத்தின் முன்பாக பூங்கா மற்றும் தோட்டத்தைப் போல மரங்களும், செடிகளும் நடப்பட்டிருக்கும். நகரத்தினுள் 40,000 மரங்களும், 10 இலட்சம் செடிகளுமாக மொத்தம் 100 தாவர வகைகள் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது.

நகரத்திலுள்ள மரங்கள் ஒவ்வொரு ஆண்டும் 10,000 தொன் கார்பன் டை ஒக்சைடு மற்றும் 57 டன் காற்று மாசுக்களை உறிஞ்சி, 900 தொன் ஒக்சிஜனை இவை தரவல்லவை என இதனை வடிவமைத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கனடாவில் 21 வயது மனைவியை கொலை இலங்கையருக்கு நேர்ந்த கதி!!

கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கையர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கியூபெக்கில் தனது மனைவியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையரே நாடு கடத்தப்பட்டுள்ளார்.

அவரது வழக்கில் ஏற்பட்ட நியாயமற்ற தாமதங்களின் பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கனடாவில் நிரந்தர குடியுரிமையை பெற்ற சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்ற இலங்கையரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கனேடிய உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகிய சிவலோகநாதனின் தடுப்புக்காவல் மறு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டது. எனினும் அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டு குடியேற்ற மற்றும் அகதி வாரிய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

21 வயது மனைவி அனுஜா பாஸ்கரனை கொலை செய்த குற்றச்சாட்டிற்காக 31 வயதான இலங்கை அகதி தனபாலசிங்கம் கடந்த 2012ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

Montreal குடியிருப்பு பகுதியில் இருந்து அவரது மனைவியின் சடலம் மீட்கப்பட்டது. அவரது மனைவியின் கழுத்தில் 20 முறை குத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொலை குற்றச்சாட்டு வழக்கு விசாரணையின் கால எல்லை கனடா உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியதாகக் கருதப்பட்டது. இதனால், விசாரணைகள் ஏறக்குறைய ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதி Alexandre Boucher இந்த வழக்கினை விசாரணை செய்ய நீண்ட காலம் எடுத்துக் கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் அவரது வழக்கு விசாரணை நிறைவுக்கு வந்து அவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும் தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறும், தானாகவே நாடு கடத்தலை எதிர்கொள்ள விரும்புவதாகவும் நீதிமன்றத்தில் தனபாலசிங்கம் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.