3000 கோடிகளுக்கு சொந்தக்காரரான கோடீஸ்வரரின் மகள் சிறைவைப்பு : அதிர வைக்கும் காரணம்!!

3 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்கு சொந்தகாரரான மறைந்த தொழில் அதிபர் ஜே.பி.ஆரின் குடும்பத்தினர் சொத்துக்களை தரமறுத்து தன்னை வீட்டில் சிறை வத்திருப்பதாக இரண்டாவது மகள் ஷீலா பரபரப்பு புகார் கூறி இருக்கிறார்.

சென்னை சத்யபாமா பல்கலைகழகத்தின் நிறுவனர் ஜே.பி.ஆர், எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சென்னை மாநகர குடிநீர் வடிகால் வாரிய தலைவர், தமிழக சட்டமன்றத்தின் மேல்சபை உறுப்பினர், தமிழக மீன்வளத்துறை இயக்குனர் உள்ளிட்டபொறுப்புகளை வகித்தவர்.

1987ல் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்னர் அரசியலில் இருந்து விலகி சத்யபாமா பல்கலைகழகம், பனிமலர் பாலிடெக்னிக், ஜேபிஆர் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளிட்ட ஏராளமான கல்வி நிறுவனங்களையும்,டயர்,மெட்டல், சிமெண்ட், பால் உள்ளிட்ட பல்வேறு தொழிற் சாலைகளையும் தொடங்கிய ஜேபிஆர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி காலமானார்.

அப்போது அவரது சொத்து மதிப்பு சுமார் 3000 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேபிஆருக்கு பின்னர் அவரது சொத்துக்களை அவரது மனைவி ரெமிபாய் அவரது மகள்கள் மரியா ஷீனா, ஷீலா , ரெஜீனா ஆகியோரும் அவர்களது குடும்பத்தினரும் நிர்வகித்து வந்தனர்.

இந்த நிலையில் ஜே.பி.ஆரின் இரண்டாவது மகள் ஷீலா சொத்து பாகபிரிவினை தொடர்பாக புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில், தனது தந்தை ஜே.பி.ஆரின் சொத்துக்களை முறையாக பங்கீடு செய்யாமல் 2 கல்லூரிகளை மட்டும் தனக்கு கொடுத்து ஏமாற்றியதோடு, வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் தடுத்து பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள வீட்டிற்குள் பூட்டி சிறைவைத்துள்ளதாகவும் குடிநீரின்றி தவிப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.

ஓடும் ரயிலில் வெறிச்செயல் : மாட்டிறைச்சி உண்டதால் இளைஞர் அடித்துக் கொலை!!

டெல்லியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி ஓடும் ரயிலில் நான்கு இளைஞர்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பல்லப்கிராவின் கண்டவளி கிராமத்தைச் சேர்ந்த ஜுனைத், ஹஷீம், ஷாகிர் மொசின் மற்றும் மொயின் ஆகிய நான்கு இளைஞர்களும் துக்லகாபாத்தில் இருந்து ரயிலில் சென்றுள்ளனர்.

ரமலான் திருநாளிற்காக பொருட்கள் வாங்கச் சென்ற சென்றபோது இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரயில் கூட்டமாக இருந்தபோது நால்வர் மீதும் மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் ரயிலில் இருந்து விரைவாக வெளியேறிவிட்டதாகவும், அதனால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொரிய பிராந்தியத்தில் அசாதாரண நிலை : அமெரிக்காவை அழிக்க மிகப்பெரிய ஆயுதம் சோதனை!!

அமெரிக்காவை நேரடியாகத் தாக்கும் வகையில் வடகொரியா புதிய ரொக்கெட் என்ஜின் ஒன்றை பரிசோதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த என்ஜின் சோதனை, அமெரிக்காவை நோக்கி செலுத்தப்படவுள்ள ஏவுகணைகளில் பயன்படுத்தப்படலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தென் பகுதியை தாக்கி அழிக்கும் நோக்கில் உருவாக்குகின்ற ஒரு முயற்சியாக இந்த சோதனை நடவடிக்கை இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையானது அமெரிக்காவை தாக்கக்கூடிய, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பேலிஸ்டிக் ஏவுகணை தயாரிப்பின் ஒரு நிலையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடான தென்கொரியா ஏவுகணை ஒன்றை சோதனை நடத்தியிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தென்கொரியா அமெரிக்காவின் இராணுவ படைப்பிரிவுகளின் வலுவைப்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரிய தீபகற்பத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், கொரியா பிராந்தியத்தில் பதற்றத்தை தடுக்க விரும்பினால் இராஜீய ரீதியில் அதிக அழுத்தங்களை சீனா பயன்படுத்த வேண்டுமென அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, வடகொரியாவின் ஏவுகணை சோதனை நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அவற்றைப் புறந்தள்ளி மீண்டும் ஒரு சோதனை மேற்கொண்டுள்ளது.

சுவாதி முதல் ராம்குமார் வரை : ஓராண்டு முடிந்தும் விலகாத மர்மங்கள்!!

தன் மரணத்தால் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தையும் உலுக்கினார் சுவாதி. பொது இடங்களில் ஒரு பெண்ணுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லையா… ஒரு இளம்பெண் உதவி கேட்டு அபயக்குரல் எழுப்பும்போது யாருமே உதவிக்கு வர மாட்டார்களா… எவருக்கும் கேட்காமலே உதவி செய்யும் இயல்பான உணர்வை நம் சமூகம் எப்போது தொலைத்தது?’ என ஏராளமான கேள்விகள் அந்த நிமிடத்தில் எழுந்தன. ஆனால், அந்த வழக்கு விசாரணை தொடர்ந்த நாட்களில், இன்னும் ஏராளமான கேள்விகள் எழ ஆரம்பித்தன.

கடந்த 2016 ஜூன் 24-ம் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் சுவாதி. ஓராண்டு முடிந்த நிலையில், விடை தெரியாத கேள்விகளும் விலகாத மர்மங்களுமே சுவாதியின் மரணத்தைச் சூழ்ந்திருக்கின்றன.

சுவாதி கொலை வழக்கை ஆரம்பத்தில் ரயில்வே போலீஸ் விசாரித்தது. பிறகு தமிழக போலீஸ் வழக்கைக் கையில் எடுத்தது. நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையில் 8 தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டன. எட்டாவது நாளில், ராம்குமாரைக் குற்றவாளி என அறிவித்து, கைது செய்தது போலீஸ்.

சுவாதி இறந்து சரியாக 87-வது நாள். ‘மின் கம்பியைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார்’ என்றது சிறை நிர்வாகம்.

சுவாதி கொலையில் குற்றவாளி ராம்குமார் இறந்து விட்டதால், வழக்கை முடித்துக்கொண்டது காவல்துறை. நீதிமன்றமும் கடந்த பெப்ரவரி மாதம் இந்த வழக்கை முறைப்படி முடித்து வைத்து விட்டது. ஆனால், ராம்குமார் மரணத்தையொட்டி புதுப் புது சந்தேகங்களை எழுப்புகிறது,

ராம்குமாருக்கு நீதி வேண்டி போராடி வரும் முற்போக்கு வழக்கறிஞர் குழு.இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் மார்க்ஸ்,

திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ராம்குமார் கைதான உடனே, அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், ‘தன்னைத் தேவாங்கு என்று திட்டியதால் கோபமுற்று சுவாதியை ராம்குமார் கொன்றுவிட்டார்’ என்றார்.

பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டதாகச் சொல்லப்பட்ட ராம்குமாரால் பேசவே முடியாது. அப்படியிருக்க எப்படி அவரால் இப்படியொரு வாக்குமூலம் கொடுத்திருக்க முடியும்?

மேலும் கமிஷனரே இவ்வாறு கூறியதால், அடுத்து இந்த வழக்கை விசாரித்த போலீஸ் டீம், ராம்குமாரைக் கடந்து வேறு திசையில் விசாரணையைக் கொண்டு செல்லவில்லை.

சுவாதிக்கு ஒரு இஸ்லாமியருடன் காதல் ஏற்பட்டு, அவர்களுக்கு பெங்களூரில் பதிவுத் திருமணமும் நடந்துள்ளதாகக் கேள்விப்பட்டோம். இதையொட்டி அங்கு ஒரு பஞ்சாயத்தும் நடந்ததாகச் சொன்னார்கள். இந்துத்வா அமைப்புகளும் இதில் களமிறங்கின.

90 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு இயல்பாகவே ராம்குமாருக்கு ஜாமீன் கிடைக்க சட்டரீதியாக வாய்ப்பிருந்தது. ஆனால், வெளியே வந்தால் உண்மைகள் தெரிந்துவிடும் என்று, அதற்குச் சில நாள்கள் முன்பாக அவர் சிறையில் கொல்லப்படுகிறார்.

சுவாதி மரணத்தின் பின்னணியில் மிகப் பெரிய நெட்வொர்க்கே உண்டு’’ என நிறுத்தினார்.‘‘அதை விரிவாக நான் சொல்கிறேன்’’ என்று தொடங்கினார், ராம்குமாரின் வழக்குகளைப் பார்த்துவரும் வழக்கறிஞர் ராம்ராஜ்.

சுவாதி, ராம்குமார் வழக்குக் குறித்து இதுவரை எந்த ஆவணங்களையும் கோர்ட் எங்களுக்குத் தரவில்லை. ராம்குமாரின் பிரேதப்பரிசோதனை அறிக்கையைக்கூட எங்களுக்குத் தரவில்லை. இதையொட்டி ‘அனைத்து ஆவணங்களையும் எங்களுக்கு வழங்க வேண்டும்’ என்று 20.3.2017 அன்று எழும்பூர் 14-வது நீதிமன்ற நீதிபதி கோபிநாத்முன் மனுதாக்கல் செய்தோம்.

வழக்கின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதனைச் சரிபார்த்துவிட்டு அழைக்கிறோம்’ என்று இரண்டு வாரங்களுக்கு வழக்கைத் தள்ளி வைத்தார்.

ஆனால், செய்தித்தாளில், ‘ராம்குமார் இறந்து விட்டதால் வழக்கை முடித்து வைக்கக்கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற குற்றவியல் நடுவர், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்’ என்று செய்தி வெளியாகி இருந்தது.

இதைச் சுட்டிக் காட்டி ஆவணங்களைக் கேட்டோம். இன்றுவரை எங்களுக்கு எந்த ஆவணங்களையும் தரவில்லை. ஒரு வழக்கு முடிந்து விட்டால், அதுகுறித்த ஆவணங்களைத் தரவேண்டும் என்பது சட்டவிதி. ஆனால், ஏன் தர மறுக்கிறார்கள்? காரணம், இதன் பின்னுள்ள பகீர் விவகாரங்கள்தான்.

ராம்குமார் நிரபராதி என்பதை நிரூபிக்க, சுவாதி கொலை குறித்த உண்மைகளை அறியும் விசாரணையில் நாங்கள் இறங்கினோம். கிடைத்த தகவல்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சங்கிலித் தொடர்பு உண்டு.

சுவாதி பணியாற்றிய நிறுவனத்தில் முக்கியமான ஒருவருக்கு, ஹவாலா நபர்களுடன் தொடர்பு உள்ளது. அவரின் பரிவர்த்தனைகள் தொடர்பான சில முக்கியக் கோப்புகள் கொண்ட டிஸ்க் சுவாதியிடம் இருந்தது.

இதைத் தேடி மிகப் பெரிய அளவில் ஒரு டீம் சுவாதியைச் சுற்றியபடியே இருந்துள்ளது.சுவாதி மென்பொருள்களைக் கையாள்வதில் கைதேர்ந்தவர்.

ஆளும்கட்சித் தலைமைப் பீடத்தில் இருந்த ஒருவருக்குத் தெரியாமல், அவருடைய பன்னாட்டு வங்கிக் கணக்கில் இருந்து, அவருக்கு விசுவாசமாக இருந்த பெண்மணி ஒருவரே பணத்தை அபகரிக்கத் திட்டமிட்டார்.

இதைச் சாமர்த்தியமாக செய்து முடிக்க அந்தப் பெண்மணிக்கு ஒரு நிபுணர் தேவைப்பட்டார். அப்படி அந்த ‘விசுவாசமானவருக்கு’ இந்த விவகாரத்தில் உதவுவதற்காக அழைத்து வரப்பட்டார் சுவாதி. இது தலைமைப் பீடத்துக்குத் தெரிய வந்தபோது, சுவாதி எச்சரிக்கப்பட்டார்.

மூன்றாவது விஷயம், சுவாதிக்கும் இஸ்லாமியர் ஒருவருக்கும் நடந்த காதல் பதிவுத் திருமணமும், அதையொட்டி எழுந்த பஞ்சாயத்துகளும். சுவாதியின் படுகொலைக்கு மேற்கண்ட அனைத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

கூலிப்படைதான் சுவாதியைக் கொன்றது. போஸ்ட் மார்ட்டம் செய்த மருத்துவக் குழுவில் இருந்த நண்பர்கள், ‘ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தக் கொலையில் பங்கு இருக்கிறது’ என்று எனக்குச் சொன்னார்கள்.

இந்தக் கொலையில் பெரும் புள்ளிகள் தொடர்பும், மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தமும் ராம்குமாரைச் சிக்க வைத்து விட்டது. வெளியே வந்தால் உண்மைகள் தெரிந்துவிடும் என்றே ராம்குமார் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டார்.

இவை அனைத்துக்கும் எங்களிடம் வலுவான ஆதாரங்கள் உள்ளன. அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போகிறோம். சுவாதி, ராம்குமார் மரணங்களைத் தேசியப் புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என்றும் வழக்குத் தாக்கல் செய்ய உள்ளோம்.

சுவாதி கொலை வழக்கு’ என்று ஒரு படம் தயாரானது. ‘காவல்துறையின் இயலாமையைத்தான் பதிவு செஞ்சுருக்கேன்’ என்று படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன் என்னிடம் சொன்னார். இது தெரிந்துதான் அந்தப் படத்துக்கு சுவாதியின் அப்பா தடை கேட்கிறார். காவல்துறையும் படத்தைத் தடை செய்ய முயல்கிறது’’ என்றார் அழுத்தம் திருத்தமாக.

வழக்கறிஞர் ராம்ராஜ் சொன்ன விஷயங்கள் குறித்து விளக்கம் பெறுவதற்காக உதவி ஆணையர் தேவராஜைத் தொடர்பு கொண்டோம். ‘மீட்டிங்கில் இருக்கிறேன்’ என்று இரண்டு முறை கூறியவர், அதன்பிறகு நமது அழைப்பை ஏற்கவேயில்லை.

சுவாதியின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட பிலால் சித்திக்கிடம் பேசினோம். “எங்களை தயவுசெய்து நிம்மதியா இருக்க விடுங்க. சுவாதி மரணத்தில் சந்தேகம் இருப்பவங்க தாராளமா வழக்குப் போடுங்க. எங்களை விடுங்க. நான் எதுவும் பேச விரும்பல’’ என்றார் கெஞ்சல் தொனியில்.

சுவாதியின் முதலாமாண்டு அஞ்சலி நிகழ்ச்சியில் இருந்ததால் சுவாதியின் அப்பாவைத் தொடர்புகொள்ள இயலவில்லை.

அடுத்து நாம் ராம்குமார் பெரியப்பா ஆதிமூலத்திடம் பேசினோம். “எங்க பையனுக்கும், இந்தக் கொலைக்கும் சம்மந்தமில்லைங்க. என் தம்பிக்கு ஒரே பையன் ராம்குமார். அவனை இழந்து அவங்கம்மா பித்துப் பிடிச்ச மாதிரி இருக்காங்க. என் தம்பி பரமசிவமோ, மனநிலை பாதிக்கப்பட்டது போல இருக்காரு. இன்னும் அந்தப் பாதிப்பில் இருந்து மீள முடியல. சுவாதியைக் கொடூரமாக் கொன்ற குடும்பம்னு சமூகம் பேசுறதைத் தாங்கிக்க முடியல. உண்மையில ராம்குமார் அந்த கொலையைச் செய்யலைங்க. அவன் நிரபராதி. அது நிரூபணம் ஆனாதான் அவன் ஆத்மா சாந்தியடையும்’’ என்றார் கண்ணீரோடு.

சுவாதிக்கு முதலாமாண்டு அஞ்சலி செலுத்தும் நிலையிலும் அவர் மரணத்தைச் சுற்றிய மர்மங்கள் மட்டும் கன்னித்தீவு தொடராக நீண்டு வருகின்றன.

ஓர் உயிரைக் கொல்வது குற்றம் என்றால் உண்மைகளைக் கொல்வது பெருங்குற்றம்.

-விகடன்-

60 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 18 மாத குழந்தை!!

 
கிணற்று அருகில் தனது சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்ததை அடுத்து குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.

தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், செவெல்லா மண்டலத்தை சேர்ந்த சந்வேலி கிராமத்தில் வீணா என்ற 18 மாத குழந்தை, 60 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

கிணற்று அருகில் தனது சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வீணா, எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது. உடனியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழந்தையை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். அதேபோல், வருவாய் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பட்நாம் மகேந்தர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை காப்பாற்றுவதற்காக நடவடிக்கையை துரிதபடுத்தினார்.

கிணற்றுக்குள் தொடர்ச்சியாக ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், கிணற்றை சுற்றிலும் ஆழமாக பொக்லிங் மூலம் தோண்டப்பட்டு வருகிறது.

நிலத்தின் உரிமையாளர் சில தினங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு தோண்டியுள்ளதாகவும், ஆனால் அதனை மூடாமல் சென்றதே விபத்துக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் : சீ.சீ.டீ.வியில் சிக்கிய காதலன்!!

கொட்டாவையில் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் பிரேத பரிசோதனை நேற்று களுபோவில வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

29 வயதான தரிந்தி ஆலோக்க அவரது வீட்டின் படுக்கறையில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

உயிரிழந்த பெண்ணின் கழுத்து பகுதியின் முன் பக்கம் மற்றும் பின் பக்கத்தில் 20க்கும் அதிகமான முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அதிகம் இரத்தம் வெளியேறியுள்ளதாகவும், இதனால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாகவும், சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் சந்தேக நபர் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவரை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டில் சீ.சீ.டீ.வி கமரா பொருத்தப்பட்டுள்ள நிலையில் அந்த காணொளி ஊடாக பொலிஸ் விசாரணை நடத்தப்படவுள்ளது.

சந்தேக நபர் வெளிநாட்டு யாத்திரை பயணங்களை ஏற்பாடு செய்பவர் எனவும், கடந்த 2 வருடங்களாக அவர் அந்த வீட்டிற்கு வந்து செல்பவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நபர் தரிந்தியுடன் காதல் தொடர்பு வைத்த கொள்வதற்கு முயற்சித்துள்ள நிலையில் தரிந்தி அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த கொலை சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று சந்தேக நபர் அந்த பெண்ணின் வீட்டில் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.

 

சீனாவில் பெரும் நிலச்சரிவு : 100 பேர் உயிரோடு புதைந்தனர்!!

சீனாவில் நிகழ்ந்த ஒரு பயங்கர நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டனர்.

சீனாவின் தென் மேற்கு மாகாணமான சிச்சுவான், மோக்சியான் பகுதியிலுள்ள ஜின்மோ கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அங்கு 40 வீடுகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. மலையின் ஒருபக்கம் இடிந்து விழுந்தததால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

கற்கள் அப்பகுதியில் பாயும் நதியின் குறுக்கே சுமார் 2 கி.மீ தூரத்திற்கு படர்ந்து நதியின் போக்கை தடுத்து நிறுத்திவிட்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவம் பெரும் மழை காரணமாக நடந்துள்ளது. புல்டோசர்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

கிரிக்கெட் மட்டையால் மகனை அடித்துக் கொன்ற தந்தை!!

புத்தளத்தில் தந்தையொருவர் தனது மகனை அடித்துக் கொலை செய்துள்ளார். நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, குறித்த தந்தை கிரிக்கெட் மட்டையால் மகனைத் தாக்கியுள்ளார். இதன்போது, மயக்கமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் 24 வயதான இளைஞரே கொல்லப்பட்டுள்ளார். 54 வயதான தந்தை கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த செயற்கைக் கால் கண்டுபிடிப்பு!!

 
எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்லறையிலிருந்து மரத்தாலான செயற்கைக் கால் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரமிடுகளை ஆய்வு செய்துவரும் தொல்பொருள் ஆய்வாளர்கள், ஷேக் அப்த் அல்-குவர்னி கல்லறையை ஆய்வு செய்த போதே, 3000 ஆண்டுகள் பழமையான அந்த கல்லறையில் இருந்து மரத்தாலான செயற்கைக் கால் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த காலானது மதகுரு ஒருவரது மகள் பயன்படுத்தி வந்தது எனவும், அவரது வாழ்நாளில் குறித்த செயற்கைக் காலானது பலமுறை மாற்றியமைக்கப்பட்டு வந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செயற்கைக் காலானது மரத்தால் செதுக்கப்பட்டுள்ளது. தோலினாலான வாரினைப் பொருத்திக் கட்டப் பயன்படுத்தியுள்ளனர். தற்போது எகிப்திய நிபுணர்கள் குறித்த செயற்கைக் காலினை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

பிரிட்டனில் குட்டைப் பாவாடை அணிந்து பாடசாலை மாணவர்கள் நூதனப் போராட்டம்!!

பிரிட்டனில் பாடசாலை மாணவர்கள் சிலர் வித்தியாசமான முறையில் குட்டைப் பாவாடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இங்கிலாந்தில் இஸ்கா அகடமி பாடசாலை மாணவர்கள், சமீப காலமாக நிலவி வரும் வெப்பநிலை காரணமாக நீளக்காற்சட்டைக்குப் பதிலாக அரைக்காற்சட்டை அணிய பாடசாலை நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.
ஆனால், இதற்கு பாடசாலை நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை சுமார் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குட்டைப் பாவாடை அணிந்து பாடசாலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குட்டைப் பாவாடை, வெள்ளை நிற மேற்சட்டையுடன் மாணவர்கள் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, பாடசாலை நிர்வாகம் மாணவர்களின் பெற்றோருடன் கலந்துரையாடவுள்ளதாகவும், வெப்பநிலை குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எதிர்காலத்தில் மாணவர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

 

ஆடும் மனிதனும் கலந்து பிறந்த விநோத ஆட்டுக்குட்டி!!

தென்னாபிரிக்காவில் ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டியானது, ஆடும் மனிதனும் சேர்ந்த கலவை போன்று இருந்ததால், அதனைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

தென்னாபிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது கிறிஸ் ஹானி மாவட்டம். இங்கு அமைந்துள்ள சிறிய கிராமமே லேடி பிரரி. இந்த கிராமத்தில் அதிகளவில் விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இங்குள்ள ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டிதான் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போன்ற உடலமைப்புடன் இந்த குட்டி காணப்படுவது தான் இதற்கு காரணம்.

இதைக் கண்டவுடன் கிராம மக்கள் அனைவரும் இந்த குட்டியானது சாத்தானால் அனுப்பப்பட்டுள்ளது என்று பேசிக்கொண்டதால், கிராமத்தில் பரபரப்பு உண்டானது.

இது தொடர்பான தகவல் தெரிய வந்தவுடன், கிராமப்புற அபிவிருத்தி அதிகாரிகள் உடனடியாக மருத்துவர் ஒருவருடன் அங்கு விரைந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இது கண்டிப்பாக ஆட்டுக்குட்டிதான். மக்கள் பயப்பட வேண்டாம். மேலும், இந்த குட்டி கருவிலிருக்கும் பொழுது, அதன் தாய்க்கு ரிப்ட் வேலி என்ற நோய் பாதிப்பு இருந்துள்ளது. இதனால் குட்டி பிறக்கும் பொழுதே இறந்த நிலையில், இவ்வாறு பிறந்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்தும் மக்களின் சந்தேகம் தீராத காரணத்தால், அந்த குட்டியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை மக்கள் முன்னிலையில் தெரியப்படுத்தவுள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார்.

 

குடல் புற்றுநோயிற்கு காரணமாகும் கொழுப்பு!!

 

நாற்பதைக் கடக்கும் ஆண்களும், திருமணமாகி, குழந்தைப் பெற்ற பெண்களும் தங்களின் உடல் எடையால் பெரும்பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அதிலும் வயிற்றுப் பகுதியில் சேர்ந்துவிடும் அல்லது முறையற்ற உணவு பழக்கத்தால் சேகரிக்கப்படும் கொழுப்பால் தான் இவர்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

அதிக உடல் எடையுடன் கூடிய தொப்பை இருந்தால் இனிஅதனை குறைப்பதில் தீவிர கவனம் செலுத்துங்கள். ஏனெனில் இத்தகைய தொப்பைகள் தான் மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், பித்தப்பை மற்றும் கர்ப்பப் பை வாய் புற்றுநோயையும் உருவாக்குவதில் அதிக பங்களிப்பு செய்கிறது.

இடுப்புபகுதியில் சேமிக்கப்படும் கொழுப்பானது குடல் புற்றுநோயை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பதாக ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

உங்களின் உணவு பழக்கத்தால் உடலில் சேரும் கொழுப்பு, ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோனின் உற்பத்தியையும் அளவையும் சமச்சீரற்றதாக்குகிறது. இதனால் உடலில் இயல்பாக சுரக்கவேண்டிய இன்சுலீனின் அளவில் சமச்சீரின்மை உண்டாகி வயிற்றின் கொள்ளளவை அதிகரிக்கிறது. இவையனைத்தும் புற்றுநோய் ஏற்படுவதை ஊக்குவிக்கும் காரணிகளாகவும் செயல்படுகின்றன.

அதே சமயத்தில் உடலில் இருக்கும் கொழுப்பு, திசுக்களில் உள்ள நோய் எதிர்ப்பு உயிரணுக்களை ஈர்த்துவிடுகிறது. இதன் காரணமாக இத்தகைய உயிரணுக்கள் வெளியிடும் வேதிப் பொருள்கள் உடலில் வீக்கத்தை அதிகரித்து புற்றுநோயை உண்டாக்கக்கூடிய செல்களின் செயல்பாட்டை தூண்டிவிடுகின்றன.

அதனால் தொப்பைகளை குறைப்பதில் உடனடியாக கவனம் செலுத்துங்கள். அப்பிள், வெள்ளரிக்காய், தர்பூசணி, பாதாம் பருப்பு, கீரை வகைகள், பீன்ஸ் போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் நடைபயிற்சியும்,உடற்பயிற்சியும் செய்வதை தவிர்க்காதீர்கள்

2030ம் ஆண்டில் உலக சனத்தொகை 860 கோடியாக உயரும்!!

ஐ.நா. மக்கள் தொகை பிரிவு உலக மக்கள் தொகை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது உலக மக்கள் தொகை 760 கோடியாக உள்ளது. அது வருகிற 2030ம் ஆண்டில் 860 கோடியாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் எதிர்வரும் 2100ம் ஆண்டில் உலக அளவில் மக்கள் தொகை 1120 கோடியாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது மக்கள் தொகை 134 கோடியாக உள்ளது. இது படிப்படியாக உயர்ந்து வருகிற 2030ம் ஆண்டில் 151 கோடியாக மாறும். 2050-ம் ஆண்டில் 166 கோடியாக அதிகரிக்கும்.

மக்கள் தொகை பெருக்கம் அதிகம் உள்ள மற்றொரு நாடான சீனாவில் தற்போதைய மக்கள் தொகை 141 கோடியாக உள்ளது.

2024ம் ஆண்டில் அது 144 கோடியாக மாறும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்தியாவில் தொடர்ந்து மக்கள் தொகை அதிகரிக்கும் வேளையில் சீனாவின் மக்கள் தொகை பெருக்கம் கட்டுக்குள் அடங்கி பின்னர் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, நைஜீரியா, காங்கோ ஜனநாயக குடியரசு, பாகிஸ்தான், எத்தியோப்பியா, தான்சானியா, அமெரிக்கா, உகாண்டா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 9 நாடுகளில் உலக மக்கள் தொகையில் பாதி அளவு மக்கள் தொகை பெருக்கம் இருக்கும்.

மக்கள் தொகை பெருக்கம் விகிதாச்சாரம் 2017-2050ம் ஆண்டுக்கு இடையில் மேற்கண்ட அளவில் இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், அமெரிக்காவை விட நைஜீரியாவில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிச்சை எடுக்கும் நகைச்சுவை நடிகர்!!

பரத், சந்தியா நடித்த காதல் திரைப்படத்தில் தன் வித்தியாசமான தோற்றத்தால் பலரையும் சிரிக்க வைத்தவர் பல்லு பாபு. இவர் அப்படத்தில் விருச்சககாந்த் என சினிமா சான்ஸ் கேட்பது போல வருவார்.

இவரை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குனர் ஒரு நேர்காணல் செய்ய நினைத்தாராம். இதற்காக அவர் பல்லு பாபு தொடர்புகொள்ள முயற்சித்திருக்கிறார்.

ஆனால் அப்போது அவரின் முகவரியோ, தொலைபேசி எண்ணோ எதுவும் கிடைக்கவில்லையாம். இதனால் அவரின் நண்பர் ஒருவரிடம் விசாரித்தபோது அவருக்கு அதிர்ச்சியான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

காதல் படத்தில் விருச்சகாந்த் என பெயர் வைத்துக்கொண்டு. நடிச்சா ஹீரோ சார். நான் வெய்ட் பன்றேன் சார். முதல்ல சினிமா. அப்புறம் அரசியல். அப்புறம் பி.எம் என அவர் பேசிய வசனத்தை கேட்டு சிரிக்காதவர்களே இருக்க முடியாது.

பல்லு பாபு சென்னை, எழும்பூர் அருகில் உள்ள சூளையில் உள்ள கோவில் வாசில் பிச்சை எடுப்பதாக தகவல் கிடைத்தது. அவரை ஒரு வழியாக கண்டுபிடித்த போது அவர் சில விசயங்களை பகிர்ந்து கொண்டாராம்.

மேலும் அவர் காதல் படத்தில் நடித்தேன். பின் எந்த படத்தில் நடிக்க முயற்சி எடுக்கவில்லை. அப்பா அம்மாவும் இறந்தவிட்டதால் இங்கேயே இருந்துவிட்டேன் என பல்லு கூறினாராம்.

அங்குள்ள மக்களும் அவரின் நிலை கண்டு பரிதாபம் அடைந்ததாக சொல்கிறார்கள். பரவிவரும் இந்த தகவலால் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்து அவருக்கு உதவி செய்யும் என்ற எதிர்பார்ப்புள்ளது.

பிராந்திய 20 க்கு 20 போட்டியிலிருந்து மஹேல விலகல்!!

இங்கிலாந்து பிராந்திய 20 க்கு 20 கிரிக்கட் போட்டிகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். குறித்த போட்டித் தொடர்களில் லேங்கஷயர் அணியை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் விளையாடுவதற்கு மஹேல ஜயவர்தன ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தார்.

அந்த வகையில் தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தாம் குறித்த போட்டிகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கட் களத்திலிருந்து விலகிய மஹேல ஜயவர்தன கடந்த வருடம் இங்கிலாந்து பிராந்திய கிரிக்கட் தொடர்களில் சமர்செட் அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மாணவர்களிடையே குழு மோதல் : இரு மாணவர்கள் படுகாயம்!!

வவுனியாவில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் க.பொ.த உயர்தர மாணவர்களும் க.பொ.த சாதாரண தர மாணவர்கள் இன்று (23.06.2017) இரவு 7.30 மணியளவில் வைரவப்புளிங்குளம் தனியார் கல்வி நிலையத்தில் குழுவினராக மோதிக்கொண்டதில் இரு மாணவர்கள் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

கடந்த இரண்டு தினங்களாக குறித்த பாடசாலையில் மாணவர்கள் குழுவினராகப் பிரிந்து வகுப்பறையில் மோதிக்கொண்டனர். இதையடுத்து இன்று இரவு 7.30 மணியளவில் வைரவப்புளிங்குளம் பகுதியில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகமாக காணப்படும் பகுதியில் ஒன்றிணைந்த மாணவர்கள் அதே பாடசாலையில் க.பொ.த சதாரணத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து இரண்டு மாணவர்களும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைரவப்புளியங்குளம் பகுதியில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகமாக காணப்படுகின்ற அதேவேளை மாணவர்கள் குழுவினராக மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.

இப்பகுதியில் பொலிசாரரை கடமையில் நிறுத்துவதற்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.