இரண்டு மகள்களுடன் சடலமாக தூக்கில் தொங்கிய தந்தை : தாய் மாயம்!!

தொழிலாளி ஒருவர் தனது 2 மகள்களுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் மாயமான அவர் மனைவியை பொலிசார் தேடி வருகிறார்கள்.

சென்னையில் உள்ள மணலியை சேர்ந்தவர் சங்கர் (38) அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் மனைவி ஆஷா (30) தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்கு கவிதாலயா (13), காவியபிரியா (8) என இரு மகள்கள் உள்ளனர்.

சங்கர் புதிதாக வீடு கட்டியுள்ள நிலையில், குடும்பம் நடத்த போதிய பணம் இல்லாததால் பலரிடம் வீட்டு பத்திரத்தை வைத்து பணம் வாங்கியுள்ளார். அதே போல ஆஷாவும் சிலரிடம் கடன் வாங்கியுள்ளார்.

பணப்பிரச்சனையால் சங்கர் மற்றும் ஆஷாவுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஆஷாவை வேலைக்கு போக வேண்டாம் என சங்கர் தடுத்துள்ளார். ஆனால் அதையும் மீறி அவர் வேலைக்கு சென்றுள்ளார்.

பின்னர், வேலைக்கு சென்ற ஆஷா மாலையில் வீடு திரும்பாத நிலையில், கடன் கொடுத்தவர்கள் சங்கரிடம் பணம் கேட்டு நெருக்கடி தந்துள்ளனர். பின்னர், மனைவியின் செயல் குறித்து சங்கர், அஷாவின் தம்பி சுபாஷிடம் போனில் பேசியுள்ளார்.

வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற ஆஷா இடையில் வீட்டுக்கு வந்து திருமண விசே‌ஷத்துக்கு செல்வது போல பட்டுப்புடவை, நகை அணிந்து கொண்டு சென்றதாக சுபாஷ், சங்கரிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று காலை சுபாஷ், சங்கரை செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் எடுக்காததால் சந்தேகமடைந்த சுபாஷ் அவர் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்.

வீடு பூட்டி இருந்ததால் ஜன்னல் வழியாக சுபாஷ் பார்த்த போது சங்கர், கவிதாலயா, காவியபிரியா ஆகியோர் தூக்கில் தொங்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் மூன்று பேரின் சடலத்தையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் சங்கர், தன் மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் கடன் தொல்லையா? அல்லது குடும்ப தகராறு காரணமா? என விசாரித்து வருகின்றனர். மேலும், மாயமாகியுள்ள ஆஷாவையும் தேடி வருகிறார்கள்

மகனின் இறப்பை தாங்காத தாயின் உயிரும் பிரிந்தது : சோகத்தில் மூழ்கிய கிராமம்!!

பெற்ற மகனின் இறப்பை தாங்கிக் கொள்ளமுடியாத தாயொருவர் சோகத்தினால் உயிரிழந்துள்ளார். பலாங்கொடை அலுத்நுவர பிரதேசத்தில் வசித்து வந்த 79 வயதுடைய தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த வாரம் 54 வயதுடைய ஜயந்த பிரேமகுமார என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகனின் இறப்புச் செய்தி கேட்டு மயக்கமுற்ற தாயார், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த மரணத்தினால் அந்தக் கிராமம் முழுவதும் சோகத்தில் மூழ்கியது. இதேவேளை, உயிரிழந்த தாயின் இறுதிக் கிரியை இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

கர்ப்பிணியான மருமகளை தீயினால் சுட்டு மாமியார் கொடுமை?

பொகவந்தலாவையில், நான்கு மாத கர்ப்பிணியான மருமகளை தீக் கட்டையினால் சுட்டு மாமியார் ஒருவர் கொடுமை செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே. ஜயசூரிய இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொகவந்தலாவை பெட்ராசோ தோட்டத்தில் வசித்து வரும் 22 வயதான லெச்சுமனன் விஜேமணி என்ற கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு தீக் கட்டையினால் சுடப்பட்டுள்ளார்.

இந்தப் பெண் நேற்று மாதாந்த மருத்துவ பரிசோதனைகளுக்காக பொகவந்தலாவை சுகாதார வைத்திய காரியாலயத்திற்கு சென்றுள்ளார்.

இதன் போது குறித்த பெண்ணின் தலை, கை மற்றும் கால்களில் சூட்டுக் காயங்கள் காணப்பட்டுள்ளன.இதனை அவதானித்த மருத்துவ அதிகாரி இது குறித்து, விஜயமணியிடம் வினவியுள்ளார்.

அதன் போது தமது மாமியார் தம்மை இவ்வாறு கொடுமை செய்வதாகவும் தீக் கட்டடையினால் சுட்டதாகவும் அந்தக் கர்ப்பிணி பெண் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2013 பெப்ரவரி மாதம் 9ம் திகதி இந்தப் பெண் விவாகம் செய்து கொண்டுள்ளார்.இதற்கு முன்னர் கருவுற்றிருந்த காலத்தில் மாமியார் கொடூரமாக தாக்கியதனால் கரு கலைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமது மாமியார், மூத்த பிள்ளையையும் இவ்வாறு தாக்குவதாகவும் இது கணவர் வேடிக்கை பார்ப்பாரே தவிர காப்பாற்ற மாட்டார் எனவும் விஜயமணி என்ற பெண் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

150 பேரின் உயிரைக் காவு கொண்ட டெங்கு நோய்!!

இலங்கையில் 8 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவுகின்ற வேகம் உக்கிரமடைந்துள்ளது என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய 8 மாவட்டங்களில் டெங்கு நோய் அதிகமாக பரவி வருகின்றது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதிக்குள் மட்டும் 150 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த 5 மாதங்களில் 60 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது

 

அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிகை எடுத்துள்ளது.

நேற்று (13.06) மாலை இடம்பெற்ற கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டதாக வாழ்க்கை செலவு குழுவின் உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

உலக சந்தையில் சீனியின் விலை குறைவடையும் போது வரிகள் விதிக்கப்படுமாயின், சீனியின் விலை அதிகரிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தவிர வர்த்தகர்களால் சீனியின் விலையை அதிகரிக்க முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஹோட்டல்களில் தேநீரின் விலையை அதிகரிப்போருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலி!!

பங்களாதேஷில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக அசாதாரண காலநிலை நிலவுவதனால், கடும் மழைபொழிவை அந்நாடு எதிர் கொண்டுள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு பகுதியில் அங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்திருந்தது.

குறித்த மண்சரிவு நிலைமை காரணமாக ரங்காமத் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மீட்புப் பணி வீரர்கள் உட்பட 21 பேர் பலியாகியுள்ளதாகவும், பந்தர்மன் மாவட்டத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நிலைசரிவில் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டு மீட்பு குழுவினர் மும்முரமாக ஈடுப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கையின் வெற்றிக் கனவை தகர்த்த சப்ராஷ் அஹமட்டுக்கு அபராதத்துடன் எச்சரிக்கை!!

வெற்றி வாய்ப்பு இலங்கை அணியின் பக்கம் இருந்த போதும் தனது நிதானமான துடுப்பாட்டத்தால் பாகிஸ்தான் அணியை வெற்றிபெறச் செய்த பாகிஸ்தான் அணித் தலைவருக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு ஐ.சி.சி.யினால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான போட்டியின் போது பந்து வீசுவதற்கு ஒரு மணித் தியாலம் தாமதப்படுத்திய குற்றத்திற்காகவே சப்ராஷ் அஹமட்டுக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீத அபராதமும் அணி வீரர்களுக்கு 10 வீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சிறிது நேரம் பந்து வீசுவதற்கு தாமதித்தாலும் கூட, எதிர்வரும் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும் எனவும் சப்ராஷ் அஹமட்டுக்கு ஐ.சி.சி.யினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமலாபாலுக்கு அடுத்த திருமணம்!!

அமலா பால் மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர். இதை தொடர்ந்து இவர் தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களில் நடித்தார்.

இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக இருந்து வந்த நேரத்தில் என்ன ஆனது என்று தெரியவில்லை, இருவரும் விவாகரத்து செய்துக்கொண்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இனி அமலா பால் வாழ்க்கையில் காதல், கல்யாணம் இருக்குமா என்று கேட்டுள்ளனர்.

அதற்கு ’என்ன இப்படி கேட்கிறீங்க, கண்டிப்பாக இருக்கும்’ என கூறியுள்ளார், இதன் மூலம் அமலா பால் அடுத்த திருமணத்திற்கு ரெடி என்பது உறுதியாகிவிட்டது.

வீட்டில் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்த நடிகை!!

மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகையும், மொடலுமான க்ரித்திகா சவுத்ரி அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்தவர் க்ரிதிக்கா சவுத்ரி(23). பாலிவுட் நடிகையாக ஆசைப்பட்டு மும்பை வந்து வீடு எடுத்து தங்கியிருந்தார்.

கங்கனா ரனாவத் நடித்த ரஜ்ஜோ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் க்ரித்திகா. ரஜ்ஜோ படம் மட்டும் இன்றி பாலாஜி ப்ரொடக்ஷன் டிவி சீரியல்களிலும் பணியாற்றியுள்ளார். நடிப்பு தவிர மொடலிங்கும் செய்து வந்தார். பொலிவுட்டில் அவரால் ஜொலிக்க முடியவில்லை.

க்ரித்திகா மும்பையில் அந்தேரி பகுதியில் அபார்ட்மென்ட் ஒன்றில் தங்கியிருந்தார். அவர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

க்ரித்திகாவின் வீட்டுக் கதவு வெளியே இருந்து பூட்டியிருந்தது. போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது க்ரித்திகா அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

க்ரித்திகா இறந்து 3 முதல் 4 நாட்களாகியுள்ளது என்றும், அவரை யாரோ கொலை செய்திருக்கிறார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எனது பேரப்பிள்ளை செல்பி எடுக்க வேண்டுமென்று வாகனத்திலிருந்து இறங்கியபோது நாம் அதனை விரும்பவில்லை!!

எனது இளைய பேரப்பிள்ளை புகைப்படம் எடுக்க வேண்டுமென்று வாகனத்திலிருந்து இறங்கிய போது நாம் அதற்கு விருப்பப்படவில்லை. இருப்பினும் அவர் வாகனத்திலிருந்து இறங்கி கடல் மார்க்கமாகவுள்ள ரயில்வே தண்டவாளத்துக்கு தனது சகோதரருடன் சென்று செல்பி எடுத்தார்.

இதன் போது நேரம் 5. 45 மணி இருக்கும். அப்போது குறித்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரயில் எனது பேரப் பிள்ளைகள் நின்ற இடத்தை அண்மித்துக் கொண்டிருந்தது. ஆனால், அந்த ரயில் அவர்களை நெருங்கும் வரை அதன் சப்தம் கேட்கவில்லை.

இதன் போது நான் ரயில் வருவதாக மகனின் கூறி விட்டு தூரமாகச் சென்ற அடுத்த நிமிடமே அவர்கள் இருவரையும் அந்த ரயில் மோதியது” இவ்வாறு கொள்ளுப்பிட்டி ரயில் பாதையில் செல்பி எடுத்துக் கொண்டிருந்த போது ரயிலால் மோதப்பட்டு தனது இரு பேரப் பிள்ளைகளைப் பலி கொடுத்த 68 வயது தாயான பிரேமா குணவர்தன தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, எனது மூத்த பேரப்பிள்ளை அநுராதபுரம் செயின்ற் ஜோஸப் வித்தியாலயத்தில் கல்வி பயின்று ஹோட்டல் முகாமைத்துவ கல்வியைத் தொடர்வதற்காக சிங்கப்பூர் சென்றிருந்தார்.

இந்த நிலையில் சுமார் 3 வருடங்களின் பின்னர் அவர் கடந்த 11 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் மூலம் இலங்கை திரும்பியிருந்தார். இதன் போது அவரை அழைத்து வருவதற்காக நானும் எனது பேரப்பிள்ளைகளின் தாய் தந்தை, கணவர், உட்பட குடும்ப முக்கியஸ்தர்கள் கட்டுநாயக்கா சென்றிருந்தோம். பின்னர் அவரை அழைத்துக் கொண்டு கொழும்புக்கு வந்தோம்.

கட்டுநாயக்கவிலிருந்த கொழும்புக்கு வந்து கொள்ளுப்பிட்டியிலுள்ள எமது உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்று விட்டு திரும்பி வரும் போதே இந்தச் சம்பவத்துக்கு முகங் கொடுத்தோம் என தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தில் அநுராதபுரம், அனுலா தேவி மாவத்தையைச் சேர்ந்த மதுஷான் ரணவிரு (24), ஷக் ஷான் ரணவிரு (12) ஆகியோரே உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற இராணுவ வீரரதும் வீராங்கனையினதும் பிள்ளைகளாவர்.

 

வவுனியாவிலும் 2வது நாளாக தபால் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் : மக்கள் சிரமம்!!

 
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால்துறை ஊழியர்கள் 2வது நாளாக மேற்கொண்டு வரும் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தால் வவுனியாவில் தபால்துறை முடங்கி காணப்படுகின்றது.

நிர்வாக ரீதியாக தாம் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு இதுவரையில் உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தபால் அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டடத்தில் சுற்றுலா விடுதியை நடத்த தீர்மானித்தமைக்கு எதிராகவும் 48 மணிநேர பணி பகிஸ்கரிப்பாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்று (13.06) அதிகாலை 12 மணியில் இருந்து 48 மணிநேரம் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடும் நிலையில் இதற்கான தீர்வு வழங்கப்படாத நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதியில் இருந்து தொடர் போராட்டமாக நடத்த தீர்மானித்துள்ளனர்.

இதன் காணரமாக வவுனியா பிரதான தபால் நிலையம் உட்பட அனைத்து தபால் நிலையங்களும் மூடப்பட்டு காணப்படுகின்றது.

ஊழியர்கள் பணியில் இன்மையால் பல்வேறு தேவைகளுக்காகவும் தபால் நிலையங்களுக்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

வவுனியா கூமாங்குளத்தில் 500 குடும்பங்களுக்கு மஸ்தான் எம்பியால் மாங்கன்றுகள் வழங்கிவைப்பு!!

 
ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் கீழ் வவுனியா கூமாங்குளம் கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட 500 குடும்பங்களுக்கு டொம்.என்.ஜே. சீ மாங்கன்றுகளை அமைச்சர் தயா கமகே உடன் இணைந்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே. காதர் மஸ்தான் நேற்று முன்தினம் (12.06.2017) வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வின் இறுதியில் ஞாபகார்த்தமாக முதல் மாங்கன்றை கூமாங்குளம் சித்தி விநாயகர் பாடசாலையில் அமைச்சர் தயா கமகே உடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் நாட்டி வைத்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர்கள் விடயத்துக்கு பொறுப்பான அரச அதிகாரிகள் பயனாளிகள் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா தபால் நிலையத்தில் தனிச் சிங்கள மொழியில் அறிவிப்புப் பலகை : மக்கள் விசனம்!!

நேற்று முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால்துறை ஊழியர்கள் 2வது நாளாக மேற்கொண்டு வரும் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தால் வவுனியாவில் தபால்துறை முடங்கி காணப்படுகின்றது.

பணிப்பகிஷ்கரிப்பை முன்னிட்டு வவுனியா தபால் நிலையத்தின் வாயிலில் சிங்கள மொழியில் மாத்திரம் அறிவித்தல் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களும் செறிந்து வாழும் இடத்தில் தனிச் சிங்கள மொழியில் மட்டுமே அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளமை அங்கு வந்த சிங்கள மொழி தெரியாத பலரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது.

படிக்க விரும்பவில்லை எனக் கூறி தற்கொலை செய்து கொண்ட 15 வயது மாணவன்!!

15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கற்கை நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக குறிப்பிட்டே குறித்த மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வரக்காபொல, ஒன்னாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனது நண்பர்களிடம் பலமுறை இது தொடர்பில் தெரிவித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

புதிதாக கண்டுபிடிக்கப்படும் கிரகத்துக்கு இந்திய இளம் பெண்ணின் பெயர்!!

விண்வெளியில் புதிதாக கண்டுபிடிக்கப்படும் கிரகத்துக்கு இந்திய இளம் பெண் ஒருவரின் பெயர் சூட்டப்படும் என்று லிங்கன் அறிவியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 16 வயதுடைய சாஹிதி பிங்காலி என்ற மாணவியின் பெயரே புதிய கிரகத்துக்கு சூட்டப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர் நிலைகள் மாசுபடுவது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட இவர், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளை பெற்றுள்ளார்.

அண்மையில் அமெரிக்காவின் மாசசூசட்ஸ் லிங்கன் ஆய்வகம் நடத்திய சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்பு போட்டியில் சாஹிதி பங்கேற்றிருந்தார்.

இந்த போட்டியில் பெங்களூரில் உள்ள ஏரிகளில் மாசு ஏற்படுவது குறித்தும், அவற்றை தூய்மையாக பாதுகாப்பது குறித்தும் சாஹிதி ஆய்வு செய்து, அந்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

மேலும் ஏரி, ஆறு, குளங்களில் உள்ள நீரின் தூய்மை தரத்தை மொபைல் செயலி மூலமாக கண்காணிக்க முடியும் என தனது ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சாஹிதி சமர்ப்பித்த ஆய்வு அறிக்கை முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவு செய்யப்பட்டது.

மேலும் பெங்களூரில் மாசடைந்த ஏரியை தூய்மைப்படுத்துவது தொடர்பாக அவரது ஆய்வு இருந்தது. இந்த ஆய்வை ஏற்றுக் கொண்ட மாசசூசட்ஸ் லிங்கன் ஆய்வகம், சாஹிதியின் கண்டுபிடிப்பை கௌரவிக்கும் விதமாக விண்வெளியில் கண்டுபிடிக்கப்படும் கிரகத்துக்கு சாஹிதியின் பெயர் வைக்கப்படும் என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முஸ்லிம்கள் நிதானம் இழக்க வேண்டாம் : மஸ்தான் எம்.பி வேண்டுகோள்!!

நாட்டில் முஸ்லிம்களுடைய மதஸ்த் தலங்கள், வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்படுவதும் அதன் மூலம் இனவாதிகள் இனக்கலவரத்தை கொண்டுவர முயற்சிக்கின்றமையாலும் முஸ்லிம்கள் நிதானமாக இருந்துகொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.மஸ்தான் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

மேலும் சமூக ஊடகங்களூடாக இனவாதத்தை தூண்டும் வெறுப்புப் பேச்சுக்கள், தகவல்கள் என்பனவற்றை பகிர்வதையும் பதிவு செய்வதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் இந்த புனிதனமான றமழான் மாதத்தில் பொறுமையை கடைப்பிடித்து இறைவனிடம் இனக்கலவரத்தை ஏற்படுத்த முனையும் சக்திகளுக்கு சரியான தண்டனை கிடைக்கை பிரார்த்தனைகள் செய்துகொள்ள வேண்டும்.

அண்மைக்காலமாக சில மக்கள் பிரதிநிதிகளும் முஸ்லிம் இளைஞர்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசுகின்றனர் என்னைப்பொறுத்தவரியில் அது தவறு என்றே கருதுகின்றேன் ஏனெனில் இப்பொழுது நாம் எதிர்நோக்கியுள்ள இந்த துர்பாக்கியமான நிலையினை வன்முறைகள் மூலம் தீர்க்கலாம் என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.

அழுத்கம, பேருவளை சம்பவங்களே இன்னும் மக்கள் மனதை விட்டு நீங்காத நிலையில் இவ்வாறான பேச்சுக்களை நிதானமாக மக்கள் பிரதிநிதிகளும் பேச வேண்டும் என்பது எனது கோரிக்கையாகும்.

சிறுபான்மை மக்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக ஆதரித்துக் கொண்டு வந்த நல்லாட்சி முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதலுக்கான நடவடிக்கைகளை ஆமை வேகத்தில் நகர்த்திச்செல்லுமாக இருந்தால் நல்லாட்சியின் எதிர்கால நகர்வுகளில் கேள்விக்குறியே ஏற்படும்.

மேலும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துப்படவுள்ள அநீதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்திலுள்ள முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து எடுக்கும் எந்த தீர்மானமாக இருந்தாலும் அதற்கு தானும் உடன்படுவேன் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.