அடுத்த 20 ஆண்டுகளில் வேற்றுக் கிரகவாசிகளை மனிதர்கள் கண்டுபிடிக்கலாம்!!

இன்னும் 20 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகளை கண்டுபிடிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவும், அவர்கள் பறக்கும் தட்டு மூலம் பூமிக்கு வந்து செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

இந்த நிலையில் இன்னும் 20 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகளை மனிதர்கள் கண்டறிய முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக நிபுணர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பூமியை போன்று பல கிரகங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

எனவே அங்கு வேற்று கிரகவாசிகள் வாழலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரிசோனா பல்கலைக்கழக நிபுணர்களின் இந்த ஆய்வுக்கு நாசா உதவுகிறது.

எனவே இன்னும் 20 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகளின் நிலையை கண்டறிய முடியும். ஜேம்ஸ் வெப் விண்வெளி டெலஸ் கோப் மற்றும் சக்தி வாய்ந்த உபகரணங்கள் மூலம் இது சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் அதிரடி மாற்றம் : முதல்வராக சீ.வி.கே.சிவஞானம்?

வடமாகாண சபையில் நான்கு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அத்துடன் வடமாகாண முதலமைச்சர் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் நியாயம் கேட்காமல் தன்னிச்சையாக அவர்களுக்கு கட்டாய விடுமுறையை வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் ரீதியான பல்வேறு விமர்சனங்களும் மற்றும் சர்சையும் ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.

இந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி கூடி முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக ஆளுனரின் அனுமதி கோரி 20இற்கு மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதனடிப்படையில் வடமாகாண முதல்வராக சீ.வி.கே.சிவஞானம் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமாகாண அரசியலில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் வடமாகாண சபையின் ஏனைய பொறுப்புக்களின் புதிய நியமனம் தொடர்பில் எவ்வித கருத்துக்களும் முன்வைக்கப்படாத நிலையில் முதலமைச்சரை மாற்றுவது தொடர்பில் மாத்திரம் செய்திகள் வெளியாகியுள்ளன.

சம்பியன்ஸ் கிண்ண கனவோடு முதல் முறையாக இறுதி போட்டியிற்குள் நுழைந்த பாகிஸ்தான்!!

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நேற்று பாகிஸ்தான் அணி மற்றும் இங்கிலாந்து அணி மோதிக்கொண்டன.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது.அதன் படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி சப்ராஸின் பந்துவீச்சு மற்றும் பாகிஸ்தான் அணியின் அபாராமான களத்தடுப்பினால் ஆரம்பம் முதல் ஓட்டங்களைப் பெறத் தடுமாறி இறுதியில் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஜோ ரூட் 46 ஓட்டங்களையும் ஜொனி பெயஸ்ரோ 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் ஹசன் அலி மூன்று விக்கெட்டுக்களையும் யுனைட் கான் மற்றும் ரகுமான் ரயீஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் தமக்கிடையே பகிர்ந்துக்கொண்டனர்.

212 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே தங்களின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பஹர் ரகுமான் மற்றும் அசார் அலி ஜோடி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சினை பந்தாடி 21.1 ஓவர்களில் 118 ஓட்டங்களைக் குவித்த நிலையில் 57 ஓட்டங்களுடன் பஹர் ரகுமான் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி 76 ஓட்டங்களைக் குவித்த அஷார் அலியும் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 37.1 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்து எட்டு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியினை சொந்த மண்ணில் வைத்து இலகுவாக வெற்றியடைந்தது. பாபர் ஆஷாம் 38 ஓட்டங்களுடனும் முகமட் ஹபிஸ் 31 ஓட்டங்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றி இலக்கையடைந்தனர்.

இவ்வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி முதன்முறையாக சம்பியன்ஸ் கிண்ண இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது.போட்டியின் ஆட்டநாயகனான ஹசன் அலி தெரிவுச்செய்யப்பட்டார்.

இலங்கையை மீண்டும் அச்சுறுத்த வரும் அடைமழை!!

இலங்கையின் தென்மேற்கு பிரதேசங்களிலும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டையிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பகுதிகளில் பெய்யும் மழையில் சற்று அதிகரிப்பு தன்மையை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகணங்களிலும் காலி, மத்தறை மற்றும் மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் மழை பெய்ய கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

விசேடமாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களிலும் மாலை 3 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதன் காரணமாக மழை பெய்யும் பகுதியில் மழையுடன் கடும் காற்று வீசுவதோடு மின்னல் ஆபத்துக்களும் ஏற்பட கூடும். இது குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் எச்சரித்துள்ளது.

புகையிரதப் பாதைகளில் இனி செல்பி எடுக்கத்தடை!!

இலங்கையில் புகையிரதப்பாதையை அண்டிய பகுதி மற்றும் தண்டவாளத்தில் செல்பி எடுப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தை இலங்கை புகையிரத திணைக்களம் எடுத்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் செல்பி எடுப்பதால் 22 பேர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அனர்த்தங்களை தவிர்க்கவும் மற்றும் புகையிரத சேவையில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

லண்டனில் பற்றி எரியும் 24 மாடி கட்டிடம் :  6 பேர் பலியான பரிதாபம்!!

 

லண்டன் 24 மாடி கட்டிடம் ஒன்று தீ பிடித்து சென்னை சில்க்ஸ் பற்றி எரிந்ததைப் போலவே எரிந்து கொண்டிருக்கிறது. இதில் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

லண்டனில் கிரென்பெல் டவர் என்ற 24 மாடி கட்டிடம் பல மணி நேரமாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ கட்டுக்கடங்காமல் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தைப் போலவே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த விபத்தில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாகவும். 60க்கு மேற்பட்டோர் 6 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன எனினும் இவ்விபத்தில் ஏராளமானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பேஸ்புக்கில் கவிதை பதிவிட்ட ஆசிரியருக்கு இடமாற்றம்!!

தனது தனிப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் கவிதை பதிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட குளியாப்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் இளம் ஆசிரியர் ஒருவர் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவசியத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், இது ஒரு பழிவாங்கும் செயல் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆசிரியர், அந்த பாடசாலையின் நிர்வாகம் குறித்து பல முறை கல்வி அமைச்சரிடம் முறைப்பாடு செய்துள்ளார் என அந்த சங்கத்தின் செயலாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதற்காக ஒரு பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதென கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அவ்வாறு கூறிய போதிலும், இந்த ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆசிரியர் சிறுவயது முதலே கவிதை எழுதும் பழக்கம் கொண்டவராகும். மிகவும் திறமையான இந்த ஆசிரியர் தான் எழுதிய கவிதையை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த கவிதைகளுக்குள் பாடசாலை நிர்வாகத்தை விமர்சிக்கும் வகையில் கவிதை ஒன்றிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவை அனைத்தும் போலியான தகவல் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

 

யாழைச் சேர்ந்த தந்தையும் மகனும் கனடாவில் கொலை : விசாரணைகள் தீவிரம்!!

கனடாவின் கேல்கரியில் இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பு சந்திரபாபு(வயது 56) மற்றும் அவரது மகன் சந்திரபாபு பிரியந்தன்(வயது 25) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கேல்கரியின் Panorama Hills பகுதியில் உள்ள வீட்டில் சனிக்கிழமை(10/6/2017) காலை 5.15 மணியளவில் இருவரின் சடலம் மீட்கப்பட்டதாக கேல்கரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய பொலிசார், சம்பவ தினத்தன்று வீட்டில் பலர் கூடியிருந்த வேளை பயங்கர விவாதம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர்.

விவாதம் கைகலப்பாக மாறவே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகவும், இதில் படுகாயமடைந்த இருவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை வழக்கில் சந்தேகப்படும் குற்றவாளியாக கருதப்படும் நபர், அந்த குடும்பத்தை சார்ந்தவர் இல்லை என்ற போதிலும், குடும்ப உறுப்பினர்களுக்கு பரீட்சியமானவர் எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சம்பவத்தின் போது உடனிருந்த பெண் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருவருடைய பிரேத பரிசோதனை நேற்று நடத்தப்பட்ட போதிலும், இறப்புக்கான காரணத்தை பொலிசார் வெளியிடவில்லை.

தம்பு சந்திரபாபு, சந்திரபாபு பிரியந்தன் ஆகிய இருவரும் டொரண்டோவில் இருந்து கேல்கரிக்கு குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வட மாகாண சபை நிர்வாகம் ஊழலின்றி செயற்பட வேண்டும் : காதர் மஸ்தான்!!

 
பாரிய எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட வட மாகாண சபை ஊழலின்றி மக்களுக்களுக்காக செயற்பட வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் ஏற்பாட்டில் அவரது வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வட மாகாண சபை மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் எமது மக்களின் பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட ஒன்றாகும் எனினும் இப்பொழுது மாகாணசபைக்குள் நடப்பது என்னவென்றே விளங்கவில்லை.

வட மாகாணசபையில் ஊழல்கள் காணப்படுமாக இருந்தால் மக்களுக்கும் யாரை மக்கள் பிரதிநிதிகளாக தெர்ந்தெடுப்பது என்ற கேல்விநிலை தோன்றியிருக்கின்றது. மக்கள் பிரதிநிதிகள் இழைக்கும் தவறுகளுக்கு மக்களின் தேர்வுகளில் பிழை என்பதை வட மாகாண சபை நிரூபித்து விடாமல் மக்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிய மாகாண சபையாக இருப்பதற்கான வழி வகைகளை தேடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

உண்மையில் யுத்தத்துக்கு பின்னர் வடக்கில் மீண்டும் தமிழ் மக்களின் கல்விநிலையில் வளர்ச்சி ஏற்படுவதை அவதானிக்க முடிகின்றது. எனவே அதற்கு வட மாகாண சபை மேலும் வலுசேர்க்க வேண்டும்

ஆனால் இன்று கல்விக்கு வலு சேர்க்க வேண்டிய மாகாண கல்வியமைச்சில் ஊழல், எமது பகுதிக்கே உரித்தானது விவசாயம். ஆனால் இங்குள்ள விவசாய அமைச்சிலும் ஊழல் என்றால் என்னதான் செய்வது.

கடந்த ஆட்சியில் ஊழல் அதிகமாக காணப்பட்டதால் சிறுபாண்மையினரின் மூலம் இந்த ஆட்சி கொண்டுவரப்பட்டது. ஆனால் சிறுபாண்மையினர் பெரும்பான்மையாக காணப்படும் வட மாகாணசபையில் ஊழல் என்றால் என்ன செய்வதென்று வட மாகாண மக்களே முடிவெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரதிநிதி தமிழ் அரசியல்வாதிகளுக்கு விடுக்கும் வேண்டுகோள்!!

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (12.06) அன்று எட்டு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்பு தொடர்பாக ஊடகவியலாளருக்கு நேற்றையதினம் (13.06) வழங்கிய விசேட செவ்வியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வவுனியா மாவட்டத்தின் பிரதிநிதியாக கலந்துகொண்ட பேரின்பராசா பாலேஸ்வரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்த கருத்து தெரிவித்த அவர்..

தமிழ்த் தலைவர்கள் யுத்தகாலத்தில் தங்கள் பாதுகாப்பு கருதி அமைதியாக இருந்தார்கள் என நாங்கள் கருதினாலும் கூட யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நல்லாட்சி அரசில் தமிழ்த் தலைவர்கள் மிகவும் தெளிவானவர்களாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் தமிழ்த் தலைவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டங்களில் அக்கறை காட்டாமலும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக எந்தவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளாத நிலையிலும்தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமிழ்த்தலைமைகள் மீது வெறுப்புக் காட்டியமைக்கு காரணம் என குறிப்பிட்டார்.

ஜனாதிபதியை நாங்கள் யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசியுள்ளோம். இருந்தபோதும் எங்கள் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள எமது போராட்டங்களில் தமிழ் தலைமைகள் முன்வந்து பங்கு கொண்டு எமது கோரிக்கைகள் தொடர்பான தீர்வுக்காக போராடுவதுடன் ஆதரவு தந்து அக்கறை காட்டவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் தலைவர்கள் முன்பாக வைக்கிறேன் எனத் தெரிவித்தார்.

வவுனியா இ.போ.சபைக்கு வற்றாளைப்பளை பேருந்து சேவையினால் கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

 
கடல் நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் கடந்த (12.06.2017) அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி வவுனியா இ.போ.சபையினரால் விஷேட போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெற்றன.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தினால்  இ.போ.சபை வவுனியா சாலைக்கு சுமார் 17,55,000 ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றதாக இ.போ.ச வவுனியா சாலை முகாமையாளர் முகமட் சாகிர் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த சாலை முகாமையாளர்,

கடந்த 12ம் திகதி மற்றும் 13ம் திகதி வவுனியாவிலிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு 41 இ.போ.ச பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டன. இதனால் எமது வவுனியா சாலைக்கு 12ம் திகதி 993,000 ரூபா வருமானமும் 13ம் திகதி 766,000 ரூபா வருமானமும் கிடைக்கப்பெற்றுள்ளதாக  தெரிவித்தார்.

100 சதங்கள் கண்ட சங்கக்கார : குவியும் வாழ்த்துகள்!!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜம்பவான் குமார் சங்ககாரா ‘ஃபர்ஸ்ட்-கிளாஸ் மற்றும் லிஸ்ட்-ஏ’ போட்டிகளில் 100 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

சங்கக்கார கடந்த 2015ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும், அவர் தொடர்ந்து ஃபர்ஸ்ட்-கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார்.

இந்நிலையில்தான், அவர் இங்கிலாந்தின் சர்ரே அணி சார்பில் விளையாடிய போட்டியில் 121 ஓட்டங்கள் விளாசி, 100வது சதமடித்து சாதனை புரிந்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் 100 சதங்கள் அடிக்கும் 37வது நபர்தான் அவர் என்பது, இந்த சாதனையின் வீச்சை பற்றி அறியச் செய்யும்.

இச்சாதனை குறித்து சங்கக்கார, ‘இந்த சாதனை படைத்ததில் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். எனக்கு உண்மையில் 100 சதங்கள் குறித்து எந்த நியாபகமும் இல்லை.

ஆட்டத்தை முடித்துக் கொண்டு பெவிலியன் திரும்பிய பின்னர்தான் அதைப் பற்றி கூறினார்கள். நான் கிரிக்கெட்டை இன்னும் நேசித்துத்தான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

எது குறித்தும் நான் டென்ஷனாகவில்லை. முறையான பணி-வாழ்க்கை சமநிலையே இந்த சாதனைக்குக் காரணம்’ என்று நெகிழ்ந்துள்ளார்.

தற்போது விளையாடி வரும் தொடரோடு ஃபர்ஸ்ட்-கிளாஸ் கிரிக்கெட்டில் இருந்தும் சங்கக்கார ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூயோர்க் மீது தாக்குதல் : அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வடகொரியா!!

அமெரிக்காவின் நியூயோ ர்க் நகரில் இருந்து 10,400 கி.மீ தொலைவில் வடகொரியா இருந்தாலும், தாக்குதல் நடத்த இதுவொன்றும் நெடுந்தொலைவு அல்ல என வடகொரியா எச்சரித்துள்ளது.

வட கொரியாவின் அணு ஆயுதங்கள் சோதனை குறித்து அமெரிக்கா, தொடக்க காலம் முதலே கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. ஆனால், ‘தங்கள் தற்காப்புக்கு அணு ஆயுத சோதனை மேற்கொள்வதை கேட்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை’ என்று பதிலடி கொடுத்தது வட கொரியா.

வடகொரியாவின் தீர்க்கமான இந்த முடிவால் பற்றிக் கொண்டது இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னை. அது இன்று வரை ஓய்ந்தபாடில்லை.

அமெரிக்கா, கொரிய தீபகற்பத்துக்கு கடந்த சில நாட்களாக அதிக ராணுவத் துருப்புகளை அனுப்பி வருகிறது. இந்நிலையில், வட கொரிய அரசின் செய்தித்தாளான ரோடங் சின்மன் (Rodong Sinmun), ‘டிரம்ப் இந்த ஆண்டு தொடக்கத்தில், வட கொரியா என்னதான் அணு ஆயுத சோதனை நடத்தினாலும், அணு குண்டை அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்தாது என்று அலட்சியமாக தெரிவித்துள்ளார்.

ஆனால், வட கொரியாவிலிருந்து நியூயார்க் நகரத்துக்கு அணு ஆயுத குண்டு மூலம் தாக்குதல் நடத்துவது ஒன்றும் சாத்தியமில்லாத காரியம் இல்லை.’ என்று மிரட்டல் விடுக்கும் தொனியில் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயார் நகரத்தில் இருந்து வடகொரியா நாடு 10,400 கி.மீ தொலைவில் இருந்தாலும், தற்போதைய காலகட்டத்தில் இதுவொன்றும் நெடுந்தொலைவு அல்ல எனவும் வடகொரியா எச்சரித்துள்ளது.

மட்டுமின்றி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்த ஆண்டு தொடக்கத்தில் சொன்ன கருத்துக்கு இப்போது வட கொரியா பதிலளித்திருப்பது அரசியல் நோக்கர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

ஜனாதிபதி டிரம்ப், சமீபத்தில் தனது ஜப்பான் பயணத்தை அடுத்து, ‘வட கொரியாவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைக்கும் தயாராக இருங்கள்’ என்று ஜப்பானிய பிரதமரிடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரியும் தீ : உயிருக்கு போராடும் மக்கள்!!

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் அமைந்திருக்கும் 27 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.

மேற்கு லண்டனில் Grenfell Tower என்ற 27 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் ஒரு பகுதியில் நள்ளிரவு 1.15 மணிக்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீயானது மளமளவென 27 மாடிகளுக்கும் பரவியுள்ளது.

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த 200 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.

அடுக்குமாடி கட்டிடத்தின் உள்ளே இருக்கும் மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றுமாறு கதறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Grenfell கட்டிடத்தின் அருகில் இருக்கும் சிலர் கட்டிடம் தீப்பற்றி எரிவதை வீடியோ எடுத்து டுவிட்டரில் பதிவேற்றியுள்ளனர்.

லண்டன் தீயணைப்பு துறையும் இது சம்மந்தமான புகைப்படத்தை டுவிட்டரில் பதிவேற்றியுள்ளது.

சம்பவ இடத்தில் நின்று கொண்டே Fabio Bebber என்ற நபர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், கட்டிடத்தின் உள்ளே இருக்கும் ஜன்னல் பகுதியில் நின்று கொண்டு மக்கள் பலர் தங்கள் உயிரை காப்பாற்றுமாறு கதறி கொண்டிருக்கிறார்கள். அவர்களால் வெளியேற முடியவில்லை எனவும் அவர்கள் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

இன்னொரு நபர் கூறுகையில், கட்டிடத்தின் இன்னொரு பகுதியிலும் தீ பரவி வருகிறது. அதனால் உள்ளிருக்கும் நபர்கள் பயத்தில் கத்தி கொண்டு இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், அதிக புகையை உள்ளிழுத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

லண்டன் அம்புலன்ஸ் சேவையும், தீயணைப்பு சேவையும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கட்டிடத்தில் பரவி வரும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கணவனை கடித்த பாம்பு : மனைவியை கடித்த கணவன்!!

பீகாரில் மனைவி தன்னுடன் சாக வேண்டும் என்ற நோக்கில் தன்னை பாம்பு கடித்தவுடன், தனது மனைவியை கடித்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் பிர்ஷங்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஷங்கர் ராய் என்பவரை விஷப்பாம்பு ஒன்று கொத்தியுள்ளது. விஷப்பாம்பு கொத்தியதால் தான் பிழைக்கமாட்டேன் என உணர்ந்த ஷங்கர் ராய் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு சென்றுள்ளார்.

தனது இறுதி ஆசைப்படி, தான் இல்லாத இந்த உலகத்தில் தனது மனைவி வாழ்வதை விரும்பாத ஷங்கர் ராய், மனைவி அமிரி தேவியிடம் ஓடிச்சென்று, “நானில்லாத உலகில் நீ எப்படி வாழ்வாய்?” என்று கேட்டதுடன், “இருவரும் ஒன்றாக சாவோம்!” என்றுக் கூறி மனைவியின் மணிக்கட்டில் தன்னால் முடிந்தவரை வலுவாக கடித்துள்ளார்.

இதனால், இருவரும் சுயநினைவை இழந்துள்ளனர், இதனைத் தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஷங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அமிரி தேவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இளம்பெண்ணை மாட்டு சாணம் சாப்பிட வைத்த சம்பவம் : 5 பேர் தலைமறைவு!!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம் பெண்ணிற்கு பேய் பிடித்திருப்பதாக கூறி மாட்டு சாணத்தை உண்ண வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் லத்தூர் மாவட்டம் தங்கர்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது நிரம்பிய இளம்பெண்.

இவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்றும், இதன் காரணமாக வீட்டில் இருக்கும் ஆண்களை தினமும் அடித்து, மிரட்டி வருவதாகவும் இவரது உறவினர்கள் கூறி வந்தனர்.

இதன் காரணமாக இவருக்கு பிடித்துள்ள பேயை விரட்ட கர்நாடகா மாநிலம் பிதார் மாவட்டத்தில் உள்ள பேய் விரட்டும் ஒருவரை சந்தித்துள்ளனர்.

அப்போது அவர், இந்தப் பெண்ணிற்கு பிடித்துள்ள பேயை வித்தியாசமாக விரட்டலாம் என்று கூறி அந்த இளம் பெண்ணை கட்டி வைத்து சாட்டையால் அடித்துள்ளனர்.

மேலும் அந்த பெண்ணிற்கு எருமை மாட்டு சாணத்தை கொடுத்து, கட்டாயப்படுத்தி உண்ண வைத்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த கிராம வாசிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் பொலிசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், பெண்ணிற்கு பேய் பிடித்திருப்பதாக கூறி அவருக்கு தொடர்ந்து சித்ரவதை செய்யப்படுவதாக எங்களுக்கு புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், இதில் கிட்டத்தட்ட 5 பேர் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர்கள் தலைமறைவாகி விட்டனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இளம்பெண் ஒருவர் இப்படி கொடூரமாகவும் காட்டு மிராண்டித்தனமாகவும் நடத்தப்பட்டதற்கு சமூக ஆர்வலர்களும் பெண்ணியவாதிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.