பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால்துறை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தால் வவுனியாவிலும் தபால்துறை முடங்கியுள்ளது.
நிர்வாக ரீதியாக தாம் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு இதுவரையில் உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தபால் அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டடத்தில் சுற்றுலா விடுதியை நடத்த தீர்மானித்தமைக்கு எதிராகவும் 48 மணிநேர பணி பகிஸ்கரிப்பாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று அதிகாலை 12 மணியில் இருந்து 48 மணிநேரம் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடும் நிலையில் இதற்கான தீர்வு வழங்கப்படாத நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதியில் இருந்து தொடர் போராட்டமாக நடத்த தீர்மானித்துள்ளனர்.
இதன் காணரமாக வவுனியா பிரதான தபால் நிலையம் உட்பட அனைத்து தபால் நிலையங்களும் மூடப்பட்டு காணப்படுகின்றது. ஊழியர்கள் பணியில் இன்மையால் பல்வேறு தேவைகளுக்காகவும் தபால் நிலையங்களுக்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரும், மூத்த அரசியல்வாதியான அலெக்சி நாவன்லி கடந்த 30 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் அரசின் ஊழலுக்கு எதிராக அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1500 பேர் கைது செய்யப்பட்டனர்.
மார்ச் மாதத்திற்கு பிறகு பெரிய அளவில் நடத்தப்பட்ட போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருடம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதிக்கான போட்டியில் பங்கேற்க முடிவு செய்துள்ள நாவன்லி அவ்வப்போது பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
41 வயதாகும் நாவன்லி அங்கீகரிக்கப்படாத, போராட்டங்களை ஏற்பாடு செய்து நடத்திய குற்றத்திற்காக பொலிசார் அவரை கைது செய்துள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் கிரா யார்மிஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதில் நாடு முழுவதம் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 1500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மொஸ்கோவில் மட்டும் 823 பேர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பழனிசாமியை நேற்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
பெண்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒரு கையெழுத்து இயக்கத்தைத் துவக்கினார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் இந்த இயக்கத்தைத் துவக்கியவர் #saveshakti என்ற ஹேஷ்டேக்குடன் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக தனது பிரச்சாரத்தைத் துவக்கினார்.
பல நடிகர் நடிகைகள் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்குப்பெற்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் துவக்கி வைக்கப்பட்ட இந்த கையெழுத்து இயக்கம் குறித்து மாநில அரசுக்கு ஒரு மனுவாகக் கொடுக்கவிருப்பதாக முன்னர் நடிகை வரலட்சுமி தெரிவித்திருந்தார்.
அதன்படி, நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்திலேயே சந்தித்தார் நடிகை வரலட்சுமி.
இந்த ‘சேவ் சக்தி’ என்ற இயக்கம் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் அனைவரும் பெண்களுக்கான உரிமைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டும் என வலியுறுத்துகிறார்.
அவுஸ்திரேலியாவில் மலைப்பாம்பு ஒன்று பத்திரமாக சாலையை கடக்க வேண்டுமென்பதற்காக நபர் ஒருவர் சாலையின் குறுக்கே படுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் மேத்யூ, இவர் டம்பியர் போர்ட் எனும் பகுதியில் தனது நண்பருடன் சாலையில் பேசிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது சாலையில் நடுவே திடீரென்று சுமார் 2.5 மீற்றர் நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று சென்றுள்ளது.
அது போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் அந்த மலைப்பாம்பை ஏற்றிவிடும், இதனால் பாம்பு உயிரிழக்க நேரிடும் என்று எண்ணிய அவர் உடனடியாக பாம்புக்கு அரணாக சாலையில் படுத்துள்ளார்.
மலைப்பாம்பு சாலையை கடக்க ஏறத்தாழ 5 நிமிடங்கள் ஆகியுள்ளது. அதுவரை, பாம்புக்கு அருகில் சாலையில் படுத்திருந்த மேத்யூ, பாம்பு பத்திரமாக கடக்கும்வரை அதற்கு அரணாக இருந்துள்ளார்.
இச்சம்பவத்தை அவரது நண்பர் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எம்.ஜி.எம் நிறுவன குழுமம் இன்று உணவகங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், மது வகை தயாரிப்பு, நிலக்கரி தொழில், தளவாடங்கள் ஆகிய துறைகளில் முன்னணியில் உள்ளது.
இதன் நிறுவனரின் பெயர் எம்.ஜி.முத்து. பள்ளிப் படிப்பையே முடிக்காத முத்து தனது கடின உழைப்பு மற்றும் திறமையால் கோடீஸ்வர தொழிலதிபராக இன்று வலம் வருகிறார்.
முத்து, தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் கூலி வேலை செய்யும் தந்தைக்கு மகனாக பிறந்தார். வறுமையில் பிறந்து அதிலேயே வளர்ந்த முத்துவுக்கு தினமும் சாப்பிட உணவு கிடைப்பதே பெரிய விடயமாக இருந்தது.
வறுமை காரணமாக தனது பத்து வயது வரை பள்ளிக்கூடத்துக்கு போகாமல் இருந்த முத்து பின்னர் தனது கிராமத்தில் இருந்த சிறுவர்கள் பள்ளிக்கு போவதை பார்த்து சில நாட்கள் பள்ளிக்கு போனார்.
ஆனால், பசியால் துடித்த அவரால் பள்ளியில் உட்கார முடியவில்லை. இதையடுத்து சில நாட்களிலேயே பள்ளிக்கு போவதை முத்து நிறுத்தினார்.
அதன் பின்னர், தனது தந்தையுடன் துறைமுகத்தில் கூலி வேலைக்கு சென்றார். சில வருடங்கள் கடுமையாக அங்கு உழைத்த முத்து பின்னர் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து தான் சார்ந்திருக்கும் தளவாடங்கள் துறையில் சிறிய அளவிலான தொழிலை தொடங்கினார்.
மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்க்கையில் பல துன்பங்கள் ஏற்பட்ட போதும் அதை கண்டு துவண்டு போகாமல் முத்து உழைப்பால் சாதித்துள்ளார்.
மிக பெரிய தொழிலதிபர்கள் ஆளுமையாக திகழ்ந்த நேரத்தில் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழிலை தொடங்கிய முத்து தனது கடுமையான உழைப்பால் வாடிக்கையாளர்கள் குறை கூறாதவாறு தனது தொழிலை நடத்தி வந்தார்.
அதன் பிறகு வாடிக்கையாளர்கள் முத்துவை அதிகளவில் தேடி வர ஆரம்பிக்க அவர் தொழில் சூடு பிடிக்க தொடங்கியது. அந்த சமயத்தில் தான், தனது நிறுவனத்துக்கு எம்.ஜி.எம் குழுமம் என முத்து பெயரிட்டார்.
பின்னர் படிப்படியாக வளர்ந்து இன்று 2500 கோடிகள் மதிப்பிலான தொழில் சாம்ராஜ்யத்தை முத்து நடத்துகிறார்.
தளவாடங்கள் துறையில் தொடங்கிய எம்.ஜி.எம் குழுமம் இன்று எம்.ஜி.எம் விளையாட்டு பூங்கா, எம்.ஜி.எம் மது வகைகள், உணவகங்கள் போன்ற பல துறைகளில் முன்னணி நிறுவனமாக மாறியுள்ளது.
உலக புகழ்பெற்ற உணவகமான Marry brownன் இந்திய உரிமை முத்துவிடம் தான் தற்போது உள்ளது.
கடல் நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று (12.06.2017) சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடைப்பண்டம் எடுத்துவரப்பட்டு, விஷேட பூஜைகளுடன் பொங்கல் உற்சவம் ஆரம்பமாகியது.
ஈழத்தில் கண்ணகி அம்மன் வழிபாட்டுக்கு சிறப்பு மிக்க தலமாக காணப்படும் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் பல புதுமைகளையும், அற்புதங்களையும் கொண்டு காணப்படுகின்றது.
இவ்வாலயத்தின் உற்சவ காலங்களில் முல்லைத்தீவு கடலில் எடுக்கப்பட்ட கடல் நீரில் ஒரு வாரத்திற்கு மேலாக விளக்கு எரிக்கப்படுவது சிறப்பு அம்சமாகும்.
அத்துடன், பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில், தூக்குக்காவடி, பறவைக்காவடி, ஆட்டக்காவடி, பாற்செம்பு, அங்கப்பிரதட்சனை போன்ற பல வழிபாடுகளில் ஈடுபடுவதும் சிறப்பம்சமாகும்.
கொழும்பு கோட்டையில் இருந்து அம்பேபுஸ்ஸ வரை செல்லும் ரயிலுக்கு கீழ் உடல் இல்லாத தலை ஒன்று கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனேமுல்ல பிரதேசத்தில் ரயிலின் கீழ் பகுதியில் மனித தலை சிக்கியிருந்தமையை பிரதேச மக்கள் அவதானித்துள்ளனர்.
குறித்த மனித தலை கம்பஹா ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை நேற்று கொள்ளுப்பிட்டியவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் செல்பி புகைப்படம் எடுப்பதற்கு முயற்சித்து போது ரயிலில் மோதுண்டு உயிரிழந்தனர்.
இன்று மீட்கப்பட்ட தலைப்பகுதியில் அவர்களில் ஒருவருடையதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய மீட்கப்பட்ட மனித தலை,12வயதுடைய சிறுவனின் தலையே என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் 12 மற்றும் 25 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வைகாசி விசாகப் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுக்கு தொலை தூரத்தில் இருந்து நடைபவனியில் சென்ற பக்த அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களை மனத்திருப்தியுடன் நிறைவேற்றிவருவதை காணக்கூடியதாக உள்ளது.
குறித்த அடியார்களிடம் வரும் வழியில் தடைகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்று வினவியபோது அவர்கள் கூறியதாவது,
“நாங்கள் கண்ணகி அம்மனுக்கான எமது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்கு மிகத்தொலைவில் இருந்து நடந்து இங்கு வந்துள்ளோம்.
வரும் வழியில் கேப்பாப்புலவு இராணுவமுகம் பிரதான வீதியில் இராணுவத்தினரால் எமது பயணம் தடைப்பட்டது. எனினும் அவர்கள் காட்டிய மாற்று வழியூடாக நாங்கள் பயணித்து கண்ணகி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தோம். இன்று எமது நேர்த்திக் கடன்களை மனத்திருப்பியுடன் நிறைவேற்றியுள்ளோம்.
மேலும் நாங்கள் வரும்போது எத்தரப்பினரையும் நம்பி எமது பயணத்தை தொடரவில்லை. கண்ணகி அம்மனில் நம்பிக்கை வைத்தோம் அந்த நம்பிக்கை நிறைவேறியுள்ளது.
தொடர்ந்தும் நாங்கள் இங்கிருந்து எமது வீடுபோய் சேர்வதற்கும் கண்ணகி அம்மன் துணைநிற்பார் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் தொலை தூரத்தில் இருந்து கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்ற ஆயிரக்கணக்காண அடியார்கள் தமது உடலையும் உள்ளத்தையும் வருத்தி அம்மனின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து நடைபவனியில் வந்த யுவதி ஒருவர் ஆணிக்கூர்முனை காலணி அணிந்து கண்ணகி அம்மன் ஆலயத்தின் வெளி வீதியை மூன்று முறை சுற்றி வந்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் இந்த ஆலயம் நோக்கி தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கின்றனர் தொடர்ந்து நாளை அதிகாலை வரை கண்ணகி அம்மன் வைக்காசிப் பொங்கல் விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவிற்கு தொழில் புரிய சென்ற இலங்கைப் பணிப் பெண்ணுக்கு 15 வருடங்களுக்கு பின், மீளவும் சம்பளம் கிடைக்கப் பெற்றுள்ளது.
குறித்த பெண்ணுக்கு சம்பளத் தொகையாக 49 லட்சத்து 36ஆயிரம் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
2000ஆம் ஆண்டு குறித்த இலங்கைப் பணிப் பெண் போலி ஆவணங்களை சமர்பித்து சவூதி அரேபியா சென்று, 15 வருடங்களாக சம்பளமின்றி பணிபுரிந்துள்ளார்.
இது வரையில், வெளிநாட்டிற்குச் சென்றுள்ள தொழிலாளர்கள் பெற்றுக் கொள்ளாத சம்பளத் தொகையையே குறித்த பெண் பெற்றுக் கொண்டுள்ளார் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த பெண் 14 வயதில் போலி ஆவணங்களை காட்டி,சவூதி சென்றுள்ளார். இருப்பினும்,15 வருடங்களாக அங்கு தொழில் புரிந்த குறித்த பெண்ணுக்கு சம்பளேமே வழங்கப்படவில்லை.
இதனையடுத்து, இலங்கை வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகத்தின் திலையீட்டில் குறித்த பெண்ணுக்கு அவரது சம்பளத் தொகை கிடைக்கப்பெற்றுள்ளது.
கதிர்காமம் முருகன் பருவகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். சந்நிதி ஆலயத்திலிருந்து பாதயாத்திரை மேற்கொண்டுள்ள குழுவினருடன் நாய் ஒன்றும் பயணிக்கின்றது.
கடந்த பத்து தினங்களாக குறித்த நாய் யாத்திரிகளுடன் பயணிக்கின்றது. இந்நிலையில், குறித்த நாய்க்கு பக்தர்கள் திலகமிட்டு, பட்டு சாத்தியுள்ளனர்.
குறித்த நாய் இடைநடுவில் திரும்பி சென்று விடும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது தொடர்ந்து முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயம் வரையில் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் செல்ஃபி புகைப்படம் எடுத்தல் மற்றும் கைத்தொலைபேசி பாவனை காரணமாக 22 பேர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்ஃபி புகைப்படம் எடுக்க முயற்சித்த சகோதரர்கள் நேற்று பிற்பகல் கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலில் மோதி உயிரிழந்தனர்.
இந்த நிலையில், ரயில் பாதையில் கைத்தொலைபேசி பயன்படுத்திச் சென்றமை மற்றும் செல்ஃபி எடுக்க முயற்சித்தமை முதலானவற்றின் காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில் பாதையில் இடம்பெறும் இவ்வாறான அனர்த்தங்களை தவிர்க்கவும் மற்றும் ரயில் சேவையில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மதகுவைத்தகுளம் பகுதியில் இலவச மருத்துவ முகாம் ஒன்று இன்று (12.06) முதல் மூன்று தினங்கள் இடம்பெற்று வருகின்றது.
சென் சூலான் கல்வி நிலையத்தில் மகா கருண பௌத்த சங்கத்தின் அனுசரணயில் இன்று ஆரம்பமான மருத்துவ முகாமினை கல்வி நிலையத்தின் பொறுப்பாளர் கே.குணரத்தின தேரரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று முதல் காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 4.30 மணிவரையும் புதன்கிழமை வரை இடம்பெறவுள்ளது.
வவுனியா பொதுவைத்தியசாலையுடன் இலங்கை செஞ்சிலுவைச்சங்க வைத்திய குழுவினர் இணைந்து இதனை மேற்கொண்டு வருகின்றனர்.
3மாதங்களுக்கு ஒரு முறை இடம்பெற்றுவரும் இவ் இலவச மருத்துவ முகாமில் மருத்துவக்கல்வி ஆலோசனைகள், இரத்தப் பரிசோதனைகள் உயர் குருதி அழுத்த பரிசோதனையும் அதற்குரிய மருத்து வழங்கல், மூக்குக்கண்ணாடி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கண்ணாடி வழங்கல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இன்று ஆரம்பமான மருத்துவ முகாமில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டு சேவைகளைப் பெற்றுவருகின்றனர்.
மாவட்ட சமூக சேவை அலுவலகம் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளியான திருமதி.கமலாதேவி பாக்குவெட்டி வியாபாரம் செய்பவர். இவரது 03 பிள்ளைகள் கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர்.
இவர்களின் மூத்த மகளிற்கான துவிச்சக்கர வண்டி அண்மையில் V3 அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது. ஏனைய இரண்டு பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று (12.06.2017) திங்கட்கிழமை புன்னகை அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது.
ஆறாம் ஆண்டில் கல்வி பயிலும் செல்வி. வ.கம்சிதா, இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் வ.நிந்துசன் ஆகியோருக்கே இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு.செ.ஸ்ரீநிவாசன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே..வசந்தன் புன்னகை அமைப்பின் தலைவர் க.சர்மிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சவுதியில் இருந்து நோயுடன் திரும்பிவந்த பெண்ணுக்கு சக்கர நாற்காலி வழங்கி வைப்பு..
வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்திற்கு அருகில் வசிக்கும் தேவராஜா விஜயவாணி என்பவருக்கு சக்கரநாற்காலி ஒன்று இன்று வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தின் ஊடாக வவுனியா அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்று இவருக்கு இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டது.
கணவனால் கைவிடப்பட்ட இப்பெண்மணி வாழ்வாதாரத்திற்காக சவுதிஅரேபியா சென்ற வேளை அங்கு சிக்கன் கூனியா நோய்த்தாக்கத்திற்குட்பட்டு இனம் புரியாத கால் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். எந்தவித உதவியுமின்றி நாடு திரும்பிய இவருக்கு கால் பாதத்தில் இரண்டு முறை சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது தொடர்ந்து சத்திர சிகிச்சைக்கு உட்பட்டு வருவதனால் இன்று (12.06.2017) திங்கட்கிழமை இவரது இல்லத்தில் வைத்து சக்கர நாற்காலி வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன் புன்னகை அமைப்பின் தலைவர் க.சர்மிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேளாண்மைத்துறை நவீன மயமாக்கல் திட்டம் மற்றும் விவசாய அபிவிருத்தி திட்டத்தின் வடக்கு மாகாண பிராந்திய அலுவலகம் வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தில் இன்று (12.06) ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகேவினால் திறந்துவைக்கப்பட்டது.
ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் நவீன விசவசாய கைத்தொழில் அமைச்சின் பிராந்திய முகாமையாளர் றோகண கமகே தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.
நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு இன்று காலை 11.30 மணிக்கு வருகை தந்திருந்த ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் வடக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் பிரதான பெயர்ப்பலகை மற்றும் அலுவலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.
மத குருக்களின் சமய அனுஸ்டானங்களின் பின் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் மங்கள விளக்கேற்றி அலுவலகத்தின் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பந்துல விக்கிரம ஆராச்சி, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார, வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் கா.உதயராசா, ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எம்.கருணாதாச மற்றும் இராணுவ அதிகாரிகள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (12.06.2017) காலை 9.30 மணியளவில் வாக்கு உங்களின் உரிமை அதனைவிட உங்கள் பொறுப்பு எனும் தொனிப்பொருளில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்ப்பாட்டில் விழிப்புணர்வு பேரணியொன்று நடைபெற்றது.
பேரணியில் வாக்கு உங்கள் உரிமை , என் வாக்கு என் எதிர்காலம், உங்கள் வாக்கு உங்கள் உரிமை, வாக்களிப்பது நம் கடமை என பல்வேறு பதாதைகளை தாக்கிய வண்ணம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹண புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, கிராம சேவையாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான இப் பேரணியானது புகையிரத வீதியூடாக முத்தையா மண்டபத்தினை சென்றடைந்து நிறைவுற்றது.
இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக ஜூன் மாதம் 10ம் திகதி முதல் 16ம் திகதி வரை நாடு முழுவதும் தேசிய இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
அந்த வகையில் இன்றையதினம் (12.06.2017) வவுனியா மாவட்ட செயலகத்தில் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹண புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் வர்த்தக பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அலுவலக உத்தியோகத்தர்களுக்கும் கொடி அணிவிக்கப்பட்டதுடன் வர்த்தகர்களும் இந்து சமய அறநெறிக்கல்விக்காக நன்கொடைகளை வழங்கி வைத்தனர்
இதன் மூலம் சேகரிக்கப்படும் நிதிகள் பின்தங்கிய அறநெறி பாடசாலை மாணவர்களின் கற்றல் தேவைகள் , உடைகள், அறநெறி பாடசாலைகள் புனரமைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளன.