வவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய கொடி தினம் அனுஸ்டிப்பு!!

 
இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக ஜூன் மாதம் 10ம் திகதி முதல் 16ம் திகதி வரை நாடு முழுவதும் தேசிய இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

அந்த வகையில் இன்றையதினம் (12.06.2017) வவுனியா மாவட்ட செயலகத்தில் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹண புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் வர்த்தக பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அலுவலக உத்தியோகத்தர்களுக்கும் கொடி அணிவிக்கப்பட்டதுடன் வர்த்தகர்களும் இந்து சமய அறநெறிக்கல்விக்காக நன்கொடைகளை வழங்கி வைத்தனர்

இதன் மூலம் சேகரிக்கப்படும் நிதிகள் பின்தங்கிய அறநெறி பாடசாலை மாணவர்களின் கற்றல் தேவைகள் , உடைகள், அறநெறி பாடசாலைகள் புனரமைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளன.

வவுனியாவிலிருந்து  வற்றாப்பளை ஆலயத்திற்கு விசேட பேருந்து சேவை!!

 
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று(12.06.2017) திங்கட்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த பொங்கல் விழாவிற்குச் செல்லும் அடியார்களின் நன்மைகருதி விசேட போக்குவரத்துச் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியாவிலிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு 10 நிமிடத்திற்கு ஒரு இ.போ.சபை பேரூந்துகளும் 20 நிமிடத்திற்கு ஒரு தனியார் போக்குவரத்து பேரூந்துகளும் சேவையில் ஈடுபடுகின்றன. இச் சேவையானது இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது

இ.போ.சபையின் பேரூந்து பயண நேரம் மற்றும் முறைப்பாடுகள் எதும் இருப்பின் 024 2223481 எனும் இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொள்ளுமாறு இ.போ.சபையின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Windows Phone இயங்குதள சாதனங்களை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்!!

மைக்ரோசொப்ட் நிறுவனம் மொபைல் சாதனங்களுக்காக அறிமுகம் செய்த இயங்குதளமே Windows Phone ஆகும். எனினும் இவ் இயங்குதளமானது ஏனைய மொபைல் இயங்குதளங்களைப் போன்று பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெறவில்லை.

இவ்வாறிருக்கையில் மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது மற்றுமொரு சேவையான ஸ்கைப் சேவைக்கான அப்பிளிக்கேஷன் எதிர்காலத்தில் Windows Phone இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களுக்கு கிடைக்காது என அறிவித்துள்ளது.

இது எதிர்வரும் ஜுலை மாதம் 1 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகின்றது.மேலும் இச் செயற்பாடானது நிரந்தரமானதாகும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே எதிர்காலத்தில் ஒருபோதும் Windows Phone மொபைல் சாதனங்களில் ஸ்கைப்பினை பயன்படுத்த முடியாது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் பின்வருமாறு தெரிவித்துள்ளது,

Windows Phone 8, Windows Phone 8.1 ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட மொபைல் சாதனங்களில் ஸ்கைப் அப்பிளிக்கேஷன் பாவனையில் உள்ளது. எனினும் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்த முடியாது. இதற்கு வருந்துகின்றோம் என தெரிவித்துள்ளது.

எனினும் இந் நடவடிக்கைக்கான காரணத்தை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிடவில்லை

வவுனியாவில் தெற்கில் வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்த மக்களுக்கு ஆத்மசாந்தி வழிபாடு!!

 
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக அனர்த்தத்தினால் உயிரிழந்த மக்களின் ஆத்மசாந்தி வேண்டியும், இழப்புக்களினாலும், இடம்பெயர்வாலும் அல்லலுறும் மக்களின் மேம்பாட்டிற்காகவும் வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் இன்று (12.06.2017) காலை 7.30 மணியளவில் ஆத்மசாந்தி வழிபாடு இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தின் நெறியாள்கையில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் வவுனியா மாவட்டசெயலகத்தின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட பொது அமைப்புகள், பொதுமக்களின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இவ் ஆத்ம சாந்தி பிராத்தனையில்,

வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹண புஸ்பகுமார, மேலதி அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், மற்றும் வர்த்தக பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தி வேண்டி விளக்கேற்றி வழிபாடு மேற்கொண்டனர்.

இதன் போது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினால் ஸ்ரீ கந்தசாமி ஆலய நிர்வாகத்தினருக்கு அன்பளிப்பு பொருள் ஒன்றும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட தாய்க்கு தமிழ் விருட்சம் அமைப்பு உதவி!!

 
வவுனியா கண்ணாட்டி கனேசபுரம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஜெயராம் மடுராணி என்பவர் 22.05.2017 செவ்வாய்க்கிழமை கணவனால் கை கால்கள் முறிக்கப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தற்போது புதிய வேலர்சின்னகுளத்தில் தனது சகோதரியின் இல்லத்தில் வசித்து வருகிறார்.

கால்கள் நடக்க முடியாத நிலையில் தனது சிறு வேலைகளை கூட செய்யமுடியாது இருந்த இவருக்கு வீட்டில் தனது நாளாந்த கடன்களை செய்வதற்கு தமிழ் விருட்சம் சக்கர நாற்காலி ஒன்றை உடன் வழங்கி உதவியுள்ளது. இவரது நான்கு பிள்ளைகள் தற்போது சிறுவர் நன்நடத்தை அதிகரிகளால் சிவன் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். கணவர் பொலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .

மாவட்ட சமூகசேவை அதிகாரி செல்லத்துரை ஸ்ரீநிவாஸன் தமிழ் விருட்சத்தின் தலைவர் செல்வராசா சந்திரகுமார் கண்ணன், செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் சென்று இன்று தமிழ் விருட்சத்தின் வேண்டுகோளிற்கிணங்க புலம் பெயர் தேசத்து உறவான குருமன்காடு குணா அவர்களின் நிதிப்பங்களிப்புடன் இந்த உடனடி உதவியை வழங்கியுள்ளனர்.

வவுனியா வேப்பங்குளம் சிறுவர் இல்லம் பல சவால்களின் மத்தியில் சமூகப்பணி புரிந்து வருகின்றது!!

 
நேற்று (11.06.2017) வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் உள்ள சிறுவர்களுக்கு மாவட்ட சமூக சேவை அலுவலகமூடாக லண்டன் V3 அமைப்பைச் சேர்ந்த பொ.மோகனரூபன் தனது மகனான சாருஜனின் பிறந்த தினத்தையொட்டி மூன்று வேளை உணவு வழங்கி மகிழ்வித்தனர்.

இந் நிகழ்வில் இல்ல இயக்குனர் சாமி அம்மா மாவட்டசமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தமிழ் விருட்சம் தலைவர் செல்வராசா சந்திரகுமார் கண்ணன், தமிழ் விருட்சம் செயலாளர் மாணிக்கம் ஜெகன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பக சிறுவர் இல்லம் 1997 இல் இருந்து சாமி அம்மா என அழைக்கப்படும் ஜெயராணி அம்மாவால் நடாத்தப்பட்டு வருகிறது. பல இன்னல்களை மக்கள் எதிர்கொண்ட காலங்களில் நீதிபதிகள், அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் சிறுவர் நன்நடத்தை அதிகரிகள், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் கேட்டு கொண்டபோதெல்லாம் இனமத பேதமின்றி பலதரப்பட்ட பிரதேசங்களில் இருந்து வரும் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கொடுத்து வந்துள்ளது.

மேலும் எந்த வயதினராக இருந்தாலும் மறுப்பின்றி அந்தப்பிள்ளைகளை பொறுப்பேற்று உரிய முறையில் அவர்களை வளர்த்து வருகிறது.

இந்த இல்லம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இங்கு கைக்குழந்தைகளாக சேர்கப்பட்ட பிள்ளைகள் இன்று பெரியவர்களாகியும் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் பெண்பிள்ளகைள் பெற்றோருடன் வாழும் போது அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளை இந்த இல்லத்திற்கு பொறுப்பான அம்மா சரிவர ஆற்றி வருகிறார்.

பூப்புனித நீராட்டு விழா, மற்றும் திருமணச்சடங்குகள் என்பனவும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் காலங்களிலும் இந்த இல்லம் இந்த இடத்தில் இருந்து தொடர்ச்சியாக இயங்கவேண்டும் என்பது பல சமூக நலன்விரும்பிகளின் கருத்தாகும்.

காதலர்களின் திருமணத்தால் அசந்து போன கிராமம்!!

நடிகர் விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்பட பாணியில் தனது காதலியை திருமணம் செய்ய மதம் மாறிய இளைஞரின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள யல்லபுரா கிராமத்தை சேர்ந்தவர் ரகீம் கான். இவருக்கு அதே கிராமத்தில் வசிக்கும் காளம்மா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர், நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

ரகீம் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதாலும், காளம்மா இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதாலும் இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, நடிகர் விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்பட பாணியில் ரகீம் கான் இந்து மதத்துக்கு மாறினார்.

மேலும், தனது பெயரை ஆர்யா எனவும் மாற்றி கொண்டார். பின்னர் தனது காதலி காளம்மாவை ஆர்யா திருமணம் செய்து கொண்டார்.

சினிமா பாணியில் நடந்த இந்த திருமணத்தை பற்றி தான் தற்போது யல்லாரா கிராமத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பிரபஞ்ச அழகிப் போட்டியில் சாதித்த சிறுமி!!

 
லிட்டில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பத்மாலயா நந்தா தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.

ஒடிசாவைச் சேர்ந்த பிரசன்னா குமார் நந்தா, சுபசுதா பிரியதர்ஷினி தம்பதியின் மகள் பத்மாலயா நந்தா (12). இவர் கட்டாக்கில் உள்ள ஸ்டூவர்ட் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

மிஸ் வேர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டிகளைப் போல சிறுமிகளுக்கென உலகளவில் லிட்டில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான லிட்டில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தின் பதுமி நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பத்மாலயா நந்தா கலந்துகொண்டார். மேலும் இந்த போட்டியில் கலந்துகொண்ட முதல் ஒடிசா சிறுமியும் இவர்தான்.

இந்தப் போட்டிக்கான முதல் சுற்று ஆன்லைனில் நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததில், 75 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

அவர்களில் 10 பேர் இறுதியாக தெரிவு செய்யப்பட்டு போட்டிக்கு அழைக்கப்பட்டனர். இந்தப் போட்டிக்கு நடுவர்களே கிடையாது. பார்வையாளர்கள் ஆன்லைன் மூலம் ஓட்டுப் போட்டு வெற்றியாளர்களை தெரிவு செய்தனர்.

இந்த அடிப்படையில் பத்மலாயா நந்தா மிஸ் யுனிவர்ஸ் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தங்கக்கிரீடம் சூடப்பட்டது.

அடுத்த ஆண்டுக்கான லிட்டில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெறும்வரை அந்தக் கிரீடத்தை அவர் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தப் போட்டியை அடுத்து கிரீஸ் நாட்டில் செப்டம்பர் மாதம் நடைபெறும் குட்டி உலக அழகிப் போட்டியில் பத்மாலயா நந்தா கலந்துகொள்ள இருக்கிறார்.

12 வயதில் தாய்மை அடையும் சிறுமிகள்!!

 
ருமேனியா நாட்டில் இளவயதிலேயே கர்ப்பமாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளியியல் விபரப்படி, 2013ம் ஆண்டு ருமேனியாவில் 15.6 சதவிகிதமும், பல்கேரியாவில் 14.7 சதவிகித குழந்தைகள் இளவயது தாய்மார்களுக்கு பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட 2212 பேர் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக ருமேனியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து Lorena என்ற சிறுமி கூறுகையில், கடவுள் எனக்கு அழகான குழந்தையை கொடுத்துள்ளார், இதில் என்னவொரு சிரமம் என்றால் நானும் குழந்தை தான் என தெரிவித்துள்ளார்.

தனது காதலனுடன் வசித்து வரும் Lorena, திட்டமிடாமல் வாழ்ந்ததே இதற்கு காரணம் என தெரிவிக்கிறார்.

மற்றொரு சிறுமியான Diana கூறுகையில், தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தவுடன் கதறி அழுததாகவும், தன்னுடைய வாழ்க்கையே நாடகத்தன்மை நிறைந்ததாக மாறிப்போயுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

இதற்கு காரணம் ரோமா என்ற சிறுபான்மை இன மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே என நம்பப்படுகிறது.

ருமேனியாவில் Save The Children என்ற அமைப்பை நடத்தி வரும் Gabriela Alexandrescu என்பவர் கூறுகையில், புலம்பெயர்வு மற்றும் ஏழ்மையே இளவயது கர்ப்பத்திற்கு முதன்மை காரணம்.

அதுமட்டுமின்றி சிறுமிகளுக்கு போதிய உடல்நலம் சார்ந்த கல்வியறிவு இல்லாததும், அவர்கள் தாத்தா, பாட்டிகளின் அரவணைப்பில் வளர்வதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இளவயதிலேயே குழந்தையை பெற்றெடுப்பதால் மனநலன் சார்ந்து பல்வேறு பிரச்னைகளை அவர்கள் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அகதிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைப்பு : சுவிஸ் அரசு அதிரடி முடிவு!!

சுவிஸ்லாந்தில் புகலிடம் பெற்றுள்ள மற்றும் புகலிடத்திற்காக காத்திருக்கும் அகதிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை குறைப்பதற்கு அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளை சாராத பிற நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர்களுக்கு மட்டும் புதிய விதிமுறை நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து சுவிஸ் சட்ட அமைச்சரான Simonetta Sommaruga வெளியிட்டுள்ள தகவலில், புலம்பெயர்ந்தவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் அரசு ஈடுப்பட்டு வருகிறது.

இப்பணியில் ஏற்படும் செலவினங்களை ஈடு செய்வதற்காக அரசு புதிதாக திட்டம் ஒன்றை ஆலோசித்து வருகிறது.

இதன் அடிப்படையில், வெளிநாட்டினர்கள் பெறும் அரசு நிதியுதவியை குறைக்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

எனினும், சுவிஸிற்கு வரும் வெளிநாட்டினர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும் வரை அவர்களுக்கு நிதியுதவி அளிக்க கூடாது என்ற கோரிக்கையை சட்ட அமைச்சர் நிராகரித்து விட்டார்.

ஒவ்வொரு மாகாணத்திற்கும் இந்த நிதியுதவி தொடர்பான மாற்றம் 16 சதவிகிதம் முதல் 43 சதவிகிதம் வரை இருக்க வாய்ப்புள்ளது.

இந்த மாற்றம் தொடர்பான ஆலோசனை முடிவு பெற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலவர பூமியான சிறை : 11 பேர் உயிரிழப்பு, 900 கைதிகள் தப்பியோட்டம்!!

கொங்கோவின் கிழக்கு நகரமான பெனியில் உள்ள சிறையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 900 கைதிகள் தப்பியோடி இருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சிறைகளின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது இது நான்காவது முறை என அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பெனி நகரில் உள்ள சிறை தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 8 பேர் சிறை காவலர்கள், மேலும் 30க்கும் அதிகமான சிறை காவலர்கள் சிறையிலேயே இருப்பதாக வடக்கு கிவு பிராந்திய ஆளுநரான ஜூலியன் பலூகு தெரிவித்துள்ளார்.

மேலும் சிறையில் இருந்த 900 கைதிகள் இந்த கலவரத்தை பயன்படுத்தி தப்பியோடியுள்ளனர். தாக்குதலைத் தொடர்ந்து பெனி மற்றும் புடெம்போ பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ராணுவம் மற்றும் பொலிசார் மட்டுமே வெளியில் செல்லலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தாக்குதலை நடத்தியவர்கள் குறித்த விரிவான தகவல்கள் இன்னும் அறியப்படவில்லை.

முன்னதாக கின்ஷாசா பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர் என காங்கோ பொலிசார் தெரிவித்துள்ளனர். இதே போல் மே மாதம் கிறிஸ்துவ செக்ட் உறுப்பினர்கள் நடத்திய தாக்குதலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிறிஸ்துவ தலைவர் தப்ப வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விக்காக நீண்ட தூரம் நடந்து செல்லும் வடக்கு மாணவர்கள் : பெற்றோரின் உருக்கமான வேண்டுகோள்!!

 
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதிகள் தொடர்பில் வடமாகாண போக்குவரத்து அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், சமூக நலன்விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளிலும் போக்குவரத்து வசதிகள் இன்மையால் பெரும் அசௌகரிய நிலை ஏற்பட்டுள்ளது.

தினமும் காலை மற்றும் பிற்பகல் குறிப்பிட்ட பகுதிகளில் சேவைகளில் ஈடுபடும் அரச, தனியார் பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லாமையினாலும் மாணவர்கள் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தொடர்ந்தும் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

குறிப்பாக ஏ-35 பரந்தன் முல்லைத்தீவு வீதியில் காலை 7.00 மணிக்கும், 7.30 மணிக்கும் இடையில் சேவையில் ஈடுபடுகின்ற இலங்கை போக்குவரத்துச்சபை பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்வதில்லை.

இதனால் புளியம்பொக்கணை, தர்மபுரம், விசுவமடு, தேராவில், வள்ளிபுனம், கைவேலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தினமும் பாடசாலைகளுக்கு காலம் தாழ்த்தி செல்வதும் பாடசாலைக்கு செல்லாது திரும்பிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று ஏ-9 வீதியில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளும் மாணவர்களை ஏற்றிச்செல்வதில்லை. இதனால் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதில் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு மாணவர்களை பேருந்துகள் ஏற்றிச்செல்லாத நிலையில் வீதியால் செல்லும் ஏனைய வாகனங்களை வழிமறித்து அவற்றில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்கின்றனர்.

இதனைவிட பின் தங்கிய பகுதிகளில் போக்குவரத்து வசதிகள் இன்மையால் தினமும் 6 அல்லது 7 கிலோமீற்றர் தூரம் கால் நடையாகச் சென்று தங்களது கல்வியைத் தொடர்கின்ற நிலை காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே மாணவர்களின் கல்வி தொடர்பில் வடமாகாண போக்குவரத்து அமைச்சும் கல்வியமைச்சும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும், சமூக நலன்விரும்பிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், மாணவர்களின் போக்குவரத்துக்கள் தொடர்பில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறுகின்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பிலான கூட்டங்களிலும் சுட்டிக்காட்டப்படுகின்ற போதும் அவை தீர்க்கப்படும் என கடந்த நான்கு வருடங்களாக வாக்குறுதிகளை வழங்கப்படுகின்றன. ஆனால் அவை நிறைவேற்றப்படுவதில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சீனியின் விலையை தன்னிச்சையாக உயர்த்த முடியாது : நுகர்வோர் விவகார அதிகாரசபை!!

சீனியின் விலையை தன்னிச்சையாக உயர்த்த முடியாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிகாரசபையின் அனுமதியின்றி வெள்ளைச் சீனியின் விலையை வர்த்தகர்கள் உயர்த்த முடியாது என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹசித திலகரட்ன தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் விவகார சட்டத்தின் அடிப்படையில் வெள்ளைச் சீனி ஓர் நிலையான பண்டமாக பட்டியலிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சீனியின் விலையை உயர்த்த வேண்டுமாயின் அதிகாரசபையின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

இந்த விடயம் அத்தியாவசிய பண்ட இறக்குமதியாளர் சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளைச் சீனிக்கான இறக்குமதி வரி கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பினைத் தொடர்ந்து பால் மற்றும் வெறும் தேநீரின் விலை உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வளைகுடா நெருக்கடி பாரிய யுத்தமாக மாறும் அபாயம்!!

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டு வரும் விடயமாக மாறியுள்ளது.

இந்நிலையில் கட்டார் மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை யுத்தமாக மாற்றமடையும் ஆபத்து உள்ளதாக ஜேர்மன் எச்சரித்துள்ளது.

வளைகுடா நாடுகள் ஒன்றுடன் ஒன்று கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் முறை மிகவும் கடினமான மற்றும் கசப்பான நிலையை அடைந்துள்ளதாக ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் சிக்மார் கேப்ரியல் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வளைகுடா நெருக்கடி தொடர்பில் பல நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஜேர்மன் அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை ஈரானிலிருந்து ஐந்து விமானங்கள் கட்டாருக்கு சென்றுள்ளன. இவற்றில் உணவுப்பொருட்கள் அடங்கியுள்ளதாக தெரிய வருகிறது.

சவூதி அரேபியாவின் எல்லை நிலப்பரப்பில் இருந்து கட்டாருக்கு உணவுப் பொருட்கள் வரும் பாதைககள் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக கட்டாருக்கான கணிசமான உணவு தேவை தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரானிலிருந்து உணவுப்பொருட்கள் அடங்கிய விமானங்கள் கட்டாருக்கு சென்றுள்ளன.

ஈரான் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்களுக்கு கட்டார் உதவி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து வளைகுடா நாடுகள் பல கட்டாருடனான உறவுகளை துண்டித்துள்ளன.

சவூதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள், கட்டாருக்கான தங்களின் வான்வழிகளை மூடியுள்ளன. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஈரான் தன்னுடைய வான்பரப்பை கட்டார் வரை விரிவுபடுத்தியுள்ளது.

இதேவேளை அண்மையில் இடம்பெற்ற கால்பந்து போட்டியின் போது லண்டனில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலியில் இணைந்து கொள்ள சவுதி அரேபிய அணி மறுப்பு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி மௌன அஞ்சலியில் இணைந்து கொண்ட போது சவுதி வீரர்கள் மாத்திரம் அதில் இணைந்து கொள்ளாமை, சர்வதேச ரீதியாக சர்ச்சையான நிலைமை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், சர்வதேச நாடுகளுடனான ராஜதந்திர உறவுகளை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் எழுந்துள்ள பதற்றத்தை தணிப்பதற்கு, குவைத் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஈரான் கட்டாரிற்கு பாதுகாப்பு உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளமை வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

23 வயது மனைவியை தேடும் 62 வயது கணவர்!!

தானே மாவட்டத்தில் 62 வயது நபர் ஒருவர் தனது 23 வயது மனைவியை கண்டுபிடித்து தருமாறு பொலிசில் புகார் அளித்துள்ளார்.

தானேவை சேர்ந்தவர் சதீஷ் ஆப்தே. வயது 62. இவர் 23 வயது லிசா என்ற பெண்ணை கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், சதீஷ் ஆப்தே பொலிசில் புகார் அளித்துள்ளார். அதில், என் மனைவி வீட்டை விட்டு வெளியேறி வேறு யாரையோ திருமணம் செய்துகொண்டார். இதற்கு காரணம் என் மைத்துனி மோனிகாதான்.

ஏனென்றால் அவருக்கும் என்னை திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. அதோடு வீட்டில் இருந்த நகைகளையும் மோனிகா எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் லிசாவின் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, சதிஷ், லிசாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார், மேலும் கட்டாயப்படுத்தி தான் திருமணம் செய்து கொண்டார் என்று கூறியுள்ளனர்.

ஆனால், இதனை சதிஷ் மறுத்துள்ளார். லிசாவுக்கு என் மீது காதல் அதிகம். அவர் குடும்பத்துக்கு எங்கள் காதலில் விருப்பமில்லை. அதனால் அவரை குஜராத்தில் உள்ள ஒருவருக்கு ரகசியமாக திருமணம் செய்துகொடுத்துள்ளனர். லிசா இன்னும் என் மனைவிதான். நாங்கள் விவாகரத்து பெறவில்லை. அவரை கண்டுபிடித்துக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஈரானிலிருந்து கட்டாருக்கு அனுப்பப்பட்டுள்ள விமானங்களும், 3 கப்பல்களும்!!

கட்டாரின் அயல் நாடுகள், அந்நாட்டுடனான சகல தொடர்புகளையும் துண்டித்தமையால் ஏற்பட்டுள்ள உணவு பொருட்களின் தட்டுப்பாடுகளை தீர்ப்பதற்காக ஈரான் ஒருதொகை உணவுப்பொருட்களை 5 விமானங்கள் மற்றும் 3 கப்பல்களில் அனுப்பியுள்ளது.

கட்டாரின் அயல் நாடுகளான சவுதிஅரேபியா, ஏமன், ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து, ஜோர்தான் மற்றும் லிபியா உள்ளிட்ட நாடுகள், கட்டார் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைபோவதாக குற்றம் சுமத்தி, தமது நாட்டுடனான அரசியல், பொருளாதாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட தொடர்புகளை முழுமையாக நிறுத்தியுள்ளன.

இதனால் கட்டாரில் உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் எழுந்துள்ளதாக அந்நாடு அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து ஈரான் கட்டாரிற்கு சுமார் 440 டன் உணவுப்பொருட்களை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

அத்தோடு கட்டரிற்குள் பிரவேசிக்கும் விமானங்கள் குறித்த 6 நாட்டு வான்பரப்புகளில் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டாரிற்குள் பிரவேசிக்கும் சுமார் 100 விமானங்களுக்கு தினமும் ஈரான் வழியாக பிரவேசிப்பதற்கு அனுமதி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வளைகுடா பிராந்தியத்தில் எழுந்துள்ள பதற்றத்தை தணிப்பதற்கு, குவைத் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஈரான் கட்டாரிற்கு பாதுகாப்பு உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளமை வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.