பூமியைப் போலவே உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மிக்க புதிய கிரகம் ஒன்றை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சூரியக் குடும்பத்துக்கு அப்பால் 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிவப்பு நிற நட்சத்திரத்தை இந்தக் கிரகம் சுற்றிவருவதாக ஐரோப்பிய வானியல் மைய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
எல்.எச்.எஸ். 1140பி. சூப்பர் எர்த் என இந்த புதிய கிரகத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. 500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கிரகம் உருவாகி இருக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கிரகம் பூமியை விட அதிக விட்டம் கொண்டது என்று கூறும் விஞ்ஞானிகள், 25 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இதன் மீது வெளிச்சம் விழுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் திருமணமான பத்தே நாளில் புதுப்பெண்ணின் கணவர் சாலை விபத்தில் இறந்த சம்பவம் குடும்பத்தாருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலவேசம், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதிக்கும் கடந்த 10- ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்கள் அண்மையில் மறுவீடு சென்றனர். மறுவீட்டு விருந்து முடிந்த பின்னர் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் மீது மோதியதால் புதுமாப்பிள்ளை பலவேசம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.
மணப்பெண் ரேவதி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருமணமான பத்தே நாட்களில் ரேவதி கணவரை இழந்துள்ளதால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்தியாவில் காதல் திருமணம் செய்த ஜோடியை கிராமத்து மக்கள் நிர்வாணமாக்கி அடித்து கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஷம்புபூரா என்னும் கிராமத்தை சேர்ந்த காதல் ஜோடி ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட காதலர்கள் குஜராத்தில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்கள்.
அவர்கள் அங்கு இருப்பதை கண்டுபிடித்த ஊர்மக்கள் தங்கள் கிராமத்துக்கு அவர்களை அழைத்து வந்தனர். பின்னர் கணவன்- மனைவி இருவரையும் நிர்வாணப்படுத்திய ஊர்மக்கள் அவர்கள் சராமாரியாக அடித்து தாக்கியுள்ளனர்.
இதை வீடியோ எடுத்த சிலர் இணையத்தில் அதை விட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட திருமணம் செய்து கொண்ட ஜோடியின் தந்தை உட்பட 18 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பெற்ற மகன் நோயினால் உயிரிழந்ததனை தாங்கிக் கொள்ள முடியாமல் தாயும் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் 2004 – 2005 ஆம் ஆண்டு முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்ற திறமையான மாணவரான பிரியங்கர பிரியதர்ஷன என்பவரும் அவரது தாயாருமே உயிரிழந்துள்ளனர். பிரியங்கர பிரியதர்ஷன கடந்த 17ம் திகதி உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் பிரபலமான ஒருவராக காணப்பட்ட இவர் கற்கை நடவடிக்கைகளிலும் மிகவும் திறமையான ஒருவராகும். அவரது குடும்பத்தில் 6 சகோதரர்கள். அவர்களில் 4 பேர் ரஜரட்ட பல்கலைக்கழத்திற்கு தெரிவாகியவர்களாகும். பிரியங்கரவின் தாயார் தனது பிள்ளைகள் குறித்து மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த முறையில் தனது வேலை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த பிரியங்கர திடீரென நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். எவ்வித நோய்களும் இன்றி வளர்ந்தவர் திடீரென இவ்வாறு நோயினால் பாதிக்கப்பட்டமை குறித்து தாயார் மிகவும் வேதனையுடன் காணப்பட்டுள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர் மரணமடைந்துள்ளார்.
மகனின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத தாயார் நீர் உணவின்றி மகனின் பூதவுடலுக்கு அருகிலேயே அமர்ந்திருந்த நிலையில் மகனின் உடலை பார்த்து பல முறை மயங்கி விழுந்துள்ளார்.
இதன் போது மகனின் இறுதி நடவடிக்கைகள் வேகமாக நடந்துக் கொண்டிருந்த போது திடீரென மகன் எழுந்திரு என தாயார் கூறியுள்ளார். அதன் பின்னர் மீண்டும் அவர் மயங்கி அவ்விடத்திலேயே விழுந்துள்ளார். இதன் போது அனைவரும் பல முறை ஏற்பட்ட மயக்கமாக இருக்கும் என நினைத்து எழுப்ப முற்பட்ட போது அவரும் மரணித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
மகன் இல்லாத துயரம் தாங்க முடியாத தாய்க்கும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மகன் உயிரிழக்கும் போது அவரது வயது 32 என்பது குறிப்பிடத்தக்கது.
2017 ஆம் ஆண்டின் உலகின் மிக அழகிய பெண்ணாக ஹொலிவுட் நடிகை ஜூலியா ரொபர்ட்ஸை பீப்பிள் பத்திரிகை தெரிவு செய்துள்ளது.
49 வயதான ஜூலியா ரொபர்ட்ஸ், டேனி மோடர் எனும் ஔிப்பதிவாளரை 14 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 12 வயதில் ஹேஸல், பின்னேயஸ் என்ற இரட்டையர்களும், 9 வயதில் ஹென்றி 9 என்ற மகனும் உள்ளனர்.
இவர் உலகின் மிக அழகான பெண்ணாக 5 ஆவது முறையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 26 ஆண்டுகளில் 5 முறை தெரிவு செய்யப்பட்டுள்ளார். முதன்முதலாக 1991 ஆம் ஆண்டு உலகின் மிக அழகான பெண்ணாக பீப்பிள் பத்திரிகையால் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
மேலும், கடந்த ஆண்டு ஹொலிவுட் நடிகை ஜெனிஃபர் ஆனிஸ்டன் உலகின் மிக அழகான பெண்ணாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
பல மில்லியன் ரூபா செலவில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையம் தற்போது பாவனையின்றி காணப்படுகின்றது. மக்களின் பணத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய பஸ் தரிப்பு நிலையம் தற்போது பாழடைந்து காணப்படுகிறமை கவலைக்குரியதே.
வவுனியா நகரில் இருந்து 1.5 கிலோமீற்றர் தூரத்தில் யாழ். வீதியில் 195 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பஸ் நிலையம் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
4 ஏக்கர் காணியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ள போதிலும் அது இன்று பாவனையின்றிக் காணப்படுகிறது.
இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் வவுனியா நகரில் நிறுத்தப்பட்டு வந்தமையினால் போக்குவரத்து மேற்கொள்ளும் பயணிகளின் நன்மை கருதி ஒரே இடத்தில் பஸ்களை நிறுத்துவதற்காக இந்த புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.
எனினும், புதிஸ் பஸ் தரிப்பு நிலையத்தைத் திறந்து வைத்த பின்னர் இணைந்த நேர அட்டவணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் காட்டி இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் ஊழியர்களுக்கு இடையில் தொடர்ந்தும் சர்ச்சைகள் ஏற்பட்டன.
அந்த சர்ச்சை தாக்குதல் மேற்கொள்ளும் அளவிற்கு வலுப்பெற்றது. எனினும், இன்று மீண்டும் பழைய இடங்களிலே பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் ஊழியர்களுக்கிடையில் நிலவும் முரண்பாடுகளுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு வழங்குவதாக வட மாகாண போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருத்தார்.
அவர் அவ்வாறு கூறி மூன்று வாரங்களாகியுள்ள நிலையில், அவரிடம் இது குறித்து வினவியபோது..
விடுமுறை காலம் என்பதால் காலதாமதம் ஏற்படுவதாகவும் இரு தரப்பினரும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் வர்தமானியில் அறிவிப்பதற்கான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கான விளையாட்டுப் போட்டி கேரளாவில் நடைபெறவுள்ளது. இதற்கான இலச்சினை வெளியிடும் நிகழ்வு, கேரளாவின் ஓட்ட வீராங்கனை மேர்ஸி குட்டன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த விளையாட்டுப் போட்டியில், கேரள மானிலத்தின் ஓரிரு மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் இருந்து சுமார் 200 போட்டியாளர்கள் பங்குபெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
100 மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர் மற்றும் 100 X 4 மீற்றர் அஞ்சலோட்டம் என்பனவற்றுடன் குண்டெறிதல், நீளம் பாய்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பங்குபெறவுள்ள திருநங்கைகளுக்கு உடல் ரீதியான அசௌகரியங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் முகமாக விசேட பயிற்சிகளும் எதிர்வரும் 25ம் திகதி முதல் வழங்கப்படவுள்ளன.
இதுபற்றி கருத்துத் தெரிவித்த திருநங்கையொருவர், தான் தனது பதினைந்தாவது வயது வரை ஓட்டப் போட்டியில் பல பரிசுகள் பெற்றிருப்பதாகவும், திருநங்கையாக மாறிய பின் சமூக அழுத்தங்களால் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் போனதாகவும், பல வருடங்கள் கழித்து மீண்டும் போட்டிகளில் கலந்துகொள்ளப்போவதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தம் நடந்த பின்னர் ஒருவாரமாக கொழும்பு நகரிலுள்ள குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன. குப்பை அகற்றல் நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதன்காரணமாக நகர வீதியோரங்களில் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளன. இதனால் நோய் பரவும் அபாயமும் தோன்றியுள்ளன.
கொழும்பு நகரின் குப்பைகள் பிலியந்தல கரதியான பகுதியில் கொட்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் அப்பிரதேச மக்களின் எதிர்ப்பின் காரணமாக குறித்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன. கொழும்பு நகர குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளமையினால் மக்கள் கடுமையான விசனங்களை தெரிவித்த வண்ணமுள்ளனர்.
கொழும்பு நகரின் பல்வேறு இடங்களில் குப்பை அகற்றல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றது. குறிப்பாக கிரான்பாஸ், மட்டக்குளி, நவகம்புர, கொட்டாஞ்சேனை, மருதானை, பொரளை, ஆமர் வீதி, மாளிகாவத்தை, வெள்ளவத்தை, கொள்ளுப்பிட்டி, வத்தளை, ஹெந்தல, ஜம்பட்டாதெரு உள்ளிட்ட பல பாகங்களிலும் குப்பை அகற்றப்படாமல் உள்ளன.
இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள விஷ தன்மைமிகு இரசாயனங்களான க்லைபொசேட் 160 பெரல்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை இலங்கை சுங்க பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் குறித்த இரண்டு கொள்கலன்களும் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டதெனவும், சந்தேகத்தின் அடிப்படியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, வேறொரு இரசாயனத்தின் பேரில் அவை நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த கொள்கலன்களை கொழும்பைச் சேர்ந்த வர்த்தக நிறுவனம் ஒன்று, கடந்த மார்ச் 15 ஆம் திகதி இலங்கைக்குள் கொண்டு வந்துள்ளதாகசுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு இரண்டு கொள்கலன்களிலும் தலா 200 லீட்டர் க்லைபொசேட் விஷ இரசாயனம் அடங்கிய, சுமார் 160 பெரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷகித் அப்ரிடி 1996 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் களம் இறங்கினார். சர்வதேச போட்டிகளில் தனது இரண்டாவது ஆட்டத்திலேயே இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் சதம் அடித்தது உலக சாதனை படைத்திருந்தார். இந்த சாதனை 19 ஆண்டுகளுக்கு முறியடிக்கப்படாமலேயே இருந்தது குறிப்பிடத்தக்து.
பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஷாகித் அப்ரிடி ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெற்றார். முன்னதாக பாகிஸ்தான் அணிக்காக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கிண்ண போட்டிகளில் தலைவராக இருந்தார். டி20 உலக கிண்ண தொடர் நிறைவுற்றதும் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஷாகித் அப்ரிடி தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வந்தார்.
27 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷாகித் அப்ரிடி 1176 ஓட்டங்களை குவித்துள்ளார், அதிகபட்சமாக 156 ஓட்டங்களையும் 48 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 398 ஒரு நாள் போட்டிகளில் 8064 ஓட்டங்களை குவித்துள்ள ஷாகித் அப்ரிடி அதிகபட்சமாக 124 ஓட்டங்களையும், 395 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். சர்வதேச அரங்கில் டி-20 போட்டிகளை பொருத்த வரை 98 போட்டிகளில் களம் கண்ட ஷாகித் அப்ரிடி 1405 ஓட்டங்களையும் 97 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
தற்போது ஷாகித் அப்ரிடி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்திய வீரர்கள் விராட் கோலி, யுவராஜ் சிங், ஆசிஷ் நெக்ரா, பும்ரா, ரெய்னா, நெகி, முகமது ஷமி, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ரகானே, தவான் உள்பட பல்வேறு இந்திய அணி வீரர்கள் கையொப்பமிட்ட விராட் கோலி ஜெர்சியை அப்ரிடிக்கு பரிசாக வழங்கினார்கள்.
இந்திய அணி தலைவர் விராட் கோலியின் ஜெர்சியில் கையொப்பமிட்ட நினைவு பரிசை அப்ரிடிக்கு வழங்கியது குறித்து விராட் கோலி கூறியதாவது, “ஷாகித் பாய் வாழ்த்துக்கள், உங்களுக்கு எதிராக விளையாடியது எப்போதும் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்”. இத்துடன் இந்திய வீரர்கள் வழங்கிய ஜெர்சியில் இதே வாசகம் எழுதப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இந்திய வீரர்கள் வழங்கிய ஜெர்சியின் புகைப்படத்தை பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.
இங்கிலாந்தில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான தூதராக ஷாகித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய பகுதிகளில் உள்ள தவளைகளிடமிருந்து எடுக்கப்படும் பிசுபிசுப்பான திரவத்தினை கொண்டு பல்வேறு வைரஸ்களுக்கு எதிராக மருந்து தயாரிக்கலாம் என ஆய்வு கூறுகிறது.
சளிப்படலம் போன்ற ஒரு வண்ணமயமான திரவத்தினை சுரக்கும் தவளையானது கேளராவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
புதிய ஆய்வின்படி இந்த திரவத்தினை கொண்டு பல்வேறு வைரஸ் நோய்களுக்கு மருந்துகளை தயாரிக்க முடியும் என தெரியவந்துள்ளது.
தவளையிடமிருந்து எடுக்கப்படும் திரவத்திலுள்ள மூலக்கூறுகள் மூலம் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிக்கமுடியும், புதிய நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துக்கு சாத்தியமான ஆதாரங்கள் தொடர்பாக ஆய்வாளர்கள் தங்களுடைய விசாரணையை விஸ்தரித்துள்ளனர்.
கேரளாவை சொந்தமாக கொண்ட தவளை இனங்களை (ஹைட்ரோஃபிளாஸ் பேஹுவிஸ்தாரா) கொண்டு மனிதர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் வைரஸ்களை அழிக்கமுடியும், வைரஸ் பாதிப்பில் இருந்தும் மனிதர்களை காப்பாற்ற முடியும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தென்னிந்தியாவை பிறப்பிடமாக கொண்ட தவளை இனத்தின் மூலக்கூறை எடுத்து ஆய்வு நடத்தியுள்ளனர்.
தவளையின் தோலிலிருந்து வெளிப்படும் பிசுப்பிசுப்பான திரவத்தினை கொண்டு ஆய்வு செய்ததில் இரசாயனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு ஏற்படும் காய்ச்சலுக்கு எதிராக செயலாற்ற உருமின் என்றழைக்கப்படும் இந்தக் கூட்டுப்பொருளை பயன்படுத்த முடியுமா என்பது குறித்து தீர்மானிக்க மேலும் பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆய்வு செய்துவரும் சர்வதேச ஆராய்ச்சி குழுவில் கேரளாவில் உள்ள ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் இடம்பெற்று உள்ளனர்.
எச்-1 வைரஸ் காய்ச்சல் உட்பட பல்வேறு வைரஸ் பாதிப்பை எதிர்க்கொள்ளும் மூலக்கூறுகள் இந்த திரவத்தில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா நொச்சிமோட்டைப்பகுதியில் இன்று (20.04) மதியம் 12.35 மணியளவில் ரயிலில் மோதுண்டு குருமன்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
நொச்சிமோட்டை பகுதியிலுள்ள ரயில் கடவையைக் கடக்க முற்பட்டபோது எதிரே வந்த ரயிலில் மோதியதில் மோட்டார் சைக்கிலில் சென்ற குருமன்காடு நகரசபை விடுதியில் வசித்துவந்த நாகலிங்கம் ஜீவராஜ் (ஜீவன்) 47வயதுடைய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
எனினும் மோட்டார் சைக்கிலில் பின்னால் அமர்ந்து சென்ற நபர் சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 56வது நாளாகவும் இன்றும் (20.04.2017) தொடர்கின்றது.
குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்கக் கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மீதொட்டமுல்ல பகுதியில் குப்பைமேடு சரிந்ததில் அதில் அகப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கு இன்று (20.04.2017) வவுனியா மில் விதியிலுள்ள புளியடி விநாயகர் ஆலயத்தில் காலை 8.30 மணியளவில் ஆத்மாசாந்தி பூஜை வழிபாடு அறங்காவலர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹன புஸ்பகுமார, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சே.சந்திரகுமார், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு ஆத்மா சாந்திப் பிரார்த்தனையில் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி தீப அஞ்சலி செலுத்தினார்கள்.
வவுனியா சிறையிலிருந்த கைதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று (19.04) வவுனியா சிறைச்சாலையின் சிறைக்கைதி யு.நிசாந்த் (45 வயது) நோய்வாய்ப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சையின் பலனின்றி இன்று (20.04)காலை உயிரிழ்ந்துள்ளதாகவும் உடற்கூற்றுப்பிரிசோதனை மேற்கொள்வதற்காக வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைப்பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.