இலங்கையின் தென்பகுதியில் ஆணொருவர் கர்ப்பமான விநோத சம்பவம்!!

வைத்தியசாலை ஒன்றினால் வழங்கப்பட்ட அறிக்கைக்கு அமைய ஆண் ஒருவர் கர்ப்பமான சம்பவம் பதிவாகியுள்ளது.

சூரியவெவ நகரத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர், தவறான பரிசோதனை அறிக்கை மூலம் கர்ப்பமானதாக தெரியவந்துள்ளது.

சூரியவெவ வைத்தியசாலையில் ஆணொருவருக்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட பரிசோதனை அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

வைத்தியரின் பரிந்துரைக்கமைய குறித்த நபரின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அந்த அறிக்கை வைத்தியர் ஒருவரிடம் காட்டப்பட்டுள்ளது.

அறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த வைத்தியர், இந்த அறிக்கைக்கமைய குறித்த ஆண் கர்ப்பமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்த போது இவ்வாறு பல நோயாளிகளுக்கு தவறான வைத்திய அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளமையினால் நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி உள்ளனர். சில நோயாளர்கள் அவமானம் காரணமாக இந்த விடயத்தை யாரிடமும் கூறுவதில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்திய பரிசோதனை கூடத்தில் வைத்திய பரிசோதனை கூட ஆய்வாளர் ஒருவர் இருப்பது அவசியமாகும்.

எனினும் குறித்த பிரதேசத்தின் வைத்திய பரிசோதனை கூடத்தினுள் சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை எழுதியவர்களே சேவையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான சம்பவம் தொடர்பில் தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக சூரியவெவ பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட அதிகாரி வைத்தியர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் மற்றும் அவர்கள் பெற்றுக் கொள்ளும் வைத்திய அறிக்கைக்கும் இடையில் சில சந்தர்ப்பங்களில் எவ்வித தொடர்பும் இல்லை என தான் அறிந்துக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

எழுபது மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு!!

ஆர்ஜன்டினாவில் அஃகா மகுவோ என்ற தொல்பொருள் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிக்குட்பட்ட பகுதியில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயிர்க்கருவுடனான டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பட்டகோனியா பகுதிக்கு வடக்கு பிராந்தியத்தில் உள்ள அஃகா மகுவோ தொல்பொருள் ஆராய்ச்சிக்கு பிரபலமான இடத்தில் தான் இந்த முட்டைகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த முட்டைகள் இன்னமும் உயிர்க்கருக்களுடன் தான் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் அளித்த தகவலை அடுத்து, அங்கு சென்று ஆராய்ச்சியாளர்கள், முட்டைகள் உள்ளிட்டவற்றை மீட்டதாக உள்ளூர் கலாச்சார பாரம்பரிய பணிப்பாளர் க்ளவுடியா டெல்லா நெக்ரா தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக அஃகா மகுவோ பகுதியில் கடந்த 1997 இல் டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, தொடர்ந்து டைனசர் பற்றிய படிமங்கள் மற்றும் முட்டைகள் என கண்டெடுக்கப்படுவதால், அந்த பகுதியை பாதுகாக்கும் விதமாக அங்கு படிம ஆய்வியல் பூங்காவை அமைக்க ஆர்ஜன்டினா அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

சுற்றுலாப் பயணிகளுக்காக அந்த பூங்கா திறக்கப்பட உள்ளதாகவும் நெக்ரா கூறினார். அஃகா மகுவோ பகுதியில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கடந்த 2014 இல் உலகின் மிகப்பெரிய டைனோசரின் எழும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டது, அதன் மொத்த எடை 14 ஆப்பிரிக்க யானைகளின் எடைக்கு சமமாக இருக்குமாம். அதாவது சுமார் 77 டன் எடையும், 40 அடி நீளமும், 65 அடி உயரமும் கொண்ட டைனோசர் எழும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது.

இதில் சுமார் 150 எழும்புகள் எடுக்கப்பட்டதாகவும், அந்த எழும்புகள் பின்னர் அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள அமெரிக்க தேசிய அருங்காட்சியகத்தில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 26,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவு!!

2016 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, இலங்கையில் 26,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அநுராதபுரம், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அதிகளவிலான சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சிறுநீர் நோய்த் தடுப்பிற்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்தது.

சுத்தமான குடிநீரைப் பருகாமையினால் சிறுநீரக நோய் அதிகளவில் ஏற்படுவதாக சிறுநீர் நோய்த் தடுப்பிற்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்தது.

சிறுநீரக நோயைத் தடுப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்குமான பல்வேறு திட்டங்களை ஜனாதிபதி செயலணி முன்னெடுத்துள்ளது.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிகளவிலான சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

வவுனியா – தட்டான்குளம் கிராமத்தில் 100 க்கும் அதிகமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்களின் கிராமத்திலிருந்து கிடைக்கும் குடிநீரினாலேயே சிறுநீரக நோய்த்தாக்கம் ஏற்படுவதாக அங்குள்ள மக்கள் சுட்டிக்காட்டினர்.

2282 கோடி ரூபா செலவில் மகாபாரத கதை!!

இந்திய சினிமாத்துறை வரலாற்றில் சுமார் 2282 கோடி ரூபா (150 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) செலவில் மகாபாரத கதையை, படமாக 5 மொழிகளில் உருவாக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

குறித்த படமானது மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில், மலையாளத்தின் மூத்த எழுத்தாளரும், கதாசிரியருமான எம்.டி.வாசுதேவநாயரின் ‘இரண்டாம் ஊழம்’ என்ற நாவலை மையப்படுத்தி படம் எடுக்கப்போவதாக அறிவித்திருந்தனர். தற்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தும்விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.

மேலும் குறித்த படத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இந்திய கோடீஸ்வரரான பி.ஆர்.ஷெட்டி என்ற தயாரிப்பாளர் தயாரிக்க முன்வந்துள்ளார். அத்தோடு இப்படத்திற்கு ‘மகாபாரதா-ரெண்டாம் ஊழம்’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாபாரத்தில் பஞ்ச பாண்டவர்களில் இரண்டாவதாக வரும் பீமனின் பார்வையில் வைத்து இந்த கதையை எழுதியுள்ளதாகவும், குறித்த படத்தை இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கவுள்ளதாகவும், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படமாக்கவுள்ளனர். இதுதவிர, பிற இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் இப்படத்தை டப் செய்து வெளியிடவுள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பை 2018 செப்டம்பர் மாதத்தில் தொடங்கி, எதிர்வரும் 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், படத்தை இரண்டு பாகமாக எடுக்கவுள்ளதாகவும், முதல் பாகம் வெளிவந்த 3 மாதங்களுக்குள் இரண்டாம் பாகத்தை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த படத்தை 100 மேற்பட்ட மொழிகளில் வெளியிட்டு, சுமார் 3 பில்லியன் மக்களிடத்தில் மகாபாரத கதையை கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் பி.ஆர்.ஷெட்டி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பஸ் விபத்தில் 25 பேர் பலி!!

தெற்கு பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பஸ் பள்ளமொன்றில் கவிழ்ந்ததில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் விபத்து இடம்பெற்றவேளையில் 60இற்கும் அதிகமானவர் பஸ்ஸில் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

அப்பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அவதாரமெடுக்கும் சங்கக்கார!!

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவனுமாகிய குமார் சங்கக்கார எதிர்வரும் சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரில் புதிய அவதாரமெடுக்கவுள்ளார். இதனை சர்வதேச கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமான அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள சம்பியன் கிண்ண தொடரில் குமார் சங்கக்கார கிரிக்கெட் வர்ணனையாளராக முதல்முறையாக களமிறங்கவுள்ளார்.

சங்காவுடன் இணைந்து அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங், நியூசிலாந்து அணியின் பிரண்டன் மெக்கலம், தென்னாபிரிக்க அணியின் முன்தனாள் தலைவர் கிரேம் ஸ்மித் ஆகியோர் இம் முறை இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள சம்பியன் கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக வர்ணனையாளர்களாக களமிறங்கவுள்ளனர்.

இவர்களுடன் இணைந்து சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர்களான சௌரவ் கங்குலி, ஷேன் வோர்ன், மைக்கல் ஸ்லட்டர், நஷீர் குசைன், மைக்கல் அத்ரென், ஷோன் பொலக், சன்ஞய் மஞ்ரேக்கர், இயன் பிஷப், ரமீஷ் ராஜா சிமென் டுயுல், ஆதர் அலிகான் ஆகியோர் கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 மாத குழந்தைக்கு பயங்கரவாத விசாரணைக்கு சம்மன் வழங்கிய அமெரிக்க தூதரகம்!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த பெண் பயே கென்யன்- கெய்ர்ன்ஸ். இவரது 3 மாத குழந்தை ஹார்வி கென்யன்-கெய்ர்ன்ஸ். இவன் தனது தாயாருடன் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஓர்லண்டோவுக்கு விமானத்தில் பயணம் செய்தான். அதற்காக குழந்தை ஹார்விக்கு ‘விசா’ எடுக்கப்பட்டது.

அதில், நீங்கள் தீவிரவாத நடவடிக்கைகள், உளவு பார்த்தல், நாசவேலையில் ஈடுபடுதல் மற்றும் இனப்படுகொலை போன்றவைகளில் ஈடுபட்டவரா என கேட்கப்பட்டிருந்தது. அதற்கு எதிரே தவறுதலாக ஆம் என்ற வாசகத்தை அவனது தாத்தா குறியீட்டு விட்டார். இதனால் லண்டனில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.

இதுகுறித்து விசாரிக்க குழந்தை ஹார்விக்கு சம்மன் அனுப்பியது. எனவே, அவனை அமெரிக்க தூதரகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

படப்பிடிப்பு தளத்தில் 2 முறை மயங்கி வீழ்ந்த நடிகை!!

படப்பிடிப்பு தளத்தில் நடிகை க்ரிட்டி கர்பந்தா இரண்டு முறை மயங்கி வீழ்ந்துள்ளார். டெல்லியை சேர்ந்த க்ரிட்டி கர்பந்தா தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்து வந்த நிலையில் ஜி.வி. பிரகாஷ் குமாரின் ப்ரூஸ் லீ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். அவர் தற்போது 2 ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

வட இந்தியாவில் வெயில் கொளுத்துகிறது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே வர அஞ்சுகிறார்கள். நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை யாரும் வெளியே வர வேண்டாம் என்று அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இப்படி கொளுத்தும் வெயிலில் அலகாபாத்தில் ஷாதி மெய்ன் ஜரூர் ஆனா படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இந்த படத்தில் ராஜ்குமார் ராவ் ஜோடியாக நடித்து வருகிறார் க்ரிட்டி. படப்பிடிப்பில் கலந்து கொண்ட க்ரிட்டியால் வெயிலை தாங்க முடியாமல் மயங்கி விழுந்துள்ளார்.

மயக்கம் தெளிந்த பிறகு மீண்டும் நடிக்க வந்த அவர் மறுபடியும் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். க்ரிட்டி இரண்டு முறை மயங்கியும் பேக்கப் செய்யாமல் மீண்டும் நடிக்க வந்துவிட்டாராம் க்ரிட்டி.

தன்னால் படப்பிடிப்பு நிறுத்தப்படுவதை அவர் விரும்பவில்லையாம். அவரின் கடமை உணர்ச்சயை பார்த்து படக்குழு வியந்துவிட்டது.

திருவிழா மோதலில் ஒருவர் பலி, நால்வர் படுகாயம்!!

 
ஹட்டன் குடாஓயா தோட்டத்தில் நேற்று (18.04) இரவு 8 மணியவில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே பலியானதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய மணிவேல் புஸ்பராஜ் என தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

ஹட்டன் குடாஒயா தோட்டத்தில் இடம்பெற்ற 5, நாள் திருவிழாவில் இறுதிநாளான நேற்று மஞ்சல் நீராட்டு விழா இடம்பெற்ற வேளையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலிலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தில் படுங்காயமடைந்த நால்வர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலும் ஒருவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சடலம் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இந்த மோதல் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மீதொட்டமுல்லையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!!

மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் 54வது நாளாக தொடரும் போராட்டம்!!

 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 54வது நாளாகவும் இன்று (18.04.2017) தொடர்கிறது.

குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோர விபத்தில் இளைஞர் உட்பட இருவர் பலி!!

அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தானது நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரும், 45 வயதுடையவருமே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் மூன்றாவது முறையாக திருமணம் செய்ய முயற்சித்த குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்!!

கிளிநொச்சி பகுதியில் மூன்றாவது முறையாக சிறுமி ஒருவரை திருமணம் செய்யமுற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் ஏற்கனவே இரு திருமணங்களை செய்து கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிறுமி ஒருவரைத் திருமணம் செய்யமுற்பட்டுள்ளர்.

இது தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிமோனியா காய்ச்சலுக்கு இரையாகிய ஒன்றரை மாத பச்சிளம் குழந்தை!!

 
களுவாஞ்சிகுடி, பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மகிழுர் கண்ணகிபுரத்தில் நிமோனியா காய்ச்சலால் ஒன்றரை மாதக் குழந்தையின் உயிர் பிரிந்துள்ளது. கண்ணகிபுரத்தைச் சேர்ந்த முரளிதரன் சன்சுதி எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த குழந்தை சுமார் இரண்டு வாரங்களாக தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முரளிதரன் சன்சுதி உயிரிழந்துள்ளார்.
குறித்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தமையால் மகிழுர் பிரதேசம் முழுவதும் சோகமயமாக காட்சியளிக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நிமோனியா காய்ச்சல் காரணமாக இதுவரைக்கும் இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய அளவில் இலங்கை இளைஞன் செய்த சாதனை!!

ஆசியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் பந்தய போட்டியில் இலங்கையில் இளம் வீரரான எரான் குணவர்தன வெற்றி பெற்றுள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிள் பந்தய போட்டிகள் இம்மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் தாய்லாந்தில் நடைபெற்றது.

இதில் ஐப்பான் நாட்டின் வீரர் டெட்சுயா புஜீடா முதலாம் இடத்தினை கைப்பற்றியதுடன், இலங்கை இளம் வீரரான எரான் குணவர்தன இரண்டாமிடத்தை பெற்றார்.

இருப்பினும் சிறிய வயதில் சாதனையினை படைத்த எரான் குணவர்தனவை வரவேற்கும் நிகழ்வானது இன்று காலை இடம்பெற்றதுடன், இதில் மோட்டார் பந்தய வீரரான டிலந்த மாலகமுவவும் கலந்து கொண்டார்.

இருப்பினும் ஆசிய வீதியோட்ட மோட்டார் சைக்கிள் பந்தய அடுத்த கட்ட போட்டிகள் எதிர்வரும் 03 ஆம் மற்றும் 04 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு பெற்ற இலங்கையின் உயரமான யுவதி!!

இலங்கையில் மிகவும் உயர்ந்த வீராங்கனைக்கு அவுஸ்திரேலியாவின் கூடைப்பந்து அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரபல கூடைப்பந்து ஷூட்டரும் (Shooter) ஆசியாவின் உயரமான கூடைப்பந்து வீராங்கனையுமான இலங்கையின் தர்சினி சிவலிங்கம் என்பவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலங்கை கூடைப்பந்து வீராங்கனை ஒருவர் சர்வதேச அணியில் இணைந்து விளையாடுவதற்கு பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அவுஸ்திரேலியாவின் கூடைப்பந்து அணியில் இலங்கை விளையாட்டு வீரர் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படும் முதலாவது சந்தர்ப்பமும் இதுவென குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய, தர்சினி அவுஸ்திரேலியாவில் உள்ள வெஸ்ட் பெல்கன்ஸ், மற்றும் மெல்பேர்ண் சென்ட் எல்பன்ஸ் என்ற பிரபல அணிகளில் விளையாடவுள்ளார். 6 மாத ஒப்பந்த அடிப்படையில் தர்சினி இந்த அணிகளில் விளையாடவுள்ளார்.

அவர் அவுஸ்திரேலியா அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பை முன்னாள் கூடைப்பந்து வீராங்கனையும் பயிற்சியாளருமான திலக்கா ஜினதாஸவினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

திலக்கா தற்போது புரூணை தேசிய கூடைப்பந்து அணியின் பயிற்விப்பாளராக செயற்பட்டு வருகின்றார். அவரது பரிந்துரைக்கமையவும், தர்சினியின் முகாமையாளர் எஸ்.கோபிநாத் என்பவரின் முயற்சியால் இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இருந்து தர்சினி அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடவுள்ளார்.

அவருக்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக அவரது முகாமையாளர் எஸ்.கோபிநாத் விளையாட்டு துறை அமைச்சு மற்றும் தேசிய கூடைப்பந்து சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் தற்போது அதற்கான உரிய அனுமதி கிடைக்காமையினால் இலங்கை வீராங்கனை ஒருவருக்கு முதல் முறையாக கிடைக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போகும் ஆபத்தும் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.