9000 கோடி வங்கி கடன்களை கட்டாமல் தப்பி ஓடிய விஜய் மல்லையா இங்கிலாந்தில் அதிரடி கைது!!

இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன்களை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமறைவான தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய் மல்லையாவை ஸ்கொ ட்லார்ந்து யாட் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக திகழ்ந்தவர் விஜய் மல்லையா. மதுபான தொழில் மற்றும் விமான சேவைகளில் விஜய் மல்லையா நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தன.

தங்களது நிறுவனங்கள் பெயரால் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி கடன்களைப் பெற்றார். வங்கிகளும் மல்லையாவுக்கு சளைக்காமல் கடன்களைக் கொடுத்தன. ஆனால் மல்லையா வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவை விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்தியாவை விட்டு தப்பி ஓடி இங்கிலாந்தில் சொகுசு வாழ்க்கை வந்தார் மல்லையா. இதனிடையே இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற கதவுகளைத் தட்டின.

இதையடுத்து மல்லையாவை கைது செய்யும் முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டன. தற்போது இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்த மல்லையா கைது செய்யப்பட்டுள்ளார். லண்டன் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்.

என் 3 பிள்ளைகளுக்காக நான் தற்கொலை செய்யவில்லை : நடிகை நந்தினி!!

என் பெற்றோர், தம்பியை தவிக்க விட்டு செல்ல விரும்பவில்லை. அவர்கள் மூவரும் என் பிள்ளைகள் போன்று. அந்த பிள்ளைகளை கவனித்துக் கொள்ளும் கடமை எனக்கு உள்ளது. அதனால் தற்கொலை செய்யவில்லை என நடிகை நந்தினி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நந்தினியின் காதல் கணவர் கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தன் தற்கொலைக்கு நந்தினியின் அப்பா தான் காரணம் என்று கார்த்திக் கடிதம் எழுதி வைத்திருந்தார். இந்நிலையில் இது குறித்து நந்தினி பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது..

என் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்ட உடனேயே நானும் தற்கொலை செய்திருக்க வேண்டும். ஆனால் என்னை நம்பி என் பெற்றோர், தம்பி உள்ளார்கள்.
கடமை

என் பெற்றோர், தம்பியை தவிக்க விட்டு செல்ல விரும்பவில்லை. அவர்கள் மூவரும் என் பிள்ளைகள் போன்று. அந்த பிள்ளைகளை கவனித்துக் கொள்ளும் கடமை எனக்கு உள்ளது. அதனால் தற்கொலை செய்யவில்லை.

என் கணவரின் குடும்பத்தார் என் மீது ஏதேதோ புகார் தெரிவிக்கிறார்கள். இதனால் மனஉளைச்சலில் உள்ளேன். வலியுடன் போராடிக் கொண்டிருக்கிறேன்.

தயவு செய்து என்னை நிம்மதியாக வாழவிடுங்கள். நான் எந்த தவறான முடிவையும் எடுக்க விரும்பவில்லை என்றார் நந்தினி. நந்தினிக்கு பிணை மறுக்கப்பட்டதால் அவர் கைதாகக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

வரலட்சுமி கடத்தப்பட்டாரா : தமிழ் திரையுலகில் பரபரப்பு!!

போடா போடி, தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வரலட்சுமி. இவர் தற்போது அம்மாயி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும், விக்ரம் வேதா, நிபுணன், சத்யா ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இதற்கிடையில், பெண்களின் பாதுகாப்புக்காக சேவ் சக்தி என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், வரலட்சுமி கடத்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் இன்று ஒரு புகைப்படம் வைரலாக பரவத் தொடங்கியது. மேலும் #VaralaxmiGotKidnapped என்ற ஹாஸ் டக்கும் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது. இதனால் சினிமா உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒருவேளை படத்தின் புரோமோஷனுக்காக இதுபோல் படத்தை வெளியிட்டுள்ளார்களா அல்லது வரலட்சுமி நடத்தி வரும் சேவ் சக்தி அமைப்புக்காக இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்களா என்று பலரது தரப்பிலும் கேள்வி எழுந்தது. எனவே, இதுகுறித்து வரலட்சுமி தரப்பில் விசாரிக்கும்போது..

இது வரலட்சுமி நடிக்கும் புதிய படத்திற்கான புரோமோஷன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத் திரைப்படம் குறித்த அறிவிப்பை இன்று மாலை அறிவிக்கவுள்ளார்களாம் . அதற்கு முன்னதாக பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செல்பி எடுப்பது ஆபத்தானதா?

அளவுக்கும் மீறினால் எதுவாக இருந்தாலும் நஞ்சு என்பது போல நாம் அளவுக்கு அதிகமாக செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொள்வதினால், உடல் மற்றும் மனம் ரீதியாக பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

மேலும் ஒருசில நிகழ்வுகளின் போது நமது உயிரை பாதிக்கும் வகையிலும் சூழ்நிலைகள் அமைகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

செல்பி எடுப்பதால் வரும் விளைவுகள்

சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து அதிகமாக செல்பி எடுத்து போடுவதினால் அதற்கு மட்டும் அடிமையாகி மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் மன ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

வித்தியாசமான செல்பி எடுக்க வேண்டும் என்று மிகப் பெரிய கட்டிடங்கள், அருவிகள் மற்றும் மலைகள் ஆகியவற்றின் மீது எடுக்கும் போது கவனச் சிதறல் காரணமாக மரணம் கூட நிகழலாம்.

நண்பர்களுடன் சேர்ந்து தலையை ஒன்றாக ஒட்டிக் கொண்டு செல்பி எடுக்கும் போது, ஒருவரின் தலையில் இருக்கும் பேன் அடுத்தவர்களுக்கு பரவுகிறது.

செல்பி எடுக்கும் போது, மிகவும் அருகில் மொபைல் வைத்து எடுப்பதால், குண்டாக இருப்பதாக தெரியும். இதனால் ஒரு சிலர் உடல் பருமன் அதிகரித்து விட்டது என்று நினைத்துக் கொண்டு உணவுகளை குறைப்பதால் உடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.

வவுனியாவில் கனடிய புலம்பெயர் உறவுகளினால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!!

 
கனடா நாட்டில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு.திருமதி. வேலாயுதபிள்ளை சந்திராதேவி குடும்பத்தினரின் நிதியுதவியுடன் தெரிவு செய்யப்பட்ட 10 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நல்லின கறவைப்பசுக்கள் நேற்று (17.04.2017) வழங்கிவைக்கப்பட்டன.

சாஸ்திரிகூழாங்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட சுந்தரபுரம், புதுக்குளம் மற்றும் ஓமந்தை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட அரசமுறிப்பு, நாவற்குளம், மகிளங்குளம், கதிரவேலர்பூவரசங்குளம் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த 10 குடும்பங்களுக்கு குடும்ப வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் நல்லின கறவைப்பசுக்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம், கொடையாளர் திருமதி சந்திரா வேலாயுதபிள்ளை, புதுக்குளம், சாஸ்திரிகூழாங்குளம் மற்றும் சுந்தரபுரம் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அண்மையில் கனடா சென்றபோது சுகாதார அமைச்சர் அங்குள்ள புலம்பெயர் உறவுகளிடம் விடுத்த கோரிக்கையை தொடர்ந்தே இந்த உதவி வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோவிலுக்கு செல்லும் அனைவரும் மணி அடித்து விட்டு வணங்குவது ஏன் தெரியுமா?

கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளதா, அதை பற்றி உங்களுக்கு தெரியுமா?

கோவிலுக்கு செல்லும் அனைவரும் மணி அடிப்பது ஏன்?

கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்பார் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் அது உண்மை அல்ல.

பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உள்ள மணி ஓசையின் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது.

ஆகம சாஸ்திரங்களின் படி, கோவில் மணியில் இருந்து வெளிப்படும் ஓசை எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்து, நல்ல ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

மேலும் கோவில் மணியின் ஓசை மனிதனின் மூளை செயற்திறனை மேலோங்க செய்கிறது என்று அறிவியலில் ஒரு பின்னணி இருக்கிறது.

கோவில் மணியின் ஓசை தனித்துவமாக கேட்பது ஏன்?

கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவமாக இருக்கும் அல்லவா அதற்கு கோவில் மணிகளில் உள்ள கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்கள் தான் காரணமாகும்.

எனவே கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியானது, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றது.

மேலும் கோவில் மணியில் இருந்து வெளிப்படும் சத்தம் உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் மூளையில் செயற்திறனை அதிகரிக்கச் செய்து, விழிப்புணர்வை மேம்படுத்தி, மனதிற்கு நிறைவான அமைதி மற்றும் நிம்மதியை அளிக்கிறது.

இலங்கை வீரர் ரங்கன ஹேரத் செய்யவுள்ள வரலாற்று சாதனை!!

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் 1990களில் அறிமுகமாகி இன்னும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் (39) கடந்த 1999ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

விரைவில் 90களில் அறிமுகமாகி இன்னும் டெஸ்ட் போட்டிகளில் அதிக காலம் விளையாடும் வீரர் என்ற பெருமையை ரங்கன பெறவுள்ளார். இதுகுறித்து ரங்கன கூறுகையில்,

பந்துவீச்சாளர்களை விட அதிக காலம் விளையாட பேட்ஸ்மேன்களுக்கு சுலபம் தான். ஏனென்றால் பந்து வீச்சாளர்களுக்கு தான் அதிகமாக காயம் ஏற்படும். நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதை பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.

400 விக்கெட்களை வீழ்த்துவதும், வரவிருக்கும் இந்தியா, சிம்பாப்வே அணிகளுக்கெதிரான போட்டிகளில் வெற்றி பெறுவதுமே எனது இலக்காகும் என கூறியுள்ளார்.

இன்னும் 27 விக்கெட்களை கைப்பற்றினால், 400 விக்கெட்களை வீழ்த்திய பெருமைக்கு சொந்தக்காரராக ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்பர் மார்க்கெட் மீது விழுந்த விமானம் : பயணிகள் அனைவரும் பலி!!

போர்த்துக்கல் நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் மீது விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போர்த்துக்கல் நாட்டில் உள்ள Lisbon நகருக்கு அருகில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சிறிய ரக விமானம் ஒன்றில் விமானி மற்றும் 3 பயணிகள் இன்று பிற்பகல் நேரத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் விமானத்தில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முற்றிலுமாக செயலிழந்த அந்த விமானம் வேகமாக கீழே விழுந்துள்ளது.

அப்போது, சூப்பர் மார்க்கெட் ஒன்றில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் விமானம் பலத்த சத்தத்துடன் விழுந்து வெடித்து சிதறியுள்ளது.

இவ்விபத்தில் விமானத்தில் பயணித்த 4 பேரும் தரையில் இருந்த ஒருவர் என 5 பேர் பலியாகியுள்ளனர். இத்தகவலை விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விமானத்தில் பயணித்த 4 பேரும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. சூப்பர் மார்க்கெட் மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் மற்றும் விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

70 வயதில் 54 குழந்தைகளுக்கு தந்தையான முதியர்வர்!!

 
பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் 6 மனைவிகளை திருமணம் செய்து, அவர்கள் 54 குழந்தைகள் பெற்றேடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

பாகிஸ்தானின் மேற்குபகுதியின் Quetta பகுதியைச் சேர்ந்தவர் Abdul Majeed Mengal(70). இவருடைய தந்தைக்கு பத்து குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் Abdul Majeed Mengal தன் வாழ்நாளில் இது வரை 6 மனைவிகளை திருமணம் செய்துள்ளார். இதனால் அவருக்கு 54 குழந்தைகள் பிறந்துள்ளது.

அதில் 12 குழந்தைகள் இறந்துவிட்டன. மீதம் 42 குழந்தைகள் உள்ளன. அவர்களில் 22 ஆண் குழந்தைகள் மற்றும் 20 பெண் குழந்தைகள் ஆவர்.

Abdul Majeed Mengal தனது முதல் மனைவியை 18 வயதில் திருமணம் செய்துள்ளார். அதன் பின்னர் 5 பெண்களை திருமணம் செய்துள்ளார்.

இதில் இரண்டு மனைவிகள் இறந்துவிட்டனர். 12 குழந்தைகள் இறந்ததற்கு காரணம் சரிவர பால் கொடுக்காதது தான் என்றும், அதற்கான பணவசதி Abdul Majeed Mengal-இடம் இல்லை என்று கூறப்படுகிறது.

Abdul Majeed Mengal டிரைவராக பணியாற்றி வருகிறார். இருந்த போதிலும் இவரது வருமானம் குடும்பத்திற்கு போதாத காரணத்தினால், அவரது மகன்களும் வேலைக்கு சென்று உதவி செய்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் 7 அறைகள் கொண்ட வீட்டில் தங்கிவருகின்றனர். குழந்தைகள் தனி அறைகளில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து Abdul Majeed Mengal கூறுகையில், 42 குழந்தைகள் உள்ளதால், தனது குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாகவும், கலகலப்பாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.

தன்னுடைய இந்த ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம் பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள் மற்றும் தன்னுடைய உணவில் தினந்தோறும் ரொட்டி இருக்கும் என்று கூறியுள்ளார்.

குழந்தைகளில் பத்து குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பமுடியாமல், அவர் கஷ்டப்பட்டு வருகிறார். அந்த குழந்தைகள் பள்ளியில் அனுமதித்தால், பள்ளிக்கட்டணம் கட்ட வேண்டும் என்றும், அதற்கான பண வசதி தன்னிடம் தற்போது இல்லை என்று கூறியுள்ளார்.

தனக்கு எல்லா குழந்தைகளும் படிக்க வேண்டும் என்று ஆசை தான் எனவும், தன்னுடைய பொருளாதார நிலை சரியில்லாததால், அது என்னால் முடியவில்லை என்று கூறியுள்ளார்.

கர்ப்பிணிப் பெண்ணை துடிதுடிக்க கொலை செய்த பெற்றோர்!!

தமிழ்நாட்டில் கலப்பு திருமணம் செய்த சொந்த மகளை அவர் பெற்றோரே அடித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சர்மிளா, இவர் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி சர்மிளா அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் சர்மிளா கர்ப்பாமாகியுள்ளார், அவர் ஏழு மாத கர்ப்பமாகியிருந்த நிலையில் அவரின் கர்ப்பத்தை கலைக்க அவர் பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால் இதனை சர்மிளா ஏற்க மறுத்துள்ளார், இதனால் கோபமடைந்த அவர் பெற்றோர் அவரை அடித்து கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமானத்தில் இதை செய்தால் பயணிகளுக்கு 15 லட்சம் அபராதம்!!

இந்தியாவில் விமானங்கள் புறப்படுவதற்கு காலதாமதம் ஏற்படுத்தும் பயணிகளுக்கு 15 லட்சம் வரை அபராதம் விதிக்க ஏர் இந்தியா விமானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா விமான நிறுவனம் தான் இந்த அதிரடி விதிமுறையை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீப காலமாக விமானங்களில் சரியான நேரத்தில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது.

அதாவது, விமானம் புறப்பட வேண்டிய நேரமானது சில பயணிகளால் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக விமானப்பயணத்தை ஒரு மணி நேரம் தாமதிக்க வைக்கும் பயணிக்கு 5 லட்சம் அபாரதம் விதிக்கப்பட இருக்கிறது.

மேலும். ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை தாமதம் ஏற்படுத்தினால் 10 லட்சம் அபராதமும், 2 மணிக்கு மேல் தாமதப்படுத்தினால் 15 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் புதிய கட்டுப்பாட்டை ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த புதிய கட்டுப்பாடுகள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்ற தகவலகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்தியாவில் முதன் முறையாக கண்ணாடி ரயில் பெட்டி அறிமுகம்!!

 
சுற்றிலும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ள புதிய வகை ரயில் பெட்டியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கண்ணாடி ரயில் பெட்டியானது, விசாகப்பட்டினம்-கிரண்டூர் பயணிகள் ரயிலில் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் இருந்து இந்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு காணொலி மூலம் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.

இந்த ரயில் பெட்டியில் 360 டிகிரி அளவுக்கு சுற்றும் 40 இருக்கைகள், கண்ணாடி மேற்கூரை, ஏ.சி , ஜி.பி.எஸ், தானியங்கி கதவுகள், எல்.ஈ.டி விளக்குகள் ஆகியவை அமைந்துள்ளன.

விசாகப்பட்டினம்-கிரண்டூர் ரயில் பாதையில், அரக்கு மலைப்பகுதி அமைந்துள்ளது. எனவே இந்த கண்ணாடி பெட்டி மூலம் அந்த மலைப்பகுதியின் அழகை பயணிகள் ரயிலில் அமர்ந்தவாரே கண்டு ரசிக்க முடியும்.

இந்த பெட்டியை உருவாக்க இந்திய மதிப்பில் சுமார் 3.38 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. சுற்றுலா தலங்களை இணைக்கக் கூடிய ரயில் சேவைகளில், இது போன்ற கண்ணாடி பெட்டிகளை இணைப்பது குறித்து ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் இணையும் அதிமுக : இரவோடு இரவாக மெரீனா கடற்கரையில் ஸ்டாலின்!!

தமிழகத்தின் சென்னை மெரீனா கடற்கரையில் திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு திடீர் ஆலோசனை நடத்தியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் அ.தி.மு.க அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக-வின் இரு அணிகளும் இணைவது பற்றி ஆலோசனை நடத்தியதாக கூறினார்.

இணைந்து செயல்படுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்தை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு மெரீனா கடற்கரைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு அவர் கட்சி நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால் இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுக்கடையை எதிர்த்த பெண்ணுக்கு இப்படி ஒரு நிலையா?

மதுக்கடையை எதிர்த்து போராடிய பெண்ணை மர்ம கும்பல் ஒன்று மது போத்தலால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் பணக்காடி கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்றகோரி மனு எழுதிய அப்பகுதி சமூக ஆர்வலர் செல்வி, மனுவில் ஊரார் பலரிடம் கையெழுத்து வாங்கினார். இதை நேற்று நடைபெறும் மனு நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் அளிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த விஜய் என்பவர் மற்றும் அவரது நண்பர்கள் செல்வியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் செல்வி இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து பொலிசாரும் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு வரச்சொல்லி சென்றுவிட்டனர்.

பொலிசார் சென்ற அடுத்த சிறிது நேரத்தில், செல்வியை வழிமறித்த மர்ம நபர்கள், அவரை தாக்க முற்பட்டனர். தப்பியோடிய செல்வியின் முதுகில் மது போத்தலை உடைத்து குத்தினர்.

பலத்த காயமடைந்த செல்வி, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

குழந்தையொன்றைப் பிரசவித்து காட்டில்வீசிய தாய் கைது!!

பிறந்த பச்சிளம் குழந்தையை காட்டில் வீசியெறிந்த தாயொருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிலாபம் அருகே மாதம்பை – ஹேனேபொல, கல்முருவ பிரதேசத்தில் வசித்த 37 வயதான திருமணமாகாத பெண்ணொருவரே இன்று (17) இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை தனது வீட்டில் வைத்து குழந்தையொன்றைப் பிரசவித்துள்ள அவர், அதனை அயலில் இருந்த காட்டுப் பகுதியில் வீசியெறிந்துள்ளார்.

மாடுமேய்க்கச் சென்ற ஒருவர் குழந்தையின் அழுகுரல் கேட்டு, பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளார்.

இதன் பின்னர் குழந்தை பொலிஸாரினால் மீட்கப்பட்டு தற்போது சிலாபம் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தாய் என்று சந்தேகிக்கப்படும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரயில் பயணம் தொடர்பில் யாழ் மக்களிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

சமகாலத்தில் ரயில் பயணிப்பதை யாழ்ப்பாண மக்கள் விரும்புவதில்லை என யாழ் ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு கருமபீட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நிலவும் கடும் உஷ்ணமான காலநிலை காரணமாக ரயில் பயணிப்பதை யாழ்ப்பாண மக்கள் பெரிதும் தவிர்த்து வருதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் யாழ்ப்பாணம் – கொழும்பு வரையில் செல்லும் ஏசி வசதி கொண்ட கடுகதி ரயிலில் பயணிக்க ஆர்வம் கொண்டுள்ளனர்.

இதற்கமைய கடுகதி ரயில் பயணத்திற்கான ஆசனங்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரே முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழமையாக கடுகதி ரயில் பயணத்திற்கான ஆசனங்கள் 3 அல்லது 4 நாட்களுக்கு முன்னரே முற்பதிவுகள் செய்யப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.