குப்பை மேட்டு அனர்த்தத்தில் பதிவாகிய மனிதாபிமானம்!!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்தமையால் ஏற்பட்ட அனர்த்தம் இலங்கை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மீட்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள உண்மை நிலவரங்களை அறிந்து கொள்ளவும் ஊடகவியலாளர்கள் அங்கு குழுமியுள்ளனர்.

இந்நிலையில் அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் நிகழ்ந்த மனிதாபிமான செயற்பாடு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி உள்ளன.

அனர்த்த நிலைமையிலும் பூனை ஒன்றின் உயிரை காப்பாற்ற ஊடகவியலாளர் ஒருவர் மேற்கொண்ட முயற்சி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மீதொட்டமுல்ல குப்பை மேட்டினை புகைப்படம் எடுப்பதற்கு சென்றிருந்த ஊடகவியலாளர் ஒருவரின் செயற்பாடே இவ்வாறு கமராவில் பதிவாகியுள்ளது.

ஆங்கில ஊடகமொன்றில் பணியாற்றும் வருண வன்னிஆராச்சி என்ற ஊடகவியலாளரின் இந்த செயல் பல்வேறு தரப்பினர்களால் பாராட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு காலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை சாதனை!!

புத்தாண்டு காலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை சாதனை வருமானத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதான கட்டுப்பாட்டு முகாமையாளர் பீ.எச்.ஆர்.ரீ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னை ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டு புத்தாண்டு காலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை கூடுதல் வருமானம் ஈட்டியுள்ளது. கடந்த 6ம் திகதி முதல் 16ம் திகதி முற்பகல் வரையிலான காலப் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபை 72 கோடி ரூபா வருமானத்தை கிடைத்துள்ளது.

கடந்த 8ம் திகதி மட்டும் 86.4 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. ஊவா, வடமேல், சபரகமுவ ஆகிய மாகாணங்களில் கூடுதல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 25ம் திகதி வரையில் புத்தாண்டு காலத்திற்கான விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் ஏற்பட்ட முதல் சந்தர்ப்பம் : சரிவின் பின்னர் மீதொட்டமுல்லயில் திடீர் புவியியல் மாற்றம்!!

மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் மீண்டும் அனர்த்தங்கள் ஏற்படக் கூடிய ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் மழை பெய்தால் மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் மீண்டும் சரிவு ஏற்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அமைப்பின் மண் சரிவு ஆய்வு மற்றும் ஆபத்து தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளும் இயக்குனர் ஆர்.டிம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார்

உண்மையில் குப்பை மேடு சரியவில்லை, குப்பை மேட்டின் பாரத்திற்கு மண் மேடு உடைந்து விழுந்துள்ளது.

இங்கு குப்பை மேட்டை சுற்றியுள்ள வீடுகள் ஒரு பக்கம் தள்ளப்பட்டுள்ளதுடன், மேல் பக்கமாக உயர்ந்துள்ளது. இந்த நிலைமையை நாங்கள் மண் சரிவு அனர்த்தமாகவே கருதுவோம்.

இவ்வாறான சம்பவம் ஒன்று இலங்கையில் இடம்பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும். தற்போதைக்கு குப்பை மேட்டில் குப்பை போடாமையினால் ஆபத்துக்கள் இல்லை.

எனினும் எதிர்வரும் நாட்களில் மழை பெய்தால் குப்பை மேட்டில் மற்றுமொரு அனர்த்தம் ஏற்பட கூடும். இதனால் குப்பை மேட்டியை சுற்றி ஆபத்தான எல்லையாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அங்கு வசிப்பவர்களை அங்கிருந்து செல்லுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆபத்தான பகுதியில் கிட்டத்தட்ட 130 வீடுகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 137 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட மாற்றம் : நாசா அறிவிப்பு!!

தற்போது இந்தியா, இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் அதிகளவிலான வெப்பநிலை காணப்படுகின்றது. இந்த நிலையில், கடந்த 137 ஆண்டுகளிலேயே அதிக வெப்பம் நிலவிய இரண்டாவது மாதமாக மார்ச் மாதம் காணப்படுகின்றது.

6 ஆயிரத்து 300 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே இந்த அறிக்கையினை அமெரிக்க வானவியல் ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்டுள்ளது. ‌

அந்த புள்ளி விபரங்களின் படி கடந்த 137 ஆண்டுகளில் வெப்பம் மிகுந்த 2 ஆவது மாதமாக 2017ஆம் ஆண்டின் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதிவாகியிருந்த வெப்பநிலையை விட 0.15 டிகிரி வெப்பம் குறைவாக காணப்படுவதாக நாசா மேலும் தெரிவித்த்துள்ளது.

டிடிவி தினகரன் தலைமறைவு? தமிழகத்தில் பரபரப்பு : இணையும் பன்னீர் அணி?

தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது டில்லியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார்.

இது தொடர்பாக சுகேஷ் என்பவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தினகரன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இதனால் தினகரனை விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக டெல்லி பொலிசார் தமிழகம் விரைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தினகரன் தலைமறைவாகியுள்ளார் என்றும், அவர் தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என அதிமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினகரின் கைத்தொலைபேசிக்கு அழைப்பு எடுத்த போதும் அது இயங்கவில்லை என்றும் தெரியவருகின்றன.

இந்நிலையில், சசிகலா தரப்பில் உள்ள அதிமுக தரப்பினர் தற்பொழுது பன்னீர் அணியோடு இணைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாவும், இரு அணியினரும் ஒன்று சேர்ந்து இரட்டை இலைச் சின்னத்தை மீட்க ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என கட்சியினர் ஒருமித்த கருத்தில் இருப்பதாக தெரியவருகிறது.

இதேவேளை, பன்னீர்செல்வத்துடன், இணைந்து இவர்கள் செயற்படுவார்கள் என்னும் கருத்து இப்பொழுது வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், நிதி அமைச்சர் ஜெயக்குமார் ‘ஓ.பன்னீர்செல்வம், ஒற்றுமையாக செயல்படுவது குறித்து கூறிய கருத்தை வரவேற்கிறோம். கழகத்தை ஒற்றுமையாக நடத்தவே இந்த கூட்டத்தினை நடத்தினோம் என்றும் இப்பொழுது பத்திரிகையாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமிழக அரசியலில் ஏற்பட்ட மந்தநிலை தற்பொழுது மீண்டும் பரபரப்பாகி சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனைவி, மகனின் சடலங்கள் கிடைக்கப் பெற்ற போதிலும் மகளை காணவில்லை : தந்தையின் கதறல்!!

 
மீதொட்டமுல்ல பகுதியில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் சிலர் தங்களின் உறவுகளை அடையாளம் கண்டுள்ள போதிலும் சிலர் தங்கள் உறவுகளை தொடர்ந்தும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், தனது உறவுகளை இழந்த கணவர் ஒருவரின் கதறல் குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அனர்த்தத்தில் பலியான மனைவி மற்றும் மகனின் சடலங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். இருப்பினும், தனது இளைய மகளை இது வரையில் கண்டுப்பிடிக்கவில்லை என மகளின் தந்தை கதறலுடன் தெரிவித்துள்ளார்.

மீதொட்டமுல்ல பகுதியை சேர்ந்த சிவகுமாரன் என்ற நபரே இவ்வாறு கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

பிரனீதா என்ற தன் இளவயது மகளே காணாமல் போயுள்ளார்.அவரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.

தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்ட மீட்கும் நடவடிக்கைகளில் 28 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.அவர்களுள் 30 பேர் காணாமல் போயுள்ளனர்.

மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் என்பதில் வெட்கப்படுகிறேன் : கே.கே.மஸ்தான்!!

மாவட்டத்தினுடைய வளர்ச்சிக்காகவும் , ஏற்படும் பிரச்சனைகளை சுமூகமாக தீர்ப்பதற்குமாக மாவட்ட அபிவிருத்திக்குழு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தை கூட்ட முடியவில்லை என்பதில் நான் வெட்கப்படுகிறேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

மன்னார் சிலாவத்துறையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மீள்குடியேற்ற செயலணியின் அபிவிருத்தி தொடர்பான மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த சந்திப்பில் மஸ்தான் எம்.பி மேலும் உரையாற்றுகையில்..

மன்னார் மாவட்டத்தினுடைய அபிவிருத்தியையும் இங்கு ஏற்படும் பிரச்சனைகளையும் பேசுவதற்கு மாவட்ட அபிவிருத்திக்குழு போடப்பட்டும் இக்கூட்டத்தை கூட்டுவதற்கு சில இணைத்தலைவர்களுக்கு நேரமில்லை என்பதால் நான் அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் என்றுசொல்ல வெட்கப்படுகிறேன்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்களுடைய பிரச்சனைகளை பேசுவதற்கு நேரமில்லை என்றால் அந்த இடத்திற்கு பொருத்தமான ஒருவருக்கு அப்பொறுப்பை வழங்கிவிட்டு ஒதுங்கிக்கொள்ளவதே சாலச்சிறந்ததாகும்.

வெறுமனே தங்கள் பெயருடன் இணைத்து பதவிகளை போட்டுக்கொள்வதற்காக இருந்தால் அதற்கவர்கள் வீட்டிலே இருந்திருக்கலாம். இதற்கு மேலும் நான் யார் என்பதை பெயர்குறிப்பிடத்தேவையில்லை என்றாலும் இனியாவது அபிவிருத்திக்குழு கூட்டம் கூட்டப்பட்டு மன்னார் மாவட்ட மக்களுடைய பிரச்சினைகளுக்காக ஒரு நாளையாவது செலவழிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

மேலும் மக்களுக்கு நிர்வாகம் சார்ந்த தெளிவுகள் போதாமையால் அவர்களை சிலர் ஏமாற்ற நினைக்கலாம் ஆனாலும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நான் அவர்களுக்கு கிடைக்கப்பெறவேண்டியதை அவ்வாறே கிடைக்க செய்வதுதான் என்னுடைய வேலையாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

லண்டன் நகரில் அமிலத் தாக்குதல் : 12 பேர் காயம் 600 பேர் வெளியேற்றம்!!

கிழக்கு லண்டனில் விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அமிலத் தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்தப் பகுதியில் இருந்து 600 பேர் வரையில் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டல்ஸ்டன் (Dalston) எனும் பகுதியில் இன்று அதிகாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள அமிலம் அதிக அமிலத்தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கணவர் வெளிநாட்டில் : மனைவி 4 மாத சிசுவுடன் திடீர் மரணம்!!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை கிராமத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அந்த பெண்ணின் வயிற்றில் 4 மாத பெண் சிசு ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் கடந்த 18 மாதங்களாக மத்திய கிழக்கு நாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையிலேயே இந்த பெண் வயிற்றில் குழந்தையுடன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வந்தாறுமூலை கிராமத்தில் திடீரென மரணமடைந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 28 வயது பெண்ணொருவரின் உடற்கூற்றுப் பரிசோதனை இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உடற் கூற்றுப் பரிசோதனையில் பெண்ணின் வயிற்றில் 4 மாதங்களேயான பெண் சிசு இறந்த நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், பெண்ணுக்கு அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் உறவினர்கள் அளித்த வாக்குமூலத்திலும் முன்னுக்குப்பின் முரண்பாடுகள் காணப்பட்டதால் தடயவியல் நிபுணர்களின் அறிக்கையைப் பெறவும் இறந்த பெண்ணின் உடல் மாதிரிகளை இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

மரணமடைந்த பெண்ணின் உடற் கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் காப்பாற்ற முயன்றவர்களை தாக்கிய யானை சுட்டுக்கொலை!!

 
வவுனியா ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் இன்று (17.04.2017) காலை 8.30 மணிக்கு கிணற்றில் வீழ்ந்து கிடந்த இரண்டு யானைகள் மீட்கப்பட்டன.

நேற்றைய தினம் (16.04) இரண்டு குட்டி யானைகளும் இரண்டு பெரிய யானைகளும் கிணற்றிள் வீழ்ந்திருந்த நிலையில் ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக வவுனியா ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வன விலங்கு ஜீவரசிகள் அதிகாரிகளுக்கு தகவலை வழங்கினார்கள்.

ஆனால் மாலை 4 மணியாகியும் வன விலங்கு ஜீவராசிகள் அதிகாரிகள் சமூகமளிக்காமையினால் பொதுமக்களின் உதவியுடன் ஒமந்தை பொலிஸார் சுமார் 5 மணித்தியாளங்களாக போராடி இரண்டு குட்டி யானைகளை மீட்டெடுத்தனர்.

எனினும் இரவில் தொடர்ச்சியாக மீட்புப் பணியினை தொடர முடியாமையினால் இன்று காலை இரு பெரிய யானைகளும் கிணற்றினுள் உயிருக்கு போராடிய நிலையில் பெக்கோ கனகரக வாகனத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது.

மீட்க்கப்பட்ட யானைகளில் ஒன்று பெக்கோ கனகரக வாகனத்தை தாக்கியதுடன் அதில் இருந்தவர்களை தாக்க முற்பட்ட சமயம் வனத்துறை அதிகாரியினால் சுட்டுக்கொல்லப்பட்டது.

மற்றையா யானை கடும் போராட்டத்தின் மத்தியில் மீட்க்கப்பட்டு காட்டிற்குள் விரட்டியடிக்கப்பட்டது.


வவுனியா தாண்டிக்குளம் கந்தசாமி ஆலயத்தில் திருட்டு!!

 
வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் நேற்று (16.04.2017) இரவு திருடர்கள் ஆலயத்தின் உண்டியலை உடைத்து பெருமளவு பணத்தினைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

நேற்று (16.04) மாலை 6 மணியளவில் ஆலயத்தினை மூடிவிட்டுச் சென்றதாகவும் இன்று காலையில் ஆலய வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்றபோது ஆலயம் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது இதையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

ஆலயத்திற்கச் சென்ற பொலிஸ் குழுவினர் ஆலய நிர்வாக சபையினரிடமும் ஆலய குருக்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது ஆலய மூலஸ்தானம் கத்தி கொண்டு உடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளதுடன் ஆலயத்தின் அலுவலகத்தினை திருடர்கள் உடைத்து அலுமாரிகளை உடைத்து அதிலிருந்த பெறுமதிமிக்க ஒலிபெருக்கிச் சாதனத்தினை திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது

ஆலய முன்றலிலிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணமும் திருடப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!!

வவுனியாவில் இன்று (17.04.2017) தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டில் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார் சடலத்தினை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவனியா வெளிக்குளம் பகுதியில் வசித்துவந்த பி. எம்.சுகுமார் என்ற 61 வயது குடும்பஸ்தர் இன்று காலை 5 மணியளவில் வேட்டியினால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் வீட்டின் முன்பகுதியில் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார், மரண விசாரணை அதிகாரி சடலத்தினை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தூக்கில் தொங்கியவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பதுடன் நில அளவைத் திணைக்களத்தில் முன்னர் பணியாறிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொட்டாவி நோயின் அறிகுறியா?

உடலுக்கு ஓய்வு தேவை என்பதை உணர்த்து ஓர் அறிகுறியே கொட்டாவி. உடல் சோர்வு, பசி, தூக்கம் போன்றவற்றினால் கொட்டாவி வருவது சாதாரணமாகும். குழந்தைகளுக்கு பெரும்பாலும் அசதி மற்றும் தூக்கம் காரணமாகவே கொட்டாவி வருகிறது.

நாம் சலிப்பான சூழலிலோ அல்லது அலுப்பான சூழலில் அமர்ந்து இருந்தாலும் கொட்டாவி வருகிறது. வாய், நாக்கினை ரிலாக்ஸ் செய்திட கொட்டாவி உதவுகிறது.

பாடம் எடுப்பவர்களுக்கு தூக்கம் வருவது இல்லை அதை கவனிப்பவர்களுக்கே கொட்டாவி வருகிறது. கொட்டாவி விடும் போது ஆக்ஸிஜனானது உள்ளிழுக்கப்பட்டு கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றப்படுவதற்கு மூளை நுரையீரலுக்கு கட்டளை இடுகிறது.

கொட்டாவி என்பது நோயல்ல. ஒரு அறிகுறியே. அடிக்கடி கொட்டாவி வந்தால் கட்டாயம் ஓய்வு தேவை. ஒரு மணி நேரம் தூங்குவது நல்லது. இயலாத சூழலில் முகம் கழுவி சிறிது புத்துணர்ச்சியினை பெறலாம்.

ஆனால் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள இதய, பக்கவாத நோயாளிகளுக்கு கொட்டாவி வந்தால் அவர்கள் அதை சமிக்சையாக எடுத்து கொள்ளவேண்டும்.

இது அவர்களின் மூளைக்கு செல்லும் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் குறைப்பாட்டை குறிக்கிறது. உடனடியாக அவர்களின் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்கவேண்டும்.

கொடிய பாம்புகளுடன் விளையாடும் 2 வயதுக் குழந்தை!!

 
பாம்புகள், உடும்புகள் போன்ற விஷ ஊர்வனங்களுடன் விளையாடும் 2 வயது குழந்தையின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் Brooke Harrison. இவர் மனைவி Tony இவர்களின் மகன் Jenson Harrison (2) Brookeம், Tonyம் பாம்புகள் பிடிப்பதையே தொழிலாக செய்து வருகிறார்கள். இவர்கள் வீட்டில் மட்டும் 300க்கும் மேற்பட்ட பாம்புகளை வளர்க்கிறார்கள்.

இவர்களின் மகன் Brooke மற்ற குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடுவது போல இவன் பாம்புகளுடன் தைரியாக விளையாடுகிறான்.

பாம்புகள் மட்டுமில்லாமல் பல்லி, உடும்பு போன்ற உயிரினங்களுடன் Jenson சந்தோஷமாக விளையாடுகிறான்.

இது குறித்து Jensonன் பெற்றோர் கூறுகையில், எங்கள் மகன் பிறந்த 24 மணி நேரத்துக்குள்ளேயே அவன் பாம்புகளை சுற்றி தான் இருந்தான்.

தினமும் அவனை சூழ்ந்து பாம்புகள் தான் உள்ளன. Jenson விஷமில்லாத உயிரினங்களிடம் மட்டுமே விளையாடும் படி நாங்கள் பார்த்து கொள்கிறோம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

5 நிமிடத்தில் நடந்ததை மறந்துவிடும் பரிதாபம் இளைஞன்!!

 
கஜினி திரைப்படத்தில் நடிகர் சூர்யா உடனே எல்லா விடயங்களையும் மறந்து விடுவது போல நிஜத்தில் ஒரு இளைஞர் அப்படி வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.

தைவான் நாட்டை சேர்ந்தவர் Chen Hongzhi (25) இவருக்கு 17 வயது இருக்கும் போது இவர் ஒரு வாகன விபத்தில் சிக்கியுள்ளார்.

அதில் Chenன் தலையில் பலத்த அடிப்பட்டதையடுத்து அவர் பல நாட்கள் படுக்கையிலேயே இருந்துள்ளார்.

Chenன் உடல் நிலை பின்னர் சரியானாலும், தலையில் அடிப்பட்டு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதால் தன் ஞாபக சக்தியை அவர் இழந்தார்.

அதன் பின்னர் எந்தவொரு விடயத்தையும் 5 நிமிடங்களுக்கு மேல் அவரால் நினைவில் வைத்து கொள்ள முடியாது.

Chen தனது தாய் Wang Miao-chiong (60) உடன் வாழ்ந்து வருகிறார். தான் பார்ப்பவர்களின் பெயர்கள், விபரங்கள் போன்றவற்றை அவர் ஒரு நோட் புக்கில் எழுதி வைத்து கொள்கிறார்.

தினமும் Chen காலையில் எழுந்திருக்கும் போது தன்னையே மறந்து விடுகிறார். பின்னர் அவர் தாய் தான் அவரிடம் உண்மையை புரிய வைக்கிறார்.

இவ்வளவு பிரச்சனையிலும் Chen தன்னால் முடிந்த வேலைகளை செய்து வீட்டுக்கு வருமானம் கொடுத்து வருகிறார்.

அமெரிக்கா போர் தொடுத்தால் இதுதான் வட கொரியாவின் திட்டம்!!

வட கொரியா மீது அமெரிக்கா போர் தொடுக்க நேர்ந்தால் தென் கொரியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கடத்த கிம் அரசு சிறப்பு வீரர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட கொரியா தீபகற்பத்தில் போர் சூழல் உருவாகியிருக்கும் நிலையில் கிம் அரசின் அதிர வைக்கும் திட்டங்கள் சில கசிந்த வண்ணம் உள்ளது. இதனால் உலக நாடுகள் பல அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதுடன் தங்கள் நாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

முன்னேற்பாடு நடவடிக்கையாக சீனா அரசு தங்கள் நாட்டில் இருந்து வட கொரியாவுக்கான அனைத்து விமான சேவைகளையும் அதிரடியாக நிறுத்தியுள்ளது. இதனால் கடந்த வெள்ளியன்று வட கொரியாவில் இருந்து கடைசி விமானம் சீனா தலைநகர் பீஜிங் வந்து சேர்ந்தது.

இந்த நிலையில் தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் நிலை உருவானால் தென் கொரியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கடத்தி வர சிறப்பு படை ஒன்றை கிம் அரசு தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி குறித்த தகவல்களை வெளியிட்ட முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், அதிர வைக்கும் தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

டிரம்ப் அரசு வட கொரிய ஜனாதிபதியை கொல்லாமல் பதவி நீக்கம் செய்ய முயற்சி மேற்கொண்டால் அது கண்டிப்பாக அமெரிக்காவுக்கு தலைவலியாக முடியும்.

ஜனாதிபதி கிம் உயிருடன் இருக்கும் வரை வட கொரியாவை வெற்றிகொள்ளும் சாத்தியம் மிக மிக குறைவு எனவும் அந்த ராணுவ வீரர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு படையில் ஒரு குழுவினர் உடனடியாக உயிரை மாய்த்துவிடும் கொடிய விஷத்துடன் களமிறங்க உள்ளனர். இதே பாணியில் தான் மலேசியாவில் தமது சகோதரரை தீர்த்துக்கட்டினார் கிம் என்பது குறிப்பிடத்தக்கது.