வவுனியாவில் பாடசாலை அதிபர் மீது தாக்குதல்!!

வவுனியாவில் பாடசாலை ஒன்றின் அதிபர் மீது இன்று(08.04.2017) நண்பகல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அதிபர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..

வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்துவரும் பாடசாலை அதிபர் நேற்று தனது வீட்டின் பின்பக்க வேலிக்கு தூண்போடும் பணியினை மேற்கொண்டுள்ளார்.

இன்று அதிபரின் வீட்டிற்கு வர்ணம் பூசும் வேலைகளை பணியாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். அதிபர் நிறப்பூச்சு வாங்குவதற்காக நகர் கடைக்குச் சென்றுள்ளார்.

இதன்போது பிற்பகல் 1 மணியளவில் பின்வீட்டு காணியில் வசித்துவரும் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் என 4, 5 பேரடங்கிய குழுவினர் அதிபரின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த அதிபரின் உறவுப் பெண் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே அதிபர் வந்ததும் பின்வீட்டு உரிமையாளர், அதிபருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அதிபர் மீது தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து அதிபர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினையும் அதிபர் மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த பாடசாலை அதிபர் ஏ.முரளிதரன் (47வயது) வவுனியா பொது வைத்தியசாலையில் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தாக்குதல் நடத்திய பின்வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 44வது நாளாகத் தொடரும் போராட்டம்!!

 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 44 ஆவது நாளாகவும் இன்று (08.04.2017) தொடர்கிறது.

குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

கவர்ச்சியான ஆடை அணிந்ததால் கொல்லப்பட்ட பெண்!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கவர்ச்சியான ஆடை அணிந்ததற்காக மொடல் அழகியான தங்களது மகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலைத்தீவை சேர்ந்த Raudha Athif(21) என்ற இளம்பெண் பல்வேறு அழகி போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்துள்ளார்.

இவரது வெற்றிகளையும் அழகானத் தோற்றத்தையும் மாலைத்தீவு அதிபரும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதுமட்டுமில்லாமல், இந்தியாவில் வெளியாகும் வோக் பத்திரிகையின் அட்டைப்படத்திலும் இவர் இடம்பெற்று சர்வதேச புகழைப் பெற்றார்.

மொடல் அழகியான இவர் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள Islami Bank மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்தவாரம் புதன்கிழமை அன்று அறையில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

தொடர்ந்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகு இது தற்கொலை தான் என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஆனால், மாலைத்தீவில் உள்ள இவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இது தற்கொலை இல்லை என்றும் இது திட்டமிடப்பட்ட கொலை என பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து பெற்றோர் வெளியிட்ட தகவலில் ‘தற்கொலை செய்துக்கொள்ளும் அளவிற்கு எங்களது மகள் கோழை இல்லை.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவரான அவர் கவர்ச்சி உடைகளை அணிந்துக்கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதுபோன்ற ஆடைகளை அணியக் கூடாது என மிரட்டியவர்கள் தான் எங்களது மகளை கொலை செய்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் தற்கொலையாக காணப்பட வேண்டும் எனவும் சம்பவங்களை ஜோடித்துள்ளனர் என பெற்றோர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

பெற்றோரின் தகவல்களை சேகரித்துள்ள பொலிசார் அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரின் புதிய கண்டுபிடிப்பு!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரினால் மருத்துவ துறைக்கு தேவையான சில இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. யாழ், பலாலி வீதியை சேர்ந்த குலேந்திரன் ராஜா என்பவர், பல் அறுவை இயந்திரங்கள் சிலவற்றை தயாரித்துள்ளார்.

அவரது புதிய கண்டுபிடிப்பான பல் அறுவை நாற்காலியை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இது தொடர்பான நிகழ்வு யாழ், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்றது.

Tissomed Technologies என்ற நிறுவனத்தின் உரிமையாளரான குலேந்திர ராஜா உள்ளுர் தயாரிப்பாக நாற்காலியை வடிவமைத்துள்ளார்.

இந்த கண்டுபிடிப்புக்கு சுகாதார அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த பல் அறுவை நாற்காலியை தயாரிப்பிற்கு 5.5 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரிஸாவின் மதக்கலவரம் : ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு!!

ஒரிஸா – பத்கர் நகரில் மதக்கலவரம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமர் – சீதை குறித்து சமூக வலைத்தளங்களில் ஆட்சேபனை கருத்துக்கள் வௌியிடப்பட்டமையை அடுத்தே இந்த மதக்கலவரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலவரத்தை அடுத்து பத்கர் நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மதக்கலவரத்தினால் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மதக்கலவரத்தின் இடைநடுவில் கொள்ளைச் சம்பவங்கள் சிலவும் பதிவாகியுள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தீவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த கலவரத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள கல்லூரிகள் மற்றும் பாடசாலைகள் எதிர்வரும் புதன்கிழமை வரை மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, அனைத்து தரப்பினரையும் அமைதி காக்குமாறு மாநில முதமைச்சர் நவீன் பட்நாயக் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

07 வருடங்களின் பின் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்!!

2009ம் ஆண்டு பிட்டிகல பிரதேசத்தில் நபர் ஒருவரின் கழுத்தை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தல்கஸ்வல பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவர் என்று தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் மின்சாரம் தாக்கி கணவனும் மனைவியும் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன் – மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐயனார் கோவில் பகுதியிலுள்ள வீடொன்றில் ஆலய உற்சவத்தையொட்டி நேற்று வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் அலங்கார வேலைகளில் ஈடுபட்டிருந்தபோதே இருவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது.

இன்று காலை உறவினர்கள் அவ்வீட்டுக்குச் சென்றபோதே சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

இது தொடர்பாக மேலதிக விசாரனையினை பொலிஸசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் பதட்டம்: இரு குழந்தைகளை காப்பாற்றிய ஊடகவியலாளர்கள்!!

 
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடமாடும் சேவை ஒன்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று(08.04.2017) நடாத்தப்பட்டது.

வவுனியாவில் மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலுடன், வவுனியா பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘நில மெகவர’ ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடமாடும் சேவை நடாத்தப்பட்டது.

இந் நடமாடும் சேவையில் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களைச்சேர்ந்த பொது மக்கள் அடையாள அட்டை, பிறப்பு, விவாக மற்றும் மரணச் சான்றிதழ்கள், சாரதி அனுமதி பத்திரம், ஒய்வூதிய திணைக்கள சேவைகள், வீட்டுக் கடன் பெற்றுக்கொள்ளல், முதியோர் அட்டைகள் பெற்றுக்கொள்ளல், காணி உரிமம், வேலைவாய்ப்பு, சமுர்த்தி ஓய்வூதிய கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்ள வந்திருந்தனர்.

நடமாடும் சேவை நடைபெறும் இடத்தில் பெருமளவான மக்கள் நீண்ட வரிசையில் முண்டியடித்தபடி கொழுத்தும் வெய்யிலில் தங்கள் தேவைகளை நிறைவேற்ற காத்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

அத்துடன் வயதானவர்கள் சிறுவர்கள் மக்கள் நெரிசலில் தத்தளித்த நிலையில் கூட்டத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகளை ஊடகவியலாளர்கள் காப்பாற்றி அவர்களின் பெற்றோர்களிடத்தில் ஒப்படைத்த சம்பவம் இடம்பெற்றது.

அத்துடன் நடமாடும் சேவை நடைபெற்ற இடத்தில் மக்களை சரியாக ஒழுங்குபடுத்தல் இல்லாத நிலையில் அதிகாரிகளால் மக்களின் ஆவணங்களை சரிபார்க்க முடியாத நிலை காணப்பட்டதுடன், அதிகாரிகள் சேவை வழங்கிய மேசை கதிரை போன்ற தளபாடங்கள் தள்ளி விழுத்தப்பட்ட நிலையில் பொலிசாரால் ஆவணங்கள் அள்ளிச் செல்லப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.

மக்கள் முண்டியடித்ததன் காரணமாக பாடசாலையின் பிரதான வாயில் இழுத்து மூடப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி சாரதா கர்ணனிடம் விளக்கம் கேட்ட நிலையில் மக்களுக்கான அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது. மக்கள் முண்டியடிப்பதன் காரணமாக நிலைமையை சமாளிக்க முடியாதுள்ளது என தெரிவித்தார்.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் வானுயர்ந்த சப்பரம்!!(படங்கள்,வீடியோ )

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பதின்மூன்றாம் நாளாகிய  நேற்று 07.04.2017 வெள்ளிகிழமை  சப்பர திருவிழா இடம் பெற்றது. மாலை நான்கரை மணியளவில் யாக பூசையும் ஐந்தரை மணிக்கு தம்ப பூசையும் அதனை தொடர்ந்து வீ.கரன் குழுவினரின் சிறப்பு தவில் நாதஸ்வர கச்சேரி இடம்பெற்றது.

தொடர்ந்து மாலை எட்டுமணியளவில் வசந்த் மண்டப பூசை இடம்பெற்று ஒன்பது மணியளவில் எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் முதலியோர் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அதுவும் வவுனியாவில் மிக உயர்ந்த வானுயர்ந்த சப்பரத்தில் திரு வீதி உலா வந்தனர்.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் 12ஆம் நாள் உற்சவம் வேட்டை திருவிழா !!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பன்னிரெண்டாம்   நாளான நேற்று   06.04.2017 வியாழகிழமை  அன்று  வேட்டை திருவிழா உற்சவம் இடம்பெற்றது.

உற்சவதினத்தன்று  மாலை ஐந்தரை  மணிக்கு ஆலயத்தில் இருந்து குதிரை வாகனத்தோடு ஊர்வலமாக புறப்பட்ட அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் வெளிகுளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் மாலை ஐந்தரை மணியளவில் வேட்டையை முடித்துக்கொண்டு  மீண்டும்  வெற்றி களிப்போடு கொரவபொத்தான  வீதி ஊடாக  ஊர் முழுதும் பூரண கும்பங்கள்  வைக்கப்பட்டு எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் வரவேற்கப்பட்டார்.

பக்த அடியார்களின்  வேண்டுதல்கள் காணிக்கைகளை பெற்று கொண்டும் அடியார்களுக்கு அருள் பாலித்த வண்ணமும் ஆலயத்தை மாலை ஏழு மணியளவில் வந்தடைந்த பின்னர் பிராயசித்த அபிசேகம் இடம் பெற்று வழமைபோல் தம்பபூசை  அசந்த மண்டப பூசையுடன் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் உள் வீதி வெளிவீதி வலம் வந்து இரவு பத்து மணியளவில் திருவிழா நிறைவுபெற்றது .

வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

 
மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக வவுனியா வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இன்று (07.04.2017) காலை 8 மணி தொடக்கம் நாளை காலை 8 மணி வரை 24 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு முழுமையாக இயங்கவில்லை.

வவுனியாவில் சமுர்த்தி அபிமானி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்!!

 
வவுனியாவில் சமுர்த்தி அபிமானி நிகழ்ச்சித்திட்டம் நேற்று (06.04.2017) மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள இந் நிகழ்வில் வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளுர் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பெருட்களை காட்சிப்படுத்தியிருந்ததுடன் விற்பனையிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிகழ்வினை வவுனியா மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளரின் அழைப்பில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார ஆரம்பித்து வைத்திருந்தார்.

உலாவரும் அந்தரங்க புகைப்படங்கள் : பேஸ்புக் எடுத்த அதிரடி முடிவு!!

பிறரின் அந்தரங்க புகைப்படங்களை மீள் பதிவு (Re Post) செய்வதையும், பகிர்வதையும் தடுக்க பெண்கள் பாதுகாப்பு இயக்கங்களோடு இணைந்து சில முயற்சிகளை முன்னெடுத்துள்ளது ஃபேஸ்புக்.

ஒரு ஆணும் பெண்ணும் சந்தர்ப்ப சூழல் காரணமாக உடலளவில் நெருக்கமாக இருக்கிறார்கள்.அதை இருவரில் ஒருவர் படம் பிடித்து வைத்திருக்கிறார். இதை அவர்களில் ஒருவரால் சில காரணங்களால் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படுகிறது. இது வெகு விரைவில் பகிரப்பட்டு வைரகாலிறது.

இதனால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களே. இதுபோன்ற பழி வாங்கும் நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சியாய் பேஸ்புக் முதற்படியை எடுத்து வைத்துள்ளது.

இதுபோன்ற பிறரின் அந்தரங்கக் காட்சிகளை மீள் பதிவு மற்றும் பகிர்வதை தடுக்க உலகம் முழுக்க இயங்கும் 150 பெண்கள் பாதுகாப்பு இயக்கங்களோடு இணைந்து சில முயற்சிகளை முன்னெடுத்துள்ளது பேஸ்புக்.

ஒருவருக்குத் தெரியாமல் அவர் குறித்த ஆபாசப் புகைப்படம் பதிவேற்றப்பட்டால், அதை அதில் இடம்பெற்றிருக்கும் நபரோ, வேறொருவரோ பேஸ்புக்கின் “ரிப்போர்ட் டூல்” (Report Tool) மூலம் புகார் அளிக்கலாம்.

இந்தப் புகார்களின் அடிப்படையில் அந்தப் படத்தையோ, காட்சியையோ பரிசீலிக்க “தனி நிபுணர் குழு” ஒன்றை அமைத்துள்ளது பேஸ்புக்.

அவர்கள் அதைப் பரிசீலித்து, அது தவறாக இருப்பின், “புகைப்பட கண்டறிதல் மென்பொருளை” (Photo Recognition Software) கொண்டு அது மீள் பதிவு செய்யப்படுவது மற்றும் பகிரப்படுவதைத் தடுக்கிறார்கள்.

மேலும், எந்த பேஸ்புக் கணக்கிலிருந்து அது பதிவேற்றப்படுகிறதோ, அந்தக் கணக்கு உடனடியாக முடக்கப்படும் என்றும் பேஸ்புக் அறிவித்துள்ளது. இதன் மூலம், பேஸ்புக்கில் பெண்களுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பு இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

அதே சமயம், இது முழுமையான பாதுகாப்பும் அல்ல. பதிவேற்றப்படும் படம் பேஸ்புக் அல்லாத வேறு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டால் அதைத் தடுக்கும் வாய்ப்பு மிக குறைவே.

இருப்பினும், பெண்களுக்கு எதிரான “இணையப் பாலியல் வன்முறைகளை” தடுக்கும் முதற்படியாக இது அமையவுள்ளது. பேஸ்புக்கில் மட்டுமல்லாது மெஸெஞ்சர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகதளங்களிலும் இதை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி உங்கள் உடல் தோலில் டிவி பார்க்கலாம் : இப்படித் தான் சாத்தியம்!!

 
மின்னணு தோல்களை உடலில் அணிவதன் மூலம் தொலைகாட்சி உட்பட பொழுதுபோக்கு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என ஜப்பான விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்த யுகத்தில் எல்லாமே சாத்தியம் என்றாகி விட்டது. இதை மேலும் உறுதிபடுத்தும் விதமாக ஜப்பான் விஞ்ஞானிகள் புது விடயத்தை கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்த மின்னணு தோல் உலகின் மிக மெல்லிய, நெகிழ்வான மின்கடத்தியாக கருதப்படுகிறது. இதை இரண்டாவது தோலைப்போல உடலில் அணியலாம். இது மனித தோல் செல்லை விட பத்து மடங்கு மெல்லிசானது

இதை பயன்படுத்தி மனிதர்களை உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கலாம். தொலைக்காட்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு நடவடிக்கைகள் வரை இந்த தோலில் காணலாம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

விரைவில் இது நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

பெற்ற குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை : நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!!

 
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிஞ்சு குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்து மரணத்துக்கு காரணமான தந்தைக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரிஸ்பேன் நகரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு மனைவியை பிரிந்த பின்னர் தமது 3 வயது குழந்தை Kyhesha-Lee Joughin உடன் வாழ்ந்து வந்தார் 32 வயதான Matthew Lee Williamson.

மனைவி மீதிருந்த கோபம், விரக்தி காரணமாக சிறுமி Kyhesha மீது எப்போதும் வெறுப்பையே காட்டி வந்துள்ளார் வில்லியம்சன். இது ஒரு கட்டத்தில் பாலியல் தாக்குதலாக மாறியுள்ளது.

பல நாட்களில் சிறுமி Kyhesha வை படுக்கையோடு இணைத்து கட்டி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் தந்தை வில்லியம்சன். சமயங்களில் குழந்தை Kyhesha தொடர்ந்து 17 மணி நேரம் வரை படுக்கையில் கட்டுண்ட நிலையில் அவஸ்தைக்கு உள்ளாகியுள்ளது.

பல முறை பெற்ற குழந்தையின் முன்னர் நிர்வாணமாகவே இருந்துள்ளதாகவும், சிறுமியை உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதை வாடிக்கையாகவே செய்து வந்துள்ளார்.

மட்டுமின்றி கடந்த 2013 ஆம் ஆண்டு சிறுமி Kyhesha வின் அடிவயிற்றில் வில்லியம்சன் கடுமையாக தாக்கியதில் அவருக்கு சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறியுள்ளது. மேலும் பச்சை நிறத்தில் தொடர்ந்து வாந்தி எடுக்கவும் செய்துள்ளார்.

இருப்பினும் வில்லியம்சன் சிறுமியை மருத்துவமனைக்கு இட்டுச் செல்ல மறுத்துள்ளதுடன் துஷ்பிரயோகத்தை நிறுத்தவில்லை என இறுதிகட்ட தீர்ப்பின்போது நீதிபதி தெரிவித்துள்ளார்.

மருத்துவ சிக்கிச்சையால் குணப்படுத்த முடியும் என்ற போதும் வில்லியம்சன் தமது மகளை காப்பாற்றாமல் கைநெகிழ்ந்துள்ளார்.

நீதிமன்றத்தில் அனைத்து குற்றங்களையும் மறுத்த வில்லியம்சனை கடுமையாக கண்டித்த நீதிபதி ரோசலின், வில்லியம்சன் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்ததுடன் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

வில்லியம்சனுக்கு எதிரான விசாரணையின்போது அவரிடம் இருந்து பிரிந்து சென்ற மனைவி ஜாகின், இந்த விவகாரத்தில் தம்மையே பழித்தார். தமது முடிவு தான் சிறுமி Kyhesha வை பாழ்படுத்தியது என கதறியுள்ளார்.

சிறுமி வில்லியம்சனை உயிருக்கு உயிராக நேசித்த காரணத்தால் மட்டுமே வாய்ப்பு இருந்தும் தாம் சிறுமியை மீட்டுச் செல்லவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளது நீதிமன்றத்தில் கூடியிருந்தவர்களை சோகத்தில் தள்ளியது.

பசியின்மையால் பாதிக்கப்பட்ட பிரபல மொடல் : பெட்டிக்குள் அடைத்து கடலில் வீசிய தாயார்!!

 
இத்தாலியில் பசியின்மையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பிரபல மொடல் அழகியின் உடலை, பெட்டிக்குள் அடைத்து அவரது தாயார் கடலில் தூக்கி வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் ரோம் நகரில் வசித்து வந்தவர் 27 வயதான Katerina Laktionova. பிரபல மொடலாக திகழ்ந்த அவர், அந்த துறையினருக்கே அதிகமாக காணப்படும் பசியின்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதனால் நீண்ட நாட்களாக உணவு உண்ணாமல் இருந்த அவர், உடல்நலம் குன்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் செய்வதறியாது தவித்துள்ளார்.

தனது மகளின் உடலுடன் நீண்ட நாட்கள் தனி அறையில் வசித்துள்ளார். பின்னர் ஒரு பெட்டிக்குள் மகளின் உடலை அடைத்து, அதனை கடலில் வீசியுள்ளார்.

பின்னர் அவர் தனது சொந்த நாடான ரஷ்யாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர்களிடம் யார் கேட்டாலும், தான் ரஷ்யாவில் நீண்ட நாட்களாக இருந்ததாக பொய் கூறுமாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மொடல் அழகியின் உடலை, இத்தாலியில் உள்ள ரிமினி நகரின் கடற்பகுதியில் மீனவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் குறித்த நபர் பிரபல மொடல் எனவும் இறக்கும் போது அவரது உடல் எடை வெறும் 35 கிலோ எனவும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கேதரினாவின் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கேதரினாவின் தாயார் குறித்து விசாரித்தனர்.

அதில் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் கிடைக்கவே, தாயாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் மொடல் அழகி உயிரிழந்த உண்மை நிலவரம் தெரியவந்ததை அடுத்து, மேற்கொண்டு இரு நாடுகளும் இணைந்து முடிவெடுக்க வேண்டும் என சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.