வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத்திறப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் நீடூர் (09.04.2017) காலை 10 மணியளவில் முன்பள்ளி அதிபர் மீரா குணசீலன் தலமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக தர்மலிங்கம் சித்தார்த்தன் ( பாராளுமன்ற உறுப்பினர்.யாழ் மாவட்டம்) , சிறப்பு விருந்தினர்களாக க.சந்திரகுலசிங்கம் மோகன் ( முன்னான் நகரசபை உப தலைவர்) , ஜீ.ரி.லிங்கநாதன் ( வடமாகாண சபை உறுப்பினர்), தமிழ்மணி அகளங்கன் ( தலைவர் – கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்) , அருள்வேல்நாயகி ( முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர்) , யோகநாதன் ( கிராம சேவையாளர் – தாண்டிக்குளம்) , விக்னபவானந்தன் ( செயலாளர், சிவன் கோவில்) , கௌரவ விருந்தினர்களாக கஜேந்திர சர்மா (ஆலய குரு, வேப்பங்குளம்), ஜெகதீஸ்வரன் ( நிர்வாக உறுப்பினர் – ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனணி) , யோகன் ( தேசிய அமைப்பாளர்) , ஸ்ரீகேசவன் ( இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்) , பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தர்மலிங்கம் சித்தார்த்தன் கட்டடத்தினை திறந்து வைத்ததுடன் மாணவர்களின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. இதன் போது 2016ம் ஆண்டு புலமைப்பரிட்சை, 2015ம் ஆண்டு க.போ.த சாதாரண பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் ஆசிரியர் கௌரவிப்பு, ஆற்றலரசி மாணவர்களுக்காக கௌரவிப்பு, கண்ணன் நடனம், வினோதஉடை என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டப் பகுதியில் அரச உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட காணிகளில் இதுவரை வீடு கட்டாதவர்களின் காணிகள் காணி ஆணையாளர் அறிவித்தபடி பறிமுதல் செய்யப்படும் என்றும் இது இறுதி எச்சரிக்கை என தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா கிளை முகாமையாளர் வி.எம்.வி.குருஸ் தெரிவித்துள்ளார்.
2011ம் ஆண்டு காணிகள் அற்ற அரச ஊழியர்கள் 700 பேருக்கு காணிகள் வழங்கப்பட்டு இதுவரை பல அரசஊழியர்கள் இன்னமும் காணிகளில் வீடுகட்டவில்லை. இந்நிலையில் அண்மையில் அரச ஊழியர் வீட்டுதிட்டத்தில் உள்ளவர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டப் பகுதியில் காணிகள் கிடைக்கப்பெற்ற சிற்றூழியர்களுக்கு மானியம் வழங்குவது தொடர்பான அவசர விசேட கலந்துரையாடல் வீடமைப்பு அதிகார சபையினருக்கும் சிற்றூழியர்களுக்குமிடையில் நேற்று (09.04 ஓமந்தை ஸ்ரீநாகபூசனி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
இதில் 190 சிற்றூழியர்களின்காணிகள் உள்ளன. அவர்கள் வீடு கட்டுவதற்கு வசதியில்லாமை தொடர்பாக நாம் அக்கறை கொண்டோம். இவ்விடயத்தை எமது தலைமைக் காரியாலத்திற்கு தெளிவுபடுத்தி நாட்டின் பிரதமரின் விசேட வீடமைப்பு செயற்றிட்டத்தின் கீழ் 5 இலட்சம் மானியம் வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 11ம் திகதி 190 காணிகளில் வீடுகட்ட அடிக்கல் நாட்டப்படும். எதிர்வரும் ஆவணி 15ம் திகதி முமுமையாக வீடுகட்டி முடிக்க வேண்டும். இவ் வீட்டுத்திட்டத்திற்கான மாதிரி வரைபடம் எமது அலுவலகத்தில் நாளைமுதல் பெற்றுக்கொள்ளமுடியும்.. (செவ்வாய்) .
இனியும் வீடுகட்ட முன்வராதவர்களின் காணிகள் இரத்தாகிவிடும். இந்த 190 காணிகள் போக மிகுதி காணிகளில் வீடு கட்டாத அரச ஊழியர்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்க எமது வீடமைப்பு அதிகாரசபை உத்தேசித்து வருகின்றனர்.
எனவே அவர்கள் தமது காணிகளை துப்பரவு செய்யும்படியும் காணிகள் தேவையில்லையெனில் எமக்கு தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொள்கின்றேன்.
இதுவரை ஓமந்தை அரசஊழியர் வீட்டுத்திட்டத்தில் காணிகளைப் பெற்றுக்கொண்ட ஓமந்தை அரசஊழியர்கள் வீட்டுத்திட்ட பகுதியில் காணிகளை பெற்ற அரசஊழியர்கள் அரச அதிகாரிகள் உட்பட பலஅரச உத்தியோகத்தர்கள் 4 ஆண்டுகளாயும் வீடுகட்ட முன்வராமையினால் அவர்களின் காணிகளை இரத்து செய்து வேறு காணிகள் அற்ற அரச உத்தியோகத்தருக்கு காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்குமாகாண காணி ஆணையாளர் எமக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். எனவே விரைவில் அந்நடிவடிக்கை முன்னெடுப்பதற்கு முன் காணிகளில் வீடுகட்டவேண்டும் என்பது எனது விருப்பாகும்.
இந்த நாட்டில் எங்கும் இல்லாத முன்மாதிரிவீடமைப்பு செயல்பாடு ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்திலே உள்ளது. உங்களுக்கான வீதி உட்பட அணைத்து அடிப்படைவசதிகளையும் நாம் செய்து தருவோம்.
நீங்கள் வீட்டை கட்டவேண்டும். உங்கள் காணிகளை பற்றைகளாக வைத்திருப்பது அநாகரீகமானது. இதில் பல உயர் அதிகாரிகளும் அடங்குகின்றனர்.
இந்த வீடமைப்புத் திட்டத்தை நாம் சரிவர செய்யாவிட்டால் நான் உட்பட வீடமைப்பு அதிகாரசபையில் உள்ள அணைத்து உத்தியோகத்தர்களும் நெருக்கடிகளை சந்திப்போம். நான் இராஜிநாமா செய்வேன். எனவே உங்களுக்கு கிடைத்த அரிய வாய்பை தவறவிடாதீர்கள்.
இது எமக்கு கிடைத்த அரிய சர்ந்தர்ப்பம். மீறினால் தயது தாட்சணியம் இன்றி காணி ஆணையாளர் வழங்கிய அறிவித்தலின் பிரகாரம் காணிகள் பறிமுதல் செய்யப்பட்டு காணிகள் வேண்டுமென்று காத்திருக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு உரிய நிபந்தனையடிப்படையில் உடனடியாக காணிகள் வழங்கப்படும் என்றார்.
வன்னிப் பிராந்திய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நேற்று (09.04.2017) காலை 7.30 மணியளவில் வவுனியா பிரதான பொலிஸ் நிலைய வளாகத்தில் வன்னி பிராந்தியத்தில் பணியாற்றும் பொலிசாரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 25பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் யாழ்ப்பாணம் சுற்றுலாவிற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
வன்னி பிராந்தியத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தரம் 5 மாணவர்களை இரணைமடு, கிளிநொச்சி, ஆனையிறவு, நல்லூர், நாகவிகாரை, கோட்டை, போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பார்வையிடுவதற்கு பெற்றோருடன் அழைத்துச் செல்லும் நிகழ்வு இடம்பெற்றது.
சிறப்பு பூஜை வழிபாடுகளின் பின்னர் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் சுற்றுலாவிற்கு இரண்டு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிகழ்வில் வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிசிரகுமார, வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
காலையில் பக்தர்கள் வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து பாற்குட பவனியாக ஹொரவப்பொத்தான வீதி ஊடாக ஆலயத்தை வந்தடைந்தனர்.
பிற்பகல் அபிசேகம் வீதி உலா என்பன இடம்பெற்று மாலை தீமிதிப்பு உற்சவம் இடம் பெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதிக்கும் உற்சவத்தில் பங்கு பற்றியிருந்தனர்.
அம்பாள் வசந்த மண்டப பூஜையின் பின் உள்வீதி வெளிவீதி சிம்ம வாகனத்தில் வலம்வந்து ஆலயத்துக்கு முன்புறம் தீமிதிப்புக்ககாக தயார் செய்யபட்ட பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாட்சி வழங்க தயாரான நிலையில் அம்பாளின் பக்தர்கள் கடும் நெருப்பு கொண்ட குழியை தமது நேர்த்திகளை நிறைவேற்ற அருள்புரியுமாறு அம்பாளை வேண்டிபாடி தீமிதித்து சென்றனர் .
வருடாந்தம் நடைபெறும் இந்நிகழ்வில் காப்பு கட்டி விரதமிருந்த அடியார்களே தீமிதிப்புக்கு அனுமதி வழங்கபடுவது வழமையாகும்.
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை(08/04//2017) இடம்பெற்றது.அதிகாலை ஐந்து மணிக்கு அபிசேகங்கள்ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை ஆறு நாற்பந்தைந்து மணிக்கு தம்ப பூஜை இடம்பெற்றது.
தொடர்ந்து கலை எட்டு மணிக்கு வசந்த மண்டபூஜை ஆரம்பமாகி ஒன்பதுமணிளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்விநாயகர் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் உள்வீதி வலம் வந்து ஒன்பது மணியளவில் தேரில் ஆரோகணிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா மாவட்டத்திலேயே மிக பெரிய சிவன்கோவிலான வவுனியா கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர்பவனி காலை ஒன்பதரை மணிக்கு ஆரம்பமாகி இருப்புக்கு கலை பதினோரு மணியளவில் வந்து சேர்ந்தது.
மேற்படி உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். தேர் இருப்பிடத்தை அடைந்தபின் அர்ச்சனைகள் இடம்பெற்று பிற்பகல் ஒன்றரை மணியளவில் பச்சை சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது .தொடர்ந்து மூன்றுமணியளவில் பிராயசித்த அபிசேகமும் மாலை ஐந்து மணிக்கு வசந்தமண்டப பூஜையும் தேரடி பார்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று (09.04.2017) 45வது நாளாக தொடர்ந்து வருகின்றது.
எங்களது கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரில் ஒருவர் நேரில் வந்து முடிவு தெரிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பொது அமைப்புக்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவை தாங்கள் வேண்டி நிற்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா சூசைப்பிள்ளையார்குள சந்தியில் அமைந்துள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவுச்சிலையடியில் கம்பன் நினைவுதினம் இன்று (09.04.2017) காலை 8.30 மணியளவில் தமிழ் மணி அகளங்கள் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் ஜீ.ரிலிங்கநாதன், புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழ்விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), ஒய்வு பெற்ற பிரதேச செயலாளர் ஜயம்பிள்ளை , வர்த்தர்களாகிய விக்னா, மணியம், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவுச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன் தமிழ்மணி அகளங்கள் கம்பனின் வரலாற்றினை சுருக்கமாக விளக்கினார்.
வவுனியா நகரசபையினரால் நிர்மாணிக்கப்ட்ட இவ்வுருவச் சிலையை அப்போது வவுனியா நகரசபை தலைவராக இருந்த ஜீ.ரி லிங்கநாதன் அவர்களின் அழைப்பின் பேரில் வடக்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் க.சபாபதிப்பிள்ளை அவர்களினால் 1998.04.03ம் திகதி திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இன்று (09.04.2017) மாலை 6 மணியளவில் திடீரென பெய்த கடுங்காற்றுடன் கூடிய மழை காரணமாக வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தில் இரண்டு வீடுகள் முற்றாக சேதத்திற்குள்ளாகியுள்ளன.
தெற்கிலுப்பைக்குளத்தைச் சேர்ந்த ராமு சாந்தகுமார் மற்றும் க.சிவரசா ஆகியோரின் வீடுகளே அனர்த்தத்தின் காரணமாக சேதமடைந்துள்ளன.
இடியுடன் கூடிய கடுங்காற்றின் காரணமாக கூரைத்தகடுகள் வீசப்பட்ட நிலையில் வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் வீட்டிலுள்ள மிஞ்சிய பொருட்களுடன் இரண்டு குடும்பத்தினரும் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தெரிவிக்கையில்..
திடீரென வீட்டின் கூரைகள் காற்றில் பறந்து சென்றதால் வீடு உடைந்து உள்ளே விழுந்துவிட்ட நிலையில் வெளியிலும் செல்வதற்குப் பயமாக இருந்தது. குழந்தைகள் அலறியபடி இருந்தனர். உதவி கோரி கூக்குரலிட்டபோதும் கடும் மழை காரணமாக சத்தம் எவருக்கு கேட்கவில்லை.
நான் எனது குழந்தைகளுடன் வீட்டின் கதவுக்குப் பின்னால் ஒழிந்து பாதுகாப்புத்தேடி உயிர் தப்பியுள்ளேன். எனக்கு தலையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக தேவைப்படும் நிதியை பெற்றுக் கொள்வதற்காக போத்தல்களை சேகரிக்கும் இளைஞர்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
பாரம் தூக்கும் சர்வதேச போட்டியில் கலந்துக் கொள்ளும் பெண் போட்டியாளர் ஒருவருக்கான நிதியை பெற்றுக்கொள்ளவே போத்தல்களை சேகரித்து விற்பனை நடவடிக்கையில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வெலிகந்த பிரதேசத்தில் சக நண்பிக்காக இவ்வாறு இளைஞர் குழுவொன்று தீவிரமாக செயற்பட்டு வருகிறது.
தேசிய பாடசாலை பாரம் தூக்கும் போட்டியில் தொடர்ந்து 3 முறை தங்கப்பதக்கம், வென்ற ஐ.பீ.லக்ஷிகா மதுமாலி உடற்பயிற்சி உபகரணங்களை கொண்டு பாரம் தூக்குவதற்கான பயற்சிகளை பெற்றுள்ளார்.
மலேசியாவில் இடம்பெற்ற பொதுநலவாய இளைஞர் பாரம் தூக்கும் போட்டியில் அவர் வெண்கல பதக்கம் ஒன்றை வென்றுள்ளார்.
எப்படியிருப்பினும் பொருளாதார பிரச்சினை காரணமாக எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் சில சர்வதேச போட்டிகளில் போட்டியிடும் சந்தர்ப்பங்களுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அவதானம் செலுத்திய செவனபிட்டிய இளைஞர்கள் இணைந்து கடந்த ஞாயிற்று கிழமை 5000 போத்தல்களை சேகரித்து விற்பனை செய்து அந்த பணத்தை குறித்த போட்டியாளருக்கு வழங்கியுள்ளனர்.
டெங்கு ஒழிப்பு திட்டத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எதர்வரும் காலங்களிலும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு அவசியமான பணத்தை தேடுவற்கு தாம் தயாராக இருப்பதாக குறித்த இளைஞர் குழுவினர் வாக்குறுதியளித்துள்ளனர்.
2020 ஆம் ஒலிம்பிக் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்துவதே தனது இலக்கு என ஐ.பீ.லக்ஷிகா இதன் போது தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் பெண் அறிவிப்பாளரின் செய்தி வாசிப்பு முறை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சத்தீஸ்கர் மாநில தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர், தனது கணவர் வீதி விபத்தில் உயிரிழந்ததைப் பிரேக்கிங் செய்தியாக வாசித்துள்ளார்.
28 வயதான சுப்ரீத் கவுர் என்ற பெண்ணொருவர் இவ்வாறு செய்தி வாசித்தது பலரின் மனங்களை உருகச் செய்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
சுப்ரீத் கவுர் வழமை போன்று நேற்று செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது நிருபர் ஒருவர் தொலைபேசியில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும், அதில் பயணம் செய்த ஐந்து பேரில் மூன்று பேர் உயிரிழந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனை செய்தி வாசித்துக் கொண்டிருந்தபோது சுப்ரீத் கவுர் அந்த செய்தியையும் வாசித்தார். ஆனால் அந்த வாகனத்தில் சுப்ரீத் கவுரின் கணவர் ஹர்ஷாத் கவடேயும் பயணித்தார் என்ற செய்தியையும் அவர் அறிந்திருந்தார்.
எனினும் அதனை செய்தி வாசிக்கும் போது காட்டிக் கொள்ளாமல் செய்திநேரம் முடிந்ததும் ஸ்டுடியோவை விட்டு வெளியில் வந்து கதறி அழுதுள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “விபத்துக்குள்ளானது அவர் கணவரின் வாகனம்தான் என்று அவர் உணர்ந்து கொண்டார்.
அந்த செய்தியை வாசித்துவிட்டு வெளியே வந்த உடனே அவரது உறவினர்களிடம் இருந்து அழைப்புகள் வரத் தொடங்கியது.
கவுர் அந்தச் செய்தியை வாசிக்கும்போதே அவரது கணவர் இறந்துவிட்டார் என எங்களுக்குத் தெரியும். ஆனால் அவரிடம் சொல்லவில்லை. எங்களுக்கு அந்தளவிற்கு தைரியமில்லை” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுப்பதால் இலங்கையர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் இலங்கைக்கு சூரியன் உச்சம் கொடுப்பதோடு அதிக வெப்பமான காலநிலை காணப்படுகின்றது.
அதற்கமைய அதிகப்படியான சூரிய ஒளியால் மக்களுக்கு கணக்களில் பிரச்சினை ஏற்படும் ஆபத்து காணப்படுவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் சூரிய ஒளிபடும் இடங்களில் அதிகம் நடமாடுவதனை தவிர்க்குமாறு இலங்கை கண் வைத்திய சங்கத்தின் செயலாளர் தில்ருக்ஷி ஆரியசிங்க மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் ஒரு காரும், பேருந்தும் விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
பேருந்து பள்ளத்தில் விழுந்த போது, அதில் இருந்த பயணிகளுக்கு பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை எனவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வந்துள்ளன.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் பள்ளம் விழுந்த பகுதியில் போக்குவரத்தை முடக்கியுள்ளனர்.
மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
காவல் துறை இணை ஆணையர் தலைமையில் விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை மெற்கொள்ளப்பட்டு வருகிறது.
மெலும் விபத்தில் சிக்கிய மாநகராட்சி பேருந்து ஓட்டுநர் கூறுகையில்,’நின்று கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டதால், பயணிகள் உடனடியாக இறக்கி விடபட்டனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கபட்டுள்ளது’ என கூறினார்.
தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாட இலங்கை மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கொழும்பில் பல பாகங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுகின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தை இலக்கு வைத்து கொள்ளைக்கார கும்பல் ஒன்று தீவிரமாக செயற்பட்டு வருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
புதுவருடத்தின் போது கொழும்பிற்கு வரும் பயணிகளின் பணம், தங்க நகைகள் போன்றவற்றை கொள்ளையடிப்பதற்காக சிலாபம், புத்தளம் பகுதியில் இருந்து 20 இளைஞர்கள் அடங்கிய குழுவொன்று வருகைத்தந்துள்ளதாகவும், அவர்களிடம் பாதுகாப்பாக இருக்குமாறும் பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டின் சேரிப்புறங்களில் வாழும் இளைஞர்கள் குழுவொன்றே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பில் வாழும் வசதியான பெண்கள் மற்றும் ஆடை நிறுவனங்களின் சேவை செய்யும் பெண்கள், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடத்தில் அதிக கொள்ளையிடும் நடவடிக்கைகளில் ஈடுப்படுவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சில இளம் பெண்கள் சிறிய குழந்தைகளை தூக்கிக் கொண்டு பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் ஈடுப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆண்களை ஏமாற்றும் சில பெண்கள் அவர்களை யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று அவர்களின் பெறுமதியான பொருட்களை கொள்ளையடிப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த குழு தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவு உட்பட கொழும்பில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் கடுமையான அவதானத்தை செலுத்தியுள்ளது.
இந்தநிலையில், பொலிஸ் கான்ஸ்டபில் மற்றும் அரசாங்க ஊழியர் ஒருவரின் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் இந்த குழுவை சேர்ந்த இருவர் பொரளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட மின்சார கார் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.‘‘கெப்லா“ என அழைக்கப்படும் மின்சார காரினை கபில டி சில்வா என்ற என்பவர் தயாரித்திருந்தார்.
இந்த மோட்டார் வாகனம் 8 இலட்சம் ரூபாவுக்கு சந்தையில் விற்பனை செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மணிக்கு 60 மீற்றர் வேகத்தில் 4 பேர் இலகுவாக பயணிக்க கூடிய இந்த மோட்டார் வாகனத்தை ஒரு முறை சார்ஜ் செய்வதன் ஊடாக 100 மீற்றர் பயணிக்க முடியும்.
இந்த மோட்டார் பட்டரியை மீண்டும் வீட்டு மின்சாரங்கள் ஊடாக சார்ஜ் செய்யும் வசதிகள் காணப்படுகின்றது.
60 வீத உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் வாகனத்திற்கு, மோட்டார் கன்வர்டர் மற்றும் பட்டரி மாத்திரமே வெளிநாட்டில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்ட்ட இந்த பொருட்களுக்கு அரசாங்கத்தின் சலுகை வழங்கப்படுமாயின் 6 இலட்சம் ரூபாவுக்கு காரினை விற்பனை செய்ய முடியும்.
4 அடி அகலம் மற்றும் 7 அடி நீளத்திலான இந்த மோட்டார் வாகனம் முதல் முறையாக 2013ஆம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச் சூழலுக்கு நெருக்கமான இந்த வாகனம் மிகவும் குறைந்த சத்தத்தையே வெளிப்படுத்துகின்ற நிலையில் ஒரு கிலோ மீற்றர் பயணிப்பதற்கு 3.50 ரூபாய் என் குறைந்த பணமே செலவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோட்டார் வாகனம் அடுத்த மாதமளவில் சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளன.
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை இலக்கு வைத்து புதிய வகை கார் அறிமுகம் செய்யவுள்ளதாக, அதன் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
பங்குச் சந்தையில் பலரை நஷ்டம் அடைந்து தான் பார்த்திருப்போம், ஆனால் அதே பங்குச் சந்தையில் இரண்டு நாட்களில் 6100 கோடி ரூபாய் ஒருவர் சம்பாதித்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் நடத்தி வருபவர் ராதாகிருஷ்ணன், அண்மையில் இவரது பங்கு வெளியீடை வெளியிடப்பட்டது.
இந்த நிறுவனத்தில் வர்த்தக பணிகள் சிறப்பாக உள்ளது என்று கூறப்பட்டதால், நிறுவனத்தின் பங்குகள் எதிர்பார்த்ததைவிட இரண்டரை மடங்கு முதலீட்டாளர்கள் வாங்கினர்.
அதிக வரவேற்பு காரணமாக முதல் நாளில் ரூ.299 என்ற அடிப்படை விலைக்கு விற்பனையான இந்த நிறுவனத்தின் பங்கு இரண்டே நாட்களில் பங்கு ஒன்றின் விலை ரூ.750.50 ஆக உயர்ந்ததுள்ளது.
இதனால் இந்த நிறுவனத்தின் 82.2% பங்குகளை வைத்திருந்த ராதாகிருஷ்ணனின் குடும்பத்தின் சொத்து மதிப்பு 2 நாளிலேயே, ரூ.6100 கோடி மதிப்புடையதாக மாறியுள்ளது என்று கூறப்படுகிறது.
வவுனியா பத்தியார் மகிளங்குளத்தில் நேற்று (08.04.2017) மதியம் 12.15 மணியளவில் மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
பத்தினியார் மகிளங்குளத்தில் வசிக்கும் குறித்த வீட்டார் தங்களது வீட்டு வளாகத்தினை துப்பரவு செய்யும்போது மோட்டார் குண்டு ஒன்று இருப்பதை அவதானித்துள்ளனர்.
உடனடியாக வவுனியா வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மோட்டார் குண்டை பார்வையிட்டதுடன் வவுனியா நீதிமன்ற அனுமதியுடன் விஷேட அதிரடிப்படையினரை அழைத்து இன்று (09.04.2017) மோட்டார் குண்டை மீட்டுள்ளனர்.
இம் மோட்டார் குண்டு பாவனைக்கு உகந்தல்ல எனவும் இது இறுதி யுத்தத்தில் போது புதைக்கப்பட்டிருக்கலாம் என விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.