வவுனியா தோணிக்கல் ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் -2017(படங்கள்)

வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய  வருடாந்த மகோற்சவம் நேற்று 02.03.2017  வியாழக்கிழமை    கொடிஏற்றதுடன்  ஆரம்பமானது.

மேற்படி ஆலய த்தின்  மகோற்சவம் உற்சவகுரு  சிவஸ்ரீ சிதம்பர லக்சுமி திவாகர குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றது .

மேற்படி மகோற்சவத்தில்

10.03.2017 வியாழக்கிழமை  சப்பர திருவிழாவும்

11.03.2017 வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழாவும்

12.03.2017  சனிக்கிழமை  தீர்த்த திருவிழாவும்

13.03.2017 பூங்காவனமும் இடம்பெறுகிறது ….

 

விபத்தில் ஒருவர் படுகாயம்!!

பாண்டிருப்பு – நற்பட்டிமுனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மதியம் 2.15 மணியளவில் நற்பட்டிமுனை பிரதான எல்லை வீதியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் நேர்ந்துள்ளது.

அத்துடன், சிறிய ரக ஊர்தி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதினாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்தில் காயமடைந்தவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வடக்கில் சிங்கள மக்கள் ஆக்கிரமிப்பு : ப.சத்தியலிங்கம் குற்றச்சாட்டு!!

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வவுனியா வடக்கினுடைய வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவினுடைய அந்த காணிகளுக்குள்ளும் எல்லை புறத்திலே இருக்கின்ற வவுனியா பிரதேச செயலக பிரிவினுடைய அந்த ஆக்கிரமிக்கப்பட்டு,

குடியேற்றம் செய்யப்பட்ட காணிகளுக்குள் வாழுகின்ற சகோதர மொழி பேசுகின்றவர்களை இப்போது எங்களுடைய பிரதேச சபைகளுடன் இணைப்பதற்கானதொரு சதி முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா செட்டிக்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சித்த வைத்தியசாலை கட்டிடத்தொகுதியை நேற்று (02.03) திறந்து வைக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் எல்லை மீள் நிர்ணய சபைக்கு கூறியிருக்கின்றோம் ஒட்டு மொத்தமாக சகோதர மொழி பேசுகின்ற எங்களுடைய உறுப்பினர்களின் அனுமதியோடு அந்த மக்கள் கூட உதாரணத்திற்கு நெடுங்கேணியை எடுத்து பார்த்தீர்கள் என்று சொல்லி சொன்னால்,

4 வட்டாரங்கள் சிங்கள மொழி பேசுகின்ற தென்பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு குடியேற்றப்பட்ட அந்த 4 வட்டாரங்களிலும் வாழுகின்ற மக்களை வவுனியா வடக்கு பிரதேச சபையுடன் இணைத்திருக்கின்றார்கள்.

அந்த இரண்டு பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியேற்றப்பட்ட பிரதேசத்திற்கும், எங்களுடைய வவுனியா வடக்கு பிரதேசசபை பகுதிக்கும் இடையில் பாரியதொரு அடர்ந்த பெரியதொரு காடு ஒன்று இருக்கின்றது. இடையில் பாதையில்லை.

அவர்கள் பிரதேச செயலாளர் பிரிவு வெலியோயா என்று சொல்லி மணலாறு முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் வருகின்றது. அவர்கள் பிரதேச செயலாளர் பிரிவு முல்லைத்தீவு மாவட்டம் அவர்கள் வாக்கு போடுவது வவுனியா மாவட்டம் நிர்வாக ரீதியாக பல பிரச்சினைகள் வடமத்திய மாகாணம்.

இப்படியாக 3 மாகாணங்களுக்கு கீழ் வைத்துக்கொண்டு அரசியல் தேவைக்காக மாத்திரம் அவர்களை கொண்டு வந்து வவுனியா வடக்கு பிரதேச சபைக்குள் கொண்டுவந்து போட்டிருக்கிறார்கள். இதனை நாங்கள் வன்மையாக எதிர்ப்போம். நிச்சயமாக நாங்கள் அப்படி செய்ய முடியாது.

100வீதம் தமிழ் மக்கள் வாழுகின்ற இடத்தில் அதே எண்ணிக்கையான சிங்கள மக்களை கொண்டு வந்து குடியமர்த்திவிட்டு இப்போது நான்கு உறுப்பினர்கள் தானாகவே வரப்போகிறார்கள்.

வவுனியா வடக்கில் நாங்கள் அங்கு எல்லோருக்கும் சேர்ந்து அந்த மக்களே 44 வது பிரதேச சபையினுடைய அமர்வில் வவுனியா வடக்கில் கடிதத்தை கொடுத்திருகின்றார்கள்.

அந்த பிரதேச சபை உறுப்பினர்கள் எங்களுக்கு வவுனியா வடக்கோடு இணைந்திருப்பது பாரிய சிக்கல் நாங்கள் பிரதேச சபைக்கு இங்க வரவேண்டும். பிரதேச செயலகத்திற்கு வெலியேயா போக வேண்டும். ஏனையவைக்கு நாங்கள் அனுராதபுரம் போக வேண்டும்.

எங்களை வவுனியா தெற்கு பிரதேச சபையுடன் இணையுங்கள் என்று அவர்களாகவே கடிதம் எழுதி கொடுத்திருக்கின்றார்கள்.

நாங்களும் அதனையே செய்யுங்கள் என்று சொல்லி சொன்னோம். சிங்களம் பேசுகின்ற மாகாணசபை உறுப்பினர்களும் அதனையே செய்யுங்கள் என்றும் கூறினார்கள்.

நேற்று நான் அறிந்தேன் அந்த 4 வட்டாரங்கள் மாத்திரமல்ல என்னும் இரண்டு வட்டாரங்களை இங்கால் சேர்த்து இந்த எல்லை நிர்ணய சபை அப்படியொரு எல்லை மீள் நிர்ணயத்தை செய்திருப்பதாக அறிந்திருக்கின்றோம்.

இப்படி என்று சொன்னால் நாங்கள் போய் இதை யாரிடம் சொல்வது. எங்களுக்கு நீங்கள் தந்த நம்பிக்கை. எங்களுக்கு மாவட்ட செயலாளர் அலுவலக கூட்டத்தில் நீங்கள் ஒத்துகொண்ட விடயங்களை நீங்கள் செய்யவில்லை.

என்ன செய்வீர்கள் களவாக இழுத்தடிப்பு செய்து எங்களுடைய வவுனியா மாவட்டத்தையும் ஒரு திருகோணமலையாகவோ, ஒரு அம்பாறையாகவோ மாற்றுவதற்கு எங்களுடைய இன விகிதாசாரத்தை வவுனியா மாவட்டத்திற்கு மாற்றி தங்களுடைய நோக்கங்களை ஈடு செய்வதற்காக திரை மறைவிலே பலர் இயங்கி கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் தான் எங்களுக்கு கிடைத்திருக்கின்ற அற்ப சொற்ப இந்த அதிகாரங்களை கொண்ட இந்த மாகாண சபை கூட நாங்களே இயங்க விட முடியாமல் இயங்க முடியாமல் நாங்களே தடையாக இருப்பது மிகவும் மனவருத்தத்திற்குரிய ஒரு விடயமாக இருக்கின்றது.

ஆகவே யார் என்னத்தை சொன்னாலும் நாங்கள் எங்களுக்கு வாக்கு போட்ட இந்த மக்களுக்காகவும் இது எங்களுடைய பிரதேசம் என்ற உரிமையோடும் நாங்கள் இந்த பிரதேசத்திற்காக பலவற்றை இழந்திருக்கின்றோம் என்ற உண்மையையும் மனத்தில் கொண்டு மனச்சாட்சிக்கு நீதியாக உங்களால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் நீதியாக செயற்படுவோம் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ஆலியா பட்டை சுட்டுக் கொல்வோம் என மிரட்டல்!!

தனது மகள் ஆலியா பட் மற்றும் மனைவியை சுட்டுக் கொன்றுவிடுவதாக தனக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடப்பட்டதாக பிரபல பொலிவுட் இயக்குநர் மகேஷ் பட் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

50 இலட்சம் ரூபா பணத்தை லக்னோவில் உள்ள வங்கியில் வைப்பீடு செய்யாவிட்டால் அவர்களைக் கொலை செய்து விடுவதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டியதாக தனது முறைப்பாட்டில் மகேஷ் பட் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மகேஷ் பட் குடும்பத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பார்வைத்திறன் அற்றவர்களுக்கு உதவும் புதிய மொபைல் அப்ளிகேசன் அறிமுகம்!!

செல்போன்களின் உதவியால் இவ்வுலகை கைக்குள் கொண்டுவர முடியும் என்றால் அதில் செயலிகளின் பங்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும்.

அந்த அளவுக்கு செயலிகள் சந்தையில், நாளுக்கு நாள் புதிய செயலிகள் வந்த வண்ணமுள்ளன. அந்த வரிசையில் தற்போது பார்வையற்றவர்களுக்காக புதிய செயலியொன்று அறிமுகமாக‌யுள்ளது.

தொழில்நுட்ப சந்தையில தற்போது ஐபொலி (Aipoly) என்கிற நிறுவனம் பார்வையற்றவர்களுக்காக மொபைல் அப்ளிகேசன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அப்ளிகேஷனை பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுத்தால் அவர்கள் தங்களுக்கு எதிரே இருக்க கூடிய பொருள் என்ன என்பதையும், தாங்கள் அறிய விரும்பும் பொருளின் பெயரையும் மொபைல் சொல்ல கேட்ட முடியும்.

அதாவது இந்த ’ஐபொலி’ அப்ளிகேஷன் எதிரே இருக்கும் பொருளை ஸ்கேன் செய்து அதனுடைய பெயரை துல்லியமாக கொடுக்கும் ஆற்றலோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதோடு 7 மொழிகளில் பொருட்களின் பெயரை சொல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

தொழிற்நுட்ப கண்காட்சியில் அறிமுக்கப்படுத்தப்பட்டிருக்ககூடிய இந்த அப்ளிகேஷன் பார்வை குறைபாடு உடையவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் கட்டமா ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட செல்போனிற்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த அப்ளிகேசனானது விரைவில் அண்ட்ரொய்ட் இயங்குதளத்திற்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வட கொரிய அதிபரின் சகோதரர் கொலை : கைதான பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் சாத்தியம்!!

வட கொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜாங் நாம் கொலை வழக்கில் அவர் மீது விஷம் ஸ்பிரே செய்த இரு பெண்கள் மீது மலேசிய நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங் நாம். மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கடந்த மாதம் 13 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.

அவர் மீது வி.எக்ஸ் என்ற தடை செய்யப்பட்ட கொடிய இரசாயனத்தை ஸ்பிரே செய்த வியட்நாம் பெண் டோன் தி ஹாங், இந்தோனேஷியப் பெண் சிதி ஆயிஷா ஆகியோரை மலேசியப் பொலிஸார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் குறும்பு வீடியோ நிகழ்ச்சி என நினைத்து, நண்பர்கள் கொடுத்த இரசாயனத்தை கிம் ஜாங் நாம் மீது ஸ்பிரே செய்ததாகக் கூறினர்.

இவர்களை மலேசியப் பொலிஸார் நேற்று முன்தினம் (01.03) கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்த வழக்கில் மரண தண்டனை கிடைக்கும் என குறித்த பெண்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைகளைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ள பேஸ்புக்!!

பேஸ்புக் சமூக வலைத்தள வாடிக்கையாளர்கள் தற்கொலை செய்வதைத் தவிர்க்கும் பொருட்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பேஸ்புக் முடிவு செய்துள்ளது.

பேஸ்புக்கில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தற்கொலை தடுப்பு டூல்களை (suicide prevention tools) பேஸ்புக் போஸ்ட், லைவ்-ஸ்ட்ரீமிங் மற்றும் மெசெஞ்சர் சேவைகளில் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் 14 வயதுடைய குழந்தை ஒன்று கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்ததை பேஸ்புக் நேரலை செய்தது.

பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீமிங்கில் (நேரலை) ஆபாசமான தரவுகளைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவினை பேஸ்புக் பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அப்டேட் செய்யப்பட்டுள்ள புதிய டூல்களைக் கொண்ட பேஸ்புக் லைவ் வீடியோக்களைப் பார்ப்பவர்கள் அதனைப் பதிவு செய்வோரை நேரடியாகத் தொடர்புகொள்ளவும் பேஸ்புக்கிற்கு தெரியப்படுத்தவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு நாட்களில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய்!!

தாயொருவர் ஏழு நாட்கள் இடைவெளியில், மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ள அபூர்வ சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள இச்சாங் நகரத்திலுள்ள வைத்திய சாலையில் ஒரு தாய் ஆண் குழந்தையொன்றை பிரசவித்து ஆறு நாட்கள் கடந்தநிலையில் இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

குறித்த நிகழ்வு பற்றி தகவல் பகிர்ந்துள்ள இச்சாங் நகர வைத்தியசாலையானது, ஒரு தாய் 6 நாட்கள் இடைவெளியில் குழந்தைகளை பிரசவித்தது இதுவே முதல் தடவை என குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் பிறந்த மூன்று குழந்தைகளும், அவர்களின் பிறப்பு நிலை உடல் பருமன் குறைவாக உள்ளதால், விசேட சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யூ டியூப் அறிமுகப்படுத்தும் அதிரடி திட்டம்!!

வலைத்தளமூலமாக பல்வேறு காணொளி காட்சிகளை பதிவேற்றியுள்ள யூ டியூப் (You Tube) நிறுவனம், தற்போது அடுத்த கட்ட அதிரடி திட்டமாக தொலைக்காட்சி சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

உலக நாடுகளில் பெரும்பான்மையாக பயன்படுத்தி வரும் யூ டியூப் வலைத்தள காணொளி சேவையானது, தற்போது கட்டண முறையிலான தொலைக்காட்சி சேவையை தொடங்கவுள்ளதாக, யூ டியூப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சூசன் வோஜிகி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை மையப்படுத்தியதாக உருவாக்கப்படவுள்ள குறித்த தொலைக்காட்சி சேவையில், சுமார் 40 அலைவரிசைகளை ஒளிபரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தொலைகாட்சி சேவைக்காக மாதமொன்றிற்கு 35 அமெரிக்கா டொலர்கள் கட்டணமாக அறவிடப்படுமென்பதோடு, அமெரிக்காவின் முன்னணி ஒளிபரப்பு சேவை முகவர்கள், பிரபலமான சர்வதேச ஒளிபரப்பு சேவைகள் மற்றும் விளையாட்டு ஒளிபரப்புகள் என பல்வேறு வகைகளில் செயற்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளுக்கு சொந்தமான யூ டியூப் நிறுவனத்தின் காணொளி சேவையை, உலகலாவிய ரீதியில் தினமும் 1 பில்லியன் மணித்தியாலயங்கள் பயன்படுத்திவரும் நிலையில், தற்போது கூகுள் நிறுவனம், யூ டியூப் ஊடாக தொலைக்காட்சி சேவையை உருவாக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

36 விமானங்களில் 1500 பேருடன் சவூதி மன்னரின் ஆடம்பர சுற்றுப்பயணம்!!

 
சவூதி அரேபிய மன்னர் சல்மான்பின் அப்துல் அஜீஸ் 50 வருடங்களுக்கு பிறகு இந்தோனேசியாவிற்கு 1500 பேர்களுடன் 36 விமானங்களின் சேவைகளுடன் ஆடம்பர சுற்று பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்தோனேசியாவிற்கு 9 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள மன்னர் சல்மான், பயன்படுத்து வதற்கு தேவையான பொருட்கள் 460 டன், 800 பிரதிநிதிகள், இரண்டு பென்ஸ் சொகுசு கார்கள் மற்றும் 572 பணியாட்கள் என அனைத்தும் 36 விமானங்கள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன.

மன்னரின் விஜயத்திற்கு மூன்று நாட்களுக்கு முதலில் இருந்தே அவருக்கான பொருட்கள் மற்றும் பணியாளர்கள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, தலைநகர் ஜகர்த்தாவிலுள்ள மூன்று அதிசொகுசு நட்சத்திர விடுதிகள் தங்குவதற்காக பதிவுசெய்யப்பட்டுள்ளன.

உலகில் முஸ்லிம்கள் அதிகமுள்ள நாடான இந்தோனேசியாவில் சுற்று பயணத்தை முடித்தப்பிறகு, மன்னர் சல்மான் மலேசியா, சீனா, மாலைத்தீவு மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா மரணம் குறித்த குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக தகவல்!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் என்று பன்னீர்செல்வம் ஆதரவு அணியைச் சேர்ந்த பி.எச்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன், ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார்.

மேலும், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட டிஸ்சார்ஜ் அறிக்கையில், அவரை யாரோ தள்ளிவிட்டதாகக் கூறப்பட்டிருப்பதாகவும், குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் என்றும் பி.எச். பாண்டியன் தெரிவித்தார்.

தேசத் தலைவரான ஜெயலலிதா என்.எஸ்.ஜி பாதுகாப்பு இல்லாமல் இருந்தது ஏன், அவருக்கு என்எஸ்ஜி என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புத் தேவையில்லை என்று உத்தரவிட்டவர்கள் யார் என்றும் கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை குறித்த முழு விவரங்களையும் அரசு வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கல்கிஸ்ஸ நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு : பிரதான சந்தேகநபர் சிக்கினார்!!

கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரோஸா என்றழைக்கப்படும் எஸ்.டி.ரொஷான் இந்திக டி சில்வா அல்விஸ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிசஸ்ஸ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சீனாவில் தயாரிக்கப்பட்ட பிஸ்டோல் ஒன்றும், அதற்கு பயன்படுத்தப்படும் நான்கு ரவைகளும், ரிவோல்வர் ஒன்றும் அதற்கு பயன்படுத்தப்படும் ஆறு ரவைகளும் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 20 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டு அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பாடசாலை மாணவர்களுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஊடக செயலமர்வு!!

 
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சினால் நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கு ஊடக செயலமர்வு நடைபெற்றுவருகின்றது.

வவுனியா மாவட்டத்திலுள்ள 04 பாடசாலைகளை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ஊடக செயலமர்வு நேற்று முன்தினம் (01.03.2017) புதன்கிழமை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

இவ் ஊடக செயலமர்விற்கு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிரபல ஊடகவியாளர்களான சீத்தாராமன் மற்றும் அகமட். எம்.நஷீர் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடக செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவை அதிகாரிகள், மாவட்ட உதவிப் பணிப்பாளர், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி, பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

பாடசாலை மாணவர்களுக்கு ஊடகத்துறை சார்ந்த அடிப்படை அறிவை ஏற்படுத்துமுகமாக இச் செயலமர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பெண் தலைமைத்துவ குடும்ப மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு!!

 
கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட குடும்பத்திலுள்ள ஆண்டு 8 மற்றும் ஆண்டு 10 இல் கல்வி கற்றுவரும் இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் நேற்று (02.03.2017) பிற்பகல் தமிழ் விருட்சம் அமைப்பின் அலுவலகத்தில் வைத்து தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமாரினால் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கணவர் காணாமல் போய் பத்து வருடங்களாகத் தேடிக்கொண்டிருக்கும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களிலுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அவர்களின் தேவை கருதியே துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் கொடியேற்றம்! (படங்கள்,வீடியோ)

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் ஒன்பதாவது ஆண்டு  மகோற்சவ பெருவிழா  நேற்று (02.03.2017)வியாழக்கிழமை பகல் 11.05மணிக்கு கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது .

ஆலய மகோற்சவகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்கள்  தலைமையில் இடம்பெற்ற கொடியேற்ற நிகழவில்  நூற்று கணக்கான அம்பாளின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வவுனியா தமிழ் மகாவித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்களின் இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

 
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் விளையாட்டு நிகழ்வு இன்று (02.03.2017) காலை 9 மணிக்கு தமிழ் மத்திய மகாவித்திலாய பாடசாலையின் அதிபர் த.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு கல்வி வலய பொறியியலாளர் எஸ்.மயூரன், மற்றும் ஆரம்பப்பரிவு பாடசாலையின் அதிபர் எஸ்.ஸ்ரீறங்கநாதன், பழைய மாணவர்கள் சங்க செயலாளர் எஸ்.சுஜன், பொருளாளர் ஆ.அம்பிகைபாகன், ஆகியோர் கலந்து கொண்டதுடன் ஆரம்பப்ரிவு மாணவர்களின் விளையாட்டு செயற்பாடுகள் இடம்பெற்று மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.