வவுனியா தனியார் மற்றும் அரச பேரூந்துகளுக்கிடையிலான பிரச்சினைக்கு தீர்வு!!

 
வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டு கடந்த வாரம் திறந்துவைக்கப்பட்ட பேரூந்து நிலையத்தில் பேருந்துகளை சேவைக்கு அமர்த்தும் விடயத்தில் அரச மற்றும் தனியார் பேரூந்துகளுக்கிடையில் இடம்பெற்ற முறுகல் நிலை அதனால் மக்கள் அடைந்த அசௌகரியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கோடு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

குறித்த விசேட கலந்துரையாடலுக்கு வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வடக்கு சுகாதார அமைச்சரின் பிரதிநிதியாக அவரது இணைப்புச் செயலாளர், வவுனியா மாவட்ட அரச அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், வடக்கு போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், பிரதி பொலிஸ்மா அதிபர், இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர், மாவட்ட அதிகாரிகள், வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் ஒன்றியத்தின் தலைவர், வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகம் மற்றும் வவுனியா வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த ஒன்றுகூடலானது சுமார் 04 மணிநேரம்வரை இடம்பெற்றது, முடிவிலே இது தொடர்பாக வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களாக வவுனியாவில் போக்குவரத்து தொடர்பாக இருக்கும் பிரச்சினைக்ளுக்கு ஒரு தீர்வு பெற்று மக்களது போக்குவரத்தை சீர் செய்யும் நோக்கோடு இன்றய தினம் நடாத்தப்பட்ட கூட்டத்தின்மூலம் இரண்டு தரப்பினரும் தங்களுக்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

அதேவேளை ஆரம்பத்தில் இரண்டு தரப்பினருமே ஒரு விட்டுக்கொடுப்புநிலைக்குள் வருவதற்கு முன்வரவில்லை அதனைத் தொடர்ந்து நாங்கள் பொறுமைகாத்ததன் வாயிலாக இறுதியில் இரண்டு தரப்பினரையும் அதேவேளை வர்த்தக சங்கத்தினரையும் ஒரு சமரசமான முடிவிற்கும் கொண்டுவந்திருக்கின்றேன். இதில் உள்ள இந்த மூன்று தரப்பினருக்கும் அப்பால் எனது பொதுமக்களது நலனை கருத்திற்கொண்டே இந்த முடிவினை நான் எடுத்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து குறிப்பாக புதிய பேரூந்து நிலயத்தினுள் இலங்கை போக்குவரத்து சபையினர் வர மறுத்த காரணத்தாலேயே இந்த முறுகல் நிலை ஆரம்பத்தில் ஏற்பட்டது, அதனடிப்படையில் தற்போது சகல உள்ளூர் சேவைகளில் ஈடுபடும் பேரூந்துகளும் வவுனியா நகரத்தின் மையத்தில் உள்ள பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து தமது சேவைகளை ஆரம்பித்து புதிய பேரூந்து நிலையத்திற்கு சென்று அங்குள்ள பயணிகளையும் ஏற்றிக்கொண்டு கிராமத்தை நோக்கி செல்லவேண்டும் என்றும்,

அதே போல வவுனியா மாவட்டத்தில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கு செல்லும் பேரூந்துகள் அனைத்தும் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து தமது சேவையை ஆரம்பித்து பழைய பேரூந்து நிலையத்திற்கு வந்து மீண்டும் அங்குள்ள பயணிகளையும் ஏற்றிக்கொண்டு தமது சேவையை நடத்துவார்கள் என்றும் அதேபோல ஏனைய மாகாணங்களில் இருந்து வரும் சகல தூரசேவை பேருந்துகளும் புதிய பேரூந்து நிலையத்தின் நுழைவாயில் வழியாக உள்சென்று தரித்து நிற்காமல் பயணிகளை இறக்கி பின் தமது பயணத்தை தொடருவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் இந்த முடிவிற்கு மூன்று தரப்பினரும் ஒத்துக்கொண்டதோடு, 26ம் திகதி முதல் (இன்று) சேவைகள் மேற்கூறப்பட்டவகையில் நடைபெறும் என்றும், நேரக்கணிப்பாளர்கள் ஒழுங்குகளை கவனித்துக்கொள்ளுவார்கள் என்றும், இதன்மூலம் மக்களது போக்குவரத்தும் சீரானதாக அமையும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

யாழ் பல்கலைக் கழக பெண்கள் விடுதியில் தீ விபத்து!!

 
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் இன்று(26) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்ட பெண்கள் விடுதியின் முதலாம் மாடியிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விடுதியின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தீ விபத்து ஏற்பட்ட விடுதியில் இருக்கும் மாணவிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினரும் பொலிஸாரும் பல்கலைக்கழக சமூகத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

விடுதியில் தீ விபத்து ஏற்படும் சந்தர்ப்பத்தில் ஒரு மாணவி உறங்கிக் கொண்டிருந்ததாகவும், ஏனைய மாணவிகளின் சத்தம் கேட்டு விடுதியை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தீப்பரவல் ஏற்பட்ட பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணப்படுவதால் உள் நுழைவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை.

இத்தீ விபத்தினால் 3 அறைகள் பாதிப்புக்கு உள்ளானதுடன் மின்அழுத்தியினை அணைக்காமல் சென்றமையே இவ்விபத்தக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இன்று காலை வத்தளைப் பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப்பரவலுக்கான காரணம் தெரிய வந்துள்ளது.

இன்று காலை தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் குப்பைகளை சேர்த்து தீ வைத்து விட்டு, பக்கத்திலிருந்த கடைக்கு சென்ற வேளை அந்த தீ தொழிற்சாலை முழுவதும் பரவியுள்ளதாக கிரிபத்கொட பொலிஸர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

வவுனியாவில் உண்ணாவிரதமிருப்போருக்கு ஆதரவாக முச்சக்கரவண்டி சாரதிகள் மாபெரும் பேரணி!!

 
வவுனியாவில் இடம்பெற்றுவரும் காணாமற்போனோரின் உறவினர்களின் சாகும்வரையான உண்ணாவிரத்தினை இன்று (26.01.2017) நான்காவது நாளாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டிச் சாரதிகள் 500ற்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து பேரணியாக பிரதான பஜார் வீதி வழியாக மணிக்கூட்டுக் கோபுரம் ஊடாக உணவு தவிர்ப்பு மேற்கொள்ளப்படும் இடத்திற்குச் சென்று தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

அதேநேரம் வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாகச் சென்ற வவுனியா வர்த்தக சங்க உறுப்பினர்கள், உரிமையாளர்கள் உணவு தவிர்ப்பு இடத்திற்குச் சென்று அமைதியான முறையில் ஆதரவினை வழங்கியுள்ளனர்.

இன்று காலை உணவு தவிர்ப்பவர்களைச் சந்தித்து கலந்துரையாடிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் கழக உறுப்பினர்கள் தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

கொட்டும் மழையிலும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பேரணியாகச் சென்று உணவுத் தவிர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதியில் அமைதியான முறையில் அமர்ந்திருந்து ஆதரவினை வழங்கி வருகின்றனர்.

உண்ணாவிரத்தில் ஈடுபடுபவர்களின் நிலை இன்று மேலும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.

வவுனியா புனர்வாழ்வு நிலையத்திலிருந்து மூவர் சமூகத்துடன் இணைவு!!

 
வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வினைப் பூர்த்தி செய்த மூவர் இன்று (26.01.2017) காலை சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கார்த்திகேசு நாதன் (முல்லைத்தீவு) , குழந்தைவேல் தயாபரன் (கிளிநொச்சி), கணபதிப்பிள்ளை யோகராசா (மட்டக்களப்பு) ஆகியோரே சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் வவுனியா புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி, பூந்தோட்டம் புனர்வாழ்வு பணியகப் பணிப்பாளர், பின்இணைப்பு அதிகாரி, சமயத்தலைவர்கள், பூந்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என பலரும் கலந்து கொண்டதுடன் சமூகயமப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளின் உறவினர்கள் மற்றும் இப்புனர்வாழ்வு நிலையத்தில் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறிய 10பேருக்கு சுயதொழிலினை மேற்கொள்வதற்கு தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா மனித உரிமை செயலகத்திற்குச் சென்று காணாமல்போனோர் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்த இளைஞர்கள்!!

 
உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக 40 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து இலங்கை மனித உரிமை செயலகத்திற்குச் சென்று அங்குள்ள அதிகாரியிடத்தில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது உறவுகள் காணாமற்போயுள்ளதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டின் விசாரணைகள் எந்தக்கட்டத்தில் உள்ளது, கடந்த 8 வருடங்களாக அவர்களுக்கான பதில் வழங்கப்படவில்லை வவுனியாவில் எத்தனை பேர் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது?,

அவர்களின் விபரங்களை உங்களிடம் உள்ளதா? எத்தனை முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள விடயங்கள் உங்களின் மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதா? போன்ற விடயங்களைக் கேட்டபோதும் அதிகாரிகள் மேலதிகாரியிடம் தொடர்பு கொண்ட பின்னர் தெரிவிப்பதாகவும் விபரங்களைப் பெறுவதற்கு ஒரு நாள் காத்திருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

வவுனியா இளைஞருக்கு வட மாகாண உழவர் பெருவிழாவில் கோழி பண்ணையாளர் விருது !

வடமாகாண விவசாய அமைச்சின் 2017 ஆம் ஆண்டுக்கான உழவர் பெருவிழா கடந்த (22.01.2017) கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

மேற்படி  நிகழ்வில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த சிறந்த கோழி பண்ணையாளர்  விருது -2016  இனை  கனகராஜன்குளத்தை  சேர்ந்த   டேவிட் அலெக்ஸ் தாவீத்  அமிர்த ராஜா  என்பவர் பெற்றுகொண்டார்.

 

வடக்கு விவசாய அமைச்சு ஆண்டு தோறும் பயிர்வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பில் பல்வேறு பிரிவுகளில் மாவட்ட ரீதியில்  போட்டிகளை நடாத்தி வெற்றி பெற்ற சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நோக்கில் உழவர் பெருவிழாவைக் கொண்டாடி வருகின்றமை  குறிப்பிடத்தக்கது .

கடந்த 2016 ஆம் ஆண்டில் சிறந்த வீட்டுத்தோட்டச் செய்கையாளர், சிறந்த சேதன விவசாயச் செய்கையாளர், வயல் நிலங்களில் சிறந்த பயிர் மாற்றீட்டுச் செய்கையாளர், சிறந்த சேதன உள்ளீடு உற்பத்தியாளர், சிறந்த காளான்செய்கையாளர், சிறந்த பழச்செய்கையாளர் என பல பிரிவுகளில் மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 120 சாதனையாளர்களுக்கு  இந்த நிகழ்ச்சியின் போது கேடயங்களும், சான்றிதழ்களும் பணப்பரிசுகளும் வழங்கி  வைக்கபட்டது.

 

அரசமரத்துக்கும் வேப்பமரத்துக்கு திருமணம் : வினோத சம்பவம்!!

ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்கக்கோரி தமிழகம் விக்கிரவாண்டியில் அரசமரம் – வேப்ப மரத்துக்கு திருமணம் செய்து வைத்த விசித்திரமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் எழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரீனாவில் நடந்த போராட்டம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடை நிரந்தரமாக நீங்கக்கோரி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பொதுமக்கள் வேப்ப மரத்துக்கும்- அரச மரத்துக்கும் திருக்கல்யாணம் நடத்தினர்.

திருமணத்தை முன்னிட்டு பத்திரிகை அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த திருமணத்தையொட்டி யாக சாலையில் கணபதி ஹோமம் என்பன இடம்பெற்றன.

அதைத்தொடர்ந்து மேளதாளங்களுடன் சீர் வரிசை பொருட்கள் எடுத்து வரப்பட்டு, அரச மரம் – வேப்பமரத்துக்கு பட்டு வேட்டி – சேலை கட்டப்பட்டு மாலை அணி விக்கப்பட்டது.

தொடர்ந்து திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் நடந்தது. இந்த திருமணத்தை சிவகிருஷ்ண மூர்த்தி, சிவ ரவிச்சந்திரன் ஆகியோர் நடத்தி வைத்தனர். இந்த நிகழ்வில் பொது மக்கள் கலரும் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

சினிமா பாணியில் கொள்ளையில் ஈடுபட்ட பெண் அறிவிப்பாளர்!!

கிரிபத்கொட பிரதேசத்தில் கத்தி முனையில் கொள்ளையில் பெண்ணொருவர் ஈடுபட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள அழகு கலை நிலையத்திற்கு முடி அலங்காரம் செய்துக் செய்யவென பெண்ணொருவர் சென்றுள்ளார். எனினும் அங்கிருந்த பெண் ஊழியரின் கழுத்தில் கத்தியை வைத்து மரண அச்சுறுத்தல் விடுத்து, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்யையடித்து பெண் தப்பி சென்றுள்ளார்.

இந்த பெண் ஒரு மாதங்களுக்கு முன்னர் இன்னுமொரு ஆணுடன் இணைந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த பெண் கடந்த 23ஆம் மோதரையில அமைந்து அவரது வீட்டில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆண் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதுடைய குறித்த பெண் இரண்டு பிள்ளைகளின் தாயாராகும். போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகியுள்ள குறித்த பெண்ணுக்கு நாள் ஒன்றுக்கு 10 பக்கட் ஹேரொயின் தேவைப்படுவதாக பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர்.

இதற்கு அவசியமான பணம் கண்டுபிடிப்பதற்காக அவர் இன்னும் ஒரு நபருடன் இணைந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த பெண் பிரபல ஊடகமொன்றின் முன்னாள் அறிவிப்பாளர் என தெரியவந்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை!!

வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் பல இடங்களிலும் மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை நிலவும்.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்படுவதாக காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் காலநிலை தொடர்பான விபரங்கள்,

அம்பாறை – மிதமான காலநிலை

அனுராதபுரம் – மிதமான காலநிலை

பதுளை – மழையுடன் கூடிய காலநிலை

மட்டக்களப்பு – மழையுடன் கூடிய காலநிலை

கொழும்பு – மிதமான காலநிலை

காலி – மிதமான காலநிலை

கம்பஹா – மிதமான காலநிலை

அம்பாந்தோட்டை – மிதமான காலநிலை

யாழ்ப்பாணம் – மிதமான காலநிலை

களுத்துறை – மிதமான காலநிலை

கண்டி – மிதமான காலநிலை

கேகாலை – மிதமான காலநிலை

கிளிநொச்சி – மிதமான காலநிலை

குருணாகல் – மிதமான காலநிலை

மன்னார்- மழையுடன் கூடிய காலநிலை

மாத்தளை – மழையுடன் கூடிய காலநிலை

மாத்தறை – மிதமான காலநிலை

மொனராகலை – மழையுடன் கூடிய காலநிலை

முல்லைத்தீவு – மிதமான காலநிலை

நுவரெலியா – மழையுடன் கூடிய காலநிலை

பொலன்னறுவை – மிதமான காலநிலை

புத்தளம் – மிதமான காலநிலை

இரத்தினபுரி – மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை

திருகோணமலை – மழையுடன் கூடிய காலநிலை

வவுனியா – தூறல் மழையுடனான காலநிலை

சுனாமி ஏற்படுவதற்கு இது தான் காரணம்!!

சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படுவதற்கு கடலின் ஆழமான பகுதியில் ஏற்படும் ஒலி அலைகள் காரணமாக இருக்க வாய்ப்புண்டு என பிரித்தானியாவின் கார்டிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணிதவியல் மேதை உசாமா கட்ரி தெரிவித்துள்ளார்.

உலகில் அண்மை காலங்களாக பல இடங்களில் பூகம்பங்கள், சுனாமி மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்றவை நடந்து கொண்டு வருகின்றன. இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரித்தானியாவின் கார்டிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் உசாமா கட்ரி இது போன்ற பேரழிவு குறித்து கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படுவதற்கு கடலின் ஆழமான பகுதியில் ஏற்படும் ஒலி அலைகள் ஒன்று சேர்ந்து வெடித்துச் சிதறுவதாலே இது போன்ற செயல்கள் ஏற்படுவதாக கூறியுள்ளார்.

பொதுவாக கடலின் மேற்பரப்பில் ஒலி அலைகள் எழுப்பும். அவை அனைத்தும் ஒன்றாக இணைந்து பூமியின் கீழே ஆயிரக்கணக்கான மீற்றர் அளவு சென்று ஒன்றாக சேர்ந்து அவை எழும்பும் போது பூமியில் பூகம்பம் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு சுனாமியாக மாறுகின்றன என கூறியுள்ளார்.

இது தொடர்பாக செயற்கையாக செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில் ஒலி ஈர்ப்பு அலைகளை ஒன்று திரட்டி அவை மீண்டும் மீண்டும் செயல்படுத்தும் போது சுனாமி முற்றிலும் கலைக்கப்பட்டுவிடுவதாக கூறியுள்ளார்.

கடந்த இருபது வருடங்களில் மட்டும் மில்லியன் கணக்கான உயிர்கள் சுனாமி போன்ற பேரழிவுகளால் இழந்திருப்பதாகவும், இதனால் சுற்றுப்புறச்சுழல் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும், உலக நிதி நெருக்கடி போன்றவை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தற்போது வரை சுனாமியை எதிர்கொள்வதற்கு எந்த ஒரு முகாந்தரமும் இல்லை. இதனால் ஒலி ஈர்ப்பு அலைகளைப் பயன்படுத்தி சுனாமி தொடர்பான பேரழிவுகளை எப்படி எதிர்கொள்வது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் கடந்த சில ஆண்டுகளில் 9 மோசமான பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், 14 நாடுகளில் 2,30,000 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பூகம்பம் மற்றும் சுனாமி என்பது ஹிரோசிமாவை அழிக்க பயன்படுத்திய அணு குண்டை விடவும் 1500 மடங்கு ஆற்றல் உடையது எனவும் கூறப்படுகிறது.

100 நாட்கள் கடலில் தனிமை : உயிரை பணயம் வைத்து உலக சாதனை படைத்த பெண்!!

அண்டார்டிகா கண்டத்தை யாருடைய உதவியும் இல்லாமல் தனியே சுற்றி வந்து அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பெண் உலக சாதனை படைத்துள்ளார்.

கப்பலில் மாலுமியாக பணியாற்றி வரும் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த 32 வயது பெண் லிசா பிலேயர் என்ற பெண்ணே இந்த உலக சாதனையை படைத்துள்ளார்.

அணடார்டிகா கண்டத்தில் தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த லிசா பாடகில் தனியாக 100 நாட்களில் 1,600 கடல் மைல் தூரம் பயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் 102 நாட்களில் ஒருவர் பயணம் செய்தது சாதனையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து லிசா கூறியதாவது, கடுமையான பயிற்சி எடுத்தாலும், மன உறுதியுடன் செயல்பட்டு இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

300 கோடி பணத்தை படுக்கையாக பயன்படுத்திய நபர் : அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸ்!!

அமெரிக்காவில் நபர் ஒருவர் கட்டு கட்டாக பணத்தை நிரப்பி அதை படுக்கையாக பயன்படுத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள Westborough பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் சட்டவிரோதமான பண பரிவர்த்தனை குறித்த விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு ஒரு நபர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து அவரை விசாரித்த அதிகாரிகள், பின்னர் அந்த குடியிருப்பையை சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது படுக்கை ஒன்று இவர்களது சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த படுக்கையில் போர்த்தியிருந்த விரிப்பினை அகற்றிய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

குறித்த படுக்கையானது மரத்தாலான ஒரு பெட்டி, அதில் கட்டுக்கட்டாக பணத்தை அந்த ஆசாமி அடுக்கி வைத்து அதில் போர்வையை போட்டு படுக்கையாக பயன்படுத்தி வந்துள்ளார்.

குறித்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மொத்தமும் 20,000,000 டொலர் (இலங்கை மதிப்பில் ரூ. 300,94,00,000) என தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் 28 வயதான பிரேசில் நாட்டவர் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதான நபர் 3 பில்லியன் டொலர் பிரமிடு திட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பண மோசடியில் ஈடுபட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஒருவருக்கு அடுத்த மாதம் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் ஒருவர் அதிகாரிகள் பார்வையில் சிக்காமல் பிரேசிலுக்கு தலைமறைவாகியுள்ளார்.

92 வயது நபரை காதலித்து மணந்த 29 வயது இளம்பெண்!!

தென்னாபிரிக்காவில் 92 வயது நிரம்பிய தொழிலதிபர் ஒருவரை மணந்த 29 வயது இளம்பெண்ணுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கிழக்கு ஆப்ரிக்க நாடான சாம்பியாவை சேர்ந்தவர் 29 வயதேயான Charity Mumba. தென்ஆப்பிரிக்காவிற்கு சென்ற இவர் 92 வயது நிரம்பிய தொழிலதிபரான Grooves என்பவரை மணந்துள்ளனர்.

பல கோடிகள் சொத்துக்களை கொண்ட இவரது உண்மையான சொத்து மதிப்பு விபரம் ஏதும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில் இவர்களது திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக சாம்பியா நாட்டை சேர்ந்த இளம்பெண்கள் வேறு நாட்டிற்கு சென்று வயதான தொழிலதிபரை மணந்து கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.

இந்நிலையில் 60 வயது இடைவெளி உள்ள இவர்களது திருமணத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தற்போது உள்ள காலக்கட்டத்தில் வாழ்ந்து முடிந்த கோடீஸ்வர நபரை திருமணம் செய்து கொண்டு பெண்கள் எளிதாக கோடீஸ்வராக முயற்சி செய்கிறார்கள் என்று ஒருவர் சாடியுள்ளார்.

மேலும், பணத்திற்காக தான் அந்த பெண் இப்படி வயதான நபரை திருமணம் செய்துள்ளதாக பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் வயது கடந்த இந்த காதலுக்கு சிலர் மரியாதை செலுத்தி வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய பீட்டா : விநாயகர் கோவில் யானையை காட்டில் விட கவர்னர் உத்தரவு!!

பீட்டா அமைப்பினரின் புகாரையடுத்து புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானையை காட்டில் விட வேண்டும் என புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வரும் கிரண்பேடி, ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள யானையை காட்டில் விட வேண்டும் என்று இந்து அறநிலையத்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த யானையை கொன்கிரீட் தளத்தில் நிறுத்தி இருப்பதால் அதன் காலில் பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் அதனை காட்டில் விட வேண்டும் என்று பீட்டா அமைப்பினர் கவர்னருக்கு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று கவர்னர் இந்த உத்தரவை பிறப்பித்து இருப்பதாக தெரிகிறது.

மிகவும் புகழ் பெற்ற புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1997ம் ஆண்டு 6 வயதான பெண் யானை கொண்டு வரப்பட்டது. லட்சுமி என பெயர் சூட்டப்பட்ட இந்த யானையிடம் பக்தர்கள் தினமும் ஆசிர்வாதம் வாங்கி செல்வர்.

இந்நிலையில் இப்போது திடீரென அதை காட்டில் விட வேண்டும் என்று சொல்வதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தண்ணீர் குடம் மாய­மா­னதால் மாமி­யாரை கொன்ற மரு­ம­­கன்!!

தண்ணீர் குடம் காணா­மல் போன சம்ப­வத்தில் மாமி­யாரை மரு­­மகன் கொலை செய்த சம்­­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

ஈரோடு அருகே தண்ணீர் குடம் காணாமல் போனது தொடர்பாக கணவன் மனைவியிடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை தாக்க எடுத்த அரிவாள் மனை அருகில் படுத்திருந்த மனைவியின் தாயார் மீது விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் விளக்கேத்தி நந்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு சௌந்தரம் என்ற மனைவி உள்ளார். 58 வயதான ராமசாமி கூலித்தொழிலாளியாக உள்ளார்.

இந்நிலையில் சௌந்தரத்தின் மனைவி கடந்த வாரம் தெருவிலுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது குடம் காணாமல் போயுள்ளது.

இதுதொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே கடந்த வாரம் கடுமையான சண்டை ஏற்­பட்­டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராமசாமி, தனது மனைவியின் தலையில் அரிவாள் மனையால் ஓங்கி அடித்துள்ளார்.

அப்போது அரிவாள் மனை இரண்டாக உடைந்து வீட்டில் படுத்திருந்த சௌந்தரத்தின் தாயார் பெரியம்மா தலையில் வீழ்ந்து பதம் பார்த்தது. இதனால் அவரது தலையில் இருந்து இரத்தம் கொட்டியது.

இதையடுத்து காயமடைந்த பெரியம்மா ஈரோடு அரச வைத்­தி­ய­சா­­லை­யில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை யளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி பெரியம்மா உயிரிழந்தார். இதையடுத்து மாமியார் கொலைக்கு காரணமான மருமகன் ராமசாமி கைது செய்யப்பட்டார்.

தனுஷின் உண்மையான பெற்றோர் யார் : மதுரை உயர் நீதிமன்றத்தில் தனுஷ்!!

நடிகர் தனுஷ் தங்களது மகன் என கதிரேசன், மீனாட்சி ஆகியோர் தொடர்ந்த வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன், அவரது மனைவி மீனாட்சி ஆகியோர் மேலூர் நீதித்துறை நடுவர்மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். இதுகுறித்து அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:

திரைப்பட நடிகர் தனுஷ் எங்கள் மகன். அவரது இயற்பெயர் கலைச்செல்வன். மேலூரிலும், திருப்பத்தூரிலும் படிக்க வைத்தோம். சென்னை சென்ற அவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக பெயரை தனுஷ் என மாற்றிக்கொண்டார். அவரை எங்களுடன் வருமாறு அழைத்தோம். ஆனால் அவர் வரமாட்டேன் என்று கூறிவிட்டார்.

மேலும் எங்களுக்கு வயதாகிவிட்டது. மருத்துவச் செலவுக்கு பணம் தேவைப்படுகிறது. அவர் எங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடவேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தனுசை நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 3ம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில் நடிகர் தனுஷ், மேலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும். அந்த வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை பிப்ரவரி 8ம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.