முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை அவர் அங்கு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனம் ஒன்றின் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொள்ளப்பட இருப்பதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு கூறியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அண்மையிலும் அவர் அங்கு ஆஜராகியிருந்தார் என்பது கூறத்தக்கது.
அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் ஒருவர் மூலமாக தொழில் பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
150,000 ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பூகொடை பிரதேசத்தில் வசிக்க கூடிய 29 வயதுடைய ஒருவர் என தெரிய வந்துள்ளது. சந்தேகநபர் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
2017ம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதேவேளை வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10ம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 10 திகதி வரை இடம்பெறவுள்ளது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்தின் ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்திற்கான அனுமதி நேற்று முன்தினம் அமைச்சரைவ கூட்டத்தின் போது பெறப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம், பாதுகாப்பு மற்றும் மனித உரிமை மேம்பாடு என்பவற்றை கிரமமாக வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.கொழும்பில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற 11ஆவது தென்னாசிய பிராந்திய நீதிபதிகள், வழக்குதொடுநர்கள், மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி பாசறையில் பங்கேற்ற அமெரிக்க தூதரகத்தின் பிரதி முதன்மை அதிகாரி ரொபட் ஹில்டன் இந்தக்கருத்தை வெளியிட்டார்.
இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு இணங்க மீளமைப்பதை உறுதிசெய்து வருகிறது.இதன்கீழ், கடந்த மே மாதத்தில் பலவந்தமாக காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தை இலங்கை உறுதிப்படுத்தியது.
இவை, இலங்கை சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றிய சில அடைவுகளாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த சூழ்நிலையில் இலங்கையுடன் அமெரிக்கா தொடர்ந்தும் பங்காளியாக இருந்து செயற்படவுள்ளது என்றும் கூறியுள்ளார்.அத்துடன் குறித்த விடயங்களில் முன்னேற்றங்கள் ஏற்படவும் அமெரிக்கா உதவியளிக்கும் என்று ரொபட் ஹில்டன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு, குடத்தனை விளாங்காட்டுப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டினையிழந்த மோட்டார் சைக்கிள் வீதியோர முட்கம்பி வேலியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் இன்னொருவர் படுகாயமடைந்ததாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.மேற்படி பகுதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
பருத்தித்துறை – மருதங்கேணி வீதி வழியாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அம்பன், குடத்தனையைச் சேர்ந்தவர்களான ஜெயராசா பிரதாஸ் (வயது 22) நாதகிருஷ்ணன் மகிந்தன் (வயது 23) ஆகிய இருவருமே படுகாயங்களிற்குள்ளான நிலையில் அம்புலன்ஸ் வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஜெயராசா பிரதாஸ் என்பவர் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார். மற்றைய நபர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.அதிக வேகமே இவ்விபத்துக்கு காரணம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று (06.010) வியாழக்கிழமை பகல் 11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகிறது.
மேலும் சப்பர திருவிழா -13.10.2016 வியாழக்கிழமை இரவு 8.00 மணிக்கும்
தேர் திருவிழா -14.10.2016 வெள்ளிகிழமை காலை 10.25 மணிக்கும்
தீர்தோற்சவம் – 15.10.2016 சனிகிழமை பகல் 11.00 மணிக்கும்
திருக்கல்யாணம் – 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கும்
ஆஞ்சநேயர் உற்சவம் 17.10.2016 திங்கட்கிழமையன்று காலை 10.30 மணிக்கும் இடம்பெற இருக்கிறது.
பக்த அடியார்கள் வருகை தந்து அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அருளை பெற்று கொள்ளும் வண்ணம் வேண்டபடுகின்றனர்.
ஏமன் நாட்டில் நடந்து வரும் போர் சூழலால் சரியான உணவு கிடைக்காததால் பல குழந்தைகள் Chronic Malnutrition என்னும் ஊட்டசத்து குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏமன் நாட்டில் போர் உச்சத்தில் இருப்பதால் கப்பலில் வர வேண்டிய உணவுகள் சரியாக வருவதில்லை.
இதனால் அந்த நாட்டில் 28 மில்லியன் மக்கள் சரியான உணவுகள் இன்றி உடல் நலிவுற்று வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் சரியாக சாப்பிடாமல் Chronic Malnutrition என்னும் ஊட்டச்சத்து குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டு எலும்பும் தோலுமாக பரிதாபமாக காட்சியளிகின்றனர்.
அங்குள்ள மருத்துவமனையில் நோயாளிகளாக பல குழந்தைகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒரு குழந்தையின் தாய் கூறும்போது, என் ஆறு வயது மகனான சலீம் உடல் நிலை சரியில்லாமல் எலும்பும் தோலுமாக இருக்கிறான். பிஸ்கெட் முதற்கொண்டு எது கொடுத்தாலும் சாப்பிட மறுக்கிறான் என சோகத்துடன் அவர் கூறியுள்ளார்.
அந்த மருத்துவமனையில் எங்கு பார்த்தாலும் குழந்தைகளின் உடலில் குளுகோஸ் ஏறும் காட்சியே கண்ணில் தென்படுகிறது. போரால் வறுமை,பட்டினி அங்கு நிலவும் சூழலில் புதிதாக நியமிக்கப்பட்ட வங்கி ஆளுநர் Mohamed Bin Humam, வங்கியில் போதுமான பணம் இல்லை, அதனால் மக்களுக்கு உதவ இயலாது என கூறிவிட்டார்.
இதன் காரணமாக ஏமன் மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களின் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அமெரிக்க பள்ளி ஒன்றில் பணியாற்றிய பிரெஞ்சு ஆசிரியை தனது திருமணத்திற்கு வகுப்பு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து திருவிழா கோலம் போன்று திருமணத்தை நடத்தியுள்ளார்.
Kentucky மாநிலத்தில் உள்ள Christian Academy’s Rock Creek என்ற கிறிஸ்த்துவபள்ளியில் ரேஷ்மா என்பவர் பிரெஞ்சு ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.
டவுண் சின்ட்ரோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைளுக்கே இவர் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு திருமணம் நிச்சயமானது. தனது திருமணத்திற்கு வகுப்பு மாணவர்கள் அனைவரும் என ஆசைப்பட்டஇவர், அதன்படியே அவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
மிக விமரிசையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பள்ளி மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு நடனமாடி சிறப்பித்துள்ளனர். மேலும் இக்குழந்தைகளுக்காக சிறப்பு உணவுகளும் தயார் செய்யப்பட்டிருந்தன.
இதுகுறித்து இந்த ஆசிரியை கூறியதாவது, இக்குழந்தைகள் இல்லாத ஒரு நாளை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. ஒரு ஆசிரியையாக இது எனக்கு முதல் அனுபவம் ஆகும்.
மிகவும் அன்போடு பழகும் இக்குழந்தைகள் எனது திருமண வைபோகத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன், அதனால்அவர்களுக்கு அழைப்பு விடுத்தேன் என கூறியுள்ளார்.
வங்கியில் கணக்கு இல்லாதவர்களை கூட பார்த்து விடலாம், ஆனால் பேஸ்புக், வட்ஸ் அப் கணக்கு இல்லாத நபர்களை பார்க்க முடியாது. அந்த அளவுக்கு இதன் வளர்ச்சி அதிகமாக உ ள்ளது, அதேவேளை போலியான கணக்குகள் அதிகம் உள்ளன.
இதுவே பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது, போலி கணக்குகளை கண்டுபிடிக்க சூப்பரான வழிமுறைகள் உள்ளன.
பொதுவாக போலிக் கணக்குகளில் பயன்படுத்தும் வட்ஸ்அப் நம்பர்கள் ஸ்பூப் நம்பர்களால் உருவாக்கம் பெற்றிருக்கும். மேலும் அந்த போலி நம்பர்கள் அமெரிக்க எண்களாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
1 என்று தொடங்கும் நம்பர்கள் போலியானவைகள். ஏனெனில் இந்த நம்பர்கள், விஓஎக்ஸ்ஓஎக்ஸ் (voxox) என்ற அப் மூலம் உருவாக்கப்பட்டது. எனவே இந்த நம்பர்களில் இருந்து மெசேஜ் வந்தால் அதற்கு ரிப்ளை செய்வதை தவிர்க்க வேண்டும்.
44 எனத் தொடங்கும் நம்பர்கள், அமெரிக்காவை மையமாக கொண்ட எண்களில் இருந்து எப்டபிள்யூ (Fw) கொண்டு உருவாக்கப்பட்ட போலியான வட்ஸ் அப் அக்கவுண்ட்கள். எனவே 44 என்ற தொடக்க எண்களில் இருந்து மெசேஜ் வந்தால் அது போலியானவை என்று உறுதி செய்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு போலியான நம்பர்களில் இருந்து மெசேஜ் அனுப்பிய வட்ஸ் அப் கணக்கின் புகைப்படமானது, ஒரு கார்ட்டூன் அல்லது வேறு ஏதாவது ஒரு போலியான சுயவிவரபடமாக இருக்கும்.
இந்திய கிரிக்கெட் வீரர் டோனி அவருடைய முன்னாள் காதலியை 2005 ஆம் ஆண்டு சந்திக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்வை சித்தரித்து வெளிவந்த படம் எம்.எஸ்.டோனி தி அண்டோல்டு ஸ்டோரி. இப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு 70 கோடிக்கும் மேலாக வசூல் சாதனை செய்து வருகிறது.
டோனியின் வாழ்வை சித்தரித்து வெளிவந்திருக்கும் அப்படத்தில் அவ்வப்போது சில இடம் பெறாத காட்சிகள், டோனியின் ரகசியங்கள் சில வெளிவருகின்றன.
அதே போல் தற்போது அப்படத்தில் ஒரு தவறு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படத்தில் ஒரு காட்சியில் டோனி தன் முன்னாள் காதலி பிரியங்கா ஜாவை விசாகபட்டினம் செல்லும் விமானத்தில் சந்தித்து பேசுவார். அச்சம்பவம் நடைபெற்றது 2005 ஆம் ஆண்டு என படத்தில் காட்டப்பட்டிருக்கும்.
ஆனால் தற்போது டோனி பிரியங்காவை சந்தித்தது 2002 ஆம் ஆண்டு எனவும் படத்தில் தவறாக 2005 ஆம் ஆண்டு என காட்டப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதே போன்று டோனி தன்னுடைய மனைவியான சாஷிக்கை முதல் முதலில் கொல்கத்தாவில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் வரவேற்பாளர் பணிப்பெண்ணாக பார்த்தது போல படத்தில் இடம் பெற்றிருக்கும்.
ஆனால் டோனியும், சாஷிக்கும் சிறு வயது முதலே நண்பர்களாக பழகிவந்தவர்களாம்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
முதல்வரின் உடல்நிலை குறித்து அண்மைய நாட்களில் வதந்திகள் வெளிவந்த நிலையில், முதலமைச்சர் உடல்நலம் பெற வேண்டி அவரின் தொண்டர்கள் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
எனினும், முதலமைச்சருக்காக நடத்தப்பட்ட வேண்டுதலில், ஏழை குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் அலகு குத்தப்பட்டிருப்பது சமூக ஆர்வல்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம்பெற வேண்டி, கட்சித் தொண்டர்கள் எந்தவிதமான வேண்டுதல்களை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம்.
எனினும், சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கு அலகு குத்தியிருப்பது ஒரு கொடூர நிகழ்வாகும். இந்த மோசமான மனித உரிமை மீறல் கண்டிக்கப்பட வேண்டும். இதனை நிகழ்த்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வல்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
“குழந்தைகள் உரிமை”
ஐநா குழந்தைகள் உரிமை உடன்படிக்கையில் இந்திய அரசு கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டுள்ளது (UN Convention on the Rights of the Child). http://www.ohchr.org/en/professionalinterest/pages/crc.aspx
இந்த உடன்படிக்கையின் 4 ஆம் பிரிவின்படி, குழந்தைகளின் அனைத்து உரிமைகளையும் காப்பது அரசாங்கத்தின் கடமை (Protection of rights: Governments have a responsibility to take all available measures to make sure children’s rights are respected, protected and fulfilled.)
இதன் 24 ஆம் பிரிவின் படி, குழந்தைகள் மீது ஆபத்தான பாரம்பரிய சடங்குகளை திணிப்பதை அரசு தடுக்க வேண்டும். (States parties shall take all effective and appropriate measures with a view to abolishing traditional practices prejudicial to the health of children.)
“பெற்றோர் கடமை”
பதினெட்டு வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் மீது பெற்றோருக்கு உரிமை உண்டு. ஆனால், அது உரிமை அல்ல, கடமைதான்.
குறிப்பாக, பெற்றோர் எதைச் செய்தாலும், அது அந்தக் குழந்தையின் நலத்துக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும் – என்று ஐநா குழந்தைகள் உரிமை உடன்படிக்கையின் 18 ஆம் பிரிவு குறிப்பிடுகிறது.
States Parties shall use their best efforts to ensure recognition of the principle that both parents have common responsibilities for the upbringing and development of the child. Parents have the primary responsibility for the upbringing and development of the child. The best interests of the child will be their basic concern. (Article 18).
“மனித உரிமைகள் மீறல்”
மொத்தத்தில் – குழந்தைகள் நலனுக்காக ஒரு தலைவர் அலகு குத்திக்கொண்டால் – அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், தலைவர்கள் நலனுக்காக குழந்தைகளுக்கு அலகு குத்துவது மாபெரும் குற்றம் ஆகும்.
இந்த குற்றச்செயலுக்கு காரணமானவர்கள், இந்த மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். மனித உரிமை ஆணையம், குழந்தைகள் உரிமைக்கான அமைப்புகள், நீதிமன்றம் உள்ளிட்ட பொறுப்புள்ள அமைப்புகள் நீதிக்காக குரல்கொடுக்க வேண்டும்.
முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதுதான் அனைவரினதும் விருப்பம். எனினும், இவ்வாறு சிறுவர்களின் உரிமை மீறப்படுவது கண்ணிக்கதக்கது என சமூக ஆர்வலர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கனடா நாட்டில் உள்ள ஹாலிபக்ஸ் நகரில் கோமாளி வேடமணிந்த நபர் ஒருவர் அங்குள்ள பள்ளிகூடம் அருகில் சுற்றி திரிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த சம்பவம் பற்றி ஒருவர் கூறுகையில், கனடாவில் உள்ள ஹாலிபக்ஸ் நகரில் மேல்நிலைபள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
அங்கு ஒரு மனிதர் தனது முகத்தில் கலர் சாயத்தால் கோமாளி போன்று படம் வரைந்து கொண்டு, அங்கு சந்தேகப்படும் படி நடமாடி வந்திருக்கிறார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அவர்கள் வந்த போது அந்த நபரை காணவில்லை என்றும், ஆனாலும் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை எனவும் கூறினார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதேவேளை, வட அமெரிக்காவிலும் இது போல கோமாளி வேடமணிந்த மனிதர்கள் அலைவது போன்ற காட்சிகள் அடிக்கடி சமூக வலைதளங்களில் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதன் அன்றாடம் தனது வாழ்வில் பல சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது. பிறந்த குழந்தைகளிலிருந்து தள்ளாடும் வயோதிபர்கள் வரை உதவிகள் எப்போது தேவைப்படும் என்பது யாரும் அறியாத விடயம்.
அவ்வாறு எதிர்பாராத நேரத்தில் ஏதேனும் விபரீதங்கள் நேர்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? யாருக்கு அறியப்படுத்துவீர்கள்? எவ்வாறு பிரச்சினைகளை தீர்ப்பீர்கள்? இவ்வாறு பல வினாக்கள் எழும்.
இதற்கான தீர்வுகளையே இப்போது உங்களுக்காக நாம் கொண்டுவந்துள்ளோம். ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டாலோ, விபத்துக்கள் ஏற்பட்டாலோ எடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துங்கள்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கண்டி கல்வி வலயத்திலுள்ள டி.எஸ்.சேனாநாயக்கா கல்லூரியைச் சேர்ந்த பார்வைக் இழந்த மாணவனான சாரத பவித் ராஜபக்ஷ என்பவர் 181 புள்ளிகளைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
அவரை தமது காரியாலயத்திற்கு அழைத்த மத்திய மாகாண ஆளுநர் திருமதி நிலூக்கா ஏக்கநாயக்கா, மாணவனைப் பாராட்டி பணப்பரிசிலும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி பிரதேசத்தில் வளர்ப்புத் தாயால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பரபரப்பாக பேசப்பட் சிறுமி இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த யுஸ்ரி என்ற சிறுமியொருவர் அவரது வளர்ப்புத் தாயாரால் சூடு வைக்கப்பட்டு படுகாயமடைந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
சிறுமியின் தாயார் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த நிலையில் சிறுமியின் தகப்பனாரான மஜீத் ரப்பானி இன்னொரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்திருந்தார்.
குறித்த இரண்டாம் மனைவியே சிறுமி யுஸ்ரிக்கு சூடு வைத்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் வளர்ப்புத் தாயாரும், தகப்பன் மஜீத் ரப்பானியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, சிறுமி யுஸ்ரியை வளர்க்கும் பொறுப்பு அவரது பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
பாட்டியின் பராமரிப்பில் இருந்த சிறுமி யுஸ்ரி இம்முறை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 155 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இது காத்தான்குடி பிரதேசத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பறந்துகொண்டிருந்த விமானமொன்றில் பறவையொன்று மோதியதால், பறவையின் உடல் விமானத்துக்குள் புகுந்த நிலையில் அவ் விமானம் தரையிறங்கிய சம்பவம் வெனிசூலாவில் இடம்பெற்றுள்ளது.
செஸ்னா 650 ரகத்தைச் சேர்ந்த இவ் விமானம் நேற்று முன்தினம் பறந்து கொண்டிருந்தபோது அதன் மீது பறவையொன்று மோதியது. இம் மோதலினால் அப் பறவை இறந்த நிலையில் அதன் உடலின் பகுதி விமானத்துக்குள் புகுந்து கொண் டது.
எனினும், வெனிசூலா சைமன் பொலிவர் விமான நிலையத்தில் அவ் விமானத்தை விமானி தரையிறக்கினார். விமானத்துக்கு இதனால் சேதம் ஏற்பட்ட போதிலும் இச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி பறவை எந்த இனத்தைச் சேர்ந்த என்பது உடனடியாக தெரிய வரவில்லை. எனினும், தென் அமெரிக்காவில் பரவலாகக் காணப்படும் கழுகுகளில் ஒன்றாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
விமானங்களின் மீது பறவைகள் மோதுவது புதிய விடயமல்ல. 2013 ஆம் ஆண்டில் விமானத்தின் இயந்திரங்களில் பறவைகள் மோதிய 1,535 சம்பவங்கள் பதிவாகியதாக விமானப் போக்குவரத்து அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.