வவுனியாவில் நேற்று(08.09.2016) காலை மாகாண கைத்தொழில் கண்காட்சி நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோகண புஸ்பகுமார, வடமாகாண சபை உறுப்பினர்களான எஸ்.மயூரன், ஜெயதிலக, இ.இந்திரராசா, ஆரச, அரச சார்பற்ற ஊழியர்கள,; வடமாகாண கைத்தொழில் உற்பத்தியாளர்கள், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மாகாண கைத்தொழில் கண்காட்சியினை உத்தியோகபூர்வமாக வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சர் திறந்து வைத்ததுடன் கண்காட்சியினையும் பார்வையிட்டார்.
அத்துடன் வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தினால் சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியலாய மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன .
வடமாகாண உற்பத்தியாளர்களின் கைவினைப் பொருட்களின் கண்காட்சிக்கூடம், செயன்முறைக்கூடம், உற்பத்தி விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இக் கண்காட்சி 08.09.2016 தொடக்கம் 10.09.2016 வரை காலை 9 மணிமுதல் மாலை ஆறுமணி வரை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா வைரவபுளியங்குளம் வீனஸ் கல்லூரிக்கு முன்பாக முச்சக்கரவண்டி ஒன்று தனியார் வகுப்பிற்கு சென்றுகொண்டிருந்த வவுனியா குட்செட் வீதியை சேர்ந்த சைவப்பிரகாச கல்லூரியில் 2017 வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் விதுர்சினி மற்றும் கஜி ஆகிய இரண்டு மாணவிகள் மீது மோதியதில் இரண்டு மாணவிகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முச்சக்கர வண்டியில் மூவர் பயணித்ததாகவும் மூவரும் மது போதையில் இருந்ததாகவும் சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் ஒருநபர் தப்பித்து ஓடியுள்ளதுடன் ஒருவர் அகப்பட்டுள்ளார். அகப்பட்ட நபரே முச்சக்கர வண்டியின் உரிமையாளர் ஆகும். முச்சக்கர வண்டியினுள் மதுப் போத்தல்களும் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று வியாழக் கிழமை (08.09.2016) கொண்டாடபட்டது.
புனித அன்னை மரியாளின் பிறந்ததினமான இன்று பழமை வாய்ந்ததும் வரலாற்று சிறப்புமிக்க அடைக்கல அன்னையின் திருநாள் இன்று மிகவும் சிறப்பாக கொண்டாடபட்டது.
வவுனியா பங்குத்தந்தை அருட்பணி ச.சத்தியராஜ், அருட்பணி அ.லக்ஸ்ரன் டீ சில்வா, அருட்பணி மற்றும் ஓமந்தை பங்குத்தந்தை எஸ்.டக்ளஸ் மில்ரன் லோகு தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்ட கூட்டுத் திருப்பலியில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.
விசேட அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொண்டிருந்தார்.
இலங்கைப் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் அதிகமாக உள்ளது என இலங்கை புற்று நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் சங்கத் தலைவர் டொக்டர் தமயந்தி பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
ஒவ்வொரு ஆண்டிலும் மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் மட்டும் புற்று நோய் தொடர்பிலான 12000 பேர் பதிவாகின்றனர்.இதில் அதிகளவானவர்கள் மார்பகப் புற்று நோய் ஏற்பட்ட பெண்களாவர்.
மஹரமகவில் மட்டுமன்றி நாட்டின் ஏனைய வைத்தியசாலைகளிலும் மார்பகப் புற்று நோய் ஏற்பட்ட பெண்கள் சிகிச்சை பெற்றுக்கொள்கின்றனர்.
மார்பகப் புற்று நோய் ஏற்பட்ட பெண்களில் அதிகளவானவர்கள் 30 முதல் 40 வயது வரையிலானவர்களாகும்.
உரிய உடற்பயிற்சிகளில் ஈடுபடாமை, செயற்கை உணவுப் பொருட்களை அதிகளவில் உட்கொள்ளல் போன்ற பழக்க வழக்கங்களை உடையவர்கள் என தெரியவந்துள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு இந்த நோய் பற்றி போதிய தெளிவற்ற நிலைமை காணப்படுகின்றது.
பெண்களின் மார்பகங்களில் ஏதேனும் ஓர் மாற்றத்தை அவதானித்தால் உடனடியாக அரசாங்க வைத்தியசாலை ஒன்றுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வது உசிதமானது என டொக்டர் தமயந்தி பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சிறுமிகளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றத்தின் பேரில் விந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை தோட்ட மிடில் பிரிவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் பம்பரகலை தோட்ட மிடில் பிரிவைச் சேர்ந்த முத்துசாமி செல்லையா (வயது 67) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 4 வயது மற்றும் 6 வயதுடைய இரு சிறுமிகளையே அவர் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை விந்துலை பொலிஸார் நேற்று இரவு கைது செய்ததுடன் இன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு சிறுமிகள் இருவரும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர் குறித்த இரு சிறுமிகளையும் மாடுகள் வளர்க்கும் தொழுவத்திற்கு அழைத்து சென்றே இவ்வாறு வல்லுறவுக்குட்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சைபீரியாவின் வட பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் Daldykan நதியானது திடீரென்று ரத்தச் சிவப்பாக மாறியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
சைபீரியாவின் வட பகுதியில் பெரும்பாலான மக்களுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரமாக அமைந்துள்ள நதி Daldykan. இந்த நதியில் இருந்துதான் இப்பகுதியில் உள்ள பெருவாரியான ரசாயன ஆலைகளும் தண்ணீர் சேகரித்து வருகின்றன.
மட்டுமின்றி அந்த ஆலைகளின் கழிவுகளும் இந்த நதியிலேயே கொட்டப்படுவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பனிக்காலத்தில் மட்டுமே பெருக்கெடுத்து ஓடாத இந்த நதியானது திடீரென்று ரத்தச் சிவப்பகியுள்ளது. இதன் முக்கிய காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள நிக்கல் ரசாயன ஆலையை மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Nadezhda Metallurgical Plant என அறியப்படும் இந்த ஆலையில் இருந்து கொட்டப்படும் கழிவு நீரால் தற்போது இந்த நதி ரத்தச் சிவப்பாக உருமாறியுள்ளது. இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்களால் தங்களது தேவைகளுக்கு இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குறிப்பிட்ட ஆலையானது, சுற்றுச்சூழல் குறித்த அனைத்துவகை முன்னேற்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மட்டுமின்றி நதியின் தண்ணீரில் ஏற்பட்ட மாறுதலுக்கு பின்னர் கழிவு நீரை வெளியேற்றுவதை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட நதி சிவப்பாக உருமாறுவதற்கு இந்த ஆலையின் கழிவுகள் அல்ல எனவும் உறுதிபட தெரிவித்துள்ளது.
ஆனால் ஆலை நிர்வாகத்தின் இந்த பேச்சுக்களை அப்பகுதி மக்கள் நம்புவதாக இல்லை. மட்டுமின்றி இந்த நதியானது சிவப்பாக மாறுவது இது முதன் முறையல்ல என தெரிவித்துள்ள மக்கள், கடும் பனிப்பொழிவு காலகட்டங்களில் இப்பகுதியில் பனியும் சிவப்பாக மாறும் என தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது மகளை திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
Oklahoma மாநிலத்தை சேர்ந்த Patricia Spann (43) என்பவர் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது மகளை Misty Spann(25) சட்டரீதியாக திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் மனித சேவை துறையினர் வீடுகளில் நடத்திய குழந்தைகள் நல விசாரணையின் போது, இவர்களின் முறைகேடான திருமண உறவை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், இப்பெண்மணி தனது மகனை கடந்த 2008 ஆம் ஆண்டு சட்டரீதியாக திருமணம் செய்துள்ளார் என்ற தகவலும் தெரியவந்துள்ளது.
இந்த முறைகேடான திருமணம் புரிந்த குற்றத்திற்காக தாய், மகள் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்த திருமணத்தின் பின்னணி குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் தெரியவராத நிலையில், இதுகுறித்து தாய் Patricia Spann கூறியதாவது, நான் எவ்வித சட்டத்தினையும் மீறவில்லை. எனது மகளின் பிறப்பு சான்றிதழில் எனது பெயர் இல்லாத காரணத்தால் இந்த திருமணம் பெரிய பிரச்சனையாக எனக்கு தெரியவரவில்லை என கூறியுள்ளார்.
தற்போது, இந்த திருமணம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தினால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் முதியோர் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இன்று (08.09.2016) வியாழக்கிழமை கல்லூரி முன்றலில் பாடசாலை முதல்வர் திரு சுப்பையா அமிர்தலிங்கம் தலைமையில் ‘முதியோரைப் பேனுவோம்’ நிகழ்வு நடைபெற்றது.
முதியோரின் மகத்துவம், மாணவர்கள் முதியோரைப் பேணுவதன் அவசியம், இளைய சமூகத்தினர் வளர்ச்சியில் முதியோர்கள் முக்கியத்துவம், முதியோரின் விழுமியங்கள் என்பன தொடர்பாக வவுனியா மாவட்ட சமுகசேவைகள் உத்தியோகத்தர் திரு.செ.ஸ்ரீனிவாசன் அவர்கள் மாணவர்கள் மத்தியில் விளக்கவுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பண்டாரிகுளம் முதியோர் சங்க செயலாளர் திரு.சண்முகராஜா, பொருளாளர் திரு.அருளானந்தம் மற்றும் உறுப்பினர்கள் சமூகசேவை உத்தியோகத்தர் ச.சோபனா, அபிவிருத்தி உத்தியோகத்தர், அ. தவீசன், அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.வசந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
‘தலைமுறைப் பாகுபாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தல்’ எனும் தொனிப்பொருளில் இவ்வருடம் வடமாகாணத்தில் வடமாகாண சமூக சேவைகள் திணைக்களம் முதியோர் தினத்தை கொண்டாடுகிறது.
அதிபர், ஆசிரியர், மாணவர்கள் ஆர்வமாக நிகழ்வில் கலந்து கொண்டதுடன் முதியோருக்கான கௌரவத்தையும் வழங்கினர். தொடர்ந்து இந்நிகழ்வுகள் ஏனைய பாடசாலை மட்டங்களில் நடைபெறவுள்ளன.
அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த மொனிக்கா றிலே 700 இறாத்தல் நிறையுடையவர். இவர் உலகிலேயே பருமனான பெண்ணாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்கும் முகமாக தினசரி 8,000 கலோரி சக்திப் பெறுமானமுடைய உணவை உட்கொண்டு வருகிறார்.
போர்ட் வோர்த் நகரைச் சேர்ந்த மொனிக்கா றிலே (27 வயது) தனது நிறையை 1,000 இறாத்தலாக அதிகரிப்பதே தனது இலட்சியம் என கூறுகிறார்.
அசைய முடியாத நிலையிலுள்ள அவருக்கு உணவை நேரத்துக்கு நேரம் வழங்கி அவரது இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கு அவரது காதலரான சிட் றிலே (25 வயது) உதவி வருகிறார்.
மேற்படி ஜோடி திருமணம் செய்யாத நிலையில் இணைந்து வாழ்கின்ற போதும் மொனிக்கா சிட் றிலேயின் பெயரை தனது பெயருடன் இணைத்துக் கொண்டுள்ளார்.
தனது காதலர் தனக்கு 3,500 கலோரி சக்திப் பெறுமானமுடைய கிறீம் கலவை உணவை வழங்குவதை தான் மிகவும் விரும்புவதாக மொனிக்கா தெரிவித்தார்.
1,000 இறாத்தல் நிறையை அடையும் வரை உண்பதை நிறுத்தப் போவதில்லை என அவர் கூறுகிறார்.
220 இறாத்தல் நிறையுடைய சிட், 91 சுற்றளவைக் கொண்ட மொனிக்காவின் இராட்சத வயிறுக்கு போதுமான உணவை சமைத்து வழங்குவதில் ஈடுபட்டு வருகிறார்.
மொனிக்கா தினசரி 6 சோஸேஜ் உணவு, ஒரு பெரிய பாத்திரத்தில் இனிப்பான சீரியல் உணவு, 4 கோழி இறைச்சி சான்ட்விச் உணவுகள், பொரியல்கள், 30 வாட்டப்பட்ட கோழி இறைச்சி துண்டுகள், பாற்கட்டி மற்றும் ஒரு கலன் ஐஸ்கிறீம் உள்ளடங்கலான உணவுகளை உண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
கல்நேவ – மல்படிகல பகுதியில் சிறுமி ஒருவரை ஒரு வருட காலத்திற்கு மேல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்திய இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞன் 21 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞன் கொலை ஒன்றுடன் தொடர்புடை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுப்பட்டவரென பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞனை இன்று (08) கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படை வீரர் ஒருவரின் பின்புறத்தின் இரு இடங்களில் (பிருஸ்ட பகுதி) துளையிட்டிருந்த கொங்கிறீட் கம்பிகள் இரண்டினை ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை யின் மூலம் அகற்றியுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு கதிர்காமம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்றில் இருந்து இறங்கிய குறித்த 34 வயதான கடற்படை வீரர் வீதியில் வெட்டப்பட்டிருந்த 25 அடி ஆழமான குழியொன்றில் தவறுதலாக வீழ்திருந்த நிலையில் கொங்கிறீட் இடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த கொங்கிறீட் கம்பிகள் இரண்டு அவரது தொடைப் பகுதியினை துளைத்திருந்தன.
இதனையடுத்து குறித்த கொங்கிறீட் கம்பியுடன், காயமடைந்த கடற்படை வீரர் திஸ்ஸமஹாராம வைத்தியசாலைக்கும் பின்னர் அங்கிருந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
அங்கு பல மணித்தியாலங்களாக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் அக்கம்பிகள் அகற்றப்பட்டிருந்தாக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
ஒவ்வொரு ஆண்டிலும் ஐ போனின் புதிய படைப்பினை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் அப்பிள் நிறுவனம் ஐபோன் 7 இனை சற்று முன்னர் வௌியிட்டது.
பல்வேறு புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக வௌிவரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த புதிய வகை ஐபோனில், வழக்கமாக மற்ற கைத்தொலைபேசிகளில் உள்ளதைப் போன்று, ஹெட்போன் எனப்படும் காதுகளிலில் பொருத்திக் கேட்கும் சாதனத்தை இணைக்கும் வசதி இருக்காது.
ஹெட்போன் சொக்கெட் என்ற இணைப்பைப் பொருத்தும் இடத்தில், மற்ற பாகங்களைப் பொருத்த முடியும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. இந்த முடிவால், வயர் இணைப்பு இல்லாத, காதுகளில் பொருத்திக் கேட்கும் வசதிகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க இந்த தைரியமான முடிவு வழிவகுக்கும் என அந் நிறுவனம் கருதுகிறது.
வயர் இல்லாத, ஏர்பாட்ஸ் என்ற கூறப்படும் காதில் பொருத்திக் கேட்கும் புதிய சாதனத்தையும் ஆப்பிள் வெளியிட்டுள்ளது.
ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவு குறித்து, நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஒலித்திறன் சிறப்பாக இருக்க வேண்டுமானால், வயருடன் கூடிய ஹெட்போன்தான் சிறந்தது என்பது நிபுணர்களின் வாதம்.
ஆனால், 159 அமெரிக்க டொலர் அல்லது 119 பவுண்ஸ் மதிப்புடைய தனது ஏர்பாட் கருவிகளை பயன்படுத்துவதில் பல சாதக அம்சங்கள் உள்ளதாக அப்பிள் வாதிடுகிறது. வழக்கமான ப்ளூடூத் ஹெட்செட்களைவிட, வயர் இல்லாத சாதனங்களை விரைவில் இணைக்க முடியும் என அது கூறுகிறது. ஏர்பாட் சாதனத்தை காதுகளில் இருந்து எடுத்துவிட்டால், இசை தானாக நின்றுவிடும் என்றும் தெரிவிக்கிறது.
ஏர்பாட் சார்ஜ் செய்தபிறகு, ஐந்து மணி நேரத்துக்கு நீடிக்கும் என்கிறது அப்பிள்.
அமெரிக்காவை மையமாகக் கொண்ட அப்பிள் நிறுவனம், சன் பிரான்சிஸ்கோவில் புதிய ஐபோனை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.
புதிய ஐபோனில், ஹோம் பட்டனில் எந்த அளவுக்கு அழுத்தம் தரப்படுகிறது என்பதை உணர்ந்து, அதற்கு ஏற்றபடி அதிர்வு (வைப்ரேஷன்) அடிப்படையிலான பதில்களைத் தரும்.
புதிய போன், சுமார் 30 நிமிடங்கள் வரை, 3.2 அடி ஆழமுள்ள தண்ணீரில் போடலாம். எந்த பாதிப்பும் ஏற்படாது என அந் நிறுவனம் கூறுகிறது.
பெரிய ஐபோன் 7 பிளஸ், பின்புறம், வைட் ஆங்கிள் மற்றும் டெலி போட்டோ ஆகிய இரண்டு லென்ஸ்களுடன் கூடிய கமராவை வழங்குகிறது. இதன் மூலம், படத்தின் தரம் குறையாமல் நெருங்கிய (குளோஸப்) காட்சி எடுக்கவும், முன்பிருந்ததை விட 10 எக்ஸ் ஜூம் பொருத்தவும் வழியேற்படுத்துகிறது. கமரா செயலி மூலம் புகைப்படங்களை கிராப் செய்து கொள்ள முடியும்.
இதுபோன்ற வசதி, எல்.ஜியின் ஜி5 செல்பேசியில் முன்னமே உள்ளது.
புதிய ஐபோனில் இரு பக்கமும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், ஒலியளவு ஐபோன் 6 ஐ விட இருமடங்காக இருக்கும் என்கிறது அப்பிள்.
அப்பிள் ஸ்மார்ட் கைக் கடிகார வரிசையில் புதிய கைக்கடிகாரத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
அப்பிள் வட்ச் 2 கைக்கடிகாரத்தை 164 அடி ஆழம் வரை தண்ணீருக்குள் கொண்டு செல்லலாம். அதாவது நீச்சலின்போதும் இதைப் பயன்படுத்தலாம்.
ஜிபிஎஸ் வசதியுடன் புதிய செயலிகளும் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விநாயகர் சதுர்த்தியின் போது பூஜைக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் தற்போது நடைபெற்று வருகிறது.
அதன்படி கர்நாடக மாநிலம் அடோனஹள்ளியில் செல்லும் துங்கா நதியில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக நாட்டுப்படகில் விநாயகர் சிலையுடன் 30க்கும் மேற்பட்டவர்கள் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அதிக பாரம் காரணமாக ஆற்றின் நடுப்பகுதியில் படகு கவிழ்ந்தது. இதில் 12 பேர் நீரில் மூழ்கினர். ஆற்றில் மூழ்கியவர்களை தேடுவதற்காக போலீசாருடன், நீச்சல் வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்கள் தீவிரமாக தேடி 3 பேரின் சடலங்களை மீட்டனர். மீதமுள்ளவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்த பரிதாப சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்ரம் நடிப்பில் மிக பிரம்மாண்டமான செலவில் உருவாகியுள்ள படம் இருமுகன். இப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது . தமிழகத்தில் மட்டும் மொத்தம் 350 திரையரங்குகளில் வெளியாகிறது.
ஒரு பெரிய நடிகரின் படம் நாளை வெளியாகிறது என்ற ஒரு ஆர்ப்பாட்டமே ரசிகர்களிடம் மற்றும் பொதுமக்களிடம் இல்லை. இப்படத்தின் டிக்கெட் முன்பதிவும் சுமாராகத்தான் இருக்கின்றது.
இப்படத்தின் விளம்பரம் சரியாக மக்களிடம் சென்று அடையவில்லையே என்ற பேச்சு நிலவி வருகிறது.
இப்படத்தின் மேல் மிகுந்த நம்பிக்கையில் உள்ளார் விக்ரம், கண்டிப்பாக படம் பார்த்து பிறகு மக்களின் விமர்சனம் எல்லாரிடத்திலும் சென்று அடையும் என்று நம்பியுள்ளது படக்குழு.
பிரம்மாண்டமாக செலவுசெய்து எடுத்தாலும் அதற்க்கான விளம்பரம் யுக்தி ரொம்ப முக்கியம் என்பது இப்போதையே சினிமா கலாச்சாரம்.
படத்தின் பட்ஜெட்டை விட இப்போது நடிகர், நடிகைகளின் சம்பள பட்டியல் அதிகமாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ரஜினி, கமல், அஜித், விஜய் அனைவரின் புதிய சம்பளப் பட்டியலை பார்ப்போம்.
ரஜினி – கபாலி படத்தில் 70 கோடிக்கு தாண்டியதாக கூறப்படுகிறது.
கமல் – 40 கோடி வரை சம்பளம் வாங்குவார் என்கிறார்கள்.
அஜித் – படம் முடிந்து நடக்கும் வியாபாரத்தை பொறுத்து ஷேர் வாங்கிகொள்கிறார்.
விஜய் – 30 கோடியை தொட்டிருக்கும்.
சூர்யா – 20 கோடி வரை
தனுஷ் – 15ல் இருந்து 18 கோடிக்கு புரொமோஷன் பெற்றிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் – காக்கி சட்டையில் புரொமோஷன் கிடைத்ததால் 15 கோடிக்கு வந்திருப்பார் என கூறப்படுகிறது.
விக்ரம் – 20 கோடி, நாளை வெளியாகும் இருமுகன் படம் தான் சம்பள உயர்வு பொறுத்து இருக்கிறது.
கார்த்தி – 8 கோடி
விஷால் – 20 கோடி.. உங்களால நம்ப முடிஞ்சா நம்புங்க.
சிம்பு – 4ல் இருந்து 6 ஆக இருக்கலாம் என்று தெரிகிறது.
ஆர்யா – 5 கோடி
விஜய்சேதுபதி – 15 கோடி
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனை கிராமத்தின் வீடொன்றில் கனவன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மனைவி நஞ்சருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இன்று(08.09.2016) வியாழக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. மட்டக்களப்பு கல்லடி இசை நடனக்கல்லூரி வீதி நொச்சிமுனைக் கிராமத்திலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த வீதியின் வீடொன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பதாக காததான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.
வெள்ளத்தம்பி மகேஸ்வரன்(26) என்பவரே இந்த சம்பவத்தில வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இவரது மனைவியான மகேஸ்வரன் சிந்து (26) என்பவர் நஞ்சருந்திய நிலையில் காணப்பட்டுள்ளார். இவரை அயலவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கு அனுமதித்துள்ளனர்.
குறித்த வெள்ளத்தம்பி மகேஸ்வரனின் சடலத்தில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாமெனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
கொத்தியபுரத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் திருமணமாகி ஒரு வருடமாகின்றது. இவர்கள் குறித்த நொச்சிமுனைக் கிராமத்தில் வீடொன்றில் வாடகைக்கு வசித்து வந்ததாகவும், இவர்களிருவருக்கும் குழந்தைகள் இல்லையெனவும், இருவருக்குமிடையில் அடிக்கடி தகராறு இடம் பெற்று வந்த நிலையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கனவனை மனைவி வெட்டி கொலை செய்திருக்கலாமெனவும் கனவனை கொலை செய்து விட்டு மனைவி நஞ்சருந்தியிருக்கலாமெனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இவர்களின் வீட்டில் அடிக்கடி சண்டை பிடிக்கும் சத்தம் கேட்கும் எனவும் வழமைபோன்று இரவும் சண்டையிடும் சத்தம் கேட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் தடயவியல் அதிகாரிகள் அங்கு பரிசோதனைகளை மேற் கொண்டனர்.
இச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணகளை மேற் கொண்டு வருகின்றனர்.