இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணி 04 விக்கட்டுக்களால் இந்தப் போட்டியில் வெற்றியீட்டியது.
இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக தனஞ்சய டி சில்வா 62 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இதனையடுத்து 129 என்ற வெற்றி இலக்கை நோக்கி அவுஸ்திரேலிய அணி ஆட்டத்தை ஆரம்பித்திருந்தது.
அந்த அணி சார்பாக மெக்ஸ்வெல் 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இறுதியாக 130 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட அவுஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் வெற்றி மூலம் அவுஸ்திரேலிய அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இதேவேளை இந்தப் போட்டி இலங்கை அணி வீரர் டீ.எம் தில்ஷான் விளையாடிய இறுதிப் போட்டி என்பதும் இங்கு கூறத்தக்கது.
அதன்படி தனது இறுதிப் போட்டியில் டீ.எம்.தில்ஷான் 08 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அங்கியைக் களைந்து விட்டு சுத்தமான கையுடன் அரங்கத்திற்கு வருமாறு தமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கடிதமொன்றினூடாகவே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளார்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பதம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அதன் நாணயத்தை இழந்துள்ளதாகவும் இதனால் பொதுமக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை எனவும் ஆனந்தசங்கரி அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
தமிழ் மக்களின் பரிதாபகரமான நிலையை உணராமல் கூட்டமைப்பு உறுப்பினர் காலம் கடத்தி வருவதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பாதுகாவலர்கள் என தம்மைப் பறைசாற்றி, விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைவிட்டு விட்டதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணி சில நோக்கங்களை அடைவதற்கு எத்தகைய கஷ்டங்களுக்கும் முகம்கொடுக்கத் தயாராக உள்ளது என்ற தலைப்பில் ஆறு விடயங்களை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதில் முதலாவதாக, இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாதவாறு தடுக்க திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும், அவ்வாறான நிலைமைகளைத் தடுப்பதற்கு தமிழர் விடுதலை கூட்டணி செயற்படுவதாகவும் இராணுவத்தினருக்கு பதிலாக பொலிஸாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிகை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டதாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரையும் எதுவித விசாரணைகளுமின்றி பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துததல் உள்ளிட்ட ஆறு விடயங்கள் குறித்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் ஸிக்கா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, குடியரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 100 நுளம்புகளை போத்தலொன்றில் அடைத்து பாராளுமன்றத்திற்கு எடுத்துச்சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஃப்ளோரிடா மாகாணத்தில் ஸிக்கா வைரஸின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதாகவும் இதுவரையில் அரசு சார்பில் நோய் பரவலைத் தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாததைத் தாம் கண்டிப்பதாகவும் குடியரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான டேவிட் ஜோலி குறிப்பிட்டுள்ளார்.
ஸிக்கா வைரஸைப் பரப்பும் 100 நுளம்புகளைப் பிடித்து போத்தலில் அடைத்து பாராளுமன்றம் சென்ற டேவிட் ஜோலி, நிலைமையின் தீவிரத்தையும் அச்சுறுத்தலையும் உணர்த்தவே தாம் இந்த வழிமுறையைக் கையாண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் ஆங்குல் மாவட்டத்தில் உள்ள மனித்ரி பகுதியில் பஸ் ஒன்று பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது 50 அடி கால்வாயில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 21 பேர் பலியாகினர்.
இந்த விபத்தில் காயமடைந்த 25 பேரில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்திலேயே 14 பேரும், காயத்தினால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்களில் தெரியவந்துள்ளது.
சுமார் 50 பேருடன் பாலத்தில் பயணித்த போது நெரிசல் காரணமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவற்றில் பஸ்ஸினை மோதியுள்ளார்.
இதன்போது, பஸ் சுவற்றை உடைத்துக் கொண்டு கால்வாயில் வீழ்ந்துள்ளது.
வவுனியா இலங்கை போக்குவரத்து சாலையில் இன்றைய தினம் (09.09.2016) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இணைந்த நேர அட்டவணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லையென இ.போ.ச இணைந்த தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.
வடமாகாண சபையினால் ஒரு பாதையில் தனியார் பேரூந்துக்கு 60 வீத சேவையும் இலங்கை போக்குவரத்து சபைக்கு 40 வீத சேவையும் வழங்கியிருப்பதுடன் இன்று இலங்கை போக்குவரத்துசபை சிறந்த சேவையை வழங்கிவரும் வவுனியா – யாழ்ப்பாணம், வவுனியா – மன்னார், மன்னார் – யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு போன்ற சில பாதைகளுக்கு மட்டுமே பாதை அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அட்டவனையினால் எமது சாலைக்கு வருமான வீழ்ச்சி ஏற்படும்போது 2500 மேற்பட்ட எமது குடும்பத்தின் நிலை கேள்விக்குறியாகின்றது. அத்துடன் பருவகால சீட்டு பெற்று உரிய நேரத்துக்கு செல்லவேண்டிய மாணவர்கள், உத்தியோகத்தர்களின் பயணங்களிலும் தாமதம் ஏற்படும்.
அத்துடன் எம்மால் பணியாற்றி வந்த முக்கிய நேரங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தனியார் பேரூந்துகள் அதிகம் பயணிக்கும் வழித்தடங்களுக்கு நேர அட்டவணை தயாரிக்கப்படவில்லை. எனவே ஏனைய இடங்களைப்போல் 50 இற்கு 50 இற்கு என்ற வீதத்தில் சேவையில் ஈடுபடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டால் மாத்திரமே நாம் இணைந்த நேர அட்டவணைக்கு ஒத்துழைப்போம்.
அத்துடன் பிராந்திய முகாமையாளர் பிராந்திய செயலாற்று முகாமையாளர், சாலை முகாமையாளர்களுக்கு நாம் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புவதாவது ‘உங்கள் பதவிக்காகவோ வேறு பதவிக்காகவோ தொழிற்சங்கத்தின் அனுமதி இன்றி இணைந்த சேவைக்கு கையொப்பமிட்டால் பதவிகளில் இருக்க முடியாது என்பதுடன் வட மாகாணத்தில் எந்த சாலையிலும் நீங்கள் பணியாற்ற நாம் அனுமதிக்கப் போவதில்லை.
இணைந்த நேர அட்டவணை பக்கச்சார்பானதாக காணப்படுவதனால் நாம் இதற்கு தயாராகவில்லையென வவுனியா இலங்கை போக்குவரத்து சாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அம்பேபுஸ்ஸ – குருணாகல் வீதியில் நான்கல்ல பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அலவ்வ, புஜ்ஜொமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நபர் ஒருவரை கொலை செய்த குற்றவாளிகள் மூன்று பேருக்கு நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
13 வருடங்களுக்கு முன்றர் இடம்பெற்ற கொலை ஒன்று தொடர்பில் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக இணங்காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் உறவுக்கார மகன் ஆகிய மூவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.
2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06ம் திகதி தலவாக்கலை, டயகம பிரதேசத்தில் 37 வயதுடைய ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பாக அதே பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மூன்று நபர்களுக்கும் எதிராக நுவரெலிய மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால் மூவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி லலித் ஏக்கநாயக்க தீர்ப்பளித்தார்.
இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 60 வயது, 37 வயது மற்றும் 32 வயதுடைய மூவர் என்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழவள நாட்டில் வடபால் யாழ் வேலணை தீபகற்பத்தில் இலந்தைவன திவ்விய திருத்தலத்தில்திருவருள் பாலித்து வரும் ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானுக்கும் விநாயகர் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்குமான மகா கும்பாபிசேகமும் பஞ்சதள இராஜகோபுர கலச கும்பாபிசேகமும் நேற்று 08.09.2016 வியாழகிழமை காலை இடம்பெற்றது.
மேற்படி ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்வுகள் வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ .ந.பாலசுப்ரமணிய குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி ஆலய கும்பாபிசேகத்தில் வேலணை பிரதேசத்தை சேர்ந்த உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் விநாயகபெருமானின் அடியவர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்!
ஆலயத்தின் கும்பாபிசேகத்தை முன்னிட்டு கண்டியிலிருந்து வருகை தந்த 22 வயதுடைய காஞ்சனா என்கிற பெண்யானை கும்பாபிசேக கிரியை நிகழ்வுகள் முழுவதிலும் நான்கு நாட்களும் பங்குபற்றியதுடன் வேலணை பிரதேத்தில் உள்ள ஆலயங்களிலும் வழிபாட்டினை மேற்கொண்டது.
வவுனியா இறம்பைக்குளம் பகுதியிலுள்ள முன்பள்ளிக்கு முன்பாக முன்பள்ளி மாணவர்கள் செல்லும் பாதையில் கனரக வாகனம் தரித்து நிற்பதாகவும் குறிப்பாக பாடசாலை நேரத்தில் காலை பிற்பகல் போன்ற நேரத்தில் தரித்து நிற்பதால் மாணவர்களை அழைத்துச் செல்ல வரும் பெற்றோர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் பெரிதும் அசௌகரியங்களை எதிர் கொள்வதாகவும் அவ்விடத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாதகவும் சில சமயங்கள் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் முன்பள்ளி பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
அவ்விடத்தில் வாகனங்கள் தரித்து நின்று பொருட்களை ஏற்றி இறக்கிச் செல்வதால் அப்பகுதியில் விபத்து ஏற்படவாய்ப்புக்கள் இருப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வவுனியா வர்த்தக சங்க செயலாளரிடம் முறையிட்டபோது சாரதிகளின் அசமந்தப் போக்கு காரணமாகவே இச் செயற்பாடு இடம்பெற்று வருவதாதகவும் சாரதிகளுக்கு வாகனங்கள் எங்கே நிறுத்துவது என்று தெரிவதில்லை, சாரிதிகள் வழிப்புணர்வுடன் செயற்பட்டால் மட்டுமே இவற்றை தடுக்க முடியும் என்று தெரிவித்தார்.
முன்பள்ளியின் இயக்குநரும் பல தடவைகள் சாரதிகளிடமும் அப்பகுதியில் இயங்கும் தனியார் நிலையத்தினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோதும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரியவருகின்றது.
எனது தலையில் துப்ப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதே வேறு நபர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் மேல் நீதிமன்றம் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்திருந்தது.
நேற்றைய வழக்கு தீர்ப்பின் போது நீதிபதிகளிடம் துமிந்த இதனைத் தெரிவித்திருந்தார். எனக்கு எதுவும் தெரியாது.
எனது தலைக்கு துப்பாக்கிச் சூடு பட்டது என்பதே வேறு நபர்கள் சொல்லித்தான் அறிந்துகொண்டேன். நான் எந்தவொரு விடயத்துடனும் தொடர்புபடவில்லை. என்னை குற்றமற்றவர் என அறிவித்து விடுதலை செய்யவும் என கூறியிருந்தார்.
மரண தண்டனை விதிக்கப்பட முன்னதாக ஏதேனும் சொல்ல வேண்டியிருந்தால் சொல்ல முடியும் என நீதிபதிகள் துமிந்தவிடம் கூறிய போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூலம் இதுவரை 63 இலட்ச வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 33 இலட்சம் முச்சக்கர வண்டிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி 20 பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் முச்சக்கர வண்டியை வைத்திருப்பதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த ஆண்டை பார்க்கிலும், இந்த வருடத்தின் கடந்த மாதங்களில் வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 106ஆக குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிர் ஆபத்தக்களை குறைக்கும் நோக்கில் சர்வதேச அளவில் ஐக்கிய நாடுகளின் உலக அமைப்பு 2010 தொடக்கம் 2020ஆம் ஆண்டுகளை வீதி விபத்துக்களை குறைக்கும் ஆண்டாக பெயரிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவி ஒருவர், பல்கலைக்கழக கட்டணங்களை செலுத்த முடியாததால் நாடு கடத்தப்படும் நிலையை எதிர்நோக்கியபோது, அவரின் நண்பி ஒருவரின் ஏற்பாட்டில் அம்மாணவிக்காக “கிரவுட்ஃபண்ட்ஸ்” மூலம் பொதுமக்களிடமிருந்து சுமார் 19,000 அவுஸ்திரேலிய டொலர் (சுமார் 21 லட்சம் ரூபா) நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.
சந்துனி சுலோச்சனா எனும் இம்மாணவி அவுஸ்திரேலியாவின் மெல் பேர்ன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாத் துறையில் கல்வி கற்கிறார். ஆனால், சந்துனி சுலோச்சனாவின் பெற்றோரால் பல்கலைக்கழக கட்டணங்களை செலுத்த முடியாமல் அவர் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டார்.
பகுதி நேரமாக சந்துனி தொழில் புரிந்த போதிலும் அவரால்செலவுகளை சமாளிக்க முடியவில்லை. முந்தைய அரையாண்டுக்கான கட்டணம் பாக்கி மற்றும் புதிய அரையாண்டுக் கட்டணமாக அவர் 20,549 அவுஸ்திரேலிய டொலர்களாக செலுத்த வேண்டியிருந்ததாம்.
முந்தைய அரையாண்டு கட்டணமான 4549 டொலர்களை ஓகஸ்ட் இறுதிக்குள் செலுத்தாவிட்டால் அவரின் விஸா ரத்துச் செய்யப்பட்டு அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் நிலையை எதிர்நோக்கினாராம்.
இந்நிலையில், சந்துனி சுலோச்சனாவுக்காக பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டுவதற்கு அவரின் நெருங்கிய நண்பியான மற்றொரு மாணவி தவீஷா ரம்புக்வெல முன்வந்தார். இதன்படி, பொதுமக்களிடமிருந்து நிதி சேகரிப்பதற்கு உதவும் GoFundMe (கோஃபண்ட்மீ) எனும் இணையத்தளத்தில் சந்தினிக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தார் தவீஷா ரம்புக்வெல்ல.
ஆகஸ்ட் 26 ஆம் திகதி மேற்படி இணையத்தளத்தில் தவீஷா வெளியிட்ட தகவலில், “சந்துனி மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் தனது இறுதி அரையாண்டில் உள்ளார். அவர் தற்போது தொழில் புரிகிறார்.
ஆனால் அவர் சம்பாதிக்கும் பணம் வாடகைக்கே செலவாகியது. அவரின் பெற்றோரால் கட்டணங்களை செலுத்த முடியவில்லை. கடினமான இரு வருட கல்வியின் பின்னர் அவர் பொருளாதார ரீதியில் மிக நெருக்கடியில் உள்ளார். கடந்த அரையாண்டுக்கான கட்டணத்தில் 4549 டொலர்கள் (சுமார் 516,000 ரூபா) நிலுவையாக உள்ளன” எனத் தெரிவித்திருந்தார்.
“இது தவிர, தற்போதைய அரையாண்டுக்காக 16,000 டொலர்களை (சுமார் 18 லட்சம் ரூபா) செலுத்த வேண்டும்.
மாத இறுதிக்குள் கடந்த அரையாண்டுக் கட்டண நிலுவையை செலுத்தாவிட்டால் அவரின் விஸா ரத்துச் செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படும் நிலைலய எதிர்நோக்கியுள்ளார். செப்டெம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் தற்போதைய அரையாண்டின் பாதித் தொகையான 8000 டொலர்களையும் செலுத்த வேண்டும்.
எனவே, அவரின் கடன்களை செலுத்தி அவர் பட்டதாரியாகுவதற்கு உதவுங்கள். அவர் அருமையான நபர். மிகக் கடினமாக பாடுபடுபவர்” எனவும் தவீஷா ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.
அதையடுத்து 12 நாட்களில் 145 பேர் மூலம் 19,069 டொலர் (சுமார் 21 லட்சம் ரூபா) நிதி சேகரிக்கப்பட்டிருந்தது. 10 டொலர்கள் முதல் 300 டொலர்கள் வரை பலர் நன்கொடை வழங்கியிருந்தனர்.
எவ்வாறெனினும், சிலரிடம் சந்துனி உதவி கோரியபோதிலும் எவரும் உதவ முன்வராத நிலையிலேயே, சந்துனிக்காக பொதுமக்களிடம் பணம் திரட்ட தான் நடவடிக்கை மேற்கொண்டதாக தவீஷா ரம்புக்வெல கூறியுள்ளார்.
“தமது கல்விக் கட்டணங்களை செலுத்த மக்கள் நன்கொடை வழங்கியதால் சந்துனி மிக மகிழ்ச்சியடைந்துள்ளார். தனக்காக மக்கள் ஆதரவு அளித்தமை தொடர்பில் அவர் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார் என தவீஷா ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, சம்பூரில் இடம்பெற்ற சிறுமியின் கொலை தொடர்பில் 16 வயதான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிறுமி நேற்று காட்டுப் பகுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தநிலையில் கொலை என்று சந்தேகிக்கப்படும் இந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த 16வயதான ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காட்டுப் பகுதியில் ஒழிந்திருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தின் அலங்கார நுழைவாயில் திறப்பு விழாவும், சாதனையாளர்கள் கெளரவிப்பும் நேற்று (08.09.2016 வியாழக்கிழமை வித்தியாலய முதல்வர் திருமதி எம்.எ.மோகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ் நிகழ்வின் முதல் நிகழ்வாக பிரதம அதிதியாக கலந்து கொண்ட புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் அலங்கார நுழைவாயில் திறந்துவைக்கப்பட்டது.
தொடர்ந்து குறித்த பாடசாலை மற்றும் அயல் பாடசாலைகளில் கல்வி கற்று தரம் 5 புலமைப்பரிசில், மற்றும் க.பொ.த(சா/த) பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட திருநாவற்குளம் கிராம மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய சாரணர் துருப்பில் முதல் ஜனாதிபதி விருதினை பெற்றுக்கொண்ட மாணவனும், வவுனியா மாவட்டத்தின் 44 ஆவது ஜனாதிபதி சாரணனுமான செல்வன் பிரான்சிஸ் கெர்சோன் அவர்களிற்கு புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் அதிதிகள் முன்னிலையில் வைத்து கெளரவிப்பு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் நிகழ்வில் சிறப்பு அதிதியாக வட மாகாண சபை உறுப்பினர் திரு கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களும் கெளரவ அதிதிகளாக வவுனியா தெற்கு கல்வி வலய பணிப்பாளர் திரு மு.இராதாகிருஷ்ணன், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), பாடசாலை மேம்பாட்டுத் திட்ட வலய பிரதிநிதி திருமதி உபுல் சுஜாதா ஆகியோருடன் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை – சம்பூர் – நீலாங்கேணி பகுதியில் நான்கு வயது சிறுமியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம் அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவருடையது என, அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேற்று (08.09.2016) வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் வீட்டிலிருந்த சிறுமி காணாமல் போயுள்ளதாக தெரியவந்ததையடுத்து, தேடுதலில் ஈடுபட்ட கிராம மக்கள் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
சிறுமி துஷ்பிரயோகம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுவதோடு, சந்தேகநபரான இளைஞரும் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.