பாலியல் தொந்தரவு பற்றி, பொலிசில் புகார் அளித்துள்ள பெண் ஊழியர்களுக்கு, அவரது வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள போது சம்பளத்துடன் கூடிய 3 மாதம் விடுமுறை அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் நேற்று பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக தொடர்ந்து புகார்கள் வருவதாக குறிப்பிட்டார்.
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டப்பிரிவு 12ன் படி, சம்பந்தப்பட்ட பெண்களுக்கு, அவரது வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள போது மூன்று மாதம் விடுமுறை வழங்கப்படும் என்று கூறினார்.
அதற்கு அந்த பெண் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும், பின்னர் குறிப்பிட்ட நிறுவனத்தாலோ அல்லது குழுவாலோ பரிந்துரை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதுவரை பெண் ஊழியர்கள் அளித்த பாலியல் புகார் குறித்த கேள்விக்கு, அவை குறித்த தகவல்கள் முறைப்படுத்தவில்லை என்று குறிப்பிட்டார்.
தவறான உறவுக்கு அழைத்தல், தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பெண்களுக்கு தொந்தரவு அளிப்பது, ஆபாச படங்களை காட்டுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பணியாற்றும் இடங்களில் பெண்கள் சந்திப்பதாக புகார் எழுந்துள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கொடூரமான கொலைச் சம்பவம் ஒன்று நேற்று அதிகாலை 4 மணியளவில் மாத்தறை பிரதேசப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மாத்தறை திககொட பிரதேசப்பகுதியில் வசிக்கும் சரத் ஜயரத்ன எனும் சந்தேக நபர் அவருடைய மனைவியான வொல்டர் (58) என்பவரை கூரிய ஆயுதம் கொண்டு கொடூரமாக குத்திக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கணவன் மனைவிக்கிடையில் அடிக்கடி சண்டை ஏற்படுவதாகவும், கணவர் மதுபோதைக்கு அடிமையானவர் எனவும், இவர் பலதடவைகள் மனைவிக்கு கொலை அச்சுருத்தல் விடுத்து வந்துள்ளார் எனவும் கிராமவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொலை தொடர்பில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தலைமறைவாகியுள்ள சந்தேக நபர் குறித்து தீவிரமாக தேடுதல் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவமொன்று அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அட்டன் ஸ்டிரதன் தோட்டத்தைச் சேர்ந்த வை.லக்மிதா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது, வீட்டு முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த மதில் உடைந்து சிறுமி மீது வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதில் படுகாயமடைந்த சிறுமி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக கணவனே மனைவியை காருடன் எரித்த சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
சென்னை, தேனாம்பேட்டை ஆலயம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா(29). இவருக்கு சுரேஷ் என்பவருடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு மேனகா என்ற மகள் உள்ளார்.
குடும்ப பிரச்சினை காரணமாக இவர்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்தனர். பின்னர், தன் மகள் மேனகாவுடன் தாய் வீட்டுக்கே பிரேமா சென்றுள்ளார்.
இதற்கிடையே நாகராஜன்(33) என்பவருடன் பிரேமாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழமுடிவு செய்தனர். அதன்படி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் நாகராஜனும் பிரேமாவும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு நாகராஜன் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் நாகராஜன், பிரேமாவுடன் தேனாம்பேட்டையிலேயே தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு யுஷ்வந்த்(4), நிஷந்த் ராஜ்(2) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இதற்கிடையே நாகராஜனின் தாய், உன் மனைவி குழந்தைகளை அழைத்து கொண்டு புதியதாக கட்டியுள்ள செங்கல்பட்டு வீட்டிற்கு வந்துவிடு என அழைத்துள்ளார். இதையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நாகராஜன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் செங்கல்பட்டில் உள்ள புதிய வீட்டில் வசித்து வந்தனர்.
அப்போது நாகராஜன் அம்மாவுக்கும் மனைவி பிரேமாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சண்டை போட்டு கொண்டு பிரேமா இரண்டு மகன்களுடனும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் நாகராஜன் செங்கல்பட்டிலேயே தாயுடன் வசித்து வந்துள்ளார். வாரத்திற்கு ஒருமுறை மட்டும் குழந்தைகளை நாகராஜன் வந்து பார்த்து, செலவுக்கு பணத்தை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரேமா உறவுக்காரர் கணேசன் என்பவரின் காரை எடுத்து கொண்டு நாகராஜன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை செங்கல்பட்டுக்கு அழைத்து செல்ல வந்துள்ளார்.
பின்னர் மனைவி மகன்களுடன் தனது உறவினர் காரில் புறப்பட்டு சென்றனர். காரை நாகராஜன் ஓட்டிச் சென்றார். நந்தனம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முதல் பிரதான சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது காரின் உள்ளே திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பிரேமா மற்றும் இளைய மகன் நிஷந்த் ராஜ் ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது. ஓடும் காரில் தீவிபத்து ஏற்பட்டதால் பொது மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தேனாம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த விபத்தால் நாகராஜன் மற்றும் மூத்த மகன் யஷ்வந்த் காயங்களின்றி உயிர்தப்பினர். காயமடைந்த இருவரையும் வைத்தியசாலையில் சேர்த்தனர்.
இதற்கிடையே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரேமா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
பிரேமா இறக்கும் முன்பு பொலிஸாரிடம் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ளதாவது, நாகராஜன் செங்கல்பட்டில் உள்ள வீட்டிற்கு பிரேமாவையும் இரண்டு மகன்களையும் அழைத்து கொண்டு சென்ற போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஓடும் காரிலேயே நாகராஜன் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து பிரேமா மீது ஊற்றி காருடன் தீவைத்துவிட்டு அவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிய பிரேமா தனது குழந்தைகளை காரில் இருந்து வெளியே தூக்கி வீசியதாக வாக்குமூலத்தில் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரேமாவின் மூத்த மகன் தெரிவித்திருப்பதாவது, “எனக்கு அப்பா செருப்பு வாங்கி கொடுத்தார். பின்னர் காரில் வீட்டிற்கு வரும் போது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை ஏற்பட்டது. அப்போது அம்மா, பையில் இருந்த பெட்ரோலை எடுத்து மேலே ஊற்றி தீ வைத்து கொண்டார்” என கூறியுள்ளான்.
இதையடுத்து உயிரிழந்த பிரேமா அளித்த மரண வாக்குமூலத்தின்படி சைதாப்பேட்டை பொலிஸார் நாகராஜனை கைது செய்தனர்.
ரியோ ஒலிம்பிக் விழாவில் ஆடவருக்கான 100 மீற்றர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியின் முதல் சுற்றில் இலங்கையின் மத்தியூ அபேசிங்க மூன்றாமிடத்தை அடைந்தார்.
இதேவேளை இலங்கை பட்மிண்டன் வீரரான நிலுக்க கருணாரத்ன இன்று (11.08) ரியோ ஒலிம்பிக் விழாவில் களமிறங்கவுள்ளார்.
ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் விழாவில் ஆடவருக்கான 100 மீற்றர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியின் முதல் சுற்று நேற்றிரவு நடைபெற்றது.
முதல் சுற்றில் 8 போட்டிகள் உள்ளடக்கப்பட்டதுடன் அவற்றில் இரண்டாவது போட்டியில் பங்குபற்றிய மத்தியூ அபேசிங்க மூன்றாமிடத்தைப் பெற்றார். போட்டியைப் பூர்த்திசெய்ய அவருக்கு 50.96 செக்கன்ட்கள் சென்றன.
ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்டிய இலங்கையின் முதல் நீச்சல் வீரர் என்ற சிறப்புடனேயே மத்தியூ அபேசிங்க இந்தமுறை ஒலிம்பிக் விழாவுக்கு தகுதி பெற்றிருந்தார்.
கடந்த தெற்காசிய விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டிகளில் 7 தங்கப்பதக்கங்களை சுவீகரித்த மத்தியூ அபேசிங்கவினால் ரியோ ஒலிம்பிக் விழாவில் 100 மீற்றர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் அரை இறுதி சுற்றுக்கு தகுதிபெற முடியவில்லை.
இந்நிலையில், தேசிய பட்மிண்டன் சாம்பியனான நிலுக்க கருணாரத்ன நாளை ரியோ ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கவுள்ளார்.
14 தடவைகள் தேசிய பட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலுக்க கருணாரத்ன, அதிகத் தடவைகள் தேசிய பட்மிண்டன் சாம்பியனான வீரராகத் திகழ்கிறார்.
2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் விழாவில் பங்குபற்றிய அவர் நாளை நடைபெறும் போட்டியில் சர்வதேச நிரல்படுத்தலில் இரண்டாமிடத்திலுள்ள சீனாவின் லோங் ச்செங்கை எதிர்த்தாடவுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா கல்ப் கோஸ்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் அதிக சுறுசுறுப்பான 30 மாணவர்களையும், அதிகம் சிந்தனை செய்யும் 30 மாணவர்களையும் தேர்வு செய்து, ஒரு வாரத்திற்கு அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது.
ஒருவாரத்திற்கு பிறகு, ஆய்வில் கிடைத்த தகவல்களை ஆராய்ந்த போது சிந்தனை செய்யும் பிரிவை சேர்ந்த 30 பேரின் ஒட்டுமொத்த உடல் அசைவுகள் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.
அதிகம் சிந்தனை செய்யக்கூடியவர்கள் விரைவாக சலிப்படைந்து விடுகிறார்கள். ஆனால், இவர்கள்தான் அதிக நுண்ணறிவு திறன் கொண்டவர்கள் என்றும் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
அதேசமயம் சுறுசுறுப்பானவர்கள், சிந்தனை செய்வதில் இருந்து தப்பிப்பதற்காக தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு நுண்ணறிவு திறன் குறைவு என்பது ஆய்வாளர்களின் முடிவு.
ஈராக் தலைநகரான பாக்தாத்தின் பெரிய மருத்துவமனை ஒன்றில் உள்ள மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தால், குறைந்தது 12 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பாக்தாத் நகரின் மேற்கு பகுதியில் யார்முக் அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஏற்பட்ட மின்கசிவால் இங்குள்ள வளர்ச்சியடையாத சிசுக்களை வைத்து பராமரிக்கும் சிறப்பு சிகிச்சை பகுதியில் திடீரென்று தீ பிடித்தது.
மளமளவென்று பரவிய தீயில் சிக்கி 12 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட 26 குழந்தைகள் உடனடியாக பாக்தாத் நகரில் உள்ள இதர அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன என அந்நாட்டின் சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் அஹமத் அல் ருடெய்ன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆண்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்பாக புற்று நோய் பெண்கள் மத்தியில் கூடுதலாக காணப்படுவது போல் வாய்ப்புற்று நோய் ஆண்கள் மத்தியில் கூடுதலாக காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது.
ஆண்டு தோறும் 2500 வாய்ப்புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் இந் நோயாளர்களில் 78 சத வீதமானோர் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
புற்று நோயாளர்களின் மரண எண்ணிக்கையில் கூடுதலான மரணங்கள் வாய்ப் புற்று நோய் மரணங்கள் என சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சி திட்டம் கூறுகின்றது.
நாளொன்றுக்கு மூன்று பேர் என ஆண்டுக்கு 800 முதல் 900 மரணங்கள், வாய்ப்புற்று நோயால் ஏற்படுவதாக மருத்துவமனை தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது என்கின்றார் தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சி திட்டத்தை சேர்ந்த டாக்டர் சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன்.
புகைத்தல், வெற்றிலை, பாக்கு, புகையிலை உட்கொள்ளல் போன்ற பழக்கமுடையவர்கள் மத்தியில்தான் இந்த வாய்ப்புற்று நோய் அதிகம் காணப்படுகிறது.
அத்துடன் வாய்ச்சுகாதாரம் சரியான முறையில் பேணப்படாமையும் இந் நோய்க்குரிய மற்றமோர் காரணியாக அமைவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்
இலங்கையில் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் நாளொன்றுக்கு 6 -7 வாய்ப் புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள்.
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய டாக்டர் சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன் “ஒவ்வொரு ஆண்டும் அடையாளம் காணப்படும் புற்று நோயாளர்களில் 12 – 15 சத வீதம் வாய்ப் புற்று நோயாளர்கள்.
அது போல் 18 – 20 சத வீதம் மார்பக புற்று நோயாளர்கள்” என்றார். இந் நோயாளர்களில் 70 சத வீதமானோர் கடைசி தருணத்தில்தான் மருத்துவமனைகளை நாடுவதாக தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக் காட்டுகிறது.
ஒன்றரை வயதுடைய குழந்தையின் வயிற்றில் 3 கிலோ நிறையுடைய சிசுக்கட்டியொன்றை அறுவை சிகிச்சை மூலம் வெட்டியகற்றிய சம்பவமொன்று இந்தியாவின் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியைச் சேர்ந்த ராஜூ மற்றும் சுமதி ஆகியோரின் ஒன்றரை வயது மகள் நிஷா.
குறித்த குழந்தைக்கு சில மாதங்களாக வயிறு வீங்கியபடி இருந்தது. இதனால், மேட்டுப்பாளையத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை அனுமதித்தனர்.
ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றில் சிசு வளர்வதை கண்டு பிடித்தனர். மேலும் கல்லீரல், மண்ணீரல் ஆகியவை இடம் மாறி இருப்பதையும் கண்டறிந்தனர்.
இதையடுத்து மருத்துவர் விஜியகிரி தலைமையிலான குழுவினர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து, குழந்தை நிஷாவுக்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 3 கிலோ எடை கொண்ட சிசு கட்டியை அகற்றினர்.
அந்த கட்டியில் குழந்தையின் முடி, தாடை எலும்புகள் உள்ளிட்டவை இருந்தன. அறுவை சிகிச்சைக்கு பின்னர் நிஷா ஆரோக்கியத்துடன் இருப்பதாக குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் விஜியகிரி கருத்துத் தெரிவிக்கையில்,
தாயின் வயிற்றில் இரட்டை கரு உருவாகும்போது அதில் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை அரவணைத்து குழந்தையின் வயிற்றில் உள்ளடங்கி குழந்தையாக உருமாறியிருக்கிறது.
இதனை ஆங்கிலத்தில் டுவிண்டெரி எனக் கூறுவர். கருத்தரிக்கும் 10 இலட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இதுபோன்ற விசித்திரமான நிகழ்வு நடைபெறும்.
உரியநேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தை வயிற்றில் இருந்த பனிக்குடம் உடைந்து அக்குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட, இரவு நேர தபால் ரயில்மீது கிளிநொச்சி ரயில் நிலையத்திற்கு சமீபமாக கடுமையான கல்வீச்சு நடத்தப்பட்டதில் மூன்று பெட்டிகள் சேதமடைந்துள்ளதுடன் சில பயணிகள் காயமடைந்துமுள்ளனர்.
கிளிநொச்சி ரயில் நிலையத்தில் தரித்துவிட்டு, ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில், ரயில் பாதைக்கு சற்றுத் தள்ளி நிகழ்வொன்று இடம்பெற்ற இடத்திலிருந்தே இந்த கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
ரயில் புறப்பட்டு வேகம் எடுக்கத் தொடங்கியபோது ரயிலின் இடப்புறத்தில் இந்த கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இதனால் ரயிலின் மூன்று பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியதுடன் கற்கள் பெட்டிகளினுள்ளும் வீழ்ந்துள்ளன.
பெரிய கருங்கற்களே இவ்வாறு வீசப்பட்டுள்ளன. இதில் சில பயணிகள் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல் நடந்தபோது அச்சமடைந்த வயோதிப் பெண்ணொருவர் தனது தலையைக் கைகளால் பொத்தியபோது பெரிய கருங்கற்கள் அவரது கையைத் தாக்கியதில் விரல் பகுதிகள் பலத்த காயமடைந்துள்ளன.
.
இரவு சுமார் 8.30 மணியளவில் நடந்த இந்தத் தாக்குதல் சம்பவத்தால் ரயில் பெட்டிகளிலிருந்த ரிக்கெட் பரிசோதகர்கள் இதுபற்றி உரிய தரப்புக்கு அறிவித்ததுடன் கிளிநொச்சி மற்றும் மாங்குளம் ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது.
வடக்கில் ரயில் பெட்டிகள்மீது ஒரே தடவையில் இவ்வாறானதொரு மோசமான கல்வீச்சுச் சம்பவம் இடம்பெற்றமை இதுவே முதல் தடவையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்று தினங்களுக்கு முன் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி வந்த ரயில் மீது அநுராதபுரம் பகுயில் நடத்தப்பட்ட கல்வீச்சில் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் தலையில் படுகாயமடைந்து கோமா நிலைக்குச் சென்று பின் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
றியோ டி ஜெனீரோவில் இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் நேற்று இடம்பெற்ற 64kg (light welterweight ) பிரிவு குத்துசண்டைப் போட்டியில் மொங்கோலியரான CHINZORIG BAATARSUKH வீரருடன் ஈழத்தமிழரான துளசி தர்மலிங்கம் மோதிய முதலாவது போட்டியில் 03:00 என்ற நிலையில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
பருத்தித்துறை- புலோலியைச் சேர்ந்த நளினி, தர்மலிங்கம் தம்பதிகளின் மகனான துளசி (மாறன்), கடந்த ஆண்டு வரை 120 குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி இருக்கிறார்.
கடந்த ஜூலை 7 ஆம் திகதி அன்று நடந்த Light Welterweight பிரிவில் மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில் ஆர்ஜென்ரினா நாட்டைச் சேர்ந்த Carlos Aquino என்ற வீரரை 3-0 என்ற புள்ளியில் வென்று றியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா போகஸ்வெவ பகுதியில் இன்று (11.08.2016) அதிகாலை 12.30 மணியளவில் வீடு மற்றும் கடைகள் உடைத்து இரண்டு இலட்சம் ரூபாய் பெருமதியான பொருட்களையும் 50000 ரூபா பணத்தினையும் கொள்ளையிட்ட முன்னால் இராணுவ வீரனான “கலாபிட்டியகே சுரங்க புஷ்பகுமார”(29) எனும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
கிரிந்திவெல பகுதியிலிருந்து வவுனியா போகஸ்வெவ பகுதிக்கு சென்று மேற்படி கொள்ளையில் ஈடுபட்டு கொள்ளையிட்ட பொருட்களுடன் தப்பித்து செல்லும் நோக்கில் பேருந்தொன்றில் பயணித்த வேளையில் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் (IP) செனரத் மற்றும் பொலிஸ் சாரஜன்ட் திரு.யேசுதாசன் (42521) தலைமையிலான குழுவினர் துரித மற்றும் அதிரடி நடவடிக்கையின் மூலம் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட நபர் மற்றும் பொருட்களை இன்று காலை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொதுமக்கள் தமது கிராமங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் யாரேனும் புதிதாக காணப்பட்டால் பொலிஸாருக்கு அறியப்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுகொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து முதன்மை பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அவர் அந்த பதவிக்காகஇணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்கசுமதிபால தெரிவித்துள்ளார்.
நேற்று கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து முதன்மை பயிற்சியாளராக சமிந்த வாஸ்செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்று துளசி தர்மலிங்கம் ரியோ ஒலிம்பிக் போட்டியில் மங்கோலியர் CHINZORIG BAATARSUKH இற்கு எதிராக தனது முதலாவது குத்து சண்டையை ஆரம்பிக்கிறார்.
தனது 18வது வயதில் யேர்மனியின் குத்துச்சண்டை மேடைகளில் தோன்றிய துளசி தருமலிங்கம் இன்று கட்டார் நாட்டுக்காக விளையாடுகிறார்.
இலங்கையில் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள புலோலியைச் சேர்ந்த நளினி, தருமலிங்கம் தம்பதிகளின் மகனான துளசி (மாறன்) தர்மலிங்கம் கடந்த ஆண்டுவரை 120 குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி இருக்கின்றார். அதில் 75 வெற்றிகள், 6 சமநிலை கண்டிருக்கின்றார்.
உலகத்தரத்ததில் நடந்த போட்டியில் கால் இறுதிப் போட்டியை எட்ட முடியாவிட்டாலும், ஏழுமுறை நகரச்சுற்று வட்டத்திலும், ஆறு முறை நிடர்சாக்சன் (Nidersachsen) மாநிலத்தில் சம்பியனாகவும், ஒரு தடவை ஜேர்மனி நாட்டின் சம்பியனாகவும் வந்திருக்கின்றார்.
யூலை 7ம் திகதி அன்று நடந்த Light Welterweight மூன்று சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்ரினா நாட்டைச் சேர்ந்த Carlos Aquino வீரனை 3-0 என்ற புள்ளியில் வென்று ரியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடத் தெரிவாகி இருக்கின்றார்.
இதுவரை தன்னுடன் போட்டியிட்ட தென் ஆப்ரிக்கா, சீனா, உக்ரெயின், போலந்து, சுவிற்சலாந்து, பொஸ்வானா நாட்டு குத்துச்சண்டை வீரர்களை வென்ற துளசி தருமலிங்கம், ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகளில் அனைத்து நாட்டு வீரர்களையும் வென்று பதக்கம் பெற்று வர தமிழர்களாகிய நாமும் மனதார வாழ்த்துவோம்.
யாழில் பிறந்து பத்தே நாள் ஆனா ஆண் குழந்தையை வீதியில் விட்டு சென்ற தாயை இளவாலை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 7ம் திகதி யாழ்.இளவாலை வடலியடைப்பு பகுதியில் பிறந்து 10 நாட்களேயான ஆண் குழந்தை அநாதரவான நிலையில் கடதாசி பெட்டி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது.
வடலியடைப்பு பகுதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு அருகில் கடதாசி பெட்டிக்குள் கிடத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த பிள்ளை ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குழந்தை தெல்லிப்பழை மருத்துவமனைக்குச் கொண்டுச் செல்லப்பட்டு,பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த இளவாலை பொலிசார் சிசுவின் தாயாரை இன்று கைது செய்துள்ளனர்.
அளவெட்டியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 36 வயதுடைய பெண்ணே அவ்வாறு கைது செய்யபட்டு உள்ளார்.
தன்னுடைய கணவர் இந்த சிசு தனக்கு பிறக்கவில்லை எனவும் , வேறு நபருடன் எனக்கு இருந்த தொடர்பின் மூலம் பிறந்த சிசு என என்னுடன் சண்டை இட்டமையால் என் குழந்தையை கடதாசி பெட்டியில் வைத்து வீதியில் விட்டு சென்றேன் இளவாலை பொலிசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து குறித்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக வைத்திய சாலையில் பொலிசார் அனுமதித்து உள்ளனர்.