தங்கத்திற்கு மாற்றாக ‘லீடிங் ஜுவல்லர்ஸ் ஆப் தி வேர்ல்டு’ என்ற, உலக தங்க நகை கூட்டமைப்பு, ‘லுமினக்ஸ் யூனோ’ என்ற புதிய மதிப்புமிகு உலோகத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
தங்கம், பிளாட்டினம், பலேடியம், வெள்ளி ஆகிய உலோகங்களின் கலவையில் இருந்து, ‘லுமினக்ஸ் யூனோ’ உலோகம் தயாரிக்கப்படுகிறது.
தற்போது, 10 கிராம், ‘லுமினக்ஸ் யூனோ’ உலோகத்தின் விலை, 1,250 ரூபாய்.
தங்கம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு அடுத்தபடியாக, ‘லுமினக்ஸ் யூனோ’ என்ற உலோகத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம் என, அந்த கூட்டமைப்பு உறுதி அளித்துள்ளது.
தங்கத்தின் விலை மிகவும் அதிகரித்து வருவதால், நகைக் கடை உரிமையாளர்கள், தங்கம், பிளாட்டினம் நகைகளுக்கு மாற்றாக, ‘லுமினக்ஸ் யூனோ’ உலோகத்தால் ஆபரணங்களை செய்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது, இந்த உலோகம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் கிடைக்கிறது.
12 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உள்ளிட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்து அறையினை வாடகைக்கு பெற்றுக்கொடுத்தாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் துணை தலைமை ஆய்வாளர் சந்தன விக்ரமரத்ன சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதும், அந்தக் குற்றத்தை செய்வதற்கு உதவி செய்வதும் ஒரே விதமான குற்றமாகும். இரு விதமான குற்றங்களுக்கும் ஒரே தண்டனை வழங்கப்படும்.
குறித்த சிறுமியை துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பொளத்த பிக்கு ஒருவர் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த மாதம் 10ஆம் திகதி குறித்த சிறுமி குறைந்தது 9 பேரால் வெவ்வேறு இடங்களில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அத்துடன், இரவு கூட்டுபாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சிறுமியை சந்தேக நபர்கள் வீதியில் விட்டு சென்றுள்ள நிலையில், மறுநாள் காலை சிறுமி பௌத்த விகாரைக்கு சென்றுள்ளார்.
இதன் போது விகாரையிலிருந்த பௌத்த பிக்குவும் தம்மை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுமி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இளம் வயதில் உடல் பருமனாக இருந்தால், கர்ப்பம் தரிக்கும்போது பல்வேறு பிரச்சனைகளை தரும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரை வியாதி உண்டாகிவிடும். உயர் ரத்த அழுத்தம், மிக அதிக உடல் பருமன் ஆகியவை உண்டாகக் கூடும் என எச்சரித்துள்ளனர்.
உடல் பருமனானவர்கள் கர்ப்பமாகும்போது, குழந்தைக்கும், அம்மாவிற்கு வாழ் நாள் முழுவதும் பாதிப்புகள் உண்டாகலாம்.
என நார்வே பல்கலைக் கழகத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் ட்ரினே என்பவர் கூறியிருக்கிறார்.
அதேபோல், உடல் பருமனானவர்களுக்கு சிசேரியன் செய்யும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
கர்ப்ப காலத்தில் பிரச்சனை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், குழந்தை பெற்றபின்னும் தாய்- சேய் இருவர் உடல் நலனும் பாதிக்கும் எனவும் கூறுகிறார்.
ஆகவே உடல் பருமனை கட்டாயம் குறைக்க பெண்கள் முற்படவேண்டும்.
கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்ததை எப்போதும் கட்டுக்குள் வைப்பதற்கு உடற்பயிற்சிகள் மிக அவசியம்.
உடல் பருமனானவர்கள் என்ரில்லாமல் எல்லா பெண்களும் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்று கூறுகின்றார்.
உடற்பயிற்சி எந்த அளவு கர்ப்ப காலத்தி உதவி செய்யும் என ஆய்வு ஒன்றை நடத்தினர்.
இதில் உடல் பருமனான கர்ப்பிணிகள் இருகுழுவாக பிரிக்கப்பட்டனர்.
முதல் குழுவில் 91 கர்ப்பிணிகளுக்கு மிதமான உடற்பயிற்சிகள் தரப்பட்டன. 20 நிமிடங்கள் ட்ரெட்மில்லில் நடைபயிற்சி, தசைகளை வலுவாக்க சில பயிசிகள் தரப்பட்டன.
இவர்களுக்கு இந்த உடற்பயிர்சிகள் கொடுத்து 3 வாரங்கள் கண்காணிப்பட்டார்கள்.
இன்னொரு குழுவிற்கு எந்த வித உடற்பயிற்சியும் தரப்படாமல், அவர்களை கண்காணித்தனர்.
இவர்களில் முதல் குழுவில் வெறும் 2 பெருக்கும், இரண்டாவது குழுவில் 9 பெருக்கும் சர்க்கரை வியாதி இருந்தது.
ஒரே மொழி, ஒரே இனம், இலங்கையில் இருந்து தமிழகத்தில் தஞ்சமடைந்ததால் அவர்கள் அகதிகள். இலங்கையில் யுத்தம் ஓய்ந்து விட்டது.
காற்றில் கலந்த கந்தக வாசனை இப்போது இல்லை. முள்வேலிகள் இன்னும் திறக்கப்படவில்லை. சொந்த நாட்டில் சிறைப் பிடிக்கப்பட்ட கைதிகளைப் போல் ஒரு பரிதாப வாழ்க்கை.
தமிழகத்திற்கு புலம் பெயர்ந்தவர்கள், உளவுப் பிரிவின் கண்காணிப்பு, கியூ பிராஞ்சின் கிடுக்குப் பிடி, ஈழத்தமிழர் முகாமை விட்டு வெளியே போகவர என எந்த நடமாட்டமும் பதிவேடுகளில் பதிவு, இரை தேடிப்போன பறவை கூட்டிற்கு வருவதுபோல சாயங்காலம் ஆறு மணிக்குள் கூட்டிற்கு திரும்பவேண்டிய இக்கட்டான ஒரு வாழ்க்கை.
எந்த ஒரு தேவைக்கும் மற்றவர்களின் கையை எதிர்பார்த்து நிற்கும் நிலை. இதுதான் ஈழ அகதிகளின் வாழ்வின் ஒருபக்கம். இன்னும் திறக்கப்படாத பல பக்கங்கள் ஈழத்தமிழ் அகதிகளிடம் ஒழிந்திருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பழவிளை ஈழ மக்கள் குடியிருப்பு அகதிகள் முகாம் மேற்சொன்னவற்றுக்கு உதாரணமான ஒரு முகாம்.
அவுஸ்திரேலியாவுக்கு தப்பி செல்லாதீர்கள்’, என சுவர்களில் அப்பிக்கி்டக்கும் போஸ்டர் வாசகங்களுடன் அது நம்மை வரவேற்கிறது.
அகதிகளை இன்னும் அழுத்தமாக எச்சரிக்கும்படியாக, சுவர்களில், கடலில் இரு படகுகள் கவிழ்ந்து கிடப்பதுபோன்று ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார்கள்.
புறாக் கூடுகளை அடுக்கி வைத்தது போல் நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் வீடுகள்.ஆதிமனிதன் குகையைப் போன்று அதில் சின்ன வாசல்கள். சிதிலமடைந்த பல வீடுகள் எப்போதும் இடிந்து விழும் என்பதுபோல கிலியைத் தருகின்றன.
தவறு செய்யாமல் தண்டனை அனுபவிப்பது போன்ற இறுக்கமான உணர்வுடன் மனிதர்கள் எதிர்ப்படுகிறார்கள். அவர்களது வாழ்வு முறை, உலகின் நாகரிக வாழ்விற்கு சற்றும் பொருந்தாததாக இருக்கிறது.
டியுஷன் சென்டர் என்கிற கொங்கிறீற் கட்டிடம் மட்டும் தான் முகாமில் உறுதியான ஒரு கட்டடம். ஆனால் அங்கு அரிசி மூட்டைகள்தான் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
மகாத்மா காந்தி மற்றும், அப்துல் கலாம் இருவரது படங்களின் கீழ் ஒட்டப்பட்ட ஒரு சாட் பேப்பரில்,” ஈழம் எங்கள் நாடாகும், இனிமையான வீடாகும். ஈழத் தமிழகம் தழைக்கட்டும், வலி தாங்கும் மூங்கில் புல்லாங்குழல், நலம் தரும் நட்பு”- என்று எழுதப்பட்ட வாசகம் ஈழத்தமிழர்களின் ஏக்கத்தை சொல்கிறது.
நம்மை சூழ்ந்துகொண்ட அகதிகளிடம் விகடனில் இருந்து வந்திருப்பதாக சொல்லி பேசத் தொடங்கினோம்.
“1990ல் இலங்கை வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் பகுதிகளில் இருந்து மண்டபம் அகதிகள் முகாமுக்கு வந்து அங்கிருந்து நாகர்கோவில் முகாமிற்கு வந்தவங்க நாங்க.
இந்த முகாமில் 81 குடும்பங்கள் இருக்கு. 259 பேர் வசிக்கிறோம். ஒரு ஆளுக்கு 12 கிலோ அரிசி, 5 லிட்டர் மண்ணெண்ணை அரசாங்கத்துல கொடுக்கிறாங்க.
ஆரம்பத்தில் என்.ஜி.ஓ.க்கள் பல உதவிகளை செய்தாங்க. படிப்படியா அது குறைந்து போச்சு. இப்போ ஒன்றிரண்டு என்.ஜி.ஓ அமைப்புகள்தான் உதவி செய்றாங்க. அடிப்படை உதவிகள், மற்றும் வசதிகள் சரியா கிடைக்கவில்லை.
என்.ஜி.ஓ-க்கள் கட்டித்தந்த மலசலகூடங்களைத்தான் பயன்படுத்தி வருகிறோம். மலசலகூடக் குழிகள் நிரம்பி விட்டதை பலமுறை அரசுக்கு தெரியப்படுத்தியும் அதை கண்டுக்கலை. பல வருஷங்களா குப்பைக் கிடங்கும் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது.
குப்பைகளை அள்ள ஆள் வராததால் குப்பைகளை எரிக்க வேண்டியுள்ளது. இது பலருக்கு பல சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி கஸ்டப்பட்டிருக்காங்க. ஓலைக் குடிசைகளை மாற்றவோ, இடிந்து விழும் வீடுகளை சரிப்படுத்தவோ போதிய பணம் இல்லை.
எதிர்பாராமல் பெரு மழை பெய்தால் இந்த முகாம் மொத்தமாக இடிந்து தரை மட்டமாகி விடும் என்பதுதான் இப்போதைய நிலை.
சாக்கடை பைப்பும், குடிநீர் பைப்பும் உடைந்து, ஒன்றாக கலந்து நல்ல குடிநீர் கிடைக்காம கஸ்டப்பட்டோம். பலமுறை முறையிட்டுதான் அதை சரி செய்தாங்க.
சரியான வேலை கிடைக்காம பல குடும்பங்கள் சிரமக் கதியில் இருக்காங்க. பிள்ளைகளை படிக்க வைக்கிறது பெரிய கஷ்டம். நல்லா படிச்சாலும் பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப் கிடையாது.
ஆக படிக்கவும் சிரமப்படனும், படிச்சாலும் சிரமப்பட வேண்டும் இதுதான் எங்க நிலைமை என்றார் ஒரு அகதி இளைஞர்.
எங்களுக்கு ஓட்டுரிமை இல்லாததால் அரசியல்வாதிகளும் கண்டு கொள்வதில்லை. மற்ற பிள்ளைகளைப்போல், எங்கள் பிள்ளைகள் சுதந்திரமாக இருக்க முடியாது.
பிறந்தது முதல் நாம் அகதிகள் என சொல்லிச் சொல்லி தான் வளர்க்கிறோம். வெளிநாடுகள்ல 5 வருஷம் இருந்தாலே குடியுரிமை கிடைக்க வழி இருக்கு.
ஆனால் இந்தியாவில் எத்தனை வருஷம் வாழ்ந்தாலும் அகதிதான் அவன் பேரு” – மனதை வதைத்தது இன்னொரு அகதியின் பேச்சு.
எங்களுக்கான வாழ்வாதாரத்தை, அரசு முறைப்படி ஏற்படுத்திக் கொடுக்காததாலேயே பலர் இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்கு தஞ்சமடைய வேண்டியதிருக்கிறது.
வாழ்வாதாரம் இல்லாமல் யாரும் வாழ முடியாது. அதற்கு அகதிகளும் விதிவிலக்கல்ல. ஆஸ்ரேலியாவுக்கு போனால் உங்கள் பிரச்சினைகள் தீர்ந்து விடும், கள்ளத் தோணி மூலம் போய் விடலாம் என, பல ஏஜென்ட்டுகள் எங்க மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு படகுகளில் கொண்டு போய் நடுக் கடலில் விட்டுட்டு வந்துடறாங்க.
அப்படிப் போன பலர் மாண்டு போனதாகவும் சொல்லுறாங்க. அரசு அகதிகள் எங்களது வாழ்க்கையை புனரமைத்தாலே யாருக்கும் தப்பி செல்ல வேண்டும், என்கிற எண்ணம் வராது.
எங்கள் முகாமில் இதுவரை யாரும் தப்பிச் செல்ல முயற்சித்தது இல்லை. எல்லோரையும் ஏற்றிப் போக கப்பல் வரவேண்டாம்.
எங்கள் வாழ்வாதாரத்தையும், அடிப்படை வசதிகளையும் மீட்டெடுக்க வழி கிடைத்தாலே போதும் என்கிறார்கள் மற்றவர்கள்.
இதுகுறித்து அகஸ்தீஸ்வரம் தாசில்தார் மூர்த்தி மற்றும் சிறப்பு தாசில்தார் அருள் அரசிடம் பேசினோம்.
பழவிளை ஈழத் தமிழர் குடியிருப்பின் அடிப்படைத் தேவைகள் குறித்த புகார்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி இருக்கிறோம்.
விரைவில் நடவடிக்கை எடுத்து பழவிளை ஈழத் தமிழர் குடியிருப்பின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்” என உறுதியளித்தனர் அவர்கள்.
ஈழத்தில் தாங்கள் பட்ட துயரங்களுக்கு சகோதரனாய் கைநீட்டி உதவி கேட்டு வந்த தமிழர்களை, இன்னும் நாம் அகதிகள் என்கிற கண்ணாடி போட்டுக் கொண்டு தான் பார்க்கிறோம்.
கல்முனை சம்மாந்துறையில் 68 வயது நிரம்பிய தாயாரை தடியால் அடித்து கொலை செய்த தனயனுக்கு, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எட்டு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
சாரதாதேவி என்ற பெண்ணே கொல்லப்பட்டவராவார். கு. சிவகுமார் என்பவருக்கு எதிராக சட்டமா அதிபரால் கல்முனை மேல் நீதிமன்றத்தில் கொலை வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பிரதம நீதியரசரின் விசேட நியமனத்தின் அடிப்படையில் கல்முனை மேல் நீதிமன்றத்தில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், இந்தக் கொலை வழக்கில் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளார்.
வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி லாபிர் சாட்சிகளை நெறிப்படுத்தினார். எதிரி தரப்பில் சட்டவாதி லியாகத் அலி நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
மரணமடைந்த சாரதாதேவியை 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி, எதிரி கிளிசூரியா தடியாலும் பனை மட்டையாலும் அடித்து கொலை செய்ததாக கண்கண்ட சாட்சிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்தனர்.
இறந்தவரின் தலை, கழுத்து, நெஞ்சு, அடிவயிறு மற்றும் எலும்புகளில் தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் சிறிதளவு கூர் கொண்ட மொட்டையான ஆயுதத் தாக்குதல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளது என மருத்துவ பரிசோதனை நடத்திய வைத்தியர் சாட்சியமளித்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து எதிரி கனகசிங்கம் சிவகுமார் எதிரிக்கூண்டில் நின்று வாக்குமூலமளித்தார்.
“நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எனது தாய் கெட்ட வார்த்தைகளால் என்னைப் பேசினார். எனக்குக் கோபம் வந்தது.
அந்தக் கோபத்தில் வேலியில் இருந்த கிளிசூரியா தடியைப் பிடுங்கி இரண்டு மூன்று அடி அம்மாவை அடித்தேன். அடித்ததும் அவர் மயங்கிவிட்டார்.
அதன் பின்னர் அவரைத் தூக்கிச் சென்று வீட்டு மண்டபத்தில் வளத்திவிட்டு, தண்ணீர் எடுத்து வந்து அவருடைய முகத்தில் தெளித்தேன் ஆனால் அவர் எழும்பவில்லை. எனது தாயார் என்னை கெட்ட வார்த்தைகளினால் பேசி கோபப்படுத்தியதால் தான் திடீரென அம்மாவைத் தாக்கிவிட்டேன் என குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலமளித்தார்.
அதேவேளை, எதிரி தரப்பு சட்டத்தரணி எதிரி மீது கருணை காட்டுமாறு கருணை விண்ணப்பம் செய்தார்.
விசாரணைகளின் முடிவில் திடீர்க் கோபம் காரணமாக இடம்பெற்ற கொலையாக இக்கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் எனினும் இந்த வழக்கில் பல விடயங்களைக் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது என்று நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்தார். அவர் வழங்கிய தீர்ப்பில் மேலும் தெரிவித்ததாவது:
தாயாரை அடித்துக் கொல்லும் எண்ணம் எதிரிக்கு இருக்கவில்லை. தாயார் கெட்ட வார்த்தைகளினால் அவரைக் கோபப்படுத்தியதே இந்தக் கொலைக்குப் பிரதான காரணமாக உள்ளது.
ஆயினும் இறந்தவரின் நிலைமை, கொலைச்சம்பவ நிகழ்வு குறித்து எதிரி கூறியுள்ள நிகழ்வுகள் மற்றும் நடைபெற்றுள்ள சம்பவத்தின் பாரதூரத் தன்மை என்பவற்றை நீதிமன்றம் கவனத்தில் எடுத்து பரிசீலித்துள்ளது.
இந்தப் பரிசீலனையின் அடிப்படையில் தாயாரைக் கொன்ற இந்த வழக்கில் எதிரி கைமோசக் குற்றவாளி என இந்த நீதிமன்றம் காண்கின்றது.
இறந்தவர் தாயராவார். கொலை செய்தவர் மகன். இந்தக் கொலையை நேரில் கண்டதாக கண்கண்ட சாட்சியமளித்தவர் தந்தையாவார். எனவே, ஒரு குடும்பத்தின் உணர்வுபூர்வமான வழக்கில் தீர்ப்பளிக்க வேண்டியிருக்கின்றது.
கொலைக் குற்றவாளியாகக் காணப்படுகின்ற எதிரிக்கு இந்த நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கின்றது.
எதிரி பத்தாயிரம் தண்டப் பணமாக செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தத் தவறினால் மூன்று மாதம் சாதாரண சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பையடுத்து தண்டனை வழங்கப்பட்ட எதிரியை சிறைக்காவலர்கள் பொறுப்பெடுத்து நீதிமன்றத்தில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றனர்.
மூன்று பிஸ்கட் பக்கட்டுகளுக்கான கடனைத் திருப்பிக் கொடுக்காத காரணத்தால், தலித் தம்பதிகளை வெட்டிக் கொலை செய்த சம்பவமொன்று இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
குழந்தைகளுக்காக சில தினங்களுக்கு முன்னர் 15 ரூபா பெறுமதியான மூன்று பிஸ்கட் பக்கட்டுகளை வாங்கிய தலித் தம்பதியினரை பணத்தை தராத காரணத்தால் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்துள்ளார். குறித்த சம்பவம் மைன்புரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் (28.07) இடம்பெற்றுள்ளது.
தலித் தம்பதிகள், காலையில் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது, கடை உரிமையாளர் பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கான தொகையைத் திருப்பித்தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். மாலையில் தங்களுக்கு அன்றைய தினத்திற்கான பணம் கிடைத்ததும் அதைக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பணத்தை கேட்டு கூச்சலிட்ட கடை உரிமையாளர் கோபமடைந்து வீட்டினுள் இருந்த அரிவாளினை எடுத்தவந்து இருவரையும் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
குறித்த கடையின் உரிமையாளரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தன்னை விடவும் முன்னாள் அதிபர் கிளின்டனை விடவும் அதிபர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் ஹிலரி கிளின்டன் தான் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
பிலடெல்பியாவில் ஜனநாயகக் கட்சியின் தேசிய கூட்டத்தில் உரையாற்றிய போது அதிபர் ஒபாமா, ஹிலரி கிளின்டனை ஆதரித்தும் பாராட்டியும் பேசியுள்ளார்.
அமெரிக்க ஆட்சியைத் தகுதிவாய்ந்த ஹிலரியிடம் ஒப்படைக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் அதிபராகப் பதவி வகிப்பதற்கு ஹிலரி மிகவும் தகுதி வாய்ந்தவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப், நம்பிக்கை இல்லாதவர் எனவும் அவரை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் ஒபாமா வலியுறுத்திக் கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் பயங்கரவாதம் என்ற பெரிய அடையாளத்தின் கீழ் தனிப்பட்ட கோபங்கள் தீர்த்துக் கொள்ளப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காணிப் பிரச்சினை, பணப் பிரச்சினை மற்றும் குடும்ப பிரச்சினைகள் இதற்கு சிறந்த உதாரணங்கள் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
எனினும் இவை அனைத்தும் கடந்த காலத்தின் சில பகுதிகள் என்றும், இவை தொடர்பில் மீண்டும் திரும்பிப் பார்ப்பதன் மூலம் நடந்தது என்ன என்பதை பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அவை எமது உணர்வுகளை அறிவதற்கு இருக்கும் ஒரே வழிமுறை என கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது பிரதமர் கூறியுள்ளார்.
அமேஸோன் (Amazon) இணையத்தளமானது பங்குச்சந்தையில் அடைந்த அதீத வளர்ச்சியும், இதன் மூலம் கிடைத்த வருமானமும் அதன் தலைவரை உலகின் மூன்றாவது பணக்காரர் என்ற இடத்திற்கு உயர்த்தியுள்ளது.
உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை தற்போது அமேஸோன் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெஜோஸ் (Jeff Bezos) பெற்றிருக்கிறார்.
மேலும் அவரின் சொத்துமதிப்பு 65.3 பில்லியன் டொலர் என வெளிநாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது பல ஆய்வாளர்களின் கணிப்பையும் மீறி, அமேஸோன் நிறுவனத்தின் வருமானம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக 2015இல் 92 மில்லியன் டொலராக இருந்த அமேஸோன் நிறுவனத்தின் இலாபம் இந்த ஆண்டு 857 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
மேலும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில், மைக்ரோஸாப்ட் நிறுவனத் தலைவர் பில்கேட்ஸ் (78 பில்லியன் டொலர்), காணப்படுவதோடு அவரைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் ஜாரா நிறுவனர் அமான்சியோ ஓர்டிகா (73.1 பில்லியன் டொலர்) காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அழகுக்காக உடல்களில் குத்தப்படும் டாட்டூக்களினால் (பச்சை) அபாயகரமான புற்றுநோய்கள் ஏற்படும் என ஐரோப்பிய இரசாயன அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டாட்டூ அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்படும் மைகளில் ஆபத்தை விளைவிக்கும் நச்சுப் பொருள் இருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக சிவப்பு நிறத்தைத் தருவிக்கப் பயன்படுத்தப்படும் மை மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடியது எனவும் ஐரோப்பிய இரசாயன அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் தோலில் ஏற்படக்கூடிய ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் பல ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடும் என்பதுடன், அதிகபட்சமாக “டாட்டூ’ மைகளின் நச்சுத் தன்மையால் உயிரைக் குடிக்கும் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மைகளால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஏராளமான ஆய்வு முடிவுகளில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனிலிருந்து வெளியாகும் “சன்’ நாளிதழில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலுக்காக மலேஷியா சென்று பல்வேறு இன்னல்களை அனுபவித்து மீண்டும் நாடு திரும்பியுள்ளார் புத்தளத்தைச் சேர்ந்த குப்பன் லக்ஷ்மி புஷ்பகுமாரி.
புத்தளம், தில்லையடியைச் சேர்ந்த திருமணமான 24 வயதுடைய இவர், மலேஷியாவில் பணிபுரிந்த வீட்டின் எஜமானியால் துன்புறுத்தல்களுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். கடந்த 22 மாதங்களுக்கான சம்பளமும் இவருக்கு வழங்கப்படவில்லை.
குப்பன் லக்ஷ்மி புஷ்பகுமாரி கடந்த 2014 ஆம் ஆண்டு மலேஷியாவிற்கு தொழில்வாய்ப்புப் பெற்றுச் சென்றிருந்த போதிலும், முதல் நான்கு அல்லது ஐந்து மாதங்களே சம்பளம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், எந்தவித முன்னறிவித்தலும் இன்றி தம்மை விமானத்தில் ஏற்றி நாட்டிற்கு திருப்பி அனுப்பியதாக அவர் கண்ணீருடன் குறிப்பிட்டார்.
தனக்கு நேர்ந்த விடயங்கள் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளதுடன், 22 மாத நிலுவை சம்பளத்தைப் பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் தொடர்புகொண்டு வினவியபோது, இரண்டு வாரங்களுக்குள் யுவதியை தொழில் வாய்ப்புக்காக அனுப்பிய முகவரை அழைத்து விசாரணை நடத்துவதாக பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் உப்புல் தேசப்பிரிய கூறினார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்பை முகவரிடமிருந்து பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், முகவர் அதனைப் புறக்கணிக்கும் பட்சத்தில் அவர் மீது வழக்குத் தொடர்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உப்புல் தேசப்பிரிய மேலும் சுட்டிக்காட்டினார்.
பல்லேகல மைதானத்தில் நடந்து வரும் முதல் டெஸ்டில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு 268 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் முதலில் ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் பல்லேகெல மைதானத்தில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்சில் இலங்கை 117 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா 203 ஓட்டங்களும் குவித்தன.
பின்னர் 86 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி குஷால் பெரேராவின் (176 ஓட்டங்கள்) அபார சதத்தால் 353 ஓட்டங்கள் எடுத்தது.
இதனால் அவுஸ்திரேலிய அணிக்கு 268 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர் வார்னர் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
இதைத் தொடர்ந்து வந்த காவாஜ 18 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜோ பர்ன்ஸும் (29) நிலைக்கவில்லை.
இந்நிலையில் அணித்தலைவர் ஸ்மித் (26), ஆடம் வோக்ஸ் (9) ஆகியோர் நிதானமாக விளையாடி வந்தனர்.
இதற்கிடையில் அவுஸ்திரேலியா 27 ஓவர்கள் முடிவில் 83 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் 4வது நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியா வெற்றிக்கு இன்னும் 185 ஓட்டங்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்டுக்கள் உள்ளன.
இன்றய கடைசி நாள் ஆட்டத்தில் ஸ்மித், ஆடம் வோக்ஸ் ஆகியோர் நிலைத்து நின்று விட்டால் அவுஸ்திரேலியா வெற்றியை எளிதில் நெருங்கி விடும்.
அதேசமயம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் இந்த ஆடுகளத்தில் இருவரும் நிலைத்து நின்று விளையாடுவது மிகவும் கடினம்.
மேலும், இந்த டெஸ்டில் முதல் நாளில் இருந்தே ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டு வருகிறது. இன்று காலையிலேயே மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது.
நாளையும் மழை குறுக்கிட்டால் ஆட்டம் எப்படி முடியும் என்று யாருக்கும் தெரியாது. இருப்பினும் இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் 31.07.2016 (ஞாயிற்றுக் கிழமை) அன்று எமது பாடசாலை ஐயாத்துரை மண்டபத்தில் காலை 10.00மணிக்கு நடைபெறும்.
அனைத்து உறுப்பினர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
வவுனியா கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேதஅகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின்மூன்றாம்நாளானநேற்று(29.07.2016)காலைமுதல்அபிசேகங்கள்மூலஸ்தான பூசை, யாகபூசை, கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினோரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம்வந்துசிம்ம வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.
மாலையில் ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று அம்பாள்இடப வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.
கொழும்பு, முகத்துவாரம் பிரதேசத்தில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த குழுவினர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
30 வயதுடைய நிரோஷன் சுரேன் பிரியங்கர என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவர் 2014ம் ஆண்டு கிரேண்பாஸில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகபர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
வவுனியாகோவில்குளம்அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின் இரண்டாம்நாளான நேற்று(28.07.2016) காலை முதல் அபிசேகங்கள் ,மூலஸ்தான பூசை, யாகபூசை, கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினோரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம்வந்துசிம்ம வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.
மாலையில் ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று அம்பாள் இடப வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.