வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் 31.07.2016 (ஞாயிற்றுக் கிழமை) அன்று எமது பாடசாலை ஐயாத்துரை மண்டபத்தில் காலை 10.00மணிக்கு நடைபெறும்.
அனைத்து உறுப்பினர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
வவுனியா கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேதஅகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின்மூன்றாம்நாளானநேற்று(29.07.2016)காலைமுதல்அபிசேகங்கள்மூலஸ்தான பூசை, யாகபூசை, கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினோரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம்வந்துசிம்ம வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.
மாலையில் ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று அம்பாள்இடப வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.
கொழும்பு, முகத்துவாரம் பிரதேசத்தில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த குழுவினர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
30 வயதுடைய நிரோஷன் சுரேன் பிரியங்கர என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவர் 2014ம் ஆண்டு கிரேண்பாஸில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகபர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
வவுனியாகோவில்குளம்அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின் இரண்டாம்நாளான நேற்று(28.07.2016) காலை முதல் அபிசேகங்கள் ,மூலஸ்தான பூசை, யாகபூசை, கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினோரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம்வந்துசிம்ம வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.
மாலையில் ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று அம்பாள் இடப வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா ஸ்ரீ இராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தயாலயத்தில் நேற்று (28.07.2016) காலை புளியங்குளம் வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்டவரும், தற்பொழுது பிரான்சில் வசித்துவருபவருமாகிய சி.தணிகாசலம் அவர்களால் எழுதப்பட்ட ‘இலட்சிய தாகத்தில் இணையும் உள்ளங்கள்’ எனும் நாவல் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது.
பாடசாலை அதிபர் தே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு முன்னிலை இலக்கியவாதியாக கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.
பிரதம விருந்தினர்-
திருமதி அன்ரன் சோமராஜா
(வலயக்கல்விப் பணிப்பாளர்- வவுனியா தெற்கு)
சிறப்பு விருந்தினர்-
திரு கு.சிதம்பரநாதன்
(பீடாதிபதி வவுனியா தே.க.கல்லூரி )
கௌரவ விருந்தினர்கள்-
• திரு.இ.நித்தியானந்தன்
(வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர்)
• பண்டிதர் வீ.பிரதீபன்
(வவுனியா பிரதேச கலாசார உத்தியோகத்தர்)
• திரு க.தர்ஷன்
(கிராம சேவகர்- காத்தார் சின்னக்குளம்)
ஆகியோர் மேற்படி நிகழ்விற்கு விருந்தினர்களாக வருகை தந்து சிறப்பித்தனர்.
நூல்வெளியீடு : தமிழறிஞர் அகளங்கன் மற்றும் திருமதி ஆ.தணிகாசலம் முன்னிலையில், வலயக்கல்விப் பணிப்பாளர் அன்ரன் சோமராஜா வெளியிட்டு வைக்க அண்ணா நகர் அதிபர் சு.உதயகுமார் பெற்றுக்கொண்டார்.
மேற்படி நாவலின் நூலாராய்வுரையை ஆசிரியர் வே.முல்லைத்தீபன் நிகழ்த்தினார்.
தொடர்ந்து பணி ஓய்வு பெற இருக்கின்ற வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அன்ரன் சோமராஜாவின் சேவைநலனைப் பாராட்டி அவருக்கு மலர்மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி.. பாமாலை வழங்கி பாடசாலைச் சமூகம் அவருக்கான கௌரவத்தினை வழங்கியிருந்தது.
இறுதியாக ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையினை பாடசாலை ஆசிரியரும் நூலாசிரியரின் துணைவியுமாகிய திருமதி ஆ.தணிகாசலம் நிகழ்த்தியதும் மதிய போசனம் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா தேசிய சேமிப்பு வங்கியில் சிறுவர் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் கடந்த வருடம் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வவுனியா இறம்பைக்குள் மகளிர் தேசிய பாடசாலை மாணவர்களில் சித்தியடைந்த 27மாணவர்களுக்கும் , வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் சித்தியடைந்த 24 மாணவர்களுக்கு பணப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.
மகளிர் பாடசாலை அதிபர் திரேசம்மா சில்வா , வவுனியா வங்கி முகாமையாளர் க.சஞ்சயன் ஆகியோர் பரிசுகளை வழங்கி வைத்தனர்.
வவுனியா கலாச்சார மண்டபத்தில் நேற்று காலை முதல் மாலைவரை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ் நிலையத்தில் ஒரவருட புனர்வாழ்வை பூர்த்தி செய்துகொண்டு வெளியேறியுள்ள முன்னாள் போராளிகள், குடும்பத்தினர்கள், பிள்ளைகள் போன்றவர்களுக்கு வைத்திய சிகிச்சை முகாம் ஊடாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவ் வைத்திய சிகிச்சை முகாமில் இரத்தப் பரிசோதனை, கண் பரிசோதனை, உளவியல் போன்ற வைத்திய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ் வைத்திய சிகிச்சை முகாமில் மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு. வவுனியா போன்ற பிரதேசங்களிலிருந்து முன்னாள் போராளிகள் உறவினர்கள், பிள்ளைகள் சமூகமளித்திருந்தனர்.
இவ் வைத்திய சிகிச்சை முகாமில் வைத்தியர் லலித் மென்டிஸ், வைத்தியர் தர்ஷினி, வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், புனர்வாழ்வு அணையாளர் பணியக பிரதி ஆணையாளர், பூந்தோட்ட புனர்வாழ் நிலைய பொறுப்பதிகாரி, பின் இணைப்பு அதிகாரி, இராணுவ அதிகாரிகள், விமானப்படை, பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டகளப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேன கொள்ளுபிட்டி பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேனவுக்கு, பொருளாதார அமைச்சின் கீழ் வழங்கப்பட்டிருந்த பிராடோ ஜீப் வண்டி, கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டிருந்தது.
அரசுக்கு சொந்தமான குறித்த வாகனத்தை நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து மீண்டும் அரசு பெறுவதற்கு கடந்த வருடங்களில் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை என்று அரசு குறிப்பிட்டிருந்தது.
எனினும் குறித்த வாகனம் சாரதியுடன் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு இதன் சாரதியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த சாரதி நேற்று முன் தினமே சாரதியாக இணைந்து கொண்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டிருந்த பியசேன, கொள்ளுபிட்டி பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா மொடர்ன் பாம் வீட்டுத்திட்ட பகுதியில் இளம் யுவதி ஒருவர் பாலியல்துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் யுவதி பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட யுவதியின் தாய் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிப்பெண்ணாக இருந்து வரும் நிலையில், யுவதி உறவினர் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக உறவினர் வீட்டில் இருந்து வந்துள்ள நிலையில் யுவதியின் சித்தப்பாவினால் கடந்த இரு வருடங்களாக துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தமிழர்கள் இருவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதி மன்றத்தில் இந்திய அரசாங்கம் மேன் முறையீடு செய்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிசெய்துள்ளது. பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2012ம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த மூவரை கட்டார் நாட்டு பொலிஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அழகப்பா சுப்பிரமணி, விருதுநகரைச் சேர்ந்த செல்லத்துரை பெருமாள் மற்றும் சேலத்தைச் சேர்ந்த சிவக்குமார் அரசன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும், மரண தண்டனை விதித்து கட்டார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து கட்டார் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் மூவரும் மேன் முறையீடு செய்தனர்.
இதில் சிவக்குமார் அரசனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
மற்றைய இருவருக்கும் மரண தண்டனையை உறுதி செய்து கட்டார் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இரண்டு தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு மேன் முறையீடு செய்துள்ளது.
இதனை இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது. அவர்களுக்கு சட்ட ரீதியாக உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நாவிதன் வெளி 15ம் கொலனியில் தயாபரன் கெமிக்கல் ஸ்ரோர் உரிமையாளரின் லொறி இன்று அதிகாலை 3.30 மணியளவில் எரியூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது.
வழமைபோன்று தொழிலை முடித்துவிட்டு அவரது கடைக்கு முன்னால் லொறியைநிறுத்திவிட்டு நித்திரைக்கு சென்றதாகவும் பின்னர் 3.30 மணியளவில் லொறி எரிந்து கொண்டிருந்ததாகவும் பின்னர் அயலவர்களின் உதவியுடன் தீயை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடிந்ததாகவும் வாகனத்தின் முன்பகுதி முற்றுமுழுதாக எரிந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
எரியூட்டப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் சகோதரனுடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைசவளக்கடை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிராம சேவகர் போட்டிப் பரீட்சைக்காக இம்முறை இரண்டு லட்சம் பேர் தோற்றவுள்ளனதாக அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்
கிராம சேவகர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கில் நடைபெறவுள்ள போட்டிப் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து விண்ணப்பம் செய்துள்ளனர்.
சுமார் இரண்டாயிரம் கிராம உத்தியோகத்தர்களை நியமிப்பதற்காக இந்தப் போட்டி பரீட்சை நடத்தப்படுகின்றது. போட்டிப் பரீட்சையில் அதிகளவு புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் விண்ணப்பதாரிகள் கிராம சேவகர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
வடக்கு கிழக்கில் அதிகளவில் கிராம சேவகர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
முத்தையா முரளிதரன் எப்போதும் தற்காப்பு மனநிலையை கொண்டவர் என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தன வெளிப்படையாக கூறியுள்ளார்.
இலங்கை அணியின் தலைவராக இருந்த போது முரளிதரன் விடயத்தில் அவரை ஊக்குவிப்பது தனக்கு சவாலாக இருந்ததாக ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
பிரபல இணையத்தளம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நான் இலங்கை அணியின் தலைவராக இருந்த போது முரளிதரனை தற்காப்பு மனநிலையில் இருந்து வெளியே கொண்டு வருவது சவாலாக இருந்தது.
இருப்பினும் அவரது அந்த குணம் அவரை எந்த நிலையிலும் கீழே தள்ளிவிடவில்லை. நான் மாறுபட்ட தலைவராக இருந்தேன்.
அவர் தாக்குதல் பந்துவீச்சாளராக இருப்பதையே நான் விரும்பினேன். அதற்கு அவரை நான் அதிகமாக சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் அவர் கொஞ்சம் பிடிவாதம் பிடித்தவர்.
அவருக்கான வாய்ப்புகளை உருவாக்கி தருவதில் நான் முனைப்புடனே இருந்தேன். அர்ஜூன ரணதுங்கவும் இதே முறையை தான் முரளிதரனிடம் பின்பற்றி இருப்பார் என்று நினைக்கிறேன்.
ஆனால் சனத் ஜெயசூரியவுக்கு இது கடினமான வேலையாக இருந்தது. ஆனால் நான் முரளிதரனை எப்போதும் ஊக்கமளித்து அவரின் முழுத்திறமையும் வெளிக் கொண்டு வருவதில் கவனம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள தாரா நகரில் துப்பாக்கிகள் மிக குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. மலைகளால் சூழப்பட்ட இந்த நகரில் வசிக்கும் தொழிலாளர்கள் துப்பாக்கிகளை மிக அருமையாக தயாரிக்கும் அனுபவம் கொண்டவர்கள்.
பிற நாட்டினர் பயன்படுத்தும் நவீன துப்பாக்கிகளை பார்த்தால் கூட, எவ்வித மாற்றமும் இன்றி அதே போன்று இவர்கள் தயாரித்துவிடுவார்கள்.
இவர்களிடம் இருந்தே பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கிகளை விலை கொடுத்து வாங்குகின்றனர், மேலும் மலை சூழ்ந்த இடம் என்பதால் தீவிரவாதிகளுக்கும் இது வசதியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் சமீப காலமாக தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டுவருவதால், தாரா நகரில் வியாபாரம் மந்தமாகியுள்ளது, மேலும் நாட்டிற்குள் வரும் வெளிநாட்டினகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதால், ஏற்றுமதியும் செய்யப்படுவதில்லை.
ஆனால் பாகிஸ்தான் அரசு இந்த தாரா நகரில் இயங்கி வரும் இந்த துப்பாக்கி தொழிற்சாலையை மூடாமல் அப்படியே விட்டுள்ளதால், ரகசிய வியாபாரம் நடந்து வருகிறது.
துருக்கி மற்றும் பல்கேரியாவில் தயாராகும் எம்.பி.5 ரக இயந்திர துப்பாக்கி இங்கு 7 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.
சர்வதே நாடுகளின் எதிர்ப்பை மீறி போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக இந்தோனேசியா அரசு 4 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியா நாட்டிற்குள் போதை பொருள் கடத்தியதாக கடந்த 2004ம் ஆண்டு 14 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் இவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு 72 மணி நேரம் முன்னதாக கைதிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தகவல் அளிக்கப்படும்.
இதனை தொடர்ந்து, நைஜீரியா நாட்டை சேர்ந்த இருவர், செனகல் நாட்டை சேர்ந்த ஒருவர் மற்றும் இந்தோனேசிய நாட்டை சேர்ந்த ஒருவர் என 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் வெளியானது.
இந்தோனேசியாவின் இந்த முடிவுக்கு சர்வதேச மன்னிப்பு சபை உள்ளிட்ட அமைப்பும் பிற நாடுகளும் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு வலியுறுத்தின.
ஆனால், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி இந்தோனேசிய அரசு இன்று அதிகாலை 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
ஜாவாவில் உள்ள Nusakambangan பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட கைதிகள், துணியால் கண்கள் மூடப்பட்ட அவர்களை பொலிசார் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை விதிக்கும் 33 நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.