குளிர் அதிகமாக உள்ள கடல் பகுதிகளில் கடல் சீல்கள் வசிக்கின்றன. இவை தண்ணீரிலும், கரையிலும் வாழக்கூடியவை.
குளிர் அதிகமாக இருக்கும் நேரங்களில் இந்த சீல்கள் தண்ணீரை விட்டு வெளியே வந்து கரைப்பகுதியில் படுத்திருக்கும். ஆனால் அது கடற்கரை தண்ணீரை ஒட்டி மட்டுமே காணப்படும்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் ஒரு கடல் சீல் கடற்கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊர்ந்து ஊருக்குள் வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு டாஸ்மானியாவில் உள்ள டேவன்போட் என்ற இடத்தில் இவ்வாறு சீல் கரைப் பகுதிக்கு வந்து அங்குள்ள கல்லறைத் தோட்டத்தில் படுத்திருந்தது. இதை அங்குள்ள பெண் ஒருவர் பார்த்து அலறியடித்து ஓடினார்.
அந்த சீல் 120 கிலோ எடை இருந்தது. பல சாலைகளையும் கடந்து அது வந்திருந்தது. அதை மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.
கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் படம் கபாலி. ரஜினி நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். இப்படத்தின் விளம்பரங்கள் இதுவரை எந்த தமிழ் படத்துக்கும் இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தது.
கபாலி வெளியாகி ஒருவாரம் கடந்த நிலையில், வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளதாக கூறப்பட்டது. எனினும், அதிகாரப்பூர்வமான வசூல் நிலவரங்கள் எதுவும் படக்குழு தரப்பிலிருந்து வெளிவரவில்லை. இந்நிலையில், நேற்று சென்னையில் நடந்த கபாலி வெற்றி விழாவில் அப்படம் உலகம் முழுவதிலும் 389 கோடி வரை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, சென்னையில் மட்டும் 6 நாட்களில் 6 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கபாலி வெற்றிக்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்தார்.
ஒரு வாரத்திற்குள் இதுவரை எந்தவொரு இந்திய சினிமாவும் இவ்வளவு வசூலை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு மிகப்பெரிய சரித்திர சாதனையாகவும் கருதப்படுகிறது.
இந்த கபாலி வெற்றி விழாவில், இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர்கள் ஜான் விஜய், கலையரசன், தினேஷ், மைம் கோபி, பாடகி ஸ்வேதா மோகன், பாடகர் அருண்ராஜா காமராஜ், நடிகை ரித்விகா, கலை இயக்குனர் ராமலிங்கம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், எடிட்டர் பிரவீன் கே.எல்.உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை அமலாபால். 2010ம் ஆண்டு வீரசேகரன் என்ற படம் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்தார். சிந்துசமவெளி, மைனா, தெய்வத்திருமகன், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்பட பல படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது தனுசுடன் வடசென்னை படத்தில் நடித்து வருகிறார்.
அமலாபால், இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தெய்வத்திருமகள் படத்தில் நடித்தபோது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. தொடர்ந்து விஜய் இயக்கிய தலைவா படத்திலும் அமலாபால் நடித்தார்.
இரண்டு பேரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 7ம் திகதி கொச்சியில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்தது. அதே மாதம் 12ம் திகதி சென்னையில் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் சென்னை போர்ட் கிளப்பில் அவர்கள் இருவரும் வாழ்ந்து வந்தனர்.
திருமணம் முடிந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் முடிந்த நிலையில் அமலாபாலுக்கும் அவரது கணவர் விஜய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த சில வாரங்களாக இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதை இருவருமே மறுக்கவில்லை.
திருமணத்திற்கு பிறகு அமலாபாலின் பேஸ்புக்கில் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தினமும் பதிவிடப்பட்டு வரும். ஆனால் சமீபத்தில் இத்தகைய படங்களை அமலாபால் பேஸ்புக்கில் பதிவு செய்யவில்லை. இது இருவருக்கும் இடையேயான விரிசலை வெளிக்காட்டியது.
இது உண்மை தான் என்பது இப்போது வெளியாகி உள்ளது. அமலாபாலும், இயக்குனர் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் சுமூகமாக பேசி பிரிந்து விட்டனர். தொடர்ந்து அவர்கள் நீதிமன்றம் மூலம் விவகாரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.
அமலாபால் – விஜய் விவகாரத்துக்கான காரணம் என்ன என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. திருமணத்துக்கு பிறகும் அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடித்தார். இதை விஜய்யின் பெற்றோர் விரும்பவில்லை. ஆனால் அமலாபால் தொடர்ந்து நடிக்கவே விரும்புகிறார். இதன் காரணமாகவே அவர் விவகாரத்து முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது இதுபற்றி அமலாபாலின் கணவர் இயக்குனர் விஜய் கூறியிருப்பதாவது..
இந்த பிரச்சினை பற்றி நான் பேச விரும்பவில்லை. நான் எப்போதும் பெற்றோர் சொல்லைத்தான் கேட்பேன். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். அதில் உறுதியாகவும் இருப்பேன். அமலாபால் பற்றி எதுவும் கூற தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
1969ம் ஆண்டு அப்போலோ-11 என்ற விண்கலத்தில் நிலவுக்கு பயணமானார் நீல் ஆம்ஸ்ட்ராங். அவருடன் எட்வின் ஆல்ட்ரின் என்பவரும் உடன் சென்றார். இருதய அறுவை சிகிச்சை சிக்கல்களால் பாதிக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் 2012ம் ஆண்டு தனது 82வது வயதில் உயிரிழந்தார்.
அதேபோல், ஜேம்ஸ் இர்வின் என்பவர் அப்போலோ 15 விண்கலத்தில் 1972ம் ஆண்டு நிலாவுக்கு சென்றார். நிலாவிற்கு சென்று வந்த இரண்டாவது வருடத்தில் இர்வினுக்கு 43 வயது இருக்கையில் முதன் முதலில் நெஞ்சு வலி ஏற்பட்டது. அதன் பிறகு அவரது இதயத்துடிப்பில் சிக்கல் இருந்து கொண்டே தான் வந்தது. இறுதியில் 1991ம் ஆண்டு அவர் உயிரிழந்தார்.
மேலும் அப்போலோ 17 விண்கலத்தில் பயணித்த ரொனால்டு ரான் நெஞ்சு வலி காரணமாக தனது 56வது வயதில் உயிரிழந்தார்.
நிலாவிற்கு சென்றவர்களில் மூன்று பேர் இதயக் கோளாறு காரணமாக உயிரிழந்தது பெரும் கேள்வியை எழுப்பியது. இருப்பினும் அவர்களின் நோய்க்கும் நிலாவிற்கு சென்று வந்ததற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்து விட்டது. இந்த தகவல் ஆய்வு ஒன்றில் தெரிய வந்தது.
இதுவரை மொத்தம் 24 மனிதர்கள் நிலாவிற்கு விண்கலம் மூலம் சென்று கால்பதித்துள்ளனர். அதில் 7 பேர் இந்த ஆய்வின் போது உயிரிழந்து இருந்தனர்.
நிலாவிற்கு விண்கலம் மூலம் சென்றிருந்த இந்த மூன்று மனிதர்களும் இதயக் கோளாரு காரணமாக ஒரே மாதிரி உயிரிழந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
எங்கு எவ்வாறான சந்தை அமைக்கப்பட வேண்டும் என, நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் குறித்து வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை தரப்பட்டுள்ளது.
அரச மற்றும் அரசுடன் இணைந்து செயற்படும் தனியார் பாடசாலைகளின் இந்த ஆண்டுக்காக இரண்டாம் தவணைக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.
அதன்படி மீண்டும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணைக் காலம் ஆரம்பமாகவுள்ளன.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 02ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் இடம்பெற உள்ளது.
தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இடம்பெற இருப்பதால் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் தினம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
வவுனியா குருமன்காட்டில் நேற்று(28.07.2016) இரவு 9 மணியளவில் டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த கற்களை ஏற்றிய டிப்பர் வாகனம் குருமன்காடு வயல்வெளிக்கு அண்மையில் தரிக்க முற்பட்ட சமயத்தில் வீதியின் அருகே புதையுண்டு விபத்துக்குள்ளானது
இந்த வீதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதி திருத்தவேலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்ட கொடிய யுத்தமும் அதனால் ஏற்பட்ட இடம்பெயர்வுகளும் எமது சமூகத்தை மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளியுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்ற பாடசாலைக்கான போட்டோ பிரதி இயங்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..
இலங்கைத்தமிழர்கள் கடின உழைப்பாளிகள் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்கள். தங்களின் தேவைகளை தாங்களே தேடிக்கொள்பவர்கள். எனினும் நாட்டில் ஏற்பட்ட தொடர்ச்சியான யுத்த சூழ்நிலை மக்களை அவர்களது சொந்த இடங்களிலிருந்து அடிக்கடி இடம்பெயர வைத்தது.
இதனால் பொருள் சேதம், உயிர்சேதமென அனைத்தையும் இழந்து உழைப்பை இழந்தவர்களாக மற்றவர்களிடம் தமது தேவைக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். எனினும் நாம் மனம்தளரக்கூடாது. சொத்தை இழக்கலாம், பொருட்களை இழக்கலாம். ஆனால் யாராலும் எம்மிடமிருந்து பிரிக்கமுடியாதது கல்வியொன்றுதான்.
உங்கள் பெற்றோர்கள் பல இழப்புகளை சந்தித்தவர்கள். ஆனாலும் உங்களை சமூகத்தில் சிறந்த கல்விமான்களாக ஆக்குவதற்காக கனவுகளை சுமர்ந்தவர்களாக உங்களை பாடசாலைக்கு அனுப்புகிறார்கள். படிக்கும் காலத்தில் உங்கள் கடமைகளை சரிவரச்செய்யுங்கள், அப்போதுதான் உங்கள் பெற்றோர்களின் கனவுகளை நனவாக்கமுடியும் என்று தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் திருமதி கௌரிமனோகரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சரின் நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட போட்டோ பிரதி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரித்தானியாவில் ஆண் நபர் ஒருவரை முத்தமிட்ட மகளை இஸ்லாமிய தந்தை ஒருவர் 4 வருடம் வீட்டு சிறையில் அடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேல்ஸில் உள்ள Swansea நகரில் Amina Al-Jeffery(21) என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு சவுதி அரேபியா மற்றும் பிரித்தானியா நாடுகளின் இரட்டை குடியுரிமை உள்ளது.
இந்த நிலையில், பிரித்தானியாவில் வசித்தபோது அவர் தன்னுடன் பழகிய ஆண் நபர் ஒருவருக்கு பொது இடத்தில் முத்தமிட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் வெளியேற இஸ்லாமிய மதப்பற்றுள்ள அவரது தந்தை அமீனாவை அழைத்துக்கொண்டு சவுதி அரேபியா சென்றுள்ளார்.
மேலும், மகளுக்கு மொட்டை அடித்த அவர் கை, கால்களில் சங்கிலியால் கட்டி ஓர் அறையில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.
ஒரு வேளை உணவு மட்டுமே வழங்கிய நிலையில், அமீனா கழிவறைக்கு கூட செல்ல அனுமதிக்கப்படாமல், அதே அறையிலேயே சித்ரவதை செய்யப்பட்டதாக தற்போது லண்டன் நீதிமன்றத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சவுதியில் வசிக்க அமீனாவிற்கு விருப்பம் இல்லாததால், அவரை பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்பப்பவும் அவரது தந்தை மறுத்துள்ளார்.
4 வருடங்களுக்கு பிறகு, அமீனாவின் சகோதரியால் இந்த விவகாரம் வெளியேறியது தொடர்ந்து அவர் மீட்கப்பட்டுள்ளார்.
எனினும், லண்டன் நீதிமன்றத்தில் மகள் கூறியுள்ள அனைத்து புகார்களையும் தந்தை மறுத்துள்ள நிலையில், ஆண் நபரை முத்தமிட்ட காரணத்திற்காக மகளை வீட்டு சிறையில் அடைத்த தந்தை மீதான வழக்கு நடைபெற்று வருகிறது.
பொகவத்தலாவ குயினா தோட்டப் பகுதியில் 14 வயது பாடசாலை சிறுமி கர்ப்பம் தரித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவியின் கா்ப்பம் தொடா்பில் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமகன் ஒருவரினால் தகவல் வழங்கியமைக்கு அமைய குயினா தோட்ட பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார், குறித்த சிறுமியை அழைத்து வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.
சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் சிறுமியின் பெரியம்மாவின் மகன் என வாக்குமுலம் அளித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடா்பில் சந்தேகநபரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதோடு, பாதிக்கபட்ட சிறுமியை பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்க உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
குறித்த சந்தேகநபர் பொகவந்தலாவ பெற்றோசோ தோட்டப் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடா்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசால் மெண்டிஸ் டெஸ்ட் அரங்கில் தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்து துடுப்பெடுத்தாடி வருகிறார்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறி வருகின்ற நிலையில் தனியொரு வீரராக குசல் மெண்டிஸ் தற்போது வரை 169 ஓட்டங்களை பெற்று அணியை வலுப்படுத்தி வருகின்றார்.
இன்றயை 3ம் நாள் மழை காரணமாக முடிவிற்கு கொண்டுவரப்பட்டபோது இலங்கை அணி தற்போதுவரை 6 விக்கட்டுகளை இழந்து 282 ஓட்டங்களை பெற்று 196 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
நேபாளத்தில் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளம் முழுவதும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் சேதமடைந்துள்ளன. தலைநகர் காத்மாண்டில் வீடு இடிந்து வீழ்ந்ததில் 2 குழந்தைகள் இறந்துள்ளன.
28 பேர் காணாமற்போயுள்ளதுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மீட்புக் குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
நேபாளத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின்போது வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழக்கின்றனர்.
நேபாளத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சுமார் 9000 பேர் உயிரிழந்தனர். இதில் வீடுகளை இழந்த இலட்சக்கணக்கானோர் இன்னும் குடிசைகள் மற்றும் கூடாரங்களிலேயே வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தினமும் உடற்பயிற்சி செய்யாதவர்கள் உலகப் பொருளாதாரத்திற்கு ஆண்டொன்றுக்கு 67 பில்லியன் டொலர்களுக்கும் மேல் செலவு வைக்கின்றார்கள் என்று ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
சோம்பியிருப்பதால் உலகின் சுகாதார செலவீனங்களில் 2013 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 54 பில்லியன் டொலர்களும் இழந்த உற்பத்தித் திறனால் சுமார் 13 பில்லியன் டொலர்களும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பிரிட்டனிலிருந்து வெளியாகும் மருத்துவ சஞ்சிகையான ‘லேன்செட்’ இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓடியாடி சுறுசுறுப்பாக இல்லாமல், உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறைகளால் ஆண்டொன்றுக்கு சுமார் 5 மில்லியன் இறப்புகள் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தினமும் ஒரு மணி நேர சுறுசுறுப்பான உடற்பயிற்சி தேவை என அவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.
இது உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள உடற்பயிற்சி நேரத்தை விட சுமார் மூன்று மடங்கு அதிகமானது.
சோம்பி இருப்பது என்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் பொருளாதாரச் சுமை, ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்குத் தடையாய் இருக்கிறது என்றும் மிக மேம்பட்ட சுகாதார அமைப்புகள் உள்ள செல்வந்த நாடுகள் கூட இந்தப் பிரச்சினைக்கு அதிக விலை தரவேண்டியிருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
27.07.2016
மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள்,
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு,
ஜனாதிபதி செயலகம்,
கொழும்பு.
ஜனாதிபதி அவர்களே!
மீள்குடியேற்ற செயலணி தொடர்பாக
வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்காக அமைச்சர்களான றிசாட் பதியூதீன், பைசர் முத்தப்பா, சுவாமிநாதன் மூவரைக் கொண்ட விசேட செயலணி ஒன்றை தாங்கள் உருவாக்கியிருந்தீர்கள். வடக்கிலிருந்து ஒருவரையும் நியமிக்கப்படவில்லை என்ற வடக்கு மாகாணசபையின் ஏகமனதான தீர்மானத்தையடுத்து அமைச்சர் துமிந்த திசாநாயக்கவையும் இணைத்துள்ளீர்கள்.
யுத்தம் முடிந்து ஏழாண்டுகள் கழிந்த நிலையிலும், மக்கள் முழுமையாக தமது சொந்த இடங்களுக்குப் போக முடியவில்லை என்பது உண்மையே. வடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மீள்குடியேற்றப்படவில்லை என்பதுடன், குறிப்பிட்டளவு முஸ்லிம் மக்களும் இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய மீள்குடியேற்றம் மிகப்பெருமளவு வடக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டிருப்பதால், வடக்கு மாகாண முதலமைச்சரும் இதில் உள்ளடக்கப்படவேண்டும் என்பது தமிழ் மக்களின் ஏகோபித்த எண்ணம் ஆகும். இந்நிலையில் வடமத்திய மாகாணத்தை சேர்ந்த அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை நியமித்தமை தமிழ் மக்களின் மனதை புண்படுத்திய செயல் என்பதை தாங்கள் மறுக்க மாட்டீர்கள்.
காணிகளை இனங்காணல், வீட்டுத் திட்டங்களை உருவாக்குதல், வாழ்வாதாரங்களை ஏற்பாடு செய்தல் போன்ற பல விடயங்கள் இந்த மீள்குடியேற்றத்துடன் அடங்கியுள்ளது. இந்த நிலையில், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சரான இளைப்பாறிய உயர்நீதிமன்ற நீதியரசர் விக்கினேஸ்வரன் ஐயா அவர்களை நியமித்து தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை தாங்கள் பெற்றிருக்கலாம்.
வடக்கு மாகாண முதலமைச்சரைத் தவிர்த்து ஒரு செயலணியை உருவாக்குவது எந்த விதத்தில் சரியானதும், நீதியானதுமாக அமையும் என்று தாங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
வடக்கு மாகாணத்தில் புதிதாக மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய பூர்வீக சிங்கள கிராமங்கள் என்று எவையும் இல்லை. ஆனாலும்கூட குடியேற்றங்களினூடாக சிங்கள கிராமங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மை. அத்தகைய சிங்கள மக்கள் ஏற்கனவே குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பதற்கு அப்பால் யுத்தத்தின் பின்னர் புதிய சிங்கள குடியேற்ற கிராமங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
வுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இத்தகைய சிங்கள குடியேற்றங்கள் உருவாகியிருப்பதை நீங்கள் நன்கறிவீர்கள். இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உருவாக்கியிருக்கின்ற இந்த செயலணியானது புதிய சிங்கள கிராமங்களை உருவாக்குவதை ஊக்குவிப்பதற்காகவா? என்ற ஐயமும் உருவாகின்றது. அதனை நோக்கமாகக்கொண்டுதான் இந்த செயலணியிலிருந்து முதலமைச்சர் தவிர்க்கப்பட்டாரா? என்ற எண்ணம் எம் மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.
தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களை நீங்கள் சமத்துவமாக நடத்துவீர்கள் என்ற எதிர்பார்ப்பிலும், தமிழ் மக்களின் உரிமைகளை நியாயமாக வழங்குவீர்கள் என்ற எதிர்பார்ப்பிலும், தமிழ் மக்களின் தனித்துவம் காப்பாற்றப்பட்டு அவர்களுடைய கலாசாரம், பண்பாடுகள் யாவுமே பாதுகாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பிலும் தான் தமிழ் மக்கள் உங்களுக்குப் பாரிய அளவில் வாக்களித்து உங்களை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள். ஆனால் தங்களின் இச்செயற்பாடு நம்பிய மக்களை ஏமாற்றியதாக அமைந்துள்ளது.
தமிழ் மக்கள் தமது தனித்துவத்தையும், சுயமரியாதையையும், சுயகௌரவத்தையும் காப்பாற்றுவதற்காகவே நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பதை தாங்கள் கவனத்தில் கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன். ஆனால் உங்கள் ஆட்சியிலும் அவர்களது சுயகௌரவமும், சுயமரியாதையும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இது உங்களது ஆட்சிக்கும் நற்பெயருக்கும் ஏற்படும் களங்கமாகவும் அபகீர்த்தியாகவும் அமையும் என்பதைத் தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இந்த வேளையில் தங்களிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகின்றேன்.
1. இத்தகையதொரு செயலணியில் வடக்கு மாகாண முதலமைச்சரை நியமித்து தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை மீளப்பெறுமாறு வேண்டுகிறேன்.
2. உங்களது தலைமையில் கீழ் உள்ள ஆட்சியில் புதிய சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்த மத ஆக்கிரமிப்பு நடைபெறுவதை தடைசெய்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
நன்றி,
மக்கள் சேவையில்
ந.சிவசக்தி ஆனந்தன்,
பாராளுமன்ற உறுப்பினர்,
வன்னி மாவட்டம்.
வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை மாணவிகள் நடன நிகழ்வில் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றமைக்கான பாராட்டு விழா இன்று (28.07.2016) பாடசாலையின் அதிபர் க.வஸ்தியாம்பிள்ளை தலைமையில் பாடசாலை பிரகாசம் மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவிகளின் உழவர் நடனம் அரங்கில் அரங்கேற்றப்பட்டது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் வவுனியா கோட்டக்கல்விப் பணிப்பாளருமான எம்.பி.நடராஜா கலந்துகொண்டு நடனத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி உரை நிகழ்த்துகையில்
இந்த நடனத்தை தேசிய மட்டம் வரை எடுத்துச் சென்று இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டதானது ஆசிரியர்களின் முயற்சியும் உழைப்பும் தான் என சுட்டிக்காட்டியதுடன் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி அதிபர் திருமதி சூரியயாழினி வீரசிங்கம் தனது மாணவியும் நடன ஆசிரியையுமான திருமதி நந்தினி ருக்சாவை தேசிய ரீதியில் மாணவர்களை வெற்றிபெற வைத்தமைக்காக பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
தேசிய ரீதியில் நடனத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் நடைபெற்றதுடன். ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு வவுனியா கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.பி.நடராஜா தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் வவுனியா தெற்கு அழகியல் உதவிக்கல்வி பணிப்பாளர் திருமதி க.சூரியகுமார், பாடசாலை மேம்பாட்டு வலயப் பிரதிநிதி திருமதி வசந்தி குலராசா, தொழில் வழிகாட்டி ஆலோசகர் திருமதி கிரேனியா, சங்கீத ஆசிரியர் சி.பிரதீபன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.