சிறப்பு பூஜையினை முன்னிட்டு அநுராதபுரம் புனித பூமிக்கு வரும் யாத்திரிகளின் பணம், பெறுமதியான பொருட்கள் மற்றும் தொலைபேசிகளை திருடிய பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 8 பெண்கள் அடங்குவதாகவும் என்று அநுராதபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து 12 கைப்பைகள், 6 கைத்தொலைபேசிகள், 12 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அடையாள அட்டைகள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பெண் சந்தேகநபர்கள் கிரான்ட்பாஸ், சிலாபம், புத்தளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இதில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏனைய சந்தேகநபர்கள் இருவரும் குருநாகல், மாத்தளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ள பொலிஸார்,
குறித்த சந்தேகநபர்கள் நாடளாவிய ரீதியில் நடைபெறும் மத நிகழ்வுகளை இலக்கு வைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர்கள் பத்து பேரும் நாளைய தினம் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இருவர் பலியாகி உள்ளனர்.
இன்று மாலை 4.30 மணியளவில் A9 வீதி கொக்காவில் பகுதியில் யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிளும் கொழும்பிலிருந்து யாழ்நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறியரக பேருந்து (மினி பஸ்) ஒன்றும் நேருக்கு நேர் மோதி இருவர் பலியாகி உள்ளனர்.
அத்துடன் ஒன்றரை வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றும் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து சிறியரக பேருந்தின் (மினி பஸ்) சாரதி உறங்கிய காரணத்தினால் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதாலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக மாங்குளம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பேருந்தின் சாரதி விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததனை அடுத்து குறித்த சாரதியை கிளிநொச்சி பொலிசார் மாங்குளம் பொலிசாரிடம் கையளித்துள்ளனர்.
விபத்தில் இறந்தவர்கள் வவுனியாவைச் சேர்ந்த 24 வயதான அல்பட் ஜெயக்குமார் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அவரது மனைவியான 23 வயதான பிரஷாந்தினி என்பவர்களே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிப்பதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா இன்று(24.07.2016) ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள் ஆகிய இரு தினங்கள் இடம்பெறுகின்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் “எங்கள் பாடசாலைக்கு நூற்றாண்டு” எனும் இசைத்தட்டு வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா அவர்களால் மேடையிலும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி அவர்களால் வவுனியா நெற் இணையத்தளத்திலும் நேரடியாக வெளியிடப்பட்டது.
பாடசாலை அதிபர் ச.சுபாஸ்கரனின் ஆலோசனையிலும், அ.நிமால் கொன்சன்ரைனின் நெறியாள்கையிலும் புதுக்குளத்தைச் சேர்ந்த திரு. திருமதி பாலேஸ்வரன் சுதர்சினியின் முழுமையான அனுசரணையிலும் இப் பாடல் தொகுப்பு வெளியிடப்பட்டது.
இப் பாடலுக்கு
இசை – ஜெ
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு – T .பிரியந்தன்
மிக்ஸிங் -பகீரதன்
வவுனியாவின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா இன்று (24.07.2016) ஞாயிற்றுகிழமை காலை 9 மணியளவில் பாடசாலை அதிபர் த.சுபாஸ்கரன் தலைமையில் ஆரம்பமானது.
இரண்டு நாட்களாக நடைபெறவுள்ள நிகழ்வுகளின் முதல் நாளான இன்றைய நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினர்களாக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி ஆகியோரும்,
சிறப்பு விருந்தினர்களாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், K.K.மஸ்தான் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன் ஆகியோரும்,
அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மதகுருமார்கள், ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கல்வியாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர்.
இன்றைய நாள் நிகழ்வுகளில் பாடசாலையின் வளர்ச்சிக்கு பங்களித்த அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் கெளரவிக்கப்பட்டதுடன், பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களும் கெளரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இசைத்தட்டு வெளியீடு நடைபெற்றதுடன் இறுதியில் பாடசாலை மாணவர்களால் நாடகம் ஒன்றும் அரங்கேற்றப்பட்டது. இன்றய நாள் நிகழ்வுகள் 2 மணியளவில் நிறைவுபெற்றது.
நாளைய நிகழ்வுகள்(25.07.2016) பகல் 1.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
இன்றைய நிகழ்வுகள் முழுவதும் வவுனியா நெற் இணையத்தினூடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன். நாளைய நிகழ்வுகளும் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. நேரடி ஒளிபரப்பிற்கு அனுசரணையை லண்டனில் வசிக்கும் புதுக்குளத்தைச் சேர்ந்த பத்மநாதன் சதீஸ்வரன் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதை தன்னுடைய லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறார் நான்கே வயதான சிறுவன் Shayan Jamal.
டெல்லியை சேர்ந்த சிறுவன் Shayan Jamal, Hamdard பள்ளியில் படித்து வருகிறான்.
கிரிக்கெட்டில் அதீத ஈடுபாடு கொண்ட Shayan சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி வரிசையில் பெரிய ஆளாக வேண்டும் என்பதை தன்னுடைய லட்சியமாக கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறான்.
வலது கை துடுப்பாட்ட வீரரான இவர், தற்போது Under-12 அணியில் இடம்பெற்றுள்ளார். இவனது தந்தை Arshad Jamal, தன்னுடைய மகன் நிச்சயம் ஒருநாள் இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடுவான் என நம்பிக்கையுடன் உள்ளார்.
தன்னுடைய ரோல் மொடல் வீராட் கோஹ்லி என கூறும் Shayan, இந்திய அணிக்காக சென்சூரி அடித்து அசத்த வேண்டும், கோஹ்லி மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர் என தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரசார் அனுப்பிய புகார்கள் குறித்து அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்புவிடம் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தலில், திமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழக காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டது. இதில், எட்டில் மட்டுமே கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து, கட்சியின் தலைவர் இளங்கோவன் மற்றும் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு மீது, ஏகப்பட்ட புகார்களை கட்சி மேலிடத்துக்கு, தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் அனுப்பினர்.
இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்தார். அடுத்த தலைவர் நியமனம் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் பலரையும் அழைத்து கருத்து கேட்டு வருகிறது.
டெல்லி சென்ற குஷ்புவும், ராகுலை சந்தித்தார். அப்போது, குஷ்புவின் தேர்தல் நேரத்து செயல்பாடுகள் தொடர்பாக, ராகுல், அவரிடம் கொந்தளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் நடிகை குஷ்பு, கட்சியின் பேச்சாளராகவும் உள்ளார். இதனால், தேர்தல் நேரத்தில் அவரை, கட்சித் தலைமை தீவிர பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சமீபத்திய சட்டசபை தேர்தலுக்கும் அவர் பிரசாரம் செய்தார். இதற்காக, கட்சி மேலிடத்தில் இருந்து அவருக்கு கணிசமான தொகை வழங்கப்பட்டது. கட்சிக்காரர்களிடம் பணம் பெறக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஒவ்வொரு தொகுதிக்கும் பிரசாரத்துக்கு செல்லும்போது, போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களிடம் பெரும் தொகையை குஷ்பு வசூலித்ததாக புகார் எழுந்தது.
பணம் தராத தொகுதிகளுக்கு அவர் பிரசாரத்துக்கு செல்லவில்லை. குறிப்பாக, கட்சியின் தேசிய செயலர் திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன், அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு, சொற்ப ஓட்டுகளில் தோல்வி அடைந்தார்.
அந்த தொகுதியின் பிரசாரத்துக்கு செல்ல குஷ்பு மறுத்து விட்டார். இதனால், குஷ்பு மீது, கட்சி மேலிடத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து தான், ராகுல், குஷ்புவிடம் விசாரணை நடத்தி உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போதுள்ள மொத்த குற்றவாளிகளின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 929 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த வருடத்தின் ஜூன் 30 வரையான பகுதியிலேயே குற்றவாளிகளின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 929 ஆக பதிவாகியுள்ளது. அவற்றில் 973 பெண்களும் அடங்குவதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 3 இலட்சத்து 50 ஆயிரம் குற்றவாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 22 ஆயிரத்து 937 பெண்கள் உள்ளடங்குவதாக குற்றப் புலனாய்வு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
70 வயதிற்கு மேற்பட்டோரின் பெயர்களை குற்றவாளி பட்டியலில் இருந்து நீக்கி விடுவதாகவும், அத்துடன் 20 ஆண்டுகள் நன்நடத்தையுடன் காணப்படும் குற்றவாளிகளின் பெயரும் பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் மூலம் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் இளநீர் லண்டனில் விற்பனை செய்யும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சில நிறுவனங்களினால் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து இந்த இளநீர் விற்பனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனுக்கான இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் சுகீஸ்வர குணரட்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் லண்டனின் முக்கிய கடைத் தொகுதி ஒன்றில் இந்த இளநீர் விற்பனை நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இளநீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக பதில் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இந்த முயற்சிக்கு சில தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இளநீருக்கு பிரிட்டன் மக்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் அரைசொகுசு பஸ்களை சுற்றுவளைக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களின் நிபந்தனைகளை மீறி அரைசொகுசு பஸ்களில் ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றிச் செல்ப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.பி.ஏ.ஹேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.
இரவு நேரங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ்களிலேயே இவ்வாறன சம்பவங்கள் அதிகம் பதிவாகுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் அரைசொகுசு பஸ்களில் பயணிக்கும் மேலதிக பயணிகளின் எண்ணிக்கைக்கு அமைய, அந்த பஸ்களின் சாரதிக்கும் நடத்துனருக்கும் தற்காலிக தடை விதிக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலதிகமாக ஏற்றிச் செல்லும் பயணிகளின் அடிப்படையில் தலா ஒரு பயணிக்கு ஒரு நாள் என்ற அடிப்படையில் சாரதிகளுகம் நடத்துனர்களும் சேவையிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் பயிற்சி பாசறைக்கும் அவர்கள் அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் எம்.பி.ஏ.ஹேமசந்திர கூறியுள்ளார்.
இதனை தவிர, மேலதிகமாக ஏற்றிச் செல்லும் பயணிகளின் அடிப்படையில் தலா 100 ரூபா என்ற வீதத்தில் பஸ் உரிமையாளரிடமும் அபராதம் அறவிடப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.பி.ஏ.ஹேமசந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.
மைனா, வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் அமலா பால். இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்த இவர், தற்போது தனுஷ் நடிக்கவிருக்கும் வட சென்னை படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இவருக்கும் விஜய்க்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், விரைவில் அவரை விவாகரத்து செய்யவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுகின்றது.
இவை உண்மையா என்று தெரியவில்லை, அதே நேரத்தில் இதை இருதரப்பும் தற்போது வரை மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் போது பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்வது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் பிரதிப் பரீட்சை ஆணையாளர் எஸ்.பிரணவதாஸன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு தகவல் தருகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இதனை அவதானிப்பதற்கு பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய நான்கு குழுக்களும், வலயமட்ட குழுக்களும் ஈடுபடுத்தப்படவுள்ளன. தவறிழைக்கும் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதும் தடைசெய்யப்படும்.
கட்டாரிலிருந்து நாடு திரும்பிய காதலியை சந்திப்பதற்காக பெண்ணின் உடை அணிந்து சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 30 வயதுடைய குறித்த இளைஞர் நேற்று கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கட்டாரிலிருந்து இலங்கைக்கு நாடு திரும்பும் தனது காதலியை சந்திப்பதற்காகவே பெண்ணின் உடை அணிந்து வந்திருந்ததாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வேற்றுகிரகவாசிகள் வாழும் சாத்தியக்கூறுகள் நிறைந்த புதிய கிரகத்தை அமெரிக்க வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள், நம்மை போலவே இருப்பார்களா, அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு.
பொதுவாக, வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள்.
தற்போது வேற்றுக்கிரக வாசிகளின் வாழ்விடம் 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வீடியோவில் பூமியை போலவே அங்கும் சுற்றுச்சூழல் ஆதாரம் காணப்படுகின்றது.
ஒரு குட்டையான செந்நிற நட்சத்திரமும் அதனைச் சுற்றும் பூமியைவிட சற்று பெரியதுமான மூன்று கிரகங்களும் அண்டவெளியில் வானியல் வல்லுநர்களால் கடந்த மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டன.
ஒன்றுக்கொன்று வெகுதூரத்தில் காணப்படும் மூன்று கிரகங்களில். நட்சத்திரத்துக்கு மிக அருகாமையில் உள்ள இரண்டு கிரகங்களில் உயிர்கள் வாழ்வதற்கேற்ப நமது பூமியில் உள்ளது போன்ற பாறைகளும் சுற்றுச்சூழலும் அமைந்துள்ளது.
விவரிக்க முடியாத அமைப்புடன் பறக்கும் தட்டுகளில் பூமிக்கு வந்து செல்லும் வேற்றுக்கிரக வாசிகள் இங்கு வாழக்கூடும் என ஆய்வாளர்கள் முடிவுசெய்துள்ளனர். இதை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் பார்த்தும் உறுதி செய்துள்ளனர்.
அந்த நட்சத்திரத்திற்கு ட்ராப்பிஸ்ட்-1 என பெயரிட்டுள்ளனர். அதைச் சுற்றும் கிரகங்களும் முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் ஆய்வுகள் தொடர்ந்த நிலையில், இப்போழுதுதான் ட்ராப்பிஸ்ட்- 1 க்கு மிக அருகில் உள்ள கிரகத்தில், பூமியில் அமைந்திருப்பது போல, உயிர்கள் வாழக்கூடிய பாறை நிலங்களும், சிறிய சுற்றுச்சூழலும் காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது செவ்வாய் கிரகத்தோடு ஒப்பிடுகையில், சராசரியாக அதன் சுற்றுவட்டப்பாதையை விட, 12.5 ஒளி நிமிடங்கள் தூரத்தில் உள்ளது. மேலும், அந்த கிரகம் நம் பூமியைவிட தோராயமாக மூன்று மடங்கு பெரியதாகவும் உள்ளது. இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆய்வு வரலாற்றிலே மிகச்சிறந்த முன்னேற்றமாக விஞ்ஞானிகளே வியக்கின்றனர்.
மாசசூசெட்ஸ் தொழில்கல்வி நிறுவனத்தில் இந்த கிரகங்களை பார்த்து மேலும், ஆய்வு செய்துவரும் சர்வதேச விஞ்ஞானிகள் குழு, சூரியனை பூமி சுற்றுவதுபோல, அந்த நட்சத்திரத்தையும் அந்த கிரகங்கள் சுற்றுகின்றன.
ஆனால், அந்த நட்சத்திரம் வெப்பமின்றி குளிர்ந்தும் பிரகாசமான செந்நிற ஒளியுடனும் காணப்படுகிறது. அதற்கு, அந்த நட்சத்திரத்தை சுற்றியுள்ள அகச்சிவப்பு அடுக்கே காரணம்.
அந்த கிரகங்களின் அளவும் வெப்பநிலையும் உயிர்கள் வாழ தகுதியானது. மேலும், அடர்சிகப்பு நிறத்தில் ஒளிரும் அந்த நட்சத்திரம் சூரியனில் எட்டில் ஒரு பகுதி நிறையுடையது.
மறையாத, உறுதியான சமிஞைகள் அந்த சிவப்பு நட்சத்திரத்தில் இருந்து பெறப்படுவதால், வாழத்தக்க உலகங்களின் பிரதான இலக்குகள் அங்கு நிச்சயம் இருக்க வேண்டும் என வானியல் வல்லுனர் லீஜ்(Liege) வாதிடுகிறார்.
மேலும், அந்த நட்சத்திரம் ஒரு ஒழுங்கான கால இடைவெளியில் மறைந்து பின் தோன்றுகிறது. அது நட்சத்திரத்துக்கும் பூமிக்கும் இடையில் பல பொருள்கள் இங்கும் அங்குமாக செல்வதை உணர்த்துவதாக உள்ளது.
சுழற்சியின்போது, கிரகங்களுக்குள்ளும் நட்சத்திரத்துடனுமான நேரும் நேர்க்கோட்டு சந்திப்பு வெவ்வேறு காலங்களில் நடக்கிறது.
நட்சத்திரத்துக்கு மிக அருகாமையில் உள்ள இரண்டு கிரகங்கள் 1.5 நாள் மற்றும் 2.4 நாளில் சுற்றி முடிக்கின்றன. மூன்றாவது கிரகம் கேள்விக்குறியாக உள்ளது. அதற்கு 4 லிருந்து 73 நாட்கள் வரை ஆகலாம்.
ட்ராப்பிஸ்ட்-1 நட்சத்திரத்தை சுற்றிலும் மேலும் 60 குட்டையான நட்சத்திரங்கள் காணப்படுவதாக பெல்ஜியம், லீஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மைக்கேல் கில்லான் கூறுகிறார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பாக, அந்த இரண்டு கிரகங்களில் போக்கு மற்றும் வரத்து என இருமுறையிலும் எடுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் பதிவில், அவற்றின் உள் சுற்றுச்சூழலின் தன்மையும் கணிக்கப்பட்டுள்ளது. அதன் ஸ்பெக்ட்ரமும் எதிர்பார்த்தபடி கிடைத்துள்ளது என்கின்றனர்.
மேலும், கிரகத்துக்குள் செல்லும் ஒளியின் அலைநீளத்தில் (Wavelength) நிறைய மாறுபாடுகள் ஏற்படுவதால், அங்கு ஒளியும், பெரிய மற்றும் அடர்த்தியான கார்பன் டை ஆக்ஸைடு அதிகமுள்ள வளிமண்டலமும், அடர்த்தியான மேகங்களும் இருக்கக்கூடும்.
அது பூமி, செவ்வாய், வியாழன் கிரகத்தைப் போல சுற்றுச்சூழல் கொண்டது என்பதை ஆய்வுகள் உறுதிசெய்கிறது. அங்கு வாழ்பவர்கள் வாழ்க்கைமுறையும் பூமியில் இருப்பதுபோல, பெரிய தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட கலாசாரமாக இருக்கும்.
அந்த கிரகத்தின் உட்பகுதி சுற்றுச்சூழலை மேலும் ஆராய்வதற்கு, இன்னும் துல்லியமான, பெரிய இடவசதிகள் கொண்ட தொலைநோக்கிகளை உருவாக்குவது சர்வதேச விஞ்ஞானிகள் குழுவின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இருக்கும் என டாக்டர் டி விட் கூறுகிறார்.
அங்கு வேற்றுக்கிரக வாசிகள் இருந்தால், மனிதர்களைவிட சக்தி மிக்கவர்களாகவே நிச்சயம் இருப்பார்கள். எப்படி என்கிறீர்களா?
பூமியின் துணை கிரகமான நிலவுக்கே சமீப காலத்தில்தான் நாம் சென்றிருக்கிறோம். ஆனால், 40 ஒளி ஆண்டுகள் தூரத்திலிருந்து நம் பூமிக்கு விதவிதமான பறக்கும் தட்டுகளில் வந்து அடிக்கடி பயமுறுத்துகிறார்களே அவர்களுடைய விஞ்ஞான வளர்ச்சி எவ்வளவு சக்திகொண்டதாக இருக்கும்?
லண்டனில் இருந்து திரும்பிய நடிகை ஐஸ்வர்யா ராயை ரசிகர்களும், ஊடகங்களும் முற்றுகையிட்டதால் மும்பை விமான நிலையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அவரது தாய் கீழே விழுந்தார். மகளுக்கும் தலையில் அடி பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆரத்யா மற்றும் தாய் விருந்தா ராயுடன் கடந்த சில வாரங்களுக்கு முன் ஓய்விற்காக லண்டன் புறப்பட்டுச் சென்றிருந்தார். ஓய்வு முடிந்து இந்தியா திரும்பிய ஐஸ்வர்யா மும்பை விமான நிலையம் வந்திறங்கினார்.
வழக்கம் போல அவரைக் காண ரசிகர்கள் திரண்டனர். கூடவே ஊடகங்களும் அவரைப் புகைப்படம் எடுக்க துரத்தினர். இதனால் பாதுகாவலர்கள் ஐஸ்வர்யாவையும், அவரது மகள் மற்றும் தாயையும் பத்திரமாக கார் அருகே அழைத்துச் செல்ல முயற்சித்தனர்.
ஐஸ்வர்யா ராய் காருக்கு அருகில் சென்ற போது பாதுகாவலர்கள், ரசிகர்களையும் போட்டோகிராபர்களையும் தள்ளி விட்டனர். இதில் ஒருவர் தடுமாறி ஐஸ்வர்யாராயின் தாய் மீது விழுந்தார். இதனால் விருந்தா ராய் நிலைதடுமாறி கீழே விழுந்து வலியால் அலறினார்.
மகள் ஆரத்யாவைக் காரின் பின்சீட்டில் அமர வைத்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராய் தாயின் அலறலால் அதிர்ச்சி அடைந்தார். தாயைப் பார்க்கும் வேகத்தில் கார் கதவை வேகமாக அவர் சாத்தினார். இதில், குழந்தை ஆரத்யாவின் தலையில் அடி பட்டது. இதனால் குழந்தையும் வீறிட்டு அழுதது.
ஒரே நேரத்தில் தாய் மற்றும் மகளுக்கு அடிபட்டதால் அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா ராய், உடனடியாக குழந்தையின் தலையை தேய்த்து விட்டுக் கொண்டே, பின்னால் திரும்பி ‘என் அம்மாவைத் தள்ளி விட்டது யார்?´ என கோபத்தில் கத்தினார்.
ஐஸ்வர்யாராய் கோபத்தை பார்த்து அதிர்ச்சியான கூட்டத்தினர் அங்கிருந்து விலகி சென்றனர். பாதுகாவலர்கள் அவரது தாயை தூக்கி விட்டனர். தாயை அழைத்துக் கொண்டு ஐஸ்வர்யாராய் மின்னல் வேகத்தில் காரில் ஏறி சென்று விட்டார்.
சோதனைக் குழாய் செயற்கை கருத்தரிப்பு மூலம் காட்டு எருமை கன்றுகளை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
குழந்தை இல்லா தம்பதிக்கு சோதனை குழாய் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பேறு கிடைக்கிறது. அதே முறையில் விலங்குகளிலும் இனப்பெருக்கம் செய்ய ஆய்வுப் பணி நடைபெற்றது.
இந்த ஆராய்ச்சியில் முதன் முறையாக கனடாவை சேர்ந்த கால்நடை விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அழியும் இனப்பட்டியலில் இருக்கும் காட்டு எருமைகளை இந்த ஆராய்ச்சிக்கு எடுத்துள்ளனர்.
தற்போது மலைப்பகுதியில் வாழும் அரிய வகை காட்டெருமைகள் உலக அளவில் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையே உள்ளன. அவை நோயினாலும், இயற்கை மாற்றங்களினாலும் அழிந்து வருகின்றன. 5 சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே உயிர் வாழ்கின்றன.
எனவே காட்டெருமைகளில் சோதனை குழாய் செயற்கை கருத்தரிப்பு மூலம் வெற்றிகரமாக 3 காட்டெருமை கன்றுகளை உருவாக்கி பிறக்க செய்தனர். இது ஒரு மிகப் பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
இச்சாதனை சஸ்கட்சீலன் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்டது. தற்போது இந்த ஆய்வு வெற்றி பெற்றதன் மூலம் அழிந்து வரும் விலங்குகளின் இனத்தை காப்பாற்ற முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மட்டக்களப்பு, வெல்லாவளி காகச்சிவட்ட பிரதேசத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பெண்ணொருவர், அவரின் சிறிய மகள் மற்றும் தந்தை ஆகிய மூவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசவாசிகளால் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின்படி வெல்லாவளி பொலிஸாரினால் அவர்கள் வசித்து வந்த வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து குறித்த பெண் மற்றும் மகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பலத்த காயங்களுடன் வீட்டிற்கு அருகில் விழுந்து கிடந்த தந்தை பிரதேசவாசிகளால் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 24 வயதுடைய பெண், ஒன்றரை வயதுடைய மகள் மற்றும் 56 வயதுடைய தந்தை ஆகிய மூவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பார்களா என்று சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.