பாலாவின் படத்தில் நடிக்க மறுத்த ஜீவா!!

Jeeva

பாலாவின் படத்தில் நடிக்க பல நடிகர்கள் தவம் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர் அடுத்து குற்றப்பரம்பரை என்ற படத்தை இயக்குவதாக உள்ளார்.

ஆனால் இந்த படத்திற்கு அதிக பட்ஜெட் தேவைப்படுவதால் சிறிது காலம் நிறுத்தி வைத்துவிட்டு, தன் ஸ்டைலில் ஒரு படம் இயக்கலாம் என முடிவெடுத்தாராம்.

நடிகர் ஜீவாவை அந்த படத்தில் நடிக்க அழைக்க, அவர் நானே ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளேன், இந்த நேரத்தில் ஒரு வருடம் உங்கள் படத்தில் நடித்தால் என்ன ஆவது என கூறி நடிக்க மறுத்துவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைத் திகதிகள் வெளியீடு!!

Examination_department

இந்த வருடத்திற்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையினை ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடத்தவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இம் முறை 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் 2,959 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன் 350,701 பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றவுள்ளனர்.

இதேவேளை விண்ணப்பதாரிகளின் பரீட்சை நுழைவுச்சீட்டுக்கள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு நேற்று (18.07) தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நுழைவுச்சீட்டுக்கள் கிடைக்கப் பெறாவிடின் 1911 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு எதிர்வரும் 29 ஆம் திகதிக்குள் அறிவிக்குமாறும் பரீட்சைகள் திணைக்களம் அதிபர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

வவுனியா நாவலர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா!!

 
வவுனியா நாவலர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று முன்தினம் (17.07.2016) முன்பள்ளி தலைமை ஆசிரியர் தலமையில் நடைபெற்றது.

இவ் விளையாட்டு விழாவில் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா, ஸ்ரீரெலோ செயலாளர் நாயகம் பா.உதயராசா, மகாறம்பக்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிறேமதிலக்க மற்றும் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர், அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அயல் முன்பள்ளி ஆசிரியர்கள், காத்தார்சின்னக்குளம் கிராமசேவையாளர், சமூர்தி உத்தியோகத்தர், முன்பள்ளி பெற்றார் அசிரிய சங்கதலைவர் மற்றும் அங்கத்தவர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், செயலாளர், அங்கத்தவர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும்கலந்து சிறப்பித்தார்கள்.

IMG_3966 IMG_3970 IMG_3975 IMG_3976 IMG_3977 IMG_3981 IMG_3982 IMG_3983 IMG_3986 IMG_3987 IMG_3990 IMG_3991 IMG_3992 IMG_3995 IMG_3996 IMG_3997 IMG_4000 IMG_4001 IMG_4006 IMG_4010 IMG_4012 IMG_4015 IMG_4017 IMG_4018 IMG_4019 IMG_4020 IMG_4030 IMG_4042 IMG_4046 IMG_4050 IMG_4053 IMG_4056 IMG_4057 IMG_4060 IMG_4065

வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவி தேசிய மட்டத்தில் சாதனை!!

Nedunkeney School

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் செல்வி ச.டிலக்சி தேசிய ரீதியில் இடம்பெற்ற தமிழ்த்தினப் போட்டியில் பிரிவு 4 கவிதை ஆக்கப் போட்டியில் முதலிடத்தைப்பெற்று வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வடக்கு வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த இம் மாணவியை பாடசாலைச் சமூகம் வாழ்த்துவதில் பெருமையடைகிறது.

இவரை வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக நாமும் வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்.

NET

எரித்து கொலை செய்யப்பட்ட கர்ப்பிணி மகள் : நீதி கேட்டு போராடும் தந்தை!!

Father

ஆப்கானிஸ்தானில் கர்பமாக இருந்த இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு போராடி வருகிறார் அந்த பெண்ணின் தந்தை

ஆப்கானின் கோர் மாகாணத்தில் குடியிருந்து வருகிறார் முகம்மது அஜாம் என்பவர் தமது 14 வயது மகள் சாரா என்பவரை அருகாமையில் உள்ள ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

அந்த குடும்பத்தினர் அஜாமிடம் இருந்து கடனாக அதிக பணம் கைப்பற்றியிருந்ததால், அவர்களின் சகோதரி ஒருவரை அஜாமுக்கு திருமணம் செய்து வைக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதனிடையே அதிக பணம் தருவதாக வேறொரு நபர் அவர்களிடம் வாக்கு அளித்ததால் அந்த பெண்ணை பணம் அதிகம் தரும் நபருக்கு மணம் முடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில் குறிப்பிட்ட பெண்மணி முகம்மது அஜாமுடன் தலைமறைவாகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த குடும்பத்தினர் சாரா மீது தங்கள் கோபத்தை காட்டியுள்ளனர்.

கர்பமாகியிருந்த அவரை கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். பின்னர் நெருப்பு வைத்து சாராவை எரித்து கொலை செய்ய முயன்றுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அந்த இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் காபூல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற அஜாம் தமது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி காபூல் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

கோர் மாகாணத்தில் மட்டுமல்ல ஆப்கானின் ஒட்டுமொத்த பகுதியிலும் மனித உரிமை மீறல்களும், பாலியல் வன்கொடுமைகளும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்களும் பெண்ணியவாதிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.

பெண்ணை வன்புணர்வு செய்த குற்றவாளியை அடித்தே கொன்ற மக்கள்!!

Abuse

ஆந்திர மாநிலத்தில் 19 வயது இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற இரண்டு பேரை, பொது மக்கள் கட்டி வைத்து அடித்ததில் ஒருவன் உயிரிழந்தன். மேலும் ஒருவன் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

குண்டூர் மாவட்டத்தை அடுத்த தவுலாதேவி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஜாஸ்மின். அவர் வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து அதே கிராமத்தை சேர்ந்த ஸ்ரீசாய் மற்றும் ஜென்னா பவன்குமார் என்ற இரண்டு பேர் ஜாஸ்மினை தாக்கி பாலியல் வன்புணர்வு செய்து கொன்றுள்ளனர்.

பின்னர், கழுத்தில் பெல்டை மாட்டி பேனில் தற்கொலை செய்து கொண்டது போல் தொங்க விட்டுள்ளனர். ஜாஸ்மின் விருப்பத்திற்கு மாறாக பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடியுள்ளனர்.

ஆனால் கிராமத்தினர் ஜாஸ்மின் உடலில் காயங்கள் இருந்ததை கண்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ஊர் மக்கள் அந்த இரண்டு பேரையும் மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர்.

சம்பவம் குறித்து கிராம மக்கள் பொலிசாருக்கு அளித்த தகவலை தொடர்ந்து, குற்றவாளிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மருத்தவமனையில் ஸ்ரீசாய் என்ற நபர் உயிரிழந்துள்ளார். பவன்குமார் கவலைக்கிடமாக உள்ளார் எனவும், சம்பவம் குறித்து மேல்விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விமானநிலையத்தில் 16 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணங்களுடன் மூவர் கைது!!

Foreign Money

கட்டுநாயக்க விமானநிலையத்தில் 16கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு பணத்துடன்மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இதில் இரண்டு பெண்களும் அடங்குவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக சுங்க அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

இந்த மூவரும் 16 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு பணத்தை கட்டார் ஊடாகதுபாய்க்கு கொண்டு செல்ல முயற்சித்தாகவும் சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவ்வாறான பெருந்தொகை பணம் வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்படவிருந்தநிலையில் கைப்பற்றப்பட்டுள்ளமையானது இதுவே முதற்தடவை என்றும் சுங்க அதிகாரிகள்சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவதானம் : வைரஸினால் இலங்கையில் கண் நோய் ஏற்படும் அபாயம்!!

Red Eye

இலங்கையில் ஒரு வகை வைரஸ் தொற்றினால் கண் நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாககண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கண் மருத்துவமனைக்கு ; இந்த நாட்களில் சிகிச்சைக்காக வருபவர்களின்எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்றினால் கண் சிவப்படைதல்,கண்ணீர் அதிகமாக வருவதுடன்,சிறியளவிலானவலியும் இருக்கும் என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குறித்த கண் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நன்றாக சவர்க்காரமிட்டுகைகளை சுத்தப்படுத்தி அல்லது சுத்தமான கைக்குட்டைகளை பயன்படுத்துமாறும் கண்மருத்துவ சிறப்பு வைத்தியர் தர்மா இங்குல்பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களுக்கு செல்வதைதவிர்க்குமாறும்,குறித்த கண் நோயிலிருந்து விசேடமாக சிறுவர்களைபாதுகாக்குமாறும், கண் நோய் ஏற்பட்டிருக்குமானால் மாணவர்களை பாடசாலைக்குஅனுப்புவதை தவிர்க்குமாறும் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் தேர் இழுக்கும் இராணுவத்தினர்!!

 
யாழ். அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

வடக்கில் தற்போதும் அதிகளவான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இந்நிலையில், இன்றைய தேர் திருவிழாவின் போது ஆலயத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வருகை தந்திருந்தனர்.

இவ்வாறு வருகை தந்த இராணுவத்தினர் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், பக்தர்களுடன் இணைந்து வடம் பிடித்து தேரும் இழுத்துள்ளனர்.

தமது மேலாடைகளை கலைந்து விட்டு, தமது காலணிகளை கழட்டி விட்டு பக்தர்களுடன் இணைந்து இராணுவத்தினர் தேரினை இழுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

1 2

தமிழகத்தை மிரட்டிவரும் கூலிப்படைகள் : அதிர்ச்சியில் மக்கள்!!

koolipadai

கூலிப்படைக் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கும் அளவுக்கு தமிழகத்தில் மிக அபாயகரமான சூழல் நிலவுகிறது.

அரசியல், தொழில்போட்டி போன்ற காரணங்களுக்காகக் கூலிப்படையை வைத்து எதிராளிகளைப் போட்டுத்தள்ளுவது என்று இருந்த நிலைமை இப்போது, கணவனை காலி செய்ய மனைவியும், மனைவியின் கள்ளக்காதலனைப் போட்டுத்தள்ள கணவனும், மருமகனை தீர்த்துக்கட்ட மாமியாரும்… எனக் குடும்பப் பிரச்னைகளுக்குக்கூட கூலிப்படையை அனுப்பி ஆளை அட்ரஸ் இல்லாமல் ஆக்கும் கலாசாரம் தமிழகத்தை மிரட்டி வருகிறது.

கூலிப்படையின் பின்னணி

பணம் கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் கொலை செய்பவர்களே கூலிப்படையினர். ஒருவரின் கதையை எப்படி முடிக்க வேண்டும் என்று ‘ஸ்கெட்ச்’ போட்டுக் கொடுக்கத் தனி டீம், அதைச் செயல்படுத்த ‘ஆபரேஷன்’ டீம், கொலை செய்ய வேண்டிய நபரின் நடமாட்டத்தைக் கண்காணித்து ரிப்போர்ட் கொடுக்க ‘ஒற்றர்கள்’ டீம் என கூலிப்படைகளில் தனித்தனி டீம்கள் உண்டு. பணம் கொடுப்பவர்களே இவர்களின் எஜமானர்கள்.

தமிழ்நாட்டில் ஏராளமான கூலிப்படை குழுக்கள் செயல்படுகின்றன. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே கூலிப்படையில் அதிகம். இதில், 20 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என்பதும், 18 வயது நிரம்பாத மைனர்களும் உண்டு என்பதும் அதிர்ச்சித் தகவல்.

கூலிப்படை கொலையாளிகள் எப்படி உருவாகிறார்கள் என்பதை ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் சசிகுமார் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியிருப்பார். ஜாலியாக ஊருக்குள் சுற்றிக்கொண்டிருக்கும் இளவட்டப் பசங்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்யும் அரசியல் புள்ளி ஒருவர், அதற்குப் பிரதிபலனாக சென்டிமென்டாகப் பேசி கொலை செய்யத் தூண்டுவார். அவர்கள் சிறைக்குச் சென்ற பிறகு, அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார். சிறைக்குள் ஏற்படும் நட்புக்காக வெளியில் வந்து மீண்டும் அவர்கள் கொலை செய்யவார்கள். அவர்களின் வாழ்க்கை அதே திசையிலேயே போகும்.

ரேட் என்ன?

கொலை செய்யப்பட வேண்டிய நபரின் பின்னணியை வைத்து ரேட் ஃபிக்ஸ் பண்ணுகிறார்கள். சாதாரண நபர் என்றால் ரேட் குறைவாக இருக்கும். அரசியல்வாதி, தொழிலதிபர் என வி.ஐ.பி அந்தஸ்த்தில் இருப்பவர்கள் என்றால், ரேட் பல மடங்கு எகிறும். கூலிப்படையினர் ஒரு கொலையை நிகழ்த்திவிட்டால், பல நேரங்களில் அந்தக் கொலைக்குச் சம்பந்தம் இல்லாத டம்மியான ஆட்களே நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள்.

மொத்தமாக ரேட் பேசும் கூலிப்படையினரும் உண்டு. கொலை செய்வதற்கான கூலி, வழக்கு நடத்துவதற்கான செலவு என மொத்தமாகப் பணம் வாங்கிக்கொள்வார்கள். சிலர், கொலை செய்வதற்கு தனி ரேட் வாங்கிக்கொள்வார்கள். யார் கொலை செய்யச் சொல்கிறாரோ, அவர், வழக்கைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.

கூலிப்படையில் இருந்த ஒருவரிடம் பேசியபோது, “மற்ற தொழில்களைப்போல, இதுவும் எங்களுக்குத் தொழில். அவ்வளவுதான். பணத்துக்காக நாங்கள் கொலை செய்கிறோம். மற்ற எந்தத் தொழில் செய்தாலும் அதற்கு முதலீடு செய்யப் பணம் தேவைப்படுகிறது. இதற்கு முதலீடு எதுவும் தேவையில்லை. உறுதியான உடலும் மன தைரியமும் இருந்தால் போதும். இதில், பணத்தைச் சம்பாதிப்பது ஈஸியாக இருக்கிறது” என்று கூசாமல் சொல்கிறார்.

ஏன் இப்படி?

வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமூகப் பிரச்னைகள் காரணமாகவே கூலிப்படைக்குப் பலர் செல்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களும்கூட கூலிப்படையாக மாறும் போக்கு வேதனைக்குரியது. மாணவர்களுக்கு இடையே நடக்கும் சிறு சிறு மோதல்களின்போது, கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் சில உதவிகளைச் செய்து அந்த மாணவர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்துக்கொள்கிறார்கள்.

கூலிப்படையினரிடம் சிக்கிக்கொள்ளும் அந்த இளைஞர்களின் வாழ்க்கை திசைமாறிப் போகிறது. அவர்களால், கூலிப்படையில் இருந்து வெளியேறவே முடியாது. சொந்த பந்தங்களை மறந்துவிட்டு மும்பை, சென்னை எனப் பல ஊர்களிலும் தலைமறைவு வாழக்கையை வாழப் பழகிக்கொள்கிறார்கள்.

சாதி ஆதிக்கம்!

கூலிப்படைகளில் எல்லாச் சாதியினரும் இருக்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள், சாதியாகவே ஒன்று சேருகிறார்கள். ஒரு கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்றால், சிறைக்குள் ஏற்படும் தொடர்புகளை வைத்து பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் ஒரு டீம் ஆகச் சேர்கிறார்கள். பல மாவட்டத்துக்காரர்கள் ஒரு டீமில் இருந்தாலும் அவர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

சாதிய அமைப்புகளுக்குத் தலைமை தாங்கும் சிலரும் கூலிப்படைகளை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு தென் மாவட்டம் ஒன்றில், ஒரு பொறியியல் கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே சில மாணவர்கள் சேர்ந்து கல்லூரி முதல்வரை வெட்டிச் சாய்த்தனர்.

அந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை ஜாமீனில் எடுப்பதற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு முன்பாகவே களமிறங்கினார், சாதிய பின்புலம் உள்ள ஒரு தலைவர். இப்போது, அந்தத் தலைவர்களின் முழுக் கட்டுப்பாட்டில் அந்த இளைஞர்கள் ‘செயல்பட்டு’ வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

மும்பை அடைக்கலம்

ஆதாரங்களை அழிப்பதில் கூலிப்படையினர் மிகவும் கவனமாக இருப்பார்கள். இவர்கள் தங்கியிருக்கும் இடமும் இரகசியமாகவே இருக்கும். தங்களின் இருப்பிடம் போலீஸுக்குத் தெரிந்துவிட்டது என்பதை அறிந்தால் அடுத்த நிமிடமே இடத்தைக் காலி செய்துவிடுவார்கள். மிகவும் ரிஸ்க் இருப்பதாக உணர்ந்தால், உடனே மும்பைக்குச் சென்று பதுங்கிவிடுவார்கள். தமிழ்நாட்டில் முக்கியமான பல கொலை வழக்குகளில் தொடர்புடைய கூலிப்படை கொலையாளிகளில் பலர் தற்போது மும்பையில் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறார் சிறை டு கூலிப்படை

குற்றச்செயல்களில் ஈடுபட்டுச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்படு வோரும்கூட, கூலிப்படையில் சேரும் போக்கு உள்ளது. இதுகுறித்து சமூகநலத் துறையைச் சேர்ந்த ஓர் அதிகாரியிடம் பேசியபோது, “சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்கள், விசாரணைக்காகச் சிறுவர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அங்கு காத்திருக்கும் கூலிப்படையினர், அந்தச் சிறுவர்களை உன்னிப்பாக நோட்டமிடுவார்கள். 18 வயது நிறைவடைந்த உடன் அந்தச் சிறுவர்கள், பொதுவான சிறைகளுக்கு அனுப்பப்படுவார்கள். அங்கு, அந்தச் சிறுவர்களுடன் நெருக்கமாகப் பழகி, அவர்களிடம் ஆறுதலாக இருந்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். பிறகு, கஞ்சா போன்ற போதை வஸ்துகளுக்கு அவர்களைப் பழக்கி, படிப்படியாகத் தங்கள் வலைக்குள் கொண்டு வந்து கூலிப்படைக்குத் தயார் செய்கிறார்கள்” என்றார்.

கொலை செய்வது ஃபேஷன்

கூலிப்படையாக இளைஞர்கள் மாறுவதற்கு வேலையின்மை என்பது முக்கியக் காரணமாக இருக்கிறது. கொலை செய்வதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுப்பதற்குப் பலர் தயாராக இருக்கிறார்கள். எனவே, ஒரு கொலையை செய்வதன் மூலம் இவர்களால் எளிதாகப் பெரும் பணத்தை சம்பாதிக்க முடிகிறது.

அரசியல்வாதிகள் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தினர் தங்களுக்கு ஒரு பாதுகாப்புப் பின்புலம் வேண்டும் என்பதற்காகக் கூலிப்படையினரை வைத்துக்கொள்வது அதிகரித்து வருகிறது. செல்வாக்கு மிகுந்தவர்களின் நிழலில் இருப்பதால் இத்தகைய கூலிப்படையினருக்கு சட்டம் உட்பட எதைப்பற்றியும் அச்சம் இருப்பதில்லை.

எனவே, அவர்கள் தொடர்ந்து குற்றங்களைச் செய்கிறார்கள். கொலை செய்வதை ஒரு ஃபேஷன் மாதிரி நினைக்கிறார்கள். சாதி சார்ந்தும், மதம் சார்ந்தும் கூலிப்படைகள் உருவாகிவிட்டன. முறையாக விசாரணை செய்தால் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், பெரும்பாலான வழக்குகளில் முறையான விசாரணை நடப்பதாகத் தெரியவில்லை” என்கிறார் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அஜு தாகூர்.

கூலிப்படையினரைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

தமிழகத்தில் ஆண்டுக்கு 1,800 – 2,000 கொலைகள் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. இவற்றில், 35-40 சதவிகிதம் கூலிப்படையினர் செய்த கொலைகள்தான். ஐயாயிரம், 10 ஆயிரம் ரூபாய்க்கு எல்லாம் கொலை செய்கிறார்கள். எட்டுப்பேர் ஒரு கொலையில் ஈடுபட்டால், 2 அல்லது 3 பேர்தான் போலீஸில் சிக்குவார்கள். இவர்கள் சில நாட்கள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வருகிறார்கள்.

அடுத்த சம்பவத்தில் ஈடுபடும்போது இவர்கள் வெளியில் இருக்க, மற்றவர்கள் சிறைக்குச் செல்வதற்கு பிளான் பண்ணிச் செயல்படுகிறார்கள். கூலிப்படையை இயக்குபவர்கள், கொலை செய்ய சொன்னவர்கள் போலீஸில் சிக்குவதில்லை. அதேபோல் ஊர்விட்டு ஊர் சென்றுதான் கொலை செய்கிறார்கள்.

கூலிப்படைக்கு பின்னணியில் அரசியல், தொழில், சாதி உள்ளன. கூலிப்படையினருக்கு வெறும் தண்டனை கொடுத்தால் மட்டுமே இந்தக் குற்றங்களைத் தடுக்க முடியாது. இவர்களின் பொருளாதாரப் பின்னணி, சமூகப் பின்னணியை ஆய்வுசெய்து அவர்களுக்கு மறுவாழ்வுக்கு வழி செய்ய வேண்டும்” என்கிறார் எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர்.

சமூகம் எவ்வளவு மோசமாக இருக்கிறது, எவ்வளவு மோசமாக மாறும் என்பதற்கு அடையாளம்தான் இந்தக் கூலிப்படையினர்!

மதுரையும் கூலிப்படையும்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், இப்போது கூலிப்படையினர் வளர்ந்துகொண்டு இருக்கிறார்கள். பிழைப்புக்காக மதுரைக்கு இடம்பெயர்ந்து வந்தவர்களில் சிலரே இதற்குக் காரணம். வேறு பகுதிகளில் இருந்து பிழைப்புத் தேடி மதுரையில் செட்டில் ஆனவர்கள், ஏலம் எடுப்பது, சாராயக் கடைகள் நடத்துவது, கட்டப் பஞ்சாயத்து செய்வது… எனச் செயல்பட்டனர்.

அரசியல் கட்சிகளில் முக்கியப் பதவிகளைப் பிடிக்க தங்களுக்குப் பின்னால் ஒரு கும்பலை வைத்துக்கொள்ள விரும்பினர். அதற்கு, வேலையில்லாமல் சுற்றித் திரிந்த இளைஞர்களை இவர்கள் பயன்படுத்திக்கொண்டனர். தங்களுக்குப் பிடிக்காதவர்களை மிரட்டவும், அவர்களின் உயிரை எடுக்கவும் இந்த இளைஞர்களைப் பயன்படுத்திக்கொண்டனர். அப்படி அடியாட்களாக வலம் வந்த பலர், இன்று மதுரையில் பல அரசியல் கட்சிகளிலும் முக்கியப் பொறுப்புகளிலும் இருக்கிறார்கள்.

சிறைக்குள் கூலிப்படை

சிறைக்கும் கூலிப்படைக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. கூலிப்படையைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளிகள் சிலர், சிறைக்குள் இருந்தவாறு ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பார்கள். இங்குள்ள சிறைச்சாலைகள் எப்படி இருக்கின்றன தெரியுமா? “நம்முடைய சிறைச்சாலைகள் கிரிமினல்களின் கூடாரங்களாக விளங்குகின்றன.

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், எட்டு மணி நேரத்துக்கு மட்டுமே சிறை அறையில் அடைக்கப்படுகிறார். ஆனால், 16 மணி நேரம் திறந்தவெளியில் சுதந்திரமாக உலவுகிறார். அங்கு எல்லாக் கிரிமினல்களும் சந்தித்துக்கொள்கிறார்கள், குழுக்களாக உருவாகிறார்கள், குற்றங்கள் தொடர்பான விஷயங்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள். அடுத்து, நிகழ்த்தவிருக்கும் குற்றத்துக்கான திட்டங்களை வகுக்கிறார்கள்.

இத்தகைய சுதந்திரம் நம் சிறைச்சாலைகளில் இருக்கிறது” – இவ்வாறு, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான கே.ராமானுஜம், தமிழ்நாடு காவல் துறையின் தலைவராக இருந்தபோது சொன்னார்.

போலீஸிடம் கணக்கு இல்லை

புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சுப.முத்துக்குமார் 2011-ம் ஆண்டு கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில், தமிழகத்தில் செயல்படும் கூலிப்படைகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. கூலிப்படை யினர் பற்றிய விவரங்கள் காவல் துறையிடம் இல்லை என்று தமிழக அரசு தனது பதில் மனுவில் தெரிவித்தது. சூப்பர் பதில்!

கூலிப்படையும் போதையும்

கூலிப்படையைப் பொறுத்தவரையில் பச்சிளம் குழந்தை, முதியவர்கள், பெண்கள் என யாருக்கும் ஈவு இரக்கம் காட்ட மாட்டார்கள். யாரை வேண்டுமானாலும் கொலை செய்வார்கள். அதற்குப் பணம் மட்டுமல்லாமல், போதையும் ஒரு முக்கிய காரணம். தினமும் மதுவும் கஞ்சாவும் இல்லாமல் கூலிப்படையினரால் இருக்க முடியாது.

-விகடன்-

கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் : வர்த்தகர்கள் போராட்டம்

Chicken

கோழி இறைச்சிக்காக புதிய நிர்ணய விலையினை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய 380 ரூபாவாக இருந்த கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 410 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை ,அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு கோழி இறைச்சியினைப் பெறமுடியாது என மலையத்தில் ஹட்டன்,மஸ்கெலிய,பொகவந்தலாவ பிரதேச கோழிக்கடை வர்த்தகர்கள் நேற்றைய தினம் கடையடைப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் குமாரின் தாயாரின் மரணச்சடங்கில் கலந்துகொள்ள வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு அனுமதி!!

Swiss Kumar

படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு பாடசாலை மாணவியான வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவரான மகாலிங்கம் தவநிதி என்பவரின் மரண சடங்கில் கலந்துகொள்ள மற்றைய சந்தேகநபர் மற்றும் வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்கள் இருவருக்கும் ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் சபேசன் அனுமதியளித்துள்ளார்.

வித்தியாவின் வழக்கு விசாரணை ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவருகின்ற நிலையில் அவற்றுக்கு வருகை தரும் வித்தியாவின் தாயாரை அச்சுறுத்தியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட சுவிஸ்குமாரது தாயாரான மகாலிங்கம் தவநிதி மற்றும் அவரது உறவினர் சிவதேவன் செல்வராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த சந்தேகநபர்களில் முதலாவது சந்தேகநபரான மகாலிங்கம் தவநிதி எனப்படும் சுவிஸ்குமாரின் தாயார் நோய்காரணமாக மரணமடைந்துள்ளார்.

இவரின் மரண நிகழ்வுகள் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்வுள்ள நிலையில் அதற்கு செல்வதற்கு இரண்டாவது சந்தேகநபர் மற்றும் வித்தியா கொலை சந்தேகநபர்களில் ஒன்பதாவது மற்றும் நான்காவது சந்தேகநபர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என அவர்கள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி ரகுபதி மன்றில் கோரிக்கை விண்ணப்பமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை கோரிக்கை தொடர்பாக பாதிக்கப்பட்டவர் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி சுகாஸ் விண்ணப்பமொன்றை செய்திருந்தார்.

இதன்படி அவ் விண்ணப்பத்தில், சந்தேகநபரின் தயாரின் மரண சடங்கிற்கு செல்வதற்கான அனுமதியளிப்பதானது மனிதாபிமான செயற்பாடாகும். இதற்கு செல்வதற்கு மன்று அனுமதியளிப்பதற்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் இவ்வாறு மரண வீட்டிற்கு சென்றுவிட்டு அங்கிருந்து சந்தேகநபர்கள் தப்பிச்செல்வதற்கு அனுமதிக்க முடியாது.

ஏனேனில் சந்தேநபரான சுவிஸ்குமார் வித்தியாவின் கொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த போதும் அவர் தன் பணபலத்தை பயன்படுத்தி அங்கிருந்து கொழும்பு சென்றிருந்தார். அதன் பின்னர் அவர் கொழும்பில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பிச்செல்வதற்காக மறைந்திருந்த போது கொழும்பு வெள்ளவத்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபர் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச்சென்றிருந்தார் என்பது தொடர்பில் இதுவரை உண்மை தெரியாமலே உள்ளது. இது இவ்வாறு இருக்க இம் முறையும் இவர் மரண சடங்கிற்காக சென்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்செல்வதற்கு அனுமதிக்க முடியாது.

எனவே இவரை மரண சடங்கிற்கு அழைத்துசெல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளிப்பின் மிகக்கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என அவ் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த மூவருக்கும் மரணமான மகாலிங்கம் தவநிதி என்பவரது மரண சடங்கில் கலந்துகொள்ள ஊர்காவல்துறை பதில் நீதிவான் சபேசன் அனுமதியளித் திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய நட்சத்திர மண்டலங்கள் கண்டுபிடிப்பு!!

Galaxy

உலகின் மிக சக்தி வாய்ந்த விண் நோக்கியாக உருவெடுக்கவிருக்கும் டெலஸ்கோப் அனுப்பிய புதிய படங்கள் பிரபஞ்சத்தின் ஒரு சிறு மூலையில் 1,300 புதிய நட்சத்திர மண்டலங்கள் இருப்பதாகக் காட்டுகின்றன.

பிரபஞ்சத்தின் இந்தப் பகுதியில் இதற்கு முன்பு வரை 70 நட்சத்திர மண்டலங்கள்தான் இருப்பததாக தெரிவிக்கப்ட்டுவந்தது.

தென்னாபிரிக்காவின் கேப் டவுனிலிருந்து 600 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் மீர்கேட் விண் நோக்கி இப்போது இருப்பதை விட நான்கு மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும்.

இந்த விண் நோக்கி அனுப்பிய படங்கள் எதிர்பார்த்ததை விட மேலும் நன்றாக இருப்பதாக இத்திட்டத்தில் தொடர்புடைய விஞ்ஞானி ஒருவர் கூறினார்.

இந்த டெலெஸ்கோப் ஏற்கனவே பூமியின் தென் அரைக் கோளப்பகுதியில் மிகச்சிறந்த டெலெஸ்கோப்பாக விளங்குவதாக அந்த விஞ்ஞானி, ஃபெர்னாண்டோ கேமில்லோ கூறினார்.

மைக்கல் ஜாக்ஸனுக்கு சிறுமியுடன் காதல் : அம்பலமான உண்மை!!

Mical jackson

பொப் உலகின் மன்னன் மைக்கல் ஜாக்ஸன். ஆனால், இவர் இறந்த போது பல சர்ச்சைகள் எழுந்தது, பணத்திற்காக இவருடைய உறவினர்களே கொன்று விட்டதாக கூட கூறினார்கள்.

இதுமட்டுமின்றி சிறு குழந்தைகள் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மீது ஒரு வழக்கும் இருந்தது, இந்நிலையில் ஜாக்ஸனின் கடைசி காலத்தில் தன் தனிப்பட்ட மருத்துவரிடம் பல தகவல்களை இவர் பகிர்ந்துள்ளார்.

இதில் ஹாலிவுட் நடிகை எம்மா வட்சனை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் அவர் மீது தனக்கு காதல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார், அப்போது எம்மா வட்சனுக்கு வயது 11.

இதன் மூலம் மைக்கன் ஜாக்ஸனின் எண்ணம் எப்படியிருந்தது என உங்களுக்கே தெரியும் என மருத்துவர் கூறியுள்ளார். இச்செய்தி பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

இராணுவ புரட்சிக்கு சதி செய்தவர்களுக்கு எதிராக துருக்கி அதிபர் எர்டோகன் அதிரடி!!

Turkey

துருக்கியில் இராணுவ புரட்சிக்கு சதி செய்த 9 ஆயிரம் அரச அதிகாரிகள பதவியில் இருந்து தூக்கப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க இராணுவ புரட்சி நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப்பட்டது.

இதன்போது நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் மோதலில் 290 பேர் உயிரிழந்தனர். 1500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து இராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மற்றும் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இராணுவ புரட்சியில் ஈடுபட்டதாக இதுவரை 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 103 இராணுவ தளபதிகள் அடங்குவர். இவர்கள் தவிர புரட்சிக்கு உதவியதாக துருக்கி நீதி துறையை சேர்ந்த பல்வேறு மூத்த நீதிபதிகள் உள்பட 2745 நீதிபதிகளுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 44 நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் இராணுவ புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு அதிபர் எர்டோகன் மறுப்பு தெரிவிக்கவில்லை.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் 9 ஆயிரம் அரசு அதிகாரிகள் பதவியில் இருந்து தூக்கப்பட்டு உள்ளனர். ஒரு மாகாண ஆளுநர், 29 நகர ஆளுநர்கள், மற்றும் 8777 பொது பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

யாழ் பல்கலை மோதல் குறித்து விசாரிக்க மூவரடங்கிய குழு நியமனம்!!

jaffna Uni

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து இடைநிறுத்தபட்ட கல்விச்செயற்பாடுகள் புதன்கிழமை மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது.  யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் இதனைத் தெரிவித்தார்.

யாழ் பல்கலைகழகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இதன் முதற்கட்டமாக மருத்துவபீடம் மற்றும் சித்த மருத்துவ பீடங்களின் மாணவர்களுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு விவசாய பீடத்தின் பரீட்சைகளும் இடம்பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

´கடந்த 16ம் திகதி விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது, அனைவரையும் மனவருத்ததிற்கு உட்படுத்தியுள்ளது.

சம்பவம் ஏற்பட்டு ஒரு மணிநேரத்திற்குள் நிலமை கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தும் பாதுகாப்பிற்காக பல்கலைக்கழக அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தபட்டிருந்து.

இதனையடுத்து உடனடியாக பல்கலைக்கழக மாணவ ஒன்றிய தலைவர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு கூட்டம் இடம்பெற்றது.

இதில் இனிமேல் இப்படி ஒரு சம்பவம் இடம்றொமல் இருக்க தாம் பொறுப்பு நிற்பதாகவும், கல்வி செயற்பாடுகளை ஆரம்பிக்க முழு ஒத்துழைப்பு தருவதாகவும் மாணவ ஒன்றிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இங்கு நிலமை சுமுகமாக இருந்தாலும் வெளிமாவட்ட மாணவர்களுக்கு பாதுகாப்புடன் நம்பகதன்மையான கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பது எமது கடப்பாடாகும். எனவே அதற்கான நடவடிக்கையினை நாம் ஆரம்பித்துள்ளோம்´ என தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

´யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த 16ம் திகதி விஞ்ஞானபீட தமிழ் சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவில் யாழில் பணிபுரியும் சிங்கள அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பத்திற்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதனை விசாரணை செய்வதற்கு மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஏனைய இருவரும் சிங்கள மொழியில் சிறந்த பரீட்சயம் உடையவர்கள். எனவே இந்த விசாரணை என்பது நேர்த்தியாக இடம்பெறும்.

மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
 இனிமேல் இவ்வாறு இடம்பெறாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த முடியும். எனவே மாணவர்கள் எவரும் அச்சம் கொள்ளதேவையில்லை என தெரிவித்துள்ளார்.