யாழ் வடமராட்சியில் உள்ளூர் மணமகன் ஒருவர் பிரான்ஸ் பெண்ணை தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்துள்ளார்.
பல்வேறுபட்ட விதத்தில் கலாச்சாரம் மாறுபட்டுள்ள நிலையில் வெளிநாட்டுப் பெண்ணை தமிழர் திருமணம் செய்வது பெரிய விடயம் அல்ல. மாறாக தமிழரின் கலாச்சாரப்படி திருமணம் செய்து கொண்டது பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
நடந்து முடிந்த திருமணத்தில் பெண்ணின் உறவினர்களும் தமிழ் கலாச்சார உடையில் கலந்து கொண்டமை இன்னும் ஒரு சிறப்பு எனக் கூறப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இரண்டு தனியார் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்கு மூலத்தினை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைக்க வேண்டாம் என்று தெரிவித்து இன்று (11.07.2016) காலை 11 மணியளவில் வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து கல்லூரிக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொருளாதார மத்திய நிலையத்தினை தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒன்றியம் இலங்கை விவசாயக் கல்லூரி வவுனியா ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைக்கு இடையூறாக இருக்கும் இப் பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைக்கவேண்டாம் என்று கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
A9 வீதியின் ஓரமாக நின்று ஒரு மணித்தியாலமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தமது பாடசாலைக்கு முன்பாக பொருளாதார மையத்தை அமைத்து, தமது கற்றலுக்கு பாதிப்பை ஏற்பாடுத்தாதீர்கள் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமாகாணத்தில் உள்ள ஒரேயொரு விவசாய கல்லூரியை இல்லாது செய்யாதீர்கள் என்பதனையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் விக்ரமுக்கு துருவ் என்ற மகனும் அக்ஷிதா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் அக்ஷிதாவுக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் வழி பேரனுமான மனு ரஞ்சித்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் விக்ரமின் குடும்பத்தினர் அனைவரும் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
திருமணம் நடைபெறும் திகதியை அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிட இருக்கின்றனர்.
பிரேசில் அணியின் கால்பந்து ஜாம்பவானான பீலே மூன்றாவது முறையாக மார்சியா சிபிலே அவோக்கியை வருகிற நாளை திருமணம் செய்துக் கொள்ளவிருக்கிறார்.
கால்பந்து உலகின் ´காட் பாதர்´ என்றழைக்கப்படும் பீலே (75), கடந்த 1980ம் ஆண்டு நியூயோர்க்கில், தனது காதலியான மார்சியா சிபிலே அவோக்கி(42)வை சந்தித்துள்ளார். ஆனால் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் நெருக்கமாக பழதொடங்கினார்கள். பெண் தொழில்முனைவரான அவோக்கி ஜப்பானை பூர்விகமாக கொண்டவர்.
இதற்கு முன்னதாக பீலே, ரோஸ்மேரி சோல்பியை மணந்துக் கொண்டார். இவர்களுக்கு எடினோ, ஜெனிபர், கெல்லி எனும் மூன்று குழந்தைகள் உள்ளனர். பின்னர் அஸ்ரியா நாஸ்கிமெண்டோவை மணந்த பீலேவுக்கு ஜோஷுவா, செலேஸ்டி எனும் இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.
கால்பந்து உலகில் பல்வேறு சாதனைகளை படைத்த பீலே, சுமார் 1,363 கால்பந்தாட்டங்களில் 1,281 கோல் அடித்து சாதனை படைத்துள்ளார். மேலும், 1958, 1962 மற்றும் 1970 போன்ற ஆண்டுகளில் உலகக் கிண்ண போட்டிகளில் பீலேவின் அணி வெற்றிபெற்றுள்ளது.
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின வகுப்பை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அடிலாபத்தின் புறநகர் பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது 3 இளைஞர்கள் அந்த முச்சக்கர வண்டியை தடுத்து நிறுத்தினர்.
அந்த இளைஞர்கள் முச்சக்கர வண்டி சாரதியை தாக்கி அங்கிருந்து விரட்டி விட்டு, அந்த சிறுமியை அடித்து உதைத்து அருகில் இருந்த பற்றைக்குள் இழுத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதை அந்த வாலிபர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவும் செய்து உள்ளார்.
மேலும் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவோம் எனவும் அந்த சிறுமியை மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன சிறுமி தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம், பாலியல் பலாத்கார சம்பவம் மற்றும் வாலிபர்களின் கொலை மிரட்டல் குறித்தும் சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுது உள்ளார். உடனடியாக சிறுமியின் பெற்றோர் இது குறித்து பொலிஸில் புகார் அளித்தனர்.
பொலிஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் வாலிபர்கள் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் பொலிஸார் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணினித் திரையைப் பல மணி நேரம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? கண் சோர்வு, வறண்ட கண்கள், பார்ப்பதில் அசவ்கரியம், தலைவலி, மன அழுத்தம் போன்றவை ஏற்படும் ஆபத்து உள்ளது. கணினிப் பயன்பாட்டால் ஏற்படும் பார்வைக் கோளாறு, கணினிப் பார்வைக் கோளாறு (Computer Vision Syndrome) எனப்படுகிறது.
நம்முடைய கண்கள் மின்னணுக் கருவிகளைத் தொடர்ந்து பார்க்கும் வகையில் அமையவில்லை என்பதாலேயே, இது போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதற்காக நவீனத் தொழில்நுட்பங்களைப் புறந்தள்ளிவிட்டுச் செயல்படும் காலகட்டத்திலும் நாம் வாழவில்லை. ஆனால், கண்கள் பாதிக்கப்படாமல் எப்படிக் காப்பாற்றிக்கொள்வது எனப் பார்ப்போம்.
கணினித் தொழில் சார்ந்தவராக நீங்கள் இருந்தா லும், உங்கள் கண்களுக்கு அடிக்கடி புத்துணர்ச்சி ஊட்டிக் கொள்ளுங்கள். இதற்கு முதல் வழி, விழியின் நண்பனாக மாறுவதுதான். அலுவலகச் சூழலும் பார்வையைப் பாதுகாக்கும் வகையில் மாற்றப்பட வேண்டும்.
பொதுவாகக் கணினியில் வேலை செய்யும்போது, நம்மை அறியாமல் மணிக்கணக்கில் கணினித் திரையைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். “இப்படிச் செய்வதால் சுருங்கி விரிய வேண்டிய கண் தசை இறுகிப் போகிறது.
இதற்குத் 20-20-20 கொள்கையைப் பின்பற்ற வேண்டும். கணினியில் வேலை செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கண் பார்வையைக் கணினியிலிருந்து விலக்கி 20 அடி தொலைவில் இருக்கும் ஏதேனும் ஒரு பொருளை 20 நொடிகளுக்குப் பார்க்க வேண்டும். இதன் மூலம் கணினியுடன் கட்டி போடப்பட்டிருந்த கண் தசைகளுக்குச் சிறிது நேரம் ஆசுவாசம் கிடைக்கும்.
சாதாரண மனிதர் ஒருவர் கண்களைச் சிமிட்டும் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்குதான் கணினியில் வேலை பார்ப்பவர் சிமிட்டுகிறார் என்கின்றன இது தொடர்பான ஆய்வுகள். இதனால் கண்கள் வறண்டு போகின்றன.
இது மட்டுமில்லாமல், இன்று பெரும்பாலான அலுவலகங்கள் செயற்கையாகக் குளிரூட்டப்பட்ட ஏசி அறைகளில் இயங்குவதால் சுற்றுப்புறக் காற்றைக் காட்டிலும் ஏசி அறையிலிருக்கும் காற்று வறண்ட தன்மையுடன் இருக்கும். இதனாலும் கண்கள் வறண்டுபோகும். இப்படி இருக்கையில், நீங்கள் கண்களை அடிக்கடி சிமிட்டுவது மிகவும் அவசியம்.
அதிலும் 20 நிமிடத்துக்கு ஒரு முறை மெதுவாக 10 தடவை சிமிட்ட வேண்டும். இதனால் கண்களில் ஈரப்பதம் கூடும், கண் தசையின் அழுத்தம் குறையும் என்பது வைத்தியர்களின் அறிவுரை. கண்கள் உலர்ந்து போவதாக உணர்ந்தால், ஒரு நாளில் இரண்டு முறை கண்கள் மீது தண்ணீரை அடித்துக் கழுவுவது நல்லது.
கணினியில் ஒரு மணி நேரம் தொடர்ந்து வேலை செய்த பிறகு ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. இதனால் சருமம், கண்களின் ஈரப்பதம் அதிகரிக்கும். நீங்கள் மூக்குக் கண்ணாடி அணிபவர் என்றால் ஒளியைப் பிரதிபலிக்காத லென்ஸைப் பயன்படுத்துங்கள்.
நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தின் ஒளி அமைப்பு மிகவும் முக்கியம். ஒழுங்கற்ற ஒளி அமைப்பு கண்களைப் பாதிக்கும்.
நாற்காலி அமைப்பும் மிகவும் முக்கியம். கணினி வைக்கப்பட்டிருக்கும் மேசையும், நீங்கள் அமர்ந்து வேலை செய்யும் நாற்காலியும் சவ்கரியத்துக்கு ஏற்றதுபோல் மாற்றிக்கொள்ளும் வகையில் இருப்பது நல்லது.
கணினித் திரையின் மேல்புறம் உங்கள் பார்வை மட்டத்துடன் ஒத்துப்போக வேண்டும் அல்லது பார்வையிலிருந்து 10 முதல் 15 டிகிரி வரை கீழே இருத்தல் நல்லது. நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து 20 முதல் 24 அங்குலம் தொலைவில் கணனித் திரையை வைப்பதும் முக்கியம்.
அதிக ரெசல்யூஷன் கொண்ட, ஒளியைப் பிரதிபலிக்காத எல்.சி.டி. (L.C.D.) திரைகளைப் பயன்படுத்துவது அவசியம். திரையின் அளவு குறைந்தபட்சம் 19 அங்குலம்வரை இருப்பதும், வெளிச்சம் கூடுதலாகவோ, குறைவாகவோ இல்லாமல் பார்வைக்குச் சவ்கரியமாக இருப்பதும் முக்கியம்.
கணினித் திரையின் பின்புறத்தில் ஜன்னல் இல்லாமல் பக்கமாக இருப்பதும் நல்லது. சுவரின் நிறம் முதற்கொண்டு கண்களைக் கூசச் செய்யும் ஒளிவீச்சை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக வருடா வருடம் மருத்துவரிடம் கண்களைப் பரிசோதிப்பது அவசியம். ஒருவருக்கு நல்ல பார்வைத் திறன் இருந்தாலும், கணினியை நோக்கிப் பார்வையைக் குவிப்பதில் சிக்கல்கள் இருக்கலாம். அப்படி இருந்தால் கண் மருத்துவர்கள் சரியான கண்ணாடியைப் பரிந்துரைத்துக் கண்களைப் பாதுகாப்பார்கள்.
வவுனியா மாவட்டத்தில் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை நகர்ப்புறத்திலா அல்லது நகருக்கு வெளியிலா அமைப்பது என்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை இறுதி முடிவின்றி தொடர்கின்றது.
வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அரசினால் வழங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை வவுனியா நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது.
எனினும், அதனை அங்கு அமைக்க முடியாது என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒரு சாராரும், நகருக்கு வெளியில் ஓமந்தையிலேயே அதனை அமைக்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் உட்பட மற்றுமொரு சாரரும் வாதிட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் எதிரும் புதிருமாக ஆர்ப்பாட்டங்கள் வவுனியாவில் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் இரண்டு இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சரை சந்தித்து பேசியிருக்கிறார்.
ஓமந்தையில் இந்த பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கான காணி ஒதுக்கீட்டில் பிரச்சினைகள் இல்லை.எனவே, அந்த அடிப்படையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகின்றார்.
ஆயினும், ஓமந்தை காணியை எடுப்பதில் சிக்கல்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராஜா 200 மில்லியன் ரூபாய் நிதியை உடனடியாகப் பயன்படுத்தப்படாவிட்டால், திரும்பிச் செல்லும் ஆபத்தைத் தவிர்ப்பதற்காக தாண்டிக்குளத்தில் அதனை அமைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கூறியிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார்.
இந்த நிலையில் வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் விஷயம் ஒரு விவகாரமாகத் தொடர்ந்தும் முடிவின்றி நீடித்துக் கொண்டிருக்கின்றது.
பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டியது அனைத்து அரசாங்கங்களினதும் பொறுப்பாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மொரட்டுவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…
பௌத்த மதத்தை பாதுகாத்து அதனை மேம்படுத்துவது ஆட்சி செய்யும் அரசாங்கங்களின் கடமையாகும்.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டாலும் பௌத்த சாசனம் பாதுகாக்கப்படும். பௌத்த மதத்தையும் தேரவாத பௌத்தத்தையும் பேணிப் பாதுகாக்க பிரிவெனா கல்வியை வலுப்படுத்த வேண்டும்.
பிரிவெனா கல்வியில் இன்று சீரற்ற நிலைமை காணப்படுகின்றது, இது குறித்து ஆராய்ந்து அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட உள்ளது.
2017ம் ஆண்டு சர்வதேச வெசாக் தினத்தை மிகவும் சிறந்த முறையில் நடாத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2018ம் ஆண்டில் உலகின் தேரவாத பௌத்த நாடுகளை ஒன்றிணைத்து இலங்கையின் 70ம் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறும் குறித்த ஆண்டில் தேரவாத சர்வதேச மாநாடு ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் 1000 பேருக்கு அதிகமானவர்களுக்கு இதுவரை இரட்டை குடியுரிமை வழங்கியுள்ளதாக கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இன்றும் 1700 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மாதத்திற்கு 1500 நபர்களுக்கு குறித்த குடியுரிமை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் நாவின்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து சென்று வெளிநாடுகளில் வசிப்பவர்களில் மீண்டும் இலங்கைக்கு திரும்ப முடியாமல் உள்ளவர்களுக்கே குறித்த இரட்டை குடியுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமாவில் நடித்து பலரை சிரிக்க வைத்த குள்ள நடிகர் ராஜாவுக்கு, உடல்நலம் சரியில்லாததால் மனைவி துணி விற்று சாப்பாடும் போட்டு மருத்துவ செலவையும் கவனித்து வருகிறார்.
குள்ள நடிகர் ராஜா தற்போது சென்னை வியாசர்பாடியில் வசித்து வருகிறார். சினிமாவில் நடித்து பிரபலமான ராஜா, 24 வயதில் கற்பகம் என்ற பெண்ணை மணந்தார், இவரும் குள்ளமான நடிகை தான், பேரழகன் படத்தில் சிநேகா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.
இவர்களுக்கு ஆனந்த் என்ற மகன் இருக்கிறார், தற்போது 22 வயது ஆன நிலையிலும் இவரும் குள்ளமாகவே இருக்கிறார். இதனால் இவர்கள் மூன்று பேருக்கும் உடல் ஊனமுற்றவர்கள் என்ற சான்றிதழை அரசு வழங்கியுள்ளது.
சினிமாவில் நடித்தாலும் அந்த வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்த சிரமப்படுகின்றனர். இந்நிலையில் ராஜாவுக்கு கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் நடக்க முடியாமல் அவதிப்படுகிறார்.
எனவே குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிக்கும் இவர்கள் வீட்டின் ஒரு பகுதியை கடையாக மாற்றி ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றனர்.
மனைவி கற்பகம் ஜவுளி வியாபாரத்தை பார்த்துக் கொள்வதுடன், கணவரின் மருத்துவ செலவுகளையும் கவனித்து வருகிறார்.
இந்நிலையில் எங்களது இந்த நிலையை கருத்தில் கொண்டு, இரக்கம் காட்டி தமிழக அரசு உதவிபுரிய வேண்டும் என முதலமைச்சருக்கு ராஜா மிக உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்து அரசு நாய்கறி விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய தீர்மானித்துள்ளது.
நாகலாந்து மாநிலத்தில் ஆட்டுக்கறி, கோழிக்கறி, மாட்டுக்கறிக்கு இணையாக நாய்கறியும் விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது.
நாய்கறியில் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதாக கருதும் அம்மாநில மக்கள் நாய்கறியை விரும்பி உண்கின்றனர். இதனால் நாய்கறிக்கு மவுசும் அதிகமாகிவிட்டது. தற்போது அங்கு நாய்கறி கிலோ ரூ.300க்கு விற்கப்படுகிறது.
இதனால் இறைச்சிக்காக வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை சிலர் திருடிச்சென்றும் விடுகின்றனர்.
இந்நிலையில் இந்த நாய்கறி விற்பனைக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற மாநில அரசின் மந்திரிசபை கூட்டத்தில் நாய்கறி விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவு அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும், நகராட்சிகளை சேர்ந்த சுகாதாரத்துறை அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனது தந்தையை கொன்றவர்களை பழிக்கு பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகன் சபதமிடும் ஓடியோ வெளியாகியுள்ளது.
அல்கொய்தா இயக்கத் தலைவனான ஒசாமா பின்லேடனை, கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தான் அபோதாபாத்தில் வைத்து அமெரிக்க சீல் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில் இவரது மகனான ஹம்சா பின்லேடன் சபதமிடும் ஓடியோ பதிவு வெளியாகியுள்ளது. அதில், நாங்கள் அனைவருமே ஒசாமா தான், உங்களையும்(அமெரிக்கா), உங்கள் சித்தாந்தத்தை ஏற்க மறுக்கும் நாடுகள் மீது நீங்கள் செலுத்திவரும் அடக்குமுறைக்காகவும் பழிக்கு பழி வாங்குவேன்.
இது ஒசாமா பின்லேடன் என்ற தனிமனிதருக்காக மட்டுமல்ல, இஸ்லாமுக்காக உயிர்நீத்த அனைவரின் சார்பாகவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது கணவனுடன் சண்டைக்கு வந்தவரிடம் இருந்து தனது கணவனை காப்பாற்ற சென்ற மனைவி, தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம்நோட்டன் லொனக் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 42 வயதான எஸ்.வள்ளளியம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த உயிரிழந்தவரின், மகன் மற்றும் கணவன் ஆகியோர் சிகிச்சைகளுக்காக வட்டவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் தனது கணவரை சண்டையிலிருந்து விலக்க மனைவி சென்றுள்ளார்.
எனினும், தாக்குதலுக்கு இலக்காகி தலையில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
மாத்தறை, ஹக்மன, பன்னவில பிரதேசத்தில் பெண்ணொருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தவர் 69 வயதான பெண்ணொருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீராடுவதற்காக வீட்டில் இருந்து சென்ற குறித்த பெண், வெகு நேரமாகியும் காணவில்லை என்பதால் உறவினர்கள் தேடி சென்ற போதே அவர் இவ்வாறு இறந்துள்ளமை தெரியவந்துள்ளது.
உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளான 97 குடும்பங்களுக்கான காணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகமாக தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பூந்தோட்ட நலன்புரி முகாமில் தங்கியுள்ள குடும்பங்களுக்கே இந்த காணிகள் வழங்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, புளியங்குளப்பகுதியிலும், சின்னமடம் பகுதியிலும் இவர்களுக்கான காணிகள் வழங்கப்படவுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான கூட்டம் ஒன்றின்போதே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.