சுன்னாகம், கந்தரோடை அருளானந்த பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்தவர் 22 வயதான தெய்வேந்திரநாதன் ஜெனித்தா என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் தனது தாவணியைக் கொண்டே யுவதி துாக்கில் தொங்கி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
சடலம் விசாரணைகளுக்காக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் , குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் குற்றத்தடுப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
விண்வெளியில் உள்ள கெப்ளர் டெலஸ்கோப் மூலம் நாசா ஆராய்ச்சி நமது சூரியக் குடும்பத்தைத் தாண்டி 1,284 புதிய கோள்களைக் கண்டறிந்துள்ளது.
ஒரே முறையில் இத்தனை கோள்களை நாசா கண்டறிவது இதுதான் முதல் தடவை என்பதும் கூடுதல் சிறப்பு. கண்டுபிடித்த கோள்களில் பல பாறைக்கோள்களாக உள்ளன என்பது தெரிய வந்துள்ளது.
பூமிக்கு வெளியே புதிய கோள்கள் இருப்பது பொதுவான ஒன்றுதான். பால்வெளியில் உள்ள பல்வேறு நட்சத்திரங்கள் தனித்தனியே கிரகக் குடும்பங்கள் கொண்டுள்ளன.
நமது சூரிய மண்டலத்தில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வசிக்க முடியும். ஆனால் விண்வெளியில் இதுபோல வாழ்தன்மை கொண்ட கோள்கள் வேறு ஏதும் இருக்கின்றனவா அல்லது நம்முடைய பூமி மட்டும்தான் அப்படி தன்மை கொண்ட ஒரே கிரகமா என்பதைக் கண்டறிவதுதான் ஆராய்ச்சியின் நோக்கம்’’ என்கிறார் வொஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தின் வான் இயற்பியல் துறை இயக்குநரான பால் ஹெர்ட்ஸ்.
பால்வெளியில் உள்ள 25 சதவிகிதக் கோள்களில் பூமியில் உள்ள நீர், அக்கோள்களின் அடிப்பரப்பில் படிவங்களாக உள்ளது. இது, அக்கிரகத்திலும் வாழக்கூடிய தன்மை உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.
நமது பால்வெளியில் ஏறத்தாழ 70 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கலாம் கணித முறையில் கூறவேண்டுமெனில் பத்தின் மடங்கில் பல பில்லியன் எண்ணிக்கையில் பூமியைப் போன்ற கோள்களை அடையாளம் காண முடியும், என்று நம்பிக்கையாகப் பேசுகிறார், கலிபோர்னியாவில் உள்ள கெப்ளர் திட்ட அறிவியலாளர்.
2009 இல் கெப்ளர் திட்டம் 60 கோடி டொலர் செலவில் தொடங்கப்பட்டது பால்வெளியில் உள்ள பூமியை ஒத்த கோள்களைக் கண்டறிவதே இலக்கு. மார்ச் 2013 வரை கெப்ளர் தனது பணியைத் தொடங்கவில்லை, அதன் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதுதான் இதற்கு காரணம்.
பின் இதனை சரிசெய்து 4,000 இற்கும் மேற்பட்ட கோள்களை ஆராய்ச்சி செய்ய விரும்பியபோது, அந்த ஆராய்ச்சியானது சம்பந்தப்பட்ட கிரகங்களின் தரையை சோதித்து அறிவதாகவே இருந்தது.
ஆனால் இறுதியில் அது ஒவ்வொரு கோளையும் அனுமானிக்கும் புள்ளிவிபவர நிகழ்தகவு வாய்ப்பாக மாறியது ஒவ்வொரு கோளும் சரியானதா என்பதைக் கண்டறிய, முதலில் கணினி மூலம் அதன் ஒளி குறித்த சமிக்ஞைகள் ஆய்வு செய்யப்பட்டு, பிறகு அதன் பரப்பில் அணுக்கருவினைக் குறித்த சோதனை செய்து பார்த்து, அதன் தன்மை உறுதி செய்யப்பட்டது. அதாவது, கோள் பெரியதாக இருந்தாலும் அதனுள் உள்ள அணுக்கரு வினைத் தன்மை குறைவாக இருந்தால் அது தோல்வி அடைந்தது என்று அர்த்தம்.
1284 புதிய கோள்களை ஆராய்ந்தபோது, இவற்றில் 550 கோள்கள் உயிரினங்கள் வாழ முடியாத வெற்று பாறைக்கோளங்களாகவே உய்யன.
21 கோள்கள் மட்டுமே உயிரினங்கள் வாழ ஏற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. கூடுதலாக மேலும் 15 கோள்கள் பாறைகளைக் கொண்டவையாக இருக்கலாம் அல்லது வாழும் தன்மை கொண்டதாகவும் இருக்கலாம். இன்னும் அவை குறித்த ஆராய்ச்சி உறுதிப்படுத்தப்படவில்லை.
2013 ஆம் ஆண்டு மே மாதத்தில் கெப்ளர் டெலஸ்கோப்பின் பணி முடிந்துவிட்டது என்றாலும், ஆய்வு மையம் தொடர்ந்து கோள்களைக் குறித்து இன்றுவரை ஆராய்ச்சி செய்து வருகிறது.
இதற்கான திட்ட உறுப்பினர்கள் சூரிய ஒளியினை வைத்து ஆய்வு மையத்தை சமநிலைப்படுத்தி, இரண்டு ரீயாக்ஷன் வீல்களின் மூலம் சமாளித்து வருகிறார்கள்.
2014 ஆம் ஆண்டு முதல், கெப்ளர் புதிய திட்டமான ‘கே2’ என்பதில் ஈடுபட்டு வருகிறது. புதிய கோள்களோடு, காஸ்மிக் பொருட்கள், விண்மீன் வெடிப்பு, வால்மீன்கள், எரிகற்கள் குறித்தும் தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகிறது.
இம்முறையில் கெப்ளர் டெலஸ்கோப் 2018 ஆம் ஆண்டின் பாதி வரை செயல்பட எரிபொருள் உள்ளது என கெப்ளர் ஆய்வு மைய உறுப்பினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பூமியில் எல் நினோ பருவ மாற்றம் காரணமாக சூழல் மாறுபாடு அதிகரித்து பூமி மாசடைந்து வாழத் தகுதி அற்றதாக மாறி வரும் நிலையில், புதிய கோள் கண்டுபிடிப்பு இதனைக் கேள்விப்படும் எந்த மனிதருக்கும் கொள்ளை மகிழ்ச்சியைத் தரும் என்பதுதான் நடைமுறை.
இரண்டாம் உலகப் போரின் போது பாப்பரசரைக் கடத்த ஹிட்லர் திட்டமிட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் ஆதிக்கம் கோலோச்சியது. அப்போது இவர் சர்வதேச நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி வந்தார்.
அப்போது 12ம் பிளஸ் வாடிகனில் பாப்பரசராக இருந்தார். அவரை அங்கிருந்து ஜேர்மனிக்கு கடத்த ஹிட்லர் திட்டமிட்டிருந்தாராம். இத்தகவல் புதிதாக வெளியான புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
இப்புத்தகத்தை வாடிகன் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதை வாடிகன் அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குனரின் மகன் அன்டோனியோ நெலிகாரோ எழுதியுள்ளார்.
பாப்பரசரை கடத்த எஸ்.எஸ் கமாண்டோ என்ற சிறப்பு அதிரடிப்படையை வாடிகனுக்கு ஹிட்லர் அனுப்பி வைத்தார். அக்கமாண்டோ படை ஜெனரல் கரிவுல்ப் இது குறித்து பாப்பரசருக்கு தகவல் அனுப்பினார்.
அதில், உங்களையும், உங்களது படைகள் மற்றும் வாடிகன் நகரை கைப்பற்றுவேன். ஆவணங்கள் கலைப் பொக்கிஷங்கள் மற்றும் உங்களையும் (பாப்பரசர்) ஜேர்மனிக்கு கடத்தி செல்வேன் என கூறியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினராக செந்தில்நாதன் மயூரன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
வவுனியா வைரவப்புளியங்குளத்திலுள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) காரியாலயத்தில் இன்று(09.07.2016) காலை 11 மணியளவில் இன் நிகழ்வு இடம்பெற்றது.
கடந்த 2013 வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் டெலோ அமைப்பின் சார்பாக போட்டியிட்ட செந்தில்நாதன் மயூரன் தோல்வியடைந்த போதும் வடமாகாண போக்குவரத்து மீன்பிடி, வீதி அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
2013 வடமாகாணசபைத் மாபெரும் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்று அஸ்மினுக்கு வழங்கப்பட்ட அதேவேளை எஞ்சிய ஒரு ஆசனத்தை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான EPRLF, PLOTE, TELO ஆகிய கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் செந்தில்நாதன் மயூரன் டெலோ கட்சி சார்பாக வவுனியாவிலிருந்து வடமாகாண சபை உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.
இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தூக்கத்திற்கு செல்வதற்கு முன் இலத்திரனியல் சாதனங்களைப் பாவிப்பதனால் தூக்கத்தில் பாதிப்பு ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தும் நம்மில் பலர் தொடர்ந்தும் இவ்வாறு இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றோம்.
இவ்வாறிருக்கையில் படுக்கையில் இருந்தவாறு ஸ்மார்ட் கைப்பேசியினைப் பாவிப்பதனால் உடல் மற்றும் மூளையில் ஏற்படும் பாதிப்புக்களை கலிபோர்னிய பல்கலைக் கழகத்தின் மனோதத்துவ நிபுணர் Dan Siegel முன்வைத்துள்ளார்.
இதன்படி இரவு நேரத்தில் ஸ்மார்ட் கைப்பேசிகளினை பயன்படுத்துவதனால் அவற்றின் திரையிலிருந்து வெளிவிடப்படும் போட்டோன்கள் (Photons ) கண்கள் மற்றும் மூளையைப் பாதிப்பதுடன் ஹோர்மோன்களின் உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தூக்கம் கெடுவதனால் கலங்கள் முறையாக செயற்பட முடியாது போவதாகவும், மறுநாள் காலையில் நீண்ட தூக்கம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர், ஸ்மார்ட் கைப்பேசிகளின் ஒலிகளாலும் தூக்கத்தில் பாதிப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இறாலை தலை வால் நீக்கி கோதுகளைக் கழற்றி சுத்தம் செய்யுங்கள்.
உடம்பின் மேற்புறத்தைக் கீறி, சாப்பாட்டுக் குடலை எடுத்துவிடுங்கள். நன்கு கழுவி, நீர் வடியவிட்டு கோப்பையில் எடுங்கள்.
எண்ணையில் சோம்பு, வெந்தயம், பூண்டு வதக்கி, பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதங்க விடுங்கள்.
ரம்பை, கறிவேற்பிலை சேருங்கள். இறால் சேர்த்து உப்புப் போட்டு கிளறி, சிறிது பொரிய விடுங்கள். மிளகாய்தூள், மஞ்சள்தூள் , மல்லித் தூள் சேர்த்து கிளறி ஒரு நிமிடம் வதக்குங்கள்.
புளிக்கரைசல் ஊற்றிக் கொதிக்க விடுங்கள். இறுதியாக தேங்காய்பால் ஊற்றி பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றி விடுங்கள்.
திரிஷா டாட்டூ குத்தியது போல் ஓவியாவும் தன்னுடைய கையில் டாட்டூ குத்தியிருக்கிறார்.
தமிழ் சினிமா நட்சத்திரங்களில் டாட்டூ குத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர் திரிஷா. இவர் மார்பு, கை மற்றும் தோளில் டாட்டூ குத்தியிருக்கிறார். தற்போது இந்த வரிசையில் ஓவியாவும் இணைந்திருக்கிறார். இவர் தனது வலது கையில் டாட்டூ ஒன்றை குத்தியிருக்கிறார்.
களவாணி, கலகலப்பு, ஹலோ நான் பேய் பேசுகிறேன் ஆகிய படங்கள் மூலம் பிரபலமான ஓவியா, தற்போது பாங்காக் நகருக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். அங்கு அவர் தன்னுடைய வலது கையில் மிகப்பெரிய டாட்டூ ஒன்றை வரைந்துள்ளார். பெண்ணின் உருவம் கொண்ட அந்த டாட்டூவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
ஓவியம் போன்று காணப்படும் அந்த டாட்டூவை பார்த்து ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
நண்பர்களுக்காக விளையாட்டு தனமாக கங்கை நதியில் குதித்த இளைஞர் ஒருவர் பறிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தின் போது உடன் இருந்த நண்பர்கள் பதிவு செய்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோவில், இளைஞன் ஒருவர் ஒடும் கங்கை நதியில் குதிக்க தயராக நின்றுக்கொண்டிருக்கிறார். அவரை சுற்றி உள்ள நண்பர்கள் வீடியோ பதிவு செய்த படி வேகமாக குதிக்கும் படி குரல் கொடுக்கின்றனர்.
பின்னர், அந்த இளைஞன் ஒடி வந்து கரைக்கு அருகே நின்று விடுகிறார். இதைதொடரந்து நண்பர்கள் அவரை திட்டி குதிக்க சொல் கின்றனர். மறுபடியும் கரைக்கு அருகில் வந்து நிற்க்கும் இளைஞர் ஓடும் நதியை பார்க்கிறார்.
இதனையடுத்து சற்று தூரம் பின்னாடி சென்று உடனே ஒடி வந்து நதியில் தலைகுப்புற குதிக்கிறார். குதித்த உடனே அவரது உடல் மேலே மிதக்கிறது. வெகுநேரமாகியும் இளைஞர் கரையேறவில்லை.
இதனால், பயந்துபோன சக நண்பர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினர் வந்து தேடியுள்ளனர். ஆனால், ஆற்றில் குதித்த வரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது உடல் எங்கு கரை ஒதுங்கியது என்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பொலிசார் நடத்திய விசாரணையில் ஆற்றில் குதித்த நபர் ஹரித்வாரின் காந்த்மிர்பூர் பகுதியைச் சேர்ந்த ஆஷிஷ் சவுகான் (வயது 27) என்பது தெரியவந்துள்ளது.
மேலும், நதியை பார்க்கும் பொழுது ஆழம் குறைவாக இருப்பது போல் தெரிகிறது. இதனால் இளைஞன் தலை தரையில் இடித்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் மகளை கிண்டல் செய்த போதை கும்பலை தட்டிக்கேட்ட தந்தை அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாவக்காடு பகுதியை சேர்ந்தவர் 52 வயதான ரமேஷ். நேற்று மாலை ரமேஷ் தனது 2வது மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சாவக்காட்டிலுள்ள ஒரு கடைக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து வீடு திரும்பியபோது 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று குடிபோதையில் மோட்டார் சைக்கிள் செல்லும் பாதையை வழி மறித்து நிறுள்ளனர். தொடர்ந்து ரமேஷின் மகளை கிண்டல் செய்யவும் தொடங்கியுள்ளனர்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த ரமேஷ் மகளை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு குடிபோதையில் மகளை கிண்டல் செய்த கும்பலை தட்டிக்கேட்க நடந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அங்கிருந்த போதை கும்பலை தட்டிக்கேட்டதை அடுத்து ரமேஷிற்கும் அந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனிடையே அந்த சாலை வழியாக வந்த சிலர் ரமேஷ் படுகாயங்களுடன் கிடப்பதை அறிந்து சாவக்காடு பொலிசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் ரமேசை மீட்டு சாவுக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரமேசின் உறவினர்கள் கூறுகையில் மகளை கிண்டல் செய்த போதை கும்பலை தட்டிக்கேட்டபோது அவர்கள் ரமேசை கடுமையாக தாக்கியுள்ளனர். அதனாலேயே ரமேஷ் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
அந்த கும்பல் குறித்து பொலிசார் விசாரித்தபோது அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்பதும். அவர்களை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் கூறினர். இதனையடுத்து அந்த கும்பல் கூலிப்படையா, முன்விரோதம் காரணமாக ரமேஷ் கொல்லப்பட்டாரா என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மென் பொறியாளர் சுவாதியின் கொலைக்கு பிறகு தற்காப்பு கலை கற்றுக் கொள்ளும் ஆர்வம் பொதுமக்களிடம் குறிப்பாக பெண்களிடம் அதிகரித்து வருகிறது.
பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், சூழலுக்கு ஏற்ப பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்வதும் அவசியமாகியுள்ளது.
தற்காப்பு கலை என்றால் கராத்தே, குங்பூ ஆகியவை தான் நினைவுக்கு வரும். ஆனால் அன்றாட வாழ்வில் சந்திக்கக் கூடிய பிரச்னைகளை எளிதாக கையாளும் யுக்திகளை கற்றுக் கொடுக்கும் “க்ரவ் மாகா” போன்ற தற்காப்பு கலை பயிற்சிகளின் பக்கம் ஐடி ஊழியர்களின் கவனம் தற்போது திரும்பியுள்ளது.
உடல் வலிமையை பெருக்குவதை விட தன்னம்பிக்கையை அதிகரித்து சிக்கலான சூழல்களிலிருந்து சாதுர்யமாக தப்பித்துக் கொள்ள உதவும் தற்காப்பு கலை பயிற்சிகளே அவசியமானது.
பள்ளிக் காலம் முதலே பாலியல் தொந்தரவுகளை சந்திக்கும் இளம் பெண்களுக்கு தற்காப்பு கலைப் பயிற்சி பெரும் உதவியாக இருப்பதாக மாணவிகள் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் தற்காப்பு கலை கற்றுக் கொள்வது எவ்வளவு அவசியமோ அதே போன்று ஆண் பிள்ளைகளை வளர்க்கும் போது ஆணும் பெண்ணும் சமம் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டியதும் மிக அவசியம் என்ற கருத்து மேலோங்கியுள்ளது.
பெண்களுக்கு தற்காப்பு கலைகள் தெரிந்திருந்தால் பாலியல் துன்புறுத்தல் ஏற்படும் போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமானால் உதவலாம். ஆனால் அவை மீண்டும் மீண்டும் நடைபெறாமல் இருக்க, நம் ஒவ்வொரு மனதிலும் பெண்கள் குறித்த பார்வை மாற வேண்டும் என்பதே பொதுமக்கள் கருத்தாக உள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் 9,600 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக மும்பை நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், இங்கிலாந்தில் நேற்று நடந்த பார்முலா வன் கார் பந்தயம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், போர்ஸ் இந்தியா அணி உரிமையாளர் என்ற முறையில் மல்லையா பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது, நான் பந்தயத்தை விரும்புபவன், கார் பைத்தியம், இதனால்தான் இக்குழுவை வாங்கினேன். மொனாகோவிலும், பாகுவிலும் நடந்த போட்டியில் எனது குழு சிறப்பாக செயல்பட்டுள்ளது.
இருந்தாலும், அதை நேரில் காணும் வாய்ப்பை தவறவிட்டு விட்டேன். வாழ்க்கை அதன் போக்கில் செல்ல வேண்டும்.
முன்பை விட மிக நன்றாகவே இருக்கிறேன். இந்திய அரசு எனது பாஸ்போர்ட்டை முடக்கி வைத்து விட்டது. அதற்காக இந்த உலகமே முடிந்து போனதாக அரத்தமில்லை.
இங்கிலாந்தும் எனக்கு தாய்வீடு போன்றதுதான். 1992ம் ஆண்டு முதல் இங்கு தங்கியிருக்கிறேன். இங்கு நான் மிகவும் பிரபலம். ஏதோ வேற்று உலகத்தில் இருப்பது போன்ற உணர்வு எதுவும் எனக்கு ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.
பிரபல திரைப்பட நட்சத்திரமும் பிரதி அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க நிஜ வாழ்விலும் ஹீரோவான சந்தர்ப்பமொன்று பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைய நாள் ஒன்றில் நேரம் மதியம் 12.30 மணியிருக்கும்…வெள்ளவத்தை சவோய் திரை அரங்கிற்கு அருகாமையில் பதற்ற நிலைமை நீடித்து வருகின்றது.
சிலர் இளைஞர் ஒருவரை மடக்கிப் பிடித்து சுழ்ந்து கொண்டிருந்தனர்.“எங்கே நீ எடுத்த பணப் பை என சூழ்ந்திருந்தவர்கள் மடக்கிப்பிடித்த இளைஞரிடம் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இந்த பிரச்சினைக்கு மத்தியில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சவோய் திரை அரங்கிற்கு அருகாமையில் வந்தார். ரஞ்சன் ஹீரோவாக நடிக்கும் மாயா திரைப்படத்தின் விளம்பர பிரச்சாரமொன்றுக்காகவே அவர் அங்கு வந்தார்.
திரை அரங்கிற்கு அருகாமையில் நிலவிய பதற்ற நிலைமையை பிரதி அமைச்சர் அவதானித்தார்.“அமைச்சரே அப்பாவி ஒருவரின் பேர்சை இவன் பிட்பொக்கட் அடித்துவிட்டான்.
அவர் ஒர் நோயாளி. சிரமத்திற்கு மத்தியில் வாழ்பவர்” என கூடியிருந்த மக்கள் ரஞ்சனிடம் கூறினார்கள்.
ஐயோ சார் நான் பேர்சை எடுக்கவில்லை. அந்த மனிதன்தான் எடுத்தான் நான் அவனுக்கு உதவியாகவே இங்கு வந்தேன்” என குறித்த இளைஞன் கூறியுள்ளான்.
பிடிக்கப்பட்டிருந்த இளைஞன் மற்றுமொரு நபரை பிரதி அமைச்சர் ரஞ்சனிடம் காட்டியுள்ளான். அப்போது குறித்த நபர் திரை அரங்கிலிருந்து கடற்கரை பக்கமாக ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார்.
உடனடியாக செயற்பட்ட ரஞ்சன் ராமநாயக்க ஜீப்பில் ஏறி குறித்த நபரை பிடிக்க பின்தொடர்ந்து சென்றார்.
தப்பிச் செல்லும் நபர் ஜீப் வண்டி போக முடியாத குறுக்குப் பாதை ஒன்றின் ஊடாக ஓடத் தொடங்கினார், ரஞ்சன் ராமநாயக்க விடவில்லை, அவரும் ஜீப்பை விட்டு இறங்கி குறுக்குப் பாதையில் பின்தொடர்ந்து ஓடினார்.
அவருடன் அவரது பாதுகாவலர்களும் ஓடினார்கள்.திரைப்படத்தின் காட்சியொன்று போன்று இந்த சம்பவம் அமைந்திருந்தது.நீண்ட போராட்டத்தின் பின்னர், குறித்த நபரை பிரதி அமைச்சர் இறுதியில் பிடித்து விட்டார்.
பிடிபட்ட நபர் தாம் பேர்சை களவளவாடவில்லை, உங்களக்கு விசரா என கேள்வி எழுப்பி தப்பிச் செல்ல முயற்சித்தார்.
எனினும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அமைச்சரும் அவரை விடவில்லை பின்னர் இறுதியில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
பேர்சிலிருந்து 6500 ரூபா பணம் எடுத்துக் கொண்டதாகவும் போதைப் பொருளுக்கு அடிமையான தாம் போதைப் பொருள் பழக்கத்தினால் இவ்வாறு பேர்சை எடுத்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த மாதிரி வேலை செய்ய வேண்டாம், வேலையில்லா விட்டால் நான் வேலைத் தேடித் தருகின்றேன்,
எவ்வாறெனினும் செய்த பிழைக்கு தண்டனை அனுபவிக்க நேரிடும் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.
பிடிப்பட்ட நபருக்கு 2000 ரூபா பணத்தை வழங்கிய பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, பிடிபட்ட இரண்டு நபர்களையும் வெள்ளவத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இலங்கை பிரஜைகளுக்கு அகதி அந்தஸ்தை வழங்கும் நடவடிக்கையில் மேலும் பல கடுமையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தற்போது இலங்கையின் களநிலவரத்தில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். சுவிஸ் இன்போ.சிஎச் என்ற இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சுவிஸின் குடிவரவு செயலகத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கையின் மனித உரிமை நிலவரங்களில் பாரிய குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன சுதந்திரமாக கருத்துக்களை வெளிப்படுத்தல் என்பது இதற்கு ஒரு உதாரணமாகும்.
எனவே ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் என்போர், அரசியல் அகதிகள் என்ற நிலைக்கு விண்ணப்பிப்பதில் கட்டுப்பாடுகளை கொண்டு வரவுள்ளதாக சுவிஸ் குடிவரவு செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்களுக்கு சுவிஸில் பாதுகாப்பு அவசியம் இல்லை.
எனினும் அகதி அந்தஸ்து வழங்குவதில், மனித உரிமை விடயங்களின் தனிப்பட்ட தவிர்க்க முடியாத காரணங்கள் கருத்திற்கொள்ளப்படும் என்றும் அந்த செயலகம் குறிப்பிட்டுள்ளது.
2016ம் ஆண்டு மே மாதம் இறுதிவரை 1316 இலங்கையர்கள் அகதி அந்தஸ்துக்கு கோரியுள்ள நிலையில் தேங்கியுள்ளன.
5000 பேர் சுவிட்ஸர்லாந்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதில், 3674 பேர் அகதி அந்தஸ்தை பெற்றவர்களாவர்.
1613 பேர் நாடு கடத்தப்படும் நிலையில் உள்ளனர். எனினும் சுவிஸ் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை தமிழர் தரப்புக்கள் ஏற்க மறுத்துள்ளன.
ஈழத் தமிழர்களுக்கான சுவிஸ் பேரவையின் உதவி தலைவர் அன்னா அன்னூர், விடுதலைப் புலிகளின் அனுதாபிகளாக இருந்தவர்கள் நாடு கடத்தப்பட்டு விமான நிலையத்துக்கு சென்றிறங்கும்போது சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 2009ம் ஆண்டில் போர் முடிந்த போதும் இன்று வரை அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குழந்தைக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலமையின் காரணமாக பதற்றமடைந்த குறித்த குழந்தையின் பெற்றோர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயலும் போது ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டமையினால் மாடிப்படிகளில் உருண்டு விழுந்த வேளை மனைவியின் உடலின் கீழ் சிக்குண்டு கணவரொருவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த குழந்தைக்கு சுவாசிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த குறித்த குழந்தையின் பெற்றோர் மேல் மாடியிலிருந்து குழந்தையை வைத்தியசாலைக்கு அவசரமாக கொண்டுச் செல்ல முயற்சித்துள்ளனர்.
வேகமாக மாடியிலிருந்து இறங்கும் போது இருவரும் மோதிக்கொண்டதையடுத்து கால் இடறி மேலிருந்து கீழ் வரை உண்டு விழுந்துள்ளனர்.
இதன் போது 128 கிலோ கிராம் நிறையுடைய குறித்த பெண்ணின் உடலின் கீழ் சிக்குண்ட கணவனுக்கு மூச்சு திணரல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த அப் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, குறித்த குழந்தைக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலமையின் காரணமாக ஏற்பட்ட பதற்ற நிலைமையினாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
பேராண்மை, அரவான், பரதேசி என்று வித்தியாசமான படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தன்ஷிகா. தற்போது கபாலி படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறார். கபாலியில் அவரது கதாபாத்திரம் குறித்து தெரிவிக்கையில்,
அதில் நான் லேடி டானாக நடித்திருக்கிறேன். இதற்காக முடியை வெட்டவைத்து எனது கெட்டப்பை மாற்றியது இரஞ்சித் சார்தான். காலக்கூத்து படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது இரஞ்சித் சார் என்னை போன் செய்து அழைத்தார். அவரைப் போய் பார்த்தபோது இந்த கதாப்பாத்திரத்தைப் பற்றி கூறினார். ‘மிகச் சிறந்த கதாபாத்திரம். ஆனால் அதற்காக முடியை வெட்டவேண்டும்’ என்றார்.
முடியை வெட்ட வேண்டும்’ என்றதும் முதலில் அதிர்ச்சியாக இருந்தது. பிறகு என்னை சமாதானப்படுத்திக்கொண்டு சம்மதித்தேன். 4 நாட்கள் கழித்துதான் அவர் சொன்ன அந்த கதாப்பாத்திரம், கபாலி படத்துக்கானது என்று தெரியவந்தது. ரஜினியுடன் நடிக்கப்போகிறோம் என்று தெரிந்ததும் நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
என்னிடம் நிறையப் பேர் எதற்காக முடியை வெட்டினாய் விக் வைத்திருக்கலாமே என்று கேட்டார்கள். அவர்களிடம் விக் வைத்து நடித்தால் அது எப்படியும் காட்டிக் கொடுத்துவிடும். கபாலியில் என் கதாப்பாத்திரம் படத்தில் மிகவும் முக்கியமானது. அந்தப் பாத்திரத்திற்காகத்தான் முடியை இழந்தேன் என்றேன். படத்தைப் பார்க்கும் போது உங்களுக்கே அதன் முக்கியத்துவம் தெரியும் என்றார்.
மூலிகைகளை சாறாக்கி குகை ஓவியங்களைத் தீட்டினான் ஆதி மனிதன். உடலில் ஓவியங்களை பச்சை குத்திக் கொண்டான் நவீன மனிதன். ஒட்டுமொத்த உடலையே ஓவியக்கூடமாக்கிவிட்டான் டிஜிட்டல் மனிதன்.
இந்த வகையான ஓவியத்திற்கு செங்கம்பளம் விரித்திருக்கிறது ஒஸ்திரியாவில் நடைபெற்றுவரும் உலக உடல் ஓவியத் திருவிழா!
கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் ஜூலை முதல் வாரத்தில் ஒஸ்திரியாவில் ‘உலக உடல் ஓவியத் திருவிழா’ நடைபெற்றுவருகிறது.
இந்த ஆண்டிற்கான திருவிழா ஜூலை 1 முதல் 3 வரை கர்ந்தியாவில் நடைபெற்றது. இந்தத் திருவிழா விதவிதமாகக் கலைகளை நேசிக்கும் ஓவியப் பிரியர்கள் மத்தியில் மிகப் பிரபலம். இந்தத் திருவிழாவில் பங்கேற்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் மேக்கப் பொருட்களுடன் ஓவியப் பிரியர்கள் ஒஸ்திரியாவில் ஆஜராகிவிடுவார்கள்.
இந்த ஆண்டு கொஞ்சம் கூடுதலாக இந்தியா உட்பட 50 நாடுகளிலிருந்து ஓவியர்கள், ஓவியப் பிரியர்கள் ஒஸ்திரியாவில் குவிந்திருந்தார்கள்.
தூரிகை, காற்றுத் தூரிகை, ஸ்பொஞ்ச் உதவியுடன் உடலில் வரையப்படும் ஓவியங்களுடன் யார் வேண்டுமானாலும் இந்தத் திருவிழாவில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் உலகப் புகழ் ஓவியர்கள் முதல் கத்துக்குட்டி ஓவியர்கள் வரை பலரும் கலந்துகொண்டார்கள்.
விசித்திரமான தோற்றங்கள், விதவிதமான ஒப்பனைகள், விநோதமான அலங்காரங்கள் என உடலில் வண்ணம் தீட்டிக்கொண்டு இவர்கள் அணிவகுத்து வந்தனர்.
உடல் ஓவியங்கள் மூலம் உலகின் முக்கியப் பிரச்சினைகளைப் பேசுவது, மனித உரிமைகளைப் பேசுவது, சமூகப் பிரச்சினைகளைப் பேசுவது, வெற்றிகளைக் கொண்டாடுவது, உடல் பாகங்களின் வழியே வண்ண அழகியலைப் படைப்பது என்று உலகம் முழுவதும் உடல் ஓவிய கலை இன்று பிரபலமாகி வருகிறது. அதன் வழியாகவே ஆஸ்திரியாவில் நடைபெற்றுவரும் உடல் ஓவியத் திருவிழாவும் ஓவியர்களின் அங்கமாகவே மாறிவிட்டது. அதனால், மருத்துவ விளைவுகளைப் பற்றியெல்லாம் இவர்கள் யாரும் கவலைப்படுவதில்லை.