மேற்கிந்திய தீவுகளில் விளையாட இந்திய அணி மும்பையில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டன் சென்றடைந்தது.
அங்கிருந்து மேற்கிந்திய தீவுகள் செயின்ட் கீட்ஸ் விமான நிலையம் சென்றடைந்த போது பயிற்சியாளர் கும்ப்ளேயின் பையை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் லண்டன் கேட்விக் விமான நிலையத்திலேயே தவறவிட்டு வந்திருப்பது தெரிந்தது.
அதன் பின் மற்றொரு விமானம் மூலம் பை கொண்டு வரப்பட்டது. இந்த தவறுக்கு கும்ப்ளேவிடம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளது.
காவல்துறை மக்களின் நம்பிக்கையை இழந்த துறையாக மாறி உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் பிரச்சனைகளில் உயர் நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கைகள் பாராட்டுக்குறியது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் சமீப காலமாக உயர்நீதி மன்றமே பல வழக்குகளில் நேரடியாக தலையிட்டு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும் அறிவிப்புகளை மக்கள் பிரச்சனைகளில் தந்திருப்பது, அனைவராலும் பாராட்டும் வண்ணம் உள்ளது.
காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி இறந்து போன D.S.P விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது, அரசு நிலங்கள், நீர் நிலைகளை அரசு கவனத்தில் கொண்டு பராமரிக்க தவறினால் உயர்நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு அப்பணியை செய்ய உள்ளதாக அறிவித்தது. சுவாதி கொலை வழக்கு மிகவும் மெத்தன போக்கில் சென்று கொண்டிருப்பதை கண்டித்து உயர்நீதிமன்றம் அறிவிப்பு தந்த பின்பு தான், இந்த வழக்கில் தமிழக காவல்துறை துரிதமாக செயல்பட்டு ராம்குமார் என்ற இளைஞரை கைது செய்து உள்ளது.
இருப்பினும் இந்த கொலைக்கும், தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று ராம்குமார் தரப்பு வாக்குமூலம் அளித்த பின்பு, மேலும் பல்வேறு சந்தேகங்கள் உருவாகி உள்ளது. உடனடியாக உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து அதிகபட்ச தண்டனை வழங்கிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
மேலும் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்துகொண்டிருந்த நேரத்தில் மூன்று கன்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டு பல சந்தேகங்களை உருவாக்கி உள்ள நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
STATE BANK OF INDIA மற்றும் RBI இந்த பணத்திற்கு உரிமை கொண்டாடி கொண்டிருக்கும் நிலையில், இந்த பணம் உண்மையில் யாருடைய பணம் என்பதை மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும். சினிமா தயாரிப்பாளர் மதன் அவர்கள் காணாமல் போன விவகாரத்திலும், காவல்துறை உடனடியாக கண்டிபிடிக்கவில்லை எனில் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்று எச்சரித்துள்ளது.
சென்னை உயர்நீதி மன்றத்தின் செயல்பாடுகள் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்ற பழமொழிக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. காவல்துறையை தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் பிரச்சனைகளில் உடனடியாக மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காமல், ஒரு நிகழ்வு நடந்து முடிந்த பிறகு அதைப்பற்றி விசாரணை செய்வது என்பது தமிழக காவல்துறை மக்களின் நம்பிக்கையை இழந்த துறையாக மாறி உள்ளது. Scotland Yard காவல்துறைக்கு இணையாக பேசப்பட்ட தமிழக காவல்துறை, ஆளுங்கட்சிக்கு ஏவல் துறையாக மாறி இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.
திருகோணமலை – மனையாவெளி சாரணர் ஒழுங்கையில் 23 வயதான இளம்பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (08.07.2016) மதியம் இடம்பெற்றுள்ளது.
அவரது சகோதரியின் கணவராலேயே குறித்த யுவதி தாக்கப்பட்டுள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
சந்தேகநபர் பள்ளிக்குடியிருப்பு – தோப்பூர் பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனடா நாட்டில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து வீட்டில் இருந்த இருவரை 12 வயது சிறுமி ஒருவர் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டாவா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அன்னாக்கா பவுச்சர் என்ற 12 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அன்னாக்காவிற்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உள்ளனர்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் அலுவலக வேலையாக பெற்றோர் வெளியே சென்றுள்ளனர்.
அப்போது, ரொட்டி துண்டுகளை சமைப்பதற்காக அன்னாக்கா சமையல் அறையில் வேலை செய்து வந்துள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு, புகை நாற்றம் வெளியேறியுள்ளது.
ஆனால், எங்கு தீப்பற்றி உள்ளது என்பதை சிறுமியால் கவனிக்க முடியவில்லை. ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த சிறுமி உடனடியாக தம்பியையும் தங்கையையும் அழைத்துக்கொண்டு வெளியே விரைந்துள்ளார்.
சலையல் அறையில் தீப்பற்றிக்கொண்டதால், ஜுவாலைகள் வேகமாக பரவியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக சிறுமி தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் அளித்துள்ளார்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் இருப்பதை தடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சிறுமி பேசியபோது, ‘வீட்டில் தீவிபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை எனது பெற்றோர் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளனர்.
இது எனக்கு மிகவும் உதவியாக இருந்ததால், இருவரையும் காப்பாற்றி பாதுகாப்பாக வெளியேற்ற முடிந்ததாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தீவிபத்து ஏற்பட்டபோது புத்திசாலித்தனமாக செயல்பட்ட சிறுமிக்கு பொலிசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.
மனைவின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ததற்காக விமர்சித்தவர்களுக்கு மலையான நடிகர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்துக்காக ஆசிப் அலி, தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார், அந்த புகைப்படத்தை அவர் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அது அவரது உரிமையாக இருந்தாலும், புகைப்படத்தில் ஆசிப் அலியின் மனைவி பர்தா அணியவில்லை, குறிப்பாக இது ரம்ஜான் மாதம் என்பதால், வீட்டை விட்டு வெளியே வரும் பெண்கள் கண்டிப்பாக பர்தா அணி வேண்டும்.
ஆனால், இதனை பின்பற்றாமல் இவ்வாறு நடந்துகொண்டது தவறு என பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்துள்ளன, மனைவியின் அழகினை அவர் மட்டும் கண்டு ரசிப்பதற்குதான், மற்றவர்களின் கண்கள் ரசிப்பதற்கு அல்ல என கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், அந்த படங்களை நீக்காத ஆசிப் அலி, மீண்டும் தனது மனைவி, குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு, நான் இப்படித்தான் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என துணிச்சலாக பதிலடி கொடுத்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் புதிதாக திருமணமான பெண் ஒருவர் கழிப்பறை காரணமாக தனது கணவரை விவாகரத்து செய்ய முன்வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பப்லூ அர்ச்சனா ஜோடிக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது. சமீபத்தில் அர்ச்சனா தன் கணவரிடமிருந்து விவாகரத்து கோரி கிராம பஞ்சாயத்திடம் முறையிட்டுள்ளார்.
கிராம பஞ்சாயத்திடம் அர்ச்சனா அளித்துள்ள புகாரில், வீட்டில் கழிப்பறை ஒன்றை கட்டும்படி பப்லூவிடம் பல முறை முறையிட்டு வருகிறேன் ஆனால் அவர் தொடர்ந்து அதை புறகணித்து வருகிறார்.
தினமும் இரவில் வெட்டவெளியை பயன்படுத்த சொல்லி பப்லூ வற்புறுத்துகிறார்.இந்நிலையில், வெட்டவெளி நிலத்தின் உரிமையாளர் தன்னை தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதாக குறை கூறியுள்ளார்.
மேலும், தனது பெற்றோரிடம் கழிப்பறை கட்டி தர சொல்லும் படி பப்லூ வற்புறுத்துவதாக அர்ச்சனா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், அவரிடம் கூறி கூறி நான் அலுத்து விட்டேன், அவரை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன், இக்காரணத்தினால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தரும்படி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் லட்சக்கணக்கான பேரின் வீட்டில் கழிப்பறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா மன்னார் வீதி பம்பைமடுவில் இன்று(08.07.2016) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் குறுக்கே பாய்ந்த நாயுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்ததுடன் நாய் சம்பவ இடத்திலேயே பலியானது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
வவுனியாவில் அண்மைக்காலமாக நாய், மாடு, ஆடு போன்ற விலங்குகளால் ஏற்படுத்தப்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட விநாடி நீளம் அதிகமாக இருக்கும். நிலையான நேரத்தை கணக்கிடும் வகையில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது.
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர 24 மணி நேரம் ஆகிறது. அதனை ஒருநாள் என்கிறோம்.
ஒரு நாள் என கணக்கிடப்படும் 24 மணிநேரம், நிமிடம், விநாடி என பகுக்கப்படுகிறது. பூமியின் சுழற்சி வேகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நேரம் கணக்கிடப்படுகிறது.
எனினும், அதிநவீன “அணுவியல் கடிகாரங்கள்’ கண்டிபிடிக்கப்பட்ட பிறகு பூமியின் சுழற்சியை சாராமலேயே நேரம் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு வருகிறது.
ஆனாலும் அணுவியல் கடிகாரத்தின் நேரத்தைவிட பூமி தினமும் 1.5 முதல் 2 மில்லி விநாடிகள் மெதுவாகச் சுழல்கிறது.
இதன் காரணமாக, 500 முதல் 750 நாள் கால அளவில் பூமி சுழற்சியின் அடிப்படையிலான நேரத்திற்கும், துல்லியமான அணுவியல் கடிகார நேரத்திற்கும் சுமார் ஒரு விநாடி வேறுபாடு காணப்படுகிறது.
இதை ஈடு செய்ய உலகக் கடிகாரங்களில் ஒரு விநாடி கூடுதலாக சேர்க்கப்படுகிறது. அதாவது, அந்த ஆண்டின் ஏதாவது ஒரு நிமிடத்திற்கு 61 விநாடிகள் இருக்கும்.
இந்த வேறுபாட்டை அவ்வப்போது சரி செய்துகொள்வதற்கான சர்வதேச ஒப்பந்தம் கடந்த 1970 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு பராமரித்து வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு, இந்த ஆண்டு (2016) டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு 11 மணி 59 நிமிடம், 59 ஆவது விநாடிக்குப் பிறகு கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக 11.59.59 மணிக்கு அடுத்த விநாடியும் 11.59.59 மணியாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
1972 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை உலகக் கடிகாரங்களில் 26 முறை விநாடிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இறுதியாக கடந்த ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி ஒரு விநாடி சேர்க்கப்பட்டது.
இவ்வாறு சேர்க்கப்படும் விநாடி “லீப்” விநாடி என அழைக்கப்படுகிறது. உலகக் கடிகாரங்கலில் கூடுதல் விநாடிகள் சேர்க்கப்படும் போதெல்லாம், பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருகிறது. அதனால் தான் விநாடிகள் கூடுதலாக சேர்க்கப்படுகின்றன. இப்படியே போனால் சில நூற்றாண்டுகளில் “பூமி சுழல்வது நின்று விடும்” என்ற பேச்சுகள் எழுகின்றன. ஆனால், இவை தவறானவை என நிபுணர்கள் வாதிடுகிறார்கள்.
பெண் பொறியியலாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருடன் மேன்சனில் தங்கி இருந்த மீனாட்சிபுரத்தை சேர்ந்த 8 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் திகதி பட்டப்பகலில் பொறியியலாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நெல்லை மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த பி.இ பட்டதாரி ராம்குமாரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராம்குமாரின் பிணை மனு விசாரணைக்காக ஆஜராகிய வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி திடீரென விலகினார்.
ராம்குமாரை புழல் சிறையில் சந்தித்த வழக்கறிஞர் ராமராஜ், பல திடுக்கிடும் தகவல்களை கூறினார். இதனால் சுவாதி கொலை வழக்கில் திருப்புமுனைகள் ஏற்பட்டுள்ளன.
இவையெல்லாம் பொலிஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இருக்கும் ராம்குமாரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குள் வழக்கை விரைந்து முடிக்கும் முயற்சியிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.தனிப்படை பொலிஸ் வட்டாரங்கள் கூறுகையில்,
சுவாதி கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏ.எஸ் மேன்சன் காவலாளி கோபாலிடம் நேற்று விசாரித்தோம்.
அவரிடம் ராம்குமார் குறித்த கேள்விகளை கேட்டோம். அவருக்கு சரியாக காது கேட்காததால் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு வேறு பதிலை சொல்கிறார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மேன்சனில் காவலாளியாக கோபால் சேர்ந்துள்ளார். பணி நேரத்தில் அவர் அஜாக்கிரதையாகவே இருந்துள்ள தகவல் எங்களுக்கு தெரியவந்துள்ளது.
சில கேள்விகளுக்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை. தேவைப்பட்டால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்துவோம் என்றனர்.
இந்த சூழ்நிலையில் ராம்குமார் மேன்சனில் சேர யார் சிபாரிசு செய்தார்கள் என்று பொலிஸார் விசாரித்த போது அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது.
ராம்குமார் தங்கி இருந்த 404 அறை அருகேயே அவரது உறவினர் ஒருவர் தங்கி இருக்கிறார். அவர் மூலமாகவே ராம்குமார் இந்த மேன்சனுக்கு வந்து தங்கியுள்ளார்.
இதுதவிர ராம்குமாரின் சொந்த ஊரான செங்கோட்டை, மீனாட்சிபுரத்தை சேர்ந்த 7 பேரும் அதே மேன்சனில் தங்கியுள்ளனர். அவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இவர்களில் சிலர் ஐ.டி துறையில் வேலை பார்க்கும் தகவலும் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து தனிப்படை பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த வழக்கில் ராம்குமார்தான் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
ஆனால், ராம்குமாருக்கு ஆதரவான வழக்கறிஞர்கள் வழக்கை திசைதிருப்ப சில தகவல்களை சொல்லி வருகிறார்கள். ராம்குமாரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும்.
ராம்குமாருக்கும், சுவாதிக்கும் உள்ள பழக்கம் உள்ளிட்ட இந்த வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும், ஆதாரங்களையும் எங்களிடம் உள்ளது. அதை நீதிமன்றத்தில் சமர்பிப்போம் என்றார்.
கோபாலிடம் விசாரணை நடந்த போது சில கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்காமல் அமைதியாகவே இருந்துள்ளார். அதோடு, சரியாக காது கேட்காததால் தேவையில்லாத பதிலையும் சொல்லியுள்ளார்.
இது அங்கு இருந்த பொலிஸ் உயரதிகாரி ஒருவருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் அங்கிருந்து வெளியில் சென்று விட்டார். அவருக்கு கீழே உள்ள அதிகாரிகள் மீண்டும் கோபாலிடம் விசாரித்துள்ளனர்.
நேற்று நடந்த விசாரணையில் ராம்குமார் சம்பந்தமான கேள்விகளை கேட்டு கோபாலை பொலிஸார் துளைத்தெடுத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார், யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.
இதனால் அவரது அறையில் நேற்று முதல் இரண்டு கைதிகளை பொலிஸார் அடைத்திருக்கிறார்கள். தற்போது ஒரே அறையில் மூன்று பேர் இருப்பதால் கொலை சம்பந்தமாக ராம்குமார், அவர்களிடம் பேச வாய்ப்புள்ளதாக பொலிஸார் நம்புகின்றனர்.
வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று ௦7.07.2016 வியாழக்கிழமை கற்பக விருட்ச காட்சி திருவிழா இடம்பெற்றது .
நேற்றைய உற்சவத்தில் கற்பகதரு போன்று அலங்கரிக்கபட்ட முத்துமாரியம்பாள் விநாயகர் முருகபெருமான் சகிதம் உள்வீதி வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருளிபாலித்த நிகழ்வு இடம்பெற்றது!
அமெரிக்காவில் கணவனை பொலிஸார் சுட்டுக்கொல்லும் காட்சிகளை நேரடியாக மனைவி பேஸ்புக்கில் உலக மக்களுக்கு காண்பித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதோ அந்த அதிர்ச்சி வீடியோ….
ஜப்பான் நாட்டில் திராட்சை கொத்து ஒன்று சாதனை விலைக்கு விற்பனையாகியுள்ளது.உலகின் மிக அரியவகை திராட்சை என கொண்டாடப்படும் ரூபி ரோமன்ஸ் வகை திராட்சை கொத்து ஒன்றை 7.36 லட்சம் ரூபாய் தந்து வாங்கியுள்ளார் ஒரு ஜப்பானியர். வெறும் 30 திராட்சை பழங்கள் மட்டுமே உள்ள அந்த திராட்சை கொத்தில் இருந்துள்ளது.
வாடிக்கையாளர்களை தங்கள் கடைகளில் ஈர்ப்பதற்கென்றே விற்பனையாளர்கள் இதுபோன்ற அரியவகை பழங்களை ஜப்பானில் சாதனை விலைக்கு வாங்கி வைப்பது வாடிக்கை. ஜப்பான் நாட்டவர்களுக்கு பழங்கள் என்றால் கொள்ளை பிரியம். பழ வகைகளை விலைமதிப்பற்றவையாக கருதும் ஜப்பானியர்கள், தங்களது உற்றார் உறவினர்களுக்கு விலை உயர்ந்த பொருட்கள் பரிசளிக்க வேண்டும் என்றால் பழங்களையே அளிக்கின்றனர்.
ரூபி ரோமன்ஸ் எனப்படும் அரியவகை திராட்சை ஜப்பானில் மட்டுமே காய்க்கின்றது. ping-pong பந்து அளவே இருக்கும் இதன் பழங்கள் சுவைகளின் உச்சம் என கூறப்படுகிறது.
2008 ஆம் ஆண்டு வரை இந்த தீஞ்சுவை பழத்திற்கு குறிப்பிட்ட பெயர் எதுவும் இல்லையாம். அதன் பின்னரே பொதுமக்கள் தெரிவு செய்த பல வகையான பெயரில் இருந்து ரூபி ரோமன்ஸ் என்ற பெயரை தெரிவு செய்துள்ளனர்.ஜப்பானின் இஷிக்காவா பகுதியில் மட்டுமே ரூபி ரோமன்ஸ் காய்க்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்து நாட்டில் இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிந்து பொது இடங்களுக்கு சென்றால் ரூ.14 லட்சம் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள 26 மாகாணங்களில் சுயாட்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாகாண அரசுகளுக்கும் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் உள்ளன.
இதன் அடிப்படியில், சுவிஸில் உள்ள டிசினோ மாகாணம் ‘பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிவதை தடை செய்வது தொடர்பாக கடந்த 2013ம் ஆண்டு வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. மாகாண அரசின் இந்த திட்டத்திற்கு 65 சதவிகித மக்கள் ஆதரவு அளித்ததை தொடர்ந்து மத்திய அரசும் இதனை ஏற்றுக்கொண்டது.
இதன் அடுத்தக்கட்டமாக மாகாண அரசு அமுலாக்கிய இந்த புதிய சட்டம் கடந்த யூலை 1ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. புதிய சட்டம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், தற்போது முதன் முதலாக இச்சட்டத்தின் கீழ் இருவர் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து இஸ்லாமிய கவுன்சிலின் உறுப்பினரான Nora Illi என்பவர் பொது இடத்தில் முகத்திரை அணிந்த காரணத்திற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவரை தொடர்ந்து, பிரான்ஸ்-அல்ஜீரியா குடிமகனான Rachid Nekkaz என்பவரும் இந்த சட்டத்தை மீறியதால் அவருக்கு 200 பிராங்க் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனினும், Nora Illi மீதான அபராத தொகையை இன்னும் தீர்மானிக்கவில்லை.
புதிய சட்டத்தை மீறுபவர்கள் மீது அதிகபட்சமாக 10,000 டொலர்(14,59,150 இலங்கை ரூபாய்) அபராதம் விதிக்கப்படும். புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், டிசினோ மாகாணத்திற்கு வரும் வெளிநாட்டு இஸ்லாமிய சுற்றுலா பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டத்தில் பெண் ஒருவர் தான் செல்லமாக வளர்த்து வந்த நாயை கணவர் வெளியில் கொண்டு போய் விட்டுவிட்டால் மனமுடைந்த சாந்தி தீக்குளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சாந்தி(40) என்பவருக்கு நாய் என்றால் கொள்ளை பிரியம், இதனால் தனது வீட்டில் நாய்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார்,
ஆனால், இது இவரது கணவர் பெருமாளுக்கு பிடிக்கவில்லை, இதனால் நாயை கொண்டுபோய் எங்கேயாவது விட்டுவிடு என்று சாந்தியிடம் அடிக்கடி கூறியுள்ளார், இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டிலிருந்த நாயை எடுத்துச்சென்று வேறு எங்கேயோ விட்டு விட்டு வந்துள்ளார், இதனால் மனமுடைந்த சாந்தி மண்ணெய்யை ஊற்றி தீவைத்துள்ளார், இதில் இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெருமாள் அருகில் இருப்பவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சாந்தி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.