நாடு முழுவதும் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 60,000 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் இலங்கையின் பிரதான நகரங்களில் இருப்பதாகவும், இவர்கள் 17 தொடக்கம் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வறுமை காரணமாகவே அதிகமானோரர் இந்த தொழிலில் ஈடுபடுவதாகவும், பாடசாலை மாணவிகளும் இதில் இணைவதாகவும் பொலிஸாரின் உத்தியோகப்பூர்வ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பல்கலைக்கழகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பாலியல் தொழில் தொடர்பான ஆய்வறிக்கை மூலமும் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வருகையின் அதிகரிப்பும் இதற்கான பிரதான காரணம் என்றும், அதிகமாக ஹப்புத்தளை, பண்டாரவளை, எல்ல, தம்புள்ள, சீகிரியா மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களிலே குறித்த பாலியல் தொழில் அதிகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுவாதி கொலை வழக்கில்,கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை கண்டுபிடிக்க, நாளை அடையாள அணிவகுப்பு நடத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
சுவாதி கொலை வழக்கில், கடந்த 1ஆம் திகதி ராம்குமார் கைது செய்யப்பட்டார். இவர் கழுத்தை பிளேடால் வெட்டி தற்கொலைக்கு முயன்ற நிலையில், நெல்லை மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் ராம்குமாருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராம்குமார். அங்கு அவரை சந்தித்த அவர் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ், ராம்குமார் மிகவும் விரக்தியில் இருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், புழல் சிறையில் உள்ள ராம்குமாரை திங்கட்கிழமை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்தவர்கள் ராம்குமாரை அடையாளம் காட்டுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
அடையாள அணிவகுப்புக்குப் பிறகு ராம்குமாரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த கொலை வழக்கில் மேலும் ஆதாரங்களை திருட்டுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
ராம்குமார்தான் கொன்றாரா? அல்லது வேறு யாரும் கொலையில் ஈடுபட்டார்களா? என்ற சந்தேகங்கள் சமீபகாலமாக காட்டு தீ போல பரவி வரும் நிலையில், அடையாள அணி வகுப்பில் நேரில் பார்த்த சாட்சியங்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலை, மனையாவெளி பகுதியில், இளம் பெண்ணொருவரைக் கொலை செய்த குற்றத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த நபரொருவரின் சடலத்தை சந்தனவெட்டை காட்டுப்பகுதியிலிருந்து, நேற்று சனிக்கிழமை (09) மீட்டுள்ளதாக, சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மல்லிகைதீவு-பெரியவெளி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கந்தசாமி சுரேந்திரன் சிவஜோதம் என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டதாகவும் அவரின் சடலத்துக்கருகில் நஞ்சுப் போத்தலொன்று காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
திருகோணமலை, மனையாவெளி சாரணர் ஒழுங்கையில் கணபதிப்பிள்ளை அஜந்தினியை தாக்கி கொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே குறித்தநபர் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளத்தில் 24 வயதான யுவதிக்கு அடையாளம் தெரியாத நபர் எடுத்த தவறுதலான தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து இருவரும் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். இந்த தொடர்பு இவர்களுக்கு இடையில் காதலாக மாறியுள்ளது.
நீண்டகாலமாக தொலைபேசியில் உரையாடி வந்த இவர்கள் வெளியில் சந்திப்பது என தீர்மானித்துள்ளனர். தொலைபேசி மூலம் அறிமுகமான இளைஞன், புத்தளத்தில் தான் ஒரு ஹொட்டலில் பணிப்புரிவதாக கூறி அந்த ஹொட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பல நாட்கள் இவர்கள் இந்த ஹொட்டலில் சந்தித்துள்ளனர். இவ்வாறு இவர்கள் தொடர்ந்தும் ஹொட்டலுக்கு சென்று வந்துள்ளனர்.
ஒரு நாள் குறித்த இளைஞன் யுவதிக்கு பானம் ஒன்றை அருந்த கொடுத்துள்ளார். அதனை பருகிய யுவதிக்கு உறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இளைஞன் யுவதியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, 6 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
தப்பியோடிய இளைஞனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருப்பது பின்னர் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட யுவதி புத்தளம் பிரதேசத்தில் உள்ள முன்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிப்புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபரிடம் மூன்று பைக்கற்று போதைபொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் விமான நிலையத்தில் பதற்றமான நிலையில் காணப்பட்டதாகவும் இதை அறிந்த சுங்க அதிகாரிகள் பையை சோதனையிட்ட போது போதை பொருள் மீட்கப்பட்டதாகவும் சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபரிடம் இருந்த போதைப் பொருட்களை போதை பொருள் தடுப்பு அறையில் வைத்து பறிமுதல் செய்துள்ளதாக அரேபிய டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
சந்தையில் உணவு சமைப்பதற்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள தரத்தை அமுல்படுத்துவதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன கூறினார்.
சந்தையில் காணப்படும் எண்ணெய் வகைகளின் தரம் குறித்து பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உணவு சமைப்பதற்காக பயன்படுத்தப்படும் பாம் எண்ணெயின் தரம் தொடர்பில் கடந்த சில நாட்களாக பல்வேறு பிரச்சினைகள் தோன்றியிருந்தன.
மனித நுகர்விற்கு உதவாத பாம் எண்ணெய் கொண்டுவரப்பட்ட 24 கொள்கலன்கள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்தே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
சுத்திகரிக்கப்படாத பாம் எண்ணெயில் 5 வீதத்திற்கும் குறைவான கொழுப்பும், சுத்திகரிக்கப்பட்ட பாம் எண்ணெயி்ல் 0.1 வீதமாக கொழுப்பும் காணப்பட வேண்டும் என சுங்கப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆயினும், கைப்பற்றப்பட்ட எண்ணெயில் 14 முதல் 20 வீத கொழுப்பு அடங்கியுள்ளமை பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, தரமற்ற உணவு சமைப்பதற்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.
சம்மாந்துறை பகுதியில் தனது 15 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தை ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குருநாகல் பகுதியிலுள்ள சமயக் கல்வி போதனைக்கூடமொன்றில் கல்வி பயிலும் குறிப்பிட்ட மாணவி, கடந்த வருடம் டிசம்பர் மாதம் விடுமுறையில் சம்மாந்துறையிலுள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தபோது தந்தையால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயார் வெளிநாடு சென்றிருப்பதால், பாட்டியின் பராமறிப்பின் கீழ், இந்த சிறுமி வளர்ந்து வருவதுடன், குருநாகல் பகுதியிலுள்ள சமயப் போதனைக் கூடமொன்றில் தங்கியிருந்து கல்வி பயின்று வருகின்றார்.
சில தினங்களுக்கு முன்னர் விடுமுறையில் மீண்டும் சம்மாந்துறையிலுள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றபோது, சிறுமியின் உடல்நிலையில் மாற்றங்களை அவதானித்த பாட்டி, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையின் பின்னர், இறக்காமத்தில் வசித்துவரும் சிறுமியின் தந்தையை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்தனர்.
கல்முனை பதில் நீதவான் எம்.கே. பேரின்பராசா முன்னிலையில் சந்தேகநபர் நேற்று (090 ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குரோஷியா வரும் சுற்றுலாப் பயணிகள் முட்டாள்தனமான, ஆபத்தான செல்பி எடுப்பதை நிறுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாடான குரோஷியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றுகிறது. கடந்த ஆண்டு 17 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.
இயற்கை எழில் கொஞ்சும் தீவுக்கூட்டங்களுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அதன் அழகை தங்கள் செல்போன்களில் பதிவு செய்கின்றனர். அதேசமயம் செல்பி எடுக்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளது. செல்பி மோகத்தில் பாறைகள் மீது நின்றுகொண்டும், நீர்நிலைகளில் ஆபத்தான பகுதிக்கு சென்றும் செல்பி எடுப்பதால் சில நேரங்களில் உயிர்ப்பலி ஏற்படுகிறது.
எனவே, இதுபோன்ற ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் செல்பிக்களை எடுப்பதை நிறுத்த வேண்டும் என மீட்பு சேவைக்குழு அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகளை வலியுறுத்தி உள்ளனர்.
‘அன்பார்ந்த சுற்றுலாப் பயணிகளே நாங்கள் உங்களை மதிக்கிறோம். உங்களை நீங்கள் மதிக்கத் தொடங்க வேண்டிய நேரம் இது. ஆகவே, முட்டாள்தனமான மற்றும் ஆபத்தான செல்பிக்களை எடுப்பதை நிறுத்துங்கள். நன்றி” என மலைப்பகுதிக்கான மீட்பு சேவை அமைப்பு டுவிட் செய்துள்ளது.
பிளிட்வைஸ் ஏரியின் மீது 75 மீட்டர் உயரத்தில் நின்றுகொண்டு செல்பி எடுக்க முயன்ற கனடா இளைஞர் தவறி விழுந்து இறந்ததையடுத்து, மீட்புக் குழு இத்தகைய வேண்டுகோளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மன உறுதியில்லாமல் தற்கொலை செய்து கொள்வது மனைவியின் முட்டாள்தனமான நடவடிக்கை என்றும், இதற்காக கணவனை குற்றம் சுமத்த முடியாது என்றும் மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இவரது மனைவி கடந்த 26.12.2004 அன்று தீக்காயங்களுடன் அருப்புக்கோட்டை அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
சிகிச்சையின்போது அவர் தாசில்தாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர், தன் மீது கணவர் அய்யப்பன் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்ததாக கூறினார். இதற்கிடையே சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். ஆரம்பத்தில் அய்யப்பன் மீது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக அருப்புக்கோட்டை டவுன் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது மனைவி இறந்த பின்பு அய்யப்பன் மீது பொலிசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை விருதுநகர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அய்யப்பன் தனது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டி அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து 2006ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து அய்யப்பன் மதுரை நீதிமன்ற கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி பி.தேவதாஸ் விசாரித்தார். முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது..
எந்தவித தூண்டுதலும் இல்லாமல் சில நேரங்களில் சிலர் தற்கொலை முடிவை எடுத்துக் கொள்கின்றனர். ஒருவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு, இவர் தான் தற்கொலைக்கு தூண்டினார் என்று கூற முடியாது.
தற்கொலை முடிவுக்கு வருபவர்கள் கோழைகள். மன உறுதியில்லாதவர்கள். அது போன்ற மனநிலையில் எடுக்கும் முடிவுக்கு ஒருவர் மீது குற்றம் சுமத்த முடியாது. இந்த வழக்கை பொறுத்தமட்டில் மனுதாரரின் மனைவி முட்டாள்தனமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இதற்காக மனுதாரரை குற்றம் சாட்ட முடியாது.
இந்த வழக்கை பொறுத்தமட்டில் மனுதாரர் மனைவியின் தற்கொலைக்கு மனுதாரர் தான் காரணம் என்று கூறி விருதுநகர் கோர்ட்டு தானாகவே முடிவுக்கு வந்துள்ளது. கீழ்கோர்ட்டு விசாரணையின்போது அரசு தரப்பு சாட்சிகள் இருவர், மனுதாரரின் மனைவி தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தன்னை காப்பாற்றும்படி சத்தம் போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தபோது மனுதாரர் வீட்டுக்கு வெளியே தான் நின்று கொண்டிருந்தார் என்று கூறி உள்ளனர்.
இதை பார்க்கும்போது மனுதாரரின் மனைவி தாசில்தாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் நீதிமன்றத்தின் நம்பிக்கையை பெறும் வகையில் இல்லை. குடும்பம் நடத்த போதுமான பணம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் மனுதாரர் மீது கூறப்பட்டுள்ளது.
தற்கொலைக்கு தூண்டாத நிலையில் குடும்பம் நடத்த போதுமான பணம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்காக மனுதாரரின் மனைவி தற்கொலை முடிவை எடுத்ததாகவும், அதற்கு மனுதாரர் தான் காரணம் என்றும் கூற முடியாது. தற்கொலைக்கு தூண்டும் வகையில் உள்நோக்கம் இருந்தால் மட்டுமே குற்றம் சாட்ட முடியும்.
மனுதாரரின் மனைவி தற்கொலை செய்து கொண்டதற்கு மனுதாரர் தான் காரணம் என்பதற்கு போதுமான ஆவணங்கள் இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது மனுதாரர் தான் அவரது மனைவி தற்கொலைக்கு காரணம் என்ற முடிவுக்கு வர முடியாது. மனுதாரருக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனை இரத்து செய்யப்படுகிறது, இவ்வாறு தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இரண்டு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பை விலக்கச்சென்ற பெண்ணொருவர், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சம்பவம் நோட்டன் பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
நோட்டன் பிரிட்ஜ் லொனக் தோட்டத்தைச் சேர்ந்த 42 வயதுடைய செல்லப்பன் வள்ளியம்மா என்பரவே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது..
நோட்டன் லொனக் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பில், நேற்றிரவு 8 மணியளவில் இரண்டு குடும்பத்தினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது கணவரை சண்டையிலிருந்து விலக்கச்சென்ற மனைவி அங்கிருந்த இளைஞன் ஒருவனது தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்தக் கைகலப்பின் மூலம் காயமடைந்த கணவன், மகன் ஆகியோர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சல்மான்கானின் நடிப்பில் வெளியாகியுள்ள சுல்தான் திரைப்படம் வெளியான மூன்றே நாட்களில் 106 கோடி ரூபாயை குவித்து வசூலில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது.
பொலிவுட் நடிகர் சல்மான் கான், அனுஷ்கா ஷர்மா ஜோடியாக நடித்த சுல்தான் திரைப்படம் கடந்த 6ம் திகதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவில் மட்டும் சுமார் சுமார் ஐயாயிரம் திரையரங்குகளில் வெளியான சுல்தான் முதல்நாள் டிக்கெட் விற்பனையின் மூலம் மட்டும் 36.54 கோடி ரூபாயை வசூலித்தது.
கடந்த மூன்று நாட்களில் நாடு முழுவதும் 106 கோடி ரூபாயை வசூலித்துள்ள இந்தப்படம் ஷாருக் கானின் ஹேப்பி நியூ இயர் மற்றும் சல்மான் கானின் பிரேம் ரடன் தன் பாயோ ஆகிய படங்களின் முந்தைய வசூல் சாதனையை தற்போது முறியடித்துள்ளது.
பூப்புனித நீராட்டு வைபவத்துக்கு சென்றிருந்தவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட தெய்வகந்த பிரிவில், நேற்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த அறுவரும், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர், மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரும், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த ராமசாமி ரவிக்குமார் (32) என்பவரே நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். காயமடைந்த, பிரேமகாந்தன்(28), கீர்த்திஸ்ரீ(22), சுசிகலா (45) ஆதி செட்டி(41), பிரதீபன்(28) ஆகியோரே மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மஸ்கெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் துறைமுக நகரமான ஹல் நகரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆடைகளின்றி, தங்கள் உடல்களில் தண்ணீரை குறிக்கும் வகையில் நீல நிற சாயத்தைப் பூசிக்கொண்டு நிகழ் கலையின் ஓர் அங்கமாக அதில் பங்கேற்றார்கள்.
”சீ ஆஃப் ஹல்” என்ற தலைப்பின் கீழ் இந்த நிகழ் கலையை அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஸ்பென்சர் டுனிக் ஏற்பாடு செய்திருந்தார்.
2017 ஆம் ஆண்டில் சிட்டி ஆஃப் கல்ச்சர் ( கலாசார நகரம் ) என்ற பெருமையை ஹல் நகரம் பெரும் போது இந்த புகைப்படங்களை ஸ்பென்சர் வெளியிடுவார்.
ஸ்பென்சர் டுனிக் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தொடங்கி மெக்ஸிக்கோ வரை இதே போன்ற நிர்வாண நிகழ் கலை படைப்புகளை ஏற்கனவே நடத்தியிருக்கின்றார்.
யாழ் புங்குடுதீவு காளிகோவில் திருவிழாவின் இன்றய தேர்த் திருவிழாவில் 5 பக்தர்கள் ஒன்றாக தூக்குக் காவடி எடுத்து தமது நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளனர்.
ஒருவிதத்தில் இது ஒரு சாதனையாகவும் அமைந்திருந்தது. ஏனெனில் இதுவரை இவ்வளவு பேர் ஒன்றாக தூக்குக் காவடி எடுத்ததில்லை. இன் நிகழ்வை பல்லாயிரக்கணக்கானோர் பரவசத்துடன் பார்வையிட்டுச் சென்றமையை காணக்கூடியதாக இருந்தது.
அமெரிக்காவில் கருப்பின நபர் ஒருவரை பொலிசார் சுட்டுக் கொன்றதை தொடர்ந்து எழுந்த போராட்டத்தில் 5 பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் லூசியானா மற்றும் மின்னெசோட்டா மாநிலங்களில் அடுத்தடுத்து பொலிஸாரின் தேவையற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு கருப்பினத்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் கருப்பின மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில், இங்குள்ள டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கணக்கான கருப்பினத்தவர்கள் பொலிசாரின் மனிதஉரிமை மீறல் மற்றும் அராஜகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களை பொலிஸார் கட்டுப்படுத்த முயன்றபோது அவர்களில் சிலர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.
5 பொலிசாரை சுட்டுக்கொன்ற கருப்பின அமெரிக்கரான மிக்கா ஜான்சன், முன்னர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்றும் ஈராக் போரின்போது அமெரிக்க படையில் போரில் பங்கேற்றவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
பொலிசாரை சுட்டுக் கொன்ற பிறகும் ஆத்திரம் தணியாமல் கையில் துப்பாக்கியுடன் வெறித்தனமாக கூச்சலிட்டப்படி நின்றிருந்த மிக்கா ஜோன்சனை பொலிசாரால் நெருங்கி சுட்டுக் கொல்ல முடியவில்லை.
ஒருதூணின் பின்புறமாக நின்றவாறு துப்பாக்கி முனையில் பொலிசாரை மிரட்டிக் கொண்டிருந்த அவரைக் கொல்ல அமெரிக்க பொலிஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக, ரிமோட்டால் இயங்கும் நவீனவகை ரோபோவின்மீது வெடிகுண்டை வைத்து அனுப்பி மிக்கா ஜோன்சனை தீர்த்துக்கட்ட பொலிசார் முடிவு செய்தனர்.
அந்த நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்து மிக்கா ஜோன்சன் கொல்லப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.
சுவாதியை ராம்குமார் கொன்றதாக பொலிசார் கைது செய்தவுடன் அவரது பேஸ்புக் நண்பர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. கடந்த யூலை 4ம் திகதி அன்று ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தில் 379 நண்பர்கள் இருந்தனர்.‘
யூலை 9ம் திகதி அந்த எண்ணிக்கை 292ஆக குறைந்துள்ளது. நமக்கு எதற்கு வம்பு என்று அவரது பேஸ்புக் நண்பர்கள் தொடர்பிலிருந்து விலகி வருகிறார்கள். கொலை நடந்தவுடன் பொலிசார், சுவாதியின் பேஸ்புக், செல்போன் நம்பரின் டூப்ளிகேட் சிம் ஆகியவற்றை கொண்டு குற்றவாளியை தேடினர்.
இதன்பிறகு சுவாதியின் பேஸ்புக் முடக்கப்பட்டு அதில் உள்ள விவரங்கள் பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. டூப்ளிகேட் சிம் மூலம் சுவாதியுடன் பேசியவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
மேலும் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்தின் உதவியுடன் அவரது இன்கம்மிங், அவுட்கோயிங் கால்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதுதொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அந்த விசாரணை தகவல்கள் தனிப்படை பொலிஸ் உயரதிகாரிகளைத் தவிர வேறுயாருக்கும் தெரிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.