யாழ்.நகரப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தொன்றில் திருமண வீட்டிற்கு சென்ற தாய் ஸ்தலத்தில் பலியானதுடன் அவரது மகள் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த பரிதாப சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவில் மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
திருமண வீடு ஒன்றிற்கு செல்வதற்காக தாயை மகள் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார்.
மோட்டார் சைக்கிளை ஒழுங்கையிலிருந்து பிரதான வீதிக்கு செலுத்திய போது, வேகமாக வந்த இராணுவத்தின் தண்ணீர் பவுசர் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
தாய் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் மகள் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் சத்திராஜா சவுந்திராணி என்ற தாயே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதோடு, சங்கீதா என்ற 23 வயதுடைய மகளே படுகாயமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரைதட்டியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் படகை அனைத்துலக கடற்பரப்புக்குள் தள்ளிச் செல்லும் இந்தோனேசியாவின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளள.
சட்டவிரோத கடற்பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு பயணமான இலங்கை அகதிகள் படகு இயந்திரக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் தரைதட்டியது.
குறித்த அகதிகள் விவகாரத்தை இந்தோனேசியா மனிதாபிமானற்ற வகையில் அணுகுவதாக அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.
அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் இந்தோனேசியாவின் தொண்டர் நிறுவனங்களும், இதுகுறித்து கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
அத்துடன், மனிதாபிமான அடிப்படையில் படகில் உள்ள அகதிகளை தரையிறங்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.
இதேவேளை, அகதிகளுக்கான ஐ.நா முகவரமைப்பு பிரதிநிதிகள் குறித்த படகின் அருகே சென்று பார்வையிட்ட போதிலும், உள்ளே சென்று பார்வையிடுவதற்கு இந்தோனேசிய அதிகாரிகள் அவர்களை அனுமதிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறுவிட்ட, எக்னெலிகொட, துன்கெல பிரதேசத்தில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த அழைப்பின் பின்னர் மேற்கொண்ட தேடுதலில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுளள்து.
குறுவிட்ட, பாதகம, கலுகெலே பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரும், குறுவிட்ட, கந்தன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருமே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் பயணித்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரியினால் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின்புதுக்குடியிருப்பு றெட்பானா பகுதியில் மோட்டார் சைக்கில் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
பரந்தனிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பேருந்து எதிர்த் திசையில் வந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
பலியானவர் தொடர்பான விபரம் இதுவரையில் தெரியவில்லை விபத்து தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராட் கோஹ்லி மும்பையின் முக்கிய பகுதியில் 34 கோடி ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான விராட் கோஹ்லி கிரிக்கெட் மற்றும் விளம்பரங்களால் கோடிக்கணக்கான பணத்தை குவித்து வருகிறார்.
தொண்டு நிறுவனம் நடத்தி பலருக்கும் உதவி வரும் விராட், கோடிக்கணக்கான பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடும் செய்துள்ளார். குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் தொடரில் கோவா அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார்.
தற்போது அவர் 34 கோடி ரூபாயில் மும்பையின் பிரபலமான வோர்லி பகுதியில் வீடு ஒன்று வாங்கியுள்ளார்.இந்த குடியிருப்பானது 7171 சதுர அடி அளவுடையது என்றும் பிரபலமான அந்த தொகுப்பு வீட்டின் 35வது மாடியில் இடம்பெற்றுள்ளது எனவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த குடியிருப்பானது இன்னும் முழுமையாக கட்டப்படவில்லை. 2018ம் ஆண்டுதான் கோஹ்லியின் கைக்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. ஆடம்பரமாக ஐந்து பெட் ரூம் கொண்ட குடியிருப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாலசுப்ரமணியன் திரையரங்கில் கான்ஜூரிங்-2 படம் திரையிடப்பட்டுள்ளது.இந்நிலையில், இத்திரையரங்கில் படம் பார்த்தவர் திரையரங்கிலேயே திடீரென மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
திரையரங்கில் படம் பார்த்தவர்கள் அளித்த தகவலின் பேரில் 108 அவசரஊர்தி மூலம் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் உடன்வந்தவர்கள் உடலை ஆட்டோவில் கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.விசாரணையில் உயிரிழந்த நபர் 60 வயது மதிக்கத்தக்கவர் என்றும், ஆந்திராவை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை ரமணா ஆசிரமம் எதிரே விசிறி சாமியார் மடத்தில் ரூம் எடுத்து தங்கியுள்ளார்.
ஆந்திராவின் புட்டபர்த்தியை சேர்ந்த இந்நபர் குறித்த பிற விவரங்களை பொலிசார் சேகரித்து வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், 102 வயது முதியவருக்கு தவறான கண்புரை அறுவை சிகிச்சை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடியா மாவட்டத்தில் இருக்கும் ஒரு அரசு மருத்துவமனையிலே குறித்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
சாந்தி பாலா(102வயது), தனது இடது கண் கண்புரை அறுவை சிகிச்சைக்காக JNM மருத்துவமனையை அனுகியுள்ளார்.ஆனால், டாக்டர் அலட்சியமாக அவருக்கு வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அறுவை சிகிச்சை செய்த டாக்டர், மருத்துவமனை முதல்வர் சாந்தனு பானர்ஜி மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, பானர்ஜி கூறியதாவது, சாந்தி பாலாவின் இரண்டு கண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதை அவரின் குடும்பதினருக்கு தெளிவாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார். சாந்தி பாலாவின் மருமகன் நாராயண் பிஸ்வாஸ் பொலிசில் அளித்துள்ள புகாரில், அறுவை சிகிச்சைக்கு முன் டாக்டர் தன்னிடம்,நோயாளிக்கு வலது கண்ணிலும் பிரச்சனை இருப்பதாக கூறியதாகவும். அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற போது சாந்தி பாலாவின் வலது கண்ணில் இருந்து இரத்தம் வெளிவர தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், டாக்டர் தவறை ஒப்புக்கொண்டு, பொலிசிடம் இதுகுறித்து புகார் அளிக்க வேண்டாம் என கூறியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். எனினும், குறித்த வழக்கில் நடவடிக்கை முன்னெடுக்க பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவிட்சர்லாந்து நாட்டில் கைப்பேசி மூலம் ஆபாசமான படங்கள் மற்றும் செய்திகளை பகிர்ந்தால் கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுவிஸ் நாடாளுமன்றத்தில் நேற்று கூட்டம் கூடியபோது இந்த சட்டம் தொடர்பான கோரிக்கை ஒன்று கொண்டு வரப்பட்டது.அப்போது, Viola Amherd என்ற நாடாளுமன்ற உறுப்பினர் பேசியபோது ‘வீடுகளில் எடுக்கப்படும் ஆபாசமான புகைப்படங்கள், வீடியோ படங்களை நண்பர்கள் மத்தியில் பகிர்ந்துகொள்ளும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது.
சில நேரங்களில் சம்மந்தப்பட்ட நபரின் அனுமதி இல்லாமல் அப்புகைப்படங்கள் பகிரப்படுவதால் அவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.இந்த நடவடிக்கையை தடுப்பது தொடர்பாக ஏற்கனவே ஒரு சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், அது திறம்பட செயல்படாத காரணத்தினால் இக்குற்றத்தை தடுக்கு புதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவருடைய கோரிக்கைக்கு அதிகளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.எனினும், இந்த கோரிக்கை நாடாளுமன்ற மேல் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விவாதம் நடத்தப்படும்.பின்னர், இந்த சட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்திய பிறகே இதனை செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனி நாட்டில் உடலில் புகுந்த பேயை விரட்டுவதாக கூறி பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த குடும்பத்தினர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தென் கொரியா நாட்டை சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பம் ஒன்று கடந்த 2015ம் ஆண்டு ஜேர்மனிக்கு சென்றுள்ளனர்.
ஜேர்மனியில் Hesse என்ற நகரில் அவர்கள் வசித்து வந்தபோது, அவர்களில் 41 வயதான பெண் ஒருவரின் நடவடிக்கை திடீரென வினோதமாக மாறியுள்ளது. தனியாக பேசுவது, சாலையில் செல்பவர்கள் மீது திடீரென பாய்ந்து தாக்குவது, காற்றில் கைகளை அசைத்தவாறு சிரிப்பது போன்ற நடவடிக்கைகள் குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பெண்ணின் உடலுக்குள் பேய் நுழைந்துள்ளதாக பாதிரியார் ஒருவர் தெரிவித்ததால், அதனை உண்மை என எண்ணி பேயை முயற்சியில் குடும்பத்தினர் ஈடுப்பட்டுள்ளனர்.இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 5ம் திகதி Frankfurt நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளனர்.
அங்கு, 41 வயதான பெண் திடீரென வித்தியாசமாக செயல்பட்டுள்ளார். குடும்பத்தினர் ஐவரும் பெண்ணை இழுத்துச் சென்று கட்டிலில் கட்டியுள்ளனர்.பின்னர், உடலில் இருந்து பேய் வெளியேறுவதற்காக அவரது மார்ப்பில் பலமாக தொடர்ந்து தாக்கியுள்ளனர். பெண் வலியால் துடித்து அலறியுள்ளார்.
பெண்ணின் அலறலை நிறுத்த ஒருவர் அவரது வாயில் துணியை வைத்து அடைத்துள்ளார். இவ்வாறு சுமார் 2 மணி நேரமாக தாக்கியதில் அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் மகனான 15 வயது சிறுவன் உள்பட அனைவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.இந்நிலையில், ஐவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றம் தற்போது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீது அதிகாரப்பூர்வமாக கொலை குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கனடா நாட்டில் ஓநாயிடம் சிக்கி தப்பிக்க முடியாமல் தவித்த பெண் ஒருவரை கரடி காப்பாற்றியுள்ளது.வடமேற்கு நிலப்பகுதிகளில் அமைந்துள்ள Hay River என்ற சிறிய நகரில் Joanne Barnaby என்ற பெண் வசித்து வருகிறார்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சமைப்பதற்காக காளான்களை பறிக்க தனது வளர்ப்பு நாயுடன் புறப்பட்டுள்ளார்.
சாலையில் காரை நிறுத்திவிட்டு அவர் காளான்களை பறித்துக்கொண்டு இருந்துள்ளார்.அப்போது, அவருக்கு அருகில் விலங்கு ஒன்றின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தபோது காருக்கு அருகில் ஓநாய் ஒன்று நின்றுக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அப்போது தனது முதலாளியை காப்பாற்ற வளர்ப்பு நாய் ஓநாயை நோக்கி பலமாக குரைத்துள்ளது. ஆனால், ஓநாய் அசராமல் அங்கேயே நின்றுள்ளது.ஓநாய் நகர்ந்தால் தான் காரை எடுக்க முடியும் என்பதால் பெண் அச்சத்தில் உறைந்து நின்றுள்ளார்.
ஆனால், ஓநாய் பெண்ணை நோக்கி முன்னேறியுள்ளது. அப்போது வேறு வழியின்றி ஓநாயிடமிருந்து தப்பிக்க அருகில் இருந்த அடர்ந்த வனத்திற்குள் நுழந்துள்ளார்.ஓநாயும் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளது. அச்சத்தில் செய்வதறியாமல் குழம்பியிருந்த அவர் கடவுளின் பெயரை உச்சரித்தவாறு வேகமாக நடந்துச் சென்றுள்ளார்.
அப்போது, திடீரென ஒரு தாய் கரடியின் சத்தம் கேட்டுள்ளது. தூரத்தில் குட்டி கரடி ஒன்று இருந்ததால் அதனை அழைப்பதற்காக தாய் கரடி ஒலி எழுப்பியுள்ளது.இது தான் சரியான தருணம் என எண்ணிய அந்த பெண் குட்டி கரடியை நோக்கி சென்றுள்ளார். அப்போதும், அந்த ஓநாய் அவரை துரத்தி வந்துள்ளது.
குட்டி கரடிக்கு அருகில் சென்றதும் வேறொரு பாதையை எடுத்து தப்பிக்க முயன்றுள்ளார். குட்டி கரடிக்கு அருகில் ஓநாய் செல்வதை பார்த்த தாய் கரடி பாய்ந்து வந்து ஓநாயை தாக்கியுள்ளது.இந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்ட பெண் சாலையை நோக்கி வேகமாக நடந்து சென்றுள்ளார். ஆனால், துரதிஷ்டவசமாக வழி தவறி வேறு திசையில் சென்றுவிடுகிறார்.
சுமார் 18 மணி நேரம் வனத்தில் சுற்றி திரிந்த அந்த பெண்ணும் வளர்ப்பும் நாயும் பத்திரமாக சாலையை அடைந்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் பேட்டி அளித்தபோது, அதிகாலை நேரத்தில் ஓநாயிடம் சிக்கியபோது பெரும் ஆபத்தில் சிக்கிக்கொண்டதை உணர்ந்தேன்.
என்னுடைய நாயும் ஓநாயை பார்த்து அச்சப்பட்டு அதனை எதிர்த்து தாக்கவில்லை. வேறுவழியின்றி உயிர் பிழைக்க வனத்தில் நுழைந்துவிட்டேன்.அதிர்ஷ்டவசமாக கரடியிடம் ஓநாயை சிக்க வைத்ததால் பாதுகாப்பாக வீடு திரும்ப முடிந்தது. இந்த சம்பவத்தை எனது வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என உருக்கத்துடன் அவர் பேசியுள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பட்ரன்வாலியை சேர்ந்த தவுபீக் அகமது, முகாதாஸ் பீபி இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடிச் சென்று காதல் திருமணம் செய்து கொண்டனர்.தற்போது 8 மாத கர்ப்பமாக இருந்த முகாதாசை மன்னித்து ஏற்றுக்கொள்வதாக கூறி, அவரது தாய் அம்னா தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு கர்ப்பிணி என்றும் பாராமல், முகாதாசை சித்ரவதை செய்து கழுத்தை அறுத்து அவரது குடும்பத்தினரே கொன்றுள்ளனர்.இக் கவுரவ கொலை தொடர்பாக முகாதாசின் தாய், தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இக்குடும்பத்தினர் அளித்துள்ள வாக்குமூலத்தில், குடும்பத்தினரின் விருப்பமின்றி அவள் விருப்பத்துக்கு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்துக்கொண்டாள்.இதனால் நாங்கள் மிகுந்த அவமானத்துக்கு ஆளானோம், இதனால் எப்படியாவது அவளை கொலை செய்ய வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டோம், அதன்படியே அதனை தற்போது நிறைவேற்றியுள்ளோம் என கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் கௌரவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, சமீபத்தில் தான் காதல் திருமணம் செய்த மகளை தாயார் ஒருவர் எரித்துக்கொலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெலிக்கடை சிறைச்சாலையானது களுத்துறைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது வெலிக்கடையில் உள்ள சிறைச்சாலையானது அங்கிருந்துஅப்புறப்படுத்தப்பட்டு களுத்துறை மாவட்டத்தில் அமைப்பதற்கு ஏற்பாடுகள்செய்யப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் வெலிக்கடை சிறைச்சாலை அப்புறப்படுத்தப்பட்டு,அந்த இடத்தில் வர்த்தகநகரம் ஒன்று அமைக்கப்படும் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது
இலங்கையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட 2.74 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான தங்க பாலங்கள் சென்னையில் கைப்பற்றப்பட்டுள்ளன. சென்னையில் கிழக்குக்கரை வீதியில் பயணித்த பஸ் ஒன்றில் இருந்தே இந்த தங்கம் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பி.டி.ஐ செய்திசேவை தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து மீன்பிடிப்படகு மூலம் கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே இந்த தங்கம் பின்னர் சென்னையில் பஸ் ஊடாக கடத்தப்பட்டுள்ளது.இந்த தங்கத்தின் நிறை 8.763 கிலோ கிராமாகும். மொத்த சந்தைப்பெறுமதி 2.74 கோடி இந்திய ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மஹியங்கனை குடாலுனுக பனுல்ல காட்டுப்பகுதியிலிருந்து 9 வயதான பாடசாலை மாணவியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரான யல்வெல பகுதியை சேர்ந்த ஒன்பது வயதான மலினி சந்தமாலி என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பாத நிலையில், அச்சம் கொண்ட பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.இதனையடுத்து பொலிஸாரும், கிராமவாசிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த சிறுமி காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த சிறுமி துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்து மஹியங்கனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பிரபல ஓட்ட வீராங்கணை சுசந்திகா ஜயசிங்க தாக்குதல் சம்பவம் ஒன்று காரணமாகவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீட்டில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தினால் சுசந்திகா காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சுசந்திகாவின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஒலிம்பிக் போட்டியில் சுசந்திகா வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரை தட்டியுள்ள இலங்கை தமிழ் அகதிகள் படகை அனைத்துலக கடற்பரப்புக்குள் இழுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை இந்தோனேசிய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.தேவையான எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றி இந்தப் படகின் இயந்திரத்தை இயங்க வைத்து, இந்தியா நோக்கி அனுப்பி வைப்பதற்கு இந்தோனேசியா முடிவு செய்துள்ளது.
இன்று அகதிகள் படகில் இருந்தவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.அதேவேளை, படகில் இருந்த அகதிகள் தனித்தனியாக குடிவரவு அதிகாரிகளால் படம்பிடிக்கப்பட்டனர்.இந்தோனேசியக் கடற்படைக் கப்பல் ஒன்று இந்த அகதிகள் படகை பாதுகாப்பாக இந்தியா நோக்கி கொண்டு செல்லவுள்ளது.
இதற்காக இந்தோனேசிய கடற்படைக் கப்பல் ஒன்று அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.அத்துடன் இழுவைப் படகு ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அவுஸ்ரேலியா நோக்கி பயணிப்பது சாத்தியமில்லை என்றும் எனவே மீண்டும் இந்தியாவுக்கே திரும்புமாறு அகதிகளிடம் கூறியிருப்பதாகவும், இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று இந்தப் படகை அனைத்துலக கடற்பரப்புக்கு இழுத்துச் செல்வதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் இந்தோனேசிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.