மனைவியை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் 15 ஆம் ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.2008ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி நடந்த கொலை சம்பவம் தொடர்பில் மாத்தறை கனங்கே பிரதேசத்தை சேர்ந்த 60 வயதான நபருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அதிக மது போதையில் வந்து மனைவியுடன் தகராறை ஏற்படுத்தி, மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக குறித்த நபருக்கு எதிராக மாத்தறை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.இது திட்டமிட்ட கொலை அல்ல எனவும் தவறாக நடந்த கொலை சம்பவத்திற்கு நபர், குற்றவாளி என கூறிய மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த குற்றவாளிக்கு 15 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுதாவளைக் கிராமத்தைச் சேர்ந்த சீனித்தம்பி மோகன் (வயது 46) என்பவரை இனந்தெரியாத நபர்கள் கொலைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவம் புதன்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளது. தடிகள் மற்றும் இரும்புக் கம்பிகளால் தாக்குதலுக்கு உள்ளாகிய இவர், களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இவரது மனைவியான இராஜேஸ்வரி (வயது 44) என்பவரும் அடி காயங்களுக்கு உள்ளான நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இரண்டு பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களை தேடி வருவதாகவும் இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் செயலாளர் ஒருவர் பத்து கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள வீட்டிலிருந்தே பத்து கிலோ தங்கத்தினை பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று காலை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே நாமல் ராஜபக்ஸவின் செயலாளரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் பாடசாலைகளில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கை கொடுக்க மறுத்தால், மாணவர்களின் பெற்றோர் 5,000 பிராங்குகள் அபராதமாக செலுத்த வேண்டும் என சுவிஸ் பள்ளிக் கல்வித்துறை அதிரடி சட்டம் நிறைவேற்றியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பசலில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு முஸ்லிம் மதத்தை சார்ந்த மாணவர்கள், ஆசிரியைக்கு கை கொடுக்க மறுத்துள்ளனர்.
ஏனெனில், அவர்கள் குடும்ப உறுப்பினர் அல்லாத பெண்ணை தொட்டால், அது தங்களது மதத்திற்கு எதிரானது என கூறியுள்ளனர். பின்னர், பள்ளி தலைமை இரண்டு மாணவர்களுக்கும் தற்காலிகமாக விலக்கு அளித்திருந்தது.
இது சுவிஸ் கலாசாரத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததால், இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பாலியல் பாகுபாடுஇன்றி கை கொடுக்கும் பழக்கத்தை சுவிஸ் மக்கள் ஒரு மரியாதையின் அடையாளமாக கருதுகின்றனர். மேலும் சிறுவயதிலிருந்தே இந்த பழக்கம் குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றது.
தற்போது, சுவிஸ் பள்ளிக்கல்வித்துறையின் புதிய சட்டத்தின் மூலம் இரண்டு மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விலக்கு திரும்ப பெறப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பள்ளியில் படிக்கும் இளம் மாணவர்கள் பாலியல் பாகுபாடு கருதாமல் அனைத்து ஆசிரியர்களுக்கும் கை கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மீறும் மாணவர்களின் பெற்றோர்கள் 5,000 பிராங்குகள் அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று (25.05.2016) மாலை 4.30 மணியளவில் வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கிப் புறப்பட்ட NP JG-**** தொடர் இலக்கமுடைய பேரூந்தில் பயணித்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வவுனியா நகரில் இருந்து வேப்பங்குளம் பிள்ளையார் கோவிலடியில் இறங்கினார்.
அப்போது அப் பேரூந்தின் நடத்துனர் குறித்த மூதாட்டி ஆசனத்தில் அமர்ந்து வந்ததாகக் கூறி, அம் மூதாட்டியிடம் மன்னாருக்குறிய கட்டணமான நூறு ரூபாவை வேண்டிவிட்டே இறக்கிவிட்டுச் சென்றார்.
மூதாட்டி மணமுடைந்த நிலையில் நடத்துனரைத் திட்டியபடியே பண்டாரிகுளம் வீதியால் நடந்து சென்றதை அவதானிக்க முடிந்தது.
இது போன்று சில நடத்துனர்கள் முதியவர்களிடமும் பிரயாணிகளிடமும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் இவற்றுக்கு பேரூந்து உரிமையாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் சாரதி பயிற்சி வாகனம் நேற்று இரவு விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் நேற்று (25.05.2016) இரவு 7.30 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த சாரதி பயிற்சி வாகனத்தின் சக்கரம் காற்றுப்போனதால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் காயமடைந்த சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் சாரதிபயிற்சி வாகனம் அதிவேகமாக சென்றதாக சம்பவத்தினை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினம் நடைபெற்ற வெளியேற்றல் சுற்று போட்டியில் 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல். தொடரின் வெளியேற்றல் சுற்று போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதனையடுத்து விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் யுவராஜ் சிங் அதிகபட்சமாக 30 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். ஹென்ரிக்ஸ் 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், மோர்கல் மற்றும் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுக்களை சாய்த்தனர். இதனையடுத்து 163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் மணிஷ் பாண்டே அதிகபட்சமாக 36 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார். புவனேஸ் குமார் 3 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
ஹைதராபாத் அணியில் 2 விக்கெட்டுக்களையும், 31 ஓட்டங்களையும் எடுத்த ஹென்ரிக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த தோல்வியின் மூலம் தொடரில் இருந்து கொல்கத்தா அணி வெளியேறியுள்ளது. ஹைதராபாத் அணி வெள்ளிக்கிழமை நடைபெறும் இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியில் குஜராத்துடன் மோதுகின்றது.
அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி மே 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்திக்கிறது.
கொரோவபதான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மகள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கலேன்பிதுனுவெவ – அக்கரவிஸ்ஸ பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (26) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மனைவி காயமடைந்த நிலையில் அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடும்பப் பிரச்சினை காரணமாக, உயிரிழந்த பெண்ணின் கணவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும், சந்தேகநபர் அப் பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இவரைக் கைதுசெய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வௌ்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை கடனாக வழங்குவதற்கு அவதானம் செலுத்தப்படுவதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறினார். நேற்று பிற்பகல் குறித்த அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறினார்.
அவுஸ்திரேலியாவுக்கு மனிதக் கடத்தலை மேற்கொள்வதற்காக பணச் சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நான்குபேரை கோயம்புத்தூரில் வைத்து கியூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இவர்களில் ஒரு இலங்கை அகதியும் அடங்கியுள்ளார். ஏனையவர்களில் இலங்கையர் ஒருவர்( கிளிநொச்சி அக்கராயன்குளம்) மற்றும் தமிழகம் சென்னையை சேர்ந்த இருவர் ஆகியோர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை சட்டவிரோதமாக படகுகளில் ஏற்றிச் செல்வதற்காக கோயம்புத்தூரில் உள்ள கொத்தூர் கிராம அகதி முகாமில் பணச் சேகரிப்பில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். கோத்தூர் அகதி முகாம் 1980 ஆண்டுகளில் இருந்து செயற்படுகிறது. அங்கு 546 இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர்.ஆரம்ப விசாரணைகளில் இருந்து கைது செய்யப்பட்ட நால்வரும் அவுஸ்திரேலியா செல்வதற்காக ஒரு ஆளுக்கு 70 ஆயிரம் ரூபாவை அகதிகளில் கோரியதாக தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் அவர்கள் 6 அகதிகளிடம் இருந்து 3.7 லட்சம் இந்திய ரூபாவை சேகரித்துள்ளனர்.இந்தநிலையில் அகதி ஒருவர் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே இந்த விடயம் வெளியில் தெரியவந்துள்ளது.கைதுசெய்யப்பட்டவர்கள் சென்னை புழல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் இம்முறை அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட ஏதுவாக அமைந்ததுசீபிளேனை தரை இறக்குவதற்கு அமைக்கப்பட்ட மணல் திட்டே காரணம் எனகுறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த மணல் திட்டானது தடுகம் ஓயாவை மறித்து குறுக்காக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த மணல் திட்டை உடனடியாக அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த மணல்திட்டை கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின்பணிப்புரைக்கமைய நேற்றைய தினம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் தடுகம் ஓயாவை மறித்து கட்டப்பட்ட குறித்த மணல்திட்டே கம்பஹாமாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் என கடந்த வாரம் இடம்பெற்றகலந்துரையாடலின் போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டமையை அடுத்தேஇதை அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்கொலை செய்யப்போவதாக பேஸ்புக்கில் பதிவுவேற்றி விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது.
பங்களாதேஷில் மொடலிங், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் மார்கெட்டிங் என பல்வேறு தொழில் புரியும் 21 வயதுடைய சபிரா ஹுசைன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்தவராவார்.
இதேவேளை, பல்வேறு விளம்பரங்களிலும் நடித்துள்ள சபிரா ஹுசைன், நேற்று முன்தினம் தான் தற்கொலை செய்யப்போவதாக கூறி வீடியோ ஒன்றையும் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
அதில் ஒருவேளை நான் தற்கொலை செய்துகொண்டால், எனது தற்கொலைக்கு காரணம் தனது காதலன் தான் எனவும் தெரிவித்துள்ளார்.
சபிரா ஹுசைன், காதலன் நிர்ஜார் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் திடீரென சபிரா ஹுசைனை திருமணம் செய்ய அவரது காதலர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சபிரா ஹுசன் தனது தொடர்மாடி குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அயல்வீட்டார் அளித்த தகவலின்படி, குறித்த தொடர்மாடிக் குடியிருப்பில் இருந்து சபிரா ஹுசனின் உடலை பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவில் பெய்து வரும் கடுமையான மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 3 மாடிக் கட்டிடம் ஒன்று அடியோடு சாய்ந்துள்ளது.
தெற்கு சீனாவின் யுலின் நகரில் கடுமையாக மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இவ்வாறு வௌ்ளம் சூழ்ந்த 3 மாடி கட்டிடம் ஒன்று அடியோடு சாய்ந்தது. இந்தக் கட்டிடம் அருகில் இருந்த பாலத்தின் மீது வீழ்ந்ததால் அப்பகுதிக்கான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
நிலைகுலைந்து வீழ்ந்த கட்டிடம் 2012 ஆம் ஆண்டு தான் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம், அராலி மாவத்தை விளையாட்டு மைதானத்திலுள்ள கிணற்றிலிருந்து மாணவனின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (24.05) மாலை இடம்பெற்றுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் அராலி தெற்கைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெசிந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் இந்த மாணவன் கடந்த 23 ஆம் திகதி காணாமல் போன நிலையில் நேற்று சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, வட்டுக்கோட்டை பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
திமுகவுக்கு ஒரு தொகுதியிலும் இழஅதிமுக ஆட்சியைப் பிடித்தும் என்ன புண்ணியம். 2 தொகுதிகளில் அது டெபாசிட்டைப் பறி கொடுத்து அவமானத்தைச் சந்தித்துள்ளது. அதேசமயம், ஆட்சியைப் பிடிக்கத் தவறிய திமுக,
ஒரு இடத்தில் கூட டெபாசிட்டைப் பறி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுக அணிகளுக்கு போட்டியாக தேமுதிக – தமாகா – மக்கள் நலக் கூட்டணியும், பாமகவும் கடும் போட்டியைக் கொடுத்தன.
அதேபோல நாம் தமிழர் கட்சி, பாஜக ஆகியவையும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் நடந்ததோ தலைகீழாக இருந்தது. திமுக, அதிமுகவைத் தவிர மற்ற யாருமே போட்டியிலேயே இல்லாமல் போய் விட்டனர்.
திமுக, அதிமுகவுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியவை பாமகவும், மக்கள் நலக் கூட்டணியும்தான். மற்றபடி மற்ற கட்சிகளால் இந்தக் கட்சிகளுக்குப் பெரிய அளவில் எந்தப் பாதிப்பும் இல்லை.
ஆட்சியைப் பிடித்த அதிமுக
தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதில் கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடைத்த இடங்கள் 3 ஆகும். ஆனால் அவை இரட்டை இலையில் போட்டியிட்டதால் அவையும் அதிமுக வேட்பாளர்களாகவே கருதப்படும்.
2 தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது
அதிமுக ஆட்சியைப் பிடித்துள்ள போதிலும் கூட நிறைய அவப் பெயர்கள் அக்கட்சிக்குக் கிடைத்துள்ளன. பெரும்பாலான தொகுதிகளி்ல மயிரிழையில்தான் இக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதை விடக் கொடுமையாக 2 தொகுதிகளில் டெபாசிட் பறி போய் விட்டது.
விளவங்கோடு
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு டெபாசிட் போய் விட்டது. விளவங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸின் விஜயதாரணி வெற்றி பெற்றார். இங்கு அதிமுகவுக்கு 4வது இடமே கிடைத்துள்ளது. 2வது இடத்தை பாஜகவும், 3வது இடத்தை சிபிஎம்மும் பெற்றன.
தளி தொகுதியில் 3வது இடம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் 3வது இடத்தைப் பிடித்தது அதிமுக. அங்கு இந்தத் தொகுதியிலும் அதிமுகவுக்கு டெபாசிட் பறி போயுள்ளது. மற்ற இடங்களில் அதிமுக தப்பிப் பிழைத்துள்ளது.
திமுகவுக்கு இழப்பே இல்லை
இந்தத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிக்க மட்டும்தான் தவறியதே தவிர பெருமைக்குரிய விஷயங்கள் நிறையவே அதற்கு உள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் மயிரிழையில்தான் அது தோல்வியைத் தவற விட்டுள்ளது. அதை விட முக்கியமாக எங்குமே அது டெபாசிட்டைப் பறி கொடுக்கவில்லை என்பது முக்கியமானது.