இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்தாண்டில் ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை மத்யூஸ் பெற்றுள்ளார். 25 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 8 அரைச்சதத்துடன் 1,062 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
இந்த ஆட்டத்தில் 139 ஓட்டங்களை விளாசிய மத்யூஸ், இந்திய மண்ணில் அதிக ஓட்டங்கள் எடுத்த வெளிநாட்டு அணித்தலைவர் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
முதல் இரு இடங்களில் இங்கிலாந்தின் ஸ்டிராஸ்-158 ஓட்டங்கள் (பெங்களூரில் இந்தியாவுக்கு எதிராக 2011ம் ஆண்டு), அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லி-156 ஓட்டங்கள் (நாக்பூரில் இந்தியாவுக்கு எதிராக 2013) ஆகியோர் உள்ளனர்.
இந்தப் போட்டியில் 10 சிக்சர்கள் விளாசிய மத்யூஸ், ஜெயசூர்யாவுக்கு (1996ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 11 சிக்சருடன் 134 ஓட்டங்கள்) அடுத்து ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர் அடித்த இலங்கை வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
பேஸ்புக் மூலம் பெண்களைக் கிண்டல் செய்து கொண்டிருப்பது குறித்து எச்சரிக்கப்பட்ட மாணவன் ஒருவன் அச்சம் காரணமாக தலைமறைவாகியுள்ளான்.
காலி பகுதியில் பிரபலமான பாடசாலையொன்றின் உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனே இவ்வாறு தலைமறைவாகியுள்ளதாக தினமிண பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த மாணவன் கணிதத்துக்கான ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற திறமையான மாணவன் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேஸ்புக் மூலமாக குறித்த மாணவன் பெண்களைக் கிண்டல் செய்வது, தரங்கெட்ட வார்த்தைப் பிரயோகம், ஆபாச படங்களை அனுப்புதல் என்றவாறாக தொல்லை கொடுத்து வந்துள்ளான். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு யுவதி நைசாக உரையாடி மாணவன் குறித்த தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பின்னர் குறித்த மாணவன் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப் போவதாக அச்சுறுத்திய நிலையில் அச்சம் காரணமாக மாணவன் வீட்டை விட்டு தலைமறைவாகியுள்ளான்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தினமிண செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கையின் மிகச்சிறந்த கட்டிடக் கலைஞராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கையின் சிறந்த கட்டிடக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் வைபவம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
மஹாபிமாணி – 2014 என்ற தலைப்பில் கொழும்பு, மகரகம தேசிய இளைஞர் மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.
இதன் போது யாழ்ப்பாணத்து இளைஞர் ஒருவர் இலங்கையின் மிகச்சிறந்த கட்டிட நிர்மாணக் கலைஞருக்கான விருதைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இவர் கடந்த 2012ம் ஆண்டு கட்டிட நிர்மாணக் கலை தொடர்பில் பயிற்சிகளை பெற்றுக் கொண்டவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வட மாகாணசபையின் வவுனியா மாவட்ட உறுப்பினரும் கல்வி அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமாகிய இ.இந்திரராஜாவுக்கு அதிபர் ஒருவரினால் அச்சுறுத்தில் விடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இ.இந்திரராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தெரிவிக்கையில்,
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு என உலக உணவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட சத்துணவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இப் பாடசாலையின் முன்னாள் அதிபர் இந்த மோசடிகளில் ஈடுபட்டதாக உலக உணவுத் திட்டத்தின் வடமாகாண அதிகாரி க.றொய்ஸ் எனக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இது தொடர்டபில் கல்வி அமைச்சின் கவனத்திற்கும் சில அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தேன். இவ்வாறு கொண்டு வரப்பட்மை தொடர்பிலேயே குறித்த அதிபர் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவற்றை ஏன் வெளிப்படுத்தினீர்கள் என்று கேட்டு மிரட்டல் விடுத்தார்.
இது பற்றி நான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் கல்வி அமைச்சருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். இதேவேளை, குறித்த அதிபர் தற்போது வவுனியாவில் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபராக பொறுப்பேற்றுள்ள அதேவேளை, இவ் முறைப்பாடு தொடர்பில் வலயக்கல்விப் பணிமனை உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் விராத் கோலி சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றி கிண்ணத்தை வென்றது.
இந்தியா சென்றுள்ள இலங்கை அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஏற்கனவே தொடரை இந்தியா 4-0 என கைப்பற்றி விட்டது. ஐந்தாவதும் இறுதியுமான போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி தலைவர் மத்யூஸ் களத்தடுப்பை தேர்வு செய்தார்.
இதனையடுத்து இந்திய அணி களத்தடுப்பில் ஈடுபட்டது. இந்திய அணியில் ரெய்னாவுக்கு பதில் கேதர் ஜாதவ் இடம்பிடித்தார். இதே போல வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு அஷ்வின் வாய்ப்பு பெற்றார்.
இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் மத்யூஸ் ஆட்டமிழக்காமல் 139 ஓட்டங்களைப் பெற்றதோடு திரிமன்ன 52 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்கர்னி 3 விக்கெட்களை வீழத்தினார்.
பதிலுக்கு 287 என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 48.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்று வெற்றி அடைந்தது.
இந்திய அணி சார்பில் அணித் தலைவர் கோலி 139 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்தார். ராயுடு 59 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என முழுமையாக கைப்பற்றி கிண்ணத்தை வென்றது. ஆட்ட நாயகன் விருதை இலங்கை தலைவர் மெத்யூஸ் வென்றார். தொடர் நாயகன் விருது இந்திய அணித் தலைவர் விராத் கோலிக்கு வழங்கப்பட்டது.
லண்டனில் நடந்த கின்னஸ் உலக சாதனை நாள் விழாவில் உலகின் மிக உயரமான மனிதரும், மிக குள்ளமான மனிதரும் சேர்ந்து நடந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளனர்.
மத்திய லண்டனில் உள்ள செண்ட் தோமஸ் மருத்துவமனை வளாகத்தில், 60வது கின்னஸ் உலக சாதனைப் புத்தக நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டுள்ளது.
அதில் உலகின் மிக உயரமான ஆணான துருக்கி நாட்டைச் சேர்ந்த 8 அடி, 3 அங்குல உயரம் உடைய சுல்தான் கோசெனும் ஒரு அடி 7 அங்குல உயரம் கொண்ட நேபாளத்தை சேர்ந்த சந்திர பகதூர் டாங்கி என்ற உலகின் குள்ளமான மனிதரும் சேர்ந்து கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வுக்காக சந்தித்துக் கொண்ட சந்திர பகதூரும், சுல்தானும் நெருங்கிய நண்பர்கள் ஆனதோடு, மீண்டும் வேறொரு சந்தர்ப்பத்தில் இருவரும் சந்தித்துப் பேச வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர்களைத் தவிர உலகம் முழுவதும் இருந்து சுமார் ஆறு லட்சம் கின்னஸ் சாதனையாளர்கள் இந்த விழாவில் பங்கு கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, சென்னை வேலம்மாள் பள்ளியில் 76 ஜோடி இரட்டை மாணவர்கள், ஒரே மேடையில் தோன்றி அசத்தியுள்ளனர்.
பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்த தினம் நேற்று. நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது. சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் குழந்தைகள் தினம் வித்தியாசமாக கொண்டாடப்பட்டது.
மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் விளையாட்டுப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தியது போக இரட்டையர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.
76 ஜோடி இரட்டைகளும் ஒன்றாக தோன்றியது, பார்வையாளர்களை கவர்ந்தது. ஒரே மாதிரியான சீருடையில் இரட்டையர்கள் வந்திருந்தது, இரண்டு பேரில் யாருக்கு என்ன பெயர் என்று அடையாளம் காண முடியாதபடி இருந்தது.
இந்த இரட்டை குழந்தைகளுக்கு ஆடை அணிகலன் போட்டி, சிறந்த இரட்டையர்களுக்கான போட்டி, தனித்திறன் போட்டி, நடனப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
உலகின் அதிபயங்கர பெண் தீவிரவாதி, உக்ரைன் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகின் அதிபயங்கர பெண் தீவிரவாதியான ‘வயிட் விடோ’ என்ற சமந்தா லெவ்த்வெயிட் 2 வாரங்களுக்கு முன் உக்ரைன் சென்று அங்கு அரசுக்கு ஆதரவான படையில் சேர்ந்து, குறி பார்த்து சுடும் வீராங்கனையாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது நடந்த சண்டையில், இவரை குறி பார்த்து சுடுவதில் வல்லவரான ரஷிய வீரர் ஒருவர் சுட்டுக்கொன்று விட்டதாக இப்போது ஊடகத்தகவல்கள் கூறுகின்றன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சமந்தாவை சுட்டுக்கொன்ற ரஷிய வீரரின் தலைக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்படும் என உக்ரைன் சிறப்பு பணிகள் பிரிவு அறிவித்துள்ளது.
சர்வதேச நீரிழிவு நோய் எதிர்ப்பு தினத்தையொட்டி வவுனியா செட்டிகுளத்தில் விழிப்புணர்வு பாதயாத்திரை நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வவுனியா சுகாதார திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் வைத்திய அதிகாரிகள் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செட்டிகுளம் தள வைத்தியசாலையில் இருந்து ஆரம்பித்த பாத யாத்திரை செட்டிகுளம் பிரதேச செயலகம் வரை சென்றதுடன், அங்கு விழிப்புணர்வு கலந்துரையாடலொன்று இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இயமசங்கார உற்சவம் நேற்று மாலை இடம்பெற்றது.
மேற்படி உற்சவம் தொடர்பாக மார்க்கண்டேயனின் கதை யாவரும் அறிந்ததே.. அதாவது. மருகண்டு முனிவரும் அவரது துணைவி மருடவதி பிள்ளைப் பேறு வேண்டி கடுந்தவம் புரிந்தனர். தவத்தின் பயனாக அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், ,” அறிவிலர்களாய் நூறு பிள்ளைகள், இல்லையேல் அறிவு ஜீவியாய் பதினாறே ஆண்டுகளே ஆயுள் உள்ள மகன், இதில் ஒன்றை தேர்ந்து எடு்ப்பீர்களாக,” என்றார்.
எதிர்பார்த்தபடியே அறிவில் சிறந்த பிள்ளையை அவர்கள் வேண்ட அவ்வாறே ஒரு மகனை அவர்கள் பெறுகின்றனர். மார்கண்டேயன் என்று பெயர் சூட்டி, அன்பும், அறமும் திகழ வளர்கிறது குழந்தை.
பாலகன் பதினாறு வயதை நெருங்க நெருங்க, பெற்ற மனங்கள் பதறுகின்றன. பெற்றோரின் கவலை முகங்கள் கண்டு துளைத்துத் துளைத்துச் சிறுவன் வினவ,அவர்களும் தங்கள் தவப்பயனாக அவன் பிறந்தாலும், அதிலுள்ள நிபந்தனையான 16 வயதில் மரணமெனும் செய்தியையும் கூறி அழுகின்றனர்.
காலனின் ஈசனே தனக்கு நித்திய பூஜா மூர்த்தியாய் இருக்கையில், மரணம் தன்னை நெருங்காது எனும் தீர்க்க முடிவோடு, மார்க்கண்டேயன் தினந்தோறும் சிவலிங்க பூஜையில் ஈடுபடுகிறான். அவ்வாறே, குறிப்பிட்ட நாள் வருகையில், எமன் தனது பாசக் கயிற்றை வீச தக்க தருணத்தை எதிர் நோகியுள்ளான்.
மார்க்கண்டேயனோ, எமனுக்கு அஞ்சி ஓடி, சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்தவாறு உயிர் பிச்சைக்கான பூசையிலுள்ளான்! காலம், காலன் இரண்டும் நிற்காதல்லவா? பொறுமை இழந்த எமன் தன் பாசக்கயிற்றை மார்க்கண்டேயனை நோக்கி வீசுகையில், சிவலிங்கத்திலும் சேர்ந்தே விழுகிறது. தன் பக்தன் தன்னை ஆலிங்கனம் செய்து பூசை செய்வதைக் கூட மதியாமல், தன் பணியை செய்த எமனின் செயலால் கோபம் கொண்ட சிவன், லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு, காலால் காலனை எட்டி உதைக்கிறார்.
ஆனால், காலன் தனது பணியைச் செய்வதையே சிவனாரே தடுத்த மாதிரி ஆகிவிடுமல்லவா? எனவே, மார்க்கண்டேயனின் ஆயுள் ‘என்றும் பதினாறு’ என்ற அரிய வரம் தந்து அருள்கிறார். இதனையே இயமசங்காரம் என சிவன்கோவில்களில் கொண்டாடுவது வழக்கம்.
2013ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தொடர்பில் வெட்டுப்புள்ளி குறைப்புக்கள் எதிர்வரும் திங்கட்கிழமையன்று வெளியிடப்படவுள்ளன. கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பணிப்புரைக்கு இணங்க இந்த புள்ளிக்குறைப்பு இடம்பெறுவதாக அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
2015ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட உரையின் போது ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 15ஆயிரத்தில் இருந்து 25ஆயிரமாக உயர்த்தப் போவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இதற்கமைய சிங்கள மொழி மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் 163இல் இருந்து 157ஆக குறைக்கப்பட்டுள்ளன. தமிழ்மொழி மூல புள்ளிகள் 159இல் இருந்து 152ஆக குறைப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பாடசாலை மட்டத்திலான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதியன்று வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதியின் திட்டத்துக்கு அமைய மாணவர் ஒருவர் ஒரு விடைத்தாளுக்கு 35புள்ளிகளை பெற்றிருந்தால் அத்துடன் இரண்டு விடைத்தாள்களுக்கும் 70 புள்ளிகளை பெற்றிருந்தால் அவர் சித்தியெய்தியவராக கருதப்படுவார்.
பரீட்சைகள் ஆணையாளரின் தகவல்படி 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதியன்று வெளியிடப்பட்ட ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பெறுபெறுகளின் நிமித்தம் 258,000 பேர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர்.
இதில் 15ஆயிரம் பேரே புலமைப்பரிசில் உதவுத்தொகைக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் சித்தியடைந்த மாணவர் தொகை, இன்னும் 10ஆயிரமாக உயர்த்தப்படவுள்ளது.
அதேநேரம் புலமைப்பரிசில் உதவுத்தொகையும் 500 ரூபாவில் இருந்து 1500ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இன்று சனிக்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுக்கா தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டருக்குள் சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் 1 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழ வாய்ப்பு உள்ளது. பிலிப்பைன்ஸ், பபுவா நியூகினியா ஜப்பான், தைவான் மற்றும் தென்பசிபிக் தீவுகளை சுனாமி தாக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் பற்றிய தகவல்கள் வெளியாகாத நிலையில், முதல் சுனாமி அலை அடுத்த 6 மணி நேரங்களில் எழலாம் என்றும் ஆரம்ப அலைகள் பெரியதாக இல்லாமல் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் சிறு வகை விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் பயணம் செய்த இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் செஸெனா 150 என்ற சிறு வகை விமானத்தில் லோகேஷ் லக்ஷ்மிகாந்தன்(25) மற்றும் ரவீந்திரன் அருளானந்தம்(31) என்ற இரு நபர்கள் பயணம் செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் நியூயோர்க் நகரில் வசித்துவரும் தமிழர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
விமானத்தில் எரிபொருள் தீர்ந்து விட்டதால் விமான ஓட்டுநர் லோகேஷ் விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்து அடர்ந்த காட்டில் உள்ள மரத்தில் விமானத்தை மோதியுள்ளார். இதனை அடுத்து விமானம் விபத்துகுள்ளாகி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
ஹெலிகாப்டரின் மூலம் நடந்த தேடுதல் வேட்டையில் விமானத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
விமானத்தை ஓட்டிய லோகேஷிற்கு ஏற்கனவே 200 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளதாகவும், விபத்துகுள்ளான விமானத்தை 30 மணி நேரம் முன்கூட்டியே ஓட்டியுள்ளார் என்றும், தேடுதல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு தாம் ஆபத்தில் இருப்பதாக விமானி உதவிக்கு அழைத்த போதும் விமானப்படையினரால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் மறுநாள் செவ்வாய்க்கிழமையே கண்டுபிடிக்கப்பட்டபோது லோகேஸ் , மற்றும் ரவீந்திரன் ஆகியோரை சடலமாகவே மீட்க முடிந்தது என தேடுதல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட்ஸ் அப்பில் ஆபாச காட்சி வெளியிட்டது தொடர்பாக கேரள ஏடிஜிபி மீது சரிதா நாயர் புகார் கொடுத்துள்ளார். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சரிதாநாயரின் ஆபாச காணொளி சமீபத்தில் எங்கும் பரவியது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் சரிதாநாயர் புகார் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க பத்தனம்திட்டா பொலிசிற்கு உத்தரவிட்டது.
இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சரிதாநாயர் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள கேரள டிஜிபி அலுவலகம் சென்று டிஜிபி பாலசுப்பிரமணியத்திடம் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது..
தற்போது தென்மண்டல ஏடிஜிபியாக இருக்கும் பத்மகுமார் திருவனந்தபுரம் சரக ஐஜியாக இருக்கும்போது தான் என்னை கைது செய்தார். அப்போது என்னிடம் இருந்தும், எனது தாயிடம் இருந்தும் 7 கைப்பேசிகளையும், 2 மடிக்கணனிகளையும் பொலிசார் கைப்பற்றினர்.
ஆனால் இதில் 4 கைப்பேசிகளையும், ஒரு மடிக்கணனியை மட்டுமே பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மற்ற 3 கைப்பேசிகளையும், ஒரு மடிக்கணனியையும் ஏடிஜிபி தன்னிடம் வைத்துக்கொண்டார். அதில் தான் எனது ஆபாச காட்சியும் இருந்தது.
எனவே ஏடிஜிபி பத்மகுமார் தான் எனது ஆபாச காட்சிகளை வெளியிட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறப்பட்டிருக்கிறது.
தனது நான்கு வயது மகனின் உடலில் 30 வருடங்களுக்கு முன் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க கடற்படையை சேர்ந்தவரின் ஆவி இருப்பதாக தாய் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
விர்ஜினியாவைச் சேர்ந்த மிச்செல் லூகாஸ் என்ற பெண்மணி தனது நான்கு வயது மகன் ஆண்ட்ரூ உடம்பில் 1983ம் ஆண்டு அக்டோபர் மாதம் போரில் இறந்த லூயிஸ் என்பவரது ஆவி புகுந்துள்ளதாக கருதுகிறார்.
இதுபற்றி மிச்செல் கூறுகையில், ஆண்ட்ரூ போரில் இறந்த லூயிஸ் பற்றியும், அவர் இறந்த முறையையும் நினைவுகூர்கிறான் என்றும் லூயிஸுடன் இறந்த மற்ற வீரர்களின் புகைப்படங்களையும் அவன் சரியாக அடையாளம் காண்கிறான் எனவும் தெரிவித்துள்ளார்.
1983ம் ஆண்டு அக்டோபரில் நடந்த இந்த போரில் இறந்த 241 அமெரிக்க கடற்படை வீரர்களில் லூயிஸும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆண்ட்ரூ அடிக்கடி தானாக அழுவதாகவும் ஏன் அழுகிறாய் என்று கேட்டால், என்னை ஏன் நெருப்பில் எரிந்து இறக்க அனுமதித்தாய் என்று கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மிச்செல் மேலும் கூறுகையில், என் மகன் உடலில் ஆவி புகுந்திருக்கிறது என்று நினைக்கிறேன் என்றும் அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.