இராணுவச் சீருடையில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் பாதாள உலகக்குழு!!

jaffnaஇராணுவச் சீருடையில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் பாதாள உலகக்குழு ஒன்று தொடர்பில் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் இந்த டீனோ என்ற பாதாள உலகக்குழு இயங்கி வருகின்றது.

பாலியல் வன்கொடுமை, கப்பம் கோரல், கொலை. கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் இந்தக் குழு ஈடுபட்டு வருவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது,

இந்த பாதாள உலகக்குழு இராணுவச் சீருடையில் சென்று குற்றச் செயல்களில் ஈடுபடுவதனால் பிரதேச தமிழ் மக்கள் மத்தியில் இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது.

இந்தக் குழுவிடமிருந்து பல்வேறு வகையிலான இராணுவச் சீருடைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த பாதாள உலக குழுவினை யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதான மோகன் அசோக் டீனோ என்ற இளைஞர் வழிநடத்தியுள்ளார். இந்தக் குழுவில் இருபது பேர் அங்கம் வகிக்கின்றனர். இந்த நபர்களிடமிருந்து ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.

பாதாள உலகக் குழுவின் தலைவர் டீனோ முன்னர் ஹவா குருப்பில் இணைந்து செயற்பட்டதாகவும் பின்னர் அதிலிருந்து விலகி தனியாக ஓர் பாதாள உலகக் குழு ஒன்றை அமைத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

பம்பலப்பிட்டியில் 5 மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து!!

Fireபம்பலப்பிட்டியில் அமைந்துள்ள 5 மாடிக் கட்டிடத்தில் இன்று காலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பம்பலப்பிட்டி, இலக்கம் 64 டேவிட்சன் வீதியில் உள்ள ஐந்து மாடிகளைக் கொண்ட வர்த்தக கட்டிடத்திலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு வருதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

ஒருகோடி பெறுமதியான ஹெரோயினை ஆரஞ்சுப் பழத்திற்குள் வைத்து கடத்தியவர் கைது!!

Orangeபாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஹெரோயின் கடத்தி வந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரஞ்சு பழத்தை பிளந்து அதற்குள் உள்ளவற்றை அகற்றி அதில் ஹெரோயின் நிரப்பி சூட்சமமான முறையில் அதனை இணைத்து குறித்த நபர் ஹெரோயின் கடத்தி வந்துள்ளதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆரஞ்சுப் பழங்களுக்குள் இருந்து சுமார் ஒரு கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. வெங்காயப் பை ஒன்றில் இருந்த 40 ஆரஞ்சுப் பழங்களில் 12இல் இவ்வாறு ஹெரோயின் இருந்துள்ளது.

கடத்தப்பட்ட ஹெரோயினின் பெறுமதி ஒரு கோடி ரூபா எனத் தெரிவித்த சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி, சந்தேகநபர் உறுது மொழியில் பேசுவதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து வந்த விமான் நேற்று இரவு 8.40 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

அதன்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்தே இலங்கைக்கு அதிகம் போதைப் பொருள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை வலியுறுத்தி போராட்டம்!!

Mannar

மன்னார் மாவட்ட மக்களுக்கு எதிராக இடம்பெறும் மோசடிகளை ஆராயும் கலந்துரையாடல் ஒன்று நேற்று (10) மாலை மன்னார் விடுதி ஒன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களாக வினோ நோதரலிங்கம், சிவசக்தி ஆனந்தன், மற்றும் மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்பணி அந்தோனி விக்டர் சூசை, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை, மன்னார் நகரசபையின் தலைவர் எஸ்.ஞானபிரகாசம், மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேசுதாசன் ஜேம்ஸ், நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்புராஜ், மன்னார் நகர சபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மன்னார் மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் மோசடிகள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு குறிப்பாக மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி தொடர்பில் உடனடியாக சர்வதேச விசாரணையினை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.

அதேபோன்று இந்திய வீட்டுத்திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மோசடிகளினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மக்களுக்கு நீதியான முறையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவேண்டும்.

மாவட்டத்தில் சட்ட விரோதமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மண் அகழ்வினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் அதேபோன்று மாவட்டத்தின் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இதன்போது மாவட்டத்தில் பல பாகங்களிலும் இருந்து வந்திருந்த மக்கள் பிரதிநிதிகள் குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த கிராம பிரதிநிதிகளினால் அவர்களது கிராமங்களில் எதிர்நோக்கம் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாக கவனத்தில் எடுத்துக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 12ம் திகதி குறித்த பிரச்சினைகள் தொடர்பாக அனைத்து மக்களும் ஒன்றினைந்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 12ம் திகதி குறித்த கவன ஈப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மாங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் பலி!!

Accidentஏ 9 வீதியின், கிளிநொச்சி மாங்குளம் 233வது மைல்கல் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோகண, பயணிகள் வான் ஒன்றும் டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

சம்பவத்தின் போது 5 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் இருவர் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. வான் சாரதியின் கவனக் குறைவே இவ்விபத்துக்கான காரணமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

அத்துடன் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 

எனக்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது : நிச்சயதார்த்தத்துக்கு பிறகு நஸ்ரியா பேட்டி!!

Nasriyaநேரம் படத்தின் மூலம் தமிழ் படவுலகில் அறிமுகமான நஸ்ரியாவுக்கும், பிரபல மலையாள இயக்குனர் பாசிலின் மகனும், இளம் நடிகரான பகத்பாசிலுக்கும் திருமணம் செய்ய பெற்றோரால் முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நேற்று பகல் 12.30 மணிக்கு திருவனந்தபுரம் தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நஸ்ரியா–பகத் பாசிலின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

நிச்சயதார்த்திற்கு பிறகு நஸ்ரியாவும், பகத்பாசிலும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். நஸ்ரியா கூறும்போது, எங்கள் திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. வருகிற ஓகஸ்டு மாதம் 21ம் திகதி திருவனந்தபுரம் கழக்கூட்டம் அல்தாஜ் அரங்கில் திருமணம் நடைபெற உள்ளது.

அதை தொடர்ந்து 24ம் திகதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளோம். எந்த இடத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது என்று முடிவு செய்யவில்லை. திருமணத்திற்கு பிறகு என் கணவர் வீட்டாரும் எனது பெற்றோரும் சம்மதித்ததால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்.

எனக்கு தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆசை உள்ளது. ஆனால் அனைவரும் சம்மதித்ததால் மட்டும் தொடர்ந்து நடிப்பேன். அதே சமயம் சிறந்த முறையில் எனது குடும்பத்தை நான் பார்த்துக் கொள்வேன் என்றார்.

நடிகர் பகத்பாசில் கூறும்போது, பெங்களூர் டேஸ் என்ற படத்தில் நாங்கள் இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்தோம். முதல் பார்வையிலேயே நஸ்ரியா மீது எனக்கு காதல் வந்து விட்டது. அதன் பிறகு நாங்கள் போனில் பேசி எங்கள் காதலை வளர்த்துக் கொண்டோம். தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் எங்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்றார்.

 

என்னுடைய முதலீடு நான்தான் : இசை வெளியீட்டு விழாவில் கமல்!!

Kamal

கற்றது தமிழ், தங்கமீன்கள் என்ற படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குனர் ராம். இவருடைய அடுத்தப்படைப்பாக தரமணி என்னும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் புதுமுகம் வசந்த் ரவி நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் ஆண்ட்ரியா, தி சோல் ஆப் தரமணி என்னும் பாடலை எழுதி இசையமைத்து அவரே இந்தப்பாடலை பாடியுள்ளார். இப்பாடலின் இசைத்தட்டை உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட இயக்குனர் இமயம் பாரதிராஜா பெற்றுக்கொண்டார்.

பாரதிராஜா பேசும்போது, கமல் ஒரு நடிகராகவும், இயக்குனராகவும் இருந்தாலும் எனக்கு அவர் நெருங்கிய நண்பர், நான் அவருடன் நட்பாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு மிகவும் பிடித்தமானவர். ஆண்ட்ரியா பாடலை கேட்டேன் மிகவும் நன்றாக இருந்தது. இயக்குனர் ராம் மிகவும் திறமையானவர். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. சாதிப்பார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

கமல ஹாசன் பேசும்போது நான் எல்லாதையும் வைத்து படம் எடுப்பதாக இயக்குனர் ராம் என்னைப் பற்றி கூறினார். ஏனென்றால் நான் எதையும் கொண்டு வரவில்லை, போகும் போது எதையும் கொண்டு போவதில்லை. நான் சினிமாவில் சம்பாதித்ததை திரும்பவும் சினிமாவுக்கே தருகிறேன்.

என்னைப் பொருத்தவரை என்னுடைய முதலீடு நான்தான் என்றார். ஆண்ட்ரியா பாடிய பாடலை கேட்டேன், நன்றாக இருந்தது. மேலும் இப்படம் வெற்றியடைய படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன் என்று அவர் கூறினார்.

 

முஸ்லிமாக மதம் மாறிய யுவன் ஷங்கர் ராஜா : அதிர்ச்சியில் இளையராஜா!!

Yuvan-Shankar-Rajaஇளையராஜா மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு..

முஸ்லிம் ஆக மாறுவது என்பது திடீர் என எடுத்த முடிவு அல்ல. ஒன்றரை வருடமாக இஸ்லாம் பற்றிய புத்தகங்கள் படித்தேன். நிறைய ஆன்மீக அனுபவங்கள் கிடைத்தது. புனித குரானை படித்த பிறகு நிறைய கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் எனக்கு விடை கிடைத்தது.

என் தந்தை இளையராஜாவிடம் முஸ்லிம் மதத்துக்கு மாறப்போகும் முடிவு பற்றி சொன்னேன். இதை கேட்டதும் ஆரம்பத்தில் அவர் அதிர்ச்சியானார். அதன் பிறகு என்னை அவர் புரிந்து கொண்டு எனது முடிவை ஏற்றுக் கொண்டார்.

முஸ்லிமாக மாறியதால் எனக்கும் இளையராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை.
முஸ்லிம் பெண்னை மணப்பதற்காக நான் முஸ்லிமாக மாறியதாக சொல்லப்படுவதிலும் உண்மை இல்லை என்று கூறினார்.

 

புது கெட்டப்பில் அதிரடியாக களமிறங்கும் அஜித்!!

Ajith

ஒரு காலத்தில் ரொம்ப இளமையாக கல்லூரி மாணவன் போல் இருந்த அஜித் திடீரென்று வெயிட் போட்டு குண்டானார். ஆக்ஷன் காட்சிகளில் நடித்தபோது ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சம்பந்தமான பிரச்சினைகள் காரணமாக அவரது உடலில் 24 இடங்களில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டது.

அதற்காக சாப்பிட்ட மாத்திரை மருந்துகளால் உடல் குண்டானது. அதன் பிறகு உடம்மை குறைத்தே தீருவது என்று கருதி ஒரு வருடம் கடுமையான உடற்பயிற்சி, டயட்டில் இருந்து உடம்மை குறைத்தார். திருப்பதி படத்தில் அவர் நடித்தபோது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மெலிந்திருந்தார். அஜித்தின் இந்த புதிய தோற்றம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே சாதாரண தோற்றத்துக்கு மீண்டும் வந்தார்.

அதன்பிறகு எந்த இமேஜும் பார்க்காமல் தனது நடுத்தர வயது தோற்றத்தை வெளிப்படுத்தினார். ரஜினிக்கு அடுத்து தோற்றத்தின் இமேஜ் பற்றி கவலைப்படடாத நட்சத்திரமாக அஜித் கருதப்படுகிறார். ஆங்காங்கே நரைத்த முடியுடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். அதுவே ஒரு அழகாக இருந்தது.

அதனால் இயக்குனர் வெங்கட் பிரபு அவரை அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மங்காத்தா படத்தில் நடிக்க வைத்தார். அதுவும் நெகட்டிவ் கரக்டரில். அடுத்து ஆரம்பம் படத்திலும் அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை பயன்படுத்திக் கொண்டார் விஷ்ணுவர்த்தன். இரண்டுமே ஹிட் என்பதால் அடுத்து வீரம் படத்திலும் அதே லுக்கில் வில்லேஜ் கெட்-அப்பாக மாற்றினார் சிவா.

அடுத்து அஜித் நடிக்கப்போவது கௌதம் மேனன் படத்தில். கௌதம் மேனனுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையை தீர்க்க அஜித்தே வழிய வந்து அவர் படத்தில் நடிக்க இருக்கிறார். “எனக்காக பிரஷ்சா ஒரு கதை ரெடிபண்ணுங்க எல்லா பிரச்சினையையும் தீர்த்துவிடலாம்” என்று கௌதமுக்கு அஜித் நம்பிக்கையூட்ட பக்காவான ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி அஜித்திடம் காட்டி அதற்கு ஓகேவும் வாங்கி விட்டார்.

பொதுவாக கௌதம் மேனன் ஹீரோக்களை அழகாகவே காட்டுவார். அவர் அஜித்தை இதுவரை இல்லாத அளவிற்கு அழகான புதிய தோற்றத்தில் காட்ட இருக்கிறார். முதல் கட்டமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக் அகற்றப்பட்டு விட்டது.

இணையதளத்திலிருந்தும், பிரபல ஓவியர்களை கொண்டும் பல வித தோற்றங்களை பிரதியெடுத்து அதில் இருந்து சிலவற்றை தேர்வு செய்து அஜித்திடம் கொடுத்துள்ளார். அதில் ஒன்றை தேர்வு செய்திருக்கிறார் அஜித். இப்போது அந்த தோற்றத்திற்கு மாறி வருகிறார்.

அதனால் நண்பர்களை சந்திப்பது பொது இடத்தில் தோன்றுதை தவிர்த்து வருகிறார். அனேகமாக கௌதம் மேன்ன படம் முடியும் வரை வெளியில் வரமாட்டார் என்கிறார்கள். படப்பிடிப்பு முழுமையாக முடியும் வரை அஜித்தின் தோற்றம் பற்றியும், கதை பற்றியும் ரகசியம் காக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

 

தமிழ் ரசிகர்களை கவர்ச்சியால் கட்டிப்போடப் போகிறேன் : சமந்தா பரபரப்பு பேட்டி!!

Samantha

தமிழ் சினிமா ரசிகர்கள் அஞ்சான் படத்தில் இதுவரை பார்த்திராத அதிரடியான சமந்தாவை பார்க்கப் போகிறார்கள். முந்தைய தமிழ்ப்படங்களில் பச்சபுள்ளையாட்டம் பவ்யமாக வந்து சென்ற சமந்தா, இனி கோடம்பாக்கத்திலும் தனது கொடியை பரபரப்பாக பறக்க விட வேண்டும் என்ற வெறியுடன் களமிறங்கியிருப்பதால் தெலுங்கு படங்களுககு எவ்விதமும் குறையில்லாத வகையில் அதிரடியாக பிரவேசிக்கப்போகிறாராம்.

இதுபற்றி சமந்தா விடுத்துள்ள செய்தியில், தமிழில் நான் நடித்த பாணா காத்தாடியிலேயே ஓரளவு கிளாமர் கதவுகளை திறந்தேன். ஆனால், அதையடுத்து என்னை ஆந்திர சினிமாவே வாரி அணைத்துக்கொண்டதால், எனது மொத்த கவர்ச்சி சேவையும் தெலுங்கு ரசிகர்களுக்கே போய் விட்டது.

அதனால் இனி தமிழ் ரசிகர்களையும் கவர்ச்சியால் கட்டிப்போடப் போகிறேன். அந்த வகையில் அஞ்சான் படத்தில் பெரிய அட்டாக் கொடுக்கப்போகிறேன். தற்போது புனேவுக்கு அருகே ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அந்த பாடலில் அதிரடியான நடனமாடியிருக்கிறேன்.

தமிழ் ரசிகர்களைப்பொறுத்தவரை இந்த பாடலை பெரிய அளவில் ரசிப்பார்கள். அந்த அளவுக்கு அற்புதமான நடன அசைவுகளை கொடுத்திருக்கிறேன்.

அதேபோல் போதும் என்கிற அளவுக்கு அளவான கிளாமரும் அந்த பாடலில் இடம்பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள சமந்தா, சூர்யாவுடன் நடித்து வரும் அஞ்சானும், விஜய்யுடன் நடிக்கும் புதிய படமும் தமிழில் தன்னை ரொம்ப உயரத்தில் உட்கார வைத்து விடும் என்ற பெரிய நம்பிக்கையும் வைத்துள்ளாராம்.

 

வவுனியா சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

ஜனாதிபதியின் வாக்குறுதிக்காவது அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வழங்குங்கள் என கோரி வடமாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை வலையமைப்பு மற்றும் சமூகமட்ட அமைப்புக்களும் இணைந்து இன்று (10) வவுனியாவில் ஊர்வலமொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

வவுனியா தபாலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த இவ் ஊர்வலத்தில் சிறுவர்கள், பெரியவர் என பலரும் கலந்துகொண்டு வவுனியா மாவட்ட செயலகம் வரை ஆர்ப்பாட்டமாக சென்று வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ச.மோகநாதனிடம் மகஜரொன்றினை கையளித்திருந்தனா.

இதன்போது சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எனது ஆட்சியில் மன்னிப்பே கிடையாது என்ற ஜனாதிபதியின் வாக்குறுதியை மையப்படுத்தி அட்டம்பஸ்கட சிறுவர் இல்லத்தில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்களுக்கு நிதி கிடைக்கவேண்டும், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்கப்படவேண்டும், இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடையூறு விழைவித்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியவர்கள் இனி அவ்வாறு செயற்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகள் எதுவிதமான தலையீடுகளும்மின்றி நீதித்துறை சுதந்திரமாக செயற்படுத்தலை உறுதிப்படுத்தவேண்டும் என்ற வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளை ஊர்வலத்தில் சென்றவர்கள் தாங்கியிருந்தனர்.

1

2

 

நோயாளியின் உயிரைக் காக்க உதவிய தொலைக்காட்சித் தொடர்!!

Serialஅமெரிக்க, தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு தொடரைப் பார்த்து ஜேர்மன் வைத்தியர்கள் நோயாளி ஒருவரைக் காப்பாற்றியுள்ளனர்.

ஜேர்மனியில் உள்ள மார்பர்க் பல்கலைக்கழக மருத்துவமனையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட 55 வயது நபர் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த போது இதயத்தில் உள்ள இரத்தக் குழாய்கள் குறுகி இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இதயம் செயல் இழக்கும் நிலையில் இருந்தது.

அதிக காய்ச்சல் மற்றும் தைராய்டு செயல் இழப்பினால் காது கேட்கும் திறனையும், கண் பார்வை திறனையும் இழந்திருந்தது தெரியவந்தது.

இதுபோன்ற நோய் தாக்கியவரையும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் 2011ல் அமெரிக்க, தொலைக்காட்சி ஒளிபரப்பிய, ஹவுஸ் என்ற மருத்துவத் தொடரில் விளக்கப்பட்டு இருந்தது.

இந்த தொடரின் அடிப்படையில் நோயாளிக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஆராயப்பட்டது. ஜேர்மன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு, கடந்த, 2010ல், அவரது இடுப்பு எலும்பு உடைந்ததால், பீங்கானால் செய்யப்பட்ட செயற்கை இடுப்பு எலும்பு பொருத்தப்பட்டு இருந்தது.

செயற்கை இடுப்பு எலும்பில் உள்ள கோபால்ட் உடைந்து வேதிமாற்றம் அடைந்து. இரத்தத்தில் கலந்து விஷமாக மாறியதால், அவருக்கு மேற்கண்ட பாதிப்புகள் ஏற்பட்டதை வைத்தியர்கள் கண்டுபிடித்தனர்.

தற்போது அந்த நோயாளிக்கு மாற்று செயற்கை இடுப்பு எலும்பு பொருத்தப்பட்ட பின் இதயத் துடிப்பு சரியானது. அமெரிக்க, தொலைக்காட்சித் தொடர்தான் இந்த நோயாளியின் உயிரை காப்பாற்ற உதவியதாக ஜேர்மன் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பூனை கடித்ததால் கை, கால் விரல்கள் கல்லாக மாறிய முதியவர்!!

Catஅமெரிக்காவில் பூனைக் கடியால் பாதிக்கப்பட்டவரின் கை, கால் விரல்கள் கல் போன்று உருமாறியுள்ளன.

அமெரிக்காவின், ஓரேகான் மாகாணத்தை சேர்ந்தவர், பால் ஸ்டீவ் கேலார்ட் (61). கடந்த மாதம், இவரை பூனை கடித்தது. இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட பால் ஸ்டீவ்வின் கை, கால் விரல்களில், முடிச்சுக்கள் ஏற்பட்டு வீக்கம் உண்டானது.

கை, கால் விரல்களின் நிறம் கறுப்பாக மாறத் தொடங்கியது. கடந்த, 27 நாட்களாக, கோமா நிலையில் இருந்த, பால் ஸ்டீவ்வுக்கு, உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு மாதமான நிலையில், அவரது இதயம், செயலிழந்துவிட்டது. நிமோனியா, நெரிகட்டுதல் உள்ளிட்ட, மூன்று நோய்கள் ஒரே நேரத்தில் தாக்கியிருப்பதால், அவர், உயிர் பிழைப்பது கடினம் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

 

 

குளிர்காய தனது சொகுசுக் காரை எரித்தவர் கைது!!

Carசீனாவில் கடும் குளிரை சமாளிக்க வாலிபர் ஒருவர் தனது காரை எரித்து குளிர்காய்ந்த சம்பவம் நடந்துள்ளது.

சீனாவின் நாஜிங்க் பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் தனது நண்பர்களோடு மது அருந்திக்கொண்டிருந்தார். அங்கு தற்போது கடும் குளிர் நிலவுவதால் குளிரை சமாளிக்க அவர் செய்தது அவரை சிறையில் கொண்டுபோய் விட்டுள்ளது.

அதிக அளவில் மது அருந்தியிருந்த அந்த நபர் அதிக விலையுடைய வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பீட்டில் ரக காரை குளிர்காயும் பொருட்டு தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

பிரபல ஹொலிவுட் படமான ஹாங் ஓவரில் வருவது போல போதையில் இருந்த அவருக்கு தான் இவ்வாறு செய்தது ஞாபகமே இல்லை. அடுத்த நாள் அவரது வீட்டிற்கு வந்த பொலிசார் விவரத்தை கூற அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.

தீ பற்றி எரிந்த காரை பற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினரும், பொலிசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் கார் முற்றிலுமாக எரிந்து கருகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூரம்!!

Abuse1இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் 48 வயது பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ளது ஷுகர்தல். அந்த கிராமத்தைச் சேநர்ந்த 48 வயது பெண் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது உடல் அருகே வளையல்கள் உடைந்து கிடந்தன. அவரை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து அதன் பிறகு கல்லால் அடித்துக் கொன்றிருக்கக்கூடும் என்று பொலிசார் கருதுகின்றனர்.

பொலிசார் அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

வவுனியா வாடிவீட்டு உரிமையாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!!

Attackவவுனியா வாடிவீட்டின் உரிமையாளரான மாரிமுத்து கதிர்காமராசா மீது நேற்று (09.02) இரவு இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா நகர்ப்பகுதியில் இருந்து தனது வீட்டிற்கு இரவு 8 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இவர் மீது வீட்டின் முன்னால் வாகனத்தில் நின்றவர்கள் மோதியுள்ளனர். இதனையடுத்து மோதியமை தொடர்பாக அவர்களிடம் கதிர்காமராசா காரணம் கேட்டபோது திடீரென இருவர் அவர் மீது கத்தியால் வெட்டியும் தடியால் அடித்தும் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்பி ஓடியுமுள்ளனர்.

அதனையடுத்து படுகாயமடைந்தவரை அயலில் உள்ளவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.