வவுனியாவில் ஏற்றுமதியை மையமாக கொண்டு மஞ்சள் செய்கை : விவசாய திணைக்களம் நடவடிக்கை!!

Manjalவட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் முதன் முறையாக மஞ்சள் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா விவசாய திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவின் ஆலோசனை வழிகாட்டலில் மஞ்சள் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் ஊடு பயிராகவும் தனி நிலச்செய்கையாகவும் மஞ்சள் செய்கைளை மேற்கொண்டு வருகின்றனர்.

9 தொடக்கம் 12 மாத பயிர்ச்செய்கையான மஞ்சல் செய்கை குறைந்த பராமரிப்பு செலவுகளுடன் அதிகளவான வருமானத்தை ஈட்டுவதற்கு ஏற்ற பயிர்ச்செய்கை என விவசாயிகள் புலகாங்கிதமடைகின்றனர்.

மலையகத்தில் இருந்தும் இந்தியாவில் இருந்துமே வட மாகாணத்திற்கு மஞ்சல் கொள்வனவு செய்யப்படுகின்ற போதிலும் தற்போது வவுனியா மாவட்டத்தில் செய்கை பண்ணப்படுவதால் குறைந்த விலையில் நுகர்வோர் மஞ்சலை பெற வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மஞ்சல் செய்கை அறுவடையின் பின்னர் சந்தைப்படுத்தலில் தாம் பிரச்சனையை எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம் என மஞ்சள் செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன் தம்மிடம் விவசாய திணைக்களம் கொள்வனவு செய்வதற்கு ஆவண செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுகின்றனர்.

இதேவேளை வவுனியா மாவட்ட விவசாய விரிவாக்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் அ.சகிலாபாணுவிடம் தெரிவித்தபோது..

மஞ்சள் செய்கை விவசாய திணைக்களத்தினால் முதன் முறையாக வவுனியா மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ் அறிமுக திட்டத்திற்கான முழு நிதியினையும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை எமக்கு வழங்கியுள்ளது.

ஏற்றுமதி வாய்ப்பை மையமாக கொண்டு நாம் வவுனியா மாவட்டத்தில் ஈடுபட்டுவருகின்றோம். இத் திட்டத்தில் விவசாயிகள் மிகுந்த ஆர்வமாக உள்ளதால் எமது திட்டத்திற்கு உட்பட்ட பயனாளிகள் மட்டுமல்லாது பல விவசாயிகள் தற்போது இதில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் எமது திட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளிடம் தற்போது மஞ்சளை கொள்வனவு செய்தவற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலம் வவுனியா மாவட்டத்தில் இத் திட்டத்தை மேலும் விஸ்தாக்க முடியும் என தெரிவித்தார்.

 

பிரித்தானியாவுக்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கு!!

Britanபிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இலங்கை மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் பிரித்தானிய அரசிடம் இழப்பீடு கோரி அநகாரிக தர்மபாலவின் பரம்பரையினர் என்ற அமைப்பு வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது.

இது சம்பந்தமாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

1818 ஆம் ஆண்டு ஊவா – வெல்லஸ்ஸ புரட்சியின் போது நாட்டுக்காக உயிர் நீக்க 158 பேரை தேசிய வீரர்களாக அறிவிக்க கலாசார அமைச்சு எடுத்துள்ள முடிவுக்கும் எமது அமைப்பு நன்றி தெரிவிக்கின்றது.

பிரித்தானியர் இலங்கையில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இதுவரை அந்த நாடு இழப்பீடுகளை வழங்கவில்லை என்பதுடன் மன்னிப்பும் கோரவில்லை.

பிரித்தானியரின் காணி சட்டம் காரணமாக மலையகத்தில் வாழும் சிங்களவர்களின் காணிகள் பறிபோயுள்ளன. சிங்களவர்கள் பிணத்தை புதைக்கக் கூட காணிகளை பெற முடியாத நிலையில் உள்ளனர்.

இதன் காரணமாக இன்னும் அபிவிருத்தியடையாத பிரதேசமாக சில மலையக பிரதேசங்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

யாழில் வாள் வெட்டு, கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய டில்லு குழு கைது!!

Arrestயாழில் நடைபெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றுமொரு குழுவான டில்லு குழுவை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து இராணுவ சீருடை உட்பட வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.

கொக்குவில் தலையாளி பகுதியில் இக் குழு மறைந்திருந்த போது பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த குழுவினர் அங்கிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன் 60 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

அச் சம்பவம் தொடர்பாக புலன்விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிசாருக்கு அக் குழு தலையாளி பகுதியில் மறைந்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலையே அக் குழுவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இவர்கள் கைது செய்யப்பட்ட போது இவர்களிடம் இருந்து இராணுவ அதிகாரிகள் பயன்படுத்தும் 2 சீருடை உட்பட 3 வாள்கள், கத்திகள், 3 மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவரையும் நேற்று மல்லாகம் நீதவானின் முன் முற்படுத்தப்பட்ட போது நால்வர் சரீர பிணையில் விடுவிக்கப்படதுடன் ஏனைய ஐவரையும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த மாதம் 6ம் திகதி ஆவா என்னும் குழுவை சேர்ந்த 13 பேர் கைது செய்ப்பட்டு இருந்தனர். அது தொடர்பான வழக்கு விசாரணை யாழ். நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது

அதில் அக் குழுவை சேர்ந்த 10 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் ஆவா உட்பட ஏனைய மூவரும் எதிர்வரும் 13 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

முதலாவது திருமணத்தை மறைத்து திருட்டு திருமணம் செய்ய முயன்றவர் யாழில் கைது!!

Weddingஏற்கனவே திருமணம் முடித்து ஒரு குழந்தைக்குத் தந்தையான நபர் அதை மறைத்து இரண்டாவது தடவையாகத் திருமணம் செய்ய முற்பட்ட சமயம் தாலி கட்டுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னர் மாட்டிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

கடைசி நேரத்தில் உண்மை தெரிய வந்ததனால் திருமணம் இடையில் நிறுத்தப்பட்டது. மணமகனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் பெண் வீட்டுக்காரர்கள்.

இந்தச் சம்பவம் யாழ். நகரை அண்மித்து கே.கே.எஸ் வீதியில் சிவலிங்கப்புளியடியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

தான் ஏற்கனவே திருமணம் செய்த விடயத்தை மறைத்ததுடன் மட்டுமல்லாது 5 லட்சம் ரூபா பணத்தைச் சீதனமாகப் பெற்றுக்கொண்டே இரண்டாவது தடவையாக திருமணம் செய்ய முற்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட நபர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

சிவலிங்கப்புளியடியைச் சேர்ந்த பெண் வீட்டார் தமது மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் நோக்கில் மணமகனைத் தேடியுள்ளனர். கிளிநொச்சியில் இருந்து அவர்களுக்கு ஒரு சாதகக் குறிப்பு கிடைத்தது.

சாதகங்கள் பொருத்தமாக இருந்ததால் இருவருக்கும் திருமணம் செய்வதற்கு பெண் வீட்டார் தீர்மானித்தனர். பெண்வீட்டார் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டனர். திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு எல்லாம் அறிவிக்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை திருமணத்தை நடத்த நாள் குறிக்கப்பட்டது.

மணமகன் மணவறையில் வந்து அமர்ந்தார். தாலிகட்டுவதற்குச் சில நிமிடங்களே உள்ளன. பெண்ணை அழைத்து வரவேண்டியதுதான் மிச்சம். அதற்கிடையில் எல்லாம் தலைகீழாக மாறியது.

திருமணத்துக்காக வந்திருந்திருந்த பெண் தரப்பு உறவினர் ஒருவர் அப்போதுதான் மாப்பிள்ளையை உற்றுப் பார்த்தார். மணமகனை அவருக்கு முன்னரே தெரிந்திருந்தது. அவருக்கு ஏற்கனவே திருமணமும் முடிந்து ஒரு குழந்தையும் உள்ளது என்ற உண்மையை அவர் சபையில் போட்டுடைத்தார்.

உண்மையைக் கேட்டுக் கொதித்துப்போன பெண் வீட்டார் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவித்தனர். மணமகன் கோலத்திலிருந்த குடும்ஸ்தரை தமது வாகனத்தில் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதை உறுதிப்படுத்தினர். விவரங்களை கிளிநொச்சியில் இருந்த அவரது மனைவிக்கு அறிவித்தனர்.

தனது குழந்தையுடன் அவரும் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு வந்தார். அவர்களிடம் இருந்தும் சந்தேக நபருக்கு எதிராகப் பொலிஸார் முறைப்பாட்டைப் பதிவு செய்து கொண்டனர்.

தான் முன்னர் பதிவுத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்த அவர், ஒரு குழந்தைக்குத் தந்தை என்பதையும் ஒப்புக் கொண்டார் என்கின்றனர் பொலிஸார்.

இதற்கிடையே இதேபோன்றதொரு சம்பவம் அச்சுவேலியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது என்றும் தெரிய வருகிறது.

 

போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கான மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் : விமல் வீரவன்ஸ!!

Wimalபாரியளவிலான போதைப் பொருள் விற்பனையில் சம்பந்தப்பட்ட கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு, மரண தண்டனையை நிறைவேற்றுமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொம்பனித் தெருவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

நாட்டின் ஹெரோயின் போதைப் பொருள் அதிகரித்து விட்டதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். பாரியளவில் போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அந்த நபர்களுக்கான மரண தண்டனை நிறைவேற்றுமாறு அதிமேதகு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் ஏற்படும் மாற்றத்தை அறிந்து கொள்ள முடியும். மரண தண்டனையை நிறைவேற்றினால் சில நாடுகள் இலங்கையில் மரண தண்டனை அமுலில் இருப்பதாக விமர்சனங்களை முன்வைக்கும்.

மரண தண்டனை அமுல்படுத்தி போதைப் பொருள் விற்பனை தடுத்து நிறுத்த முடியாது போனால் வேறு எந்த வழியில் அதனை நிறுத்த முடியும்.

பெரிய மனிதர்களின் பிரச்சினைகளுக்காக அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், போதைப் பொருளை பயன்படுத்தும் நபர்கள் அவர்களுக்காக குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைக்கு செல்கின்றனர்.

சிறையில் இருக்கும் அவர்களுக்கு ரகசியமான முறையில் பந்துகளில் ஹெரோயினை அனுப்பி வைக்கின்றனர். அவர்கள் சிறையில் ஹெரோயினை பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.

இவர்களை சிறைக்கு அனுப்பி நபர்கள் சிறையில் உள்ளவர்களின் குடும்பங்களை பராமரித்து வருகின்றனர். சட்டப் புத்தகத்தில் இருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படாத காரணத்தினாலேயே இவ்வாறான சம்பவங்கள் நடக்கின்றன என விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

 

வவுனியா வடக்கில் இந்திய வீட்டுத்திட்டங்களை கட்டிமுடிப்பதற்கு பொலிசார் இடையூறு : சிவசக்தி ஆனந்தன்!!

Sivasakthy Ananthanயுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களைக் கூட கட்டமுடியாதவாறு அரசாங்கமும் பொலிசாரும் இணைந்து நெருக்குதல்களை கொடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

நெடுங்கேணி பிரதேசத்தில் இந்திய வீட்டுத் திட்ட பயனாளிகள் உடன் நேற்றைய தினம் மேற்கொண்ட சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

யுத்தத்தின் காரணமாக மக்களுடைய வீடுகள் அழிக்கப்பட்டு அவர்கள் கூடாரங்களுக்குள்ளேயே மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில் எமது மக்கள் வீடுகளை இழந்து நிர்க்கதியாக இருக்கும் நிலையினைப் பார்த்த இந்திய அரசாங்கம் எமது மக்களுக்கான ஒரு தொகுதி வீட்டுத் திட்டத்தை வழங்கியுள்ளது.

இவ் வீட்டுத் திட்டம் தொடர்பில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருகின்றன. அவ் முறைகேடுகளையும் தாண்டி எமது மக்களுக்கு கிடைக்கின்ற வீட்டுத் திட்டத்திற்கான நிதி தற்போதைய இலங்கையின் பொருளாதார நிலைக்கு போதியதாக இல்லை. இதனால் வீட்டுத் திட்டத்திற்கு தேவையான மரங்களை பணம் கொடுத்து வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வீட்டுத் திட்டத்திற்கு தேவையான மரங்களை தமது காணிகளில் இருந்து பெற்றுக் கொள்வதன் மூலம் செலவுகளைக் கட்டுப்படுத்தி வீட்டுத் திட்டத்தை முழுமை பெறச் செய்யலாம் எனக் கருதி வளவில் உள்ள மரங்களை வெட்டுவதற்காக பிரதேச செயலகம், வன இலாகா உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடமும் அனுமதி பெற்று அவற்றை வெட்டி தமது வீட்டுத் திட்டத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந் நிலையில் நேற்று முன்தினம் வவுனியா வடக்கு பிரதேசத்தில் உள்ள ஒலுமடு, கற்குளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள நான்கு மரக்காளைகளுக்குள் புகுந்த பொலிசார் அங்கு இந்திய வீட்டுத்திட்டத்திற்காக மக்களால் அனுமதியுடன் வெட்டப்பட்ட மரங்களை பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர்.

அத்துடன் அந்த மரப்பட்டறைகளையும் பூட்டியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் தமக்கு தேவையான வீட்டுத் திட்ட கதவுகளையும் தளபாடங்களையும் செய்வதற்கு வவுனியாவிற்கு அல்லது ஒட்டிசுட்டானுக்கு செல்ல வேண்டி ஏற்படும். இதனால் அவர்கள் வீட்டுத் திட்டத்தை நிறைவேற்ற மேலும் பல ஆயிரம் ரூபாய் பணங்களை செலுத்த வேண்டிவரும் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

நெடுங்கேணி பிரதேச மக்கள் தமது வீட்டில் இருந்த மரங்களினை அனுமதி பெற்று வெட்டி வீட்டு மரங்கள் அரிவதற்கும் கதவு, யன்னல் உள்ளிட்ட தளபாடங்கள் செய்வதற்கும் ஒப்படைத்திருந்த நிலையில் அதனை பொலிசார் அள்ளிச் சென்றுள்ளமை வீட்டுத் திட்ட பணிகளை பாதித்துள்ளதாக அப்பகுதி மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.

இன்று வன்னியில் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டு விறகுக்காகவும் அரிமரமரங்களும் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படும் நிலையில் அதனை வேடிக்கை பார்க்கும் அதிகாரிகளும் பொலிசாரும் மக்கள் முறையான அனுமதி பெற்று தமது தேவைகாக வெட்டும் மரங்களை அள்ளிச் செல்வதும் தடுப்பதும் வீட்டுத் திட்டத்தை குழப்பும் செயற்பாடுகளாக பார்க்க வேண்டியுள்ளது.

நெடுங்கேணி மட்டுமன்றி இவ்வாறான திட்டமிட்ட குழப்ப வேலைகள் வன்னியின் பல பகுதிகளிலும் இடம்பெற்று வருகிறது. வவுனியா வடக்கில் உள்ள குழவிசுட்டான், நைனாமடு, நொச்சிக்குளம் போன்ற பகுதிகளில் கள்ளமரம் வெட்டி ஏற்றப்பட்டு வருகிறது.

அது போல வவுனியாவின் பறநாட்டாங்கல், பம்பைமடு, போன்ற பகுதிகளிலும் விறகுக்காக சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இவற்றை தடுக்காத பொலிசார் மக்கள் தமது வீடு, வேலி என்பவற்றை அமைக்க வெட்டும் மரங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

குறைந்த பட்சம் ஒரு கோழிக்கூட்டை அமைக்க கூட ஒரு சிறு மரத்தடியைக் கூட பெறமுடியாதவாறு சாதாரண மக்களுக்கு பொலிசார் நெருக்குவாரங்களைக் கொடுத்து வருகின்ற அதே நேரம் கண்முண்னே போகும் கள்ளமரங்களை கொண்டு செல்லும் போது வேடிக்கை பார்பது எவ்வகையில் நியாயம் எனவும் தெரிவித்தார்.

 

இந்த நாட்டை சிறியதாக்கி விட்டேனோ என்று தோன்றுகிறது : ஜனாதிபதி!!

Mahindaஇந்த நாட்டை சிறியதாக்கி விட்டேனோ என்று தோன்றுகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச தெரிவித்துள்ளார்.

நான் பேரூந்தில் பயணம் செய்தேன். சொற்ப நேரத்தில் தங்காலைக்கு சென்றேன். அதிவேக பாதையில் வேகமாக செல்ல முடிகின்றது. நாடு சிறியதாகி விட்டதாக தோன்றுகின்றது,

நான் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நாடு சிறியதாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாந்தேட்டையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி காரியாலயமொன்றை அங்குரார்ப்பம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து அதிவேக நெடுங்சாலையில் பேரூந்து மூலம் ஜனாதிபதி பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா வளாகத்தினால் பல கற்கை நெறிகள் நிறுத்தப்பட்டமை தொடர்பில் வன்னி கல்வியிலாளர்கள் விசனம்!!

Vavuniyaவவுனியா வளாகத்தினால் பல கற்கை நெறிகள் நிறுத்தப்பட்டது தொடர்பில் வன்னி கல்வியிலாளர்கள் விசனம்

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினால் நடத்தப்பட்டு வந்த பல்வேறு கற்கை நெறிகள் நிறுத்தப்பட்டுள்ளமையினால் வன்னி கல்வியியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையி்ல் ..

வவுனியா வளாகத்தினால் பட்டமேற்படிப்புகள், ஆங்கில டிப்ளோமா, சமூக அபிவிருத்தியும் முகாமைத்துவமும் டிப்ளோமா ஆகிய பாடநெறிகள் உட்பட சில பாடநெறிகள் யுத்தகாலத்தில் நடத்தப்பட்டு வந்த நிலையில் இதன் மூலம் பல வன்னி பிராந்திய மாணவாகள் பயனடைந்திருந்தனர்.

எனினும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் கல்வி வாய்ப்புக்காக காத்திருக்கும் வன்னி பிராந்திய மாணவாகளின் கல்வி செயற்பாட்டை மழுங்கடிக்கும் வகையில் யாழ் பல்கலைக்கழகத்தினால் இப் பாடநெறிகளுக்கான சந்தர்ப்பங்கள் வவுனியா வளாகத்திற்கு வழங்கப்படாமையினால் உயர்தர பரீட்சையை சித்தியடைந்த மாணவர்கள் உட்பட பட்டதாரிகளும் தமது மேற்படிப்பை வவுனியா வளாகத்தில் மேற்கொள்ளமுடியாதுள்ளனர்.

குறிப்பாக ஆங்கல டிப்ளோமா கற்கை நெறியில் கற்ற பல மாணவர்கள் இன்று ஆசிரியர்களாக உள்ளனர். எனினும் தற்போது அவ் வாய்ப்பு நிறுத்தப்பட்டுள்ளதுடன் வேறு பாடநெறிகளும் நிறுத்தப்பட்டுள்ளமையினால் வன்னி பிராந்தியத்தின் கல்வி செயற்பாட்டின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளதாகவே எண்ணத்தோன்றுவதாகவும் அவர்கள் விசனம் தெரிவித்தனர்.

 

வவுனியாவில் வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு விளக்கமறியல்!!

Jailவவுனியா பம்பைமடு கிராமத்தில் வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு எதிர்வரும் 12 ஆம் திகதிவரை வவுனியா நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலா விசாவில் வருகை தந்த இந்தியரான எஸ்.குணசேகர் என்பவரே வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் (08.02) மதியம் பம்பைமடு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இவர கடந்த 10 நாட்களாக வவுனியாவில் தங்கியிருந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நேற்று காலை வவுனியா நீதிவான் முன்னிலையில் ஆயர்ப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

நெல்சன் மண்டேலாவின் காதிற்குள் மறைந்துள்ள முயலை நீக்குமாறு உத்தரவு!!

Mandelaதென் ஆபிரிக்க தலைவர் மறைந்த நெல்சன் மண்டேலாவின் வெண்கல சிலையின் காதுக்குள் அனுமதி பெறாமல் வடிவமைத்த முயல் சிற்பத்தை நீக்கும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

தென் ஆபிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா விடுதலைக்குப் பின் அந்நாட்டின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக பதவியேற்றார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின் 95வது வயதில் கடந்த மாதம் காலமானார். மண்டேலாவுக்கு அந்நாட்டு அரசு 30 அடி உயர வெண்கல சிலையை அமைத்துள்ளது. மண்டேலாவின் இறுதி சடங்கு முடிந்த அடுத்த நாள் இந்தச் சிலை திறக்கப்பட்டது.

இந்நிலையில் மண்டேலாவின் சிலையை வடித்த சிற்பிகள் சிறிய முயல் சிற்பத்தை சிலையின் காதில் வடிவமைத்திருந்தனர். இந்த முயல் தலைவரது சிலைக்கு அவமான சின்னமாக உள்ளதாக, அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதையடுத்து சிலையின் காதிற்குள் மறைவாக செதுக்கப்பட்ட, முயல் சிற்பத்தை நீக்கும்படி சிலை அமைத்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

போர்க் கைதியாக மாறிய நாய்!!

Dogகிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினரின் நாய் ஒன்றைத் தாங்கள் பிடித்து வைத்திருப்பதாக தாலிபான் அமைப்பினர் கூறுகிறார்கள்.

கறுப்புப் பட்டை அணிந்த ஒரு பழுப்பு நிற சிறிய நாய் ஒன்றின் புகைப்படம் ட்விட்டர் இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கர்னல் என்ற பெயர் கொண்ட இந்த நாயை தாங்கள் டிசம்பரில் ஒரு தாக்குதல் நடவடிக்கையின் போது பிடித்ததாக தாலிபான்கள் கூறுகிறார்கள்.

இந்த நாய் மீது ஒரு டோர்ச் விளக்கு, சிறிய கமரா, மற்றும் செய்கோள் உதவியுடன் அது இருக்கும் இடம் காட்டும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக தாலிபான்கள் கூறுகிறார்கள்.

இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் அமெரிக்க சிறப்புப் படையினர் பயன்படுத்தும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர்கள் இந்த இணையத்தளத்தில் பிரசுரித்திருக்கின்றனர்.

இந்த மாவட்டத்தில் மூத்த தாலிபான் தளபதி ஒருவர் இந்த நாயுடன் காணப்பட்டார் என்று சமீப வாரங்களில் செய்திகள் வந்ததாகவும் இந்த நாய் இப்போது போர்க் கைதியாக மாறிவிட்டது போல தோன்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட பெண்ணின் வயிறு வெடித்து தீ தோன்றிய அதிசயம்!!

Stomach Fireசீனத் தலைநகரான பீஜிங்கில் நடந்த விநோதமான சம்பவம் ஒன்றில் மது அருந்தியபின் அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்த போது அவரது வயிறு வெடித்தது.

58 வயதான அப்பெண் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதில் அவரின் கீழ்வயிற்றில் கடும் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது வயிறு வெடித்து வாயு வெளியாகி தீ பிழம்பு தோன்றியதாக கூறப்படுகிறது.

அவரது வயிற்றில் உள்ள குடல் முழுவதையும் அகற்ற முடிவு செய்துள்ளதாக நான்ஜிங் டிரம் டவர் வைத்தியசாலையைச் சேர்ந்த வாங் ஹாவ் என்ற மருத்துவர் தெரிவித்தார்.

அவரது வயிற்றில் இருந்த எதில் ஆல்கஹாலுக்கும், அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட மின் அறுவை கத்திக்கும் ஏற்பட்ட தொடர்பினால் இச்சம்பவம் நடந்ததாக ஹாவ் மேலும் கூறினார்.

 

பாடசாலை விடுதிக்குள் 15 வயது மாணவி மீது காதலன் பாலியல் வல்லுறவு!!

Abuseமாணவி ஒருவரை பாடசாலை விடுதிக்குள் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்த குற்றச்சாட்டில் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனமடுவ – தோனிகல பகுதியைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவியே வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மாணவி 10ம் தரத்தில் கல்வி பயின்று வருவதுடன் கைது செய்யப்பட்ட 18 வயதுடைய சந்தேகநபர் அதே பாடசாலையில் 12ம் தரத்தில் கல்வி பயில்வதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சில வாரங்களுக்கு முன்னரே இவ்விருவரிடையே காதல் மலர்ந்துள்ளதாக தெரியவருகிறது. தனியார் வகுப்புக்குச் செல்லும் வேளை இவ்விருவரும் பாடசாலை விடுதிக்குள் சென்றுள்ள போது இந்த வல்லுறவு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் பின் மாணவி தனது மாமாவிற்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதனையடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பின் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவி மீட்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார். மாணவி வைத்திய பரிசோதனைக்கென ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

தொழுநோயை ஒழிக்கப் போராடும் இலங்கை : ஆண்டுக்கு 2000 நோயாளிகள்!!

Tholu nooiஇலங்கையில் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை பல தரப்பிலும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு 2000 புதிய நோயாளிகள் என்ற அளவில் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்துள்ளது.

எனினும் ஏற்கனவே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்துவந்த இடங்களிலேயே தற்போதும் இந்த அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொழு நோய் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம் பிபிசி தமிழோசையிடம் கூறியது.

குறிப்பாக 2013ம் ஆண்டில் மேல்மாகாணத்திலேயே 44 வீதமான தொழு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது. அடுத்தபடியாக, 14 வீதமான நோயாளர்கள் கிழக்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு நாடெங்கிலும் பதிவான தொழு நோயாளர்களில் 177 பேர் சிறார்கள் என்று தொழு நோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் இயக்குநர் டாக்டர் நிலந்தி பெர்ணான்டோ தமிழோசையிடம் கூறினார்.

2020இல் ஆண்டுக்கு 1000 நோயாளிகளாக குறைப்பது அரசின் இலக்கு இந்த சிறார் நோயாளிகளில் கூடுதலானோர் வடக்கு மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். அங்கு 40 சிறார்கள் கடந்த ஆண்டு தொழு நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

1000க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் ஆண்டுதோறும் பதிவாகும் 16 நாடுகளில் இலங்கையும் ஒன்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கிறது.

இலங்கையில் தொழு நோய் ஒழிக்கப்பட்டதாக 1995ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் தொழு நோய் இலங்கையில் பெரும் சுகாதாரப் பிரச்சனையாக இனிமேலும் இருக்கமுடியாது என்ற அர்த்தத்திலேயே 1995ம் ஆண்டு அறிவிப்பு வந்தது என்றும் தொழு நோயை முழுமையாக ஒழிப்பதில் சிரமங்கள் இருப்பதாகவும் டாக்டர் நிலந்தி பெர்ணான்டோ கூறினார்.

2020ம் ஆண்டில் இலங்கையில் தொழு நோயை ஒழிப்பதற்கு அரசு இலக்கு வைத்துள்ள போதிலும், தொழு நோயை முற்றாக ஒழிப்பது என்பது சந்தேகத்துக்குரியதே.

இலங்கையில் புதிதாக பதிவாகும் தொழு நோயாளிகளின் எண்ணிக்கையை 2020ல் ஆண்டுக்கு 1000 என்ற அளவுக்குள் குறைத்துக்கொள்ளும் நோக்கத்துடனேயே தமது நிகழ்ச்சித்திட்டம் செயற்படுவதாகவும் சுகாதார அமைச்சின் தொழு நோய் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் இயக்குநர் கூறினார்.

மைகோபக்டீரியம் லெப்ரே (Mycobacterium leprae) என்ற பக்டீரியா மூலம் தொற்றும் தொழு நோயின் அறிகுறிகளை கண்டுபிடிக்க பல ஆண்டுகள் எடுக்கலாம் என்பதே இந்த நோயை ஒழிப்பதில் உள்ள பெரிய சவால் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளிவிபரங்களின்படி, ஆண்டுக்கு 1000க்கும் அதிகமான தொழு நோயாளர்கள் பதிவாகும் 16 நாடுகளில் இலங்கையும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

-BBC தமிழ்-

 

மன்னாரில் அரச- தனியார் போக்குவரத்து துறையினர்களுக்கிடையில் மோதல்!!

Mannarமன்னார் நகரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்து துறையில் அரச மற்றும் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இரு தரப்பினர்களுக்குமிடையில் திடீர்,திடீர் என முறுகல் நிலை ஏற்படுகின்றது.

அவ்வப்போது இவர்களுக்கிடையில் முறுகல் நிலை, கைகலப்பு, பொலிஸ் முறைப்பாடு, விசாரணை என்று விரிவடைந்து பின் போக்குவரத்து அமைச்சு வரை நீடித்து செல்கின்றது.

அண்மைக்காலமாக வடமாகாணத்தில் போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டு வரும் தனியார் பஸ்கள் தமக்குள்ளும் இலங்கை போக்குவரத்து சபையுடனும் மோதிக் கொள்ளுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் பஸ்கள் ஒன்றிணைந்த நேர சூசி அடிப்படையில் சேவையில் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றன.

இதனால் பயணிகள் பல்வேறு இடர்களுக்கும், தாமதமான பயணங்களுக்கும் முகம் கொடுப்பதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

 

கொழும்பில் 39 பிச்சைக்காரர்கள் கைது!!

beggersகொழும்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த 93 பிச்சைக்காரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாரின் விசேட நடவடிக்கையின்போது, கோட்டை, கொம்பனித் தெரு, விஹாரமாதெவி பூங்கா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர்கள் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.