அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் மதில் சுவரை தாண்டி குதிக்க முயன்ற மர்ம நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வொஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையின் மதில் சுவரின் ஓரமாக நேற்று நடந்து சென்ற ஒரு மர்ம மனிதன் மதில் சுவரின் மீது திடீரென்று ஏற தொடங்கினான்.
இதை தூரத்தில் இருந்து கவனித்து விட்ட உளவுத்துறை பொலிஸார் பாய்ந்தோடி சென்று உள்ளே குதிக்க விடாதவாறு அவனை சுற்றி வளைத்து பிடித்து கொண்டனர். அவனிடமிருந்த 2 பைகளையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
பைகளுக்குள் வெடிகுண்டு இருக்கும் என்ற அச்சத்தில் வெடிகுண்டு நிபுனர்களுக்கும் வாஷிங்டன் நகர பொலிஸாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து வெள்ளை மாளிகை சிறிது நேரத்திற்கு அவசரமாக மூடப்பட்டது.
குறித்த மர்ம மனிதன் எந்த ஊரை சேர்ந்தவன், பைகளுக்குள் என்ன வைத்திருந்தான் என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. தொடர்ந்து அவனிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலத்த காவல் கொண்ட ஒபாமாவின் வீட்டின் மதில் சுவரை மர்ம நபர் ஒருவன் தாண்டி குதிக்க முயன்ற சம்பவம் வொஷிங்டன் நகரவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆபாச வலைத்தளங்களுக்கான வாசலை கூகுள் சிறுவர்களுக்கு திறந்து விடுகிறது என்று சமூக ஆர்வலர் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இணையதளங்களுக்குள் செல்வதற்கான சாவிகளாக கூகுள், யாஹூ உள்ளிட்ட தேடு இயந்திரங்கள் உதவுகின்றன. இவற்றில் கூகுள் தேடு இயந்திரத்தில் ஏராளமான வசதிகள் இருப்பதால், உலகம் முழுவதிலும் உள்ள இணையதள பயன்பாட்டாளர்கள் கூகுள் வாயிலாகவே இதர இணைய தளங்களுக்குள் நுழைகின்றனர்.
அவ்வகையில் உலகளாவிய அளவில் இணையதளங்களுக்கான தேடு இயந்திரங்களில் ஜாம்பவானாக கூகுள் திகழ்ந்து வருகிறது.
இந்தியாவில் இந்நிறுவனத்துக்கான தலைமை அலுவலகம் ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் அமைந்துள்ளது.
இதன் அலுவலக மேலாளர் மீது உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி அருகேயுள்ள பட்டேல் நகர் பகுதியில் வசிக்கும் வினித் குமார் சிங் என்பவர் உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றையளித்துள்ளார்.
அதில், கூகுள் நிறுவனத்தின் பிளே ஸ்டோர் அப்ளிகேஷன் மூலம் அண்ட்ரொய்ட் ரக செல்போன்களை வைத்திருக்கும் சிறுவர், சிறுமியர் சுலபமாகவும், இலவசமாகவும் உடலுறவு காட்சிகள் அடங்கிய ஆபாச படங்களை பார்ப்பதற்கான தலைவாசலாக கூகுள் தேடு இயந்திரம் இருந்து வருகிறது.
இவற்றை பார்ப்பவர்கள் பருவ வயதை அடைந்தவர்களா இல்லையா என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சிறுவர், சிறுமியர் அனைவருக்கும் ஆபாச வலைத்தளங்களுக்கு செல்லும் வாசல் கதவை திறந்து விடும் கூகுள் நிறுவனம் மற்றும் அதன் இந்திய அலுவலக மேலாளர் மீது உடனடியாக உரிய நடவக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒலிப்பதிவு கூடத்துக்குள் அதிகாலை வேளையில் நுழைந்த சிறுவன் எல்லா பணிகளையும் நிறுத்தி விட்டு மூடும்படி ரகளை செய்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் தனது ‘ஃபேஸ் புக்’ பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளதாவது..
புதிய இசை அல்பம் தயாரிக்க வழக்கம் போல் எனது ஒலிப்பதிவு கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராத புதிய விருந்தாளியாக ஒரு சிறுவன் உள்ளே நுழைந்தான். நேராக என்னுடைய சவுண்ட் என்ஜினியரிடம் சென்று எல்லாவற்றையும் இழுத்து மூடுங்கள் என்று கம்பீரமாக உத்தரவிட்ட அவனது குரலை கேட்ட அனைவரும் திகைத்துப் போய் விட்டனர்.
குரல் வந்த திசையை பார்த்த நானும் ஒரு கணம் ஆச்சரியத்தில் பிரமித்து போய் நின்று விட்டேன். கட்டாயமாக ஏழு மணி நேரமாவது நான் உறங்கி ஓய்வெடுக்க வேண்டும் என உபதேசித்து, என்னை கையோடு அழைத்து செல்வதிலேயே குறியாக இருந்த என் மகன் அமீனை சமாதானம் செய்து அனுப்பி வைக்க 10 நிமிடங்களுக்கு மேல் நான் போராட வேண்டியதாகி விட்டது.
அதன் பிறகு எல்லாப் பணிகளையும் நிறுத்தி விட்டு நான் உறங்க செல்லும்படி ஆகி விட்டது. ஹும்.. காலம் தான் எவ்வளவு வேகமாக விரைந்தோடுகிறது. குழந்தைகள் என்றும் குழந்தைகளாகவே இருப்பதில்லை. எனது மகன் அமீன் இன்னும் குழந்தை இல்லை என்பதை நான் உணர்ந்த தருணம் இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி அரசு வைத்தியசாலைக்கு இன்று காலை ஒரு பெண் 2 குழந்தைகளுடன் பதறியபடி வந்தார். அந்த குழந்தைகள் மயக்க நிலையில் இருந்தன. உடனடியாக அந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. அந்த குழந்தைகளுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டபோது அந்த பெண் கொடுத்த தகவல் அதிர்ச்சி அடைய செய்தது.
2 குழந்தைகளும் மது போதையில் இருந்து மீள முடியாமல் தவித்தது சிகிச்சையின்போது அனைவரையும் கலங்கடித்தது. இதற்கு காரணம் குழந்தைகளின் தாய் பாத்திமா, அவரது கணவர் ஜலால் என்பவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதால் 2 குழந்தைகளுடன் திருச்சி நத்தர்ஷா பள்ளி வாசல் பகுதிகளில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தார்.
அவர்களுக்கு தங்க வீடு எதுவும் இல்லாததால் தெரு மற்றும் பிளாட்பாரங்களில் தங்கியிருந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு பாத்திமாவை தேடி வாலிபர் ஒருவர் வந்துள்ளார். அப்போது குழந்தைகள் இருவரும் தூங்காமல் விளையாடி கொண்டிருந்தனர்.
இதனால் அந்த வாலிபர் கொண்டு வந்த மதுவை வாங்கிய பாத்திமா, தனது குழந்தைகள் யாசிக் அன்சாரி (5), பரக்கத் நிஷா (2½) ஆகியோருக்கு கொடுத்துள்ளார். அதனை குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விட்டன.
அந்த நேரத்தில் வாலிபர் பாத்திமாவுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். காலையில் வழக்கம்போல் குழந்தைகள் விழிக்கவில்லை என்பதால் பதட்டம் அடைந்த பாத்திமா, அரசு வைத்தியசாலைக்கு அவர்களை தூக்கிக்கொண்டு வந்துள்ளார்.
இந்த தகவல் பொலிஸாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து பாத்திமாவிடம் விசாரணை நடத்த பொலிஸார் முடிவு செய்துள்ளனர். பாத்திமாவுடன் உல்லாசம் அனுபவித்த அந்த வாலிபர் அவரது தாயாரின் கள்ளக்காதலனாவும் இருந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் தரித்து நின்றுகொண்டிருந்த லொரியின் மீது மோதி உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வவுனியா குட்செற் வீதியைச் சேர்ந்த கந்தையா ரகுநாதன் (44) என்பவர், யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கையில், கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு சந்திப் பகுதியில் அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதி ஓரத்தில் தரித்து நின்றிருந்த லொரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. சம்பவத்தில் கந்தையா ரகுநாதன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கேரளாவில் பெற்ற மகளையே இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மங்கரை கிராமத்தை சேர்ந்த அப்துல் ரகுமானுக்கு (47) ஐந்து மகள்கள். இதில் இரண்டாவது மகள் நஸ்ரியா (16) பிளஸ் 2 படித்து வருகிறார்.
ஒருநாள் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் நஸ்ரியாவை தாக்கி வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் ரகுமான். இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் ரகுமான் மிரட்டியுள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்ல முடியாமல் நஸ்ரியா தவித்து வந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரகுமான் கடந்த 2 ஆண்டுகளாக மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதன் விளைவாக நஸ்ரியா கர்ப்பமானார். மருத்துவரிடம் அழைத்து சென்று கர்ப்பத்தையும் கலைத்துள்ளார் ரகுமான். கடந்த ஒரு மாதமாக ரகுமானின் கொடுமை எல்லை மீறியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு செல்போனில் ஆபாச படங்களை காட்டி நஸ்ரியாவை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார்.
ஆனால், நஸ்ரினா மறுக்கவே கொலை செய்து விடுவதாக மிரட்டி தனது ஆசையை தீர்த்துக் கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் பாலியல் தொந்தரவு அதிகரிக்கவே மனம் வெறுப்படைந்து நஸ்ரினா தனது தாயிடம் நடந்த விவரங்களை கூறி அழுது இருக்கிறார்.
இது குறித்து நஸ்ரியாவின் தாயார் பொலிஸில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ரகுமானை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நஸ்ரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பாலியல் கொடுமைக்கு உள்ளானதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து நஸ்ரியா அரசு மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட், இரண்டு 20- 20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
மிர்பூரில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 248 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் இலங்கை அணி முன்னிலை பெற்றது.
இந்நிலையில் கடந்த 4ம் திகதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தால், 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.
இப் போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடரின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டார்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு எத்தகைய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ அது போன்ற அதிகாரத்தைத்தான் இலங்கையிலும் எதிர்பார்க்கிறோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறினார்.
சென்னை அடையாறில் உள்ள இந்திய தெற்காசிய ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இடம்பெற்றது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ‘இலங்கையின் இன்றைய போக்கு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதன்போது அவர் உரையாற்றியதாவது..
இலங்கை ஐனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றதும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். இதற்காக 16 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அமைத்தார்.
அந்தக் குழு சாத்தியமான தீர்வு திட்டங்களையும் உருவாக்கியது. ஆனால் அதன்பிறகு ராஜபக்ஷ இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லை.
இலங்கையில் வட கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களுக்கு உரிமை அளிக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் 13வது சட்டத் திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டது. ஆனால் இலங்கை அரசாங்கம் அந்தச் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு மீள்குடியேற்றம் செல்ல முடியவில்லை. வளர்ச்சித் திட்டங்களுக்கு என்று சொல்லி தமிழர் பகுதியில் 500 ஏக்கர் நிலம் ராணுவத்துக்கு எடுக்கப்பட்டு அவர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. தமிழர் பகுதிகள் சிங்களமயமாக்கப்பட்டு வருகின்றன.
ஒருமித்த நாட்டுக்குள் எந்தவித குந்தகமும் இல்லாமல் விவசாயம், தொழில், வியாபாரத்தோடு நாங்கள் வாழ்ந்தால் போதும். இந்தியாவில் மாநிலங்களுக்கு என்ன அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளதோ அத்தகைய அதிகாரத்தைத்தான் இலங்கையில் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.
நாங்கள் தனி ஈழத்தைக் கேட்கவில்லை. இந்த விஷயத்தில் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கிறோம் என சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் சர்ச்சைக்குரிய யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிடம் அதிக அதிகாரங்களை வழங்குவதாக இந்த யோசனை அமைந்திருந்தது.
இந்த யோசனை மீதான வாக்களிப்பில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கவில்லை. 10 உறுப்பினர்களை கொண்ட ஐசிசி சம்மேளன கூட்டத்தில் குறித்த யோசனைக்கு ஆதரவாக 8 வாக்குகள் அளிக்கப்பட்டது.
8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் கால்தடங்கள் ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள Norfolk என்ற நகரத்தில் நடந்த ஆய்வில் 1.2 மில்லியன் ஆண்டுகள் முதல் 8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் காலடி தடங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என பல்வேறு வடிவங்களில் இந்த கால்தடங்கள் கிடைத்துள்ளன. அதை வைத்து பார்க்கும்போது, அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மனிதன் 1.7 மீட்டர் உயரம் வரை இருந்துள்ளான் என தெரிய வருகிறது.
ஆய்வாளர்கள் அந்த கால்தடங்களை புகைபடங்கள் எடுத்து அதன்மூலம் ஒரு 3D படத்தை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் பல கால்தடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகள் சாப்பிடும் முக்கிய உணவு வகைகளில் பாலுக்கு அடுத்தபடியாக பிஸ்கெட் முக்கிய இடத்தை பிடிக்கிறது.
மேலும் பெரியவர்களும் சாப்பாட்டுக்கு மாற்று உணவாக பிஸ்கெட்டுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். பிஸ்கெட் சாப்பிட்டால் உடல் நலத்துக்கு நல்லது. குழந்தைகள் உயரமாக வளருவார்கள் என விளம்பரப்படுத்தப்படுகிறது.
அது உண்மை இல்லை. பிஸ்கெட்டில் உடல் நலத்துக்கான கேடுகள் மறைந்து இருப்பதாக புதிய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கான்சர்ட் என்ற நிறுவனம் சமீபத்தில் 34 பிரபல நிறுவனங்களின் பிஸ்கெட்டுகள் மற்றும் 25 நிறுவனங்கள் தயாரிக்கும் ஊறுகாய் போன்றவற்றை சேகரித்து ஆய்வு நடத்தியது.
அவற்றில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் விதிகளின்படி பிஸ்கெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதா, தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ள கொழுப்பு, புரோட்டீன், சர்க்கரை மற்றும் அமில அளவு சரியான அளவில் உள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டது.
தமிழ்நாடு, ஆந்திரபிர தேசம், கேரளா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடந்த 7 மாதங்களாக பிஸ்கெட்டுகள் பரிசோதனை செய்யப்பட்டன.
இந்த ஆய்வு குறித்து கான்சர்ட் நிறுவனத்தின் இயக்குனர் சந்தனராஜன் கூறியதாவது..
கிழங்குமாவு, கிரீம், உப்பு, பால் மற்றும் பேக்கரியில் இருந்து தயாரிக்கப்படும் பிஸ்கெட்டுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இவற்றில் பெரும்பாலான அளவு சர்க்கரை உள்ளது. மேலும் அவை பல மாதங்கள் கெட்டுப் போகாமல் இருக்க உடலுக்கு தீமை விளைவிக்கும் ரசாயன கலவைகள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனால் பேக்கரிகளில் தயாரிக்கப்படும் பிஸ்கெட்டுகளில் ரசாயன கலவை குறைவாக உள்ளது. எனவே, பிஸ்கெட்டுகள் சாப்பிடுவதன் மூலம் உடலில் சக்தி, தெம்பு ஏற்படலாம்.
மாறாக உடலில் சத்துகள் உருவாகாது. பெரும்பாலான பிஸ்கெட்டுகளில் நார்ச்சத்து, தேன், கால்சியம் போன்றவை இல்லை. ஆனால், பிஸ்கெட் உணவுக்கு மாற்றானது. சுறுசுறுப்பு கொடுக்க கூடியது. பால், தேன் கலந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்கின்றன.
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுகின்றனர். புகையிலை பொருட்களை பயன் படுத்துவதால் மட்டும் புற்று நோய் வராது. நாம் சாப்பிடும் உணவு பொருட்களாலும் 30 சதவீதம் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது என்றார்.
எலுமிச்சை, மாங்காய், காய்கறி கலவை மற்றும் மீன் ஊறுகாய் வகைகள் பரிசோதனை செய்யப்பட்டன. பெரும்பாலான ஊறுகாய்களில் சோடியம் அதிக அளவில் உள்ளது. பென்ஷோயிக் அமிலமும் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளது.
இனிப்பு வகை ஊறுகாய்களில் அதிக அளவில் சர்க்கரை உள்ளது. இது நுகர்வோருக்கு இருதய நோய்களையும், நீரிழிவையும் ஏற்படுத்தும். அதிக உப்பு சத்து சேர்ப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இந்த தகவலை இந்திய நுகர்வோர் சங்க தலைவர் ராஜன் தெரிவித்துள்ளார்.
ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் கடுமையாக அமல் படுத்தப்படுகிறது. கட்டுக்கடங்காத மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருந்தாலும் அதையும் மீறி ஒரு சிலர் மறைமுகமாக ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தையை பெறுகின்றனர்.
இந்த நிலையில் சீனாவின் புகழ்பெற்ற சினிமா இயக்குனர் ஷங் யிமோயுக்கு 6 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. எனவே அவர் மீது வழக்கு தொடர்பட்டது.
அவரிடம் 9 குழுவினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை 6 மாதங்களாக நடந்தன.
முடிவில் அவருக்கு 1.2 மில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இவரது வருமானத்தை கணக்கில் கொண்டு மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது அஜித்தின் வீரம். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் வீரம். இப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகி வெற்றியடைந்து வசூலிலும் சாதனை படைத்தது.
இதில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார்.
தற்போது வீரம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அஜித் நடித்த கதாபாத்திரத்தில் பொலிவுட் ஸ்டார் சல்மான் கான் நடிக்கிறார். இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை பிரித்திஷ் நந்தி வாங்கியுள்ளார்.
தமன்னா நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார். இவர்கள் மூவருடன் இணைந்து சிறுத்தை சிவா மும்பையில் உள்ள மெகபூப் ஸ்டூடியோவில் திரைக்கதையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசனை செய்துள்ளார்.
அளவையின் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பில் பல ஆண்டுகளாக இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்த தங்க ஆபரண நிறுவை உபகரணங்களை பயன்படுத்தி வந்த கொழும்பு, செட்டியார் வீதி பிரபல தங்க வியாபாரிகள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த தேடுதல் வேட்டையின் போதே இந்நாட்டில் தடை செய்யப்பட்டிருந்த தங்க ஆபரண நிறுவை உபகரணங்களை பயன்படுத்திய 11 தங்க நகைக்கடை உரிமையாளர்கள் கையும்மெய்யுமாகப் பிடிபட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, எதிர்வரும் பெப்ரவரி 26ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
2009 ம் ஆண்டில் தமிழகம் சென்னையில் வைத்து கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் என்ற சந்தேகிக்கப்பட்ட 13 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையர்கள் 12 பேர் உட்பட்ட 25 பேர் செய்மதி தொலைபேசிகள் உட்பட்ட தொலைத்தொடர்பு உபகரணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இதில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 13 பேர் நேற்று சென்னை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் தொடர்பில் காவல்துறையினர் சமர்ப்பித்த ஆவணங்களில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
அத்துடன் சந்தேகநபர்கள் தொடர்பில் சந்தேகம் கொள்வதற்கு காரணங்கள் இல்லை என்ற காரணத்தினால் அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளியாக இருந்த வேளையில் கைதான நபரொருவருக்கு 24 வருடங்களின் பின்னதாக திருகோணமலை மேல்நீதிமன்றம் மரணதண்டனை தீர்ப்பளித்துள்ளது.
திருகோணமலை, ஆலங்கேணி பகுதியை சேர்ந்தவரான தங்கராசா 38 வயதுடைய சிவகந்தராசா என்பவருக்கே மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1990 ம் ஆண்டில் திருகோணமலை கடற்பரப்பில் ஆறு பொதுமக்களினை விடுதலைப் புலிகளுடன் இணைந்து வெட்டிக்கொலை செய்ததாக இவர் மீது நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
சீனன் குடா கடற்படை தளத்தினை அண்மித்த பகுதியில் அவர் சிறைப்பிடிக்கப்பட்ட வேளை அவரது வயது வெறும் 14 மட்டுமேயாகும். சுமார் 14 வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்த அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அத்துடன் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் ஒப்பமிட பணிக்கப்பட்டுமிருந்தார்.
இந்நிலையில் வழக்கு விசாரணையின் போதே அவருக்கு மரணதண்டனை தீர்ப்பளித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் அவரை மீண்டும் சிறையில் அடைத்துள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் திருமணம் செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.