இசைஞானி இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் ஹொலிவுட் படத்துக்கு இசையமைக்கிறார்கள். இந்தப் படத்துக்கு கரி இன் லவ் (CurryInLove) என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பி.வாசு இயக்கவிருக்கிறார்.
நடிகர் விஜய் – சோனம் கபூரை ஜோடியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. கரி இன் லவ் படத்தின் கதை திரைக்கதையை அமெரிக்க தமிழரான ராஜ் திருச்செல்வன் எழுதியுள்ளார். இளையராஜா ஏற்கெனவே ரஜினி நடித்த ஹொலிவுட் படமான ப்ளட் ஸ்டோனுக்கு இசையமைத்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் அவர் பாடல்கள் பாடி இருந்தாலும், அப்பாவும் மகனும் இணைந்து ஒரு படத்துக்கு இசையமைப்பது இதுவே முதல் முறை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் ஜூன் 27 வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடந்த சனிக்கிழமை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
8 பேரையும் ஜூன் 27-வரை அனுராதபுரம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கெனவே இம்மாதம் 5-ஆம் திகதி 4 படகுகளில் சென்ற 24 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைத் தவிர 6-ஆம் திகதி 5 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 24 மீனவர்களை இம்மாதம் 20-ஆம் திகதியும், மறுநாள் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களை இம்மாதம் 19-ஆம் திகதியும் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டு இம்மாதம் 27-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும் ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் பல ரசாயன பொருட்கள் கலந்திருக்கும்.
மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும் வேறுபடும். ஒரு வேளை மாற்றி பயன்படுத்திவிட்டால், அதனால் தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படும்.
ஆகவே எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல் சருமத்தை அழகாக்கவும் உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள்,கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது. இதனை எந்த நேரத்திலும் வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம்.
முகத்திற்கு எவ்வாறு ஆவி பிடிக்கலாம்?
சூடான நீரை வைத்து, ஒரு போர்வைக்குள் நீங்கள் உட்கார்ந்து, அந்த நீரின் முன் முகத்தை வைத்து, அதிலிருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி ஒரு 30 நிமிடம் உட்கார வேண்டும்.
ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.
கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து பின் தேய்த்தால் மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.
ஆவி பிடிப்பதால் முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால் சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால் துளைகளில் சேரும் அழுக்குகள் ஏற்படுத்தும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.
மற்றொரு நன்மை என்னவென்றால் முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான் முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால் அவை அந்த அழுக்குகளை நீக்கி பளிச்சென்று இளமைத் தோற்றதை தரும்.
முகப்பரு இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து பின்னர் ஐஸ் கட்டிகளால் முகத்தை தேய்த்தால் முகப்பரு உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் முகப்பருவை நன்றாக குறைத்துவிடலாம்.
ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக பொலிவோடு இருக்கும்.
ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன் அழகாக மாற்றுங்கள்.
இலங்கை மொரகஹகந்த நீர்பப்பாசன வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன பிரஜை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். அறியப்படாத கிழங்கு வகை ஒன்றை உட்கொண்டமையின் காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கிழங்கு வகையை உட்கொண்ட மேலும் இரு சீன பிரஜைகள் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த சீன பிரஜை 45 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நாவுல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
ஐசிசி சம்பியன்ஸ் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதி லீக் போட்டியில் அவுஸ்திரேலிய, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.
அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள இரு அணிகளுக்கும் இது முக்கிய போட்டியாகும். இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறும். எனவே இன்றைய போட்டி மிக விறுவிறுப்பாக அமையும்.
பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் இன்றைய போட்டி இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும்.
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து தமிழகம் சென்ற இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று சென்னையில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளது.
கணவர் மேசன் தொழில் பார்த்து சம்பாதித்த பணத்தையும் நகைகளையும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற மோகத்தினால் பறிகொடுத்து கதறியழும் ஒரு குடும்பப் பெண்ணுக்கு நடந்த கொடுமைகளை பாருங்கள்!
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்காங்கேணி கிராமத்தில் இரு மதக்குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சுங்காங்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை சுங்காங்கேணி மெதடிஸ் திருச்சபையின் ஒலிபெருக்கியில் ஜெப வழிபாடும் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து திருச்சபையில் வழிபாடு இடம்பெற்றுக் கொண்டிருந்த ஒலிபெருக்கி நிறுத்துமாறு விநாயகர் ஆலயத்திலிருந்து சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலில் முடிவடைந்துள்ளது. இம் மோதலில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மெதடிஸ்த திருச்சபை வழிபாட்டு ஆலயம் இன்று அப்பகுதி பொது மக்கள் சிலரால் உடைக்கப்பட்டு பொருடக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கொண்டலடி வைரவர் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் வலதுகை துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தேவானந்தன் பிரசன்னா என்ற 19 வயது இளைஞரே இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நேற்று அதிகாலை 1 :00 மணியளவில் இந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள தலைமறைவாகியிருப்பதாகவும் அவர்களை தேடும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேற்படி கோயிலடியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இசைக்கச்சேரியின் போது நடனம் ஆடிக்கொண்டிருந்த இளைஞர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கைகலப்பாகி வாள் வெட்டில் முடிந்துள்ளது.
வாள் வெட்டுக்கு இலக்கான குறித்த இளைஞரை சுற்றிவளைத்த சுமார் 15 பேர் கொண்ட குழு அவரை சரமாரியாக தாக்கியதுடன் வாளினாலும் வெட்டியுள்ளனர். இதன்போது வலது கை துண்டிக்கப்பட்டதுடன் தலையிலும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனயைடுத்து காயமடைந்த இளைஞர் உடனடியாக யாழ் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
உக்ரைன் நாட்டில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்த ஒரு தம்பதியின் எட்டு வயது மகள் மூன்று அடிக்கு தனது கூந்தலை வளர்த்து சாதனை புரிந்திருக்கின்றார்.
எட்டே வயதான Bohdana Stotska என்ற சிறுமி, நாலரை அடி உயரமே உள்ளார். ஆனால் அவரது தலைமுடி மூன்றடி உயரத்தில் இருக்கின்றது. தனது நான்காவது வயதில் இருந்து அவர் தலைமுடி வெட்டுவதை நிறுத்திவிட்டார்.
தலைமுடியை தினமும் ஷம்பு போட்டு கழுவி உலர வைப்பதற்கு நான்கு மணி நேரம் செலவிடுவதாக அவரது தாயார் தெரிவித்தார்.
வங்கி அதிகாரியாக பணியாற்றும் Olga, தனது மகளின் ஆசைக்கு குறுக்கே நிற்பதில்லை என்றும் அவளது விருப்பப்படி மகளின் கூந்தலை பராமரித்து வருவதற்கு உதவி செய்வதாகவும் கூறினார்.
இராக்கில் எட்டு ஊர்களில் வரிசையாக கார் குண்டுகள் வெடித்தத்தில் குறைந்தது முப்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒப்பீட்டளவில் பாதுகாப்பான இடமாக இருந்துவந்த நாட்டின் தென்பகுதி இந்த குண்டுத் தாக்குதல்களில் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது.
சாதாரணப் பொதுமக்களை இலக்குவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. நசிரியாவிலும் பஸ்ராவிலும் ஜனசந்தடி மிக்க சந்தைப் பகுதியில் குண்டுகள் வெடித்துள்ளன.
நாட்டின் வடக்கே – அதிலும் குறிப்பாக மோசுல், சலாஹுத்தீன் போன்ற ஊர்களில் நடந்த குண்டுத் தாக்குதல்களில் பாதுகாப்புப் படைகள் இலக்க்வைக்கப்பட்டிருந்தனர்.
தலைநகர் பாக்தாத்துக்கு அருகில் உள்ள குட் என்ற ஊரில்தான் மிக அதிகமானோரை பலிகொண்ட தாக்குதல் நடந்ததாக பொலிசார் கூறுகின்றனர்.
குட் நகரில் கட்டிடத் தொழிலாளிகளை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷியா மக்கள் செறிந்து வாழும் இடங்கள்தான் இந்த குண்டுத் தாக்குதல்களில் அதிக சேதங்களைச் சந்தித்திருக்கின்றன என்றாலும் சுனி மக்கள் வாழும் இடங்களிலும் பாதிப்பு இருப்பதாக பாக்தாத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
மறைந்த இயக்குநர், நடிகர் மணிவண்ணனின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல மணிவண்ணனின் குருவான இயக்குநர் பாரதிராஜாவும் இன்று நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மணிவண்ணன் நேற்று தனது வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், தமிழார்வலர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பல தரப்பட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார்.
அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ஆயிரக்கணக்கானோர் மணிவண்ணனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை உடல் தகனம் நடைபெற்றது. இதற்காக மணிவண்ணனின் உடல் அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக போரூர் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.
மணிவண்ணனின் குருவான இயக்குநர் பாரதிராஜா இன்று நேரில் வந்து மணிவண்ணனுக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல மணிவண்ணனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கவுண்டமணியும் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
பொதுவாக அதிக பயம் அல்லது அமைதி இன்மையால் பதற்றம் ஏற்படும். பதற்றம் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும் ஆனால் இத்தகைய நிமிடங்கள் நரக வேதனையாகும். இதனை விளக்க வார்த்தைகளை இல்லை. கீழ்கண்ட அறிகுறிகளால் இதனை கண்டறியலாம்..
1. அதிகமான இதயத் துடிப்பு
2. வியர்த்து கொட்டுதல்
3. நடுக்கம்
4. மூச்சு விட சிரமம்
5. மாரடைப்பு
6. நெஞ்சு வலி
7. மயக்கம் அல்லது தலை சுற்றுதல்
இவையாவும் அதீத பயம் மற்றும் அமைதியின்மையால் ஏற்படுவது. இவை சொல்லாமல் கொள்ளாமால் வருவதாகும். ஆனால் பாதி நேரங்களில் ஏதாவது சில நிகழ்வுகளால் ஏற்படும் முன் பதற்றம் ஏற்படும். அதனால் இதனை சமாளிக்க எந்நேரமும் நாம் தயாராக இருக்க வேண்டும். இந்த பதற்றத்தை குறைக்க சில யோசனைகள் இதோ உங்களுக்காக..
சிறிது நேரம்..
வேலை நேரங்களில் இருந்து சில மணி நேரம் சுற்றியுள்ள எதிர்மறைகளை பற்றி யோசிக்க பயன்படுத்தவும். ஏனென்றால் எதிர்மறைகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் நாம் அதனுடன் ஒத்துப் போவது போல் ஆகிவிடும். அதனால் அவைகளை தவிர்க்க வேண்டும்.
எதுவும் நடக்கலாம்..
தன்னம்பிக்கையுள்ளவராக நேர்மறை சிந்தனையுடன் இருப்பது நல்லது தான். தவறாக ஏதுனும் நடந்தால் அதை எதிர்கொள்ள ஒருவர் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதற்காக அதை பற்றி 24 மணி நேரமும் கவலை பட்டு கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. எடுத்த முடிவின் விளைவு நல்ல படியாக அமையாததால் இந்த கவனம் தேவைப்படுகிறது.
பொறுமை..
பதற்றத்தை குறைக்கும் மற்றொரு வழி அனைத்தையும் குறித்து வைப்பது. ஒரு டயரி , பென்சில் அல்லது பேனாவை எப்போதும் உடன் வைத்திருங்கள். அதில் பதற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை திகதி மற்றும் நேரத்துடன் குறிப்பிடுங்கள். எழுதுவதற்கு மன ஒருமித்தல் அவசியம். இது மன அழுத்தத்தின் அளவை குறைக்கும்.
உணவு பழக்கம்..
காலை உணவு வளமாகவும் அதிகமாகவும் இருக்க வேண்டும் என்பது ஒத்துக்கொள்ளப்பட்ட விதி. மதிய உணவிற்கு முன் சிறிதளவு உணவுகளை கொறிக்கவும் செய்யலாம். இது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதனால் மனதும் அமைதி பெரும்.
நித்திரை ..
தினசரி 8-9 மணி நேரம் நித்திரை அவசியமான ஒன்றாகும். அதில் குறைபாடு ஏற்பட்டால் பதற்றம் வரும் வாய்ப்புகள் அதிகம்.
யோகா..
பதற்றத்தால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். யோகாசனம் ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். எந்த ஒரு சாதனமும் இன்றி பயிற்சி பெரும் எளிய வகை உடற்பயிற்சியாகும். மிதமான அளவு தசையை ஓய்வு பெறச் செய்யும் வழிமுறைகள் அல்லது ஆழமான மூச்சுப் பயிற்சி உங்கள் மனதுக்கு அமைதியை தரும். இவைகளை பின்பற்றினால் மன அழுத்தத்தில் இருந்து பாதிக்கப்படாமல் தப்பிக்கலாம். இவை அன்றைய சூழலில் ஏற்படும் பதற்றத்தை தணிக்க உதவி புரிந்தாலும், பயிற்சிகளை தினசரி செய்தால் இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
பொழுதுபோக்கு..
பொழுதுபோக்கில் ஈடுபட்டால் பதற்றத்தால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்கலாம். அந்த பொழுபோக்கு இசையை கேட்டு ரசிப்பதாகட்டும், அல்லது புத்தகம் படிப்பதாகட்டும் அல்லது பயணத்தில் ஈடுபடுவதாகட்டும், எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாக ஈடுபடவும்.
மணிவண்ணன் எண்பதுகளில் தொடங்கி இருபது ஆண்டுகளுக்கும் மேல் 49 படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர். ஆனால் இன்றைய தலைமுறை அவரை வெறும் நடிகராக மட்டுமே அறிந்திருக்கிறது. அந்த நினைப்பை உடைக்க 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கத்தில் வருகிறது அமைதிப் படை 2. படம் பார்த்த அத்தனை பேருமே மணிவண்ணனைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் நையாண்டிக்கு புதிய இலக்கணமாக இந்தப் படம் வரவிருக்கிறது.
50வது படம் ..
மணிவண்ணனின் பொன்விழாப் படம் என்ற முத்திரையோடு வருகிறது அமைதிப் படை 2. இந்தப் படத்தில் சத்யராஜ், சீமான், ரகுவண்ணனுடன், மணிவண்ணன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அமைதிப்படை முதல் பாகத்தில் வில்லன் சத்யராஜ் இறந்துவிடுவதாக படம் முடிக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்தப் பாத்திரம் உயிரோடு இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதுதான் இந்த இரண்டாம் பாகம்.
கோபுரங்கள் சாய்வதில்லை..
50 படங்களை இயக்கிய மணிவண்ணனின் முதல் படம் கோபுரங்கள் சாய்வதில்லை. அதற்கு முன் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் போன்ற படங்களில் பணியாற்றியவர். பாக்யராஜுக்குப் பிறகு, பாரதிராஜாவுக்கு பிடித்த வசனகர்த்தாவாக மணிவண்ணன் திகழ்ந்தார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதாவை கார்த்திக் வர்ணிக்கும் ஒரு காட்சியில் மணிவண்ணன் வசனங்கள் அத்தனை அழகாக அமைந்திருக்கும்.
வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன்..
மணிவண்ணனின் வில்லன்கள் அலாதியானவர்கள். வில்லன்களில் இத்தனை வித்தியாசம் காட்ட முடியுமா என்பதை இவர் படங்களில்தான் பார்க்க முடியும். அதில் ஒன்று வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன். அன்றைக்கு இந்தப் படம் பெரிதாக போகாவிட்டாலும், பார்த்து ரசிக்கும் படமாக அமைந்தது.
12 நாட்களில் நூறாவது நாள்..
மணிவண்ணனை சிகரத்தில் வைத்த படம் என்றால் அது நூறாவது நாள். மிகச் சொற்ப செலவில், மிகக் குறைந்த நாட்களில்… 12 நாட்களில் இந்தப் படத்தை மணிவண்ணன் எடுத்திருந்தார். இதை அன்றைக்கு இளையராஜாவிடம் சொன்னபோது அவரால் நம்பவே முடியவில்லையாம். என்னய்யா சொல்ற12 நாளில் ஒரு படமா சரி படத்தைக் காட்டு என்றாராம்.
நானும் ஏதாவது செய்யணுமே..
இளையராஜா படத்தைப் பார்த்ததும் பிரமாதம், அசத்தியிருக்கேய்யா இதுக்கு நானும் ஏதாவது செய்யணுமே என்றவர், இதுவரை எந்தப் படத்துக்கும் போடாத அளவு மிகச் சிறப்பாக பின்னணி இசை அமைத்துக் கொடுத்தாராம். படத்தில் மூன்று பாடல்கள்தான். இந்தப் படத்துல அதிகமா பாட்டு வச்சா அந்த க்ரிப் குறைஞ்சிடும். இதுவே போதும். பின்னணி இசைதான் இந்தப் படத்துக்கு ஹைலைட்டா இருக்கணும் என்றாராம் இளையராஜா.
விடிஞ்சா கல்யாணம்..
பாலைவன ரோஜாக்கள் இவர் இயக்கத்தில் ஒரே நேரத்தில் வெளியான படங்கள் பாலைவன ரோஜாக்கள் மற்றும் விடிஞ்சா கல்யாணம். இரண்டுமே நூறு நாட்களுக்கு மேல் ஓடியவை. இரண்டிலுமே சத்யராஜ்தான் ஹீரோ. இதையெல்லாம் இன்றைக்கு நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
இனி ஒரு சுதந்திரம்..
மணிவண்ணன் கிட்டத்தட்ட தனது லட்சியப் படம் என்று அறிவித்து எடுத்தது இனி ஒரு சுதந்திரம். சிவகுமார்தான் ஹீரோ. மிகச் சிறப்பாக வந்திருந்தது. ஆனால் பாராட்டுகள் குவிந்த அளவுக்கு வசூல் குவியவில்லை. அந்த வருத்தம் இன்னும் அவருக்கு உள்ளது.
வாழ்க்கைச் சக்கரம்..
இனி ஒரு சுதந்திரத்துக்குப் பிறகு மணிவண்ணன் இயக்கிய தீர்த்தக் கரையினிலே, ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் நன்றாக ஓடின. ஆனால் அதற்கடுத்த சில படங்கள் அவருக்கு தோல்வியைத் தந்தன. அப்போதுதான் திருப்பூர் மணிக்காக வாழ்க்கைச் சக்கரம் என்ற படத்தை எடுத்தார். மணிவண்ணன், சத்யராஜ், கவுண்டமணி மூவருக்குமே அந்தப் படம் நல்ல பிரேக் ஆக அமைந்தது.
அமைதிப்படை..
மணிவண்ணன் மிகப் பெரிய வெற்றிப் படம் என்றால் அது அமைதிப்படைதான். தரம், வசூல் என அனைத்திலுமே அந்தப் படம் சிறப்பாக அமைந்துவிட்டது. இந்தப் படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்தனர். அங்கும் வெற்றியைக் குவித்தது அமைதிப்படை.
ஆண்டான் அடிமை..
மணிவண்ணனின் 49வது படம் இது. அதன் பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், இயக்குவதிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டார். ஆனால் நடிகராக அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. 2002ல் மணிவண்ணன் இல்லாத தமிழ்ப் படமே இல்லை எனும் அளவுக்கு எல்லாப் படங்களிலும் காமெடியன், வில்லன், குணச்சித்திர வேடங்கள் என கலக்கினார்.
அதிக வெற்றிப் படங்கள்..
ஒரு இயக்குநராக அதிக வெற்றிப் படங்கள் தந்த பெருமை மணிவண்ணனுக்கு உண்டு. அதேபோல ராம நாராயணனுக்குப் பிறகு ஒரு ஆண்டில் அதிக படங்களை இயக்கியவரும் மணிவண்ணன்தான்.
இளையராஜாவுடன்..
மணிவண்ணன் இயக்கியுள்ள 50 படங்களில் முக்கால்வாசி இளையராஜா இசையமைத்தவைதான். இவர் படங்களில் பாடல்கள் பெரும்பாலும் சிறப்பாக இருக்கும். இங்கேயும் ஒரு கங்கை, முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, தீர்த்தக் கரையினிலே, அம்பிகை நேரில் வந்தால் போன்ற படங்களில் பாடல்கள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும்.
அடுத்து..
அமைதிப் படை 2-க்குப் பிறகு, தாலாட்டு மச்சி தாலாட்டு என்ற படத்தை இயக்கும் மணிவண்ணன், அதைத் தொடர்ந்து இரண்டு புதிய படங்களை இயக்கும் திட்டத்தில் இருந்தார் . அனைத்துக்கும் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர் . இதில் ஒன்று அவர் ஏற்கெனவே இயக்கி வெற்றி கண்ட படத்தின் இரண்டாம் பாகம். ஆனால் அறிவிப்பை பின்னர் வெளியிடலாம் என ரகசியமாக வைத்திருந்தார்.
ரஜனியுடன்..
சூப்பர் ஸ்டார் ரஜனியின் கொடிபறக்குது படத்தில்தான் முதன் முதலாக நடித்தார் மணிவண்ணன். அதன் பிறகு, ரஜனியின் நெருங்கிய நண்பராகிவிட்டார். ரஜனி நடித்த பிரமாண்ட வெற்றிப் படங்களில் நிச்சயம் மணிவண்ணன் இருப்பார். படையப்பா, சிவாஜி போன்ற படங்களில் ரஜனியே விரும்பி அழைத்து அந்த வேடங்களைச் செய்யச் சொன்னாராம். அதுமட்டுமல்ல, மணிவண்ணனின் நய்யாண்டி நடிப்புக்கு தான் மிகப் பெரிய ரசிகர் என்று மேடையிலேயே அறிவித்தார் ரஜனி.
அமெரிக்காவில் தெற்கு கரோலினா அருகேயுள்ள சுமேடர் நகரை சேர்ந்த லெஸி என்ற 9 வயது சிறுமி அங்குள்ள ஒரு தனியார் பாடசாலையில் படித்து வருகிறாள்.
பிறப்பிலேயே இருதய கோளாறினால் பாதிக்கப்பட்ட இவளால் ஒழுங்காகப் பாடசாலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் இவளது பாடங்கள் பாதிக்காமல் இருக்க அவரது பெற்றோர் புதுவிதமான ரோபோ ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர்.
தற்போது அந்த ரோபோ தான் லெஸிக்கு பதிலாக பபாடசாலைக்கு சென்று பாடங்களை படித்து வருகிறது. “வி.ஜி.ஓ.” என அழைக்கப்படும் இந்த ரோபோ 4 அடி உயரமும் 18 பவுண்ட் எடையும் கொண்டது.
இதனது முகத்தில் வீடியோ ஸ்கிரீன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவில் கேமரா மற்றும் இண்டர்நெட் வசதியும் உள்ளது. பாடசாலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் லெஸி ரோபோவை வீட்டில் இருந்த படியே கம்ப்யூட்டரில் மவுஸ் மூலம் இயக்குகிறாள்.
வகுப்பறைக்கு செல்லும் ரோபோவின் வீடியோ திரை வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரில் தெரிகிறது. அதே வேளையில், வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை படம் பிடிக்கும் ரோபோ அதை வீடியோவில் பதிவு செய்து வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரில் ஒளிபரப்பும்.
அதன் மூலம் லெஸி தனது வகுப்பில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மற்றும் உடன் படிக்கும் மாணவர்களையும் பார்த்து தெரிந்து கொள்கிறாள்.இதை வைத்து வீட்டில் இருந்த படியே பாடம் படித்து பரீட்சை எழுதி வருகிறாள்.
இந்த ரோபோவுக்கு ஆடை உடுத்தி லெஸி அழகு பார்க்கிறாள். அதை தன்னுடனேயே தூங்க வைக்கிறாள். அதற்கு “இளவரசி வி.ஜி.ஓ.” என அன்புடன் பெயரிட்டும் இருக்கிறாள்.
இந்திய கிரிக்கெட் கேப்டன் டோணியை விட விளம்பர நிறுவனங்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரராக விராத் கோலி உருவெடுத்துள்ளார். இவரை வைத்து விளம்பரங்களை ஒளிபரப்பத்தான் இப்போது விளம்பர நிறுவனங்கள் அதிகம் விரும்புகின்றனவாம். சூதாட்ட சர்ச்சைகள் ஒருபக்கம் இருந்தாலும் கிரிக்கெட் வீரர்களை வைத்து விளம்பரம் தேடும் விளம்பர நிறுவனங்களும் அதிகரித்தபடிதான் உள்ளது.
சமீப காலம் வரை டோணிதான் விளம்பரதாரர்களால் அதிகம் விரும்பப்பட்ட பிரபலமாக இருந்தார். ஆனால் தற்போது மெதுவாக அவரை விஞ்ச ஆரம்பித்துள்ளார் விராத் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக வர்ணிக்கப்படுபவர் விராத் கோலி இப்படிச் சொல்லிச் சொல்லியே அவரைப் பிரபலமாக்கி விட்டனர். இதனால் விளம்பரதாரர்களும் கோலி பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விராத் கோலி இடம் பெற்ற டிவி விளம்பரங்களின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.
தற்போது விராத் கோலி 13 விளம்பரங்கள் மூலம் பிரபலப்படுத்தி வருகிறாராம்.விளம்பரங்கள் மூலம் கோலிக்குக் கிடைக்கும் வருவாயும் உயர்ந்தவண்ணம் உள்ளதாம். அதாவது தற்போது அவர் ரூ. 40 கோடி வரை விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கிறாராம்.
கடந்தஆண்டு வரை ஒரு நிருவனத்திற்கு அவர் விளம்பரதாரராக இருக்க வருடாந்திர கட்டணமாக 3 கோடி வாங்கினார். தற்போது இது 6 கோடியாக உயர்ந்துள்ளது.டோணியை விட இளையவர் என்பதும், டோணிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் என்பதும் கோலிக்கு கூடுதல் தகுதிகளாக அமைந்துள்ளதாம்.