தமிழ் அரசியல் கைதிகளை வடக்கு, கிழக்கிற்கு மாற்றக் கோரிக்கை..

jail

இலங்கையின் கொழும்புச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

இந்த தமிழ் அரசியல் கைதிகளில் பெரும்பாலானோர் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் அவர்களைப் பார்வையிடுவதற்காக அவர்களது உறவினர்கள் கொழும்பு வர பல சிரமங்களை எதிர்கொள்வதுடன் சிறைச்சாலை அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கும் அவர்களது குடும்பத்தினர் ஆளாவதாக அந்த அமைப்பின் தலைவரான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

அத்துடன் இந்தக் கைதிகளின் குடும்பத்தினர் பெரும் பொருளாதாரச் சிக்கல்களையும் எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ள அவர் ஆகவே அந்த கைதிகளை அவர்களது குடும்பத்தினர் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறைகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.இது தொடர்பாக தாம் பல தடவைகள் நீதிமன்றங்களைக் கேட்டிருக்கின்ற போதிலும் அவை தம்மை இது தொடர்பில் சிறைச்சாலை நிர்வாகங்களிடம் பேசுமாறு கூறியிருப்பதாகக் கூறியுள்ள நாமல் ராஜபக்ஷ அவர்கள், ஆனால் சிறைச்சாலை அதிகாரிகள் இந்தக் கோரிக்கைக்கு இதுவரை செவிசாய்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஆகவே இது தொடர்பாக அரசாங்கம் ஒரு கொள்கை முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கை அதிகாரிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதற்கு கடும் எதிர்ப்பு..

kunoor

பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பை மீறி இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் வெலிங்டன் இராணுவ முகாம் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் இராணுவ முகாம், இராணுவ பயிற்சி மையம் மற்றும் 27 கிராமங்கள் உள்ளன. 7 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இராணுவ பயிற்சி மையத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இங்கு பயிற்சி பெற கடந்த 27ம் திகதி இலங்கையை சேர்ந்த விங் கமாண்டர் எம்.எஸ்.பந்தாரா தசநாயக, மேஜர் சி.எஸ்.ஹரிஷ் சந்திர ஹெட்டியராச்சி ஆகியோர் வந்தனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்க முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இராணுவ முகாமை முற்றுகையிட முயன்ற பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைதாகினர். இந்நிலையில், முகாமிலுள்ள இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கான 10 மாத பயிற்சி திட்டமிட்டபடி துவங்கி றடைபெற்று வருகிறது. இதற்கு இடையூறு ஏற்படாத வகையில் வெலிங்டன் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மினி பஸ், அரசு பஸ், உள்ளூர் வாகனங்கள் மட்டும் தணிக்கைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றன. வெளி மாவட்ட வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா – (வீடியோ இணைப்பு)

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடந்த பொங்கல் விழா இன்று (15.06.2013) அன்று மிகச் சிறப்பாக நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது.

பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 10 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதி வழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடைந்தன.

இரவு நிகழ்ச்சிகளாக “சுண்ணாகம் ஷ்ருதிலயா” இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி,கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள் என்பனவும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகள் அனைத்தையும் எமது வவுனியா நெற் இணையத்தளம் நேரடியாக ஒளிபரப்பு செய்தது.

வீடியோ பதிவுகளை பார்ப்பதற்கு இங்கே அழுத்துங்கள் http://www.vavuniyanet.com/?page_id=1025

 

படங்கள்

n4 n3 n2 n1 20130615_132922 20130615_123539 20130615_123121 20130615_132144 20130615_122717

மாரடைப்பால் உயிரிழந்தார் மணிவண்ணன் – அதிர்ச்சியில் திரை உலகம்

mani
பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் காலமானார். சென்னை நெசபாக்கத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட அவரது இல்லத்திலேயே உயிர் பிரிந்தது.

மணிவண்ணன் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவர் 400க்கு மேல்திரைப்படங்களில் நடித்துள்ள தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரின் இயக்கத்தில் 45 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன.

மேலும் இவர் நடிகர் சத்தியராஜின் கல்லூரி நண்பர் ஆவார், நடிகர் சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார். மணிவண்ணன் சிறந்த இயக்குனர் மட்டுமின்றி மிகப்பெரிய நடிகராகவும் திகழ்ந்தவர்.

மேலும் ஈழ மக்களிற்காக தொடர்ந்து குரல்கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இறப்பு திரை உலகினருக்கு மட்டுமன்றி ஈழ மக்களுக்கும் பேரிழப்பாகும்..

 

 

வடக்கில் வன்முறைச் சம்பவங்கள் இல்லாத காரணத்தினால் தேர்தல்களை சுயாதீனமாக நடத்த முடியும் – தேர்தல் ஆணையாளர்..

 

வடக்கில் வன்முறைச் சம்பவங்கள் இல்லாத காரணத்தினால் தேர்தல்களை சுயாதீனமாக நடாத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

வடக்கு தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் கோரப்பட்டதன் பின்னரே வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவது குறித்து தீர்மானிக்க முடியும். வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

யார் என்ன சொன்னாலும் வட மாகாணசபைத் தேர்தலை சுயாதீனமானதும், நீதியானதுமான முறையில் நடாத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

கொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் ஆலயத்தை அகற்றும் உத்தரவு அதிர்ச்சியளிக்கின்றது!- டி.எம். சுவாமிநாதன் எம்.பி.

 

கொள்ளுப்பிட்டி ஸ்ரீ பூமாரி அம்மன் ஆலயத்தை உடனடியாக அப்புறப்படுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டமை பேரதிர்ச்சி தரும் விடயமாகும் என்று கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் முகாமைத்துவ தர்ம கர்த்தாவும் எம்.பி.யுமான டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஓர் ஆலயம் அமைக்கப்படுவதற்கு முன்னர் அத்திபாரம் இடப்படும். இதற்கு பிள்ளையார், வைரவர் வழிபாடு செய்யப்படுகிறது. ஆலயம் அமைக்கப்பட்டதன் பின்னர் சிவாகம முறைக்கமைய விக்கிரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று பூசைகள் ஆரம்பமாகின்றன.

பூசைகள் நடைபெறும் ஆலயங்களில் திருத்தங்கள் அல்லது வேறு காரணங்களுக்காக ஆலயத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாயின் ஆகம முறைக்கு அமைய விக்கிரங்கள் பாலஸ்தாபனம் செய்யப்பட்ட பால ஆலயத்தில் (சிறு ஆலயம்) வைக்கப்பட்டு பூசைகள் செய்வதே முறையானது. நாம் விரும்பும் வேளையில் உடனே விக்கிரகத்தை எடுப்பது தேவ குற்றம் தேவ சாபம் ஏற்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

கொழும்பு, கொள்ளுப்பிட்டி தர்மாலோக மாவத்தையில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக பூசை நடைபெற்று வரும் தொழிலாளர்களுக்கே அமைக்கப்பட்ட தேனி பூமாரி அம்மன் ஆலயத்தை உடனே அப்புறப்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டுள்ளமையைக் கேள்வியுற்று அதிர்ச்சியும் கவலையும் கொண்டேன்.

நகர அபிவிருத்தி அதிகார சபையில் உள்ளவர்கள் எம்மைப் போல் மனிதர்கள் அவர்களுக்கும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. அந்த வழிபாட்டுத் தலங்களை உடனே எடு எனக் கூற முடியுமா? கடவுள் இல்லையா? இந்துக்கோவில் என்பதால் உடனே எடு எனக் கூறுவது இந்து தர்மத்திற்கு முரணானது.

ஏனைய மதங்களுக்கும் அப்படியே நகர அபிவிருத்தி புனர்நிர்மாணம் எம் எல்லோருக்கும் தேவையே. நாம் எல்லோருமே கொழும்பு நகர வாசிகளே. ஆனால் வணக்கத் தலங்கள் உடனே அப்புறப்படுத்து எனக் கூற முடியாது.

1930ம் ஆண்டு முதல் பூஜிக்கப்பட்ட புனித பூமி காலா காலத்திற்கு அமைய மாற்றங்கள் ஏற்படலாம். அதற்கும் விதி பிரமாணங்கள் உண்டு. எனவே ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு அப்புறப்படுத்தப்படுவதாயின் சிவாகம முறைக்கமைய கீழ்வரும் முறைகளை அனுசரிக்க வேண்டும்.

புதிய ஆலயம் அமைக்க உகந்த உரிய இடத்தை தெரிவு செய்ய வேண்டும்.

அதிலே ஆலய அமைப்பு முறைகளுக்கு அமைய ஆலயம் அமைக்கப்பட வேண்டும்.

தற்பொழுது உள்ள ஆலயம் பாலஸ்தாபனஞ் செய்யப்பட்டு பாலஸ்தாபன கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும்.

புதிய ஆலயம் அமைக்கப்பட்ட பின்னர் பால விக்கிரங்கள் ஆகம முறைகளுக்கு அமைய பிரதிஷ்டை செய்யப்பட்டு மஹா கும்பாபிஷேகம் செய்து வழிபடுவதே சிவாகம முறையாகும்.

இது எல்லா ஆலயங்களுக்கும் பொருத்தமானது நினைத்த உடனே இந்த பொம்மை (விக்கிரகம்) எடுக்கப்படல் வேண்டும் என எந்த மனிதனாலும் கூற முடியாது. நாம் தேவ ஆசியை வேண்டி வழிபடுபவர்கள்.

எமது பரம்பரை வளர வேண்டுமென வழிபாடுகளை மேற்கொண்டு வருபவர்கள் எமக்குத் தேவசாபம் வேண்டவே வேண்டாம். எல்லோரும் வாழ வேண்டும் நாட்டு மக்கள் அனைவரும் அருள் பெற்ற நல்ல வாழ்வை பெற வேண்டும் என்பதையே நாம் கூறுகின்றோம்.

கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய முகாமைத் தர்மகர்த்தாவும் நாட்டுச் சுதந்திரத்திற்குத் தம்மையே அர்ப்பணித்த சேர்.பொன்னம்பலம் இராமநாதன் சேர். பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் உறவினரும் ஆகிய நான் கொள்ளுப்பிட்டி ஸ்ரீ பூமாரி அம்மன் ஆலயம் உரிய முறையில் அமைக்கப்படல் வேண்டும் என அறிவுரை கூறுகின்றேன்.

 

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா இருப்பது இலங்கை அரசுக்கு அச்சுறுத்தல்- கோத்தபாய ராஜபக்ச

ஈழத் தமிழர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு அளித்து வருவது இலங்கை அரசை கலக்கமடையச் செய்துள்ளது என பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள கொத்தலாவல இராணுவ பல்கலைக் கழகத்தில் நேற்று முன்தினம் கோத்தபாய உரையாற்றிய போது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இருப்பது, இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணமே தமிழக அரசியலில் இலங்கை தமிழர் விவகாரம் மிக முக்கியமான அம்சமாக இருப்பதுதான். குறிப்பாக தேர்தல் சமயத்தில் இலங்கை விவகாரம் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது.

சமீபகாலமாக இலங்கை அரசை சர்வதேச தளத்தில் எதிர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு நெருக்குதல் அளித்து வருகிறார். இது இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.

இலங்கையில் வாழும் சில தமிழர்கள் தங்களுக்குள்ள நெருக்கத்தின் மூலம் தமிழகம் வழியாக வெளிநாடுகளில் வாழும் தமிழர் ஆதரவு அமைப்புகள் மூலம் தனித்தமிழ் ஈழம் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

 

இதனால் கடல் மார்க்கமாக இலங்கைக்கு ஆயுதம் கடத்தப்படும் அச்சுறுத்தலும் உள்ளது. இலங்கையில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கத்துக்கு குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கும் ஆதரவு மூலம் கடல்மார்க்கமாக ஆயுதம் கடத்துவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. இது இலங்கை அரசுக்குப் பெரும் அச்சுறுத்தலாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் நுழைவதைத் தடுப்பதில் தீவிரம் காட்டுவதன் நோக்கமே, இத்தகையோர் மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதே என்றார்.

இந்திய எல்லையில் சீனாவின் அச்சுறுத்தல் இலங்கைக்கு மறைமுக ஆபத்தாக அமையும் என்று குறிப்பிட்டார். மிகப் பெரும் பொருளாதார வல்லரசாக சீனா உருவாகி வருகிறது. அதன் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்காவின் தயவை இந்தியா நாட வேண்டியிருக்கும்.அத்தகைய நிலையில் இப்பிராந்தியத்தில் உள்ள இலங்கைக்கு அது பெரும் பாதிப்பாக அமையும் என்று குறிப்பிட்டார்.

மாலைதீவில் தளம் அமைக்க நடக்கும் முயற்சி இப்பிராந்தியத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2028ம் ஆண்டளவில் சீனாவின் சனத்தொகையை விஞ்சப் போகும் இந்தியா..

population

2028ஆம் ஆண்டளவில் சீனாவை விஞ்சி உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என ஐநா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

அந்த சமயத்தில் இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளின் சனத்தொகையும் 145 கோடியாக இருக்கும் என்று அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

போகப்போக சீனாவின் சனத்தொகை மெதுவாக குறைந்துகொண்டு வரும் ஆனால் இந்தியாவின் சனத்தொகையானது 2050ஆம் ஆண்டுவரை அதிகரித்துக்கொண்டே போகும் என இந்த அறிக்கை கணித்துள்ளது.

தற்போது 700 கோடியாகவுள்ள உலகின் சனத்தொகை 2050ஆம் ஆண்டளவில் 940 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பெரும்பான்மையான சனத்தொகை அதிகரிப்புக்கு வளர்ந்துவரும் நாடுகளே காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே கணிக்கப்பட்ட சனத்தொகை அதிகரிப்புகளை அதிகமான பெருக்கம் ஏற்படும் என்று தற்போது கணிக்கப்படுகிறது.

 

மீனவர்களுக்கு கட்டாயக் காப்புறுதி – இல்லையேல் கடலுக்குள் செல்ல முடியாது..

fisherman

இலங்கையின் தென்பகுதி மற்றும் தென் மேற்குக் கரையோரங்களில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை, கடற்காற்று காரணமாக 48 மீனவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் காப்புறுதி செய்யாமல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இது கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை, சீரற்ற காலநிலையின்போது காணாமல் போயிருப்பவர்களில் 17 பேரைக் கண்டு பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இந்தப் பின்னணியில் வடபகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையில் மீனவர்கள் காப்புறுதி செய்திருப்பதாகவும், இது தென்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதாகவும் மன்னார் கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் பெனடிக்ற் சகாயநாதன் மிராண்டா கூறுகின்றார்.

அண்மையில் வீசிய கடும் காற்று மற்றும் சீரற்ற கடல் நிலை காரணமாக பெரும் எண்ணிக்கையான மீனவர்கள் உயிரிழந்திருப்பதையடுத்தே, மீனவர்கள் கட்டாயம் காப்புறுதி செய்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்திருப்பதாகவும் மிராண்டா தெரிவித்தார்.

காப்புறுதி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து கடற்தொழில் திணைக்களம் இந்த காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. வருடாந்தம் 750 ரூபா மற்றும் 1500 ரூபா என இரண்டு வகையாகப் பணம் செலுத்த வேண்டிய வகையில் வைத்திய தேவைக்கான கொடுப்பனவு, உயிரிழப்புக்கான கொடுப்பனவு என்ற வகையில் இந்தக் காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது எனவும் மன்னார் கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் மிராண்டா கூறினார்.

இருந்த போதிலும் யுத்த மோதல்கள் தீவிரமாக இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழ்வாதார முயற்சிகள் இன்னும் சீராக இடம்பெறாத காரணத்தினால், வறுமை காரணமாக மீனவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே காப்புறுதி செய்திருகின்றார்கள்.

வறுமை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மீனவர்கள் தமது பகுதியில் காப்புறுதி செய்து கொள்ள முடியாதிருப்பதாக முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளரான சிவராசா கிருபாகரன் கூறுகின்றார்.

-BBC தமிழ்-

 

கோட்டபாய ராஜபக்ஷ்வை கொல்ல முயன்ற 6 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்.

குண்டொன்றை வெடிக்க வைத்து பாதுகாப்புச்செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ்வை கொலை செய்ய முயன்ற சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் 6 பேரையும் கொழும்பு சிரேஷ்ட நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்ணிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கை பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவின் உரிய பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சந்தேகநபர்களை நீதவான் ஜூன் 21 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறுவோம்- குமார் சங்கக்கார..

Kumar Sangakkara

சம்பியன்ஸ் A குழுவில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்று இலங்கை அணியின் அனுபவ வீரர் குமார் சங்கக்கார கூறியுள்ளார்.நேற்று முன்தினம் இரவு இங்கிலாந்துடன் நடந்த ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது .

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அரை இறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இது குறித்து சங்கக்கார கூறியதாவது: நான் விளையாடிய மிகச் சிறந்த இன்னிங்சில் இதுவும் ஒன்று. இந்த சதம் அணியின் வெற்றிக்கும், அரை இறுதி வாய்ப்பை தக்கவைக்கவும் உதவியதில் கூடுதல் மகிழ்ச்சி. ஜெயவர்தன சிறப்பாக ஒத்துழைத்தார். கடைசி கட்டத்தில் குலசேகர அதிரடியாக விளையாடி எனக்கு நெருக்கடி இல்லாமல் பார்த்துக் கொண்டார். ஸ்வான்,ப்ரோட் ஓவர்களில் அடித்து ஆடியது ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக்கியது.

அடுத்து நடப்பு சம்பியன் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள கடைசி ஆட்டத்தில் கவனம் செலுத்துவோம். அந்த போட்டியில் வென்று அரை இறுதிக்கு முன்னேற முடியும் என நம்புகிறேன். இவ்வாறு சங்கக்கரா கூறியுள்ளார்.

எதிர்வரும் 17ம் திகதி இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி லீக் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அரைஇறுதி போட்டிக்கு தகுதிபெறும்.

~கேசா~

 

அரையிறுதியில் தென் ஆப்ரிக் அணி..

south africa

மேற்கிந்திய தீவு , தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது . நேற்று நடைபெற்ற இப்போட்டி, கனமழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது. தலா 31 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என நடுவர்கள் அறிவித்தனர். நாணய சுழற்சியில் வென்றமேற்கிந்திய தீவு அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது .

தென் ஆப்ரிக்க அணி 31 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 230 ஓட்டங்களை எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணி 26.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் டக்ளஸ் லூயிஸ் முறைப்படி ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து புள்ளிகள் அடிப்படையில் தென் ஆப்ரிக்கா அணி அரை இறுதிக்கு முன்னேறியது.

ஏற்கனவே B குழுவிலிருந்து இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் அணி ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

~கேசா~

 

கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்!!

பொதுவாக கடல் உயிரினங்களான மீன்- நண்டு போன்றவற்றை பார்த்தவுடன் நம்மில் பலருக்கு நாக்கில் எச்சில் ஊரும். ஆனால் இங்கு தட்டில் படைக்கப்பட்டிருப்பவை உணவுகள் அல்ல. ஓவியங்கள் என்றால் நம்ப முடிகிறதா?

உயிரோட்டமான ஓவியங்கள் மனித கண்களை ஏமாற்றுவதில் முக்கியமானவை. சிங்கப்பூரை சேர்ந்த கெங்லே என்ற கலைஞர் இதுபோன்ற ஓவியங்களி வரைவதையே தனது பொழுதுபோக்காக வைத்துள்ளார். அவரின் ஓவியங்களில் சில உங்களின் பார்வைக்கு!!

 

a1 art-2 art-3 art-4 art-5 art-6 art-7

கின்னஸ் புத்தகத்தில் இலங்கை மூதாட்டியின் பெயர்..

guiness

இலங்கையைச் சேர்ந்த சேர்ந்த 116 வயது மூதாட்டியை உலகின் மிகவும் வயதான மனிதராக கின்னஸ் சாதனைத் பதிவேடு அறிவித்துள்ளது.

உலகின் வயதான மனிதராக அறிவிக்கப்பட்டிருந்த ஜப்பானைச் சேர்ந்த, ஜிரோமோன் கிமுரா (Jiroemon Kimura) கடந்த 12ம் திகதி மரணமானதையடுத்தே, இலங்கையைச் சேர்ந்த அப்புலானந்த உக்கு உலகின் மூத்த மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அப்புலாந்த உக்கு என்ற இந்த மூதாட்டி கேகாலை மாவட்டத்தில் இல.82 ஏ, புலத்கமுவ, மாவனல்ல என்ற இடத்தில் வசித்து வருகிறார்.இவர் 1897ம் ஆண்டு ஓகஸ்ட் 22ம் திகதி பிறந்தவர். இவரது தேசிய அடையாள அட்டை இலக்கம் – 977960037V ஆகும்.

இவருக்கு எட்டு பிள்ளைகளும் 80இற்கும் அதிகமான பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவரையடுத்து, உலகின் அடுத்த வயதான நபராக ஜப்பானின் மிசாகா ஒகாவா ( Misaka Okawa) இருந்து வருகிறார், அவர் 1898இல் பிறந்தவர்.

 

ஆலய உடைப்பை கண்டித்து யாழில் பேரணி செல்ல பொலிஸார் அனுமதி மறுப்பு

hindu

யாழில் இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டித்து நடைபெற இருந்த பேரணி பொலிஸ் அனுமதி மறுக்கப்பட்டதால் கைவிடப்பட்டுள்ளது. விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினால் இன்று காலை 9.30 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட இருந்த பேரணிக்கு பொலிஸார் அனுமதி மறுத்ததால் அப்பேரணி கைவிடப்பட்டது.

அண்மைக்காலமாக நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல்கள் ஆலயங்களில் உள்ள பெறுமதி மிக்க பொருட்கள் சூறையாடப்பட்டமை என்பவற்றை கண்டித்தே இப் பேரணி நடைபெற இருந்தது.

பேரணியை கைவிட்ட விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் யாழ். அரச அதிபர் ஊடாக ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை கையளிக்க யாழ் செயலகத்திற்கு சென்றிருந்தனர். அங்கு அரச அதிபரோ மேலதிக உதவி அரசாங்க அதிபரோ இல்லாத காரணத்தால் அங்கிருந்த பதவி நிலை அதிகாரி ஒருவரிடம் மகஜரை கையளித்து சென்றுள்ளனர்.

 

 

நண்பன் மனதில் காதல் உள்ளது என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது??

friendship

காதல் என்ற உணர்வு எப்போது வரும் எப்படி வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் வரா வேண்டிய நேரத்தில் மட்டும் சரியாக வந்துவிடும். அவ்வாறு காதல் வந்து விட்டால் சிலர் கண்மூடித்தனமாக காதலிப்பார்கள். அதிலும் பெண்களை விட ஆண்கள் காதலில் அதிகம் மூழ்கி விடுவார்கள். பெரும்பாலான ஆண்கள் காதலை வெளிப்படையாக சொல்லிக் கொள்ளமாட்டார்கள்.

அதற்கு பதிலாக உணர வைப்பார்கள். அதில் ஆண்கள் கில்லாடிகள். அதிலும் நட்புறவில் ஆரம்பித்து தான் காதலானது மலர ஆரம்பிக்கும். அவ்வாறு நட்பில் இருக்கும் போது காதல் வந்தால் சில ஆண்கள் வாயில் சொல்வதை விட, உணர்ச்சியின் மூலம் வெளிப்படுத்துவார்கள்.

குறிப்பாக இந்த மாதிரியான செயலில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் காதலில் சிக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறு சிக்கிக் கொள்வதை விட அதனை வெளியே சொல்லாமல் அதற்கான செய்கையை மட்டும் வெளிப்படுத்துவார்கள். அந்த மாதிரி உங்கள் நண்பன் காதலை வைத்துக் கொண்டு பழகுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?படித்து பாருங்கள்.

* ஆண்கள், நண்பர்களாக இருக்கும் போது செய்யும் போனை விட காதல் வந்த பின்னர் அடிக்கடி போன் செய்வார்கள்.

* நட்பாக பழகும் போது வெளியே அழைத்தால் வராமல் காரணம் சொல்லும் ஆண்கள் காதல் வந்துவிட்டால் ஒரு நாள் கூட பிரிந்திருக்க முடியாத நிலையில் விடுமுறை நாட்களில் தேடி வந்து வெளியே செல்லலாம் என்று அழைப்பார்கள்.

* பிறந்த நாள் வந்தால் எதிர்பார்க்காத வகையில் நீண்ட நாள் ஆசையாக மனதில் வைத்திருக்கும் பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்விப்பார்கள்.

* அடிக்கடி கோபப்படுவார்கள். உதாரணமாக, ஒருநாள் அவர்களை பார்க்க முடியாதவாறு வந்தாலோ அல்லது வெளியே எங்கேனும் செல்வதாக இருந்தாலோ அதனை அவர்களிடம் சொல்லாமல் சென்றால் கோபத்துடன் அக்கறையாக பேசுவார்கள்.

* அடிக்கடி வீட்டிற்கு வந்து குடும்பத்தினரிடம் அக்கறையாக பேசி அனைவரது மனதிலும் நல்ல இடத்தைப் பிடிக்க முயற்சிப்பார்கள். அதிலும் உங்களால் செய்ய முடியாதவற்றையும் அவர்கள் கஷ்டப்பட்டு செய்து முடிப்பார்கள்.

* எப்போதும் “உன்னை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்” என்று சொல்வார்கள். அதிலும் அப்போது தான் அவர்களை விட்டு வந்திருப்பீர்கள். அந்த நேரம் இதைச் சொல்வார்கள். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்று சொல்வார்கள். இதுப் போன்று பல உள்ளன.

உங்கள் நண்பன் இதுப் போல் நடக்கிறார்களா? அப்படியெனில் அவர்களிடம் வெளிப்படையாக கேளுங்கள்.

நட்பிலும் இத்தகைய கோபம், அக்கறை, பரிசு போன்றவை இருக்கும். ஆனால் காதல் இருந்தால்,எமக்கே நம்ப முடியாதவாறு சிறிய விஷயங்களுக்கு கூட உணர்ச்சிவசப் பட்டு பேசுவார்கள். எனவே வித்தியாசத்தைப் புரிந்து கொண்டு நடப்பது நல்லது.