சென்னையில் இருந்து வந்த இலங்கையர் உடல் முழுதும் தங்கம்!

gold

இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கை வந்த இலங்கையர் ஒருவரின் உடலில் 32 தங்கத் தகடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டு சுங்கப் பிரிவினர் அவரை கைது செய்தனர்.

அதன்பின் சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட போது உடம்பில் 32 தங்கத் தகடுகள் இருப்பது தெரியவந்ததாக சுங்க வருமான பிரிவு பணிப்பாளர் தெரிவித்தார்.

வத்தளை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

 

எண்ணெய் வழியும் முகம் உங்கள் அழகை கெடுக்கின்றதா?

oily-skin

எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? வெயில் உங்கள் எண்ணெய்ப் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுக்கிறதா? எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க சில குறிப்புகள்.

* வெள்ளரிக்காயை தினம் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாகக் எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச் சாறுடன் பாற் பவுடர் கலந்து தடவினாலும் எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும்.

* தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.

*பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன் கரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால் அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

* எண்ணெய்ப் பசை சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். சோப்பிற்கு பதில் கடலை மாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு முகம் பளபளப்பாக காட்சியளிக்கும்.

* எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும்.

* வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைகிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வந்தால் எண்ணெய் வழிவது குறையும்.

* சோளமாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து கத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய்ப்பசை நீங்கும்.

* எண்ணெய்ப் பசை சருமத்தினர் வெயிலில் சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும் சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

*எலுமிச்சைச் சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சைச் சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.

* பப்பாளிக் கூழ், முல்தானி மட்டி, வேப்பிலைப் பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.

 

 

யாழ் உடுவில் நல்லாயன் தேவாலயத்தின் மீது நள்ளிரவில் மர்மக் குழுவினர் தாக்குதல்..

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் அமைந்துள்ள நல்லாயன் தேவாலயத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாக சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடென்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு கறுப்பு உடையணிந்த 4 பேர் கொண்ட மர்மக் குழுவினர் ஆலயத்தின் உள்ளே நுழைந்து ஆலயத்தின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து அங்கிருந்த சில பொருட்களையும் உடைத்து இவர்கள் நாசம் செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இவர்கள் நால்வரும் சிங்கள மொழியில் உரையாடல்களையும் மேற்கொண்டுள்ளனர். காவலாளிகள் சத்தமிட்டதைத் தொடர்ந்து இவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை இத்தேவாலயத்தின் குருவிற்கும் தொடர்ச்சியாக இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தல்கள் விடுத்து வருகின்றனர்.
தெற்கில் கிறிஸ்த தேவாலயங்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டுவரும் நிலையில் இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளதால் தாக்குதல்கள் நடைபெறலாம் என்று மக்கள் அஞ்சி வருகின்றனர்.

 

43 இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது..

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 43 இலங்கையர்களை இந்தோனேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இந்தோனேசியாவின் சியான்ஜுர் பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜாவா தீவின் கடல் ஊடாக அவர்கள் அவுஸ்திரேலியா செல்வதற்கு தயாரான நிலையிலேயே அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், தற்போது அவர்கள் அனைவரும் இந்தோனேசியாவின் குடிவரவுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விமானம் மூலம் இந்தோனேசியாவுக்குள் நுழைந்த அவர்கள், அங்கிருந்து படகு ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

மலையகத்தில் இயற்கையின் சீற்றம் தொடர்கிறது..மண்சரிவு அபாயத்தினால் மக்கள் இடம்பெயர்வு..

கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூண்டுலோயா சீன் பழையத் தோட்டக் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் நான்காம் இலக்க தோட்டக்குடியிருப்பு மண்சரிவு அபாயத்துக்கு உள்ளாகியுள்ளதால் இந்தக் குடியிருப்பினைச் சேர்ந்த 9 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேரை தற்காலிக இடமொன்றுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று பெய்த கடும் மழையின் போது இந்தக் குடியிருப்புப் பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டு குடியிருப்புச் சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.

இந்தக்குடியிருப்பைச் சேர்ந்தவர்களை சீன் தமிழ் பாடசாலையில் தங்கவைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அதேவேளை பூண்டுலோயா ஹெரோல் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் மழையினாலும் கடுங்காற்றினாலும் தனி வீடொன்று சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.

சேத விபரங்கள் குறித்து நுவரெலியா மாவட்ட இடர்முகாமைத்து மத்திய நிலையத்தின் இணைப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை கடுங்காற்றினால் கொட்டகலை யுலிபீல்ட் தோட்டத் தொழிலாளர் குடியிருப்புக்களின் கூரைகள் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. மேலும் சீரற்ற கால நிலையினால் டிக்கோயா காசல்ரீ தோட்டப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மின்சார தடை ஏற்பட்டுள்ளதால் மின்பாவனையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் நாவலப்பிட்டி மின் பொறியிலாளர் பகுதியில் நேற்று இரவு 11.30 மணி முதல் ஏற்பட்ட மின்சார தடை இன்று காலை 9 மணிவரை நீடித்ததால் மின்பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

 

 

வவுனியா வடக்கு பிரதேசம் விளையாட்டுத்துறையில் தடம் பதிக்கும்-பிரதேச செயலாளர்!

vavuniya
வவுனியா வடக்கு பிரதேசம் சவால் நிறைந்த விளையாட்டுத்துறையில் மிகச்சிறந்ததொரு தடம் பதிக்கும் என வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக விளையாட்டு விழா நேற்று நெடுங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றபோது தலைமையுரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவத்தார்.தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் விளையாட்டின் ஊடாக உள நலத்தில் சிறந்தவர்களாக எம்மை மாற்றிக்கொள்ளவேண்டும். அத்துடன் எமது ஆற்றல்களை வெளிக்கொனர்வதற்கான தளமாக விளையாட்டினையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

எமது பிரதேசத்தின் விளையாட்டுத்துறை வளர்ச்சியில் அனைவரும் அக்கறையுள்ளவாகளாக செயற்பட வேண்டும். இன்று எமது பிரதேசம் மாவட்டம், மாகாணம், தேசிய மட்டம் என வெற்றிகளை ஈட்டும் வீரர்களை கொண்டதாக உள்ளது.
அவற்றுக்கு காரணமாக எமது பிரதேச விளையாட்டு விழாக்கள் காணரமாக அமைந்துள்ளது.

அந்தவகையில் எமது பிரதேசம் விளையாட்டுத்துறையில் தனக்கொன ஓர் இடத்தனை தக்க வைத்துக்கொள்ளும் என தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய வவுனியா அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர

இவ்வாறான கஸ்டப் பிரதேசத்தில் இந்தளவிற்கு ஓர் விளையாட்டு நிகழ்வை நடத்துவதையிட்டு பொருமையடைவதோடு, இவ்விளையாட்டுவிழாவினூடாக நீங்கள் சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடியவாகள் என்பதனையும் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. விளையாட்டு வீரரொருவர் விளையாட்டில் விருப்பமுடையவர் தான் சாந்திருக்கின்ற சமூகத்தின் நேசனாக மாறுவது நிச்சயம்.

விளையாட்டில் ஈடுபடுபவர்கள் எப்பொதும் வயது முதிர்வை அடைவதில்லை என நாம் கூறுவது வழமை. அந்தவகையில் அனைவரும் விளையாட்டில் ஆர்வம் செலுத்துபவர்களாக மாறி இப் பிரதேசத்தின் விளையாட்டுத்துறையை வளர்ச்சியடைய செய்யவேண்டும் என தெரிவித்தார்.

வவுனியா வடக்கு பிரதேச செலயாளர் க. பரந்தாமன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அமைச்சுக்களின் இணைப்பாளர் சில்வஸ்டார், வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் லலித், செட்டிகுளம் பிரதேச செலயாளர் ந. கமலதாஸ், வவுனியா தெற்கு உதவி பிரதேச செலயாளர், நிர்வாக உத்தியோகத்தர் ஆனந், வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் ஏ. ஆயகுலன், இராணுவ உயரதிகாரிகள், பிரதேச சபையின் செயலாளர் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 

பேஸ்புக் சட்டிங் மூலம் புகைப்படங்களை அனுப்ப வேண்டுமா?

 

இணைய உலகில் முதற்தர சமூக வலைத்தளமாக விளங்கும் பேஸ்புக் ஆனது தற்போது பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இப்பயனர்களை தொடர்ந்து தக்கவைக்கும் முகமாகவும், புதிய பயனர்களை தன்பால் ஈர்க்கும் வகையிலும் பல்வேறுபட்ட புதிய அம்சங்களை உட்புகுத்தி வரும் அந்நிறுவனம் தற்போது மேலும் ஒரு வசதியை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது பேஸ்புக்கினூடாக நண்பர்களுடன் சட்டிங்கில் ஈடுபடும்போது விரும்பிய புகைப்படங்களையும் இலகுவாக அனுப்பி மகிழக்கூடிய வசதியே அதுவாகும்.

இப்புதிய வசதியானது பயனர்களை அதிகளவில் கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

facebook_chat_001

இலங்கை அணி அபார வெற்றி- அரை இறுதிக்கான வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டது..

sanga
செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தலைவர் மத்தியூஸ் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பில் சார்பில் ஜொனதன் டிரொட் 76 ஓட்டங்களையும் ரூட் 68 ஓட்டங்களையும் குக் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் மலிங்க, எரங்க, ஹேரத் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்களை வீழ்த்தினர்.

294 என்ற கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணிக்கு குஷால் பெரேரா 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் அடுத்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாட இலங்கை அணி இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக தில்ஷன் 44 ஓட்டங்களையும் மகேள ஜெயவர்தன 42 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சங்ககார ஆட்டமிழக்காமல் 12 நான்கு ஓட்டங்கள் உட்பட 135 பந்துகளில் 134 ஓட்டங்களையும், குலசேகர 3 ஆறு ஓட்டங்கள் 5 நான்கு ஓட்டங்கள் உட்பட 38 பந்துகளில் 58 ஓட்டங்களையும் பெற்று இலங்கை அணியின் இலகுவான வெற்றியை உறுதிசெய்தனர்.

குமார் சங்ககார இன்றைய போட்டியின் சிறப்பாட்டகாரராக தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை அணி 47.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அரை இறுதி போட்டிக்கான வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டது..

~கேசா~

 

 

இரு மாகாண சபைகளை ஒன்றிணைக்கும் ஜனாதிபதி அதிகாரம் நீக்கம்!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் இரு மாகாண சபைகளை ஒன்றிணைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நீக்க இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்ததாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே இதனை அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் கெஹெலிய மேலும் தகவல் தெரிவிக்கையில்.

அரசியலமைப்பின் 13 ஆவது சரத்தில் இரு திருத்தங்களை அரசாங்கம் கடந்த வாரம் அமைச்சரவைக்கு முன்வைத்தது.முதலாவது திருத்தமான இரு மாகாண சபைகளை ஒன்றிணைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரம் நீக்க இன்று நடைபெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்தது.

எனினும் இரண்டாவது திருத்தம் உட்பட ஏனைய திருத்தங்கள் மேற்கொள்ளும் அதிகாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
என்றும் அமைச்சர் கூறினார்.

 

 

உச்சக்கட்ட கோபத்தில் கமல்..

Kamal_Hasan

விஸ்வரூபம் படத்தை இயக்கி வந்த போது தன்னைப் பற்றிய தகவலை உடனுக்குடன் வெளியான போது மகிழ்ச்சியடைந்த கமல் தற்போது கோபத்தின் உச்ச கட்டத்தில் காணப்படுகிறார்.
தற்போது விஸ்வரூபம் 2 மற்றும் அதற்கடுத்து தான் இயக்கப் போகும் படங்கள் பற்றிய தகவலை ஊடகங்கள் பரபரப்பாக வெளியிட்டு வருவதால் டென்சனாகி உள்ளாராம்.

குறிப்பாக திருப்பதி பிரதர்ஸ்க்காக தான் இயக்கும் கொமடி படம் பற்றிய தகவலை லிங்குசாமியே அறிவித்து விட்டாராம்.இந்நிலையில் அந்த படத்தில் காஜல் அகர்வால், திவ்யா ஸ்பந்தா உட்பட நடிகைகளை நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது என்ற தகவலும் வெளியாகி வருவதால், இது எப்படி வெளியாகிறது என்று தனது உதவியாளர்களிடம் சாடுகிறாராம்.

இப்படி அவர் கோபத்தை காட்டி வந்த நேரத்தில் தற்போது அப்படத்திற்கு உத்தம வில்லன் என்ற பெயர் வைத்திருப்பதையும் ஊடகங்கள் கண்டுபிடித்து செய்தியாக வெளியிட்டது.

இதனால் கமலின் கோபம் இன்னும் உச்சத்துக்கு சென்றுள்ளதாம். இதையடுத்து இனிமேல் நான் இயக்கும் படங்கள் பற்றிய தகவலை எனக்குத் தெரியாமல் யாரும் வெளியில் மூச்சு விடக் கூடாது என்று தன்னை சுற்றியிருப்பவர்களிடம் கட்டளையிட்டுள்ளாராம் கமல்.

 

 

இரணைமடு விமான ஓடுபாதை 15ம் திகதி ஜனாதிபதியால் திறப்பு..

Eranai

இரணைமடு விமான ஓடுபாதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் எதிர்வரும் 15ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.

விடுதலைப் புலிகள் வசமிருந்த இரணைமடுவில் 2009 ஒகஸ்ட் 14ம் திகதி இராணுவத்தினரின் கொடி ஏற்றப்பட்டது.

2011 ஒகஸ்ட் 3ம் திகதி இரணைமடு விமானப்படை முகாமாக மாறியது. அதன் பின்னர் அங்கு விமான ஓடுபாதை அமைக்கும் பணி 2012இல் ஆரம்பிக்கப்பட்டது. ஓடுபாதைக்கு காபட் இடும் பணி கடந்த ஏப்ரலில் ஆரம்பமானது.

சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான ஓடுபாதை 1500 மீற்றர் நீலமும் 25 மீற்றர் அகலமும் கொண்டதாகும்.
மாங்குளம், அம்பகாமம், ஒலுமடு மற்றும் கிளிநொச்சி, வட்டக்கச்சி, ராமநாதபுரம் வழியாக இந்த விமான ஓடுபாதையை அடைய முடியும்.

இந்த ஓடுபாதை அமைப்பு பணியில் முற்றுமுழுதாக இலங்கை விமானப்படையினரே ஈடுபட்டனர்.

 

தீவிர சிகிச்சை பிரிவில் கவிஞர் வாலி.. அதிர்ச்சியில் திரையுலகினர்

Vaali

காவியக் கவிஞர் என்று இலக்கிய உலகில் போற்றப்படும் கவிஞர் வாலி உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் கண்ணதாசனுக்குப் பின் கவிஞரென்றால் அது இவர்தான் என புகழப்படுபவர் வாலி. வர்த்தக ரீதியிலான சினிமா பாடல்கள் மட்டுமல்ல, இலக்கியவாதிகள் அதிசயிக்கும் அளவுக்கு காவியங்கள் படைப்பதிலும் வாலி நிகரற்றவர்.

எந்த அரசியல்வாதியுடனும், இலக்கியவாதியுடனும், இசையமைப்பாளருடனும் சிக்கலில்லாத உறவைப் பேணுவதில் வாலி ஒரு சிறந்த உதாரணம். தன்னை வளர்த்து விட்டவர்கள், வாழ்க்கை தந்தவர்கள் அனைவரிடத்திலும் இன்று வரை நன்றி பாராட்டுவதில் வாலிக்கு இணையாக ஒருவரையும் சொல்ல முடியாது.

இதனால் திரையுலகில் அனைவருக்கும் இனியவராக வாலி திகழ்கிறார். காலையில் இளையராஜாவிடம் பாட்டெழுதும் அவர், மாலையில் ரஹ்மானுக்கும் பாட்டெழுதுவார். இருவருமே அவர் மீது அன்பைப் பொழிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் வாலிக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்து மறுபிறவி எடுத்து வந்தார். அவ்வப்போது உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு மூன்று தினங்களுக்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல் நிலையில் முன்னேற்றம் தெரிந்தாலும், அவர் இன்னும் பூரண குணமடையவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாலியின் உடல் நிலைக் குறித்து கேள்விப்பட்டதும் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர் நலம் பெற பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

கிரடிட் காட் அளவிற்கு மெல்லியதான கைக்கடிகாரம் – அமெரிக்க நிறுவனம் சாதனை !!

watch
சிகாகோ நகரில் உள்ள ஒரு கடிகார நிறுவனம் மிகவும் மெல்லிய கைக்கடிகாரம் ஒன்றை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளது.

இந்த கைக்கடிகாரம் 0.8 மிமீ பருமன் கொண்டது. இது ஒரு கிரடிட் காட் அளவுக்கு மிகவும் மெல்லியதாக இருக்கின்றது. இதில் எலக்ட்ரோனிக் இங்க் மூலம் நேரம் பளிச்சென தெரிகிறது. இது ஒரு வளைக்கக்கூடிய ஸ்டீல் தகட்டினால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கைக்கடிகாரத்தை வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும். 15 வருடங்களுக்க் சார்ஜ் நிலைத்திருக்கும். நான்குவித மொடல்களில் வெளிவந்திருக்கும் இந்த கைக்கடிகாரத்தின் விலை $69 முதல் $109 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை கைக்கடிகாரங்களை வாங்கி உபயோகிக்க பெரும்பாலான அமெரிக்கர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

watch1

 

 

பாதி கதை கேட்டு இயக்குனரை விரட்டிய சத்யராஜ்..

sathiyaraj
பாதி கதையை கேட்டுவிட்டு நடிக்க மாட்டேன் என இயக்குனரை விரட்டினார் சத்யராஜ். இயக்குனர் எம்.ராஜேஷிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பொன் ராம். இவர் இயக்கும் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

இது பற்றி அவர் கூறியதாவது வின்னர் படத்தில் வடிவேலு வைத்து நடத்திய சங்கத்தின் பெயரைத்தான் இப்படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறோம். இதில் சிவ கார்த்திகேயன், சூரி காமெடியில் கலக்கி இருக்கின்றனர்.

கோபம், வருத்தம், ஜாலி, கிண்டல், கேலி கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். குறிப்பிட்ட கேரக்டர்களை தேர்வு செய்து ஒப்புக்கொள்ளும் அவர், இதில் நடிப்பாரா என்ற சந்தேகத்துடன் கதை சொல்லச்சொன்றேன். பாதி கதையை கேட்டவுடன் முதல்ல எந்திரிச்சி போங்க இந்த கேரக்டர்ல நடிக்கத்தான் எங்கிட்ட கத சொல்ல வந்தீங்களா? என்று விரட்டினார்.

நான் பயத்தில் உறைந்துபோனேன். மீதி கதையை கேளுங்கள் என்றேன். அதை கேட்டபிறகு இந்த கேரக்டரில் நான்தான் நடிப்பேன்‘ என்றுசொல்லி உடனடியாக கால்ஷீட் கொடுத்தார். ஹீரோயின் ஸ்ரீதிவ்யா. தயாரிப்பு பி.மதன். வசனம் எம்.ராஜேஷ். இசை டி.இமான். ஒளிப்பதிவு பாலசுப்ரமணியம்.

 

மீண்டும் நடிக்க வருகிறார் விஜயகாந்த்..!!

விருதகிருக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமலிருந்த விஜயகாந்த், மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார்.ஆனால் இந்த முறை ஹீரோவாக அல்ல. மகன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

அரசியலில் மிக்த தீவிரமாக இறங்கி, எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆன பிறகு, சினிமாவைத் தவிர்த்து வருகிறார் விஜயகாந்த். கடைசியாக 2010-ம் ஆண்டு விருதகிரி என்ற படத்தை நடித்து இயக்கினார். அந்தப் படம் அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதற்கு அடுத்த ஆண்டு நடந்த தேர்தலில் விஜயகாந்த் கட்சி அதிமுக கூட்டணி துணையுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிவிட்டார்.

இதனால் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனாலும் தன் மகன் சண்முகப் பாண்டியனை ஹீரோவாக்கும் முயற்சியில் தீவிரமானார். இதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். இப்போது ஒரு கதையை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

சண்முகப் பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் அந்த படத்தில் விஜயகாந்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் இப்போது முன்னிலையில் இருக்கும் விஜய், சூர்யா போன்றவர்கள் திரையுலகில் ஒரு இடம் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்தபோது, தன் படங்களில் அவர்களை இடம்பெற வைத்து பிரபலமாக்கி, முன்னுக்கு வர உதவியவர் விஜயகாந்த்.

விஜய்க்கு ஒரு செந்தூரபாண்டியும், சூர்யாவுக்கு ஒரு பெரியண்ணாவும் அமைந்ததுபோல, தன் மகனுக்கும் இந்த புதிய படம் அமைய வேண்டும் என்பது விஜயகாந்த் ஆசை. கூடவே, அதிமுகவில் தன் கட்சி கரைந்து கொண்டிருக்கும் சூழலில் மீண்டும் திரைப்பிரவேசம் செய்து நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு உதவியாக இருக்கும் என்றும் கருதுகிறாராம்.

சிறுமியை வல்லுறவு செய்ய முயற்சித்த முதியவர் பனை மரத்தில் கட்டப்பட்டு அடி உதை!

child abuse

யாழ். மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் 12 வயது பாடசாலைச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த முதியவர் ஒருவரை அப்பகுதி மக்கள் பனை மரத்துடன் கட்டி வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று வியாழக்கிழமை காலை 7.45 மணிக்கு மானிப்பாய் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிக்கு தனிமையில் கட்டுடை பிரதேசத்திலிருந்து சென்று கொண்டிருந்த சிறுமியை துவிச்சக்கர வண்டியில் வந்த முதியவர் ஒருவர் அவரைப் பற்றை ஒன்றிக்குள் வைத்து பாலியல் வல்லுறவிற்கு முயற்சித்துள்ளார்.

குறிதத் சிறுமி கதறியதால் அயலிலுள்ளவர்கள் இந்த முதியவரைத் துரத்திப்பிடித்து பனை மரத்துடன் கட்டி வைத்து பச்சை மட்டையினால் தாக்கியுள்ளனர். இதன் போது முதியவரின் கை எழும்பு முறிவடைந்துள்ளதுடன் அவருக்கு உடம்பில் பல பகுதிகளிலிருந்து இரத்தம் கசிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த முதியவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். முதியவர் தொடந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.