ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை நியூசிலாந்தின் கோரி அண்டர்சன் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஒரு நாள் போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்து சாதனை படைத்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயித் அப்ரிடியின் சாதனையை நியூசிலாந்து வீரர் அண்டர்சன் முறியடித்துள்ளார்.
மேற்கு இந்திய தீவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் 36 பந்துகளில் சதமடித்து இந்த சாதனையை அண்டர்சன் படைத்துள்ளார்.
முன்னதாக 1996ல் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அப்ரிடி 37 பந்துகளில் அதிவேக சதமடித்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது.
மருதானை பொலிஸ் பிரிவில் தற்காலிக விடுதி என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது விபச்சார விடுதியை இயக்கிச் சென்ற இருவரும் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் பன்வில, வௌ்ளவத்தை, ஆட்டுப்பெட்டித்தெரு, மோதரவீதி, களனி, வவுனியா மற்றும் தெஹிவளை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று இரவு 12.00 மணிக்கு புத்தாண்டு துவங்கிய நிலையில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் விண் வெளியில் இருந்து பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
விண்வெளியிலிருந்து பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறுவதற்காக நாசா விஞ்ஞானிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதற்காக நியூயோர்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் பிரமாண்ட எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டிருந்தன.
சதுக்கத்தில் கூடியிருந்த பொதுமக்களுக்கு சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்திலிருந்து நாசா விஞ்ஞானிகள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. விண்வெளியிலிருந்து பூமியில் உள்ள மக்களுக்கு, புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் புதிய முறையை நாசா அறிமுகப்படுத்தியதில் ஏராளமானோர் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்பவர்களை விமான நிலையத்தில் பதிவு செய்யும் நடைமுறை இன்று ஜனவரி முதலாம் திகதி முதல் நீக்கப்படுகிறது.
இன்று முதல் பணியகத்தின் தலைமை அலுவலகத்திலும், பிரதான அலுவலகங்கள் சிலவற்றில் மட்டுமே பதிவுகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளரும் பேச்சாளருமான மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.
விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்னதாக பணியகத்தின் பிரதான அலுவலகங்களான பத்தரமுல்லையிலுள்ள தலைமை அலுவலகம், அநுராதபுரம், பதுளை, சிலாபம், தம்புள்ள, காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை, கல்முனை, மத்துகம, கண்டி, கேகாலை, வவுனியா போன்ற அலுவலகங்களில் பதிவு செய்ய முடியும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்பவர்கள் தங்களது தொழில் ஒப்பந்தங்களை காண்பித்து பதிவு செய்த பின்னரேயே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். எனவே பதிவு செய்வது கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவுசெய்யாமல் வெளிநாடு செல்வதற்கு எத்தனித்து இறுதி நேரத்தில் பிடிபடுபவர்கள் வெளிநாடு செல்வதற்கு உள்ள சந்தர்ப்பத்தை இழக்க நேரிடும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ் டில்கோ விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்று கொழும்பு குடிவரவு குடியகல்வு பிரிவின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் தொடர்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனிடம் எம் அதிகாரிகள் சில விசாரணைகள் நடத்தியிருந்தாலும் நாம் அவரை வீட்டுக்காவலில் வைத்தமை என்பது உண்மைக்குப் புறம்பான செய்தி என்பதை மட்டும் எம்மால் உறுதிபட கூற முடியும் என தெரிவித்தார் அந்த குடிவரவு குடியகல்வு அதிகாரி.
மலர்ந்திருக்கும் புத்தாண்டு அபிவிருத்தி தசாப்தத்தில் மேலும் பல கருத்திட்டங்களுக்கு வழிவகுக்குமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இப்புத்தாண்டு பொருளாதாரம் மற்றும் அரசியல் துறைகளில் மிகக் குறிப்பிடத்தக்க ஆண்டாகும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அபிவிருத்திக்கான ஒரு நீண்ட போராட்டத்தின் பின்னர் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லும் பெருமையுடன் நாம் இப்புத்தாண்டைக் கொண்டாடுகிறோம். மிகுந்த அர்ப்பணத்துடன் நாம் அபிவிருத்தி தசாப்தத்தில் காலடியெடுத்து வைத்துள்ளோம்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அதிவேக பாதைகள், விமான நிலையங்கள், மின்சார நிலையங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அலங்காரம் போன்றவற்றின் நன்மைகளை நீங்கள் ஏற்கெனவே அனுபவித்து வருகின்றார்கள்.
பிறந்திருக்கும் புத்தாண்டு அபிவிருத்தித் தசாப்தத்தில் மேலும் பல கருத்திட்டங்களுக்கான வாயில்களைத் திறக்கின்றது. இதன்மூலம், நீங்களும் உங்களது பிள்ளைகளும் எதிர்காலத்தில் இன்னும் பல நன்மைகளைப் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் தொடர்ந்தும் எம்மீது நம்பிக்கை வைப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
பிறந்திருக்கும் இப்புத்தாண்டு பொருளாதார அபிவிருத்தியிலும் அரசியல் துறையிலும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு ஆண்டாகும். தேசிய ஐக்கியம், சமாதானம், மனநிறைவு ஆகியவற்றைப் பேணிய நிலையிலேயே நாம் இத்திசையில் முன்னோக்கிச் செல்கிறோம். எமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் உண்மையான தேசிய முன்னேற்றத்திற்கும் இதுவே சரியான பாதை என்பதை நாம் அடையாளம் கண்டுள்ளோம்.
தேசத்தைக் கட்டியெழுப்புகின்ற போது நாம் எல்லா வகையான வேறுபாடுகளையும் பிரிவினைகளையும் ஒதுக்கிவிட வேண்டும். இதன் விளைவாகவே ஒரு புதிய அரசியல் மற்றும் அபிவிருத்திக் கலாசாரம் ஏற்படும். இதனை மேலும் உறுதிப்படுத்திய நிலையிலேயே நாம் இப்புத்தாண்டில் முன்னேறிச் செல்ல வேண்டும். எமது மக்களுக்கு சுதந்திரத்தையும் சமாதானத்தையும் பெற்றுக் கொடுத்த நாம் அவர்களுக்கு அபிவிருத்தியையும் மகிழ்ச்சியையும் பெற்றுக் கொடுக்க அர்ப்பணத்துடன் உள்ளோம்.
பிறந்திருக்கும் இப்புத்தாண்டு தேசத்தின் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கான எமது முயற்சிகளுக்கு வெற்றியைத் தரவேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 6ஆம் திகதி சிறுவர் இல்லத்தில் வாழ்ந்த சிறுவன் ஒருவன் தாக்கல் செய்த முறைப்பாட்டின் படி கைது செய்யப்பட்ட அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தின் காப்பாளரும் விகாராதிபதியுமான கல்யாணதிஸ்ஸ தேரா விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று வவனியா நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரின் அறிக்ககையின் பிரகாரம் சட்டமா அதிபர் பிணை வழங்குவதற்கு ஆட்சேபம் இல்லை என தெரிவித்ததை அடுத்தே நீதிபதி இராமக்கமலன் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் சந்தேகநபரான கல்யாணதிஸ்ஸ தேராவை விடுதலை செய்திருந்தார்.
மஹியங்கனை, நிதன்கல பிரதேசத்தில் ஆற்றில் மிதந்து வந்த சிசுவொன்றின் சடலத்தை மஹியங்கனை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.
மஹியங்கனை, நிதன்கலை மற்றும் ஹத்தட்டாவ பிரதேசத்தை அண்மித்த ஆற்றிலிருந்தே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒன்பது மாதமுடைய பெண் சிசுவே சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சடலத்தை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பிரதமர் பதவியில் இருந்து விலகப்போவதாக மன்மோகன் சிங் அறிவிக்க உள்ளதாக டெல்லி வட்டாரங்களில் வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதனை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் நடந்து வருகிறது. பிரதமராக மன்மோகன் சிங் இருந்து வருகிறார்.
இந்நிலையில் வருகிற ஜனவரி 3ஆம் திகதி பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும், அப்போது காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தும் விதமாக, தனது பதவி விலகல் குறித்து அறிவிப்பை மன்மோகன் சிங் வெளியிடுவார் என்றும் செய்தி வெளியானது. இதனால் டெல்லி வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் பிரதமர் பதவி விலகல் குறித்த தவலை பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிரதமர் பதவி விலக மாட்டார் என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
அதே சமயம் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான மேடை அறிவிப்பு நிகழ்ச்சி ஒன்றை மன்மோகன் சிங் நிச்சயம் நடத்துவார் என்று டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
வவுனியா தமிழ்ச் சங்கம் நடாத்திய திருவாசக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா ஆதிவிநாயகர் ஆலய பாலாம்பிகை மண்டபத்தில் இடம்பெற்றது
வவுனியா தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடை பெற்ற இவ் விழாவில் மங்கள விளக்கினை தம்பையா சிவபாலன் – மனோரஞ்சிதம் தம்பதியர் ஏற்றி வைத்தனர்.
சிறப்பு நிகழ்ச்சியாக தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் “நான் கலந்து பாடுங்கால்” என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
இவ் விழாவில் திருவாசகத் திருமுறைக்குத் தொண்டாற்றிவரும் கலாபூசணம் வை.செ.தேவராசா அவர்களையும் நாதஸ்வர வித்துவான் கலாபூசணம் அ.பாலச்சந்திரன் அவர்களையும் தமிழ்ச் சங்கம் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுங்குளிர் வாட்டி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு கடுங்குளிர் நிலவுகிறது.
அத்துடன் குளிர் காற்றும் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் நேற்று காலையில் 2.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவியது. இது கடந்த 10 ஆண்டுகளில், டிசம்பர் மாதத்தில் நிலவிய மிக குறைந்த அளவு வெப்ப நிலையாகும்.
அங்கு அதிகபட்சமாக 19.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது. இதுவும் வழக்கமான அளவை விட 1 டிகிரி குறைவாகும்.
இதே நிலையே இன்றும் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் டெல்லி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். அங்கு தொடர்ந்து கடுங்குளிரும், மூடுபனியும் நிலவுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமால் தவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே டெல்லியில் காலை நேரத்தில் கடும் மூடுபனி நிலவுவதால் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் 6 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பல்வேறு ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு சென்றுள்ளதால் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் பனிக்கட்டிகளாக உறைந்து காணப்படுகின்றன. புகழ்பெற்ற தால் ஏரி, பெரும்பாலான இடங்களில் உறைந்து பனிக்கட்டியாக காட்சியளிக்கிறது. இது கடைசியாக1986ம் ஆண்டில் முற்றிலும் உறைந்தது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் மைனஸ் 10.2 டிகிரியும், லே பகுதியில் மைனஸ்17.7 டிகிரியும் வெப்பநிலை காணப்பட்டது. மேலும் அங்கு கடுமையான பனிப்பொழிவும் காணப்படுவதால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
பாகிஸ்தானில் இஸ்லாமிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் ஷரியா நீதிமன்றம் கடந்த1980 ஆம் வருடம் ஏற்படுத்தப்பட்டது.
அப்போது பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளராக இருந்த ஜெனரல் ஜியா-உல்-ஹக் பாகிஸ்தானிய நிறுவனங்களை இஸ்லாமிய திட்டங்களுக்கு மாற்றும் விதமாக இந்த நீதிமன்றத்தை தோற்றுவித்தார்.
குற்றவியல் சட்டங்களுக்கு இணையாக இஸ்லாமிய மதத்தில் காணப்படும் ஹுடூட் விதிமுறைகளைப் பின்பற்றி இந்த நீதிமன்றம் இயங்கி வருகின்றது. நேற்று இந்த நீதிமன்றத்திற்கு புதிய பெண் நீதிபதி நியமிக்கப்பட்டார்.
தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பணி புரிந்துவந்த அஷ்ரப் ஜெஹான்(56) கராச்சியில் உள்ள இந்த நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.
கடந்த 33 வருடங்களில் இஸ்லாமிய நீதிமன்றத்திற்கு ஒரு பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். பத்திரிகையாளர்களிடம் அரிதாகவே பேசும் ஷரியத் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஆகா ரபிக் அஹமது இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்விற்காக தான் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
திறமையான பெண்ணான அஷ்ரப் இஸ்லாமிய நீதிமன்றத்தில் இணைந்துள்ளார். ஆண், பெண் என்ற பிரிவினை இஸ்லாமிய சட்டத்தில் இல்லை. அதனால் ஒரு பெண் நீதிபதி இங்கு செயல்படுவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தான் இதற்கான முதல் முயற்சியை எடுத்து உலகம் முழுமைக்கும் தங்களது முற்போக்கான எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும், தங்கள் நாட்டினரைப் பற்றிய பல தவறான கருத்துகள் இந்த நடவடிக்கை மூலம் மாறக்கூடும் என்றும் அவர் கூறினார்.
பணி இடங்கள் மற்றும் பயணங்களின் போது பெண்கள் தங்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசொப்ட் புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது.
உடனடி தகவல் இந்தியாவுக்கான மைக்ரோசொப்ட் நிறுவன இயக்குனர் ராஜ் பியானி கூறியதாவது..
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளன.
இதிலிருந்து பெண்கள் தங்களை காத்துக் கொள்ள மைக்ரோசொப்ட் புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்து உள்ளது.
கையடக்க தொலைபேசிகளில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் பெண்கள் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு உள்ளாகும்போது அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்.
ஆபத்து காலத்தில் கையடக்க தொலைபேசியில் உள்ள ஒரு பட்டனை அழுத்தினால் கையடக்க தொலைபேசியில் உள்ள அனைத்து தொடர்பு எண்கள், பொலிஸ், பாதுகாப்பு நிறுவனங்கள், பேஸ்புக் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் அனுப்பப்படும்.
டிராக்கிங் சிஸ்டம் : இதில் உள்ள தொடுதிரை வசதியின் மூலம் நடக்கும் காட்சிகள் பதிவு செய்யப்படும். இதன் மூலம், குற்றவாளிகளை எளிதாக கண்டறிய முடியும். அதுமட்டுமின்றி, இணையதள வசதி இல்லாமலும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியும்.
இதில் உள்ள டிராக்கிங் சிஸ்டம் மொபைல் போனை பயன்படுத்தும் நபர் எங்கு உள்ளார் என்பதை அனைவருக்கும் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
கொழும்பு துறைமுகத்தில் அவதானத்துடன் இருந்த சுங்க அதிகாரிகள் கதிரியக்கம் படிந்திருந்த ஒரு கொள்கலனை சரியான வேளையில் கண்டுபிடித்ததனால் கொழும்பு மாநகரமே கதிரியக்க தாக்கத்தில் மூழ்க வேண்டிய ஆபத்து தவிர்க்கப்பட்டது.
ஜப்பானின் யொக்கோ ஹோமா துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு சமீபத்தில் கொள்கலன்களை ஏற்றிவந்த கப்பலிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கப்பலில் வாகனங்களின் உதிரிப் பாகங்கள் பெருமளவில் கொண்டு வரப்பட்டது. இதனை அவதானித்த சுங்க அதிகாரிகள் சிசியம் 137 (Caesium 137) என்ற கதிரியக்க சக்தியைக் கொண்ட பொருட்கள் இருப்பதை அவதானித்தார்கள்.
இது வெளியில் இருந்தால் மனிதர்களின் உடலில் தீப்புண்கள் ஏற்படுவதுடன், மரணத்தை ஏற்படுத்தக்கூடிய பாரதூரமான கதிரியக்க தாக்கமும் ஏற்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
டிசம்பர் 11ம் திகதியன்று இந்த கொள்கலன் திறக்கப்பட்ட போது கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கதிரியக்கத்தை கண்டுபிடிக்கும் கருவி ஆபத்தை அறிவுறுத்தும் மணி ஒலிக்க ஆரம்பித்தது.
இதனால் சுங்க அதிகாரிகள் உடனடியாக அந்த கொள்கலனை மூடிவிட்டார்கள். துறைமுகத்தில் தன்னியக்க கருவிகள் கதிரியக்கம் இருப்பதை கண்டுபிடித்ததை அடுத்து நாம் அந்த கொள்கலனை ஒதுக்குப் புறமாக வைத்துவிட்டோம் என்று சுங்கத்திணைக்களத்தின் பேச்சாளரும், சட்டத்துறை பணிப்பாளருமான லெஸ்லி காமினி தெரிவித்தார்.
யக்கலையில் உள்ள ஒரு நிறுவனமே இந்த கொள்கலனை ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இறக்குமதியாளர்கள் இந்த கொள்கலன்களில் வாகனங்களின் உதிரிப்பாகங்கள் மாத்திரமே இருப்பதாக அறிவித்தனர்.
இதனை இறக்குமதி செய்தவர்களுக்கு இந்த கொள்கலனில் கதிரியக்க சக்திவாய்ந்த பொருட்கள் இருப்பது தெரியாதிருந்தது என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து ஜப்பானில் உள்ள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அது மீண்டும் ஜப்பானுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இந்த சிசியம் 137 கதிரியக்கம் 1960களில் ஆயுதங்களை பரிசோதனை செய்து பார்த்த போது சுற்றாடலில் கலந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
இதனால் மக்களும் நாளாந்த வாழ்க்கையில் இந்த கதிரியக்க தாக்கத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள். இந்த கதிரியக்கப் பொருள் பெருமளவில் இருந்தால் மரணம் உட்பட பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
கதிரியக்க சிகிச்சை முறையும் இதன் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. இந்த கதிரியக்கச் சக்தி சீல் வைக்கப்பட்ட கொள்கலன்களில் இருக்க வேண்டுமென்றும் அது பொதுமக்கள் இருக்கும் இடங்களில் வைக்கப்படலாகாதென்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கையும் செய்துள்ளார்கள்.
இவற்றை வேண்டுமென்றோ அல்லது தவறுதலாக திறந்தால் அந்த கதிரியக்கம் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரையும் தாக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். இந்த கதிரியக்கச் சக்தி மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்தை கொண்டுள்ளது.
இதனைத் தவறுதலாக சுவாசித்தால் உடலில் உள்ள மென்மையான சவ்வுகளை பாதித்து கதிரியக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.