வவுனியா அங்காடி வியாபாரிகள் மாற்றிடம் வழங்ககோரி நகரசபைக்கு முன்பாக உண்ணாவிரதம்!

வவுனியா நகரசபைக்கு முன்பாக உள்ள அங்காடி வியாபாரிகள் தமக்கு மாற்றிடம் வழங்ககோரி நகரசபைக்கு முன்பாக இன்று (12) உண்ணாவிரதப் போரட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா நடைபாதை வியாபாரிகளுக்கு என புதிய அங்காடி விற்பனை நிலையமானது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக நகரசபைக்கு முன்பாக அமைக்கப்பட்டு வவுனியா நகரசபையால் வழங்கப்பட்டிருந்தது.

அவ்வாறு வழங்கப்பட்ட இடத்தில் தற்போது 40 வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 200 ரூபாய்க்கு கூட விற்பனை செய்ய முடியவில்லை இதனால் தமக்கு மாற்றிடம் வழங்குமாறு கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பலமுறை நகரசபைக்கு தெரியபடுத்திய போதும் எந்தவிதமான பதிலும் கிடைக்காமையால் தாம் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொள்வதாக அங்காடி வியாபாரிகள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நகரசபையே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, எம்மையும் வாழ விடுங்கள், எமக்கு மாற்றிடம் வழங்கு போன்ற வாசங்களை ஏந்தியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபை பதில் தலைவர் எம்.எம்.ரதன், ஆளுனரின் ஆணையாளர் முகைதீன், வவுனியா நகரசபைச் செயலாளர் க.சத்தியசீலன் மற்றும் நகரசபை உறுப்பினர்களான சிவகுமார், குமாரசாமி, செல்லத்துரை, முநௌவர் ஆகியோர் வருகைதந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் எதிர்வரும் புதன் கிழமை நகரசபைக் கூட்டத்தில் கலந்துரையாடி முடிவு தருவதாக நகரசபை நிர்வாகம் மற்றும் சபை உறுப்பினர்களால் உறுதி மொழியும் வழங்கப்பட்டது.

vavuniya1 vavuniya2 vavuniya3

இந்து ஆலயங்கள் தாக்கப்படுவதை நிறுத்துமாறு மகஜர்..

vhp

அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்து ஆலயங்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் குறித்த ஆலயங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியும் விஸ்வ ஹிந்து பர்சஸ் அமைப்பின் மன்னார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு வழங்கும் முகமாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திரவிடம் இன்று காலை மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரில் குறிப்பிட்டுள்ளதாவது..

அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் உள்ள இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்து மக்கள் மிகவும் ஆழ்ந்த வேதனையடைந்துள்ளனர்.

இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் இந்து ஆலயங்கள் உட்பட நாட்டில் உள்ள அனைத்து வணக்கஸ்தளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதற்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு வழங்க அரசாங்க அதிபரிடம் வழங்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டி மேல் கலந்து கொண்டிருந்தார். குறித்த மகஜர் அரசாங்க அதிபரிடம் கையளிப்பதற்காக விஸ்வ ஹிந்து பர்சஸ் அமைப்பின் மன்னார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுமார் 30 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.

 

பொருளாதார நெருக்கடியால் தொலைக்காட்சியை மூடிய கிரேக்க அரசாங்கம்..

greek
கிரேக்க அரசாங்கம் எவரும் எதிர்பாராத வகையில் தனது தேசிய தொலைக்காட்சியை மூடிவிட்டது. அரசாங்க சிக்கன நடவடிக்கையின் ஒருபகுதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

செவ்வாயன்று தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த நேயர்கள் திடீரென அது நின்று போனதைக் கண்டிருக்கிறார்கள்.
அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஹெலனிக் புரோட்காஸ்டிங் காப்பரேஷனுக்கு முன்பாக ஆயிரக்கணக்கானவர்கள் கூடியுள்ளனர்.

இந்த ஒளிபரப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற நிதிச் செலவுகள் ஒரு ஊழலுக்கு நிகரானவை என்று அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தின் 2500 ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 

சைபர் தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி

cyber-attack

சைபர் தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகின் முதனிலை வைரஸ் எதிர் கணனி மென்பொருள் உற்பத்தி நிறுவனமான கெஸ்பர்ஸ்கை (kaspersky) நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கணனி பயனர்கள் அதிகளவில் சைபர் தாக்குதல்களுக்கு இலக்காவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சைபர் தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய உலக தர வரிசையில் இலங்கை எட்டாம் இடத்தை வகிக்கின்றது.

51 வீதமான கணனிப் பயனர்கள் சைபர் தாக்குதல்களினால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் 15 வீதமான மக்கள் இணையத்தை பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

 

ஹன்சிகாவுடன் திருமண பந்தத்தில் இணைவாரா சிம்பு?

நடிகர் சிம்பு சென்னை தி.நகரில் புதிய வீடு ஒன்றை கட்டியிருக்கிறாராம். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் இன்று நடக்க இருக்கிறது.

இதில் கலந்து கொள்ள சினிமாத் துறையைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக நடிகை ஹன்சிகா மோத்வானி கலந்து கொள்ள இருக்கிறாராம்.

விழாவின் முக்கிய அம்சமாக சிம்புவின் திருமணம் குறித்தும் பேசப்படுகிறதாம். சிம்புவை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் பெயரை இந்த விழாவில் அறிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வருவதாக சமீப காலமாக பல்வேறு ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் இந்த செய்தியை இருவரும் மறுத்து வந்தனர்.

இந்நிலையில் சிம்புவின் புதிய வீட்டின் கிரகக்பிரவேச சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கும் ஹன்சிகா மோத்வானிதான் சிம்புவை கைப்பிடிக்கும் மணப்பெண்ணாக இருக்கக்கூடுமோ? என சினிமா வட்டாராங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு விடை இன்று தெரிந்து விடும்.

வாலு என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் சாமியாராவது விதி என்றால் யாரால் தடுக்க முடியும்..

simbu

நான் சாமியாராக வேண்டும் என்று விதி இருந்தால் நடந்து விட்டுப் போகட்டுமே என்று பரபரப்பாக பேசியுள்ளார் நடிகர் சிம்பு. நடிகர் சிம்புவின் சமீப கால போக்கு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

சாமியார்கோலத்தில் ஊர் சுற்றுகிறார். இமயமலைக்குப் போகிறார். அதேசமயம் நடிகை ஹன்சிகாவையும் காதலிக்கிறார் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதுகுறித்து பரபரப்பு பேட்டி அளித்துள்ளார் சிம்பு. அதிலிருந்து சில பகுதிகள்…

யாருடனும் காதல் இல்லை..
எனக்கு இப்போது யாருடனும் காதல் இல்லை. காதல் இருந்தால், அதை வெளியே சொல்கிற தைரியம் எனக்கு உண்டு.

ஹன்சிகாவை விமான நிலையம் வரை…
ஹன்சிகாவை விமான நிலையம் வரை சென்று நான் வழியனுப்புவதாக சொல்வது கேட்பதற்கு காமெடியாக இருக்கிறது.

யார் வந்தாலும் ஏற்பேன்..
ஹன்சிகா மட்டுமல்ல எந்த பெண்ணாக இருந்தாலும் சரி என்னுள் இருக்கும் ஆத்மா சரி என்று சொன்னால் அவரது காதலை ஏற்றுக்கொள்வேன்.

மண்டை சொல்வதைக் கேட்பதில்லை..
சமீபகாலமாக மனதளவில் நான் பக்குவப்பட்டு விட்டேன். மண்டையும் மூளையும் சொல்வதை கேட்பதில்லை. உள்ளுக்குள் இருக்கும் ஆத்மா சொல்கிறபடி நடக்கிறேன்.

திருமணம் எப்போது..
எனது திருமணம் எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது. நான் சமீபகாலமாக எதையும் திட்டமிடுவதில்லை.

சாமியார் ஆனால் ஆகட்டுமே..
ஆன்மிகத்துக்கு போனால் சாமியார் ஆகிவிட வேண்டுமா என்ன? நான் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருப்பது உண்மை. ஆனால், சாமியார் ஆகவில்லை. ஒருவேளை நான் சாமியார் ஆக வேண்டும் என்று விதியிருந்தால் அப்படி நடந்துவிட்டுப் போகட்டும்.

வாலு எப்போது ?
வாலு படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் கொஞ்சம்தான் பாக்கி. அதை சீக்கிரமே முடித்து விடுவோம். அடுத்து அந்த படம்தான் திரைக்கு வரும் என்று கூறியுள்ளார் சிம்பு.

 

 

சிவாவுக்காக கெட்டப்பை மாற்றிய அஜித்

கொலிவுட்டில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார் தல அஜித்.
சாதாரணமாக கதாநாயகர்கள் வயதானாலும் தலைக்கு டை அடித்து கருப்பு முடியுடன் தான் நடித்து வருகிறார்கள்.

ரசிகர்களும் அதைத் தான் விரும்புகிறார்கள். ஆனால் ஹாலிவுட் கதாநாயகர்கள் வெள்ளை முடியுடன் நடித்து பெயர் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் அஜித் மங்காத்தா படத்திலும், தற்போது விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்திலும் நரை முடியுடனேயே வருகிறார்.

மங்காத்தா படத்தில் அஜித்தின் நரை முடி கெட்டப்பை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி அது பிரபலமுமானது.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ராஜமுந்திரியில் உள்ள பிரபல திரையரங்கில் நடந்தது.

இதில் அஜித், தமன்னா, சந்தானம் வரும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

அப்போது அஜித் முடிக்கு கருப்பு டை அடித்து வேட்டி சட்டை அணிந்து மாஸ் கெட்டப்பில் இருந்ததாகவும், தமன்னா சேலையில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ajith-new-look

உலகின் மிக வயதானவர் மரணம்

உலகின் மிக வயதான முதியவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற ஜிரோய்மன் கிமுரா ஜப்பானில் இன்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 116.

1897ம் ஆண்டு ஜப்பானில் பிறந்த கிமுரா, தனது இளமைப் பருவத்தில் தபால் துறை ஊழியராக பணியாற்றினார்.

தனது 115வது ஆண்டு பிறந்த நாள் விழாவின் போது நீண்ட ஆயுளுக்கு அதிக நேரம் சூரிய வெளிச்சத்தின் கீழ் நின்றிருப்பதுதான் காரணம் என்று அவர் கூறியிருந்தார்.

2012-ம் ஆண்டு இவரை உலகின் மிக வயதான முதியவராக கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்தது.

இறுதிக் காலத்தை விவசாயம் செய்வதில் கழித்த கிமுரா இன்று மரணமடைந்தார்.

அவருக்கு 7 பிள்ளைகள், 14 பேரக் குழந்தைகள், 25 கொள்ளுப்பேரன் பேத்திகள், 15 எள்ளுப்பேரன் பேத்திகள் உள்ளனர்.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நூறு வயதை கடந்த சுமார் 50 ஆயிரம் பேர் ஜப்பானில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

oldestman

சருமத்தை பொலிவாக்க எலுமிச்சை..

How-to-make-lemon-face-mask

எலுமிச்சை பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன் சருமம் மற்றும் கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை தருகின்றது.

எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும். ஏனெனில் இதில் உள்ள அமிலமானது உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து உடலுக்கு ஒரு நல்ல வடிவத்தை கொடுக்கும்.

செரிமானப் பிரச்சனை, வாயுப் பிரச்சனை போன்றவை உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் சரிசெய்துவிடலாம். வேண்டுமெனில் ஒமத்தை எலுமிச்சை சாற்றில் சேர்த்து குடித்தாலும் செரிமானப் பிரச்சனையை சரிசெய்யலாம்.

எலுமிச்சை ஜூஸை குடித்து வந்தால் அவை உடலில் உள்ள தொற்றுநோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும்.

குறிப்பாக எலுமிச்சை இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையுடையது. அதுமட்டுமின்றி அவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

பெண்கள் எலுமிச்சை சாற்றை அதிகம் குடித்தால் எலுமிச்சையில் இருக்கும் கார்சினோஜென் பெருங்குடல், புரோஸ்ட்ரேட் அல்லது மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.

எலுமிச்சை ஜூஸ் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி பொலிவற்று இருக்கும் சருமத்தையும் பொலிவாக்கும். எனவே எலுமிச்சை சாற்றை தினமும் பருகினால் அழகாக சருமத்தை பெறலாம்.

எலுமிச்சை சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக சருமத்தில் பருக்கள் இருப்பவர்கள் பயன்படுத்தினால், விரைவில் அதனை நீக்கலாம். பொடுகுத் தொல்லை மற்றும் இதர கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் பயன்படுத்தினாலும், அந்த பிரச்சனைகளை தடுக்கலாம்.

 

வவுனியாவில் 13 வயது சிறுமி அவரது அக்காவின் கணவரால் பாலியல் பலாத்காரம்..

child abuse

வவுனியாவில் 13 வயது பாடசாலை மாணவியொருவர் அவரது அக்காவின் கணவரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாக வவுனியா பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

வவுனியா சாந்தசோலை கிராமத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவி அவருடைய சகோதரியின் கணவரால் பல நாட்களாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார்.

எனினும், குறித்த சிறுமியை பாதுகாக்கவோ, அவருக்கு உதவவோ எவரும் முன்வரவில்லை. இந்நிலையில் சிறுமி அக்கிராம மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர் ஒருவரிடம் நேற்று முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து அக்கிராம மாதர் அபிவிருத்தி சங்கத்தால் வவுனியா பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், அக் கிராமத்திற்கு சென்று சிறுமியை அழைத்துச் சென்று வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.

பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் வவுனியா பொலிஸ் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

வங்கியில் தூங்கியதால் விளையாடிய விதி! கோடிக்கணக்கில் பணம் இழப்பு..

sleep

ஜேர்மனியைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் பணியின்போது சோர்வடைந்து அப்படியே கம்ப்யூட்டர் கீ போர்டின் மீது கைகளை வைத்துப் படுத்துத் தூங்கி விட்டார்.ஆனால் அதன் விளைவு தவறான நபருக்கு பெருமளவிலான பணத்தை மாற்றி இப்போது சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.

ஒரு குட்டித் தூக்கம் இப்போது அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வழக்கிலும் சிக்கி விட்டார். பணியின்போது அசட்டையாக இருந்தால் என்ன மாதிரியான விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த ஊழியரைத்தான் தற்போது ஜேர்மனியில் அனைவரும் உதாரணமாக கூறிக் கொண்டிருக்கின்றனராம்.

சற்றே கண்ணயர்ந்தார்
ஜேர்மனியில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் சென்ற வருடம் ஏப்ரல் மாதம் பணியில் இருந்த போது சற்று கண்ணயர்ந்து விட்டார். ஓய்வு பெற்ற ஊழியர் சம்பந்தமான கணக்குகளை வரவு வைக்கும் போது உறங்க ஆரம்பித்த ஊழியர் தலையை கம்யூட்டர் கீபோர்டில் வைத்து விட்டார். இதனால் இரண்டு என்ற எண் 11 முறை பதிவாகிவிட்டது.

அனுப்ப வேண்டியது 62.40 யூரோ தான்
அந்த ஊழியர் ஓய்வு பெற்ற ஊழியரின் கணக்குக்கு 62.40 யூரோ பணத்தை ஒன்லைனில் மாற்ற வேண்டும்.தூங்கியதால் வந்த வினை ஆனால் பணியின்போது சோர்வு காரணமாக அவர் அப்படியே கீபோர்டிலேயே படுத்துத் தூங்கி விட்டார். அங்குதான் அவருக்கு விதி விளையாடி விட்டது.

293 மில்லியன் யூரோ
இதனால், அந்த வாடிக்கையாளரின் கணக்கில் 62.40 யூரோக்கள் வரவு வைக்கப்படுவதற்குப் பதிலாக 222,222,222,22 யூரோக்களாக பதிவானது. அவரின் மேலதிகாரியும் இந்தத் தவறைக் கவனிக்காமல் கையெழுத்திட்டு விட்டார். பின்னர் தவறு வேறு துறையினரால் கவனிக்கப்பட்டதால் சரி செய்யப்பட்டது.

போடுங்கப்பா வழக்கை
தற்போது இந்த ஊழியர் மீது வங்கி சார்பில் தொழிலாளர் கோர்ட்டில் வழக்குப் போட்டுள்ளனர். அதேபோல வேலையை விட்டும் தூக்கி விட்டனர். தூங்காதே தம்பி தூங்காதே என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்..

 

ராஜினாமாவை திரும்பப் பெற்றார் அத்வானி

பாரதிய ஜனதா கட்சியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு கட்சியின் தேர்தல் குழு தலைவர் பதவி கொடுக்கப்பட்டதை எதிர்த்து தான் வகித்த அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் ராஜினாமா செய்வதாக கூறியிருந்த கட்சியின் நிறுனர்களில் ஒருவரான எல் கே அத்வானி, 24 மணி நேரத்துக்குள் தனது முடிவை திரும்பப் பெற்றுவிட்டார்.

கட்சியின் பல்வேறு தலைவர்கள் மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் கோரிக்கையின்படி அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக எல் கே அத்வானியின் வீட்டில் அவரின்றி நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பின் போது பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

“அத்வானி அவர்கள் கட்சி தொடர்பாக எழுப்பிய கரிசனைகள் கவனிக்கப்படும் என்று நான் கட்சியின் சார்பாக தெரிவித்தேன். இது குறித்து அவரோடு இணைந்து செயல்படுவோம் என்றும் கூறினேன். இன்று மதியம் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவரான மோகன் பகவத், அத்வானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தேசிய நலனை கருத்தில் கொண்டு அவர் தொடர்ந்து கட்சிக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் முடிவை மதிக்க வேண்டும் என்றும் மோகன் பகவத் கேட்டுக் கொண்டார். மோகன் பகவத்தின் ஆலோசனையை ஏற்க அத்வானி முடிவு செய்துள்ளார்” என்றார் ராஜ்நாத் சிங்.

கட்சியின் தலைவர்கள் தமது சுய விருப்புக்களின் அடிப்படையில் செயல்படுவதாகவும் கட்சி போகும் பாதை தனக்கு ஏற்புடையாதாக இல்லை என்றும் எல் கே அத்வானி தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் குஜராத் முதல்வருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அவர் விரும்பாத்தாலேயே பதவி விலக முன்வந்ததாக நோக்கர்கள் கூறுகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியை தோற்றுவத்தவர்களில் ஒருவரான அத்வானி, அக் கட்சி தலைமையிலான கட்சி, நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அதன் செல்வாக்கு உயர முக்கிய காரண கர்த்தா ஆவார்.

தற்போது 85 வயதான அத்வானி பிரதமராக வேண்டும் என்ற ஆசையோடிருப்பதாக கூறப்படுகிறது. மோடிக்கு கொடுக்கப்பட்டுள்ள பதவி உயர்வு அடுத்த தேர்தலில் அத்வானி பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்படக் கூடிய வாய்ப்பை பெருமளவு மட்டுப்படுத்திவிட்டது.

ஜில்லாவுக்கு16 கோடி இந்திய ரூபாய் வாங்கிய விஜய்

vijay-jilla

நேசன் இயக்கும் ஜில்லா படத்தில் நடிக்க இளைய தளபதி விஜய் 16 கோடி இந்திய ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இளைய தளபதி விஜய்க்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. ஏன் அண்டை மாநிலமான கேரளாவிலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளதாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் தெரிவித்துள்ளார். விஜய் நடித்த காவலன் படம் ஹிட்டானது. அதன் பிறகு அவர் நடித்த படங்களும் ஹிட் தான்.

தொடர் ஹிட்ஸ்

காவலன், வேலாயுதம், நண்பன், துப்பாக்கி என விஜய் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

வருகிறார் தலைவா

இயக்குனர் விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா படம் விரைவில் திரைக்கு வருகிறது. அதில் விஜய் பாடியுள்ள பாடல் சூப்பர் ஹிட்டாகப் போகிறது என்று அஜீத் தெரிவித்துள்ளார்.

ஜில்லாவுக்கு ரூ.16 கோடி

தொடர்ந்து ஹிட் படங்கள்கொடுத்து வரும் விஜய் சம்பளத்தை உயர்த்தி வருகின்றார். இந்நிலையில் நேசன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ஜில்லா படத்திற்கு ரூ. 16 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார்.

 

உங்கள் மடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்..

 

virus

வங்கி கணக்குகள் மற்றும் கடவுச்சொல்(Password) உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது முன்பு வந்த ‘Win32/Ramnit’ என்ற வைரஸின் புதிய அவதாரமாக உள்ளது என்று இணையவெளியில் மேற்கொள்ளப்படும் திருட்டுகளைக் கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response Team India (CERTIn)) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வைரஸ் தான் நுழைந்த கணனிகளில் உள்ள EXE, dll அல்லது html ஆகிய கோப்புகளை(File) கண்டறிந்து அவற்றை இயக்கும் முதல் நடவடிக்கைக்குத் தேவையான குறியீடுகளை மாற்றி அமைக்கிறது.

பின்னர் இணையச் செயல்பாட்டில் உள்ள புரோடோகோல்(Protocol) எனப்படும் வழிமுறைகள், வங்கிக் கணக்குகளுக்கான யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்கள் ஆகியவற்றைத் திருடுகிறது.

கணனியில் இணைத்துச் செயல்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்(Flash Drive) போன்ற சாதனங்களையும் இது விட்டுவைப்பதில்லை. கணனியில் உள்ள பிரவுசர் செட்டிங்ஸ் மற்றும் டவுண்லோட் செட்டிங்ஸ் ஆகியவற்றையும் மாற்றி அமைக்கிறது.

இந்த வைரஸ் தன்னை அண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து முழுவதுமாக மறைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கணனிகளைப் பயன்படுத்தும் இமெயில் சேவையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. கணனியில் இணைத்து எடுத்துச் செயல்படுத்தும் அனைத்து சாதனங்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதில் உள்ள பைல்கள் அனைத்தையும் ரீசைக்கிள் பின்னில் பிரதி செய்கிறது.

அத்தகைய சாதனங்களில் autorun.inf என்னும் பைலை அமைக்கிறது. தான் தங்கிய கணனியில் உள்ள EXE , dll அல்லது html பைல்களில் தான் அமைத்துள்ள குறியீடுகளை இணைத்து அவற்றைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது.

இதன் மூலம் கணனி இணைக்கப்பட்டுள்ள சேவர்கள்(Server) மற்றும் இணையவெளியில் தொடர்பு கொள்ளும் அனைத்து சிஸ்டங்களின் இயக்கங்களும் இதன் கட்டுப்பாட்டில் வருகின்றன.

இதனால் இவற்றின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிறது. இவற்றைத் தடுக்க CERTIn குழு கீழ்க்காணும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டுள்ளது.

** எமக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளை தரவிறக்கம்(Download)  செய்திடக் கூடாது. அவற்றைத் திறந்து பார்க்கவும் கூடாது.

** நம்பிக்கையானவர்கள் மற்றும் நமக்குத் தெரிந்தவர்களிடம் இருந்து திடீரென வரும் இணைப்புகளையும் நம்பக் கூடாது. தேவையற்ற இணைய தளங்களுக்கான இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அவற்றில் கிளிக் செய்திடக் கூடாது.

** டெஸ்க்டொப் (Desktop) கணனிகளில் பயர்வோல் (Firewall) அமைப்பினை ஏற்படுத்தி இயக்க வேண்டும். நமக்குத் தேவைப்படாத அறிமுகம் இல்லாத போட்களை(Port) செயல் இழக்கச் செய்திட வேண்டும்.

** திருட்டு மென்பொருள் தொகுப்புகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவது இந்த வைரஸ் தொகுப்பினை நாமே வரவேற்கும் செயலுக்கு ஒப்பாகும்.

எனவே எந்தக் காரணத்திற்காகவும் இணையத்திலிருந்து திருட்டு மென்பொருள் தொகுப்புகளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடாது. மற்றவர்களிடமிருந்தும் வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.

 

சீரற்ற காலநிலை தொடர்கிறது: மீனவர்களுக்கு எச்சரிக்கை

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி, பொத்துவில் வரையான கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை வரையான கடல் மற்றும் கடற் கரையோரப் பிரதேசங்களிலும் சீரற்ற காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இப்பிரதேசங்கில் மணித்தியாலயத்திற்கு 70 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதன் காரணமாக மீனவர்களை அவதானமாக செயற்படுமாறு அத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த காலநிலையானது இன்று (12) மாலைவரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மாகாணங்களிலில் கூடிய மழை வீழ்ச்சிகளுடன் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இதேவேளை புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பிரசவத்துக்காக கர்ப்பிணி மனைவியை 40 கி.மீ சுமந்து வந்த கணவர்..

baby

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது கொன்னி மலை வனப் பகுதி. இங்கு அய்யப்பன் என்பவர் தனது 7 மாத கர்ப்பிணி மனைவி சுதாவுடன் வசித்து வருகிறார். வனப் பகுதியில் கிடைக்கும் தேன் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து இவர்கள் வாழ்க்கை நடத்தினர்.

கடந்த வாரம் சுதாவுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அங்கு போக்குவரத்து வசதி இல்லை. அங்கிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள கொக்கத்தோடு என்ற இடத்துக்கு வந்தால்தான் ஜீப்பில் பயணம் செய்ய முடியும். எனவே சுதாவை தோளில் சுமந்தபடி கொக்கத்தோடு செல்ல அய்யப்பன் முடிவு செய்தார். கனமழையில் நனைந்த படி சுதாவை தூக்கிக் கொண்டு மலைப்பாதை வழியாக அய்யப்பன் இறங்கினார் .
கொக்கத்தோடு வந்ததும் இருவரும் ஜீப்பில் ஏறி பத்தனம் திட்டா மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கு சுதாவை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு அதிக ரத்த அழுத்தம், வயிற்றில் சதைபிடிப்பு மற்றும் அதிகளவில் நீர் சேர்ந்திருந்ததை கண்டுபிடித்தனர். சுதாவை உடனடியாக கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர். அங்கு சுதாவை மகப்பேறு மருத்துவர் சுதாவை பரிசோதித்தார். வயிற்றில் இருந்த குழந்தை இறந்திருந்தது.

சுதாவுக்கு பிரசவ வலி மருந்து கொடுத்து, இறந்த குழந்தையை கடந்த வாரம் புதன் கிழமை வெளியேற்றினர். சுதா தீவிர சிகிச்சை பெற்று உடல் நலம் தேறி வருகிறார். இவர்களது சோகத்தை பத்திரிக்கையில் படித்தவர்கள் அய்யப்பன் தம்பதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.