பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ராஜினாமா..

adwani

இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் அவரது பதவி விலகலை ஏற்க மறுத்துவிட்டது. அவரது வழிகாட்டல் கட்சிக்கு இப்போதுதான் முன்னரைவிட கூடுதலாக தேவைப்படுகிறது என்று கட்சியின் அதியுயர் குழுவான நாடாளுமன்ற விவகாரங்கள் குழு கூறியுள்ளது.

கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்திலேயே அத்வானியின் ராஜினாமாவை நிராகரிப்பது எனும் முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், கட்சியின் தலைவர் என்கிற முறையில் இந்த ராஜினாவை எந்த சந்தர்பத்திலும் தன்னால் ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
ஆனாலும் தனது முடிவை மாற்றி கொள்ள அத்வானி மறுத்துவிட்டார் என்று டில்லியிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கட்சியின் சர்ச்சைக்குரிய அரசியல்வாதி குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து அத்வானியின் முடிவு திங்கட்கிழமை காலை வெளியாகியது.

கட்சி போகும் திசையைப் பற்றி தான் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கட்சியின் தலைவர்களில் பெரும்பாலானோர் தங்களது தனிப்பட்ட அரசியல் வாழ்க்கைக்கான திட்டங்களையே முன்கொண்டு செல்வது குறித்து தான் கவலை அடைவதாகவும் தனது ராஜினாமா கடிதத்தில் அத்வானி கூறியிருக்கிறார்.

பாஜவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான அத்வானி, இந்த வார இறுதியில் கோவாவில் நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்துக்கு செல்லவில்லை. அவர் தான் உடல் நலமில்லாது இருப்பதாகக் கூறியிருந்தார்.

 

புருணையில் வேலை வாங்கித் தருவதாக வடக்கு இளைஞர்களிடம் மோசடி..

vavuniya

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியவரை நம்பிய பல நூறு பேர் ஏமாற்றமடைந்துள்ளனர். வேலை கிடைக்கும். வெளிநாட்டிற்குச் செல்லலாம். விசா கிடைக்கும் என்ற ஆவலோடு வந்த வட இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வவுனியா நகர வீதிகளில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றனர்.

புருணை நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தரலாம் எனக் கூறிய வேலை வாய்ப்பு முகவர் ஒருவரை நம்பி, மூன்று மாதங்களுக்கு முன்னர், ஐம்பதினாயிரம் ரூபாய் பணத்தைக் கட்டியதாக அவர்கள் தெரிவித்தனர்.

“திங்களன்று விசா தருவதாகக் கூறி நேர் முகப் பரீட்சைக்கு வருமாறு வவுனியா ஈரப்பெரியகுளத்தில் உள்ள விருந்தினர் விடுதியொன்றிற்கு வருமாறு எங்களை அழைத்திருந்தார்கள். காலையிலேயே அங்கு சென்று காத்திருந்தோம். வருவதாகக் கூறியவர்கள் வரவே இல்லை. மதியத்தின் பின்னர் அவர்கள் தொலைபேசிகளையும் துண்டித்துவிட்டார்கள். தொடர்பு கொள்ள முடியவில்லை. நாங்கள் பணம் செலுத்திய மதவாச்சி நகரில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று விசாரித்த போதிலும் சரியான பதில் எங்களுக்குக் கிடைக்கவில்லை” என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.

ஜயசிங்க என்பவர் தான் விமானப் படையில் பணியாற்றுவதாகவும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகத் தெரிவித்தாகவும் ஆனால் அவர் சொன்னபடி ஏதும் நடக்கவில்லை என்றும் அவர்கள் புலம்புகின்றனர்.
“இன்று காலை எட்டு மணிக்கெல்லாம் ஈரப்பெரியகுளத்திற்கு வாருங்கள். விசா தருவோம் என்றார்கள். அங்கு போய் காத்திருந்ததுதான் மிச்சம். ஒருவருமே வரவில்லை. அங்குள்ள ஓட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்கள்.

அங்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. ஏமாற்றத்தோடு திரும்பிய நாங்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் போனால், அவர்கள் மதவாச்சியில் பணம் கட்டியபடியால் அந்த பொலிஸ் நிலையத்தில் சென்ற முறையிடுமாறு கூறி அனுப்பி விட்டார்கள். இனி என்ன செய்வது என்று தெரியாமல் நடு வீதியில் நிற்கிறோம்” என்று அவர்கள் கவலை வெளியிட்டனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 150 பேர் இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகப் பணம் செலுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. போர் முடிந்த பிறகும் வடக்குப் பகுதிகளில் வேலை வாயப்புகள் பெரிதாக உருவாகவில்லை. மேலும் அங்கேயிருக்கும் பல்வேறு நெருக்கடிகள் காரணமாகவும் பலர் இங்கையில் இருந்து வெளியேற முற்படுகின்றனர்.

 

ஐபிஎல் குற்றச்சாட்டுகள் : மூன்று வீரர்களுக்கும் பிணை கிடைத்தது

இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் முறைகேடான வழிகளில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் டில்லி நீதிமன்றம் ஒன்று பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இவர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்ட கூடுதல் அமர்வு நீதிபதி வினய் குமார் கண்ணா காவல்துறையினர் மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

ஸ்ரீசாந்த், அக்னித் சவான் மற்றும் அஷோக் சண்டிலா ஆகியோர், ‘மராட்டிய மாநிலச் சட்டமான திட்டமிட்டு குற்றங்களைச் செய்யும் தடுப்புச் சட்டத்தின் கீழ்’ குற்றவாளிகள் என்று நம்புவதற்கு போதிய காரணங்கள் இல்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

திட்டமிட்டு குற்றங்களைச் செய்யும் கும்பல்களுடன் இந்த மூன்று வீரர்களுக்கும் தொடர்பு இருந்தது என்று கூறுவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

பின்னடைவு
நீதிதியின் பிணை உத்தரவும், கண்டனங்களும் வழக்கை விசாரித்து வரும் டில்லி காவல்துறையினருக்கு ஒரு பெரிய பின்னடைவு என்று கூறப்படுகிறது.

இந்த மூன்று விரர்கள் தவிர ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டுகளீன் கீழ் கைது செய்யப்பட்ட 14 புக்கிகளுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

தாவூத் இப்ராஹிம் மற்றும் சோட்டா ஷகீல் போன்றவர்களுடன் இவர்களுக்கு தொடர்புகள் இருந்தன என்று கூறி மராட்டிய மாநிலச் சட்டத்தை பயன்படுத்தியதற்கு போதிய காரணங்கள் மற்றும் நீதிமன்றத்துக்கு திருப்தியை ஏற்படும் வகையிலான ஆவணங்களையும் காவல்துறையினர் சமர்பிக்கவில்லை என்றும் நீதிபதி தமது உத்தரவில் சுட்டிகாட்டியுள்ளார்.

பிணை வழங்கப்பட்டுள்ள அனைவரும் தமது கடவுச் சீட்டுகளை நீதிமன்றத்தில் கையளிக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் இந்தியாவுக்குள் பயணத்தை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குருநாத் மெய்யப்பன் மற்றும் விந்து தாரா சிங் ஆகியோர் ஏற்கனவே பிணையில் வெளிவந்துள்ளனர்.

பறவைகளால் தரையிறங்க முடியாது வானிலேயே வட்டமிட்ட விமானங்கள்

flight

இன்று சென்னை விமான நிலையத்தில்  பறவைகளால் விமானங்கள் தரையிறங்க முடியாது வானிலேயே பல நிமிடங்களுக்கு வட்டமிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சென்னை விமான நிலையத்திற்கு ஏராளமான பன்னாட்டு, உள்நாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. அத்துடன் விமான நிலைய பகுதியில் ஏராளமான பறவைகள் பறக்கின்றன.

பறவைகள் கூட்டமாக பறக்கும்போது சில பறவைகள் விமானத்தின் மீது மோதுவதால் அதன் கண்ணாடி உடையவும் இயந்திரங்கள் சேதமடையவும் வாய்ப்பு உருவாகிறது. இதனால், விமானங்கள் விபத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னைக்கு வந்த ஒரு விமானத்தின் இயந்திரத்தில் பறவைகள் சிக்கிக் கொண்டன.

இதனால் அந்த விமானம் ஓடுபாதையிலேயே நிற்கும் சூழல் உருவானது. இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பல விமானங்கள் தரையிறங்க இயலவில்லை. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப நிபுணர்கள் விரைந்து சென்று இயந்திரத்தில் சிக்கிய பறவைகளை அகற்றினார்கள்.

இதற்குள் சென்னை விமானத்தில் தரையிறங்க வேண்டிய பல விமானங்கள் கீழே இறங்க முடியாமல் வானத்திலேயே வட்டமிட்டன. இன்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் 50 நிமிடங்கள் வானத்தில் வட்டமடித்தது. நிலைமை சரியானபிறகே சரியாக 4.20 மணிக்கு தரையிரங்கியது.

இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமானங்கள் வருவதிலும் புறப்படுவதிலும் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதையடுத்து பறவைகளை வெடி போட்டு கலைத்தனர். அதன்பிறகு விமான போக்குவரத்து சேவை வழக்கம்போல் நடந்தது.

இன்றையதினம் நடைபெற்றுவரும் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல்விழா காட்சிகள் (படங்கள் இணைப்பு).

இன்றைய தினம்நடைபெற்றுவரும் வவுனியா, புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தில் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

1

2

3

4

5

6

படங்கள்: -சுகுமார்-

காபூல் விமான நிலையம் அருகே தாலிபன்கள் அதிரடித் தாக்குதல்

afgan

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரதான சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே தாலிபன் இயக்கத்தினர் இன்று அதிகாலை அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் அந்நாட்டின் எல்லா பயணிகள் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆப்கன் இராணுவ முகாமுக்கு அருகே இருந்த கட்டிமுடிக்கப்படாத- 5 மாடிக் கட்டிடமொன்றை ஆயுததாரிகள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துகொண்டு இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.

மூன்று மணிநேரம் இந்த மோதல் நீடித்துள்ளது. குண்டுச் சத்தங்களால் அந்தப் பகுதியே அதிர்ந்துள்ளது.
ஆப்கன் பாதுகாப்புப் படையினரும் தாலிபன் ஆயுததாரிகளும் இயந்திரத் துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தி கடுமையான சண்டையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்புப் படையினர் 5 தாலிபன் ஆயுததாரிகளை இதன்போது சுட்டுக்கொன்றதாக காபூல் காவல்துறையினர் கூறுகின்றனர்.
மேலும் இருவர் தம்மைத்தாமே வெடிக்க வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தமது தரப்பில் ஆட்சேதங்கள் இல்லையென்றும் ஆப்கன் பாதுகாப்பு படையினர் கூறுகின்றனர்.

சர்வதேச படைகளின் உதவியின்றி ஆப்கன் படைகளே தனியாக இந்தத் தாக்குதலை முறியடித்துள்ளதாக காபூலில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்காவிற்கு 16 அடி சரஸ்வதி சிலையை பரிசளித்த இந்தோனேஷியா..

sarasvathi

முஸ்லிம் நாடான இந்தோனேசியா அமெரிக்காவுக்கு சரஸ்வதி சிலை ஒன்றை பரிசளித்துள்ளது.

இந்தோனேசியாவின் மக்கள் தொகை 25 கோடி. இதில் மூன்று சதவீத மக்கள் இந்துக்கள். இதன்படி முஸ்லிம் நாடான இந்தோனேசிய சமீபத்தில், அமெரிக்காவுக்கு 16 அடி உயரமுள்ள சரஸ்வதி சிலையை பரிசளித்துள்ளது.

வாஷிங்டனில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் இந்த சிலை தற்போது வைக்கப்பட்டுள்ளது. பாலித்தீவைச் சேர்ந்த ஐந்து சிற்பிகள் இந்த சிலையை வடிவமைத்துள்ளனர்.

முறைப்படி இன்னும் இந்த சிலை, திறப்பு விழா நடக்கவில்லை. அதற்குள்ளாக அந்த வழியே செல்பவர்கள் இந்த சிலையை பார்த்து வியக்கின்றனர்.

 

இயக்குனர் சங்கத் தலைவராக விக்ரமன் தெரிவு: விசு தோல்வி.

vikraman

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் இசைக் கலைஞர்கள் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் விக்ரமன் தலைமையிலான ஒரு அணியும் நடிகரும் இயக்குனருமான விசு தலைமையிலான ஒரு அணியும் போட்டியிட்டது.

இதில் விக்ரமன் தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு விக்ரமனும் செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியும், பொருளாளர் பதவிக்கு வி.சேகரும் போட்டியிட்டனர்.

மேலும், துணை தலைவர் பதவிக்கு பி.வாசுவும் , கே.எஸ்.ரவிக்குமாரும் போட்டியிட்டனர். இணை செயலாளர்கள் பதவிக்கு லிங்குசாமி, சண்முக சுந்தரம், ஏகம்பவாணன், பேரரசு ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக திருமலை உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர்.

விசு தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு விசுவும், செயலாளராக ஆர்.சுந்தர்ராஜன், பொருளாளர் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை. துணை தலைவராக மங்கை அரிராஜன், அரவிந்த்ராஜ் ஆகியோரும் இணை செயலாளர்களாக செய்யாறு ரவி, வி.பிரபாகர், ஜெய்பிராகஷ், கண்ணன் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக ரவிமரியா உள்ளிட்ட 12 பேரும் போட்டியிட்டனர்.

2700 உறுப்பினர்களை கொண்ட இச்சங்கத்திற்கான தேர்தல் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் வாக்களித்தனர்.

மேலும் நடிகர்கள், சத்யராஜ், பார்த்திபன், எஸ்.வி.சேகர், ராமராஜன் ஆகியோரும் படம் இயக்கி உள்ளதால் அவர்களும் வாக்களித்தனர். இந்த வாக்குபதிவு முடிவுகள் பின்னர் அறிவிக்கப்பட்டன.

இதில் இயக்குனர் விக்ரமன் 716 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட விசு 556 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். மற்ற பதவிகளுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்.

இதேவேளை நடிகர் ரஜினின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியும், இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் இத்தேர்தலில் வாக்களிக்க வந்தார். ஆனால் உள்ளே நுழைந்த அவரை தேர்தல் அதிகாரிகள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதுகுறித்து காரணம் கேட்டதற்கு, இயக்குனர் சங்கத்தில் உறுப்பினராக நீடிப்பதற்கு வருடா வருடம் ரூ.600 சந்தா செலுத்த வேண்டும்.

இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் இந்த தொகையை செலுத்தவில்லையாம். எனவே அவர் வாக்களிக்க அனுமதி கிடையாது எனக்கூறி திருப்பி அனுப்பப்பட்டார் என்று கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா தன்னுடைய கணவர் தனுஷை வைத்து ‘3’ என்ற படத்தை இயக்கினார். தற்போது கடல் படத்தில் நடித்த கௌதம் கார்த்திக்கை வைத்து புதிய படத்தை இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நான் செரிலாக்ஸ், பாரக்ஸ் குடித்து வளரவில்லை.. ஏழ்மையில் வாடியவன் நான் -தனுஷ்..

images

நான் செரிலாக்ஸ் சாப்பிட்டோ பாரக்ஸ் குடித்தோ வளர்ந்தவன் இல்லை. இளம் வயதில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் ஏழ்மையில் வாடியவன் என்று கூறியுள்ளார் நடிகர் தனுஷ். தனுஷின் மரியான், ராஞ்ஜ்ஹனா படங்கள் வெளியாகவிருக்கின்றன. இதையொட்டி அவர் பேட்டிகள் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தன் இளமை நாட்களை நினைவு கூர்ந்துள்ளார்.

ஏழ்மை..

அவர் கூறுகையில்  அடிப்படையில் ரொம்ப ஏழ்மையான குடும்பம் எங்களுடையது. என் இளமை மிகுந்த வறுமையில் கழிந்திருக்கிறது. நான் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் என் பெற்றோர் சென்னைக்கு வந்தனர். என் அப்பா ஒரு மில்லில் மாதம் ரூ 15 கூலிக்கு வேலை செய்தார். நான் செரிலாக்ஸோ பாரக்ஸோ குடித்து வளரவில்லை. அதிகபட்ச நல்ல உணவு அக்கம்பக்கத்து வீடுகளில் கொடுத்த தயிர்சாதம்தான்.

அண்ணன் பட்ட கஷ்டம்..

நானாவது பரவாயில்லை என் அண்ணன் வெறும் தண்ணீரைக் குடித்து பசியைப் பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறார். அதனால் என் அம்மாவுக்கு இயல்பாகவே அவர் மீது பாசம் அதிகம். என் தந்தை அதற்குள் சினிமாவில் உதவி இயக்குநராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் இயக்குநராகவும் ஆகிவிட்டார்.

ஹீரோவானது எப்படி?

என்னுடைய 16வது வயதில் அப்பா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த நான்கு சிறுவர்களில் ஒருவர் கடைசி நேரத்தில் விலகிக் கொள்ள அந்த வேடத்தில் நடிக்க 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என்னை கூட்டிவந்துவிட்டார். முதல் படம் வெளியாகி நன்றாக ஓடினாலும் கூட என்னை ஒரு ஹீரோவாக யாரும் மதிக்கவில்லை. ஆனால் காதல் கொண்டேன் வந்தது. ஒரே நாளில் ஹீரோவாகிவிட்டேன்.

ரஜினியுடனான உறவு

எனக்கும் ரஜினிசாருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. எங்களுடைய உறவு சாதாரணமானதாகவும், நல்ல மதிப்புடையதாகவும் இருக்கிறது. அவருக்கு ஒரு படம் பிடித்து விட்டால் மருமகனாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி அவரே முன் வந்து பாராட்டுவார்.

எப்போதும் ரஜினி ரசிகன்

காதல் கொண்டேன் படம் திரையரங்கில் நல்லா ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு நாள் ரஜினி சார் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. என்னை அவரின் பண்ணை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதன்படியே நான் அங்கு சென்றேன். அங்கு ரஜினி சார் என்னை வெகுவாக பாராட்டினார். நான் எப்போதுமே ரஜினிசாருடைய ரசிகன்தான். அது எப்போதும் எந்த வாழ்க்கையிலும் மாறாது.

 

 

அமெரிக்க உளவு ரகசியங்கள் அம்பலமானது எப்படி என தெரியவந்தது..

edward

அமெரிக்க வரலாற்றில் நடந்துள்ள மிகப்பெரிய பாதுகாப்பு விதி மீறல்களில் ஒன்றான அந்நாட்டின் புலனாய்வு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பான நபர் தாமாக முன்வந்து தனது அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

29- வயதான எட்வர்ட் ஸ்நோவ்டென் என்ற இந்த இளைஞன் அமெரிக்க உளவுத்துறையான சீஐஏ-இன் முன்னாள் கணினி நிபுணர்.

அமெரிக்காவின் மிகவும் ரகசியமானதும் வெளியிடப்பட முடியாததுமான மிக நுணுக்கமான உலக கண்காணிப்பு செயற்திட்டத்தை அம்பலப்படுத்தியதை அவர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். கோடிக்கணக்கான தொலைபேசி உரையாடல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் ஏனைய உலகளாவிய நாளாந்த தொடர்பாடல்களைக் கண்காணிக்கின்ற புலனாய்வு பொறிமுறை செயற்திட்டத்தையே அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.

அமெரிக்க உளவுத்துறையினர் அரச அதிகாரத்தை சீர்குலைத்து ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாக பிரிட்டனிலிருந்து வெளியாகும் த கார்டியன் நாளிதழின் இணையதளத்துக்கு அனுப்பியுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
மக்களின் அந்தரங்க வாழ்க்கையையும் இணையதள சுதந்திரம் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களையும் அழிப்பதற்கு தான் இடமளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் ஒபாமா இவை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஸ்நோவ்டென் விசனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிகாரிகள் தன்மேல் நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிப்பார்கள் என்றும் தான் தற்போது ஹொங் ஹொங்(Hong Kong) இல் இருப்பதாகவும் பேச்சு சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ள எந்தவொரு நாட்டிலும் தஞ்சம் கோரவுள்ளதாகவும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாக அமெரிக்க நீதிவிசாரணைத் துறை அறிவித்துள்ளது.

 

இலங்கை தேசிய கீத சர்ச்சை தொடர்பில் ஐசிசி கவலை

Print

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப நிகழ்வின் போது இலங்கை தேசிய கொடி எடுத்துச் செல்லும்போது ஏற்பட்ட தவறிட்கு, சர்வதேச கிரிக்கெட் சபை கவலை வெளியிட்டுள்ளது.

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப நிகழ்வின் போது இலங்கை தேசிய கொடி எடுத்துச் செல்லும்போது நாட்டின் தேசிய கீதத்திற்கு பதிலாக ஹிந்தி பாடல் ஒன்று ஒலிபரப்பப்பட்டது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்பட்டுத்தியுள்ள நிலையில் இது தவறுதலாக நடந்த விபத்து ஒன்று என சர்வதேச கிரிக்கெட் சபை கவலை வெளியிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஐசிசி பணிப்பாளர் கிரிஸ் ரெடிலி எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் உரிய அதிகாரிகளிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.

 

அஜித் படத்தில் நான் கவர்ச்சியாகத்தான் நடிக்கிறேன்! – தமன்னா

thamana

தமன்னா அஜித் படத்தில் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை. அதில் எனக்கு கவர்ச்சியான வேடம்தான் என்கிறார் தமன்னா. தெலுங்கிலும் இந்தியிலும் கிட்டத்தட்ட முக்கால் நிர்வாணம் எனும் அளவுக்கு கவர்ச்சி காட்டும் நடிகைகள் தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் கவர்ச்சி காட்டுவதில் ஏகத்துக்கும் தயங்குவது வழக்கம்.

அந்த நடிகைகள் வரிசையில் தமன்னாவும் சேர்ந்துவிட்டதாக தயாரிப்பாளர்கள் முணுமுணுக்க ஆரம்பித்தனர். நீண்ட நாளைக்குப் பிறகு தமிழில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் புதிய படத்தில் குடும்பப் பாங்காகத்தான் நடிப்பேன் என்று தமன்னா அடம்பிடித்ததாகக் குற்றம்சாட்டினர்.

இதற்கு சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார் தமன்னா. அவர் கூறுகையில், “நான் கவர்ச்சியாக நடிக்க மறுக்கவில்லை. காட்சிக்கு அவசியம் என்றால் கவர்ச்சியாக நடிக்கத் தயாராகவே இருக்கிறேன். மொழி வித்தியாசம் பார்ப்பதில்லை. அஜித் படத்தில் குடும்ப பாங்காகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்ததாக தவறான வதந்திகள் பரவியுள்ளன.

என் உடலுக்கு கவர்ச்சியான உடைகள் அணிவது தான் பொருத்தமாக இருக்கும். ஏற்கனவே பல படங்களில் மழைக் காட்சிகளில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். இனியும் கவர்ச்சியாகவே நடிப்பேன்,” என்றார்.

 

வவுனியாவில் உழவியந்திரம் தடம்புரண்டதில் அதன் சாரதி நசியுண்டு உயிரிழப்பு..!

accedent

வவுனியா சேமமடு குளக்கட்டுமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவியந்திரம் தடம்புரண்டதில் அதன் சாரதி நசியுண்டு உயிரிழந்துள்ளார்.

இதன் சாரதியான முல்லைத்தீவு முள்ளியவளையினை சேர்ந்த 50 அகவையுடைய ஆறுமுகம் சுந்தரலிங்கம் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட இவர் இடம்பெயர்ந்து வவுனியாவில் வசித்து வந்துள்ள நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

கருமையான தலைமுடியை இயற்கையாக பெற ஆசையா?

hair

தலைமுடிக்கு அழகே கருப்பு நிறம் தான். அத்தகைய கருமையான  தலைமுடி தற்போது பலருக்கு கிடைப்பது இல்லை ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் எமது பழக்க வழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால் உடலுக்கே போதிய சக்துக்கள் கிடைக்காத நிலையில்  தலைமுடிக்கு மட்டும் எப்படி சத்துக்கள் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி அதிக நேரம் வெயிலில் சுற்றுவதால்,  தலைமுடியின் நிறம் மாறாமல் இருப்பதற்கு தடவிய எண்ணெய் சூரியனால் உறிஞ்சப்பட்டு, கருமை நிறமானது மங்கிவிடுகிறது.சிலருக்கு இளமையிலேயே நரை முடியானது வர ஆரம்பிக்கிறது. அதற்கு பரம்பரை அல்லது ஊட்டச்சத்தின்மை தான் காரணமாக இருக்கும்.

எனவே கூந்தலின் நிறம் மாறாமல் கருமையாக இருப்பதற்கு  நல்ல ஆரோக்கியமான உணவுகளையும், கூந்தலுக்கு அவ்வப்போது போதிய பராமரிப்புக்களையும் கொடுக்க வேண்டும். அதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று பராமரிப்பு கொடுக்க வேண்டியதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே  தலைமுடியை பராமரித்து கருமையான  தலைமுடியை நிலைக்க வைக்கலாம்.

கூந்தலின் கருமை மாறாமல் இருப்பதற்கும் இருக்கும் கருமையை தக்க வைக்கவும், என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போம் . அதைப் படித்து தெரிந்து கொண்டு பின்பற்றி வந்தால் இயற்கையாக கருமை கூந்தலைப் பெறலாம்.

கறிவேப்பிலை

கருப்பான  தலைமுடியைப் பெறுவதற்கு பயன்படும் மூலிகைகளில் கறிவேப்பிலை முக்கியமானது. ஆகவே கறிவேப்பிலையை வெயிலில் காய வைத்து சூடான எண்ணெயில் சேர்த்து ஒரு வாரத்திற்கு குளிர வைத்து பின் அதனை கொண்டு மசாஜ் செய்தால் கருமையான  தலைமுடியைப் பெறலாம்.

செம்பருத்தி எண்ணெய்

தலைமுடிக்கு நிறமூட்டுவதற்கு செம்பருத்தி எண்ணெய் மிகவும் சிறந்தது. அதற்கு செம்பருத்தி எண்ணெயையோ அல்லது சூடான எண்ணெயில் செம்பருத்தி பூக்களை போட்டு ஊற வைத்தோ தினமும் முடிக்கு தடவ வேண்டும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. கருமையான கூந்தலைப் பெறவும் தான் உதவியாக உள்ளது. எனவே நெல்லிக்காய் எண்ணெய் அல்லது நெல்லிக்காய் சாறு கொண்டு வாரத்திற்கு இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால் கூந்தல் கருமையோடும் அடர்த்தியோடும்
வளரும்.

சீகைக்காய்

தலைமுடிக்கு ரசாயனம் கலந்த ஷாம்புக்களை பயன்படுத்துவதற்கு பதிலாக சீகைக்காய் பயன்படுத்தி குளித்தால் முடி நன்கு ஆரோக்கியமாக கருமை நிறத்துடன் வளரும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை கூந்தலுக்கு பல வழிகளில் பயன்படுகிறது. அவற்றில் பொடுகுத் தொல்லையை நீக்கும் என்பது தான் பிரபலமானது. ஆனால் இந்த சாற்றினைக் கொண்டு கூந்தலுக்கு தடவி ஊறவைத்து குளித்தால்  தலைமுடியானது கருமையாக இருக்கும்.

கரட் ஜூஸ்

கரட் சாப்பிட்டால் அதில் உள்ள கரோட்டினாய்டுகள் முடிக்கு கருமை நிறத்தை தரும். அதற்காக அதன் சாற்றை முடிக்கு பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக கேரட் சாற்றை அதிகம் குடிப்பது மிகவும் நல்லது.
எண்ணெய் மசாஜ்

தலைமுடிக்கு ஒரு மாத காலமாக எண்ணெய் தடவாமல் இருந்தால், கூந்தல் பிரவுன் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். எனவே கூந்தலுக்கு தினமும் எண்ணெய் தடவுவது மிகவும் இன்றியமையாதது. மேலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெயை சூடேற்றி தலைக்கு மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் கூந்தல் ஆரோக்கியமாகவும் கருமை நிறத்துடனும் இருக்கும்.

நல்லெண்ணெய்

அனைவருக்குமே நல்லெண்ணெய் கூந்தலுக்கு கருமை நிறத்தை தரும் என்பது தெரியும். எனவே இந்த எண்ணெய் முடிக்கு பயன்படுத்தினால் அது  தலைமுடியில் இருக்கும் கருமை நிறத்தை தங்க வைக்கும்.

கூந்தல் பாதுகாப்பு

வெளியே வெயிலில் செல்லும் போது  தலைமுடியின் மேல் சூரியக்கதிர்கள் நேரடியாக படும்படி வைத்துக் கொள்ளக் கூடாது. ஆகவே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பி அணிந்து கொண்டு செல்ல வேண்டும். இதனால் சூரியக்கதிர்களின் தாக்குதலால்  தலைமுடியில் ஏற்படும் நிற மாற்றத்தைத் தடுக்கலாம்.

 

 


கதிர்காம உற்சவ நாள் மாற்றத்தால் இந்துக்கள் ஏமாற்றம்..

kathirkamam

கதிர்காம உற்சவ திகதி பிற்போடப்பட்டமையால் அதனை ஒட்டி உற்சவம் நடத்தும் முருகன் ஆலயங்கள் குழப்பத்தில் உள்ளன.

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடி மாத தீர்த்த உற்சவம் வழமைக்கு மாறாக இந்த வருடம் ஆவணி மாதம் நடைபெறும் என்று நிர்வாகத்தினர் எடுத்துள்ள முடிவு காரணமாக இந்து பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றான கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த உற்சவம் ஆடிப் பௌர்ணமிக்கு 15 நாள் முன்னதாக கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆடிப் பௌர்ணமி தினத்தில் தீர்த்தத்துடன் முடிவடைவது வழமையாகும்.

இந்த உற்சவ காலத்தில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான சிங்கள பௌத்தர்களும் தமிழ் இந்துக்களும் கதிர்காமம் சென்று வழிபடுவார்கள். இந்த ஆண்டு ஜூலை 8ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜுலை 22ம் திகதி ஆடிப் பௌர்ணமி தினமன்று தீர்த்த உற்சவத்துடன் முடிவடைவதாக இந்து பஞ்சாங்க நாட்காட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ஆகஸ்ட் 7ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் உற்சவம் ஆகஸ்ட் 21ம் திகதி ஆவணி பௌர்ணமிக்கு முதல்நாள் அன்றே தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறும் என்று தற்போது ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் தமக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் அளிப்பதாக இந்து அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. கதிர்காம ஆலயத்தின் உற்சவ திகதியை ஒட்டியே திருவிழாக்களை நடத்தும் முருகன் ஆலயங்களின் திருவிழாக் காலங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

பஸ்நாயக்க நிலமே எனப்படும் கதிர்காம நிர்வாகத் தலைவர்களாலேயே இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான காரணங்கள் பற்றி தெரிவிக்கப்படவில்லை என்றும் நாட்டின் இந்து கலாசார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை கதிர்காம உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக வடக்கிலிருந்து- கிழக்கு மாகாணம் ஊடாக மாதக் கணக்கில் பாத யாத்திரையில் ஈடுபட்டுள்ள இந்து அடியார்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட பாத யாத்திரை குழுவினர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் ஊடாக தற்போது திருகோணமலை மாவட்டம் பட்டித்திடல் முருகன் ஆலயத்தை வந்தடைந்துள்ளனர்.

ஆடி மாதம் பௌர்ணமிதான் முருகனுக்குரிய ஆடிவேல் தினம். அப்படியிருந்தும் கதிர்காமம் ஆடிவேல் உற்சவத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம் கவலை அளிக்கிறது என்று பாதயாத்திரை பக்தர்கள் கூறுகின்றனர்.ஆனால், உற்சவத்தை முன்னிட்டு கன்னிக்கால் நாட்டப்பட்டு 45 நாட்களின் முடிவிலேயே தீர்த்தோற்சவம் நடத்த வேண்டுமென்பதால், கன்னிக்கால் நாட்ட வேண்டிய கடந்த வைகாசி பௌர்ணமி தினத்தன்று அதற்கு உகந்த நேரம் அமையவில்லை என்று கதிர்காம ஆலயத்தின் தலைமை கப்புறாளை- பூசகர் சோமபால பி. ரத்நாயக்க தெரிவித்தார்.

அதனாலேயே, எதிர்வரும் ஆணி பௌர்ணமி தினத்தில் கன்னிக்கால் நாட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

 

பூமி அருகாமையில் பறந்து வந்த விண்கல்.. தொடரும் ஆபத்துக்கள்.. நாசா எச்சரிக்கை..

earth-600
நேற்று ஒரு பேருந்து அளவிலான விண்கல்லொன்று பூமிக்கு மிக அருகில் வந்து சென்றதாக நாசா அறிவித்துள்ளது. 2013-எல்.ஆர்.6 என பெயரிடப்பட்ட அந்த விண் கல் கிட்டத்தட்ட பெருந்து அளவில் இருந்ததாகவும் மேலும் பூமிக்கு மிக அருகில் வந்து சென்றதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 30 அடி அகலமுடைய அந்த விண்கல்லால் எந்த அபாயமும் பூமிக்கோ அல்லது செயற்கைகோள்களுக்கோ ஏற்படவில்லை என நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கியூ.இ-2 என்று பெயரிடப்பட்ட 2.7 கிலோ மீட்டர் நீளமுடைய ஒரு விண்பாறை ஒன்று இதேபோன்று பூமிக்கு அருகில் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்தநிலை நீடித்தால் விண்கற்கள் அல்லது விண்பாறைகளால் பூமிக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படலாம், எனவே இப்போதிருந்தே நாம் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது என நாசா எச்சரித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.