இலங்கையைச் சேர்ந்த இரண்டு உயர்நிலை படை அதிகாரிகள் நீலகிரி மாவட்டம் வெலிங்கடனிலுள்ள பாதுகாப்படைகள் பயிற்சி கல்லூரிக்கு வந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம் உட்பட்ட பல கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்ளூரிலுள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவர்களின் போராட்டத்தின் போது நீலகிரி மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு போகும் பாதைகள் பலமணி நேரம் தடைபட்டிருந்ததாகவும் அவர் கூறுகிறார். மேலும் குன்னூர் மற்று வெலிங்கடன் பகுதிகளில் கூடுதலாக இராணுவம் மற்றும் காவல்துறையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை இராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதமொன்றில் அவர் விங் கமாண்டர் எம்,.எஸ்.பண்டார தசநாயக் மற்றும் மேஜர் ஹரிஷ்சந்திர ஹெட்டியாராச்சிகே ஆகிய இரு உயர் இலங்கை இராணுவ அதிகாரிகள் உதகை வெலிங்டன் பயிற்சிக் கல்லூரிக்கு வந்திருப்பதாகத் தனக்குத் தகவல் வந்திருப்பதாகவும் ஏற்கெனவே பலமுறை தான் தனது எதிர்ப்பைத் தெரிவித்தும், தமிழக சட்டமன்றத்திலேயே இதுகுறித்த கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், இத்தகைய பயிற்சி தொடர்வது தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்துவதையே எடுத்துக்காட்டுகிறது என்றும் குறைகூறுகிறார்.
மேலும் கடந்த மே 27 அன்று தஞ்சையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே அண்டனி இலங்கை வீரர்களுக்குத் தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படக்கூடாது என மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக அறிவித்த அதே நாளில்தான் தசநாயகவும், ஹெட்டியாராச்சிகேயும் வெலிங்டனில் பயிற்சிக்கான ஆயத்தங்களைத் துவங்கினார் என்கிறார் முதல்வர். பயிற்சி கொடுப்பதில்லை என்பது அரசின் கொள்கை முடிவென்றால் எப்படி பாதுகாப்பு அமைச்சருக்குத் தெரியாமல் இப்படி இருவர் அழைக்கப்படலாம் என அவர் வினவுகிறார் .
இந்நிலையில் அவ்விருவரும் தங்கள் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படவேண்டும், இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நிகழும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாததுவரை, தமிழக மீனவர்கள் மீதான் தாக்குதல்கள் நிறுத்தப்படும்வரை இந்தியா மற்றும் இலங்கைக்கிடையே எவ்வித இராணுவ ரீதியான உறவுகள் இருக்கக்கூடாது என தமிழக முதல்வர் தனது கடிதத்தில் மேலும் கோரியிருக்கிறார்.