1 லட்சத்து 60 ஆயிரம் வைன் லேபிள் சேகரித்து கனடியர் சாதனை

collection

உலகின் மிகப்பெரிய வைன்-லேபிள் சேகரிப்பை முழுவதுமாக பார்த்து முடிக்க 4 நாட்கள் தேவைப்படுமென கூறப்படுகின்றது.
டொறொன்ரோவைச் சேர்ந்த Alain Laliberte 160,000 வைன்-லேபிள்களை வைத்திருக்கின்றார்.

இவைகளை 123 சப்பாத்து பெட்டிகளில் கவனமாக வைத்துள்ளார். Guinness World Records இடம் பெற்றிருக்கும் அதிக அளவான வைன்- லேபிள்களின் தொகை 16,349 என்றும் அதனால் தான் அந்த ரெக்கார்டை உடைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் அவர்களுடன் தொடர்புகொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இவர் லேபிள்களை அவை உற்பத்தி செய்யப்பட்ட நாடுகளின் வரிசையிலும், கருப்பொருளின் அடிப்படையிலும் ஒழுங்குபடுத்தி வைத்துள்ளார்.

இவரது சேகரிப்பில் மிக பழமையானது ஜேர்மனி நாட்டின் 1859ம் வருடத்தைச் சேர்ந்ததாகும். சில தற்போது பாவனையில் இல்லாதவை.சேகரிப்பதை தான் நிறுத்தப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

 


கட்டாயமாக்கப்பட்டுள்ள வட மாகாண வாகனங்களுக்கான புகைப் பரிசோதனை..

smoke
வடமாகாணத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் அனைத்திற்கும் புகைப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டர் பதிவுகள் ஆணையகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

வடமாகாணத்தில் புகை பரிசோதனை திட்டம் இதுவரையில் நடைமுறையில் இல்லாததால் அங்கு சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து அவதானம் செலுத்த வேண்டி உள்ளது.

இந்த நிலையில் புகைப்பதிவினை மேற்கொள்ளாத வாகனங்களின் பதிவுகள் வழங்கப்பட மாட்டாது என்றும் ஆணையகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் புகைப்பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் இருக்கின்ற நிலைகளில் இந்த விடயத்தில் வடமாகாணத்தில் சிக்கல் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புகைப் பரிசோதனை மேற்கொள்ளப்படாதுள்ள நிலையில், வடமாகாணத்தில் இருந்து தென்னிலங்கை நோக்கி வருகின்ற வாகனங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மன்னாரில் விளையாட்டு மைதானத்தில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு

மன்னார் பறப்பாங்கண்டல் றோ.க.த.க. பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும், தேவாலயம் கட்டுவதற்காண நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

பறப்பாங்கண்டல் றோ.க.த.க. பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலை வளர்ச்சி சமூகமும் என சுமார் நூற்றுக்கணக்காணவர்கள் ஒன்றினைந்து, இன்று காலை மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்தித்து இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.

தற்போது பறப்பாங்கண்டல் கிராமத்தில் 260 குடும்பங்கள் வழ்ந்து வருகின்றனர். இதில் 200 குடும்பங்களின் கருத்துகளுக்கு மாறான வகையில், குறித்த விளையாட்டு மைதானத்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று கட்டுவதற்காண நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றது.

இது எங்களுக்கு பேரதிர்ச்சியையும், மாணவர்களின் கல்விச் சரிவையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இது புனித கார் மேல் மாதா ஆலய சபையின் தன்னிச்சையான முடிவேயாகும்.

இக்காணியில் ஆலயம் அமைக்க வேண்டும் தீர்மானம் எந்த பொதுக் கூட்டத்திலும் தீர்மானிக்கப்படவில்லை.

இவ் ஆலயம் கடந்த கால போர்ச் சூழலினால் சேதமாக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு 6ம் மாதம் நடைபெற்ற ஆலய சபை பொதுக் கூட்டத்தில் இருந்த இடத்திலேயே இவ் ஆலயம் கட்டுவதெனவும், குடும்பத்திற்கு 2000 ரூபாய் வழங்குவதெனவும் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

பெரும்பாலான மக்களுக்கு விருப்பமில்லாத வகையில் இந்த செயல் இடம்பெற்று வருகின்றது. எனவே குறித்த ஆலயம் ஏற்கனவே இருநத இடத்தில் கட்டப்பட வேண்டும் எனவும், பாடசாலை மைதானத்தில் கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடபர்பாக பாடசாலை வளர்ச்சி சமூகம் என்ற பெரில் மகஜர் ஒன்றும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.


கோடை கால காற்றே அழகிற்கு நல்லதாம் ஆய்வில் தகவல்

கோடை காலத்தில்தான் மிக மிக அழகாக இருக்கிறார்களாம் மனிதர்கள். இந்த காலகட்டத்தில்தான் மற்றவர்களைக் கவரும் வகையில் தோற்றமளிக்கிறார்களாம். ஆய்வு ஒன்று இதைக் கூறுகிறது. குளிர்காலத்தை விட கோடைகாலத்தில்தான் மற்றவர்களைக் கவரும் வகையில் தோற்றமளிப்பதாக கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர். மேட்ச்.கொம் என்ற இணையதளம் எடுத்த கருத்துக் கணிப்பி்ல்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

73 சதவீதம் பேர் வெயிலில்தான் அழகு..
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 73 சதவீதம் பேர் தாங்கள் வெயில் காலத்தில்தான் மற்றவர்களைக் கவரும் வகையில் இருப்பதாக கூறியுள்ளனர்.

குளிரை விட வெயில் நல்லாருக்கே..
இவர்கள் குளிர்காலத்தை விட வெயில் காலத்தில்தான் தாங்கள் நல்ல தோற்றத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.

நம்பிக்கையும், ஆரோக்கியமும் அதிகம்..
கோடை காலத்தில் நம்பிக்கையும் உடல் ஆரோக்கியமும் அதிகரிப்பதாகவும் இவர்கள் கூறுகிறார்கள்.

அழகோ அழகு..
ஆண்களை விட பெண்கள்தான் கோடை காலத்தில் அழகுடன் ஜொலிப்பதாக கூறியுள்ளனர்.

 


வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டிகளுக்கு கணிப்பீட்டு மீற்றர்கள்?

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி சங்க பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

மேற்படி சந்திப்பு வவுனியாவிலுள்ள சுவர்க்கா விடுதியில் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இதன்போது வவுனியா மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு கணிப்பீட்டு மீற்றர்களை பொருத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதுவிடயம் தொடர்பில் தாம் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

வவுனியாவில் 2100 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இவற்றினூடாக 3000 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஈ.பி.டி.பியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ரகு உடனிருந்தார்.


களனி பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் – அறுவர் படுகாயம்

களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஆறு பேர் கிரிபத்கொட மற்றும் ராகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் விடுதி மாணவர்கள் மற்றும் வெளி மாணவர்களுக்கு இடையில் இம்மோதல் ஏற்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த இரண்டு மாணவர்கள் கிரிபத்கொட வைத்தியசாலையிலும் நால்வர் ராகம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


புதையல் தேடிய இருவர் வவுனியாவில் கைது

வவுனியா:  புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை வவுனியா முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலங்குளம் – லுனுவெவ பகுதியில் வைத்து இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதையல் அகழ பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் இவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்கென வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


தெனாலி ராமன் கதைகள் – பிறந்த நாள் பரிசு

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.

மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.

பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.

மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.

அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், “”தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?” என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, “”ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?” எனக் கேட்டார்.

“”அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

“”அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!” என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, “”ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

“”பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,” என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.


இந்திய அணி 26 ஓட்டங்களால் வெற்றி…

IPL சூதாட்ட சர்ச்சையை கடந்து டோனி தலைமையிலான இந்திய அணி சம்பியன்ஸ் கிண்ண தொடரை வெற்றியுடன் தொடங்கியது. நேற்று நடந்த போட்டியில் தென் ஆப்ரிக்காவை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி தலைவர் டிவிலியர்ஸ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, தவான் இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். சிறப்பாக ஆடிய ரோகித் ஷர்மா ஒருநாள் போட்டி அரங்கில் தனது 14வது அரைசதத்தை அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 127 ஓடங்கள் சேர்த்த போது ரோகித் ஷர்மா 65 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து மிகச் சிறப்பாக ஆடிய தவான், கிளைன்வெல்ட் பந்தில் அடுத்தடுத்து இரண்டு நான்கு ஓட்டங்களை அடித்து ஒருநாள் போட்டி வரலாற்றில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இவர் 94 பந்துகளில்(12 நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டம்) 114 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜடேஜா ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 47 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர் நிறைவில் 7 விக்கெட்ட இழப்புக்கு 331 ஓட்டங்களை குவித்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் மெக்லாரன் 3 விக்கட்டுகளையும், டிசாட்சொபே 2 விக்கட்டுகளையும், டுமினி ஒரு விக்கட்டையும் பெற்றுக்கொண்டனர் .

கடின இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணியில் கோலின் இங்ராம் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஹசிம் அம்லா 22 ஓட்டங்களுடனும் டிவிலியர்ஸ் 70 ஓட்டங்களுடனும் ரொபின் பீட்டர்சன் 68 ஓட்டங்களுடனும் டுப்லசிஸ் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.தனிநபராக இறுதிவரை போராடிய மெக்லாரன் ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இறுதிவரை போராடிய தென் ஆப்ரிக்க அணியால் 50 ஓவர் முடிவில் 305 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இறுதியில் 26 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. இந்திய அணி சார்பாக புவனேஸ்வர் குமார், யாதவ்,இஷாந்த் ஷர்மா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.ஆட்ட நாயகனாக தவான் தெரிவுசெய்யப்பட்டார்.

~கேசா~


வெள்ளைக்கொடி ஏந்தி இலங்கைக்கு தஞ்சம் கேட்டுவர ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு!

இலங்கை சிறையில் உள்ள 49 மீனவர்களை விடுதலை செய்ய கோரி, ஜூன் 22ல், ராமேஸ்வரம் மீனவர்கள் படகில் வெள்ளை கொடி ஏற்றி, இலங்கையிடம் தஞ்சம் கேட்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.

ராமேஸ்வரம், மண்டபம் சேர்ந்த 9 படகுகளை பிடித்து கொண்டு, 49 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதையடுத்து, இன்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சங்க அவசர கூட்டம் நடந்தது. இதில், நேற்று மீன்பிடிக்க சென்ற 49 மீனவர்களையும், 9 படகுகளையும், ஜூன் 20ம் திகதிக்குள் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில், ஜூன் 22ம் திகதி, அனைத்து விசைப்படகிலும் வெள்ளை கொடி ஏற்றி, இலங்கை அரசிடம் தஞ்சம் கேட்டு மீனவர்கள் இலங்கை நோக்கி செல்வது, மேலும் இருநாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிவரும் காலத்தில், காலையில் மீன்பிடிக்க செல்வதை தவிர்த்து, ஜூன் 8ம் திகதி முதல் பகல் 2 மணியளவில், மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று, மீன்பிடிக்க செல்ல வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றினர்.

 


பின்லேடனை கொல்ல உதவிய நைட்விஷன் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஈழத் தமிழருக்கு யு.எஸ். விருது

sivanathan   ch

அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை கொல்ல அமெரிக்க சீல் படையினருக்கு உதவிய நைட்விஷன் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஈழத் தமிழருக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘சம்பியன் ஒப் சேஞ்ச்’ (Champion of Change) விருது வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க சீல் படையினர் இரவோடு இரவா சுட்டுக் கொலை செய்தனர். இதற்கு பயன்படுத்தப்பட்ட நைட் விஷன் தொழில்நுட்பக் கருவிகளை பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்.

இவர் அமெரிக்காவின் சிகாகோவில் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செமி கண்டக்டர் ஆராய்ச்சியாளரான இவர் mercury cadmium telluride (MCT) என்ற ரசாயனத்தைக் கொண்டு உருவாக்கிய நைட்விஷன் தொழில்நுட்பம் சீல் படையினருக்கு பெரும் உதவியாக இருந்தது.

நிலா வெளிச்சம் கூட இல்லாத அமாவாசை நாளில் அமெரிக்கப் படையினர் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த இந்தத் தொழில்நுட்பம் உதவியது. இது மிக மிகச் சிறிய அளவிலான ஒளியைக் கூட பல்லாயிரம் மடங்கு அதிகப்படுத்தும் தொழில்நுட்பமாகும். இந் நிலையில் சமீபத்தில் அமெரிக்கா அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான சம்பியன் ஒப் சேஞ்ச் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்போதுதான் இவரது தொழில்நுட்பம் ஒசாமாவைக் கொல்ல உதவிய தவல் வெளியே தெரியவந்தது.

யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரியில் பிறந்த பேராசிரியர் சிவலிங்கம் அணு மின் தொழில்நுட்பத் துறையில் புகழ்பெற்றவர். பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் மூத்த தொழில்நுட்ப அதிகாரி போர்க் கூறுகையில் பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் போன்ற அறிவார்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வந்து தாம் அவர்களுடன் பணியாற்ற கிடைத்தது பெருமைக்குரியது என்றார்.

அமெரிக்காவின் ஒரு உயரிய விருது ஈழத் தமிழருக்கு கிடைத்ததையிட்டு நாமும் பெருமைகொள்வோம்.

 


உலகில் பசியால் வாடும் 87 கோடி பேர் உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள்- போப் வலியுறுத்தல்..

hunger

கோடிக்கணக்கான மக்கள் பசியால் வாடும் நிலையில் உணவுப் பொருட்களை வீணாக்கி தூக்கி எறிவது பசித்திருக்கும் ஏழைகளின் உணவை திருடுவதற்கு சமம் என போப் பிரான்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், ஐக்கிய நாடுகள் உணவு முகமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ‘மனிதர்களின் தேவைக்காக உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் சுமார் 1.3 பில்லியன் தொன் அதாவது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பாகம் வீணடிக்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. அதே கருத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில் வத்திகான் நகரில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசிய போப் பிரான்சிஸ் பின்வருமாறு பேசியதாவது,

நமது முன்னோர்கள் மிச்சம் மீதி உணவுகளை வீணாக தூக்கி எறியக்கூடாது என்ற பண்பை கடைபிடித்து வந்தனர். ஆனால், தற்காலத்தில் அன்றாட வாழ்க்கை முறையில் உணவுகளை வீணடிப்பதை நாம் வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளோம். வீணடிக்கப்படும் உணவின் உண்மையான மதிப்பு நமக்கு தெரிவதில்லை. உலகெங்கும் 87 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பசி, பட்டினியால் தவிக்கும் போது இதைப்போன்ற உணவை வீணடிக்கும் கலாசாரத்தை நாம் கைவிட வேண்டும். உணவுப் பொருட்களை வீணாக்கி தூக்கி எறிவது என்பது, பசித்திருக்கும் ஏழைகளின் உணவை திருடுவதற்கு சமமான செயலாகும் என போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

 


சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் வீரர்கள் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்த ஐசிசி தடை..

icc_logo

சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் போட்டிக்கு செல்லும் முன்பாக கையடக்க தொலைபேசிகளை ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.

7வது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகின்றன. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவு அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டத்தை அடுத்து சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஐசிசி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் முதல் மைதானம் வரை அனைத்து இடங்களும் கண்காணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மைதானத்திற்கு வீரர்கள் கையடக்க தொலைபேசிகள் கொண்டு செல்ல கூடாது என்றும் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது ஐசிசி. போட்டிக்கு செல்லும் முன் வீரர்கள் தங்கள் நிர்வாகத்திடம் கையடக்க தொலைபேசிகள் ஒப்படைத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 


மைக்கேல் ஜாக்சனின் மகள் தற்கொலை முயற்சி..!

உலகப் புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், மிதமிஞ்சிய போதையில் கடந்த 2009ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

மைக்கேல் ஜாக்சனுக்கு மைக்கேல் ஜோசப் ஜாக்சன் (16), பிரின்ஸ் மைக்கேல் ஜாக்சன் (11) என்ற இரு மகன்களும் பாரீஸ் மைக்கேல் கேத்தரின் ஜாக்சன் (15) என்ற மகளும் உள்ளனர்.

மைக்கேல் ஜாக்சனின் கடைசி மகள் பாரிஸ் ஜாக்சன் (15) தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக கலிபோர்னியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க நேரப்படி, அதிகாலை 1.27 மணியளவில் ´911´ அவசர உதவி பிரிவுக்கு தகவல் வந்ததாகவும், 2.00 மணியளவில் கலபாசஸ் பகுதியில் இருந்து அவரை ஆம்புலன்சில் அழைத்து வந்து வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று தனது ´டிவிட்டர்´ பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த பாரிஸ் ஜாக்சன், ´எனது துன்பங்கள் எல்லாம் என்னை விட்டு நீங்கிவிட்டன என்று நினைத்திருந்தேன்.

ஆனால், அவை இன்னும் என்னை விட்டு விடைபெறவில்லை என தெரிகிறது, கண்ணீர் ஏன் உப்பு தன்மையுடன் உள்ளது? என நான் வியக்கிறேன்´ என்று எழுதியிருந்தார்.

கை மணிக்கட்டை அறுத்துக்கொண்டு பாரிஸ் ஜாக்சன் தற்கொலைக்கு முயன்றதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிதமிஞ்சிய போதையில் ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்டதாக மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.


ஒரு கோடி ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகள் செய்கிறார் இளைய தளபதி..!

தனது பிறந்த நாளான ஜூன் 22ம் திகதி ரூ 1 கோடி மதிப்புள்ள உதவிகளை வழங்குகிறார் நடிகர் விஜய்.
விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய இளைஞரணி கிளை மன்ற நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து இந்த விழாவை வருகிற 8ம் திகதி (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு நடத்துகின்றனர்.

சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடக்கும் இந்த விழாவில், சென்னை உயர்நீதிமன்ற பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி, விழாவை தொடங்கி வைக்கிறார்.

நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு 3,900 ஏழைகளுக்கு கம்ப்யூட்டர்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகளும், தையல் எந்திரங்களும் வழங்கி பேசுகிறார்.

விழாவில் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனும் கலந்து கொள்கிறார்.


இசையமைப்பாளர் ஆகிறார் “ட்ரம்ஸ்” சிவமணி..!

விக்ரம் பிரபு நடிக்கும் “அரிமா நம்பி” படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியுள்ளார் டிரம்ஸ் சிவமணி.
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் டிரம்ஸ் கலைஞராக பணியாற்றியுள்ள சிவமணி, உலகம் முழுக்க ஏராளமான இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.

இவர் டிரம்ஸ் அடிக்கும் ஸ்டைலே ரொம்ப வித்தியாசமானது.

ஆடாதவர்களையும் ஆட்டம் போட வைக்கும் இவரது டிரம்ஸ் இசை. இந்நிலையில், இதுவரை டிரம்ஸ் கலைஞராக இருந்து வந்த சிவமணி, இசையமைப்பாளராக களம் இறங்கி இருக்கிறார்.

கும்கி படத்திற்கு நடிகர் விக்ரம் பிரபு, இவன் வேற மாதிரி, சிகரம் தொடு படங்களில் நடித்து வருகிறார். இந்தபடத்திற்கு அடுத்தப்படியாக “அரிமா நம்பி” என்ற படத்தில் நடிக்கிறார்.

விக்ரம் பிரபு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். ஆனந்த் குமார் இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தபடத்தில் தான் சிவமணி இசையமைப்பாளராகி இருக்கிறார்.

இசையமைப்பாளரானது குறித்து சிவமணி கூறியுள்ளதாவது, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்திற்கு இதுவரை நான்கு பாடல்களை கம்போஸ் பண்ணிவிட்டேன். முதல்பாடலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வைத்து கம்போஸ் பண்ணினேன்.

பொதுவாக என்னுடைய படங்களின் இசையில் டிரம்ஸ் ‌கொஞ்சம் வேகமாக இருக்கும். அதேப்போல் இந்தபடத்திலும் அது தொடரும்.

அதேசமயம் மெலோடியும் நிறைய இருக்கும். ரசிகர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு இந்தபடத்தின் இசை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

வித்தியாசமாக செய்கிறேன் என்று வலிய போய் இசை திணிக்க நான் விரும்பவில்லை, கதைக்கு என்ன தேவையோ அந்த இசையை நான் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.