மனிதனை போல ரோபோவிற்கு மூளை : சாதனை படைத்த தமிழர்!!

robot_brain

ரோபோவிற்கு மனிதனை போல தன்னிச்சையாக செயல்பட மூளையை கண்டுபிடித்துள்ளார் அமெரிக்காவில் புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்நாதன் சாரங்கபாணி.

மிசோரி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து பெருமை பெற்றவர் இவர். ஜகன்நாதன் ரோபோ பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார்.

அவர் தலைமையிலான குழுவினர் பல வகையில் ரோபோ செயல்பாடுகளை கணக்கிட்டு அதற்கு தனி கட்டளைகளை பிறப்பித்து தானியங்கி முறையில் மட்டுமின்றி சுயமாக சிந்தித்து குறைந்தபட்ச செயல்பாடுகளை மேற்கொள்ள வைத்தனர். இதில் ஜகன்நாதன் வெற்றி கண்டுள்ளார்.

ரோபோ சுயமாக சிந்தித்து செயல்படக்கூடிய அளவில் அதற்கு மனிதர்களுக்கு உள்ளதை போல மூளையை கண்டுபிடித்துள்ளார்.
எல்லா கட்டளைகளையும் மூளையில்வைத்து மனிதனை போலவே சிந்திக்கும் அளவுக்கு, புரிந்து கொள்ளும் அளவுக்கு ரோபோவின் செயல்பாட்டை மாற்றியமைத்துள்ளார்.

சோதனை ரீதியாக ரோபோவிற்கு மூளையை பொருத்தி செயல்படுத்தியபோது, இலக்கை மட்டும் கட்டளை செய்து விட்டால் அதை அடைய மனிதனை போல தானாகவே சிந்தித்து, செயல்பட முடியும் என்பதில் ஏறக்குறைய வெற்றி கண்டுள்ளார்.

ரோபோவிற்கு அவர் கண்டுபிடித்த மூளையை பொருத்துவதில் படிப்படியாக மேலும் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜகன்நாதன், எதிர்காலத்தில் ரோபோவால், மனிதனை போல சிரிக்க முடியும், கோபப்பட முடியும். ஏன் முகபாவத்தை கூட காட்ட முடியும்.

பாலம் கட்டுவது, மேம்பாலம் அமைப்பது போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் பத்து புல்டோசர்களை இயக்க வேண்டும் என்றால் அதில் உள்ள பழுதுகளை கண்டுபிடிக்க வேண்டும், அதை சரி செய்யவும் வேண்டும் என்றால் இந்த மூளையுள்ள ரோபோக்களை பயன்படுத்தலாம். அது தான் என் குறிக்கோள் என்று கூறியுள்ளார்.

நோயாளியோடு அம்புலன்சை திருடிச் சென்ற வினோத திருடன்!!

ambulance

அமெரிக்காவில் வாலிபர் ஒருவர் நோயாளியோடு அம்புலன்சை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் பிரியன் திமோதி காடா ஜூனியர்(25).

கார்களை திருடுவதில் கில்லாடியான திமோதி பொலிசாரிடம் சிக்காமல் பலமுறை டிமிக்கி கொடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிலடெல்பியா நகரின் நெரிசலான போக்குவரத்து சாலையில் அம்புலன்ஸ் ஒன்று நோயாளியை ஏற்றிக் கொண்டு அவசரமாக சென்று கொண்டிருந்தது.

அப்போது ஒரு சிக்னலில் சில வினாடிகள் நின்ற போது பிரியன் திமோதி துப்பாக்கி முனையில் அம்புலன்ஸ் டிரைவரை மடக்கி திருடி சென்றார். உடனடியாக தகவலறிந்த பொலிசார் நகர் முழுவதும் உஷார்படுத்தி பின் அம்புலன்சை சுற்றி வளைத்தனர்.

அப்போது அம்புலன்ஸை தாறுமாறாக ஓட்டியதில் உள்ளே இருந்த நோயாளி லேசாக காயம் அடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.துப்பாக்கி முனையில் திமோதியை மடக்கி பிடித்த பொலிசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தெலுங்கு தயாரிப்பாளர் மீது ஹன்சிகா புகார்!!

hansika

வெல்பர் கிரியேஷன்ஸ் சார்பில் மல்லா விஜயபிரசாத் தயாரிக்க, ஈஸ்வர் இயக்கத்தில் தெலுங்கில் உருவான படம் சீதாராமுல கல்யாணம் லங்கலோ. நிதின், ஹன்சிகா ஜோடியாக நடித்த இப்படம் 2010ம் அண்டு ஆந்திராவில் வெளியானது.

இப்படத்தை ரவுடி கோட்டை என்ற பெயரில் எஸ்.சுந்தரலட்சுமி தமிழில் டப் செய்துள்ளார். இந்நிலையில் தன் அனுமதி இல்லாமல் தெலுங்கு படத்தை தமிழில் வெளியிடுகிறார்கள் என்று ஹன்சிகா புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் தெலுங்கில் சீதாராமுல கல்யாணம் லங்கலோ படத்தில் நான் ஒப்பந்தமானபோது இப்படம் தெலுங்கில் மட்டுமே உருவாகும். தமிழில் டப் செய்ய மாட்டோம் என்று சொன்னார்கள். இப்போது ரவுடி கோட்டை என்ற பெயரில் தமிழில் டப் செய்து அடுத்த மாதம் வெளியிடப்பாவதாக அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன்.

என் அனுமதியின்றி டப் செய்ய உரிமை வழங்கிய தெலுங்கு தயாரிப்பாளர் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் செய்ய உள்ளேன் என்று கூறியுள்ளார்.

போதைப் பொருளுடன் பாடசாலைக்கு வந்த 3 வயது சிறுமி!!

marijuana

அமெரிக்காவில் போதைப் பொருள் பொட்டலங்களுடன் மூன்று வயது சிறுமி பாடசாலைக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஹார்லம் பகுதியில் படிக்கும் மூன்று வயது சிறுமி ஒருவர் வழக்கம் போல் பாடசாலைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது பையை திறந்து பார்த்த போது ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

காரணம் அதில் 14 பொட்டலங்களில் மாரிஜுவானா எனப்படும் போதைப் பொருள் இருந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக பாடசாலை நிர்வாகம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்தவர்கள் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

மேலும் சிறுமியை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் சிறுமியின் தந்தையின் நண்பர் மெனா(24) என்பவர் தான் போதைப் பொருளை சிறுமியின் பள்ளிப் பையினுள் வைத்தது தெரிய வந்தது இதையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் மெனாவை கைது செய்தனர்.

ஆண்டுதோறும் மூழ்கி கொண்டிருக்கும் வெனிஸ் : அதிர்ச்சி தகவல்!!

venice

ஐரோப்பாவின் மிதக்கும் நகரமான வெனிஸ் ஆண்டுதோறும் 1 மி.மீ அளவுக்கு மூழ்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

ஜரோப்பாவின் மிதக்கும் நகரம் என்ற பெருமை வெனிஸிற்கு உண்டு. இந்நகரம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் கால்வாய்களே முக்கிய போக்குவரத்தாக திகழ்கின்றன.

இந்நிலையில் தற்போது அதிர்ச்சிகரமான தகவலொன்று வெளியாகியுள்ளது. அதாவது ஆண்டுதோறும் 1 மி.மீ அளவுக்கு நகரம் மூழ்குவதை செயற்கைகோளின் உதவியுடன் விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மனித நடவடிக்கைகளால் இந்த நகரம் ஆண்டுதோறும் 0.8 லிருந்து 2 முதல் 10 மி.மீ வரை மூழ்கி வரும்போது, இயற்கையாகவும் ஆண்டுதோறும் 0.8 லிருந்து 1 மி.மீ வரை மூழ்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஆண்டிற்கு நான்கு முறை அதிகரித்துவரும் நீர்மட்டத்தால் நகருக்கு ஏற்படும் ஆபத்து குறித்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அருகில் உள்ள கடல்நீரின் மட்டம் உயருவது வெனிஸ் நகரத்தைப் பாதிக்கும் என்பதால் இதுகுறித்த தொடர் கண்காணிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இத்தாலியின் படுவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான பியட்ரோ டீட்டினி தெரிவித்தார்.

முதலாவது செயற்கைக்கோள் மூலம் மாதம் ஒருமுறை அறிக்கைகள் தயார் செய்தும், இரண்டாவது நவீன செயற்கைக்கோள் மூலம் பத்து நாட்களுக்கு ஒருமுறை நீர்மட்டம் குறித்த தகவல்களையும் பெறுகின்றனர்.

ஹங்கேரியில் ரீ-ரெக்கோடிங் ஆகும் இரண்டாம் உலகம்!!

rendam ulakam

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் இரண்டாம் உலகம். இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பின்னணி இசையமைக்க ஹரிஸ் ஜெயராஜ் காலதாமதப்படுத்தியதால் அவருக்கு பதிலாக அனிருத் அந்த பணியை ஏற்றுள்ளார்.

இப்படத்தின் பின்னணி இசையை ஹங்கேரியில் வைத்து அமைக்க இயக்குனர் செல்வராகவன் முடிவெடுத்தார். இதற்காக, இசையமைப்பாளர் அனிருத்தும் செல்வராகவனும் ஹங்கேரி புறப்பட்டு சென்றுள்ளனர். ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரத்தில் சிம்பொனி இசை அமைத்து பின்னணியில் கோர்க்க உள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஏற்கெனவே வெளியிடப்பட்டு பிரமிப்பை ஏற்படுத்தியது. அதேபோல் பின்னணி இசையிலும் பிரமிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இயக்குனரும் இசையமைப்பாளரும் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். விரைவில் வெளியாகும் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வெளிநாட்டுக் கணவர் பார்க்க கணணி முன் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்த பெண்!!(படங்கள்)

கிருஷ்ணப்பிள்ளை நிர்மலா என்ற இருபத்தைந்து வயதுடைய ஒருபெண் குழந்தையின் தாய் கட்டாரில் தொழில் புரியும் தனது கணவரான சத்தியசீலன் சீவரத்தினம் என்பவரோடு இன்று SKYPEல் கதைத்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் வீட்டு வளையில் தூக்கிட்டு மரணிக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு கணவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வளையில் நைலோன் கையிறை இட்டுவிட்டு கணணியை நிறுத்தி வைத்துவிட்டு கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

உடனடியாக இவரின் உறவினர்களுக்கு விடயத்தை கட்டாரிலிருந்து தொலைபேசி மூலம் அறிவித்தவுடன் உறவினர்கள் மிகவும் அவசரமாக இவரின் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டுவளையில்தூக்கிட்டு மரணித்திருப்பதை அவதானித்துள்ளனர்.

ஏறாவூர் பொலிசார், பிரதேச மரண விசாரணை அதிகாரியோடு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்து,பிரேதப் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

கட்டாரில் இப்பெண்ணின் கணவரோடு மரண விசாரணை அதிகாரி தொடர்பை ஏற்படுத்திய போது இதனை உறுதிப்படுத்தினார்.இன்று பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

1 2 3 4 5

டெண்டுல்கரின் 200வது டெஸ்ட் போட்டியை கொல்கத்தாவில் நடத்த முடிவு!!

Sachin_Tendulkar

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 200வது டெஸ்ட் போட்டியை, புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக இந்திய அணியின் சுற்றுப்பயணம் மற்றும் போட்டி அட்டவணையை நிர்ணயிக்கும் குழுவின் தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையில் வரும் திகதி மூன்றாம் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

போலி ஆவணங்களுடன் சென்னையில் 4 இலங்கையர்கள் கைது..!

arrest1போலி ஆவணங்களை தயாரித்து அதன்மூலம் இலங்கைவர முயன்ற நான்கு இலங்கை பிரஜைகள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை – மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையை சேர்ந்த பாக்கிய நாதன் (33), சசிதரன் (26), மரியம் சர்மிளா, மற்றும் ஜீவன்தாரா (19) ஆகிய நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் தங்கியிருந்த இவர்கள் மீண்டும் இலங்கை செல்ல மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சென்றுள்ளனர்.

அப்போது, அவர்களின் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததை விட அதிக நாட்கள் சென்னையில் தங்கியிருந்ததும், அதற்காக போலி சான்றிதழ் தயாரித்து இருந்ததும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து அவர்கள் நால்வரும் மீனம்பாக்கம் விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அபிராமிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த கமல்!!

abirami

கேரளாவைச் சேர்ந்த தமிழ் பெண்ணான நடிகை அபிராமி தமிழ் பெண் என்ற காரணத்தினாலேயே கோலிவுட்டில் காலூன்ற முடியாமல் போனது. பிரபு, அர்ஜுன், சரத்குமார் என மூத்த நடிகர்களுடனேயே காலத்தை ஓட்ட வேண்டியதாயிற்று.

ஒருகட்டத்தில் வாய்ப்பே இல்லாமல் கன்னடப்பக்கம் ஒதுங்கினார். அங்கிருந்து மீண்டும் மலையாளத்துக்கு போன அபிராமிக்கு கமல்ஹாசனின் விருமாண்டி படம் மறுவாழ்வு கொடுத்தது. அந்த படத்தில் இவரது நடிப்பு பிரமாதமாக இருந்தது. இதனால் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

இந்நிலையில் முன்னணி இயக்குனர் ஒருவருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட அபிராமி அமெரிக்காவுக்கு பறந்து போனார். பின் மீண்டும் சென்னைக்கு வந்து முகாமிட்ட அபிராமிக்கு தற்போது கமல் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளார்.

இவர் தற்போது இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் விஸ்வரூபம்-2 படத்தில் அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். விருமாண்டி படத்திற்கு பிறகு கிடைக்காத வாய்ப்பு விஸ்வரூபம் மூலமாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இப்படத்தில் நடித்து வருகிறார் அபிராமி.

வடமாகாண சபை முதலாவது அமர்வு ஒக்.15ல் நடைபெறும்!- கைதடியில் வடமாகாண சபைக்கு கட்டிடம்..!

northern_mapவட மாகாண சபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 15 ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வட மாகாண சபைக்காக முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கண்ட விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கண்ட விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களின் நியமனங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனுமே ஆளுநருடனான சந்திப்பில் பங்கேற்றனர். இந்த சந்திப்பு நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு நீடித்திருந்தன.

கொழும்பில் உள்ள மத்திய அரசுடன் ஆலோசித்து முதலமைச்சரின் நியமன கடிதத்தை தருவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் மாகாண சபைக்கான அமைச்சர்கள் நியமனம் பற்றி கூட்டமைப்பு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் ஓரிரு தினங்களில் அதை தீர்மானிக்க இருப்பதாக சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

இதேவேளை, வட மாகாண சபைக்கான நிரந்தர கட்டிடம் யாழ். கைதடி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் வட மாகாண சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு தற்காலிக கட்டிடத்திலேயே மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் மாகாண சபைக்கான கட்டிடத்தில் தற்போது திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் ஒக்டோபர் 12ம் திகதி திருத்தவேலைகள் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் ஒக்டோபர் 15ம் திகதி முதலாவது அமர்வு நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

வவுனியா கடுகதி ரயிலில் பயணித்த யாழ் இளைஞர் பாலத்தில் மோதுண்டு பலி!!

Trian

கொழும்பு கோட்டையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் பயணித்த யாழ் இளைஞர் ஒருவர் அநுராதபுரம் புதிய ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மல்வத்து ஒயா பாலத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த விபத்து நேற்றிரவு 8 மணியளவில் இடம் பெற்றுள்ளது. ரயிலின் மிதிபலகையில் பயணம் செய்தபோது குறித்த இளைஞன் பாலத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

 

அமெரிக்காவில் குடியேறுவதற்கான அதிஷ்ட குழுக்கல் (Green Card Lottery) வீசா நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்..!

dvபச்சை அட்டை அதிஷ்ட குழுக்கல் (Green Card Lottery) என்று அழைக்கப்படும் 2015 அதிஷ்ட குலுக்கல் மூலம் பல்வகைமை குடியேற்ற வீசா நிகழ்ச்சித்திட்டம், ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க இராச்சிய தூதுவராலயம் அறிவித்துள்ளது.

பச்சை அட்டை அதிஷ்ட குழுக்கல் சீட்டு தொடர்பில் கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க இராச்சிய தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கை,

2013 ஒக்டோபர் 01 ஆம் திகதி இலங்கை நேரம் பிற்பகல் 09.30 மணி முதல், 2013 நவம்பர் 02 ஆம் திகதி பிற்பகல் 09.30 மணி வரை மேற்படி நிகழ்ச்சித்திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் இணைய தளத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும்.

அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் பல்வகைமை குடியேற்ற வீசா வழங்கும் வருடாந்த நிகழ்ச்சித்திட்டம் இலங்கை, மாலை தீவுகள் உட்பட தகைமை வாய்ந்த நாடுகளில் பிறந்தோருக்கு குடியேற்ற வீசா பெறும் வகையில நேர்காணலுக்கான ஒரு சந்தர்ப்பம் எழுந்தமானமாக வழங்கப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தில் சட்டபூர்வமான நிரந்தர குடிமக்களாகக் கருதப்படுவதற்கான குடிவரவு வீசாக்களுக்கு அவர்கள் தகைமை பெறுவார்கள்.

இந்த நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக, சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் விபரமான ஆலோசனைகளையும், தகைமைகளையும் கண்டறிவதற்கு ஆர்வம் கொண்டுள்ளீர்களாயின் தயவு செய்து கொழும்பு அமெரிக்க தூதுவராலயத்தின் www.srilanka.usembassy.gov/visas/diversityvisa- lottery-program.html இணைய தளத்தைப் பரிசீலிக்கவும்.

அதிர்ஷ்டக் குலுக்கலுக்கு விண்ணப்பிப்பதாயின் தயவுசெய்து www.dvlottery.state.gov இணைய தளத்தைப் பார்வையிடவும்.

ஆலோசனைகள் :-

2013 ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் நவம்பர் 02 ஆந் திகதி வரையிலான கால எல்லையில் அதிhஷ் ;டக் குலுக்கலுக்கான விண்ணப்பப் படிவம் ஏற்றுக்கொள்ளப்படும்.

* இலங்கை மாலை தீவுகள் உட்பட ஒரு சில நாடுகளில் பிறந்தோருக்கு மாத்திரமே அதிஷ்டக் குலுகக்ல் செல்லுபடியாகும்.

* ஒருமுறை மாத்திரமே நீங்கள் விண்ணப்பிக்க முடியும். பலமுறை விண்ணப்பித்தால் அதன் பெறுபேறாகத் தகைமையை இழக்க நேரிடும்.

* பல்வகைமை வீசாவிற்குத் தேவையான தகைமைகளான கல்வித் தகைமையையும், தொழில் அனுபவத் தகைமையையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

எனவே, விண்ணப்பிப்பதற்கு முன்னர் உங்களுக்குத் தேவையான தகைமைகளையிட்டு நிச்சயித்துக் கொள்ளுங்கள்.

* இணைய தளத்தில் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர், அதற்கான உறுதிப்படுத்தப்பட்ட இலக்கம் வழங்கப்படும். நீங்கள் வீசா நேர்காணலுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா என இந்த இலக்கத்தைக் கொண்டே பரிசீலனை செய்து பார்க்க முடியும்.

எனவே, இவ்விலக்கத்தைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்

இணைய தளத்திற்கான விண்ணப்பம் முற்றிலும் இலவசமானது. எதுவித மறைமுகமான செலவுகளும் கிடையாது.

ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள் எனத் தம்மை அறிமுகப்படுத்தும் போலித் தனிநபர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ ஏமாற வேண்டாம்.

தெரிவு செய்யப்படுவது தொடர்பில் முன்வைக்கப்படும் போலி உறுதிமொழிகளை நம்ப வேண்டாம். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கும் சமர்ப்பிப்பதற்கும் 3 ஆம் தரப்பினருடைய உதவி தேவையில்லை.

அடுத்த நடவடிக்கை தொடர்பான அறிவித்தல்கள்

2014 மே மாத ஆரம்பத்தில் விண்ணப்பதாரிகள் www.dvlottery.state.gov என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு வீசாவிற்கான நேர்காணலுக்கு நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா என பரிசலீக்க முடியும்.

நீங்கள் தெரிவு செய்யப்பட்டு இருப்பின் ஐக்கிய அமெரிக்கப் பேராளர் அதிகாரியோடு (U.S.Consular Officer) ஒரு நேர்காணல் இடம்பெறும். நீங்கள் வீசாவைப் பெறத் தகுதி பெற்றுள்ளீர்களா என அவரே தீர்மானிப்பார்.

ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியீடு..!

sholarship2013ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி ஒவ்வொரு ஆண்டும் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஹோடகம பிரதேச பாடசாலை ஒன்றில் இன்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வவுனியா கூமாங்குளம் முதியோர் சங்கம் நடாத்தும் சர்வதேச முதியோர் தினவிழா..!

koomவவுனியா கூமாங்குளம் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தினவிழா எதிர்வரும் 03-10-2013 அன்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் பிற்பகல் 3மணியளவில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு கூமாங்குளம் கிராம அலுவலர் திருமதி .துசிதா புஸ்பராஜா தலைமை தாங்குகிறார்.

இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக வவுனியா அரசாங்க அதிபர் திரு .M .K .பந்துல ஹரிச்சந்திர அவர்கள் கலந்து கலந்து கொள்வதோடு, கௌரவ விருந்தினர்களாக திரு .கா .உதயராசா (பிரதேச செலாளர் வவுனியா), திரு.நா .கமலதாசன் (பிரதேச செலாளர் வெ,செட்டிகுளம்) ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக வைத்தியர் .க .இராமச்சந்திரன் (தலைவர் வவுனியா மாவட்ட முதியோர் சமாசம்),  வைத்தியர் .மு.மதிதரன் (கிசான் மெடிக்கல் சென்டரர் .கூமாங்குளம்) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இவ்விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக்  குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.

(முதியோர் சங்கம் ,ஸ்டார் அமைப்பு)

பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய மண்டலாபிசேக சிறப்பு நிகழ்வாக தமிழ் மாமன்றத்தினரின் பட்டிமன்றம்..!

அண்மையில் சிறப்பாக கும்பாபிசேகம் நிறைவேறிய பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் தற்போது நடைபெறும் மண்டலாபிசேக கால சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக கடந்த 28/09/2013 சனிக்கிழமை தமிழ் மாமன்றத்தினரின் ஏற்பாட்டில் சிறப்புப் பட்டி மன்றம் ஒன்று இடம்பெற்றது.

அண்மையில் தாபிக்கப்பட்ட தமிழ் மாமன்றத்தின் முதலாவது பொது நிகழ்வாக இடம்பெற்ற இந்தப் பட்டிமன்றம் “இன்றைய இளையதலைமுறையினர் மரபு விழுமியங்களை உணர்வு ரீதியாகப் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களிடம் திணிக்கப்படுகின்றதா? ” என்ற தலைப்பில் அமைந்தது.

இந்தப்பட்டி மன்றத்தை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் பண்டிதர் வீரசிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமை தாங்கினார். உணர்வு பூர்மாகப் பின்பற்றுகின்றனர் என்ற தலைப்பில் தமிழ் மாமன்றத்தின் மேல்சபை உறுப்பினர் வைத்தியக்கலாநிதி. செல்வராசா மதுரகன் மற்றும் தமிழ் மாமன்றத்தின் தலைவர் ராமசாமி ராஜேஸ்வரன் ஆகியோரும் அவர்களிடம் திணிக்கப்படுகின்றது என தமிழ்மாமன்றத்தின் செயலாளர் கிருஷ்ணப்பெருமாள் நிக்சலன் மற்றும் தமிழ்மாமன்றத்தின் மேல்சபை உறுப்பினர் குலேந்திரன் அனுஜன் ஆகியோரும் உரையாற்றி இருந்தனர்.

மண்டபம் நிறைந்திருந்த மக்கள் நேரம் கடந்திருப்பினும் பொறுமையாக செவிமடுத்து தமது ஆதரவினை வெளிப்படுத்தினர்.

nara1 nara2 Nara3 Nara4 Nara5