செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்திலிருந்து ஹரிஸ் ஜெயராஜ் விலகியது ஏன்?

haris

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படம் இரண்டாம் உலகம். இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தில் படப்பிடிப்பு தொடங்கி ஒன்றரை வருடத்துக்கும் மேல் ஆகிவிட்டது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பாடல்கள் வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து கிராபிக்ஸ் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இந்நிலையில், படத்தை விரைவில் வெளியிட செல்வராகவன் எண்ணினார். இதற்காக பின்னணி இசையை விரைந்து முடித்துத் தரும்படி ஹரிஸ் ஜெயராஜை நெருக்கினார் செல்வராகவன். ஆனால், அவரோ பிற படங்களில் பிசியாக இருந்ததால் இப்படத்தின் பின்னணி இசையை உடனடியாக முடித்துக் கொடுக்கமுடியாத நிலையில் இருந்தார்.

இதனால் பின்னணி இசையை மட்டும் வேறொரு இசையமைப்பாளரை வைத்து முடிக்க செல்வராகவன் முடிவு செய்தார். அதன்படி அனிருத்தை இப்படத்தின் பின்னணி இசையை அமைக்க ஒப்பந்தம் செய்தார்.

இந்நிலையில் செல்வராகவன் படத்தில் இருந்து விலகியது ஏன் என்பதற்கு ஹரிஸ் ஜெயராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, தனது இணையதள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது..

நான் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்கள் வெளியாகும் நிலையில் உள்ளதால் அவற்றிற்கான வேலையை முடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டாம் உலகம் படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணியை உடனடியாக தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால்தான் அப்படத்திலிருந்து விலகவேண்டிய சூழல் உண்டானது என்று கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னையில் போராட்டம் : மாணவர்கள் கைது!!

Protest

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இலங்கை வீரர்களுக்குத் தடை விதிக்கக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தமிழக பொலிஸார் கைது செய்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது..

இந்திய கிரிக்கெட் சபையின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு அந்த பகுதிக்கு வந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹோட்டலுக்குள் நுழைய முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய பொலிஸார், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலை 6 மணிக்கு அவர்களை பொலிஸார் விடுவித்தனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இலங்கை வீரர்களுக்குத் தடை விதிக்கக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

சிறப்பாக நடைபெற்ற வவுனியா தமிழ் மாமன்றத்தினது மூன்றாவது விவாதப் பயிலரங்கு!!(படங்கள்)

வவுனியா தமிழ் மாமன்றத்தினது மூன்றாவது விவாதப் பயிலரங்கு வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதில் செட்டிகுளம் ம.வி , வீரபுரம் மணிவாசகர் வித்தியாலயம், ஆண்டியாபுளியங்குளம் மு.ம.வி போன்ற பாடசாலைகளின் மாணவர்கள் பங்குகொண்டனர்.

கடந்த இரண்டு பயிலரங்குகளினை விட, மூன்றாவது பயிலரங்கு மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மாணவர்களிற்கான தனி பேச்சு, சுழலும் சொற்போர், ஒரு தலைப்பினை எடுத்து விவாதித்தல் மற்றும் விவாதம் என்பவற்றில் மாணவர்கள் பங்குபற்றி இருந்தனர்.

மேலும் மாணவர்களின் குறை, நிறைகள், மற்றும் விவாதத்தில் கவனிக்க வேண்டியவை போன்ற விடயங்கள் பற்றியும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது . மாணவர்கள் அவர்களின் கருத்துக்களை மிகவும் வெளிப்படையாகவும், ஆணித்தரமாகவும் வெளிப்படுத்தினார்கள்.

திறமைகள் எங்கிருப்பினும், அதனை இனம் கண்டு தமிழ் மாமன்றம் அதற்கான களங்களை அமைத்துத் தரும் என்றும் தமிழ் மாமன்றத்தின் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்றும் அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

004 005 008 009 024 031 34 36

தெலுங்கிலும் பாடகரான கார்த்தி!!

karthi

நடிகர் கார்த்தி நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கியுள்ள படம் பிரியாணி. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடிக்கிறார். மேலும் பிரேம்ஜி, ராம்கி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் கார்த்தி ஒரு பாடல் பாடியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தில் கார்த்தி பாடிய பாடல் தெலுங்கிலும் இடம்பெறுகிறது. இந்த பாடலையும் கார்த்தியே பாடியுள்ளாராம். இதன்மூலம் தெலுங்கிலும் பாடகராக மாறியுள்ளார் கார்த்தி.

பாணந்துறையில் காதலியை நண்பர்களுக்கு விற்ற காதலன் கைது!!

arrest1

பாணந்துறை பிரதேசத்தில் காதலியை நண்பர்களுக்கு விற்பனை செய்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆடைக் கைத்தொழிற்சாலையில் கடயைமாற்றிய இளம் பெண் ஒருவரை காதலித்த நபர் அவருடன் உறவு கொண்டு அந்தக் காட்சிகளை வீடியோ படமெடுத்துள்ளார்.

வீடியோ காட்சிகளை காண்பித்து அச்சுறுத்தி அந்தப் பெண்ணை தனது நண்பர்களுக்கு விற்பனை செய்துள்ளார். ஓராண்டு காலத்திற்கு மேலாக குறித்த பெண்ணின் மாதச் சம்பளத்தையும் சந்தேக நபர் பலவந்தமாக பெற்றுக் கொண்டுள்ளார்.

தமது காதலியுடன் நண்பர்கள் பாலுறவு கொள்வதற்கு சந்தேக நபர் பணம் அறவீடு செய்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை ஒக்டோபர் மாதம் 9ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடமேல், மத்திய மாகாண முதலமைச்சர்களாக தயாசிறி, சரத் ஆகியோர் தெரிவு!!

dayasiri-jayasekara

வடமேல் மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமேல் மாகாணசபையின் முதலமைச்சராக தயாசிறி ஜயசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகளை தயாசிறி ஜயசேகர பெற்றுக்கொண்டிருந்தார். அதி கூடிய விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மத்திய மாகாண முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சரத் ஏக்கநாயக்கவை விடவும், பிரதமர் டி.எம். ஜயரட்னவின் மகன் அனுராத ஜயரட்ன பெருமளவு விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

அனுராத ஜயரட்ன ஒரு லட்சத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருந்தார். எனினும், அனுபவம் சேவை மூப்பு ஆகியவற்றை கருத்திற் கொண்டு சரத் ஏக்கநாயக்கவை முதலமைச்சராக நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பெரும்பாலும் எதிர்வரும் 3ம் திகதி வடமேல் மற்றும் மத்திய மகாண முதலமைச்சர்களும் அமைச்சர்களும், ஏனைய உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாகாண சபைகள் அதிகார வரம்புக்குள் செயற்பட வேண்டும் : கெஹெலிய!!

kahaliya

தமிழர்களின் மேலாதிக்கம் உள்ள வடக்கு மாகாண சபை உட்பட இலங்கையின் ஏனைய மாகாண சபைகள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அதன் விருப்பங்களுக்கு அமைய அவற்றை கையாள முடியாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபை உட்பட இலங்கையின் சகல மாகாண சபைகளும் அவற்றிற்கு இருக்கும் அதிகார வரம்பிற்குள்ளேயே செயற்பட வேண்டும். காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கே இருப்பதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் வடக்கு மாகாணத்திற்கு காணி கட்டுப்பாட்டு அதிகாரங்களை கூட்டமைப்பு கோருவது வலுவற்றது.

மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் இருப்பதாக ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை இரத்துச் செய்தது.
இந்த விடயம் தற்பொழுது மிகவும் தெளிவாகியுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி அரசாங்கம் காணி அதிகாரங்களை பகிராது என்றார்.

அதேவேளை வடக்கு மாகாண சபையின் எதிர்கால பணிகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளது. போர் நடைபெற்ற வடக்கு மாகாணத்திற்கு கடந்த 25 வருடங்களின் பின்னர் நடத்தப்பட்ட தேர்தலில் 36 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களை கைப்பற்றியது.

1987 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையான அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கூட்டமைப்பு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தது.
1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கைக்கு அமைய மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்டன.

எவ்வாறாயினும் மாகாண சபைகளுக்கு தடைகளற்ற அதிகாரங்களை வழங்குவது சிறுபான்மை தமிழர்களின் கனவான நாட்டை பிரிப்பதற்கு அது வழிவகுக்கும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கூட்டணியில் உள்ள சிங்கள தேசியக் கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!!

arrest1

கிளிநொச்சி, பாரதிபுரம் பிரதேசத்தில் கேரள கஞ்சா வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சந்கேநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாரதிபுரத்தைச் சேர்ந்த குறித்த பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஏனைய மாகாண சபைத் தேர்தல்களிலும் நாம் போட்டியிட உள்ளோம் : எம்.ஏ.சுமந்திரன்!!

Sumanthiran

தென் பகுதியில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தெற்கில் உள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக அரசாங்கம் பாதகமான பிரசாரங்களை மேற்கொண்ட போதிலும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அமோக ஆதரவை வழங்கியுள்ளனர்.

அத்துடன் தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அங்குள்ள தமிழ் மக்களின் ஆதரவைப் பெறவேண்டும் என கூட்டமைப்பு எண்ணுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மக்களை தவறான முறையில் வழிநடத்தி, தவறான எண்ணத்தை தென் பகுதி மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளனர். அந்த மக்களிடம் உள்ள எண்ணத்தை மாற்ற இது சிறந்த வாய்ப்பாகும் என்றும் சுமந்திரன் கூறினார்.

மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களுக்கு அடுத்த வருடம் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென் பகுதியில் நடைபெறும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் அந்த கட்சி தெற்கில் மாகாண சபைகளில் ஆசனங்களை கைப்பற்றும் முதல் முயற்சியாக அது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்ப பெண்ணின் சடலம் மீட்பு!!

suicide hanging

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

நாவுக்கரசர் வீதி மாவடிவேம்பு சித்தாண்டியைச் சேர்ந்த ஜீவரெட்ணம் நிர்மலா(25) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் கணவன் அரேபிய நாடொன்றில் தொழில் புரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏறாவூர் பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வாதிகாரப் போக்கிற்கு எடுத்துக்காட்டு இலங்கை அரசு : விஜயகாந்த்!!

vijayakanth

சர்வாதிகார போக்கிற்கு எடுத்துக் காட்டாக இலங்கை அரசு உள்ளது என்று தமிழக மீனவர் பிரச்னை தொடர்பாக தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யபட்ட விசைப்படகுகளை இலங்கை அரசின் சொத்தாக அங்குள்ள நீதிமன்றம் பிரகடனப்படுத்தியுள்ளது. இது வெந்த புண்ணில் வேலைபாய்ச்சுவது போல் உள்ளது.

இதுபோன்ற செயல் சர்வாதிகார போக்கிற்கு எடுத்துக்காட்டாக இலங்கை அரசு உள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

தமிழ்ப் படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆசை : தெலுங்கு நடிகர் ஆதித்யா!!

athithya

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று எல்லா மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் பால ஆதித்யா. இவர் நடித்த படங்களில் சண்டிகாரு, சுந்தராணிக்கி- தொந்தரக்குவ, 1940ல் ஓககிராமம் (தேசிய விருது பெற்ற படம்), முன்னணி நடிகர் கிருஷ்ணா இணைந்து மற்றொரு ஹீரோவாக ரூம் மெட்ஸ் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து இன்றைய தெலுங்கு பட உலகில் ஹீரோவாக உயர்ந்து இருக்கும் இவருக்கு தமிழ் படங்களிலும் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று ஆசையாம்.

இயக்குனர் கே. பாலசந்தர் இயக்கத்தில் கையளவு மனசு சீரியலில் நடித்திருக்கிறார். அவரது தயாரிப்பில் சின்னஞ்சிறு உலகம் என்ற சீரியலிலும் நடித்து அவரது பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார். நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அஜீத்துடன் இணைந்து ரெட்டை ஜடை வயசு படத்தில் நடித்துள்ளார்.

தற்போது இவருக்கு தெலுங்கு படங்களில் கதாநாயகனாக நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும் அவர் தமிழ் படங்களில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் நல்ல வேடங்கள் கிடைத்தால் அதிலும் நடித்து சிறந்த முன்னணி நடிகராக உயர வேண்டும் என்பதுதான் ஆதித்யாவின் லட்சியம் என்று கூறுகிறாராம்.

தமிழில் பெயர் வைக்காத சில படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

மன்மோகன் ஒரு கிராமத்துப் பெண் என பாகிஸ்தான் பிரதமர் கிண்டல் : புதிய சர்ச்சை!!

manmohan

ஒபாமாவிடம் தீவிரவாத தாக்குதல் பற்றி மன்மோகன்சிங் பேசியதை பார்த்தால் எனக்கு கிராமத்து வயதான பெண்கள் தான் நினைவுக்கு வருகின்றனர். இப்படி மன்மோகன் சிங் பற்றி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கிண்டல் அடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நியூயோர்க் நகரில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க சில மணி நேரத்துக்கு முன்பு டிவி நிருபர்களுடன் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தார் நவாஸ் ஷெரீப். அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவை மன்மோகன் சந்தித்து பேசிய விஷயம் பற்றி பரஸ்பரம் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களிடையே இருந்த நவாஸ் ஷெரீப் குறுக்கிட்டு மன்மோகன் சிங் பேச்சு வார்த்தையின் போது ஒபாமாவிடம் தீவிரவாதம் பற்றி சொன்னது எனக்கு கிராமத்து முதிய பெண் புலம்பல் தான் நினைவுக்கு வந்தது என்று சிரித்தபடி குறிப்பிட்டார்.

இப்படி அவர் கூறியபோது, பாகிஸ்தான் ஜியோ டிவியின் ஹமித் மிர் என்டிடிவி நிருபர் பர்க்கா தத் உட்பட சிலர் இருந்தனர். டெல்லி டிவி ஒன்றுக்கு இதுதொடர்பாக மிர் கருத்து கூறியபோது இதை உறுதி செய்தார்.

மன்மோகன்சிங் பற்றி நவாஸ் இப்படி கிண்டல் அடித்தது எதிர்கட்சிகளிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. டெல்லியில் பிரமாண்ட பேரணியில் பேசும் முன் நேற்று பாஜ பிரதமர் வேட்பாளர் மோடி இப்படி ஒரு பிரதமர் நமக்கு, நவாஸ் கிண்டல் அடித்திருப்பதை ஏற்க முடியாது. கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றார்.

பிசிசிஐ தலைவராக சீனிவாசன் தெரிவு ஆனால் பொறுப்பேற்க முடியாது!!

srinivasan

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக மூன்றாவது முறையாக என்.சீனிவாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவர் என்.சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பன் ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கி கைதானார்.
இதையடுத்து சீனிவாசன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாகிவிட்டது.

அவர் ராஜினாமா செய்ததையடுத்து ஜக்மோகன் டால்மியா இடைக்காலத் தலைவராக்கப்பட்டார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் வருடாந்திர பொதுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் என்.சீனிவாசன் சபைத் தலைவராக ஒருமனதாக மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்டார்.
முன்னதாக குருநாத் மெய்யப்பன் விவகாரம் தொடர்பாக பீகார் கிரிக்கெட் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சீனிவாசன் கிரிக்கெட் சபை தேர்தலில் போட்டியிடலாம் ஆனால் அதில் வெற்றி பெற்றால் தாங்கள் தீர்ப்பு அளிக்கும் வரை பொறுப்பேற்கக் கூடாது என்று தெரிவித்துவிட்டது.

வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்து குவிப்பு வழக்கிலும் சீனிவாசனின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

அதனால் ஜெகன் மோகன் ரெட்டி வழக்கு மற்றும் பீகார் கிரிக்கெட் சங்க வழக்குகளில் தீர்ப்பு வந்து சீனிவாசன் குற்றம் அற்றவர் என்று தெரியும் வரை அவர் தலைவராக பொறுப்பேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சூதுகவ்வும் இயக்குனர் நலனின் எஸ்கிமோ காதல்!!

nalan

விஜய் சேதுபதி நடிப்பில் மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகி வெற்றி பெற்ற படம் சூதுகவ்வும். இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கினார். இந்தப் படத்தைத் தொடர்ந்து நலன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு எஸ்கிமோ காதல் என்று யெர் வைத்திருக்கிறார்.

இப்படத்தை சூதுகவ்வும் படத்தை தயாரித்த திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது. படத்தில் நடிப்பதற்கான நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

நலன் குமாரசாமி இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் நலன் குமாரசாமி இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் இந்த படத்தில்தான் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், இயக்குனரோ, தயாரிப்பாளரோ இதுகுறித்து எந்தவித பதிலும் சொல்லவில்லை.

டைட்டானிக் விபத்து :100 வருடங்களின் பின் வெளிவரும் உண்மை!!

titanic-jason

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சொகுசு கப்பலான டைட்டானிக் தனது முதல் பயணத்தின் போதே நியூயோர்க் நகருக்கு செல்லும் வழியில் 15-4-1912அன்று கடலில் மூழ்கியது.

வட அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த கோர விபத்து நேர்ந்த போது டைட்டானிக் கப்பலில் 2 ஆயிரத்து 224 பயணிகள் இருந்தனர். கப்பல் இரண்டாக பிளந்ததால் ஆயிரக் கணக்கானவர்கள் கடல் நீரில் மூழ்கி உடல் உறைந்து பரிதாபமாக பலியாகினர்.

710 பேர் மட்டுமே மீட்பு படகுகளின் மூலம் உயிர் தப்பி நியூயோர்க் நகருக்கு வந்து சேர்ந்தனர். இந்த விபத்தில் பலியானவர்களின் பிரேதங்கள் உரிய மரியாதையுடன் சிறப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டதாக நேற்று வரை கூறப்பட்டு வந்தது.

ஆனால் இந்த கூற்றை பொய்ப்பிக்கும் வரலாற்று சிறப்புமிக்க அரிய புகைப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நீரில் மூழ்கி இறந்த பயணிகளின் பிணத்தை சாக்கு மூட்டைகளில் கட்டி குவித்து வைத்திருக்கும் காட்சியும், இரண்டு கடற்படை சிப்பாய்கள் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட ஒரு பிரேதத்தை அனாயசமாக கொண்டு வந்து கீழே போடும் காட்சியும் இந்த அரிய புகைப்படத்தில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

100 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் பார்வைக்கு வந்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க புகைப்படம் அடுத்த மாதம் 19ம் திகதி ஏலத்திற்கு வருகிறது. இந்த புகைப்படம் ஒரு மிகப்பெரிய சோக வரலாற்றுடன் தொடர்புடையது என்பதால் சுமார் 5 ஆயிரம் பவுண்டுகள் வரை விலை போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.