தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கீகாரத்தை பெற்றுள்ளது, முஸ்லிம் காங்கிரஸிற்கான ஆதரவு வீழ்ச்சியடையவில்லை : ரவூப் ஹக்கீம்!!

hakeem

மாகாண சபை தேர்தலில் தமது கொள்கைக்கான அங்கீகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது. எனவே அந்த கூட்டமைப்புக்கு தாம் வாழ்த்து தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

முதல் தடவையாக வடக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு ஆசனம் ஒன்று கிடைத்துள்ளது. இதன்மூலம் முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காக போராட வழியேற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நியாயமானதாக இடம்பெற்ற போதும் தேர்தல் பிரசாரங்களின் போது அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்..

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கான ஆதரவு வீழ்ச்சியடையவில்லை.
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் வழங்கியுள்ள அதிகாரத்தை அரசாங்கம் மதிக்க வேண்டும். வடக்கு அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றியை ஓர் சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

வழமை போன்று தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மக்கள் வழங்கிய ஆதரவு பாராட்டுக்குரியது. கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மற்றும் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வடக்கில் தனி நாடு அமைக்கப்படும் : ஹெல உறுமய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!!

HelaUrumaya

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேர்தல் வெற்றியைப் பயன்படுத்தி, வடக்கில் தனி நாடு அமைக்கும் என ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அரசாங்கம் உடனடியாக மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிச் செயலாளர் உதய கம்மன்பில..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளனர்.
வடக்கில் கடந்த முப்பது ஆண்டுகளில் வேறு எந்த அரசியல் கட்சிகளும் இவ்வாறு செயற்படவில்லை. அதுமட்டுமின்றி, அரசாங்கத்தால் வடமாகாணத்தில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறமுடியவில்லை.

வடக்கு மக்களின் இதயங்களில் போரினால் ஏற்பட்ட காயங்கள் இருக்கும். இந்நினைவுகள் அவர்களது இதயத்தில் இன்னும் உள்ளன எனத் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து தங்கம் கடத்திய மூவர் திருச்சியில் கைது..!

arrest1இலங்கையில் இருந்து தங்கம் கடத்திய மூவர் இந்தியா- திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மதியம், 2.30 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏயாலைன்ஸ் விமானம் மூலம் இவர்கள் திருச்சி சென்றுள்ளனர்.

திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகளிடம் சோதனை நடத்தினர்.

அதில் சந்தேகப்படும் வகையில் நடமாடிய மூவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவரும் தலா 600 கிராம் தங்கத்தை ஆசனவாயில் வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சுங்கத்துறையினர் மொத்தம் 1,800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

கண்ணை நம்ப முடியாத ஓவிய படைப்புகள்..(படங்கள்)

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளம் ஓவியக்கலைஞரான ருபன் பெல்லோசோ அடோர்ன (Ruben Belloso Adorna) என்பவரால் வரையப்பட்ட ஓவியங்களே இவையாகும். இவரின் ஓவியங்கள் நிஜ உருவங்களை போன்றே பிரதிபலிப்பதால் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

6 5 4 3 2 1

 

இந்தியாவில் பட்டம் வென்ற தாய்லாந்து நாய்!!

dog

சர்வதேச நாய்கள் குறித்த கல்வி கூட்டமைப்பு, ஆசிய கெனல் கிளப் மற்றும் இந்திய கெனல் கிளப் ஆகியவை இணைந்து உதகையில் நாய் கண்காட்சியினை நடத்தியுள்ளது. நாய் வளர்ப்பதால் மனதிற்கும், உடலுக்கும் புது தெம்பு கிடைக்கிறது என்று உதகையில் நடத்தப்பட்ட வாக்கு மூலத்தின் மூலம் தெரியவந்துள்ளன.

செல்லப்பிராணி என்ற நிலையைத் தாண்டி தற்போது நாய்கள் பேரிடர் மீட்பு , வேட்டைப்பணி, காவல்துறை மற்றும் சுங்கத்துறையில் மோப்ப பணி, வெடிகுண்டை கண்டறிதல், போதைப்பொருட்களைக் கண்டறிதல் என பல்வேறு பிரிவுகளிலும் திறம்பட செயலாற்றி வருகின்றன.

இச்சூழலில் 35 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் ஆசிய-பசிபிக் நாய் கண்காட்சியை நடத்த நாய்கள் குறித்த கூட்டமைப்பான சர்வதேச கைனோலோஜிக் அமைப்பு தீர்மானித்திருந்தது. அதன்படி இவ்வாய்ப்பு சர்வதேச சுற்றுலா மையமான உதகைக்கு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சர்வதேச நாய்கள் குறித்த கல்வி கூட்டமைப்பு, ஆசிய கெனல் கிளப், இந்திய கெனல் கிளப் ஆகியவை இணைந்து உதகையில் நடத்தப்பட்ட இந்த நாய் கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வளர்க்கப்படும் ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், ஹவுண்டு, பீகிள், டெரியர் போன்ற வெளிநாட்டு ரக நாய்களுடன், ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை போன்ற உள்ளூர் ரக நாய்களுமாக சுமார் 60 பிரிவுகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.

இக்கண்காட்சியில் சர்வதேச நாய்கள் கூட்டமைப்பின் சார்பில் சீனா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்தும் நடுவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதில் பங்கேற்ற பின்லாந்து நாட்டை சேர்ந்த நடுவரான கெரி ஜார்வினன் கூறுகையில், நாய்கள் தற்போது செல்லப் பிராணிகள் என்ற நிலையைத் தாண்டி பேரிடர் மீட்பு, வேட்டைப் பணி, பாதுகாப்பு பணி என பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயலாற்றி வருகின்றன.

குறிப்பாக மீட்பு பணிகளில் நாய்களின் சேவை விவரிக்க முடியாத அளவுக்கு மிகச்சிறப்பாக உள்ளது. அத்துடன் நாய்களை வளர்ப்பதால் மனிதர்களுக்கு மனம் மற்றும் உடல்ரீதியான தெம்பும் கிடைப்பதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய-பசிபிக் நாய் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. இக் கண்காட்சியைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு பின்லாந்து நாட்டில் உலக நாய் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சுமார் 25 000 நாய்கள் பங்கேற்க உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இந்த நாய் கண்காட்சியில் பங்கேற்ற நாய்களின் உடலில் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டிருந்தது. அதன்மூலம் நாயின் வயது, எடை, அதன் தனித்துவம், குடும்ப வரலாறு, மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் நொடிப்பொழுதில் கணினித் திரையில் காட்டப்பட்டன.

இது இக்கண்காட்சியை காண வந்திருந்த சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. உதகையில் நடைபெற்ற இந்த சர்வதேச நாய் கண்காட்சியில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த யார்க்க்ஷயர் டெரியர் இன நாய் அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டதால் ஆசிய சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது.

உதகையில் ஆண்டுதோறும் கோடை சீசனின் போது நாய் கண்காட்சி நடத்தப்பட்டு வந்தாலும், நடப்பாண்டில் முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த ஆசிய-பசிபிக் நாய் கண்காட்சி நாய் பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் உதகையிலிருந்த அனைவருக்குமே புதிய அனுபவமாக இருந்தது என்றால் மிகையாகாது.

வெடிகுண்டு அச்சுறுத்தல் : அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் மஹேல ஜயவர்த்தன!!

Mahela-Jayawardene

இலங்கையில் இருந்து புறப்பட்ட நிலையில் கிழக்கு லண்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்ட வானுர்தியில் இலங்கையின் கிரிக்கட் வீரர் மஹேல ஜயவர்த்தனவும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் இருவர் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையிலேயே வானுர்தி அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. இந்தநிலையில் நாளை 24ம் திகதி லண்டனில் நடைபெறவிருக்கின்ற முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் தலைவர்களின் ஒன்றுக் கூடலுக்காக மஹேல ஜயவர்த்தன பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் கிரிக்கட் டெஸ்ட் தலைவர்களின் ஒன்று கூடல் நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து அர்ஜூன ரணதுங்க, சனத் ஜெயசூரிய மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரும் லண்டன் செல்லவுள்ளார்கள்.

யூரோ 2020 கிண்ண போட்டியை நடத்த பல நாடுகள் போட்டி!!

euro 2020

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் உறுப்பு நாடுகளான 54ல் 32 நாடுகள் வரும் 2020 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பையை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது.

பாரம்பரியமாக இந்தப் போட்டிகள் ஒன்று அல்லது இரண்டு நாடுகளால் நடத்தப்படும். ஆனால் 2020 ஆம் ஆண்டுப் போட்டிகள் ஐரோப்பாவின் 13 நாடுகளில் பகிர்ந்து நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் கால்பந்துப் போட்டித் தொடரின் 60 ஆண்டு நிறைவு கொண்டாடப்படுவதால் போட்டி அமைப்புகளில் மாற்றத்தைப் பற்றி இந்தக் கழகம் சென்ற டிசம்பர் மாதமே முடிவெடுத்திருந்தது.

கடந்த 2020 ஆம் ஆண்டு போலந்து மற்றும் உக்ரேன் நாடுகள் நிகழ்த்திய போட்டிகளின்போதே மாற்றங்கள் குறித்து யுஈஎப்ஏ தலைவர் மைக்கேல் பிளாட்டினி யோசனை தெரிவித்திருந்தார்.

சம்மேளனத்தின் நிர்வாகக் குழுவிடம் டிசம்பர் மாதம் ஒப்புதல் பெற்று இந்த வருடம் ஜனவரி மாதம் போட்டி நடத்தும் விதம் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. உறுப்பினர் நாடுகளின் கால்பந்து சங்கங்களில் இருந்து இந்த மாற்றத்திற்கு வந்த வரவேற்பு குறித்து தலைவர் மைக்கேல் பிளாட்டினி மகிழ்ச்சி தெரிவித்தார்.

யூரோ பார் யூரோப் என்ற இந்தத் திட்டத்தின் வடிவம் யூரோ சம்பியனான ஸ்பெயின் மற்றும் பாரம்பரிய கால்பந்து போட்டி நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், கிரீஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மனுக்கள் பெறுவதற்கான இறுதி நாளாக அடுத்த வருடம் ஏப்ரல் 25ம் திகதியையும், போட்டி நடத்தும் நாடுகள் குறித்து தெரிவிக்க செப்டம்பர் 25ம் திகதியையும் யுஈஎப்ஏ குறிப்பிட்டுள்ளது.

1 கோடியால் பாதுகாப்பில்லாமல் வந்த சச்சின், டிராவிட்!!

sachi

சம்பியன்ஸ் லீக் T20 இன்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் & மும்பை அணிகள் மோதின. இந்த மைதானத்தில் மொத்தம் 7 ஆட்டங்கள் நடக்கிறது.

இந்நிலையில் போட்டி நடைபெறும் நாட்களிலும் வீரர்கள் பயிற்சி பெறும் போதும் பொலிஸ் பாதுகாப்பு அளிப்பதற்காக 1 கோடி சம்பளமாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்திடம் கேட்கப்பட்டுள்ளது. இதை கேட்டு ஷாக் ஆன ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் அவ்வளவு தொகையை கொடுக்க முடியாது என்று கைவிரித்தது.

இதன் விளைவு நேற்று ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு பஸ்சில் பயிற்சிக்கு வந்த மும்பை, ராஜஸ்தான் வீரர்களுக்கு பொலிசார் பாதுகாப்பு அளிக்கவில்லை. மேலும் மைதானத்திலும் ஒரு பொலிசார் கூட பணியில் ஈடுபடவில்லை. பொலிசார் பாதுகாப்பு இல்லாமல் வீரர்களின் பஸ் வந்ததால் ஆங்காங்கே டிராபிக்கில் சிக்கியது.

இந்த சமயத்தில் வாகனங்களில் சென்ற சில ரசிகர்கள் பஸ்சில் ஏறி வீரர்களுடன் புகைப்படம் எடுத்தனர். இதையடுத்து இந்த விவகாரம் சர்ச்சையானது. தொடர்ந்து மாநில அரசுடன், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதன் பின்னர் பாதுகாப்பு கொடுக்க பொலிசார் சம்மதம் தெரிவித்தனர். நேற்றிரவு முதல் ஹோட்டல், மைதான பகுதிகளில் பொலிசார் குவிக்கப்பட்டனர்.

கோடைக்கால உடல் துர்நாற்றத்தை நீக்க வழிகள்.!!

girl

பத்தில் 8 பேருக்கு உடல் துர்நாற்றம் என்பது தூக்கம் தொலைக்கச் செய்கிற அளவுக்குப் பெரிய பிரச்னை. மற்ற நாட்களைவிட கோடையில் இதன் தீவிரம் சற்றே அதிகமாகத்தான் இருக்கும்.

உடல் துர்நாற்றம் ஏன் வருகிறது. அதை எப்படிக் கட்டுப்படுத்தி இயற்கையான மணத்துடன் உலா வர என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.

நாற்றம் ஏன்?

நம் உடலில் சுரக்கும் வியர்வையில் புரதம் உண்டு. அத்துடன் பக்டீரியா சேரும்போது அந்தப் புரதங்கள் உடைக்கப்பட்டு Propionic என்ற அமிலமாக மாறுகிறது. உடல் நாற்றத்துக்கு அதுதான் காரணம். அதீதமான வியர்வை மற்றும் அதன் காரணமாக உண்டாகும் நாற்றத்துக்கு Acid bromidrosis மற்றும் osmidrosis என்று பெயர்.

பெண்களுக்கு 14 – 16 வயதிலும், ஆண்களுக்கு 15 – 17 வயதிலும் இந்த வியர்வை நாற்றப் பிரச்னை தீவிரமாக இருக்கும். நமது உடலில் கிட்டத்தட்ட 30 – 40 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன.

எக்ரைன் (eccrine) என்கிற வியர்வைச் சுரப்பிகள் நம் உடலில் எல்லா இடங்களிலும் சருமத்தின் அடியில் இருக்கும். வெளிப்புறத் தட்பவெப்பநிலை அதிகரிக்கும் போது அதிலிருந்து உடலைக் காப்பாற்றிக் குளிர்ச்சியாக்கும் பொருட்டு இந்த சுரப்பிகள் தூண்டப்படுவதால்தான் வியர்வை வெளியே வருகிறது.

அதனால்தான் நமக்கு முகத்திலோ கைகளிலோ வியர்க்கும்போது அது அதிக வாசனையை ஏற்படுத்துவதில்லை.

அப்போக்ரைன் (apocrine) என்கிற சுரப்பிகள் அக்கிள், காதுகளின் பின்புறம், அந்தரங்க உறுப்புகளில் அதிகம் காணப்படும். இவை வியர்வையை வெளிப்படுத்தும்போது அத்துடன் எண்ணெய் பசையான திரவமும் சேர்ந்து வெளியேறுவதால், அந்த இடத்தில் எல்லாம் வியர்க்கும் போது வாசனை அதிகமாக இருக்கிறது.

எப்படித் தவிர்க்கலாம்?

அதிக சூடாகவோ அதிகக் குளிர்ச்சியாகவோ இல்லாத வெதுவெதுப்பான தண்ணீரில் தினம் இரு வேளைகள் கட்டாயம் குளிக்க வேண்டும்.

நிறமும் மணமும் சேர்க்கப்பட்ட பாத் சல்ட் கிடைக்கிறது. ஒரு பக்கெட் தண்ணீரில் 1 ஸ்பூன் பாத் சல்ட் கலந்து குளிக்கலாம். அது முடியாதவர்கள் கொஞ்சம் வேப்பிலையைக் கசக்கிச் சேர்த்து தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம்.

தினம் இருமுறை டியோடரன்ட் உபயோகிக்கலாம். குளித்து முடித்ததும், உடலைத் துடைத்து விட்டு வியர்க்க ஆரம்பிக்கும் முன்பே இதை உபயோகிக்க வேண்டும்.

கேஸ் இல்லாத டியோடரன்ட் நல்லது. அதை உபயோகிக்கும் போது எரிச்சலோ குத்தலோ இருந்தால் உபயோகிக்க வேண்டாம்.

வியர்வையையே நிறுத்தக்கூடிய அன்ட்டி பெர்ஸ்பிரன்ட் என்ற பொருளும் சந்தையில் கிடைக்கிறது. அலுமினியம் சால்ட் கலந்திருப்பதால் அதை தினசரி உபயோகிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

ஏதோ ஒருநாள் நடன நிகழ்ச்சி, முக்கியமான விசேஷம், உடையில் வியர்வைத் தடம் தெரிய வேண்டாம் என நினைக்கிற போது மட்டும் அன்ட்டி பெர்ஸ்பிரன்ட் உபயோகிக்கலாம்.

அதிக வியர்வை இருந்தால் அன்ட்டி பாக்டீரியல் சோப் உபயோகிக்கலாம். குளித்து முடித்ததும் ஈரத்தை நன்கு துடைத்துவிட்டு அன்ட்டி பாக்டீரியல் பவுடர் உபயோகிக்கலாம்.

உடைகளை வைக்கும் பீரோ மற்றும் அலமாரிகளையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். ஒருமுறை உபயோகித்த உடையை, பின்னர் துவைத்துக் கொள்ளலாம் என்று மற்ற துணிகளோடு சேர்த்து வைக்கக் கூடாது. அதிலுள்ள கிருமிகளும் நாற்றமும் மற்ற உடைகளுக்கும் பரவும்.

உணவுப்பழக்கம்கூட ஒருவரின் உடல் நாற்றத்துக்குக் காரணமாகலாம். பூண்டு, சில வகை அசைவ உணவுகள், அதிக மசாலா சேர்த்த உணவுகள் உதாரணம்.

காலங்காலமாக உடலில் தேங்கிய அந்த நாற்றத்தைப் போக்க, க்ளோரோஃபில் நிறைந்த பச்சைக் காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும். வெட்டிவேரை குளிக்கும் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தாலும் உடல் மணக்கும்.

பட்டைத்தூள் 2 ஸ்பூன், அரை மூடி எலுமிச்சைப் பழம் இரண்டையும் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், நாற்றமும் உடல் வலியும் பறந்து போகும்.

குளியலுக்கென்றே பாத் ஜெல், பாத் ஃபோம், சோப் கிரிஸ்டல்ஸ் என்று நிறைய கிடைக்கின்றன. நிதானமான குளியலுக்கு இவற்றையெல்லாம் பயன்படுத்தினால் நாற்றமும் மறையும். அழகும் மேம்படும்.

வினிகர் அல்லது எலுமிச்சைச் சாற்றில் நனைத்த பஞ்சினை அக்குள் பகுதியில் தடவி விட்டு, சிறிது நேரம் கழித்துக் குளித்தால், வியர்வை நாற்றம் கட்டுப்படும். உடைகள் மட்டுமின்றி, உள்ளாடைகளும் கொட்டனாக இருக்க வேண்டியது அவசியம்.

இலங்கை மீனவர்கள் 12 பேர் இந்திய கடல் எல்லையில் கைது!!

sl

இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடலோர காவல் படையினரால் இவர்கள் கடந்த 20ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னைக்கு வட கிழக்கே 163 கடல் மைல் தூரத்தில் 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 இலங்கை மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2 மாதங்களில் 32 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 6 மீன்பிடி படகுகள் மற்றும் ஆயிரத்து 905 கிலோ மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு இந்திய கடலோர காவல் படையினரின் கிழக்குப் பகுதி மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசாங்கம் இனி தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது : விக்னேஸ்வரன்!!

vig

அரசாங்கம் இனி தான் தோன்றித்தனமாக செயற்பட முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு வடக்கின் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 84.37 வீதமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
அதில் முதலமைச்சர் வேட்பாளரான சி.வி விக்னேஸ்வரன் 132 255 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி ஈட்டியுள்ளார்.

இந்த வெற்றியின் பின்னர் யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலையே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..

வடக்கு மாகாண மக்கள் எம்மிடம் பெரும் பொறுப்பை கையளித்து உள்ளனர். அரசாங்கம் இனி தான் தோன்றித்தனமாக செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறான ஒரு அமைப்பு இல்லாதமையின் காரணமாகத் தான் அவற்றை அவர்களால் செய்ய முடிந்தது.

இனி அவ்வாறு செய்ய முடியாது சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே நடக்க வேண்டும். வடக்கு மாகாண சபையின் ஆளுநராக இதுவரை காலமும் முன்னாள் இராணுவ அதிகாரியே இருந்தார்.

இனி சிவில் சமூகத்தை சேர்ந்தவர் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவர் எம்முடன் இணைத்து செயற்பட கூடிய ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என நாம் விரும்புகின்றோம் என தெரிவித்தார்.

அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில்..

குறிப்பிட்ட அடிப்படையில் ஆட்சி அமைக்கும் அதிகாரம் நீதி, நிர்வாகம், நிதி சம்பந்தமான அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் இறைமை பகிர்ந்தளிக்க வேண்டும். வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாட்டின் அரசியல் சரித்திரத்தில் முன்னேப்பதும் அடையாத வெற்றியீட்டியுள்ளது.

மக்களின் ஜனநாயக தீர்ப்பு மிகவும் தெளிவாக உள்ளது. ஐக்கிய பிளவு படாத நாட்டிற்குள் பாதுகாப்பாகவும் சுய மரியாதையோடும் கௌரவமாகவும் போதிய சுயாட்சி பெற்று வாழ்ந்து தமது நியாயமான அரசியல் பொருளாதார சமூக கலாசார அபிலாசைகளை அடைய விரும்புகின்றனர்.

இந்த இலக்கை அடைவதற்கு நாம் அர்ப்பணிப்போடு செயற்படும் அதேவேளை அரசாங்கம் தனது பங்களிப்பை முழுமையாக செய்யும் என எதிர்பார்க்கின்றோம். இந்த பெறுபேறு அனைவரும் ஆரோக்கியமான திசையில் பயணிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை தந்திருக்கின்றது.

தமிழ் மக்கள் தெளிவாகவும், துணிவாகவும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இந்த ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என நாம் வற்புறுத்தி கேட்கின்றோம்.
தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை அடைவதற்கு எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என அவர் மேலும் அவர் தெரிவித்தார்.

மக்களின் ஆணைப்படி கூட்டமைப்பு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் : டக்ளஸ் தேவானந்தா!!

Douglas Devananda

வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களிடம் இருந்து பெற்ற ஆணையை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டுமென்றும், அவ்வாறு நிறைவேற்றினால் அதை நாம் எமது மக்களின் நிரந்தர மகிழ்ச்சிக்காக வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தேர்தலை அடுத்து அமைச்சர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்..

நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க முன்வந்திருப்பதும், நீதியானதும், நேர்மையானதுமான தேர்தலை நடத்த ஒத்துழைத்தமையும் வரவேற்கத்தக்க விடயம். அதற்காக நாம் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி கூறுகின்றோம். இதேவேளை எமது வழிமுறைகளை ஏற்று எமக்கு வாக்களித்த மக்களுக்கும் விஷேடமாக நாம் நன்றி கூறுகின்றோம்.

மக்கள் எமக்கு ஆணைவழங்கினால் எமது நடைமுறைசார்ந்த வழிமுறை மூலம் மாகாணசபை அதிகாரத்தை பாதுகாத்து மேலும் பலப்படுத்துவதன் ஊடாக தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை, அபிவிருத்தி, படையினரை படிப்படியாக வெளியேற்றுதல், மீள்குடியேற்றம், மற்றும் வாழ்வியல் உரிமைகள் என நாம் சகலதையும் பெற்றுத் தருவோம் என மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கியிருந்தோம்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கு மக்கள் ஆணைவழங்கினால் இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்றி மக்களை மீள்குடியேற்றம் செய்வதாகவும், அபிவிருத்தி, மற்றும் அரசியலுரிமைகளை பெற்றுத் தருவதாகவும் மக்களுக்கு வழமைபோல் வாக்குறுதி வழங்கியிருந்தனர். இந்நிலையில், பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே ஆணையாக பெற்றிருந்தனர்.

ஆகவே கடந்த காலங்களில் மக்களிடமிருந்து ஆணைகளைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது போலன்றி வடமாகாணசபைத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை ஏற்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்ற முன்வரவேண்டும்.

அவ்வாறு நிறைவேற்றும் பட்சத்தில் நாம் அதை எமது மக்களுக்காக அகமகிழ்வுடன் வரவேற்போம். இதனூடாகவே தமிழ் பேசும் மக்கள் தோற்றுப்போனவர்களல்ல என்ற நிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உருவாக்க முன்வர வேண்டுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா ஒரு அபூர்வமான உலகம் : இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினிகாந்த்!!

rajani

சென்னையில் நேற்று இரவு நடந்த சினிமா நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது..

இந்த விழாவை மிக சிறப்பாக நடத்தியதற்காக முதலமைச்சருக்கு என் நன்றி. என் திரையுலக அண்ணன் கமல்ஹாசனுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. அன்றும் சரி இன்றும் சரி நான் கமல் ரசிகன். இரண்டு பேரும் சேர்ந்து ஏழு எட்டு படங்கள் நடித்தோம். கமல் இஷ்டப்பட்டு நடித்தார். நான் கஷ்டபட்டு நடித்தேன்.

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த வேளையில், சாதாரண ஆளாக இருந்த என்னை சினிமாவில் பெரிய ஆளாக்கிய கே.பாலசந்தருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வளர்த்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு நன்றி. சமூகத்தில் இவ்வளவு பெரிய ஆளாக என்னை மதிக்கிற அனைவருக்கும் நன்றி. அது சினிமா எனக்கு கொடுத்த பிச்சை.

38 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். நடிப்பதை தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது. வேறு இரண்டு மூன்று விஷயங்களில் இறங்கி என்னால் ஜெயிக்க முடியவில்லை. ஆனால் கமல் அப்படி அல்ல. நிறைய விஷயங்கள் தெரிந்தவர்.

சினிமாவில் வில்லனாக இருந்த என்னை காமெடியாக நடிக்க வைத்தவர் கே.பாலசந்தர். ஆறில் இருந்து அறுபது வரை படத்தில், என்னை சோகமாக நடிக்க வைத்தவர், எஸ்.பி.முத்துராமன். முள்ளும் மலரும் படத்தில் இயல்பாக நடிக்க வைத்தவர், மகேந்திரன். பாட்ஷா படத்தின் மூலம் என்னை எங்கேயோ கொண்டு போனவர் சுரேஷ் கிருஷ்ணா. முத்து, படையப்பா, கோச்சடையான் ஆகிய படங்களில் கே.எஸ்.ரவிகுமார், சந்திரமுகியில் பி.வாசு இவர்கள் எல்லாம் மறக்க முடியாதவர்கள்.

இவர்கள் எல்லோரும் என்னை உயரத்தில் தூக்கிக் கொண்டு போய் வைத்து விட்டு, போய் விட்டார்கள். நான் தனிமையில் இருக்கிறேன். டாப்பில் இருப்பவர்களுக்கு இதுதான் பிரச்சினை. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சிவாஜிராவ் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.

சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்த தாதா சாகேப் பால்கே, சாந்தாராம், எஸ்.எஸ்.வாசன், ஏவி.மெய்யப்ப செட்டியார், நாகிரெட்டி, சக்ரபாணி இவர்கள் எல்லாம் போட்ட சாப்பாட்டை இப்போது நாம் வேறுவிதமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். சினிமா இப்போது எவ்வளவோ முன்னேறினாலும், சந்திரலேகா மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியுமா அவ்வையார் படத்தை நான் பத்து வயதில் பார்த்தேன். அந்த பிரமிப்பு இன்னும் இருக்கிறது.

எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண், நாடோடி மன்னன், சிவாஜி நடித்த திருவிளையாடல், சரஸ்வதி சபதம் ஆகிய படங்கள் எல்லாம் காவியங்கள். அந்த காவியங்களை படைத்து அமரர்களாகிப்போன மகான்களின் பாதங்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்துகிறேன்.

அதேபோன்ற இன்னொரு மகான், கமல்ஹாசன். அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் ஆகிய படங்களை அவரை தவிர, வேறு எந்த நடிகராலும் நடிக்க முடியாது. சினிமா, ஒரு வித்தியாசமான தொழில். இதில் தயாரிப்பாளர்கள்தான் எப்போதுமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் தோற்று இருக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் சினிமாவில் தோற்று இருக்கிறார்கள். இது, ஒரு மாயாபஜார். அபூர்வமான உலகம். நான், 38 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். கமல், 55 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். நம் வாழ்நாளில் பார்க்க முடிகிற மிக திறமையான நடிகர் கமல்.

இப்போது வந்திருக்கிற இளம் நடிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது, பொருளாதார ரீதியாக உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள் இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது..

சினிமாவில் நான் 50 வருடங்களாக இருந்தாலும் இன்னும் சின்ன குழந்தைதான். குழந்தையாக இருந்தபோது சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்தவன். நான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா சினிமாவில் எனக்கு இரண்டு குருக்கள் இருக்கிறார்கள். ஒருவர், சிவாஜி. இன்னொருவர், கே.பாலசந்தர்.

இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாடும் இந்த வேளையில், என்னை வளர்த்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த தலைமுறையினர் எங்களைவிட பெரிய அளவில் வளர வேண்டும் என்று கமல்ஹாசன் பேசினார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டிஜிட்டலில் வெளியாகும் அன்பே சிவம்!!

kamal

கமல், மாதவன், கிரண், நாசர் ஆகியோர் நடிப்பில் பத்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் அன்பே சிவம். சுந்தர்.சி இயக்கி இருந்தார். வித்யாசாகர் இசையமைப்பில் லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. இப்படத்தை கமலின் ராஜ்மகல் பிலிம்ஸ் வெளியிட்டது.

அன்பு என்ற ஒன்றுதான் எல்லாவற்றிலும் சிறந்தது என்கிற கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தி வெளிவந்த இப்படம் 10 வருடங்களுக்கு முன்பு இருந்த ரசிப்பு தரத்தினால் படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. தயாரிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

தற்போதைய சூழ்நிலையில் இப்படம் இளைஞர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இந்த படத்தை தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு படத்தை மறுபடியும் வெளியிடச் சொல்லி கடிதமும், தொலைபேசி அழைப்புகளும் வருகிறதாம். இதனால் இப்படத்தை மறுபடியும் வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர் முரளிதரன் இறங்கியுள்ளார்.

இதுகுறித்து முரளிதரன் கூறும்போது உயர்ந்த தரமான படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கமலின் நினைத்தாலே இனிக்கும் படத்தின் மறு வெளியீட்டுக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அன்பே சிவம் படத்தையும் டிஜிட்டல் முறையில் ஆடியோ தரம் உயர்த்தி மறுபடியும் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். கமலின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என்று கூறினார்.

இலங்கை மீது சைபர் தாக்குதல்கள் நடத்தக் கூடிய அபாயம்!!

cyber-attack

இலங்கையின் மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இணையத்தின் ஊடாக தகவல்களை கண்காணித்தல், உளவுபார்த்தல் போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த போதியளவு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசாங்க நிறுவனங்கள் முக்கிய ஸ்தாபனங்களின் இணையத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்களை இலகுவில் பார்வையிடக் கூடிய வகையிலான சூழ்நிலையே தற்போது காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு, நிதித்துறை, வெளிவிவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகள் சார் தகவல்கள் உளவு பார்க்கப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர்களின் இணையத் தளங்கள். மின்னஞ்சல்கள், சமூக வலைப் பக்கங்கள் போன்றவற்றிற்குள் ஊடுறுவி தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அமெரிக்கப் பாதுகாப்புப் பிரிவினர் அந்நாட்டு மக்களின் தகவல்களை இரகசியமாக உளவு பார்த்த விவகாரம், முன்னாள் சீ.ஐ.ஏ அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டனின் ஊடாக வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தகவல்களை உளவு பார்ப்பதற்கான அதிகளவு வாய்ப்புக்கள் இலங்கையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் சுமூகமான உறவுகளை பேணாத நாடுகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நட்சத்திர குடும்பத்துடன் ஜோடி சேரும் ஸ்ரேயா, சமந்தா!!

nat

தமிழில் சிம்பு நடிப்பில் வெளிவந்த அலை, மாதவன் நடித்து வெளிவந்த யாவரும் நலம் ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் கே.குமார் தெலுங்கில் மனம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் பிரபல மூத்த நடிகரான நாகேஸ்வர ராவ், அவரது மகன் நாகர்ஜூனா, மற்றும் அவருடைய பேரன் நாகசைதன்யா ஆகியோர் நடிக்கின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது இதுதான் முதன்முறை என்று கூறப்படுகிறது. நட்சத்திர குடும்பம் நடிக்கும் இப்படத்தில் நடிக்க ஸ்ரேயாவும், சமந்தாவும் தேர்வாகியிருக்கிறார்கள்.

நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக ஸ்ரேயாவும், நாகசைதன்யாவுக்கு ஜோடியாக சமந்தாவும் நடிக்கிறார்கள். நட்சத்திர குடும்பத்துடன் ஜோடி சேர வாய்ப்பு கிடைத்தால் ஸ்ரேயாவும், சமந்தாவும் சந்தோஷத்தில் உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.