பதவியை இழப்பதில் வருத்தமில்லை : மிஸ்பா!!

Misbah-ul-Haq1

தலைவர் பதவியை இழப்பதில் தாம் வருத்தமடையப் போவதில்லை என பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் குறிப்பிட்டுள்ளார்.

சம்பியன்ஸ் 20-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றிய பின்னர் நாடு திரும்பிய அவர் லாஹூரில் வைத்து இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். எனினும் தேசிய அணியின் தலைவராக தொடர்ந்தும் சேவையாற்ற தாம் தயராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிம்பாவே அணிக்கெதிரான டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அடைந்த தோல்விகளை அடுத்து மிஸ்பா உல் ஹக் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தலைவர் பதவியை தாம் கோரவில்லை எனவும், அதனை பெறுவதற்கு வற்புறுத்தவில்லை எனவும் பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் சுட்டிக்காட்டியுள்ளார்.

தலைவர் விவகாரம் தொடர்பான தீர்மானத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையே தற்போதும் மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டத்தில் அரசுக்கு ஆதரவளித்த மக்களுக்கு நாமல் எம்.பி. நன்றி தெரிவிப்பு!!

namal

வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களித்து அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு ஜனாதிபதி மகிந்தவின் மூத்த புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

தற்போதைய அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ள பாதுகாப்பு மற்றும் ஜனநாயக சூழல் காரணமாக எவ்வித அழுத்தங்களுமின்றி அம்மக்கள் தமது உரிமைகளை அனுபவித்து வருகின்றமையை உங்களது வாக்களிப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழ் வடக்கு மாகாண சபையை மீள ஸ்தாபித்து வடக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை துரிதமாக பலப்படுத்துவதற்கும் நிலையான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அந்த மாகாண சபையின் மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களின் தேவைகளை இனங்கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.
அரசியல் நோக்கத்தை வெற்றி கொள்வது எமது எதிர்பார்ப்பல்ல.

வடக்கு மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தியின் போது தெற்கு மக்களும் தமது தேவைகளை எடுத்துக் கூறாமலில்லை. எனினும், வடக்கு மக்களுக்கே முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளில் எனக்கும் அரசாங்கத்துக்கும் ஆதரவு நல்கிய கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் நாமல் ராஜபக்ச எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கிற்கு 13வது திருத்த அதிகாரங்கள் வழங்கினால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் : ராவணா பலய!!

ravana palaya

வடக்கிற்கு 13ம் திருத்தச் சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டமொன்று உருவாக்கப்படும். 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி விக்னேஸ்வரனுக்கு தனி இராச்சியம் அமைக்க இடமளிக்க முடியாது.

13ம் திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அரசாங்கம் வழங்காவிட்டால், இந்தியாவைப் பயன்படுத்தி அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள கூட்டமைப்பு முயற்சிக்கும்.

மீண்டும் பயங்கரவாதத்தை தூண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது என ராவணா பலய தெரிவித்துள்ளது,

வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படுமாறு இலங்கை அரசுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்!!

usaகடந்த 21ம் நாள் நடைபெற்று முடிந்த தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணசபையுடன் இலங்கை அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.வாசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் பசாகி நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதுகுறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மூன்று மாகாணசபைகளுக்கு செப்ரம்பர் 21ம் நாள் நடத்தப்பட்ட தேர்தல் வெற்றிகரமாக அமைந்ததற்கு இலங்கை மக்களுக்கு அமெரிக்கா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 2009ல் போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு மாகாண சபைக்கு முதல் முறையாக நடந்துள்ள இந்தத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

தற்போது மக்கள் தமது விருப்பங்களுக்கேற்ப, மாகாண சபைகளுக்கு பிரதிநிதிகளைத் தெரிவு செய்துள்ளனர். மாகாணங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பொதுமக்கள் தலைமைத்துவத்துக்கு ஆதரவாக செயற்பட இலங்கை அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.

குறிப்பாக, பரந்தளவிலான நல்லிணக்க நடவடிக்கைகளை விரிவாக்கிக் கொள்வதற்கு, புதிதாக தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படும் வாய்ப்பை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடைபெற்ற தேர்தலில் 3 மாகாணங்களிலும் 170 000 வாக்குகள் நிராகரிப்பு!!

ele

வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 615 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அளிக்கபட்ட வாக்குகளில் கண்டி மாவட்டத்திலும் வட மாகாணத்திலும் கூடுதலான 7.25 வீதம் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி தேர்தல் நடைபெற்ற 10 மாவட்டங்களிலும் 4459 தபால் மூல வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இம்முறை தேர்தலில் 43 58 263 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றிருந்ததோடு 28 73 182 பேரே வாக்களித்திருந்தனர்.

இதிலும் வட மேல் மாகாணத்தில் 53 215 வாக்குகளும் (4.77%) , மத்திய மாகாணத்தில் 82 162 (6.46%) வாக்குகளும் , வடக்கில் 35 239 (7.29%) வாக்குகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

ஒரே வருடத்தில் மூன்று படங்களில் நடிக்க விக்ரம் முடிவு!!

vikram

நடிகர் விக்ரம் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ஐ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்திற்கு பிறகு தான் நடிக்க இருக்கும் படங்களை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். விக்ரம் முதலில் தரணி இயக்கத்தில் ராஸ்கல் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் சூர்யா நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட துருவ நட்சத்திரம் என்ற படம்தான் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து ஹரி இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விக்ரம். விக்ரம் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ஐ படத்திற்காக நீண்ட காலம் எடுத்துக் கொண்டார். இதனால் தனது அடுத்தடுத்த படங்களை குறுகிய காலத்தில் முடித்து ரசிகர்களை மகிழ்விக்கப் போகிறாராம்.

ஐ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் வரை தொடர்ச்சியாக நடைபெறவிருக்கிறது. இதன்பிறகு ஜனவரி மாதம் முழுவதும் குடும்பத்துடன் ஓய்வு எடுத்துவிட்டு, பிப்ரவரியில் அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் படங்களின் படப்பிடிப்பினை தொடங்கவுள்ளார்.

தரணி, ஹரி இருவரின் படங்களும் கமர்ஷியல் படங்களே. இவை விரைவில் முடிந்துவிடும் என்பதால் இதில் நடித்துக் கொண்டே கௌதம் மேனன் இயக்கும் படத்திலும் நடிக்க முடிவு செய்துள்ளார்.

வரும் 2014ம் ஆண்டில் விக்ரம் நடிப்பில் ஷங்கரின் ஐ, தரணியின் ராஸ்கல், கௌதம் மேனன், ஹரி இயக்கும் படங்கள் என 4 படங்கள் வெளியாகவிருக்கிறது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

90 வயதில் 1500 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை!!

cycle

சாதனை முயற்சிக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த 90 வயதான பெர்த் பிளெவன்ஸ்.

சைக்கிள் பந்தயத்தில் அதிக ஈடுபாடு கொண்ட பிளெவன்ஸ், கென்சுக்சியில் இருந்து புளோரிடா வரையில் 1497 கி.மீ தூரம் சைக்கிள் பயணம் செய்ய திட்டமிட்டார். இதுபற்றி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது, குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு ஊக்கம் அளித்தனர்.

இதையடுத்து, தனது சாதனைப் பயணத்துக்காக பிரத்யேகமாக 3 சக்கர சைக்கிளை தயாரித்தார். சாய்ந்து கொண்டு ஓட்டக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட அந்த சைக்கிளில் ஆகஸ்ட் 20ம் திகதி தனது பயணத்தை தொடங்கி, கடந்த வெள்ளிக்கிழமை நிறைவு செய்தார்.

21 நாட்களில் பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிளெவன்சுக்கு அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்தனர். நெடுஞ்சாலைகளில் அவரது மூன்று சக்கர சைக்கிளுக்கு அனுமதி கிடைக்காததால் கூடுதல் நாட்கள் ஆனதாக கூறப்பட்டுள்ளது.

பெர்த்தின் இந்த பயணத்தின்போது பாதி தூரம் வரையில் அவரது மகனும் அடுத்த பாதி தூரம் மகளும் பாதுகாப்புக்கு சென்றனர். வழியில் ஹோட்டல்களில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மேலும் அவரது சாதனைப் பயணத்தைப் பாராட்டு தெரிவிக்கும் பார்வையாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தனது பயணத்தை நிறைவு செய்த உற்சாகத்தில் இருந்த பெர்த், தன்னார் முடியும் என்று நினைத்ததால், சோர்வே தெரியவில்லை என்று கூறினார்.

கொம்பெனித் தெரு மக்களுக்கு நியாயமான நஷ்ட ஈடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

Supreme-Court-building

கொழும்பின் கொம்பெனித் தெரு பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ள நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு நியாயமான நஷ்ட ஈடு வழங்க புதிய திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு இலங்கையின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொம்பெனித் தெரு பகுதியிலுள்ள ஏழு ஏக்கர் நிலத்தை இந்தியாவின் தனியார் நிறுவனத்துக்கு வழங்குவதற்கு ஆட்சேபம் தெரிவித்து அப்பகுதியில் வசிக்கும் அறுநூறுக்கும் அதிகமான குடும்பங்கள் தாக்கல் செய்த மனுக்களை பரிசீலித்தபோது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

வெளியேற்றப்படும் குடும்பம் ஒன்றுக்கு 45 லட்ச ரூபாய் வழங்கப்படும் என அரசாங்கம் முன்பு அறிவித்திருந்தது என்றாலும், இந்த தொகையை 15 லட்சமாக குறைக்க நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது என்றும் இந்த நஷ்ட ஈடு போதாது என்று நீதிமன்றத்திடம் தாம் கோரியிருந்ததாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.

தமது கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்ந்த நீதிபதிகள், தற்போதைய உத்தரவை பிறப்பித்துள்ளதாக அவர் கூறினார். புதிய நஷ்ட ஈட்டுத் திட்டம் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் முன்னேற்றங்கள் பற்றி எதிர்வரும் 30ம் திகதி அரசாங்கம் நீதிமன்றத்திடம் விவரம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியாவில் வட மாகாண சபையின் முதல்வர் சி.விக்னேஸ்வரனுக்கு வந்த சிக்கல்!!(படங்கள்)

வட மாகாண சபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி விக்னேஸ்வரன் நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் வழியில் தனது வாகனத்திற்கு வவுனியாவில் எரிபொருள் நிரப்பிய போது பெற்றோலுக்கு பதிலாக டீசல் நிரப்பப்பட்டதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முதலமைச்சரை அங்கீகரிக்கும் கூட்டத்தினை நிறைவு செய்து கொழும்பு செல்லும் போது வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு 9.15 மணியளவில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனத்தை டீசல் தாங்கிக்கு முன்னாள் நிறுத்தி பெற்றோல் நிரப்புமாறு சாரதியால் கோரப்பட்ட நிலையில் அங்கிருந்த பணியாளரால் பெற்றோலுக்கு பதிலாக டீசல் நிரப்பப்பட்டுள்ளது.

சுமார் 60 லீற்றர் டீசல் நிரப்பட்ட பின்னரே பெற்றோல் வாகனத்திற்கு டீசல் நிரப்பப்படுவதை உணர்ந்து கொண்ட அங்கிருந்தவர்கள் வாகனத்தின் எரிபொருள் தாங்கியை கழற்றி துப்பரவு செய்து மீளவும் பொருத்திய நிலையில் அவர் தனது பயணத்தை தொடர்ந்திருந்தார்.

இதேவேளை, அவருடன் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சரவணபவன், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் ஆகியோரும் இருந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த வவுனியா பொலிஸ் தலைமைய பொறுப்பதிகாரி டி. கே.அபயரட்ண அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொண்டிருந்ததுடன் பாதுகாப்பினையும் வழங்கியிருந்தார்.

அங்கு பிரசன்னமாகியிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் பிரேமரட்ன சுமதிபால சி. வி.விக்னேஸ்வரனுக்கு கைலாகு கொடுத்து கலந்துரையாடியிருந்தார்.

vav2 vav

புதிய ஹேயார்ஸ்டைலில் களமிறங்கிய டோனி!!(படங்கள்)

சென்னை அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி புதிய ஹேயார்-ஸ்டைலில் வித்தியாசமாக களமிறங்கினார்.

இந்தியாவில் 5வது சம்பியன்ஸ் லீக் T20 தொடர் நடைபெற்று வருகிறது.

இத்தொடரின் மூன்றாவது போட்டியில் டைட்டன்ஸ் அணிக்கெதிராக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பண்டைய மொஹாக் பாணியில் இருபக்கம் தலைமுடியை எடுத்து விட்டு நடுவில் மட்டும் நீளமாக முடி வைத்திருந்தார் டோனி. இந்த ஸ்டைல் கைகொடுக்க சொந்த ஊரில் வெற்றி பெற்று மகிழ்ந்தார்.

1 2 3

ஜன்னல் ஓரம் படத்திற்காக உடல் எடையை கூட்டிய பார்த்திபன்!!

parthipan

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் கடைசியாக வித்தகன் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவர் இயக்கிய முதல் படமான புதிய பாதையை ரீமேக் செய்ய திட்டமிட்டிருந்தார். இப்படத்தில் நடிக்க இப்போதைய பல முன்னணி நடிகர்களிடம் கேட்டபோது யாரும் நடிக்க முன்வரவில்லை. இதனால் இந்த முயற்சியை கிடப்பில் போட்டுவிட்டு மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில் தற்போது கரு.பழனியப்பன் இயக்கும் ஜன்னல் ஓரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் விமல், விதார்த் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்காக தனது உடல் எடையை அதிகப்படுத்தியுள்ளாராம் பார்த்திபன்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது ஜன்னல் ஓரம் படத்தில் ஒரு டிரைவர் வேடத்தில் நடிக்கிறேன். அந்த டிரைவர் 24 மணி நேரமும் குடித்துக் கொண்டே இருப்பார். அதனால் அவரது உடம்பு பெருத்து விடுகிறது. அந்த பாதிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக உடல் எடையை அதிகப்படுத்தி நடித்து வருகிறேன் என்று அவர் கூறினார்.

விமானத்தில் புகுந்த குட்டி பாம்பால் பதறிய பயணிகள்!!

flight

அவுஸ்திரேலியாவில் விமானத்தில் புகுந்த குட்டி பாம்பினால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்லவேண்டிய இடத்திற்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டனர்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து ஜப்பானின் தலைநகரான டோக்கியோவிற்கு குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று நேற்று இரவு புறப்படுவதாக இருந்தது. சிங்கப்பூருக்கு சென்று திரும்பியிருந்த அந்த போயிங் 747-400 பகல் முழுவதும் சிட்னி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

அடுத்த பயணத்திற்கான நேரம் நெருங்கியதும் விமானத்தின் ஊழியக் குழுவினர் விமானத்தை அடைந்தபோது சிறிய பாம்பு ஒன்றினை விமானத்தின் நுழைவு கதவு அருகே கண்டனர். 20 செ.மீ நீளமுள்ள இந்த பாம்பினால் நேற்று குறிப்பிட்டிருந்த பயணமே தள்ளிப் போடப்பட்டது.

விமானத்தில் இருந்த பாம்பினைப் பிடித்து அது எங்கிருந்து வந்தது என்பதனை அறிவதற்காக தனிமைப்படுத்தி வைத்துள்ளதாக விமான நிறுவனத்தின் தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார். அதனுடைய இருப்பிடம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும், விவசாயத்துறையைச் சேர்ந்த அறிஞர்கள் இது ஆசியாவில் காணப்படும் விஷமற்ற பாம்பு வகையைச் சேர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த 370 பயணிகளும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு இன்று காலை மாற்று விமானம் மூலம் சிட்னியிலிருந்து டோக்கியோவிற்கு புறப்பட்டனர். இது குவாண்டாஸ் விமானத்தில் நடைபெறும் இரண்டாவது பாம்பு சம்பவம் ஆகும்.

கடந்த ஜனவரி மாதம் பப்புவா நியுகினியாவிற்கு சென்ற விமானத்தின் இறக்கை பகுதியில் பயணித்த ஒன்பது அடி நீளமுள்ள மலைப் பாம்பு விமானம் கீழிறங்கியபோது செத்திருந்ததை பயணிகள் திகிலுடன் கவனித்தனர்.

கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சரக்கு விமானம் ஒன்றில் விமானிகள் அறையின் முன்புற பகுதியின் டேஷ்போர்டிலிருந்து வெளிவந்த ஒரு பாம்பைக் கண்டு பயந்த விமானி வடக்கு அவுஸ்திரேலியாவில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கம் செய்தார்.

அவுஸ்திரேலியப் பல்கலைக் கழத்தில் செயல்படும் பாம்பு விஷம் குறித்த ஆராய்ச்சி பிரிவின் கணக்குப்படி முதல் பத்து இனங்கள் உட்பட உலகில் கொடிய விஷமுள்ள 20லிருந்து 25 வகையான பாம்புகள் அவுஸ்திரேலியாவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர், நடிகைகளுக்குள் வேற்றுமை இல்லை : கன்னட படவிழாவில் கமலஹாசன்!!

kamal

இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 21ம் திகதி துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக கன்னட திரைப்பட விழாவும் தெலுங்கு திரைப்பட விழாவும் நடந்தது.

கன்னட பட விழாவில் நடிகர் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, லீலாவதி, ஹேமா, பாரதிவிஷ்ணு வர்த்தன், மற்றும் நடிகர்கள் ராஜேஷ், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீநாத், சிவராம், உமேஷ், முரளி, ஒய்.ஆர். சாமி, பங்கஜ், வினோத்ராஜ், யோகேஷ், நடிகைகள் அனுபிரபாகர், ஜெயந்தி, ராகினி, ஹர்ஷிதா, லைலா, பாவனா, உள்பட 67 பேர் விருதுகள் பெற்றனர்.

விழாவில் கமலஹாசன் பேசியதாவது..

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த விழாக்கள் தனித்தனியானது என்று கருதக்கூடாது. அனைத்தும் ஒன்றுதான். திரைப்பட கலைஞர்களாகிய நாம் சினிமா துறை என்ற ஒரே கூரையின் கீழ் வாழ்கிறோம். ஒரே குடும்பமாக வாழ்கிறோம். நமக்கும் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை. அந்த சினிமா துறையில் நானும் ஒருவனாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

நான் கன்னட திரைப்பட விழாவில் பங்கேற்க வந்ததற்காக சிலர் நன்றி கூறினர். இந்த விழாவில் என்னை நீங்கள் வரவேற்றதற்காக நான்தான் நன்றி கூறவேண்டும். நீங்கள் என்னை அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் கண்டிப்பாக இதில் கலந்து கொள்வேன். இது கலைஞர்களாகிய நம்முடைய விழா என்று கமலஹாசன் பேசினார்.
தெலுங்கு படவிழாவில் கே.பாலச்சந்தருக்கு விருது வழங்கப்பட்டது.

மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது!!

mandela

தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா(95) நுரையீரல் கோளாறு காரணமாக ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் உலகின் தென் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு உதவியதற்காக நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடந்த விழாவில் இவ்விருதை நெல்சன் மண்டேலா சார்பில் அவரது மகள்கள் ஜின்ட்ஜி மண்டேலா, ஜோசினா மாசெல் பெற்றுக் கொண்டனர்.

சினிமாவில் ஹீரோவுக்கே முக்கியத்துவம் : நித்யாமேனன்!!

nithya menan

நூற்றி என்பது படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். வெப்பம் படத்திலும் நடித்தார். தற்போது சேரன் இயக்கும் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, நடிகை ஸ்ரீபிரியா, இயக்கும் மாலினி 22 பாளையங்கோட்டை படங்களில் நடித்து வருகிறார்.

நித்யாமேனன் சொல்கிறார்.. கவர்ச்சியாக நடிப்பது எனக்கு பிடிக்காது. நடிப்பின் மீது நம்பிக்கை இருக்கிறது. நடிப்பு திறமையால் வளர்வதையே விரும்புகிறேன். இயக்குனர் சொல்வதை கேட்டு அப்படியே நான் நடிப்பது இல்லை. அதை இன்னும் எப்படி மெருகேற்றலாம் என்று யோசித்து கூடுதல் திறமை காட்டி நடிக்கிறேன்.

இதற்காக பலரும் என்னை பாராட்டுகின்றனர். எனக்கு சம்பளம் முக்கியம் அல்ல. நல்ல கரக்டரை தான் எதிர்பார்க்கிறேன். சினிமாவை பொறுத்த வரை கதாநாயகர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். என்னோடு நடிக்கும் ஹீரோக்கள் பற்றி நான் விசாரிப்பது இல்லை. என் வேடங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். எல்லா வேடங்களிலும் என்னால் நடிக்க முடியும் என்ற பெயர் வாங்க வேண்டும் அதுவே என் ஆசை என்று கூறினார்.

ரோஜா 2ம் பாகம் படத்தில் நடிக்க ஆசை : மதுபாலா!!

mathubala

ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராகின்றன. ஜெய்ஹிந்த் படத்தின் 2ம் பாகத்தை அர்ஜுன் இயக்குகிறார். முதல்வன் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகிறது. சூர்யா நடித்த சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் சிங்கம்2 என்ற பெயரில் ரிலீசானது.

முனி படத்தின் இரண்டாம் பாகம் காஞ்சனா என்ற பெயரில் வந்தது. அதன் மூன்றாம் பாகத்தையும் லோரன்ஸ் இயக்கி வருகிறார். அதுபோல் மணிரத்தினம் இயக்கி வெற்றிகரமாக ஓடிய ரோஜா படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்புவதாக மதுபாலா கூறினார். ரோஜா படத்தில் இவர்தான் நாயகியாக நடித்து இருந்தார். அவர் கூறும்போது, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ளேன். தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறேன். ரோஜா படத்தின் இரண்டாம் பாகத்தை மணிரத்னம் இயக்கினால் அதில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்றார்