ஐந்து ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ.,) 550 கோடி வரை வரி நிலுவை வைத்துள்ளது.
ஐந்து ஆண்டுகளில் பி.சி.சி.ஐ., வருமானம் வரி கட்டிய விவரத்தை சமூக ஆர்வலர் சுபாஷ் சந்திர அகர்வால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். இதன் படி, 2006-07 முதல் 2010-11 வரையிலான கணக்கு விபரம் தெரியவந்துள்ளது.
இதில் 2006-07ல் வருமானம் 866.13 கோடி. வருமான வரியாக 222.93 கோடி செலுத்த வேண்டிய நிலையில் 26.77 கோடி மட்டும் கட்டியுள்ளனர். மீதமுள்ள 196.16 கோடி இன்னும் செலுத்தப்படவில்லை.
இப்படி கடந்த ஐந்து ஆண்டுகளாக மொத்தம் 550 கோடி வரை பி.சி.சி.ஐ., வரி செலுத்த வேண்டுமாம்.
சுமார் 400 கிலோகிராம் எடையுள்ள இளைஞர் ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக அவரின் வீட்டின் சுவரை உடைத்து வெளியே எடுத்து, கெட்டர்பில்லர் வாகனத்தில் ஏற்றிச் சென்ற சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.
மைக்கல் லெபேர்கர் எனும் இந்த இளைஞர் ஜேர்மனியின் ரீகல்ஸ்பேக் நகரில் வசிக்கிறார். அண்மையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டபோது அவசரமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.
ஆனால் 400 கிலோ எடையைக் கொண்டிருந்த மைக்கல் லெபேர்கரை தூக்கிச் செல்ல முடியவில்லை. அதையடுத்து அவசர சேவைப் பிரிவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டவுடன் தீயணைப்புத் துறையினரும் மருத்துவ ஊழியர்களும் விரைந்து வந்தனர்.
ஆனால் அவ்வீட்டின் கதவுக்கூடாக மைக்கலை தூக்கிச்செல்ல முடியவில்லை. அதனால் ஜன்னலுடன் இணைந்த சுவரொன்றை உடைக்க வேண்டியிருந்தது.
மண் அகழ்வுக்குப் பயன்படுத்தப்படும் கெட்டர்பில்லர் இயந்திரத்தின் மூலம் வீட்டிலிருந்து பாதுகாப்பாக தூக்கிவரப்பட்டு மைக்கல் நான்கு நோயாளிகள் பயணம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட அம்புலன்ஸ் வாகனம் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
29 வயதான மைக்கல் லெபரை வீட்டிலிருந்து வெளியே கொண்டுவருவது முதல் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வது வரையான பணிக்கு சுமார் 6 மணித்தியாலங்கள் தேவைப்பட்டன.
இந்நடவடிக்கையை மேற்கொண்ட குழுவின் தலைவர் வோல்கர் கிளெய்ன் கருத்துத் தெரிவிக்கையில், தனது வாழ்க்கையில் இவ்வாறான ஒரு நிலைமையை முன்னர் ஒருபோதும் எதிர்கொண்டதில்லை எனக் கூறியுள்ளார்.
விஜய்யின் தலைவா படம் வெளியாகாததால் அவரது ரசிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம், காசிநஞ்சயகவுண்டன் புதூரை சேர்ந்த ஆனந்தன் மகன் விக்ரம் என்ற விஷ்ணுகுமார் (20).
இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். விஷ்ணு நேற்று நடிகர் விஜய் நடித்துள்ள தலைவா படத்தை பார்க்க ஆவலாய் இருந்துள்ளார். ஆனால் தலைவா படம் வெளியாகவில்லை.
இதனால் விஷ்ணுகுமார் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். நண்பர்களிடம் பேசிவிட்டு இரவு வீட்டுக்கு சென்ற விஷ்ணுகுமார் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுப்பற்றி அவரது நண்பர்கள் மற்றும் உறவினரிடம் விசாரித்ததில் தலைவா படம் ரிலீஸாகாததால் விஷ்ணு மகிவும் கவலையுடன் இருந்தார். இதுப்பற்றி எங்களிடம் சொல்லி வருத்தப்பட்டார்.
அதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த துடியலூர் பொலிஸார் விஷ்ணுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தலைவா படம் ரிலீஸாகாததால் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக கணனிகளின் அளவு சுருங்கி இன்று மடிக்கணணி வரை சிறிதாக மாறியுள்ளது.
இந்நிலையில் அவற்றின் பாவனையை மேலும் இலகுபடுத்தும்பொருட்டு மேலும் பல தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டுவருகின்றன.
அதற்கிணங்க தற்போது சூரிய சக்தியில் செயற்படக்கூடிய மடிக்கணனிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் நீடித்து செயற்படக்கூடிய மின்கலம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
இதனால் 2 மணிநேரம் சூரிய ஒளியில் வைத்த பின்னர் சுமார் 8 தொடக்கம் 10 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக செயற்படக்கூடிய சக்தியை குறித்த மின்கலம் வழங்குகின்றது.
இந்நீண்ட பாவனையின் பொருட்டு இக்கணனிகளில் Ubuntu இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது.
WeWi Telecommunications எனும் கனடிய நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இக்கணனிகளின் விலையானது 300 டொலர்கள் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தண்டையார்பேட்டை கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்தவர் இனியவன் (42). சமையல்காரர்.
இவர் திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்து கொடுப்பது வழக்கம். இவருக்கு சமையல் செய்வதில் கின்னஸ் சாதனை செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக எண்ணம் உள்ளது.
அதற்காக பலவித சமையல்களை செய்துள்ளார். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் ஏதாவது ஒரு சமையல் வகையை செய்வார். கடந்த ஆண்டு தலா 50 கிலோ என 2 இட்லி, 40 கிலோவில் ஒரு இட்லியை இனியவன் தயாரித்தார்.
இந்நிலையில் இந்தாண்டு 100 வித இட்லி தயாரிக்க உள்ளார். இதற்காக இனியவன், கொடுங்கையூரில் ஒரு திருமண மண்டபத்தில் வரும் 11ம் திகதி 100 வித இட்லியை தயாரித்து கண்காட்சி நடத்த உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன், எர்ணாவூர் நாராயணன் எம்எல்ஏ உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
முன்னதாக நேற்று 100 கிலோ எடையுள்ள ஒரு இட்லியை இனியவன் தயாரித்தார். அதனை காண ஏராளமான பொதுமக்கள் கூடினர். அவர் தயாரித்து வைத்த இராட்சத இட்லியை பார்த்து அனைவரும் பிரமித்து நின்றனர்.
ஜேர்மனில் ஒடும் ரயிலில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக ரயிலில் பயணம் செய்யும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் நாட்டில் நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு ரயிலில் பயணம் செய்த போது திடீரென்று பிரசவவலி ஏற்பட்டுள்ளது.
அப்போது ரயிலில் மருத்துவர்கள் யாரும் இல்லை என்பதால் அதில் பயணம் செய்த இரண்டு பெண்கள் அப்பெண்ணுக்க பிரசவம் பார்த்துள்ளனர்.
இதில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த அப்பெண் தற்போது எலிசபெத் மருத்துவமனையில் தன் குழந்தையுடன் நலமாக உள்ளார்.
இது குறித்து தெற்கு பிராந்திய கிளை தலைவர் பிராங்க் ஹெலின்காபர் (Frank Klingenhöfer) கூறுகையில் அந்தக் குழந்தையானது தனது வாழ்க்கை பயணத்தை ரயிலில் தொடங்கியுள்ளது. இதனால் வாழ்நாள் முழுவதும் இலவசமாக ரயிலில் பயணம் செய்யலாம் என்று கூறியுள்ளார்.
திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை தமிழ் நாய் என்று கூறிய மலையாளப் பெண்ணுக்கு தமிழ் சார்ந்த அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த ராதா தேவிபிரசாத் என்பவர் நீலாங்கரை பொலிஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தார்.
இதனடிப்படையில் நீலாங்கரை பொலிசார் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர். தற்போது அவர் பிணையில் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் ஊடகவியலாரை சந்தித்து பேசிய ஜேம்ஸ் வசந்தன் பொய் வழக்கு போட்டு காவல்துறை கைது செய்தது குறித்து தமிழக முதல்வர் முழு விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தனக்கு உரிய நீதி பெற்றுத் தரவேண்டும் என்றும் ஜேம்ஸ் வசந்தன் கோரிக்கை வைத்தார்.
மேலும் 65 வயது மூதாட்டிக்கு தான் எவ்வாறு பாலியல் தொந்தரவு கொடுக்க முடியும். தன் மீது நிலப் பிரச்சனை காரணமாக வேண்டும் என்றே பொய் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர் என்றும், இதற்கு பின்னணியில் பெரிய மலையாளி அதிகார ஊடுருவல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
காவல்துறை முன்னிலையில் தன்னை தமிழ் நாய் என்று ராதா தேவிபிரசாத் இழிவு படுத்தியதாகவும் இது குறித்து புகார் அளித்தும் காவல்துறை அப்புகாரை ஏற்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜேம்ஸ் வசந்தனுடன் அவரது மனைவியும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். காவல் துறையால் தாங்கள் எப்படி நடத்தப்பட்டோம் என்றும் அவர் கூறினார்.
இசை அமைப்பாளர் எஸ். ஏ.ராஜ்குமார் சின்னத்திரை கலைஞர்கள் உமா பத்மநாபன், விஜய் ஆதிராஜ் ஆகியோர் ஜேம்ஸ் வசந்தனுக்கு ஆதராவாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி கொடுத்தனர். நாம் தமிழர் கட்சி, தமிழர் முன்னேற்ற கழகம், மே 17 இயக்கம், தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி, தமிழர் பண்பாட்டு நடுவம், மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்சி இயக்கங்களின் சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் ஜேம்ஸ் வசந்தனை தமிழ் நாய் என்று இழிவு படுத்திய பெண்மணிக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் இழிவு படுத்தி பேசியதற்கு அப்பெண் உடனடியாக தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் அந்த பெண்ணின் வீடு முற்றுகையிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் 75 பேருக்கு பல்வேறு நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1080 பேர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
திருமணமான பெண்ணுடன் கள்ளத் தொடர்பு பேணியமை, காணிப் பிரச்சினை, கொள்ளை, பாலியல் துஸ்பிரயோகம், மதுபோதை, போதைப் பொருள் பயன்பாடு போன்ற காரணிகளினால் ஏற்பட்ட முரண்பாடுகளில் கொலைகளை மேற்கொண்டவர்களும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் வைத்திருத்தல் ஆகிய காரணிகளுக்காகவும் அதிகளவானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதிகளவான மரண தண்டனைக் கைதிகள் வெலிக்கடை மற்றும் போகம்பரை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
விஜய் நடிப்பில் உருவான தலைவா’படம் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மற்றும் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் என அடுத்தடுத்து பிரச்சினை கிளம்பியுள்ளதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தலைவா நேற்று வெளியாவதாக இருந்ததால் இயக்குனர் சசி இயக்கத்தில் பரத், சந்தானம் மற்றும் மிருத்திகா நடிக்கும் “ஐந்து ஐந்து ஐந்து” படத்தை ஆக.15ம் திகதிக்கு தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில் தலைவா வெளியாவதில் தாமதம் ஏற்பட்டத்தையடுத்து இப்படத்தை இன்று வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஏற்கெனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகி உள்ளன. மேலும், பரத் இப்படத்தில் சிக்ஸ் பேக் உடற்கட்டில் நடித்து உள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அணிக்கெதிரான இளையோர் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இலங்கை வந்துள்ள இந்திய இளம் (19 வயது) அணி மூன்று போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் போட்டியில் பங்கேற்றது.
முதல் இரு போட்டிகள் முடிவில் இந்திய அணி 1-0 என்று முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய கடைசி போட்டி நேற்று தம்புளவில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணியின் தலைவர் விஜய் ஜோல் களத்தடுப்பை தெரிவு செய்தார். இலங்கை அணியின் பானுகா 42 ஓட்டங்களும், பெரேரா 50 ஓட்டங்களும், ரித்மா 23 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களை தாண்டவில்லை.
இலங்கை அணி 39.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டது . இந்திய அணி சார்பில் சுழலில் அசத்திய 15 வயது வீரர் சர்ப்ராஸ் கான் 4 விக்கெட் வீழ்த்தினார்.
எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணி 32.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அறிமுக வீரர் கஜுரியா 34 ஓட்டங்களும், ஹெர்வத்கர் 25 ஓட்டங்களும், விஜய் ஜோல் 23 ஓட்டங்களும், சஞ்சு சம்சன் 31 ஓட்டங்களும், முகமது சைப் 22 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதையடுத்து இளையோர் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியது
பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள இலங்கையர்களை சுயவிருப்பத்துடன் நாடு திரும்புமாறு, பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கின் கோரியுள்ளார்.
இதற்காக விசேட சுயாதீன வேலைத்திட்டம் ஒன்றை பிரித்தானிய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு சுயாதீனமாக பிரித்தானியாவில் இருந்து வெளியேறுகின்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு மீண்டும் பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் வழங்கும் போது உயர்ஸ்தானிகர்,
எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சுயவிருப்புடன் பிரித்தானியாவில் இருந்து வெளியேறும் சட்டவிரோத குடியேறிகள் மீண்டும் பிரித்தானியாவுக்குள் பிரவேசிப்பதற்கு விதிக்கப்படுகின்ற தடையின் காலம் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நான் என்ன பாவம் செய்தேன் என் மகனுக்கு ஏன் இத்தனை மனக்கஷ்டம் வரவேண்டும், என தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் எஸ்.ஏ.சந்திரசேகர் வாய்விட்டுப் புலம்பியுள்ளார்.
தலைவா படத்துக்கு வந்துள்ள நெருக்கடி விஜய் மற்றும் அவரது தந்தையை நிலைகுலைய வைத்துள்ளன. தலைவா படம் உலகமெங்கும் வெளியாகிவிட்டாலும், விஜய்யின் சொந்த மாநிலமான தமிழகத்தில் மட்டும் எவ்வளவோ முயற்சி செய்தும் வெளியாகாமல் போய்விட்டது. முன்பு கமல்ஹாஸனின் விஸ்வரூபத்துக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டது.
ஆனால் தனக்கேற்பட்ட நிலையை தொடர்ந்து ஊடகம் மற்றும் மக்கள் முன் எடுத்துச் சொல்லி, நீதிமன்றம் போய் தீர்த்துக் கொண்டார் கமல். ஆனால் நடிகர் விஜய் அல்லது இயக்குநர் விஜய் அல்லது படத்தின் தயாரிப்பாளர் யாருமே குறைந்தபட்சம் பத்திரிகையாளர்களைக் கூட சந்தித்து நிலைமையைச் சொல்ல முடியாத சூழல்.
முன்பு கமலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதே திரையுலகம் இப்போது மவுனம் காக்கிறது. அரசியல் பின்னணியில் ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் தன் மகனுக்கும் அவர் படத்துக்கும் இப்படி ஒரு நிலை வந்தது அப்பாவாக மட்டுமல்ல தயாரிப்பாளர் சங்கத்துக்கு இப்போதும் தலைவராக உள்ள எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் சர்வபலம் பொருந்தியதாக அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்கும் முதலாளிகளின் அமைப்பாக இருக்கிற தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரால் தன் மகன் படத்தையே சிக்கலின்றி வெளியிட முடியவில்லையே என்ற பேச்சு கடந்த ஒரு வாரமாக வெளிப்படையாகவே ஒலித்து வருகிறது.
அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலையில், “நான் என்ன பாவம் செய்தேன் என் மகனுக்கு ஏன் இத்தனை மனக்கஷ்டம் வரவேண்டும்” என்று சக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் சொல்லி வருந்தியுள்ளார்.
இவ்வளவு பிரச்சினைக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாகக் கூறப்படும் சில விஷயங்களே காரணங்களாகக் கூறப்படுகிறது. தன்னை அண்ணாவுக்கும் தன் மகன் விஜய்யை எம்ஜிஆருக்கும் ஒப்பிட்டு எஸ் ஏ சந்திரசேகரன் பேசியதற்கான ஆதாரங்களை மேலிடத்தின் கவனத்துக்கு திரையுலகைச் சேர்ந்த சிலரே கொண்டு போயுள்ளனர்.
அடுத்து தலைவா படத்துக்கு வந்த சிக்கல்களைப் பார்த்து, “எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபனுக்கு வராத சோதனையா இதுவும் அப்படித்தான்” என்று கமெண்ட் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
பாரிசில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவருக்கு, நேற்று வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் சற்று நேரத்தில் அந்த மிரட்டல் போலியானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் பாரிசில் உள்ளது. இதை காண உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று திடீரென ஈபிள் டவருக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். எனினும் இரண்டு மணிநேரத்திற்குப் பின் இந்த மிரட்டல் வெறும் வதந்தியே என தெரிந்தது.
பின் சுற்றுலா பயணிகள் ஈபிள் டவரை காண மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.
பெரும் குழப்பங்களும் பேச்சுவார்த்தைகளும் நீடிக்கும் நிலையில், விஜய் நடித்துள்ள தலைவா திரைப்படம், சுதந்திர தினமான ஓகஸ்ட் 15ல் தான் வெளியாவதற்கான சாத்தியம் உண்டு என சம்பந்தப்பட்ட நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று வெளியாக இருந்த தலைவா ரிலீஸ் திகதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே புக் செய்தவர்களுக்கான கட்டணங்கள் திரும்பக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் படம் எப்போது வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
தலைவா இன்று தமிழ்நாட்டில் வெளியாகாத நிலையில் விஜய்யின் தீவிர ரசிகர்களோ கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு படம் பார்க்கச் சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்தப் பிரச்னை குறித்து அபிராமி ராமநாதன் தலைமையில் நடைபெற்ற தியேட்டர் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளித்தால் மட்டுமே படத்தை திரையிடுவது என முடிவு செய்து விட்டார்கள்.
அதுமட்டுமன்றி தலைவா படத்திற்கு தணிக்கை குழு ‘U’ சான்றிதழ் அளித்து இருந்ததால் வரிவிலக்கு குழுவினருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தினைப் பார்த்த அதிகாரிகள் வரிவிலக்கு அளித்தாலும், விஜய் பேசும் சில வசனங்களுக்கு ஆட்சேபம் தெரிவித்து இருக்கிறார்கள். இந்நிலையில் இன்று காலையும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஆனால், கொடநாட்டில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா திரும்பும்வரை தலைவா வெளியாக வாய்ப்பில்லை என்கிறது மிகவும் நம்பத்தகுந்த வட்டாரம்.
ஓகஸ்ட் 12ம் தேதி அன்று கொடநாட்டில் இருந்து சென்னை திரும்ப இருக்கும் ஜெயலலிதாவை சந்திக்க தலைவா படக்குழுவினர் அனுமதி கேட்டிருக்கிறார்கள். அந்த சந்திப்பு நடந்தவுடன் மட்டுமே படம் வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் தலைவா உடன் தொடர்புடைய தியேட்டர் உரிமையாளர், விநியோகஸ்தர்கள் சிலரிடம் விசாரித்தபோது “‘தலைவா’ படக்குழு – முதலமைச்சர் சந்திப்பு நடந்தவுடன் படத்தினை சுமூகமாக ஓகஸ்ட் 15ம் திகதி வெளியாகும். ஆனால் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் முதலமைச்சரை சந்திக்காமலேயே பேச்சுவார்த்தையில் சுமூகமாக முடிவுற்றாலும் மேலிடத்தில் இருந்து க்ரீன் சிக்னல் வந்தாலும் சுததிர தினத்துக்குள் படம் வெளியாக வாய்ப்பு இருக்கும்” என்று தெரிவித்தார்கள்.
முன்னதாக தலைவா வெளியாகவிருந்த திரையரங்குகள் சிலவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பிரச்னை எழுந்தது. திரையரங்கு உரிமையாளர் போலீஸ் பாதுகாப்பு கேட்கின்றனர். ஆனால், காவல்துறை மற்றும் அரசு தரப்பில் இருந்து ரியாக்ஷன் இல்லாததால் தலைவா வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியினருக்கு ஆத்திரமூட்டும் வகையில், தலைவா படத்தில் ஒரு காட்சி இருப்பதாக நம்பப்படுவதே இந்த சர்ச்சைகளுக்கு அடித்தளம் என்றும் கூறப்படுகிறது.
விஸ்வரூபம் படத்திற்கு இதேபோன்று பிரச்னை ஏற்பட்டபோது கமல் அனைத்து மீடியாக்களையும் அழைத்து என்ன நடக்கிறது என்பதை தெளிவாக எடுத்துக் கூறினார். அதே போன்று தலைவா படத்திற்கு என்ன நடக்கிறது என்பதினை படக்குழு கூறாமல் இழுத்தடித்து வருவது ரசிகர்களை சற்றே கூடுதல் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலத்தில், உலக அளவில், கறுப்பு தேயிலை உற்பத்தி, 88 கோடி கிலோவாக அதிகரித்து உள்ளது.
இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (80 கோடி கிலோ) விட, 9.90 சதவீதம் அதிகமாகும் என, சர்வதேச ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கறுப்பு தேயிலை உற்பத்தியில், இந்தியா முன்னிலை வகிக்கிறது. கணக்கீட்டு காலத்தில், இந்தியாவின் கறுப்பு தேயிலை உற்பத்தி, 1.18 கோடி கிலோ அதிகரித்து, 39.17 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.
இந்தியாவிற்கு அடுத்தபடியாக, கறுப்பு தேயிலை உற்பத்தியில் கென்யா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நாட்டின் கறுப்பு தேயிலை உற்பத்தி, கணக்கீட்டு காலத்தில், 6.74 கோடி கிலோ அதிகரித்து, 22.56 கோடி கிலோவாக வளர்ச்சி கண்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இலங்கையின் கறுப்பு தேயிலை உற்பத்தி, 80.30 லட்சம் கிலோ உயர்ந்து, 17.23 கோடி கிலோவாக அதிகரித்து உள்ளது.
அதேசமயம், மாலவி நாட்டின் கறுப்பு தேயிலை உற்பத்தி, 17.30 லட்சம் கிலோ குறைந்து, 3.02 கோடி கிலோவாக குறைந்துள்ளது.
பங்களாதேசத்தில் இதன் உற்பத்தி, கணக்கீட்டு காலத்தில், 1.40 லட்சம் கிலோ குறைந்து, 1.52 கோடி கிலோவாக சரிவடைந்து உள்ளது.
உகாண்டா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில், கறுப்பு தேயிலை உற்பத்தி குறைந்தும், தான்சானியாவில் இதன் உற்பத்தி அதிகரித்தும் இருந்தது என, இப்புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுவிட்சர்லாந்திலுள்ள நகர் ஒன்றில் கிறிஸ்தவ ஆலயங்கள், சந்தை, நீச்சல் குளம் உள்ளிட்ட பொது இடங்களில் அகதிகள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏராளமான இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு பல்வேறு இடங்களிலும் அகதிகள் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டின் மேற்கு சூரிச் நகரின் அருகே அமைந்துள்ள பெர்ம்கார்ட்டன் நகரத்திலேயே அகதிகள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கு கடந்த மாதம் சுவிட்சர்லாந்தில் புதிதாக தஞ்சம் அடையும் அகதிகளுக்கான முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நகரின் நிர்வாகம் சமீபத்தில் பரபரப்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதில் அகதிகள் முகாமில் தங்கியிருப்பவர்கள் கோயில், கிறிஸ்தவ ஆலயங்கள், நூலகம், நீச்சல் குளம், பள்ளி மைதானம் உள்ளிட்ட 32 பொது இடங்களில் நடமாட கூடாது என்று அறிவித்துள்ளது.
இது குறித்து நகர மேயர் ரேமான் டெல்லன்பாக் வானொலிக்கு அளித்த பேட்டியில், பொது இடங்களில் அகதிகள் நடமாடும் போது அவர்கள் மீது இன ரீதியான தாக்குதல் நடக்கவும் போதைப் பொருள் பழக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
அவர்களுக்கு எல்லா இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது இயலாது. எனவேதான் அகதிகள் பொது இடங்களில் நடமாட வேண்டாம் என்று தடை விதித்துள்ளோம் என்றார்.
எனினும் பெர்ம்கார்ட்டன் நகர நிர்வாகத்தின் தடை உத்தரவுக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இன ரீதியான பாரபட்சம் நிறைந்த நடவடிக்கை என்றும் மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.